இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

கடலோ மழையோ டாலஸ் கம்பராமாயண நிகழ்வு   

பிரதீப் பாரதி

சமீபத்தில் புத்தகத்தை சுருக்கித்தரும் ஒரு சேவையைப் பற்றி அறிய வந்தது. ஒரு புத்தகத்தை உள்ளீடு செய்தால் அதன் அடிப்படை உள்ளடக்கம் என்ன என்பதை சுருக்கமாக கூறிவிடும். நாள் கணக்கில் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் 5 – 10 நிமிடம் செலவு செய்தால் ஒரு மாதத்தில் 30 புத்தகம் மேல் படித்துவிட முடியும்.

“ஆ” என்று இருந்தது. இதுவரை ஒருவன் அறியாத எந்த ஒரு “கருத்தை” எந்த புத்தகம் சொல்லிவிடும்? அப்படி கருத்துக்களை மட்டும் தெரிந்து கொண்டால் அது என்னவித மாற்றத்தை உண்டுபண்ணும்? அந்த சுருக்கிய கருத்தை மட்டும் எழுதினால் போதுமே? எதற்கு வீணாக பக்கம்பக்கமாக எழுதவேண்டும்?

மாறாக, ஒரு புத்தகம் படிப்பது மூலம் நாம் அதில் பங்கெடுக்கிறோம். ஒரு புனைவு என்றால் நிகர்வாழ்வில் வாழ்ந்து ஒரு உண்மையை சென்று தொடுகிறோம். அது நமக்கு மட்டுமேயானது. ஒரு அகவயமான அனுபவம்.

அவ்வாறு ஒரு அகவய அனுபவம் இசைக்கச்சேரி மூலம் எனக்கு நிகழ்ந்தது. இசை பற்றி அடிப்படை அறிதல்கள் அற்ற ஒருவன் கச்சேரி சென்று அறிந்த அனுபவங்கள் என்று கூறலாம்.

டாலஸ் நகரில் ஃப்ரிஸ்கோ நாக் அரங்கில் அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் முன் எடுப்பில், ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை “கடலோ மழையோ” கம்பராமாயண இசைக்கச்சேரி நடந்தது. இது கர்நாடக சங்கீத மேடைகளுக்கு, நேரடியாக கம்பராமாயணத்தை கொண்டு சேர்க்கும் வரலாற்றுத்தருணமாக அமைந்தது.

கச்சேரியில் 12 பாடல்கள் பாடப்பட்டன. 10000 க்கும் அதிகமான பாடல்கள் கொண்ட காவியத்திலிருந்து வெறும் 12 பாடல்கள் 2 மணிநேர கச்சேரியில் பாடப்பட்டால், அது என்ன மாதிரி அனுபவத்தை தரக்கூடும்? அது சுருக்கித்தருவதில் வருமா?

சூழலை உருவாக்குதல்

பழனிஜோதி நியூஜெர்சியில் இருந்து வந்திருந்தார். சுக்கிரி என்ற வாசகர் குழுமத்தில் இலக்கிய வாசிப்பை முன்னெடுப்பவர். பாடகர், இலக்கிய வாசகர்.

வரலாறு என்று ஒன்று தமிழ்நிலத்தில் கிடைக்கும் காலத்திலிருந்து இலக்கிய படைப்புகள் எவ்வாறு பண்பாட்டை தக்க வைக்கின்றன என்று ஆரம்பித்து, சிலப்பதிகாரம் எவ்வாறு ஒரு அற நிலைப்பாட்டை முன்வைத்தது என்றும், அங்கிருந்து தமிழ் பண்பாடு உச்சம் கொண்ட 12 – 13 ஆம் நூற்றாண்டில், திரட்டி எடுத்த மகுடமாக கம்பராமாயணம் முளைத்தது என்று ஒரு பரந்த சித்திரத்தை அளித்தார்.

