இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது

..ஏனென்றால் நான் இருப்பது நிலத்தில் அல்ல. இல்லை, அப்படியும் சொல்லிவிடமுடியாது. இப்படிச் சொல்கிறேன் – நான் இருப்பது நகரும் நிலத்தில். அதாவது கப்பல் போல கடலில் மிதக்கும் நகரம். நீங்கள் எந்த காலத்திலிருந்து நான் சொல்வதைக் கேட்கிறீர்கள் எனத் தெரியாது. என் காலம்: கி.பி. 2124. இடம்: க்ரீன்ஹவுஸ் எனும் நகரும் நகரம். இதை நகரம் என்று கூட சொல்லிவிடமுடியாது. கிட்டத்தட்ட ஒரு குட்டி நாடு. முன்னர் தீவாக இருந்த சிங்கப்பூர் போல. இந்தியாவுக்குக் கிழக்கே இந்தியப்பெருங்கடலில் கிட்டத்தட்ட 1000 கிமீக்கும் தூரத்தில் இருக்கிறது இந்தத் தீவு.

‘இன்னும் மூன்று மணிநேரத்தில் உன் வேலை நேரம் முடிகிறது இல்லையா?’

‘ஷிஃப்ட்’

‘அது தெரியும். ஆனால் உன்னிடம் தமிழில் பேசும்படிதான் எனக்கு உத்தரவு.’

‘அவங்க உத்தரவு எல்லாமே நம் நன்மைக்குத் தானா?’

‘இது எனக்கான சோதனைக் கேள்வி மாதிரி இருக்கே’

ஜாய் கில்லாடி தான்.

‘சோதனை இல்லை. எனக்கு ரொம்ப நாளாவே இருக்கும் சந்தேகம் தான் இது. இங்க நிறைய தப்பு இருக்கு. ‘

ஜாய் எதுவும் பதில் சொல்லவில்லை.

‘இரு க்ரேஹவுஸிலிருந்து அழைப்பு. மீண்டும் வருகிறேன்’

திரையில் உருவம் காணாமல் போய் மீண்டும் அவளது ஆரல்வாய்மொழி காற்றாலைகள் படம் படபடத்தது. அது ஒரு கனவுக்காட்சி போல இருந்தது. பச்சை மலைகளுக்கு இடையே வரிசையாகக் காற்றாலைகள் மலைக்கு சாமரம் விசிறிக்கொண்டிருந்தன. ஒரு தொடு தூரத்தில் இருந்தாலும், எனக்கும் தென் இந்திய நிலப்பகுதிக்கும் இடையே இருக்கும் தூரத்தை கிமீட்டரில் கணக்கு செய்ய முடியாது. ஜாய் இருக்கும் தென் இந்திய நிலப்பகுதி என் தீவுக்குத் தாய் நிலம் போல.

கிரீன்ஹவுஸ் தலைமைத் தரப்பிலிருந்து எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. வராது என்றே என் சகாக்கள் நினைக்கிறார்கள். குறைநீக்கி அலுவலில் நான் கொடுத்த ஐம்பது பக்கத்துக்கும் அதிகமான குற்றப்பத்திரிக்கையை யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை. படித்திருந்தாலும் அவர்களை எதிர்த்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் ஒரு நெடிய பதில் தயார் செய்யும் குழுவினர் அவர்களிடம் உண்டு. கிரீன்ஹவுஸின் மறுயுருவாக்க சக்தி சார்ந்த திட்டங்கள் இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் 2024 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. உலகில் அவர்கள் முன்வைக்கும் புனிதர் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் திட்டங்கள் கசிந்த பின்னரும் என்னைப்போன்ற சில உறுப்பினர்களைத் தடை செய்யாமல் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களது அஸ்திவாரம் பலமெனக் காட்டும் ஒரு நாடகம்.

நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். இப்போது நானிருக்கும் அறை சூரியன் மறையும் திசையில் அமைந்திருக்கிறது. என் ஜன்னல் வழியாகத் தெரியும் கிழக்கு க்ரிட்டில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட காற்றாலைகள். பெரிய ராட்டினம் போல ஒன்று ஏறும்போது மற்றொன்று இறங்கிக்கொண்டிருந்தது போல இருந்தது. கடலின் சீற்றத்தில் எழுந்த பெரிய அலை மிதவை காற்றாலைகளை உதறி எடுத்ததுபோல. நான் கண்ணை மூடிக்கொண்டு சுகமாக சோம்பல் முறித்தேன். என்னுடைய ஷிஃப்ட் முடியும் நேரம் என்றாலும் மாலையில் செய்வதற்கு எதுவும் இல்லாததால் நான் உட்கார்ந்திருந்த நாற்காலியின் சாய்வை அதிகப்படுத்திக்கொண்டேன். ஒரு பொத்தானை அழுத்தி ஜாஸ் இசையைத் தொடங்கினேன். காற்றின் அசுர வேகத்தை தவிர்க்க மிதவைக் காற்றாலைகள் ஒவ்வொன்றாக சுழல்வதை நிறுத்தியிருந்தது. பெரும் அலை எங்கள் நிலத்தைக் கடக்க சில மணித்துளிகள் ஆகலாம். அப்போது ஒரு சுகமான ஊசலாட்டம் வயிற்றில் தெரியும். அதற்காகக் காத்திருந்தேன்.

இந்தியக்கடலில் க்ரீன்ஹவுஸை சுற்றி மட்டுமே நாங்கள் இருபது பண்ணைகள் வைத்திருந்தோம். ஒவ்வொன்றிலும் நாற்பதுக்கும் மேலான மிதவைக் காற்றாலைகள். அங்கிருந்து வரும் தகவல்களை சேகரித்துத்தரும் நிரலியை ஆய்வது மட்டுமே என் வேலை. அலைமின்பெருக்கி அசுர வேகத்தில் சுற்றத் தயாராக இருந்ததை என் திரை ஓரப்பச்சை சக்கரம் காட்டியது. மாலைக்குள் அன்றைய மின்னணு கொள்முதலை மையக்கட்டுப்பாட்டு செயலகம் இருக்கும் முப்பந்தலுக்கு அனுப்ப வேண்டும். ஜாய் அங்கு தான் இருக்கிறாள். முப்பந்தலில் மின்சக்தி சேகரிப்பு மையம் ஒன்றை இந்தியா நிர்வகிக்கிறது. பழைய காற்றாலைகள் இருந்த நிலப்பகுதி. நூறு ஆண்டுகளில் தெற்கு ஆசியாவின் தலைமை மின் சேகரிப்பு நிலமாக மாறியிருந்தது.

‘என்ன கிளம்பவில்லையா?’

மீண்டும் ஜாய். கோடுகளாக வரும் அவளது ஒலித்துணுக்கு சட்டென இசையைத் தாண்டி கேட்டது. இசையொலி குறைந்தது.

‘ போய் என்ன செய்வது? உன்னோடு பேசிக்கொண்டிருக்கலாம்.’

‘ இதோ இன்னும் அரைமணி நேரம் தான். க்ரேஹவுஸின் மேகநாதனுடன் பேசப்போய்விடுவேன்.’

நான் பதில் சொல்லப்போவதில்லை. இதோ அலை வந்துவிட்டது. அறையின் பொருட்கள் சுயபூட்டில் நிலைத்தன.

