அரா கவிதைகள்

1

மொய்க்காமல் இருக்கச் சொல்லும்
அதிகாரம் எனக்கில்லை
மொய்ப்பது உன் தொழில்
தள்ளிப் போ என்பதே விண்ணப்பம்
என் தோலில்
கரும்புச் சாறு வலிகிறதா?
கரடி கடித்துக் கீழே தள்ளிய
மாம்பழத்தின் சாறுகள்
கைகளிடையே வலிகிறதா?
காய்ச்சி காய்ச்சி கட்டி இறுக்கிய
கருப்பட்டி எச்சில்
என் சட்டையில் தடவப்பட்டிருக்கிறதா?
ஏன் இப்படி என்னிடம் மொய்க்கிறாய்

துளைகளில் சுரக்கும் சுனை வியர்வை
உவர்க்குமென எனக்குத் தெரியும்
கண்பட்டையிலிருந்து என் நாக்கில் விழுந்த
வியர்வையை சுவைத்திருந்தேன்
இன்னும் அந்த ருசி இனிக்கிறது
உனக்கு அது உவர்க்கவில்லையா?
வலுக்காமல் கைகளில்
ஊர்ந்து ஊர்ந்து நடந்து
கூச்சத்தை ஏற்படுத்திய உன் தொடுதல்
இப்போது எரிச்சலாகுகிறது

உனது வித்தியாசமான ருசியைக் காட்ட
வேறு எவரும் கிடைக்கவில்லையா?
கை நிறைய படகு நிறைய
உப்புக் காற்றைப் பிடித்து வருபவனிடம்
உன் ருசியைக் காட்டு
பூனைகள் தொடாத மீனைப் பரிசளிப்பான்

என் வியர்வை மீது நடக்காதே
நீ மிதித்த நரகல்
தோலில் சகதியாக குலைந்து விடும்
என் மூக்கின் அருகே வராதே
மசால் வீச்சம் அடிக்கிறது உன் உடலில்
இப்போது வந்து மொய்க்கும் நீ
விடுமுறைக்கு எங்கு போனாய்

கடற்கரைச் சாலை விளக்குக்குப் பின்னே
சதை பிதுங்கி குருதி வலிய
புண்களுடன் படுத்துக் கிடந்த
என்னைப் பார்க்க வராத நீ
மருந்துகளில் பாய்ந்து உருண்டு
என் காயங்களில் புரளாத நீ
வாரக் கணக்கில் நீர் வழிந்த புண்ணின்
ஈரம் வற்ற சிறகடிக்காத நீ
நினைத்த நேரத்தில்
பொசுக் பொசுக்கென பறந்து போகும் நீ
என்னைப் பார்க்க வரவேயில்லை
அருவருப்பாய் இருக்கிறது
உன் தொடுதலும் ஊர்தலும்
என்னருகில் வராதே
எதிரில் கண்ணீர் படிந்து கிடக்கும்
தேநீர் டம்ளரின் இனிப்பை
நக்கி நக்கி நகர்ந்து பறந்து விடு‌.


2

கட்டாயம் கொன்றாக வேண்டும்
சிலுவை செய்யப் புறப்படுவோம்
மரங்கள் இருக்கும் பக்கம் எது?
வா போகலாம்..
சிலுவைக்கான மரம் தேர்ந்து
செதுக்கி வருவோம்
செதுக்கியதைத் தூக்கி வருவோம்
விரைந்து கொல்லுவோம்

கயிறு திரிக்கும் கிழவி
தூங்கியிருக்கலாம்
நடுநிசி ஆகிறது
கூழ் கிண்டி குடித்துத் தூங்குவது
அவள் அன்றாடம்
இன்று அன்றாட நாள் இல்லை
சிலுவையேறி நடனமாடும்
உயிரின் கலைக்கு விருந்தாக
விருதளிக்கும் நாள்

துருப்பிடித்த ஆணிகளையும்
கனை கழன்று ஆடும் சுத்தியலையும்
கையோடு எடுத்து வா
நாம் செல்வோம்
இந்த முறை வித்தியாசமாக
கிழவியின் கயிற்றால்
கைகால்களை கட்டி
மல்லாக்கக் கிடத்தி
நெஞ்சிலும் நெற்றியிலுமாக
ஆணி அடிப்போம்
மிச்சமொரு ஆணி இருந்தால்
தொப்புள் குழியின் துளையில்
நெருக்கி அடிக்க வசமாயிருக்கும்

இரட்டை இறக்கை காற்றாடி வடிவில்
தோண்டிய குழிக்குள்
இறங்கும் சிலுவையில் ஒட்டப்பட்ட
ஆணிகளால் கீறப்பட்ட உடல்
அடி நரகத்திலிருக்கும்
புழு நெழியும் குஷ்டரோகியை
சொஸ்தமாக்கட்டும்
திருடனுக்கும் எத்தனுக்கும்
மீட்பளிக்கட்டும்


