மிதவை

அழகம்மை  மஞ்சள் நிற வண்டுகளைப் போன்ற மலர்களை உதிர்த்துக் கொண்டிருந்த மரத்தின் கீழ் காத்திருந்தார். அது நவீன பள்ளி வளாகம்.  நகரத்தில் இந்த மரங்களைத்தான் அதிகமாக வைத்திருக்கிறார்கள். வேகமாக வளர்கிறது என்பதற்காகவே இவற்றை வைப்பதாக இவர் மருமகன் கணேசன் பேச்சினூடாக ஒருமுறை கூறினார். நகரத்தில் எல்லாமே விரைவாக நடக்கவேண்டும். பொதுவாக மலர்கள் உதிர்ந்து மேனியில் படும்போது இவருக்கு சிலிர்ப்பு ஏற்படும். ஆனால், இந்த மலர்கள் விழுந்தபோது ஒருவித அசூசை ஏற்பட்டது. 

      நீள்வாக்கான ப போன்ற வடிவமைப்பில் இரண்டடுக்கு கட்டடம். எட்டடி அகல நடைபாதை இருந்தது. வகுப்பறைகள் ஒன்றன்பின் ஒன்றாக வைத்த தீப்பெட்டிகளைப்போல அமைந்திருந்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் தெரிந்த பிள்ளைகளின் முகங்களில் ஏக்கம் இருந்தது. கோடை விடுமுறைக்குப்பின் இன்றுதான் பள்ளி திறப்பு. இவர் பேத்தி தட்சனா இன்று முதல்முறையாக பள்ளிக்கு வந்திருக்கிறாள். இந்த நாளை  இவர் பலநாட்களாக எதிர்பார்த்திருக்கிறார். இனி கிளம்ப வேண்டியதுதான் என்று எண்ணமெழுந்தபோதே மனதில் பெரும் வெறுமையை அடைந்தார்.  

     சந்திரா பிறந்தபோது இவர் கணவர் துரை உடல் மொத்தமும் உவகையில் தவிக்க ஓடிவந்து அவளைத் தூக்கினார். களைப்பில் பாதிவிழிகள் செருகியிருக்க படுத்திருந்த இவளை நோக்கி ஒரு நன்றிப் பார்வையை மட்டும் வீசினார்.  திருமணம் முடிந்து ஐந்தாண்டுகளில் அவர் முகத்தில் அப்படியொரு பூரிப்பை இவள் கண்டதில்லை. சுந்தர் பிறந்தபோதுகூட மகிழ்ச்சியாக இருந்தாரே தவிர இப்படியொரு ஒளிர்வு இல்லை என்பது மகளைப் பெற்ற இவளின் இன்பத்தை அதிகப்படுத்தியது.   

       நான்கு பெண்களில் ஒருவளாகப் பிறந்த இவளுக்கு பாசமோ தீனியோ உடையோ எதுவாயினும் மற்றவர்கள் எடுத்துக் கொண்டதுபோக எஞ்சுவதுதான் கிடைக்கும். ஆனால் இவள் மகளுக்கு அவள் விரும்பியதெல்லாம்  அப்பா மூலம் கிடைத்தது. அவள் கேட்பதில் எஞ்சுவதே அண்ணனுக்கும் அம்மாவுக்கும் என்றானது. சில சமயங்களில் இவர்களுக்கு தேவையானதை அவளைக் கெஞ்சி, அவள் வாயால் கேட்க வைத்துப் பெற்றார்கள். மகள் மீதான  அவரின் பிரியத்திற்கு அவர் அம்மாவின் சாயலைக் கொண்டிருந்தாள் என்பது முதன்மைக் காரணமல்ல.

    ஒருநாள் எப்படியோ வெள்ளரிப்பழம் வேண்டுமென சந்திராவுக்கு தோன்றிவிட்டது. அதை அப்பாவிடம் கூறிவிட்டாள். ஆனால் ஊரிலிருந்த கொல்லைகளில் அப்போதுதான் பிஞ்சுகள் முளைவிட்டிருந்தன. அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். இப்போது வேண்டாமென அவரை அழகம்மை அல்ல சந்திரா முயன்றாலும் தடுக்க முடியாது. மாலை நாலு மணிக்கு சென்றவர் இரவு பத்து மணிக்குத்தான் பழத்துடன் திரும்பினார். நடந்த கதையை இவர்களும் நேரில் காண்பதைப் போலவே உணரும்படி விவரித்தார். 