‘ஆனந்த்..ஆனந்த்’

ஜாய் உடனான தொடர்பும் சற்று துண்டித்தது. அலை அப்படியே ஒரு துள்ளலுடன் க்ரீன்ஹவுஸை ஏற்றி இறக்கியது. பிறந்திலிருந்து இதை அனுபவித்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் என் உடலில் சொல்லயியலா உணர்வு. முப்பந்தலில் இருந்தும், பாலியிலிருந்தும் வரும் பொறியாளர்கள் வயிறைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள். இதை அனுபவிக்க இங்கு பிறந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட நாற்பது அடிக்கும் மேலாக உயரும் அலைகள் இப்பகுதியின் சிறு அசைவுகள். அதையே அவர்களால் தாங்க முடியாது.

‘சொல். இங்கு தான் இருக்கிறேன்.’

‘கோபித்துக்கொண்டாயோ என நினைத்தேன்’

‘இல்லை’

‘உன்னுடைய காற்றாலை இயந்திரவியல் தேர்வு அடுத்த மாதம் தானே?’

‘இல்லை. அதை கேன்சல் செய்துவிட்டு நான் கூட இன்னும் கொஞ்சம் நாளில் முப்பந்தலுக்கு வந்துவிடுவேன்.’

‘இந்தப் பேச்சை நீ நிறுத்தப்போவதில்லையா? உன் கம்ப்ளைண்டை அவர்கள் படித்ததும், நீ போப்பா என அனுப்பிவிடுவார்களா?’

‘என் குழப்பம் உனக்குப் புரியாது. நீ இங்கு பிறக்கலை. பிறந்ததிலிருந்து பொய்யான உலகத்தில் கட்டப்பட்ட பொய் பிரச்சாரத்தோடு வாழ்ந்து பார்த்தால் தான் உனக்குப் புரியும் ஜாய்’

‘இங்கு வா, முப்பந்தலில் வேறு பொய், வேறு பிரச்சாரம். அவ்வளவு தான் வித்தியாசம்’

‘இல்ல, இங்கில்லாதது ஒன்று அங்கு இருக்கு..இரு திரும்பவும் அழைக்கிறேன்’

அதற்குள் அறைக்குள் மையக்கட்டுப்பாட்டிலிருந்து வந்த ஒலி அழைப்பு வந்ததால் ஜாய் உடனான உரையாடலை சட்டென துண்டித்தேன்.

சற்றே எரிச்சலுடன் அறையின் முகப்புக்கதவுக்குச் சென்றேன். சுவரென எழுந்த அந்த அலை க்ரீன்ஹவுஸைக் கடந்து நகர்ந்துகொண்டிருந்தது. இடப்புறம் இருந்த மிதவைக் காற்றாலைகள் சொடிக்கிவிட்டது போலச் சுழலத்தொடங்கின. மணிக்கு 40 கிமீ காற்று. மிதமானது தான். இரவு தான் 100கிமீ வேகம் எடுக்கும். ஏற்கனவே காற்றாலைகளை அதிகாலையில் நிறுத்துவதற்கான திட்டநிரலி நான்கு பண்ணைகளின் மையக்கட்டுப்பாட்டுக்கு போயிருக்கும்.

அறைக்கதவைத் திறந்ததும் இசை தானாக நின்றது. சுயப்பூட்டு விலகி அறைக்கு ஒரு உயிர் வந்தது. அடுத்த ஷிஃப்டுக்கான பொறியாளர் ஷாம் வந்துவிட்டார். அவருடன் மையமாகத் தலையாட்டிவிட்டு நான் கீழே போனேன். மிதிவண்டியில் என்னுடைய பையை வைத்ததும் பூட்டு திறந்துகொண்டது. பத்து கிமீ முழு வட்டம் இருந்த க்ரீன்ஹவுஸில் என்னுடைய வீடு எனச் சொல்லப்படும் அடுக்ககம் பதினைந்து நிமிடத்தில் வந்துவிடும். நான் கடந்து செல்லும் மத்திய கட்டுப்பாட்டு அலுவல் இருந்த கிழக்குப் பகுதி முழுவதும் புகையற்ற அமைப்பைக் கொண்டது. சமையலறை புகை கூட மறுசுழற்சிக்குச் சென்று என் அறைக்கான மின்சாரமாகிறது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்தியா, சீனா, இலங்கை ஒப்பந்ததத்தில் உருவான மறுயுருவாக்க சக்தி மையங்களில் நான் இருந்த க்ரீன்ஹவுஸ் இந்தியாவுடன் இணைந்திருந்தது. க்ரீன்ஹவுஸ் கட்டுப்பாட்டில் இருந்த இருபது காற்றாலைப்பண்ணைகளின் மின் உற்பத்தி அதிவேக கடத்தி மூலம் ஆழ்கடலில் பயணம் செய்து முப்பந்தலில் இணையும். தாய்வீடான முப்பந்தலில் எங்கள் சிறு மையங்களின் தொப்புள் கொடி இணைந்திருக்கும். இன்று நான் இருக்கும் தீவு போலப் பல தீவுகள் இந்திய மகாகடலில் உள்ளன. தமிழ் நிலத்தில் இருந்த காற்றாலைகளின் உற்பத்தி குறைந்ததும் இன்று அவை வெறுமே சேகரிப்பு மையங்களாக ஆனதும் வரலாறு.

நான் வருவதை முன்கூட்டியே அறிந்து அறையின் சீதோஷ நிலை எனக்கு ஏற்றார்போல மாறியிருந்தது. உள்ளே நுழைந்ததும் டெடி சிறு விளையாட்டைத் தொடங்கினான்.

‘ஏய் டெடி, இன்னிக்கு கொஞ்சம் கடுப்பில் இருக்கேன்.’

‘என்றைக்குத்தான் இல்லை’  என்பது போல கொஞ்சமும் நிலை மாறாது சிறு வளையங்களை ஒரே நேரத்தில் மூன்று குச்சிகளில் தூக்கி வீசினான். அவனது நீர்த்தொட்டியின் மூலையில் இருந்த குச்சிகளில் ஒன்று, ரெண்டு, மூன்று, ஐந்து எனும் பிபனாச்சி விகிதத்தில் வளையங்கள் சென்று அடங்கின. அவன் சமீபத்தில் கற்றுக்கொண்ட விளையாட்டு. எட்டு கரங்களையும் வித்தைக்காரன் போல வீசி கடந்த ரெண்டு நாட்களாகப் பயின்று கொண்டிருந்தான்.

‘அடடா, பெர்ஃப்க்ட்.’

என் விரல்களால் வெளிப்புறம் தட்டிக்கொடுத்தேன். அதை எதிர்பார்த்து சரியாகத் தனது கைகளை நான் வைத்த இடங்களில் தொட்டான். வெவ்வேறு இடங்களில் மாற்றும்போதெல்லாம் சரியாக இணைந்துகொண்டான். எங்கள் ஹைஃபை இன்று கச்சிதமாக இருந்தது.