வையாபுரி பிள்ளை தொகுத்த தமிழ் பேரகராதி பட்டியலிட்ட, தமிழில் உள்ள தனித்துவமான சொற்கள் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் என்றும், கம்பராமாயணத்தில் மட்டும் ஒரு லட்சம் தனித்துவமான  தமிழ்ச்சொற்கள் பயன்படுத்த்பட்டுள்ளன என்றும் கூறினார். நாளை ஒருவேளை ஏதேனும் ஒரு காரணத்தால் தமிழ் பண்பாடு அழிந்து, கம்பராமாயணம் மட்டும் மிஞ்சும் என்றால் அதிலிருந்து மொத்த தமிழ் பண்பாட்டையும் மீண்டும் மீட்டு எடுத்துவிட முடியும் என்றும் கூறினார்.

கச்சேரிக்குள் செல்வதற்கு இந்த நீண்ட உரை மிக உதவியாக இருந்தது.

ஆஸ்டின் சௌந்தர்

இசைக்கு வடிவம் அளித்தல்

இசை அமைப்பாளர் ராலே ராஜன் சங்கப்பாடல்கள், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு தொடரின் நீலம் நாவல் மற்றும் திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்.

மொழியின் அடிப்படையில் ஒரு ரிதம் அமைந்துள்ளது. பலசமயம் இது பேச்சின் போது நமக்கே தெரியும். ஆனால் உரைநடை அல்லது எழுத்து என்று வரும்போது அதற்கு உள்ளே அமைந்து இருக்கும் ரிதத்தை, நாம் நமது மனதில் ஓடும் இசைக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறோம். பெரும்பாலான சமயங்களில் அந்த இரண்டு ரிதங்களும் ஒத்திசைந்து போகக்கூடும்.

ஆனால், இசையில் அறிமுகம் கொண்ட ஒருவர் அந்த எழுத்தில் கண்டுணரும் இசையை மீண்டும் புறவயமாக ஆக்கி புதியதாக முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக நமக்கு அளிக்கிறார்.

ராஜன் இந்த மொத்த கச்சேரிக்கும் தேர்ந்தெடுத்த பாடல்கள் வழியாகவும், அதற்கு அளித்த இசை வடிவம் வழியாகவும் அந்த மாயத்தை நிகழ்த்தினார்.

உலகம் யாவையும் முதல் இவ்வண்ணம் நிகழ்தல் வரை.

கச்சேரியின் முதல் பாடலாக

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா

பாடல் பாடப்பட்டது.

சோழ சாம்ராஜ்யத்தின் உச்சமான காலத்தில், தமிழ் பண்பாடும் உச்சம் அடைந்த காலத்தில், தேரழுந்தூர் என்ற சிற்றூரில் பிறந்த கம்பன், தன் காவியத்தின் முதலடியாக உலகம் யாவையும் என்று பரந்து விரிகிறான்.

அன்னவர்க்கே சரண் நாங்களே என்று பாடி  முடிக்காமல் அங்கிருந்து அஞ்சிலே ஒன்று பெற்றான் என்று ஆரம்பித்து அவன் எம்மை அளித்துக் காப்பான் என்று ஹனுமான் காப்பான் என்று சென்று முடித்தது இசைக்கோவை.

முதல் பாடலே மொத்த நிகழ்வுக்குமான உணர்வுநிலையை உண்டாக்கி விட்டது.

பின்னர், கோசல தேசத்தின் செழிப்பை, உண்மையில் அது கம்பனின் சோழ தேசம் தான், வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால் என்ற பாடல் மூலம் கொண்டு சென்று, மூன்றாம் பாடலில் நாயகன் ராமனின் அறிமுகம் நிகழ்கிறது.

ராமனை அறிமுகப்படுத்தும் பாடல் நேரடியாக ராமனின் தோளில் இருந்து ஆரம்பமாகி தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன என்று பாடும் போது மொத்த அரங்கமும் ராமனை கண்டிருக்கும். நான் அவ்வாறுதான் ராமனை அங்கு பார்த்தேன்.

நாயகன் அறிமுகம் முடித்தாயிற்று. பின்னர் என்ன நாயகி நோக்க வேண்டுமே, எண்ண அரு நலத்தினாள் என்று ஆரம்பித்து அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்! என்று சீதையும் ராமனும் பார்த்து கொண்டார்கள்.