     நாலு மைல் தொலைவிலிருக்கும் புதுப்பட்டி கடைவீதிக்குச் சென்று ஒவ்வொரு காய்கறிக் கடையிலும் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. இவரின் ஆவலாதியைப் பார்த்த ஒரு கடைக்காரர் தாஞ்சூரில் இருக்கும் அவரது சொந்தக்காரரின் வீட்டுத் தோட்டத்தில்  பழுக்கும் நிலையில் ஒன்றை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்ததாகவும் கேட்டுப் பாருங்கள் தந்தால் உங்கள் அதிர்ஷ்டம் என்றும் கூறினார். 

   இவரும் இன்னும் இரண்டு மைல்கள் சைக்கிளை மிதித்து வியர்வையால் நனைந்த சட்டையுடன் அந்த வீட்டிற்கு சென்றார். சாலையை ஒட்டியே வீட்டைக் கட்டியிருந்தார்கள். மூடியிருத்த வீட்டின் இரண்டு பக்கமும் பத்தடி இடைவெளி இருந்தது. அதனுள் பாவப்பட்டிருந்த பலவித கீரைகள் தழைத்திருந்தன . இடையிடையே நின்ற வெண்டை மற்றும் தக்காளி செடிகள் பிஞ்சுக் காய்களை தாங்கிக் கொண்டிருந்தன. கம்பிவேலியால் தடுப்பு போட்டிருந்ததால் வெளியில் நின்றே பார்க்க முடிந்தது. ஆனால் வெள்ளரியைக் காணவில்லை. பின்பக்கத்தில் படரவிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடனேயே கதவைத் தட்டினார். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கதவைத் திறந்து இவரைக் கண்டு கண்கள் சுருக்கி யோசித்தார். 

“என்னைய ஒங்களுக்குத் தெரியாது. நான் செவலாங்குடி. எம்பொண்ணு திடீர்னு வெள்ளரிப்பழம் வேணும்னு கேட்டா. எங்க ஊர்க் கொல்லைகள்ல பிஞ்சுகளாத்தான் கெடக்கு. புதுப்பட்டியில எல்லாக் கடையிலையிலேயும் விசாரிச்சுட்டேன். கெடைக்கவேயில்லை…” என்று கூறிய துரை சற்று தயங்கினார். 

   வீட்டுக்காரர் எந்த உணர்வும் காட்டாத முகத்துடன் இவர் அடுத்து கூறப்போவதை எதிர்பார்த்திருந்தார். 

  “இல்ல, எம்பொண்ணு கேட்ட எதையுமே நான் இல்லையினு சொன்னதில்ல. அவளும் என்னால முடியாதத இதுவரைக்கும் கேட்டதில்ல. இன்னைக்கு என்னவோ வெள்ளரிப் பழத்துமேல ஆசப்பட்டுட்டா. அதக் கொண்டுபோய் கொடுக்கலைனா என்னால  தூங்கமுடியாதுங்க…” என்று முடித்தபோது குரல் தழைந்தது. 

     வீட்டுக்காரர் “உள்ளே வாங்க..” எனக் கூறிவிட்டு உள்பக்கம் திரும்பி “ஏம்மா..’ எனக் குரல் கொடுத்தார்.  உள்ளிருந்து ஒரு பெண் எட்டிப் பார்த்தார். 

   “அந்த வெள்ளரிப் பழத்த எடுத்திட்டு வா..” 

 அந்தப் பெண் தயங்கினார். 

“எடுத்திட்டு வான்னு சொல்றேன்ல..” என்று அதட்டியதும் விருப்பமில்லா நடையுடன் உள்ளே சென்றார். 

   உள்ளே நுழைந்த துரையை அங்கிருந்த நாற்காலியில் அமரும்படிக் கூறிவிட்டு மூலையில் இருந்த மண்குடத்திலிருந்து தண்ணீர் மொண்டுவந்து கொடுத்தபின் இன்னொரு நாற்காலியில் அவரும் அமர்ந்தார். துரை தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோதே அவர் மனைவி  பிளந்துவிடாமல் இருப்பதற்காக பனையோலையில் பொதிந்து நாரினால் கட்டப்பட்ட பழத்தைக் கொண்டு வந்தார். 