‘நீ இதில இப்ப ரொம்ப தேர்ந்துட்ட. டெய்ஸிக்குக் காட்டுவதற்கு எதாவது கொஞ்சத்தை மிச்சம் வெச்சிரு’

டெய்ஸி, அவன் ரகசியமாக மையல் கொண்டிருக்கும் இன்னொரு ஆக்டோபஸ். ஒவ்வொரு வாரயிறுதிலும் நகர மையத்திலிருந்த ஓய்வரங்கில் சில மணிநேரங்கள் பிற ஆழ்கடல் உயிரினங்களோடு விளையாடும் சந்தர்ப்பம் அமையும். கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட நிலையான குடும்பங்கள் தங்கியிருந்ததில் பாதி வீடுகளில் ஏதேனும் வளர்ப்புப் பிராணி உண்டு.

இன்னும் ரெண்டு மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் என் வகுப்பைப்பற்றிய ஒலித்தகவலை மேஜையிலிருந்த கடிகாரம் சத்தம் போட்டு அறிவித்தது. ‘ அலெக்ஸா, நிறுத்து’ எனச் சொல்வதற்குள் மேற்கொண்டு செய்யவேண்டிய மூன்று செயல்களைப்பற்றிய அறிவிப்பை சொன்னது. டெடி வளையத்தில் இப்போது ரெண்டு, நான்கு, ஆறு எனும் வளையங்கள் சேர்ந்திருந்தன.

‘அருமைடா. இன்னும் நான் குளிக்கனும், அம்மாவுடன் பேசணும். உன் விளையாட்டை இரவு பார்க்கிறேன்.’

டெடி தொட்டியின் கீழிருந்த கூழாங்கற்களை ஒரு கையால் உதைத்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தான்.

இன்றும் அம்மாவுடன் பேசாவிட்டால் நாளை வீட்டுக்கு வந்துவிடுவாள். ஏற்கனவே ரெண்டு முறை செய்தி அனுப்பியிருந்தாள்.

எடுத்துவந்த பையை மேஜை மேல் வீசினேன்.

‘எப்படிடா இருக்கே! இப்போதான் வந்தியா?’

‘ஆமாம்’

‘இன்னும் ரெண்டு வாரத்தில எக்ஸாம் இருக்கில்ல.’

‘ஓ அப்படியா?’

‘என்னடா!’

‘சொல்லு’

‘இன்னும் ரெண்டு நாளில் வர்றேன்.’

‘வேணாம் நானே இன்னும் ரெண்டு மாதத்தில் முப்பந்தல் போயிடுவேன்.வழியில் உன்னைப் பார்க்க வர்றேன்’

அவள் எதுவும் பதில் சொல்லவில்லை. நானும். இந்த தீவை விட்டு நான் போவதில் அவளுக்கு கொஞ்சமும் ஆர்வம் இல்லை.

‘எனக்கு சொன்னா புரியாது! அதானே!’

உடனடியாகத் தொடர்பைத் துண்டிக்கும்படியான கோபம் வந்தது. கையில் கிடைத்த மேஜைக்கம்பியைத் கையில் போட்டு இழுத்தேன்.

‘இன்னும் ரெண்டே எக்ஸாம் எழுதினா போதும். அடுத்த கிரேட் வந்திடும். ஆய்வுக்குழுவோட சேருவதற்கு இதை விட நல்ல சமயம் இருக்க முடியாது. இன்னும் எத்தனை நாள் காற்றாலை கட்டுமான அமைப்பிலேயே இருக்கப்போறே. இன்னும் சில மாதங்களில் முடிவிலா மின்சக்தி கிடைக்கும் டெக் வந்திடும். இனிமே எல்லாமே அதுதான்.’

‘அம்மா, உன் ஆராய்ச்சி பற்றி இப்போ அப்போன்னு நான் பொறந்த சமயத்தில் இருந்து கேக்கிறேன். இப்போ இருபது வருடம் ஆச்சு..’

‘அப்படியேவா இருக்கோம்? கசிவில்லாத மின்சக்தி கடத்தி வந்து எத்தனை வருஷம் ஆச்சு? அது இல்லாம இன்னிக்கு மின்சாரம் சேகரிக்க முடியுமா? இன்னும் கொஞ்ச நாள் பாரு சூரியசக்தி, காற்று எதுவும் வேணாம். தடையில்லா சக்தி வரத்தான் போகுது.’

‘இல்ல, நான் முப்பந்தல் கட்டுப்பாட்டு அறைக்கு என்னை மாற்றும்படி எழுதிட்டேன்.’

‘அதுக்காகத்தான் இப்ப உன்னை துரத்திப் பிடிக்கிறேன். உனக்கு என்ன பைத்தியமா? அங்க என்னடா இருக்கு? வெக்கையும், புழுதியும். நிலமே நஞ்சா போச்சு.’

‘அப்பா எப்படி இருக்கார்?’

‘பேச்சை மாத்தாதே. என் குழுவோடு இணையனும்னு க்ரேஸ்பேஸ் குழுவிலேர்ந்து கூட அப்ளை பண்றாங்க!’

டெடி தனது எட்டு கைகளையும் சுருட்டி பந்து போலானது. அப்படியே உருண்டபடி வளையங்களும், பாசிகளும் நிரம்பிய நடுப்பகுதிக்குச் சென்றது. ஒரு கை மட்டும் உயர்த்தியும் மடக்கியும் எங்கள் சம்பாஷனையை பிரதி எடுத்தது. நல்ல நடிகன். எரிச்சல் குறைந்து உடனடியாக ஒரு சிரிப்பு வந்தது. முப்பந்தலில் டெடிக்கு இடம் இருக்குமா? தென் இந்திய நிலத்தில் மனிதர்கள் குடிக்கவே சுத்தமான நீரில்லையே. குறிப்பா, டெய்ஸி இல்லாமல் இவன் வருவானா? எல்லாவற்றையும் விட இங்கேயே பிறந்த என்னால் அப்படி ஒரு தூர நிலத்திற்குச் சென்று இயல்பாக இணைந்திருக்க முடியுமா? நினைத்ததும் உதறல் எடுத்தாலும், முழு வாழ்வை இங்கு கடத்துவதை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை.

அம்மா பேசிக்கொண்டிருந்தாள்.

‘இந்த நேரத்தில் இந்தியா பத்தியெல்லாம் யோசிக்காமல் பரிட்சைக்கு தயார் ஆவதைப் பார்.’

‘சரி’

‘சாப்பிடுவதும் குறைந்துவிட்டதை போன மாதம் மெமோவில் பார்த்தேன்.’

‘இல்லையே.’

‘எனக்கு வரும் கணக்கு தப்பா?’

‘நான் என்ன இன்னும் குழந்தையா?’

அம்மாவின் முகம் வாடுவதை கவனித்தாலும் இந்த தூர தேசப்பாசம் என்னிடம் சகிப்புத்தன்மையை குறைத்திருந்தது. அவள் இருக்கும் மிதவை நகரம் இன்னும் பெரியது. எல்லா காற்றாலைகளின் மின்கடத்திகளும் ஒன்றாகச் சேரும் இடம். அங்கு அவை மறுயுருவாக்கம் பெற்று மின்சக்தி சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மின்சக்தி விற்பனையில் தெற்காசியா முதன்மையாக மாறி பல வருடங்கள் ஆகியிருந்தது. நான் பிறந்த போது கூட இது சாத்தியமாயிருக்கவில்லை. அடுத்தகட்டமாக விண்வெளியின் கருந்துளைகளிலிருந்தும் இருள்திடத்திலிருந்தும் முடிவில்லா சக்தியை உருவாக்கும் எதிர்காலத் திட்டங்களும் அம்மா இருக்கும் குழுவினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.முடிவுறா சக்தியை உற்பத்தி செய்ய முடிந்தால் மனிதன் பூமியில் இருக்க மாட்டான். 