3

நிழல்மிகு ஒளிபடா வனத்தின் குளிர்பாதையில்
முழுக்க முழுக்க வழுக்கும் கோள கற்கள்
கானலாய் இல்லாது காணும் அரிந்து நெகிழும்
நிறமற்ற நீரின் காட்சியை நோக்கி கிளர்ந்து நிற்க
இன்னும் கொஞ்ச நேரம் நடக்க
சுற்றி வட்டமடித்து கற்குவியலைத் தாண்ட
கால்கள் வழுக்கின.
வழுக்கிய அடுத்த நொடி
இயற்பியல் விதிப்படி
விழுதல் வினை சாத்தியமாக
கற்கள் எல்லாம் கூர்நோக்கி மூடி திறக்காமல்
அங்கலாய்க்கும் கண்களைப் பார்க்க
மற்றுமோர் அவ இருளின் சூழ்கை
இனி அந்த அருவியின் அழகை
காண கண் கூடாதெனினும்
எழுந்திடும் திருப்பமும்
மீட்டேறிய பயணமும் யத்தனமாகிறது.


4

குரைச்சல் ஒலியில் பங்கெடுத்துக் கொள்கிறேன்
ஒட்டுமொத்தமாக என்னால் கேட்க முடியவில்லை.
பற்கள் ஆடி உதிருமளவு வாயின் துவாரம் கிழிந்து
தாடை கழுத்தின் கீழ் தொங்குமளவு
வெந்து போன நாக்கின் வெண்புள்ளி புண்களில்
இரத்தம் சுனையெடுக்க
அழுகிய குடலின் சமைந்திட்ட குலைவு
மண்ணில் சம்மணமிட்டு
தியானத்திற்கு அனுப்பப்படும்வரை
முகமெல்லாம் மஞ்சள் பூக்குமளவு
பித்தம் மொழுகப்பட்டு கருவிழிகளின் மையத்தில்
வெண்பொட்டு பூக்க நிலவென குளிர்வீசி
வெயிலைக் கக்க உதிரந்தும் உதிராமலும்
நெட்டையும் கட்டையுமாய்
குத்திக்கொண்டும் சுருண்டு கொண்டும்
புழுக்களுக்கு முதுகு சொரியும் மயிர்களின் வியர்வையில்
இரத்தம் சேரும்வரை மலத்தின் வாடை தொண்டையிலேறி
நாசித்துவாரத்தில் மலம் ஊற்றெடுத்துக் கொட்ட
காதின் சவ்வுத்திரை காற்றில் கலந்து செவிடாகி கத்துகிறேன்
பசும்புல்லென கண்ணில் ஒளிவீசி ஆடிய
தனிநிலத்தின் பஞ்சத்திற்கு தண்ணீர் வார்த்த
தோட்டப்பணியாள் நகர்ந்துவிட்டார்
கூப்பாடு போட்டு கத்துகிறேன்
எல்லோரும் மலங்க மலங்க விழிக்கின்றனர்
சுற்றிலும் கூட்டம்
புதிதாக வந்தமர்ந்த கோரமான உருவ ஒப்பனை
புதியதொரு நடிகனை பிரசவிக்க
அரிதாரமின்றி மீண்டும் கத்துகிறேன்
கத்தும் ஒலி பறிகொடுத்தவனின் பாடலாகிறது
குரைச்சல் ஒடுங்கி வாலொடுக்கி
நாய்கள் நிற்கின்றன.


5

கடலில் துள்ளிச் செல்லும்
விளக்கெரியும் படகாக
அமாவாசை இருட்டு அலையடித்து மிதக்கிறது
உப்புத் தண்ணீரில் மூழ்கிய கூந்தலை உதறும்போது
துள்ளிச் சிதறும் நீர்த்திவளை முகத்திலறைய
காற்றிடையில் காத்திருக்கிறேன்
நிலவிற்கென கண்கள் முளைத்து கையாட்டிச் சிரிக்கும்
நடிப்புக்குப் பெயரிட அகராதி புரள்கிறது

கல்குவாரி சண்டையாடும் இரண்டு மீன்கள்
நிறமிகளைத் தூக்கி எறிய
அதனைப் பிடித்து தொண்டையில் தடவி
வண்ணமயமான மிடற்றொன்றை நீலமும் ஒரு நிறம்
நிறம் பூத்த கழுத்தைக் கொத்தித் தேனெடுக்க வந்த பாம்பை
நாயொன்று துரத்துகிறது

பாறையொன்றில் நாக்கால் நக்கப்படாத
தேனொழுகப் படுத்திருக்கிறேன்
ஈக்களை அருகே விடாமல்
வண்டுகள் காவலுக்கு நிற்கின்றன
கட்டுப்பாட்டை உடைத்து முடிசிலிர்த்து
ஆளுமை தொங்க பிடரி மயிர் ஆட்டிவரும்
நாயொன்று தெவிட்டும் இனிப்பை முகர்ந்து
தொண்டையைக் கடிக்கிறது
அம்மணமாய்க் கிடக்கும் தேனொழுகும் உடலைப் பிரிந்த
அனல் காற்றின் வெம்மை பார்த்து
தொப்புள் முடிகள் காற்றில் ஆடி சிரிக்கின்றன


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “அரா கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.