வாசகர் கடிதம்

உங்களிடமிருந்து இன்னுமொரு அட்ட்காசமான சிறுகதை. மனித உணர்வுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கதையை அமைத்திருக்கிறீர்கள். மனசாட்சி ஒரு காட்டு விலங்கு என்று கதையில் சொல்லப்படுகிறது. அர்ஜீன், தர்மேஷ் இருவருமே வாழ்வில் கவனமற்று செயத குற்றங்களால், அவற்றின் குற்றவுணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தர்மேஷ் அர்ஜூனின் சீனியர் இல்லையா? அதனால் அவன் முன்பே வெளிவந்துவிட்டான். அந்த வழியை ஜூனியருக்கும் காட்டிக் கொடுக்கிறான். ஆனால் இப்போது புதிதாக மானசாவின் மனதில் குற்றவுணர்ச்சி உருவாகியிருக்கிறது, தர்மேஷூக்கு உதவ மறுத்ததற்காக. யு-டர்ன் கிடையாது என்று சொல்லப்படுவது அவளுக்குத்தான்.
ஒரு சிறுகதைக்குள் மூன்று பாத்திரங்கள் முழுமையாகவும், அவற்றின் அகக் கொந்தளிப்புகளோடும் சித்தரிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்தின் தேர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் கதை சொல்லும் விதம் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது. வாசித்தேன் என்று சொல்வதை விட கதையைக் கண்டேன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதை சொல்லல் உங்களுக்கு சரளமாகக் கைவந்திருக்கிறது. நெடுஞ்சாலைகளில் நீண்ட கார் பயணங்கள், விபத்துப்பகுதி, கேஸ் ஸ்டேஷனின் காபிக்கடை என்று அமெரிக்க வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சங்களை எடுத்துக் கொண்டிருப்பதாலேயே இக்கதை தனித்துவமிக்க கதையாகிறது.
விபத்தில் தந்தையை இழந்த மகன் இன்னொரு முறை காரில் செல்லும் போது மீண்டும் அதையொத்த விபத்தைக் காண நேரிடுவதென்பது நினைத்தும் பார்க்க முடியாத கொடுமை. இப்படிப்பட்ட நிகழ்வைக் கதையில் கையாள்வதற்கென்றே ஒரு துணிச்சல் வேண்டும். அவன் தன் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு தர்மேஷின் வாழ்க்கை நிகழ்வுகள் காரணமாக இருக்கின்றன. அர்ஜூன் தன் தந்தையை தன் கவனக்குறைவால் தான்தான் கொன்று விட்டதாக குற்றவுணர்ச்சி கொண்டிருக்கிறான். தர்மேஷ் தன் வாழ்வை (இன்றுள்ள பல ஆண்கள் போலவே) இணையத்திலேயே கழிக்கிறான். தான் நேரில் பார்க்காத இணைய நட்பிற்காக (நடனமெனும் அழகிய கலையை உருவாக்கிக் கொண்டிருக்கிருக்கும்) மனைவியை உதாசீனம் செய்கிறான். விவாகரத்துக்கு வழி வகுக்கிறான். ஒரு மனைவியையும், ஒரு கணவனையும், ஒரு திருமணத்தையும் தான்தான் கொன்றுவிட்டதாக குற்றவுணர்ச்சி கொண்டிருக்கிறான்.
நம் கொள்கின்ற குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபடுதல் எங்கனம்?
“குற்ற உணர்வு மட்டும் விடுதலை அல்ல என அறிவதன் மூலம். நாம என்ன கெடுதி செஞ்சோமோ அதுக்கு பிரயாசித்தம் செய்யனும், தப்பை அக்சப்ட் செய்து நகரனும். குற்ற உணர்வு அதுக்கு கூட்டிப் போகையில் பிரச்சனை இல்லை, மாறாக குற்ற உணர்வின் ஆழத்தில் மூழ்கி போனால்…… அது யாருக்கும் உதவவில்லை…” தர்மேஷ் தயங்கினான், பிறகு தொடர்ந்தான், “எதிர்காலம் நம்மைப் பற்றி மட்டும் அல்ல.”
இந்தக் கூற்று அர்ஜூனை சிந்திக்க வைக்கிறது. தன் குற்றவுணர்ச்சியின் மூலம் தன் தாயை துன்புறுத்திக் கொண்டிருப்பதை உணர்கிறான். இக்கதையின் அடிநாதமாக நான் பார்ப்பது வாழ்வு என்பது நம்மைக் குறித்தானது மட்டும் அல்ல. நம்மைச் சார்ந்திருப்பவர்களும், நாம் சார்ந்திருப்பவர்களும் நம் வாழ்வு நடக்க முக்கியமானவர்கள். அவர்கள் பொருட்டும் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனைதான்.
இரண்டு ஆண்களும் குற்றவுணர்விலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் அதன் பிடியில் இப்போது சிக்கியிருப்பது மானசா. தன் மகன் நலம் மட்டும் கருதியதால், தன் பாதுகாப்பு கருதியதால் அவளுக்கு இந்த நிலை. இதிலிருந்து அவள் வெளிவருவதற்கு என்ன வழி? தர்மேஷ், மானசா இருவருமே சார்லட்டில் தானே இருக்கப் போகிறார்கள்? அவளது பள்ளித்தோழியின் முன்னாள் காதலனாக வேறு அவன் இருந்திருக்கிறான். எனவே அவளுடைய மீட்புக்கான காலம் அதிகமில்லை என்று அறிந்து ஆசுவாசம் அடைய வேண்டியிருக்கிறது.
மீண்டும் வாழ்த்துக்கள், நிர்மல். தொடர்ந்து இது போன்ற அற்புதமான கதைகளை வழங்கிக் கொண்டே இருங்கள்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

நன்றி ஜெகதீஷ்