அப்படி ஒரு சக்தியை உருவாக்குவதால் கடல் சூழல் கெடுதி ஒரு பக்கம் என்றால், பறவை திசைதிருப்பி மூலம் வலசையை மாற்றியமைத்திருந்தது மற்றொரு பெரிய பாதிப்பு. காற்றாலைகளில் சிக்கி அழியும் பறவைகளைத் தடுப்பதற்காக கடும் அழுத்த ஈர்ப்பு சக்தி மூலம் வலசைப்பாதை மாற்றப்பட்டிருந்தது. அதை க்ரீன்ஹவுஸ் தீவுப்பக்கம் திருப்பிவிட்டிருந்தனர். காற்றாலைகளின் ஆழ்துளை பதியங்களால் கடல் மட்டத்தில் அதிகப்படியான மின்காந்த அலைகள் உருவாகி உயிரினங்களை அழித்து வருகிறது என என் குற்றப்பத்திரிக்கையில் தரவுகளோடு வெளியிட்டிருந்தேன். இப்படி ஒரு அழிவின் மீது எதிர்காலத்தைக் கட்டி எழுப்பும் பொய் நகரமாக க்ரீன்ஹவுஸ் மாறிவிட்டது என முடிவுரையில் சொல்லியிருந்ததை கண்டிப்பாக தலைமைச் செயலகத்தில் நீக்கிவிடுவார்கள் என்பதால் இணையத்தில் எங்கேனும் இருக்கும்படி மறைவுபிரதியாகவும் என் குழு சேமித்து வைத்துள்ளது. இதையெல்லாம் அம்மாவுக்குச் சொல்லி புரியவைக்கமுடியும் எனத் தோன்றவில்லை.

குளிக்கப்போகுமுன் டெடியின் தொட்டியிலிருந்து சீராக வந்துகொண்டிருந்த ஒலி எதையோ நினைவு படுத்தியது. ஷவரைத் திறக்கும்போதுதான் அது நான் எப்போதும் என் அலுவல் அறையில் கேட்கும் இசையின் தாளம் என்பதை உணர்ந்தேன்.

*

‘கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் இந்திய கடலோரங்களிலும் பசிபிக் கடற்பகுதியிலும் நான் உருவாக்கிய அசையா காற்றாலைகள் தான் நமது தொடக்கம். கிட்டத்தட்ட 25 சதவிகித மின்சார உற்பத்தி காற்றின் விசையிலிருந்து பெற்றோம். ஆனாலும் அதில் ஐந்து சதவிகிதம் மின்கடத்தியின் கசிவிலும், மின்காந்த சூட்டிலும் கரைந்து போயின. தென் இந்தியப்பகுதியான முப்பந்தல் முதல் காற்றாலைக் காடு எனலாம். இருநூறு மைல்களுக்கு நீண்டிருந்த நிலத்தில் வான் நோக்கி நமது ராட்டினங்கள் சுழன்று கொண்டிருந்தன. தற்சார்பு அடைந்துவிட்டோம் என நினைத்த போது அசையா காற்றாலைகள் நிலத்தடி நகர்வாலும், சுற்றுச் சூழல் வெப்பத்தாலும் பாதிப்பு அடைந்ததை உணர்ந்தோம்’

தூக்கம் வரும் குரலில் என் பாடங்கள் திரையில் ஓடிக்கொண்டிருந்தன. எனது சமூக அரசியல் பாடத்திலிருந்து சமூகத்தின் மாற்றங்களைப் புரிந்துகொள்ளலாம் என நினைத்தது எத்தனை தவறு! இங்கு எனக்குச் சொல்லப்படுவதோ ஆதியிலிருந்து வரும் வரலாற்றுககதை. அதில் திரிபுகளே அதிகம்! பெரிய அணுமின் கசிவால் நச்சு நிலத்தில் வாழ முடியாமல் மின் உற்பத்தி நிலையங்கள் வேறு இடங்களுக்குச் சென்றதுதான் உண்மைக்காரணம். இதை என் பாடத்தில் தடை செய்திருந்தார்கள் என்பதை என் குழுவில் இருந்தவர்கள் சொல்லி அறிந்துகொண்டிருந்தேன். அதைப் பற்றிக் கேட்க வேண்டும் என என் வாய் துடித்தது. மெய்நிகர் வகுப்புகள் என்பதாலும் உரையாடல்தன்மை வாய்ந்த இருவழி செய்தித்தொடர்பு முறை என்பதாலும் என்னால் பாடத்தின் போக்கை நடுவில் மாற்றச் சொல்லமுடியும் ஆனாலும் பாடத்திட்டங்களை அதன் போக்கில் விடுவது நல்லது. எவ்வித மாற்றமும் சந்தேகத்தைக் கிளப்பிவிடலாம்.

‘குஜராத், மஹாராஷ்டிராவுக்குப் பின் தமிழ்நாட்டில் காற்றின் வேகம் அதிகம். அதே போல இலங்கையிலும் . சீனாவின் கடன்களைத் தீர்க்க இலங்கை தனது கரையில் இருந்த காற்றாலைகளை கை மாற்றிவிட்டது. டென்மார்க் டர்பைன் எஞ்சின், டெக்ஸாசிலிருந்து வரும் சுழலாடிகள், இந்தியாவிலிருந்து வரும் கற்கள்,சிமெண்டுகள் எல்லாம் சீன ராணுவ விமானங்களில் கொண்டுவரப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இருபது கிமீ தொலைவு கடலுக்கு உள்ளே முதல் தளவாடம் கட்டப்பட்டது. அங்கு நிலத்தடி நிலையாக இருக்கும் என்பதால் கடல் தரையில் ஆழத் துளையிட்டு காற்றாலைகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. நெடிய சிமெண்டு குழாய்கள் போடப்பட்டு தூத்துக்குடி மைய மின் வாரிய க்ரிடு வரை மின் இணைப்பு தரப்பட்டிருந்தது. இது முதல் முறை என்பதால் மின்கசிவு, மின் இழப்புகளைப் பற்றியெல்லாம் இந்திய ரினியூவபிள் ஃபூச்சர் கார்ப்பரேஷன் கவலைப்படவில்லை. 