இதுவரை ராமனை பிறர்தான் பார்த்து ரசித்தார்கள், சீதை என் செய்வாள்?

கடலோ? மழையோ? முழு நீலக் கல்லோ?  என்று ஆரம்பித்து அவனின் நிறம் கொண்டு அந்திமாலை வந்ததுவே என்று இசை சீதை வசம் சென்றது.

மருமகள் சீதை இந்த நிலையில் இருக்க அடுத்தபாடல் தாய் கோசலைக்குத் தாவியது. “குழைக்கின்ற கவரி இன்றி, கொற்ற வெண்குடையும் இன்றி” என்று ஆரம்பித்து தன்னந்தனியனாய் செல்லும் ராமனை ஒரு தமியன் சென்றான் என்று கோசலை காண்பதாக இசை நகர்ந்தது.

ராமனின் அழகை பார்த்தாயிற்று. அவனின் வீரத்தைப் பார்க்க நேரடியாக போர்க்களத்திற்கு கூட்டிச்சென்றது இசை.

வெடிக்கின்றன திசை யாவையும், விழுகின்றன இடி வந்து என்று போர்க்களச்சூழலை உண்டாக்கி கடல் வற்றின; மலை உக்கன என்று நிகழ்ந்ததைப் பாடி புரிந்து ஓடின, பொரிந்து  ஓடின, புகைந்து  ஓடின; என்று அம்புகளின் விளைவை சொல்லி நீர் ஒத்தன; நெருப்பு ஒத்தன; பொருப்பு ஒத்தன; நிமிரும் கார் ஒத்தன என்று அந்த அம்புகளை பற்றி பாடியதில் போர்க்களக்காட்சி கண்முன்னே நிகழ்த்தப்பட்டது.

போர் மகளை, கலை மகளை, புகழ் மகளை இணையாகக் கொண்ட இராவணன் வீழ்ந்துபட்டதை  திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால் என்று இசைத்து விபீஷணன் கண்ணீரோடு சென்று சேர்ந்துகொண்டது இசை.

மொத்தப் பார்வையாளர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ராஜன் கச்சேரியை அவ்வண்ணம் முடிக்கவில்லை. காவிய ஒருமை என்பது எப்போதும் சுபமே என்ற ஆதிவழி வந்த மரபின்படி,

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் இன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே!
உன் கை வண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்!

என்ற பாடல் மூலம்  அன்னர்வர்க்கு சரண் நாங்களே என்பதை ராமனின் திருவடியில் கொண்டு சேர்த்தார் (அரசியல் சரிநிலை கருதி உலகம் யாவையும்,  ராமனின் திருவடியில் கொண்டு இருத்தியது இசை என்று எழுதவில்லை 🙂)

ராலே ராஜன்

இசையின் ஊர்தி ஆகுதல்

சமீபத்தில் வைகாசனம் என்ற மரபைப் பற்றி அறிய நேர்ந்தது. எங்கும் இருக்கும் ஒன்று உபாசகன் மூலம் இறங்கி வந்து அங்கிருக்கும் சிலையில் ஆவாகம் ஆவது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய வரிகள் இசை வடிவம் கொண்டு டாலஸ் நகரில் பாடகி பிரியா கிருஷ் வழியே தன்னை நிகழ்த்திக்கொண்டது என்றே உணர்ந்தேன்.

தீவிரமான உபாசனை இல்லாமல் அவருக்கு இது சாத்தியம் ஆகி இருக்காது என்றே எண்ணுகிறேன்.

தன் குரலின் மூலம் இசையை, அதன் உணர்ச்சிகளை மிகச் சரியாக கொண்டு சேர்த்தார். இசைக்குத் திறவா காதுகள் என்னுடையது. ஆனால் என்னாலும் கூட இரண்டுமணி நேரம் வேறு சிந்தனை இல்லாமல், இசை நிகழ்த்திய அந்த பயணத்தின் வழியே சென்று உணரமுடிந்தது.

