வாசக குறிப்பு
இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது – ரா.கிரிதரன்.
அறிபுனைவு எழுத்துகளுக்கான முக்கிய சவாலாக எனக்குப் படுவது, அதன் வடிவம்தான், எழுத்து.
அறிவியல் காரணிகளை மையப்படுத்தி, அல்லது கருவாகக்கொண்டு / கூறுகளை உள்ளடக்கி புனைவாக வாசகனின் கவனத்தை இழுத்து அவரது அகத்தில் விரியவேண்டியது, காட்சிப்படுத்தலை (visualisation) ஒப்புநோக்க சிரமமானது.
எழுத்து வாசகரின் உழைப்பை (கவனத்தை, அக்கறையை, கற்பனையைக் கோரக்கூடிய ஒன்று.
அதையே காட்சிப்பிம்பமாகக காட்ட இத்தனை மெனக்கெடல் தேவையில்லை.
அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் நுட்பம் மென்மேலும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் ஓர் புதிய உலகைப்படைக்க, காட்ட, ஓரிரு நிமிடங்களில் சிற்சில ப்ரேம்களில், ஒலியமைப்பில் காண்போரின் aweவை எளிதில் அடைந்துவிட முடியும் விஷயத்தை எழுத்தில் காட்ட பத்து, இருபது பக்கங்களும், அதிக வாசக கவனமும் தேவைப்படும்.
தமிழில் எழுத மேலும் அதிக மெனக்கெடல்கள் வேண்டியிருக்கின்றன. அறிவியல் தேற்றங்கள், மொழி, கலைச்சொற்கள், வரையறைகள்…மாறுபட்டுக்கொண்டே இருக்கும் வரையறைகள்.
இத்தனை சட்டகங்களுக்கு மத்தியிலும் தமிழில் முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தகுந்த சமகால எழுத்தாளர்களில் ஒருவர், ரா.கிரிதரன்.
அவரது சமீபத்திய சிறுகதையான “இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது” இப்படிப்பட்ட வரையறைக்குள் வரும்.

கதை நடக்கும், சரியாகச் சொல்லவேண்டுமென்றால், கதை நடக்கவிருக்கும் காலம்: கி.பி.2124.
கதைச்சொல்லி, ஆனந்த், வாழுமிடம் (பிறந்தது முதலே) / வேலை செய்யுமிடம் – க்ரீன்ஹவுஸ் எனப்படும் ஓர் மிதவை நகரம்/தீவு.
அந்த தீவு, இந்தியபெருங்கடலில் இந்தியாவிலிருந்து 1000 கீமீக்கும் தொலைவில் இருக்கிறது.
அதைச்சுற்றி இருபது காற்றாலைப் பண்ணைகள் அல்லது மிதவை காற்றாலைகள் இயங்குகின்றன. அவற்றிலிருந்து மின்சாரம், கசிவற்ற மின்சாரம் சேகரிக்கப்பட்டு மின்னணு கொள்முதலை மையக்கட்டுப்பாட்டு செயலகம் இருக்கும் முப்பந்தலுக்கு அனுப்பப்படுகிறது. முப்பந்தல், மின்சக்தி சேகரிப்பு மையமாக இருக்கிறது.
க்ரீன்ஹவுஸ் கட்டுப்பாட்டில் இருந்த இருபது காற்றாலைப்பண்ணைகளின் மின் உற்பத்தி அதிவேக கடத்தி மூலம் ஆழ்கடலில் பயணம் செய்து முப்பந்தலில் இணையும்.
இந்த தீவு போன்று பல தீவுகள் இந்திய மகாகடலில் உள்ளன. முந்தின நூற்றாண்டில் தமிழ் நிலத்தில் இருந்த காற்றாலைகளின் உற்பத்தி குறைந்து அல்லது நின்றும் போய், “நிகழ்காலத்தில்”அவை வெறுமே சேகரிப்பு மையங்களாக இருக்கின்றன.
இந்த கதைச்சூழல், பின்புல”நிலப்பரப்பு” வாசகனின் கற்பனையில் அழகாக விரியக்கூடிய ஒன்று.
கடலில் பெரும் அலைகள் மிதவையைத் தூக்கி இறக்கும் இடங்கள் – கடற்கரையில் நீரில் இறங்குகையில் நாமும் அப்படித்தானே அலை வரும்போது மேல் போய் கீழே வருவோம், அப்படி ஓர் தீவே ஏறி இறங்குமானால்…முன்னிருக்கும் தெரு, அடுக்கங்கள் மேலே ஏறி பின்னர் நாமிருக்கும் இடமும் ஏறும்போது முன் தெருவும் அடுக்கங்களும் கீழே இறங்கும் தோற்றம்…
ஆனந்தின் நிலத்தின் மீதான ஏக்கங்களை ஓர் அதிகாலையில் காட்டப்பட்ட விதமும் அந்த ஏக்கத்தை, ஆனந்தின், வாசகனின் ஏக்கத்தை பிரதிபலிக்கின்றன.