இந்திய பொறியியல் அமைப்பு எனும் குழுவை உருவாக்கி, இந்திய அரசு அறிவியல் கழகத்துடன் இணைந்து புது சட்டங்களை இயற்றினார்கள். பழைய சட்டப்படி கடலின் கட்டமைப்புகளை தனியாருக்கு கொடுக்கலாம் என்றிருந்த சட்டத்தைத் திருத்தி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு, பறவையியலாளர்கள் அங்கீகரிக்கும் வலசைப்பாதை சட்டங்கள், நெகிழிக் கழிவுகளின் அளவுகள் எனப் பலப் பிரிவுகளில் சட்டங்கள் மாறின. இவற்றைப்பற்றி காற்று மறுயுருவாக்கச் சட்டங்களும், அரசு பாலிசிகளும் தலைப்பில் அடுத்து படிப்பீர்கள்’

எனக்குக் கண்கள் சுழற்றிக்கொண்டு வந்தன. நல்ல நன்னீர் குளியல், அதிகாலையிலிருந்து பல மணிநேரங்கள் நுணுக்கமான கணக்குகளை அலசியது, பிடிக்காத குரல்  என எல்லாம் சேர்த்து நானும் ஒரு சுழலுக்குள் போனேன்.

‘ஆழ்கடலில் துளையிட்டிருந்த நெடிய காற்றாலைக் கம்பங்களினால் சுற்றுச் சூழல் பாதிப்பு இருப்பதாக நீங்கள் முன்வைத்த பட்டியல் வழக்கு உ342 பற்றி முக்கிய குற்றங்கள் என்ன?

சட்டென தூக்கம் கலைந்து உட்கார்ந்தேன். பாடத்துக்கு இடையே இப்படியான கேள்விகளை நான் எதிர்பார்க்கவில்லை. நண்பர்கள் யாரேனும் இப்படி ஒரு இடைவெட்டித்துணுக்கை இணைத்துவிட்டார்கள் எனச் சந்தேகம் வந்தது. பதில் சொல்லாமல் திரைக்கு அருகே சென்றேன்.

‘உ342 குறைப்பட்டியலை உங்களுக்கு நினைவூட்டட்டுமா?’

குற்றங்களை சுட்டிக்காட்டும் அமைப்பு மிகவும் ரகசியமானது. யார் வேண்டுமென்றாலும் குறைகளை பெயரிலியாகப் பதியலாம். அதை முன்னெடுத்து பதில் சொல்லவேண்டியது மைய பாதுகாப்பு அமைப்பின் கடமை. பலப் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த சட்டம் உள் விவகாரங்களைத் தருபவர்களை கண்காணிப்பில் வைத்திருந்தது. முப்பந்தலில் அப்படியான தீவிர சட்டங்கள் இருந்ததை கேள்விப்பட்டிருந்தேன்.

‘உடனடியாக என் நினைவிலிருந்து சொல்ல முடியாது என்றாலும், உண்மையில் குறைப்பட்டியல்கள் வெளியே யாருக்கும் தெரியாதே!’

‘ஆம். ஆனால் அப்படிப்பட்ட நிலையான பாடத்திட்டங்களால் உங்களுக்குத் தூக்கம் வருகிறதே!?’

புன்னகைத்தேன். இது ஒரு குறும்பானத் திட்ட வடிவமைப்பாளரின் வேலை.

‘ஆழ்துளை கம்பத்தில் உருவாகும் பாசிகளும் செடி கொடிகளும் இயற்கைக்கு எதிரான செயற்கை கடற்சக்திகளை உருவாக்குகிறது. க்ரீன்ஹவுஸ் தீவு இயற்கையை மேன்படுத்துகிறது எனப் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அது தவறென எங்கள் குழு பல ஆய்வுகளை சமர்ப்பித்து உள்ளது. குறிப்பாக பாசிகள், சிறு மீன்கள் முட்டையிடும் கம்பங்களில் மின் காந்த விசை புதுவித வியாதிகளை அப்பகுதி மீன் மற்றும் பச்சையங்களுக்கு உருவாக்குகிறது’

‘இது மிக நீண்ட கால பாதிப்பு தானே. க்ரீன்ஹவுஸ் சுற்றியே கூட மின்காந்தச் சக்திகள் உள்ளன. மின்கடத்தி இருந்தால் இப்படிப்பட்ட பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். உங்களுக்குத் தெரியாதா?’

‘அதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மைல்கள் கடல் தரை மட்டத்தில் நீண்ட தூர மின் கடத்தி மூலம் மின்சாரம் நிலங்களுக்குச் செல்கிறது. மிகத் திடமான நரம்பு மண்டலம் கொண்ட சுறாக்கள் கூட இவற்றால் பாதிப்பு அடைகிறது. அவற்றின் திசை நோக்கித் திறனும், ஆழ்கடலில் பிறஉயிர்களை வாழவைக்கும் கூட்டுவாழ்வும் இன்னும் நூறு வருடங்களில் இல்லாமல் போகும். அதன் தொடர்ச்சியாக உலகின் எல்லா உயிரினங்களுக்கும் பாதிப்பு பரவும். இப்போதே நுண்ணிய நெகிழித்துணுக்குகளை மனிதர்களின் ரத்தங்களில் கண்டெடுக்கிறார்கள்’

திரையிலிருந்து வேறு சத்தம் வரவில்லை.

‘நாம் பாடத்தில் அடுத்தப்பகுதியான க்ரீன்ஹவுஸ் திட்ட மேலாண்மைக்குச்செல்வோம்’

சட்டென என்னை அந்தரத்தில் தனியாக விட்டது போல இருந்தது. தேர்ந்த நிரலி ஊடுருவல் வேலை.

‘உ342 பற்றி நான் இன்னும் அதிகமாகப் பேச வேண்டும். எங்கள் குழுவின் ஆய்விலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்டத் தலைப்புகளில் மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றையும் பேசலாம்’, நான் பேசப் பேச என் குரலை மீறி எதிர்தரப்பின் சத்தம் அதிகமானது.

‘மன்னிக்கவும். பெரும் அலையினால் தொலைந்த மின் தொடர்பு மீண்டு விட்டது. மையக்கட்டுப்பாட்டுச் செயலி சில சோதனைகள் செய்ததும் நம் பாடம் தொடரும். இடையூறுக்கு மன்னிக்கவும்’

இதுவரை பேசியது அரசு அமைப்பின் குரல் இல்லையா? மையக்கட்டுப்பாட்டு அமைப்பின் பாடத்தை ஊடுருவி வேறு யாரேனும் என்னை சோதனை செய்கிறார்களா? நான் குற்றம் சாட்டி உருவாக்கிய உ342 எனும் குற்றப்பட்டியல் பற்றி என்னிடம் கேட்டது யார்? ஏதேனும் இடையீட்டுத் தந்திரமா? அப்படி ஒரு நிழல் அமைப்பு இருந்தால் எங்களுக்குச் செய்தி கொடுப்பதற்கு ஏன் இத்தனை தாமதம்? இல்லை ஏதாவது கொந்தர்களின் வேலையாகக் கூட இருக்கலாம். என் கணிப்புப் படி இது ஒரு நிழல் அமைப்பின் செய்தியாக இருப்பதற்கு பல சாத்தியக்கூறுகள் உள்ளன. என் முதல் நிரலி சோதனைக்கான வடிவமைப்பில் இருந்தபோது இப்படிப்பட்ட ஊகங்கள் குழுவில் மிகப்பிரபலம். நிரலியின் அமைப்புக்குள் இருக்கும் சில ரகசிய இடங்களில் சங்கேத வர்த்தனைகள் செய்யமுடியும் என்பது எங்கள் அனுமானமாக இருந்தது. 