ஒத்திசைவு வழியே உணர்வுகளை கடத்துதல்  

மேடையில் இருந்த இசைக்கலைஞர்கள் தங்களுக்குள் சிறு சிறு தலையாட்டல்கள் மூலமும், சிறு சிறு கையசைவுகள் மூலமும் பரிமாறிக்கொண்ட தொடர்புறுத்தல்கள் இசைக்குச் சமமாக என்னைக் கவர்ந்தன.

பியானிஸ்ட் சாய் ஷங்கர் நின்று கொண்டே பியானோ வாசிக்க வேண்டி இருந்ததால் அவரின் உடல்மொழி இசைக்கு ஏற்ப மாறுபடும் விதத்தை கவனிப்பது மிக ஆர்வமான ஒன்றாக இருந்தது

மேடையின் இடது ஓரத்தில் இருந்த ராஜு பாலன் மிருதங்கமும், வலது ஓரத்தில் இருந்த ஸ்கந்த நாராயணின் கஞ்சிராவும், உமா மகேஷ் அவர்களின் வயலினும் ஒத்திசைவு கொண்டு மாயத்தை நிகழ்த்தின.

ராஜு பாலன் ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் மிருதங்கத்தை மாற்றினார்.

நிகழ்வு முழுதும் பாடகி மீது குவியம் கொள்ளுமாறு இருந்தாலும், இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் கலை உச்சத்தை நிகழ்த்திக்கொள்ள இடம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒருகட்டத்தில் மிருதங்கம், கஞ்சிரா, வயலின், பியானோ என்று பாடல்களைப் பிரித்து அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமென்றே நினைத்தேன்.

மிருதங்கமும், கஞ்சிராவும் தங்களுக்குள் இணைந்து நிகழ்த்திகொண்டது ராஜு பாலன், ஸ்கந்த நாராயணன் வழியே நிகழ்ந்த இசைதான்.

பழனி ஜோதி ஒவ்வொரு பாடலுக்கு இடையேயும் அவற்றை புரிந்து கொள்ளவும், ரசிக்கவும் திறப்புகளை அளிக்கும் சிறு உரைகளை நிகழ்த்தினார்.

கச்சேரி முடிந்த பிறகு பார்வையாளர்கள் ஒரு உச்சத்தில் இருந்தனர். அதை குலைக்காவண்ணம் இசையமைப்பாளர் ராலே ராஜன் இசைக்கலைஞர்களின் நுட்பம் பற்றியும், கம்பராமாயணப் பாடல்களை இசை தெரியாதவர்களும் ரசிக்க தாளம் சேர்ந்த  முறையான இசைவடிவம் தேவை என்றும், எனவே அத்தனை பாடல்களையும் முறையாக கர்நாடக இசையின் ராகத்தில், தாளத்தில் அமைத்து மேலும் ஆலாபனை, கற்பனை சுவரம், தனி ஆவர்தனை போன்றவற்றின் அடிப்படையிலும் முழு நிகழ்வை வடிவமைத்து இருந்ததாக தெரிவித்தார்.

நிகழ்வை ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் வாசகர் வட்ட ஆஸ்டின் சௌந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

பழனி ஜோதி விளக்கம் தர, ப்ரியா க்ருஷ் பாடுகிறார்

இசையின் வழியே நிகர்வாழ்வு

10000 க்கும் அதிகமான பாடல்கள் கொண்ட காவியத்திலிருந்து வெறும் 12 பாடல்கள் 2 மணி நேரத்தில் பாடப்பட்டதில் நிகழ்ந்த ஒரு விசித்திரம் என்பது இசை அங்கு உணர்வுகளை வடிவமைத்து நிகர்வாழ்வை நிகழ்த்திக்காட்டியது என்பதுதான். இசை நேராக கவ்விக்கொண்டு ஒரு மலை உச்சியில் இருந்து மற்றொரு மலை உச்சிக்கு கொண்டு சென்றது. இசை அறிதல்கள் உடையவர்கள் அங்கிருந்து எழும்பிப் பறக்கலாம். இசை அறியா என்னைப் போன்றவர்கள் அந்த உச்சியையே ரசிக்கலாம். கம்பராமாயணம் அளிக்கும் கலைஉச்சத்திற்கு இலக்கியமாக தர்க்கத்தின் வழியே படிப்படியாக ஏறிச்செல்லலாம். இசையின் வழியே பறந்தும் செல்லலாம். யோகத்தின்  மூலம் அங்கு எப்போதும் இருக்கலாம்!