   உடனே எழுந்து அதை வாங்கி துரையின் கையில் கொடுத்தார். துரையின் முகம் நெகிழ்ச்சியில் கனிந்துவிட்டது. அதை வாங்கியபோது கை லேசாக நடுங்கியது. 

  “என் பொண்ணு கேட்டத கொடுக்க முடியாமப் போயிருமோன்னு தவிச்சுப் போயிட்டேங்க…” என நன்றிப் பெருக்குடன் அவரைப் பார்த்தார். 

“எவ்வளவுங்க..” எனக் கேட்டபடியே  இடக்கையால் பழத்தை நெஞ்சில் அணைத்துக் கொண்டு வலக்கையால் சட்டைப்பையினுள் கைவிட்டார். 

  “ஏங்க, பணத்துக்காகவா கொடுத்தோம்னு நெனைக்கிறீங்க..” அவர் குரலில் சற்று கடுமை வெளிப்பட்டது.

  “கட்டுமாவடில இருக்குற   எந்தங்கச்சி போன மாசம் இங்க வந்திருக்கப்ப வெள்ளரி பழுத்தா கொண்டுவரச் சொன்னுச்சு. கடலோரத்தில இருக்கிற அவங்க ஊருல வெள்ளரி விளையாது. தங்கச்சி வீட்டுக்கு காலையில போறோம். அங்க கொண்டு போகலாமேன்னுதான் பறிச்சு வெதைய எடுத்திட்டு கட்டி வச்சோம். ஒங்க பொண்ணுக்குன்னு கேக்கறீங்க. இல்லைன்னு எப்படி சொல்றது..”

  துரை சங்கடத்துடன் எழுந்து “என்னங்க… ஒங்க தங்கச்சிக்குன்னு ஆசையா எடுத்து வச்சத என்கிட்ட கொடுக்குறீங்க. இத ஒங்க தங்கச்சிக்கே கொடுங்க. நான் வேறெங்கேயாவது கெடைக்குதான்னு பாக்குறேன்..” கூறியபோது கையால் நிறுத்தச் சொல்லி “அடுத்து விளையிறத எந்தங்கச்சிக்கு கொடுத்துக்கிறேன். நீங்க கொண்டு போயி நம்ம பொண்ணுக்கிட்ட கொடுங்க. எங்களுக்கு ரெண்டுமே பயலுகதான். பொண்ணு ஒன்னு இல்லையினு ஏக்கத்தோட நெனச்சுக்குவோம். ஒங்க புள்ளைக்கிட்ட இங்கேயும் ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லுங்க..” என்று அவர் கூறியபோது அவர் கண்கள் மட்டுமல்ல அவர் மனைவியின் கண்களும் கலங்கிவிட்டன. 

       விதை எடுக்கப்பட்டு நல்ல வெண்மையாய் பஞ்சுபோன்ற மிருதுவுடன் இருந்தது பழம். அதன்மேல் பொடித்த வெல்லத்தை லேசாக தூவி சிறு கரண்டியால் மெல்ல வரண்டி சந்திராவின் வாயில் வைத்தார் துரை. அப்படியே நாவில் கரைந்து தொண்டையில் இறங்கும்போது அவள் முகத்தில் பரவசம் பொலிந்தது. அதைப் பார்த்த மூவருமே மனம்  நிறைந்தபோது சந்திரா  அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.

     துரை மீது எப்போதுமே அழகம்மைக்கு ஈர்ப்புதான். இவளுக்கு மட்டுமேயெனக் கிடைத்த முதல் சொத்து இவர்தானே. இவளின் அன்பை பரிகாசம் செய்யாமல் அவரும் உவந்து ஏற்றுக் கொண்டிருந்தார். அவரின் மகள் மீதான பாசம் அவர்மீதான பிரியத்தைக் கூட்டியது. அதுவும் வெள்ளரிப் பழத்தை மகளுக்கு ஊட்டியபோது துரையின் மலர்ந்த முகத்தைக் கண்டு அப்படியே அணைத்துக் கொள்ளவேண்டுமென உள்ளம் துடித்தது. முகம் பூரித்து பொங்கி அவர்மீது அளவில்லாப் பிரியம் பெருகியது. எத்தனை பிறவி எடுத்தாலும் அவருடனேயே எந்த விலக்கமுமின்றி வாழவேண்டும் என குலதெய்வம் அங்காளம்மனை வேண்டிக்கொண்டாள். எப்போதாவது இந்த நினைவு தோன்றும்போது கரிப்புடன் மெல்லிய புன்னகை புரிந்து கடப்பாள்.