இடைப்பட்ட நேரத்தில் ஜாவத் நடத்தும் நிரலி குழுமத்தில் என் சந்தேகத்தை எங்களுக்கானப் பிரத்யேக மொழியில் அனுப்பினேன். 

‘இது புதிது. நிரலிக்குள் செல்லக்கடினமான சில பாதைகளை உருவாக்கி புது தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்றாலும், மின் அழுத்தச் சாத்தியங்களுடன் விளையாடுவது எளிது அல்ல.’, என ஜாவத் பதில் அளித்தான்.

‘ஆனந்த், உங்கள் பாடத்தை இன்று தொடர முடியாது. நாளை மீண்டும் உங்களுக்கு செய்தி அனுப்பி வைப்போம். மன்னிக்கவும்’, திரையிலிருந்து செய்தி வந்தது. என் வகுப்பு அறைக்கான திரை மூடியது.

ஜாவத்துக்கு இதைத் தெரிவித்தேன். 

‘சிக்கல் கொஞ்சம் பெரியதோ’, என்ற வரிகள் அவனது திரையில் இருந்து வந்தன.

‘எதற்குமே உபயோகம் இல்லாத சிந்தனை’ எனத் தட்டிவிட்டு திரையை மூடினேன்.

கொந்தர்கள் க்ரீன்ஹவுஸ் தொடர்புக்குத் தொல்லை கொடுப்பது இது முதல் முறையல்ல. என்னுடைய தொலைநோக்கி அமைப்பு இணைந்திருக்கும் முப்பந்தல் வெளியுலகத் தொடர்புக்கு இருக்கும் ஒரே வழி. அதன் மீதான தாக்குதல் கடலில் இருக்கும் சப்ஸ்டேஷனில் வந்துள்ளது. நான் உபயோகித்த ஒரு தடை என் ஆய்வுத் தளத்தைக் காப்பாற்றியது. முன்னர் பல நாடுகளும் இவர்களுக்குத் தடையில்லா சுதந்திரத்தை வழங்கியிருந்தன. எதிரி நாட்டுத் தாக்குதல்களுக்கும் உளவுக்கும்.

செயற்கை நுண்ணறிவிலிருந்து அடுத்த கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருந்த பயோ இயந்திரங்களால் இயக்கப்பட்ட தளத்தின் கேள் அறைக்குள் நுழைந்தேன். அன்றைய அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய கருத்து பரிமாற்றம் இருந்தன என்பதைத் தவிர வேறு சலசலப்புகள் இல்லை.என்னால் உடனடியாக எதையும் கண்டுகொள்ள முடியவில்லை என்பதே சரி. இது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கக்கூடாது எனும் நினைப்பில் கிடந்தேன்.

என்னைக் கேள்வி கேட்டது கொந்தர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் என் நண்பர்கள் என்பது மட்டும் உறுதியானது.

*

நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டியது. நேரம் அதிகாலை மூன்று மணி. என்னுடைய அடுக்ககத்தில் இருந்த பாதுகாப்பு படிகள் வழியாக என்னுடைய மேல் மாடிக்குச் சென்றேன். மிகச் சில இரவுகள் மட்டுமே எனக்கு இப்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கும். மாடி என்பது தோட்டங்களில் வழியே இருந்த பிற தளங்கள். வைகறை வெளிச்சம் வரத் தொடங்கியிருந்தது.

விண் மீதான ஒரு கூக்குரலாக அனைத்து காற்றாலைகளும் மேல் நோக்கி பார்த்திருந்தன. ஒரு மாபெரும் மன்றாடல் போல. கூப்பிய கைகளாக நாற்பதுக்கும் மேற்பட்ட பெரும் சுழல்கள். தீவு முழுவதும் ஒரு மெல்லிய வெளிச்சப்போர்வை போர்த்தியிருந்தது. புகை போல பரவியிருந்த வெளிச்சம் ஆங்காங்கே தெரிந்த ஒளியை மட்டுப்படுத்தியது. தீவின் துறைமுகம் நீல வெளிச்சமாக கடல்பரப்பில் நீண்டிருந்தது. நட்சத்திரத் தூவல்களாக சப்ஸ்டேஷன்கள் தெரிந்தன. மெல்லிய உறுமல் சத்தம் கேட்டது. ஆங்காங்கே தெரிந்த அடுக்ககமும் சிறு குடில்களும் கண்ணை உறுத்தாமல் கிடந்தன. எல்லாமும் ஆடிக்கொண்டிருந்தது ஆனால் எதுவும் ஆடவில்லை. தீவைத் தாண்டி கண்ணுக்கு எட்டியவரை வெளிச்சம் இல்லை. மேகம் இல்லாத நாட்களில் தூரத்தில் தெரிந்த சில மின்பெருக்கி நிலையங்களை நான் கண்டதுண்டு. க்ரீன்ஹவுஸின் இருபெரும் நீர் வழி விமானத்தளங்கள் தீவின் இருபுறமும் துடுப்பு போடுவது போல நீண்டிருந்தன. நான் சிறு வயதிலிருந்து கண்ட காட்சிகள் என்றாலும் வைகறை நேரத்தில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பழைய கால ஏக்கத்தைக் கொண்டுவந்தன. நிலம் என்பதை என் அடையாளமாக பார்க்க முடியுமா?

கிழக்கு நோக்கி மிக நீண்ட வரிசையில் பறவைகள் நானிருந்த க்ரீன்ஹவுஸ் நகரை நோக்கிப் பறந்து வந்திருந்தன. நான் பார்த்திருந்த இடத்தில் இருந்து மிக அழகான ஓவியம் ஒன்று உருவாகி பிரிந்து புது வடிவமாக எடுத்தபடி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. இத்தனை உயிர்ப்பான ஓவியத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. பெரும் பொக்கிஷங்களை மனிதனிடம் தந்துவிட வேண்டும் எனும் அவசரம் காற்றில் அவை அடித்த வேகத்தில் தெரிந்தது. என்னுடைய ஆசைகளை கையளிக்க வரும் வானத்தை நான் பார்த்து அமர்ந்திருந்தேன். ஆனால் அவை எப்போதும் இப்படிப் பறந்ததில்லை. வில் வடிவத்தை ஒத்திருந்த அந்த வலசைக்கூட்டம் தங்கள் பாதைகளை கடந்த அரை நூற்றாண்டாக மட்டுமே மாற்றியிருந்தன. 

நூறு வருடங்களுக்கு முன்னர் முப்பந்தலில் இருந்த காற்றாலைகளுக்கு வலசைப் பறவைகள் மிகப் பெரிய எதிரியாக இருந்தன. சொல்லப்போனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வலசைப் பறவைகள் வருடந்தோறும் காற்றாலைகளில் சிக்கி இறந்து போயின. இதெல்லாம் பழையக் கதை. என் பாடத்தில் இருந்த முதல் சட்டத்திருத்தமே பறவைகளின் பாதுகாப்பு குறித்து தான். க்ரீன்ஹவுஸ் கவுன்சிலின் ஆரம்பகட்ட ஆய்வுகள் அனைத்தும் வலசைப் பறவைகளை திசைத் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை கைக்கொண்டிருந்தன. சுழற்விசிறிகளின் வண்ணங்களால் பறவைகளை திசை திருப்பும் முனைப்பும் உண்டானது. அவற்றை ஈர்க்கும் வண்ணம் க்ரீன்ஹவுஸ் தீவு முழுமையான மறுயுறுவாக்க அமைப்பு எனும் பிரமாணத்தோடு தொடங்கப்பட்டது. இயற்கையைப் பாதுகாக்க நினைக்கும் தொழில்நுட்பம் அதை மாற்றுவதன் மூலம் அழிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதைப் பற்றி உணர்ந்ததும் என்னைப் போல வேறு சிலர் இருந்ததையும் பதின்மவயதில் தெரிந்துகொண்டேன்.