“வைகறை வெளிச்சம் வரத் தொடங்கியிருந்தது.
விண் மீதான ஒரு கூக்குரலாக அனைத்து காற்றாலைகளும் மேல் நோக்கி பார்த்திருந்தன. ஒரு மாபெரும் மன்றாடல் போல.“…
ஆனந்தின் அம்மா மற்றும் மேலிடம் அவனை அடுத்தடுத்த தேர்வுகள் எழுதி ஆய்வுக்குழு (ஒரு மாதிரி மைய, மொத்த உலகத்திற்குமான மைய ஆய்வுக்குழுவில் சேருமாறு அவனுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆனந்திற்கு அதில் ஆர்வமில்லாமல் வேறொன்றில் உறுதியாக இருக்கிறான்.
மையக்குழுவின் அடுத்த மைல்கல் அல்லது மிக முக்கிய எதிர்கால கனவு- முடிவிலா சக்தியை, கசிவற்ற சக்தியை அடைவது. அது பெரும் அழிவுகளை உருவாக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறான்.
தன்னை, முப்பந்தல் சேகரிப்பு முகாமிற்கு மாற்றச்சொல்லியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறான். அந்த நிலத்தின் மேல் அவனுக்கு மாபெறும் ஏக்கம் இருக்கிறது.
மேலும் காற்றாலைகளின் ஆழ்துளை பதியங்களால் கடல் மட்டத்தில் அதிகப்படியான மின்காந்த அலைகள் உருவாகி கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தொழில் நுட்பங்களைக் கொண்டு, சுழற்விசிறிகளின் வண்ணங்களால் வலசைப் பறவைகளை திசை திருப்பும் செயல்கள் -இதன் மூலம் அவற்றின் இயற்கை உந்துதலை அழிப்பது அல்லது மாற்றி அமைப்பது (இல்லையெனில் அவை காற்றாலைகளில் சிக்கி பாதிப்பை விளைவிக்கும்; விளைவித்திருக்கின்றன.
– இவையெல்லாம் ஆனந்த்தின் குற்றச்சாட்டுகள்…
இதற்கு எதிர்மாறாகவே, அதாவது நேர்மறையாகவே க்ரீன் ஹவுஸ்/ அரசாங்கங்கள் அவர்களின் பாடதிட்டங்களில், பிரச்சாரங்களில் சொல்லிவருகிறார்கள்.
ஆனால் இது உண்மையல்ல, பெரிய அணுமின் கசிவால் நச்சு நிலத்தில் வாழ முடியாமல் மின் உற்பத்தி நிலையங்கள் வேறு இடங்களுக்குச் சென்றதுதான் உண்மைக்காரணம் என்பதில் ஆனந்த் உறுதியாக இருக்கிறான்.
ஓர் தனியார் “சோஷியல் மீடியா” அல்லது குழுவில் இவ்விவரங்களை, உரையாடல்களை பகிர்ந்துகொள்கிறான்.
இதற்கிடையில் ஆனந்தின் தோழர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. டெடி எனப்படும் ஓர் ஆக்டோபஸ் மற்றும் டெடியின் பெண் தோழி ஆக்டோபஸ். டெடி, ஆனந்தின் மனநிலைக்கேற்றவாறு நடந்துகொள்கிறது.
கதையின்போக்கில், எதிர்பார்த்தவாறே, அரசாங்க ஆட்கள் அவனை கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். அவர்கள் அந்த தனியார் குழுவில், ஒற்றர்களை வைத்திருக்கிறார்கள்.
அறிவியல் புனைவு என்றாலே எதிர்காலத்தைப் பற்றிதான் என்று இருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அப்படி இருந்தால் குற்றமில்லை.
தமிழில் இப்படிப்பட்ட பின்புலத்தைக்கொண்ட புனைவு, தமிழில் அதிகம் உறுத்தாத கலைச்சொற்களைக் கொண்ட புனைவு (கொந்தர்கள், நெகிழி) அதிகம் வாசித்த நினைவில்லை.
கதையின் இறுதியை, வெவ்வேறு விதங்களாக கொண்டு சென்றிருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அதற்கு முக்கிய காரணம், கதையின் தற்போதைய “இறுதி” மட்டுமல்ல, இந்தப் புனைவு விரித்துக்காட்டும் பெரும் பின்புல சித்திரமும் அவை எழுப்பும் வினாக்களும்தான்; அவையே முக்கியமானவை, கதையை ஓர் முக்கிய கதையாக கருத, நினைவில் வைத்திருக்க என்று நம்புகிறேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