     சந்திரா எண்ணியதை படித்தாள். கணினியில் முதுநிலை. படிப்பு முடிந்த சில மாதங்களிலேயே வேலை வாங்கிவிட்டாள். முதலில் திருச்சியில் ஒரு மாதப் பயிற்சி. பின் சென்னையில் பணி. தனியாக அனுப்புவதற்கு அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. அன்பென்பது கட்டுப்படுத்துவதல்ல அவர்கள் விரும்புவதை செய்ய அனுமதிப்பது என்பதை எப்படியோ அவர் உணர்ந்திருந்தார். பாதுகாப்பான பெண்கள் விடுதியாக பார்த்து சேர்த்துவிட்டு வந்தார். அழகம்மையிடம் கருத்து எதுவும் கேட்கப்படுவதில்லை. எப்போதாவது இவளிடம் கேட்கப்படுவதற்கும் ஆமோதிப்பை மட்டுமே வழங்கினாள். அவர் விரும்பாத ஒன்றை இவளால் செய்யவே முடியாது. அப்படி எண்ணம் எழுந்தாலே இரண்டு நாட்களுக்கு தூக்கம் வராது. எத்தனை அருமையான அப்பாவாக உள்ளார் எனப் பார்த்துப் பார்த்து மாய்ந்து போவாள்.  

      பணியில் சேர்ந்த ஒரு வருடத்தில்  உடன் பணி புரிந்த கணேசனை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அப்பாவிடம் கூறினாள். கணேசனுக்கு காரைக்குடிதான் சொந்த ஊர் என்றதும் இவரும் கூடுதல் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். “ஊர்ப் பாசங்கிறது மனுசனோட ரத்தத்திலே படிஞ்சிருக்கு. வேற ஊரா இருந்தாலும் எப்படியாவது ஒரு  இணக்கத்த கண்டுபிடிச்சு சந்தோசப்பட்டுக்கிறது அவன் இயல்பு”, இதை துரை அழகம்மையிடம்  பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தடவை கூறினார்.  மகளின் திருமணத்திற்கு மனமுவந்து சம்மதித்தபோது இவளுக்கு அது நினைவுக்கு வந்தது. 

    பள்ளியின் பிரமாண்ட அலாரம் அடித்தவுடன் பெரும் மகிழ்ச்சிக் கூச்சல் முழங்கியது. இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த துள்ளலை பிள்ளைகள் வெளிக்காட்டின. முதல்நாள் என்பதால் சீருடையில்லாமல் வெவ்வேறு வண்ணங்களில் உடையணிந்த பிள்ளைகள் வகுப்புகளிலிருந்து ஓடி வந்தன. அடைபட்ட பெட்டிகளிலிருந்து ஊர்ந்து வரும் பட்டாம்பூச்சிகள் போலிருந்தது. வெளிவந்த பிள்ளைகள் தங்களின் பெற்றோர் நிற்கும் இடத்தை நோட்டமிட்டபடியே வந்தார்கள். பெற்றோரைக் கண்டதும் பெரும் உற்சாகத்துடன் கண்களும் இதழ்களும் கரங்களும் விரிய ஓடித் தாவினார்கள். 

   தட்சனா அழகம்மையைக் கண்டதும் துள்ளி வந்தாள். ஆயா எனக் கட்டிக் கொண்டாள். பார்த்து சில மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் பலநாட்கள் பிரிந்திருந்ததான உணர்வுடன் அவள் இருந்தாள். அவளின் இரு கன்னங்களிலும் ஆதுரத்துடன் முத்தமிட்டபின் எழுந்து கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தார். பக்கத்துத் தெருவில்தான் வீடு. 

  “டீச்சர் என்ன சொல்லிக் குடுத்தாங்க செல்லம்…”

   “அய்யே அவங்க டீச்சர் இல்ல ஆயா. மிஸ்..”