கடலோ? மழையோ? – இசை வண்ணம் அங்குக் கண்டேன்

சு. வெங்கட்

மகிழ்ச்சியின் வெளிப்பாடு புன்னகையாக மட்டுமே இருக்கக்கூடும் எனில், அதன் உச்சம் அதீத புன்னகையாக இல்லாமல் கண்ணீரை வரவழைப்பது ஒரு மாயம்தான். புன்னகையும், கண்ணீரும் தனித்தனியான அறைகளில் அடைக்கப்பட்டு, இந்த இரு வேறு உணர்வுகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே வெளிப்படக் கூடிய அளவில் தான் பெரும்பாலான நம் அன்றாட நிகழ்வுகள் இருக்கின்றன. புன்னகையின் எல்லையைக் கடந்து கண்ணீரை வெளிப்படுத்தக் கூடிய மகிழ்வான மாய நிகழ்வுகள் எத்தனை முறை நிகழ்கிறது நம் அன்றாடத்தில்? சோர்வான நிகழ்வுகளின் வழியே தட்டையான ஒரு உலகத்தை கண்முன் நிறுத்தி, உணர்வின் எல்லையை மறைத்துவிடுகிறது அன்றாடம். நம்மை அள்ளி எடுத்துச் சுழற்றி ஒன்றிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து மற்றொன்று என்று உணர்வுகளின் இராட்டின சுழற்சியில் பயணிக்க வைத்து, நம்மை உணர்வின் எல்லையைக் கடந்து செல்ல அன்றாடத்தில் ஏதேனும் இருக்கக் கூடுமென்றால் அது என்னவாக இருக்கமுடியும்? யோசித்துப்பார்த்தால் இசையைத் தவிர எளிதாக அதனை அன்றாடத்தில் நிகழ்த்தக்கூடியது வேறெதுவுமில்லை. நுணுக்கங்கள் தெரிந்தவர் தெரியாதவர் என்று எந்தவித பாகுபாடுமின்றி, இசை அனைவரின் விரல்களையும் பிடித்து அவரவர் எல்லைக்கோட்டினை கடக்கச் செய்கிறது. அப்படி அன்றாடத்திலிருந்து விலக்கி, அரங்கத்திலிருந்த எனக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் உணர்வின் உச்சத்தைத் தந்தது, டெக்ஸாஸ் மாகாணத்தில் நம் விஷ்ணுபுரம் நண்பர்கள் நடத்திய “கடலோ மழையோ” என்ற கம்பராமாயண பாடல்கள் கொண்ட கர்நாடக இசைக் கச்சேரி. 

கம்பராமாயண பாடல்களைக் கர்நாடக இசையில் பாடுவதைக் காண நான் டெக்ஸாஸ் மாகாணம் டல்லஸ்க்கு சென்றிருந்தேன். எரிக்கும் வெயிலில் டல்லாஸ் நகரம் நிழல்களற்று, பிளக்கப்பட்ட சாலைகளின் இருபுறமும் குடில்கள் வேகமாக உற்பத்தியாகிக்கொண்டிருக்க, மக்கள் உணவு விடுதியில் நுழைய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாகனங்கள் அடுக்கடுக்காக மேகங்களற்ற வானில் எழுந்து பறந்துகொண்டிருந்தன. இவற்றைக் கடந்து இந்த இசைக் கச்சேரி நடக்கும் ‘நாக்’ அரங்கத்தினுள் நுழைந்தபோது, திரையில் கம்பன் கருநீல வானத்தில் மினுமினுக்கும் நடச்சத்திரங்ளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார். 