*

‘முடிவிலா சக்தி என்பதை நம்பமுடிகிறதா? அதைக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்’ , ஜாவத் கண்கள் விரிந்தன. முடிவிலா சக்தியை உற்பத்தி செய்யும் கசிவற்ற சுழற்சி யந்திரம் தான் க்ரீன்ஹவுஸின் குறிக்கோள்.

‘என்ட்ரோபிக்கு எதிரானதில்லை?’ 

‘ஆவியாகி மழையாவதும் பின்னர் ஆவியாவதும் கூட எண்ட் ரோபிக்கு எதிரானது தான்’

‘இயற்கையின் தினக்காட்சி அது. இந்தியாவும், ஐரோப்பாவும் பல வழிகளில் சக்தியை உருவாக்கி வருகிறார்கள். கிட்டத்தட்ட பண்டைய சக்தி உற்பத்திமுறை காணாமல் போய்விட்டது.’

‘ஆமாம், முப்பந்தலில் மட்டுமே வாழ நினைக்கிற எனக்கு பாடம் எடுக்காதே’

‘இல்லை, அலைவிசை, சூரிய வெளிச்சம், காற்று எனப் பல வழிகளில் இந்த சக்தி எனும் குடம் நிறைகிறது. சொட்டு சொட்டாக சேர்த்து விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகிடுமா?’

‘ஆனால் அப்படி ஒரு முதல் சொட்டில் தானே அதுவும் ஆரம்பிச்சது?’

‘ஆமாம், அந்த முதல் சொட்டு பல சக்தி உருவாக்கத்தின் இணைப்புத்திறன். நாம் எங்க தோற்கிறோம் தெரியுதா?’

‘சக்திகள் ஒன்றொடு ஒன்று இணையும் போது..’

‘..தொட்டு தொட்டுச் செல்லும் ரிலே ரேஸ் போல முடிவிலா சக்தியை உருவாக்க முடியும்’

‘ஆனால் கட்டுப்படுத்த முடியாது..’

‘அது தான் எதிர்காலம்’

சிறு பிள்ளை உரையாடல் போலத் தெரிந்தாலும், பிறரை விட எங்கள் குழுவினருக்கு ஏதோ ஒன்று தெரிந்திருந்தது. அது கேள்வியாக இருந்தது மட்டுமே குறை.

*

டெடி அதிக ஆர்வத்துடன் தொட்டியில் விளையாடவில்லை என்பதை உணர எனக்கு ரெண்டு நாளாகியது. ரெண்டு நாட்களுக்கு முன் என்னிடம் விளையாடியது கொந்தர்களா, சாதாரண மின் அசைவின் விளைவா எனத் தெரியவில்லை. என் பாடமும் அடுத்தடுத்த கடினமாகப் பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்தது. அலுவலில் செய்த வேலை களிப்பு கொடுப்பதிலிருந்து ஓய்வெடுத்திருந்தது.

முதலில் கற்கள் மீதிருந்த மண் மாறாமல் இருந்தது. டெடி அவற்றை சிறு குவியல்களாகவோ கல் அடுக்குகளாகவோ மாற்றி விளையாடவில்லை. வைத்திருந்த உணவும் குறையவில்லை. அதன் ஒரு கை கண்ணாடி மீது தட்டியபடி இருந்தது. அதில் ஒரு தாளமில்லை.

அன்று மாலை வீட்டுக்கு வந்த அரைமணியில் மையக்கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து என்னை கூட்டிச் செல்ல ஆட்கள் வந்திருந்தனர். அவர்கள் கூப்பிட்டால் போகவேண்டும். 

என்னை அழைத்துச் சென்றது துறைமுகத் தெருவில் இருந்த நெடிய வீடு போன்ற அமைப்புக்குள் என்றாலும் அதன் உள்கட்டமைப்பு மிகப்பிந்தங்கி இருந்தது.

கொந்தர்களுடன் நிகழ்த்திய உரையாடலால் இங்கு இருக்கிறேனா அல்லது என் குற்றப்பத்திரிக்கையா எனத் தெரியவில்லை.

என் அறையில் ஒரே மேஜை. அதில் குமிழ் போன்ற கரிய உப்பல். 

‘நீங்கள் முப்பந்தலுக்கு மாற்றல் கேட்டு விண்ணப்பித்து இருந்தீர்கள் , இல்லையா?’

‘ஆம்.அதுதான் என் இலக்கு’

‘புதிய உலகுக்கான ஆரம்பங்கள் நம் தீவில் இருக்கின்றன. முப்பந்தல் போன்ற பண்டைய கீழைதேசத்துக்கு எதுக்கு ஆசைப்படவேண்டும்’

‘ அதற்குப் பல காரணங்கள். உங்களுக்குத் தெரியாமல் இருக்காது’

‘தெரியும் தான். ஆனாலும் இந்த விசாரணைக்காக மீண்டும் சொல்ல வேண்டும்’

‘ இங்கு செய்யும் ஆய்வுகள் முடிவிலா சக்தியை உருவாக்கி, உயிரினத்துக்கு முடிவைக் கட்டும் முனைப்பைக் கொண்டிருக்கிறது. இது தான் முதல் காரணம்.’

‘முடிவிலா சக்தியின் அளப்பரிய ஆற்றல் உங்களுக்குப் புரியாது என நினைக்கிறேன்’

‘நான் காற்றாலை மைய டர்பைன் நிரலியின் பாதுகாப்புப் பிரிவில் இருக்கிறேன். அதற்குத் தேவையான ஐகியூ உங்களுக்குத் தெரியும் தானே?’

எங்கள் உரையாடலைப் பதிவு செய்யும் இயந்திரம் ஒரு சிறு சத்தத்தோடு மீண்டும் இயங்கியது. என்னால் அந்த ஒரு நொடி மெளனத்தைத் தாங்க முடியவில்லை. 

‘ கர்ட்-2199 என்பது உங்கள் குழுமத்தின் பெயர் தானே?’

‘ஆம். நாங்கள் நடத்தும் பாதுகாப்பு இணைப்புக் குழுவின் பெயர்’

‘அங்கு நீங்கள் நடத்தும் உரையாடல்களின் சாராம்சத்தைச் சொல்ல முடியுமா?’