   “அப்டியா… சரி மிஸ் என்ன சொன்னாங்க…” 

  “ஏபிசிடி சொன்னாங்க… ஒன்டூத்திரீ சொன்னாங்க. கலர்ஸ் சொன்னாங்க…” 

  என்று அவள் கூறிக்கொண்டு வந்தபோது இந்தப் பிள்ளையை பிரியப் போகிறோமே என்று மெல்லிய வருத்தம் தோன்றியது. அதே கணம் துரையின் அருகில் இருக்கப்போகிறோமே என்ற உற்சாகத்தையும் அடைந்தாள்.

    அவரைப் பிரிந்ததும் அவர்மேல் கொண்ட பிரியத்தினால்தான். சந்திராவிற்கு ஏழாவது மாதம் சீமந்தம் செய்தபிறகும் விடுப்பு எடுக்கமுடியாது எனக்கூறி சென்னைக்கு கிளம்பினாள். குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் விடுப்பு எடுத்தால் ஆறுமாதம் குழந்தையுடன் இருக்கலாம் என்பது அவளது எண்ணம்.  இந்த முடிவை தடுப்பதற்கு யாருக்கும் மனமில்லை. 

      துரை, அழகம்மையை மாங்கொல்லைக்கு அழைத்துச் சென்றார். மாங்கொல்லை என்பது அழகம்மையின் தனியுலகம். அவள் இங்கு தனியாக வந்துவிட்டால் சிறுமியென மாறிவிடுவாள். யாரும் இல்லாதபோது கொல்லைக்கு வருபவள்,  முகம் பூரிக்க ஒவ்வொரு கிளையையும் ஆட்டுவாள். தளிரை மென்மையாக வருடுவாள். வருடிய விரல்களை முகர்ந்து பார்ப்பாள். முசுருப் பெட்டியை லேசாகத் தட்டி அவை தலை தெறிக்க பதைத்து வெளிவருவதை பார்த்து சிரிப்பாள். பூக்களை கையில் தாங்கி அதன் வடிவில் லயித்திருப்பாள். வெளியே வந்தவுடன் எப்போதும்போல மாறி வீட்டிற்குச் செல்வாள். 

     அதிகமான மாங்காய்களையோ பழங்களையோ பறிக்க வேண்டியிருந்தால் மட்டுமே இருவரும் சேர்ந்து கொல்லைக்கு வருவார்கள். முதல்முறையாக ஏதோ பேசுவதற்காக துரை இங்கு அழைத்து வந்ததால் சற்று குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும், இருவரும் தனித்திருக்கும் வாய்ப்பு எப்போதாவது மட்டுமே கிடைக்கிறது என்பதாலும் தனக்குப் பிடித்த மாங்கொல்லை என்பதாலும் அழகம்மையின் முகம் மலர்ச்சி கொண்டது. ஒரு முதிய மரமும்  எட்டுப் பெரிய மரங்களும் ஒரு இளங்கன்றும் நின்றன. கன்று இன்னும் காய்க்கவில்லை. அடுத்த வருடம் காய்க்கும் வாகில் தளிர் பெருக்கி ஒளிர்ந்து நின்றது. அழகம்மை துரையின் இருப்பை உணர்த்தபடி அவரே பேச்சைத் தொடங்கட்டும் என்று இளங்கன்றை பார்வையால் வருடி நின்றாள்.      

      அந்த இடம் வெயில் படும் இடமாக இருந்ததால் “அழகு.. வெயில்ல நிக்கவேண்டாம் இப்படி வா” என படர்ந்திருந்த கிளிமூக்கு மரத்தின்கீழ் நின்று அழைத்தார். அவர் குரல் தழைந்திருந்தது. நிமிர்ந்து அவரின் முகத்திலிருந்த தீவிரத்தையும் தயக்கத்தையும் கண்டு அருகில் சென்றாள். எப்போதும் அவர் சொல்வார். இவள் செய்வாள். ஆனால் இன்று தயங்குவதால் அவரால் கட்டளையாக கூறமுடியாதவொன்று என்பதை உணர்ந்தாள். 

   கீழே தாழ்ந்த கிளையின் மெல்லிய பட்டைகளை இடக்கையால் தடவியபடி அவர் முகத்தைப் பார்த்தாள். ஏதோவொரு இடைவெளியில் புகுந்துவந்த இளங்காற்று முகத்தில் பட்டு சிலிர்க்க வைத்தது. 