நிகழ்வைத் திருமதி. அன்னபூர்ணாவும், செல்வி. காயத்ரி பாலாஜியும் தொடங்கி வைத்து, கர்நாடக இசைக் கச்சேரி குழுவினர் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்கள். நண்பர் திரு.பழனி ஜோதி அவர்கள் கம்பராமாயணம் எனும் தமிழ் இலக்கிய காவியத்தினை பற்றிய சிறப்பான ஒரு முன்னுரையைக் கொடுத்தார். கம்பராமாயணம் எனும் காவியம் தமிழ்க் கலாச்சார பண்பாட்டின் கூறுகளை உள்ளடக்கி வைத்து எந்த நிலையிலும் அதிலிருந்து மீட்டெடுத்துக் கொள்ள முடியும் என்று விளக்கியது நல்ல தொடக்கமாக இருந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து, கதையின் நாடகத்தீயமான சிகர தருணங்களைக் கொண்ட பன்னிரண்டு பாடல்களைப் பாடுவதற்குத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.  

பழனி அவர்கள் கம்பராமாயணத்தின் பெருமையை எடுத்துரைக்கும் போது, கம்பன் ‘சொல்லில்’ ஒளித்து வைத்திருக்கும் இசையை மீண்டும் மீண்டும் சிலாகித்துப் பேசினார். அந்த இசையைக் கண்டுணர்ந்து, இசையறிவுடன் தன்னுடைய அபார கற்பனையையும் உட்புகுத்தி, தன் உணர்வால் அடைந்த இசை ஞானத்துடன் திரு. ராஜன் அவர்கள் அந்த பன்னிரண்டு பாடல்களையும் இசையமைத்திருந்தார். நுணுக்கங்கள் தெரியாமல், இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னைப் போன்றவர்களுக்கும் உணர்வின் உச்சத்தை அடைய இசையைக் கட்டமைத்துக் கொடுத்தது அவரின் பெரும் கருணையே. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு உணர்வுகள் இருப்பதை அதற்குரிய ராக தளங்கள் வழியே ராஜன் அவர்கள் கட்டமைத்து, ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் வித்தியாசத்தைக் காண்பித்திருந்ததுவே இந்த இசைக் கச்சேரியின் சிறப்பு எனலாம்.   

முதல் பாடலாகப் பாடகி திருமதி. பிரியா கிருஷ் அவர்கள் “உலகம் யாவையும்” என்ற பாடலுடன் தொடங்கி, இனிமையான தன் குரலின் வழியே நம் கற்பனையைத் தூண்டி பாடலின் சூழலை, துல்லியமான அதன் உணர்வை அடையச் செய்ய, வந்திருந்த அனைவருக்கும் தாங்கள் காலத்தைக் கடந்த ஒரு மிகப்பெரிய அனுபவ சுழலுக்குள் சிக்கிக்கொள்ளவிருக்கிறோம் என்பதை உணர்ந்து அதற்குரிய மன நிலைக்குத் தயார்செய்துகொண்டனர்.   

அடுத்து அவர் பாடிய “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்” என்ற பாடல் வழியாக நம்மையும் அயோத்தி நகருக்கு அழைத்துச் சென்றார். மூன்றாவது பாடலாக, ஒரு இலட்சிய ஆண்மகன் இராமனைப் புகழ்ந்து பாடப்பட்டு, கம்பனின் உச்சக்கட்ட கற்பனையைக் கண்டு எல்லோராலும் ரசிக்கப்பட்ட “தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற பாடலை அழகான ஆலாபனையுடன் தொடங்கிப் பாடியபோது,  மிதிலை நகர் வீதியில், ஒரு பெரும் கூட்டத்தில் நாமும் சிக்கி முண்டியடித்து, கிடைத்த இடைவெளிகளில் இராமனை முழுவதும் காண முயற்சி செய்து தோற்ற அந்த பேரனுபவத்தைக் கொடுத்தார். திரு. உமா மகேஷ் அவர்களின் வயலினும், திரு. சாய் சங்கர் அவர்களின் பியானோவும், திரு.ஸ்கந்தா அவர்களின் கஞ்சிராவும், திரு.ராஜு பாலன் அவர்களின் மிருதங்கமும் அக்கூட்டத்தில் நம்முடன் சிக்கி இராமனின் அழகைக் காண முடியாமல் தவிக்கும் பல்வேறு மனிதர்களின் உணர்வுகளை வெவ்வேறு குரல்களில் பிரதிபலித்தது போலவே இருந்தது. 