‘அந்த கால மொழியான சமஸ்கிரத்தின் எண் கணித நுட்பங்கள் முதல் எதிர்காலத்தில் கருந்துளையிலிருந்து எடுக்கப்படும் சக்தி வரை எல்லாவற்றையும் பேசுவோம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தலைப்பைப் பற்றி நேரடியாகக் கூறவும்’

‘ஆனந்த், பல ரகசிய ஆய்வுகள் மூலம் நம் க்ரீன்ஹவுஸின் அடிப்படை தத்துவங்கள் பற்றித் தவறாக விஷயம் பரப்பும் கொந்தர்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு பற்றி தான் கேள்வி. நம் மறுயுருவாக்கச் சக்தியின் அறிவியல் தாக்கத்தின் மீதான சந்தேகங்கள் கொண்ட கோப்புகளை எங்கள் தொடர்புக்கூடாரங்களில் காண்கிறோம். அவை அதிகம் கர்ட்-2199 எனும் சேனலில் வாசிக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. எல்லாமே சங்கேத மொழியில் என்பதால் உங்கள் வாயால் அதைப் பற்றி கேட்டுப் பதிய ஆசைப்படுகிறோம். நீங்கள் சொல்லும் எதுவும் முப்பந்தல் நிலத்துக்குச் செல்லும் விண்ணப்பத்துக்குக் எதிராகக் கொள்ளப்படும்’

‘இது என்ன அநியாயம். நான் ஒரு உலகப் பிரஜை. இத்தீவிலிருந்து வேறொரு நிலத்துக்குச் செல்ல அனுமதி வேணுமா?’

என் பதற்றத்தை கால்களில் உணர்ந்தேன். குரலின் வேகமும் கூடியது.

‘செல்லலாம். ஆனால் அங்கு நம் மையக்கட்டுப்பாட்டு அமைப்பினரோடு நீங்கள் நடத்தும் உரையாடல்கள் எங்கள் விதிகளுக்குப் புறம்பானவை’

என் தாடை இறுகிறது. ‘ அதை மையக்கட்டுப்பாட்டு அறை சொல்லட்டும். அல்லது நான் அங்கு பேசும் ஜாய் சொல்லட்டும்’

எதிர்குரல் உடனடியாக வரவில்லை. அடுத்த வரியைச் சொல்ல முடிவெடுக்க சில நொடிகள் ஆயின.

‘ஆனந்த், நீங்கள் நம் பிரஜை. உங்களுடைய நலனில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உண்டு. ஜாய் என நீங்கள் நம்பும் மனித உயிர் ஒரு இயந்திரம் எனச் சொன்னால் நம்ப முடியுமா?’

நான் சத்தமாகச் சிரித்துவிட்டேன். தப்புகளை மறைக்க உங்களால் பல பொய்களைச் சொல்ல முடியும் எனத் தெரிந்தது தானே! அப்படித்தான் சுற்றுச் சூழலுக்கு எவ்வித கெடுதியும் இல்லாத உலகைப் படைக்கிறோம் எனப் பிற உலக நாடுகளை நம்ப வைத்துள்ளீர்கள்! ஆம் ஜாய் மட்டுமல்ல, நானும் ஒரு இயந்திரம் தான். என்னை அங்கு அனுப்பாமல் இருக்க ஏதேதோ கதைகள்!’

‘மிதவை காற்றாலைகளும், பேரலைகளும் உருவாக்கும் சக்தி மட்டுமே இன்றைய நிதர்சனம்.முப்பந்தல் என்பது நூறு வருடங்களுக்கு முன் இருந்த காற்றாலைப்பண்ணை. ஆரல்வாய்மொழியின் கிளைத்திட்டம். அவை இப்போது வெறும் சேகரிப்பு மையங்களாக மாறிவிட்டன. தென் தமிழ் நிலம் இப்போது ஒரு சக்திசேகரிப்பு நிலம் மட்டுமே’

‘இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை நம் எல்லாருக்கும் முடிவில்லா சக்தியை விட முடிவில்லா மனிதத்துவம் தான் தேவை’

‘உன்னை யாரோ மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். மனிதத்துவம் என்பது ஒரு குறுக்கல்வாதம். நேற்று ஒற்றை உயிரணுக்கள் கடலை ஆண்டன. இன்றைக்கு நாம் இருப்போம். நாளை இயந்திரங்கள் வந்துவிடும். அவை பிரபஞ்சத்தை ஆளும். நாம் வழிப்போக்கர்கள். நாம் புரிந்துகொள்ள இயலாத ஒரு பிரபஞ்ச தரிசனம் ஒன்று உண்டு. அதை நோக்கி நாம் இயல்பாக முன்னேறுகிறோம்’

ஒரு கிழவனின் பிதற்றலாக எனக்கு அது ஒலித்தது. அல்லது ஒரு பெரிய தலைவனின் ஏமாற்று உரை போல. 

‘முடிவிலா சக்தி மனிதனை இணைக்கும்’

‘இல்லை, அது இல்லை. முடிவிலா சக்தி அவனை அழிக்கும். பெரிய இடர்களே எப்போதும் மனிதர்களை இணைத்து வந்திருக்கு. அங்கு தான் மனிதனின் குணம் தழைத்து இருக்கிறது. இதோ நாம் இருக்கும் தீவு கூட மின்சக்தியை உருவாக்க முடியாமல் வந்த இடரால் உருவானது. நாம் அதை பொய்யான பிரச்சாரங்கள் வழியே கடவுளின் நிலம் போல நிலை நிறுத்தப்பார்கிறோம்’

‘உங்கள் கர்ட் குழுவில் நாங்கள் ஊடுருவி பொய்க்குதிரை நிரலிகளை உலவவிட்டோம். அவை உருவாக்கி மாயத்தோற்றம் தான் நமது தீவின் நச்சுச் சூழலை பெரிதுபடுத்திக்காட்டுகிறது. உன்னைப் போன்றவர்களுக்கான பொறி.’

‘இருக்கலாம். ஆனால் என்னை அழைக்கும் குரல் முப்பந்தலில் இருக்கு. அது முன்னோர்கள் விட்டுச் சென்ற நிலமாக இருக்கலாம். ஆனால் அங்கு இருக்கும் மனிதர்கள் பேரழிவின் போது ஒன்று கூடும் ஒரு சித்திரம் என்னை அங்கே ஈர்க்கிறது. அப்படிப்பட்ட பெரிய தடைகளே மனிதர்கள் உருவாக்கும் பல கதைகளின் திறவுகோல். அங்கு தடையற்ற சக்தி கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் கடைசி மனிதன் இருக்கும் வரை மனிதத்துவம் தழைத்துவிடும். ஒரு கோப்பை நீரைக் கொண்டு பல மாதங்களின் தாகத்தைத் தீர்க்கும் கரம் போல’

கதவு திறந்துகொண்டது. நான் உட்கார்ந்திருந்த அறைக்கு உடனடிவெளியே பரந்து நின்ற கடல். என்னால் மிதவைக்காற்றாலைகளைப் பார்க்க முடிந்தது. அறையை விட்டு வெளியே வந்தேன். என்னை யாரும் தடுக்கவில்லை. போகவும் சொல்லவில்லை. என்னுடைய அறைக்குச் செல்லும் வழியைத் தேடி பின்னால் திரும்பிப் பார்த்தேன். காற்று ஊதி அடிக்கத் தொடங்கியது. நான் இங்கேயே கூட இருக்கலாம் ஆனால் என்றாவது ஒரு நாள் கதை உள்ள நிலத்தில் என் காலடி பதியும். அந்த காலடியிலிருந்து என் முதல் அடி தொடங்கும்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.