அடுத்த பாடலும் கம்பராமாயணத்தில் புகழ் பெற்ற காதல் வரிகள் கொண்ட “எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி” என்ற பாடலை பாடி இராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்ற வரியில் இருக்கும் காதல் தாபத்தையும், பார்வையை நீக்க முடியாமல் இருக்கும் போது ஏற்படும் தவிப்பையும் பிரியா கிருஷ் அவர்கள் தன் குரலில் அதனைக் காட்சியாக்கிக் காண்பித்தார். 

ஐந்தாவது பாடலாக இசைக் கச்சேரியின் தலைப்பாக வைக்கப்பட்ட “கடலோ? மழையோ?” என்ற பாடலை பிரியா கிருஷ் அவர்கள் பாட அவர்களின் குரலுக்கு இணையாக உமா மகேஷ் அவர்களின் வயலின் இழைந்து வந்தது. சீதையிடம் “எது என் உயிரை உண்பது?” என்று அவளுக்குள் இருந்த குழப்பமான அந்த மனநிலையைக் காட்ட, ஸ்கந்தாவும், ராஜு பாலன் அவர்களும் கஞ்சிராவும், மிருதங்கமும் கொண்டு தனி ஆவர்த்தனம் நடத்திக் காட்டினார்கள்.                   

அடுத்து, “குழைக்கின்ற கவரி இன்றி” என்ற பாடலின் வழியே, பிரியா கிருஷ் அவர்கள் கோசலையின் உணர்வை நம்மிடையே கடத்தினார். ஏழாவது பாடல், இராமனுக்கும் இரவணனனுக்கும் இடையே போர் நடக்கும் பாடல் “வெடிக்கின்றன, திசை யாவையும்” என்ற பாடல் போரின் தீவிரத்தைக் காண்பிப்பது போல இசை கட்டமைக்கப்பட்டிருந்தது. சாய் சங்கர் அவர்களின் பியானோவும், ராஜு பாலன் அவர்களின் மிருதங்கமும் பிரியா கிருஷுடன் இணைந்து போரின் தீவிரத்தை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே உச்சத்துக்குச் சென்று மிக அழகாக முடித்தார்கள்.

இராவணன் இராமனின் அம்பில் உயிர் துறந்து போர்க்களத்தில் விழுந்து கிடக்கும் தருணத்தில் விபீஷணன் பாடும் பாடலான  “போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை” என்று தொடங்கும் பாடலின் சூழலை உமா மகேஷ் அவர்கள் தன் வயலின் வழியே கொண்டுவர, பிரியா அவர்கள் அதனுடன் இழைந்து பாடத் தொடங்கினார். இப்பாடலை வாய்விட்டு சொற்களைக் கொண்டு பாடும்போது இருக்கும் துயரைவிட, விபீஷணனின் உள்ளம் இராவணனுக்காக அழுது துடிப்பது போல வயலினும் சொற்களின் ஊடே பயணித்து வந்தது திரு ராஜன் அவர்களின் கற்பனைத் திறனைக் காட்டியது.

இறுதியாக “இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்” என்ற பாடலுடன் கச்சேரியை நிறைவு செய்தது மிகப் பொருத்தமாக இருந்தது. திரு.ராஜன் அவர்களும், திரு. சௌந்தர் அவர்களும் நன்றியுரை சொல்லி நிகழ்ச்சியை முடித்தனர். திரையரங்கை விட்டு வெளியேறி வாகனத்தில் வீட்டுக்கு பயணிக்கையில் நட்சத்திரங்கள் வான் நிறைந்து இருந்தன.   


கம்பராமாயணக் கச்சேரி

மேலும்:


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.