  “சந்திரா சந்தோசமா இருக்கிறத பாக்கறப்பதான் நிம்மதியா இருக்கு…” என்று துரை தொடங்கியபோது இவளின் விழிகள் சற்று விரிந்தன. 

  “கல்யாணம் பண்ணிப் போனப்ப அவ வாழ்க்க எப்படியிருக்குமோன்னு தவிப்பாதான் இருந்துச்சு..” அவர் தொடர்ந்தபோது இவள் விழிகளில் தோன்றிய சலிப்பை ஒருகணம் கண்டு பார்வையை திருப்பிக் கொண்டார்.

  “ஒன்கிட்ட எப்படிக் கேக்குறதுன்னு தெரியல. என்னால முடியாதுங்கிறதுனாலதான் ஒங்கிட்ட கேக்குறேன். நீ முடியாதுன்னு சொல்லிட்டா என்னால எதுவும் பண்ணமுடியாது. வீட்ல பொண்ணும் மாப்பிள்ளையும் இருக்கிறதாலதான் இங்க கூட்டிட்டு வந்தேன்…” தயக்கத்தோடு இடைவெளி விடாமல் சொல்லி நிறுத்தினார்.

  கிளையை தடவுவதை நிறுத்தி கண்களை இடுக்கி கூர்மையாக அவரைப் பார்த்தாள். தலையை கவிழ்த்தபடியே “சந்திரா வேலைக்குப் போயாகனுமாம். நெறை மாசமா இருக்கிறப்ப வேலைக்கும் போயிக்கிட்டு வீட்டு வேலையையும் பாக்குறது ரொம்பக் கஷ்டமா இருக்கும்மில்ல… அதுக்காகத்தான்…” 

  சற்று பொறுமையிழந்தாலும் அதைக் குரலில் காட்டாமல் “இழுக்காம சொல்ல வந்தத சட்டுனு சொல்லுங்க..” என்றாள் அழகம்மை. 

  “இல்ல சந்திரா வீட்ல கொஞ்ச நாளைக்கு போயி இருக்கனும்…” 

   சில கணங்களுக்குப் பிறகே அவர் கூறியதன் அர்த்தம் புரிந்தது. கிளையிலிருந்து கையை வேகமாக எடுத்ததால் கிளை மேலும் கீழும் ஆடியது. அந்த அசைவால் மரத்திலிருந்த சில கிளிகள் கீச்சிட்டு பறந்து சென்றன.  இவளின் முகம் சிவந்தது. யார்மீதென்று தெரியாத கடும் சினம் எழுந்து உடல் சூடானது. 

  துரை நிமிர்ந்து இவள் முகத்தைப் பார்த்தார். அவர் முகத்தில் பரிதவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. இதுவரை அவரை இப்படிப் பார்த்ததில்லை என்பதை உணர்ந்ததும் தன் முகத்தை இயல்பாக்க முயன்றாள். அம்முயற்சியினால் கண்களில் நீர் திரண்டது. 

“நான் போயி இருக்கேங்க. எத்தன மாசம் வேணுமோ அத்தன மாசம் இருக்கேன்..” என்றபோது இவள் கையைப் பற்றி இழுத்து வேகமாக அணைத்துக் கொண்டார். கூச்சத்தில் இவளுக்கு உடல் கூசிபோதும் மிகவும் பிடித்திருந்தது.  

     மாசக்கணக்கில் இருக்க நினைத்து வந்து இப்போது நான்கு ஆண்டுகளாகி விட்டது. பிள்ளை பிறப்பதற்கு ஒருமாதம் இருக்கும்போதே விடுப்பு எடுத்துக் கொண்டாள் சந்திரா. பிள்ளைக்கு ஐந்து மாதம் ஆனபோதே வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம். அப்படிப் போகவில்லை என்றால் பதவி உயர்வு சம்பளம் எல்லாமே பாதிக்கும் என்றாள். இவர்களை அப்படியே விட்டுவிட்டு எப்படிச் சொல்லமுடியும். அப்படியே நான்காண்டுகள் ஆகிவிட்டன. 

 மூச்சை இழுத்து பெருமூச்சாக விட்டபோது “என்னாச்சு ஆயா…” என இவள் கையுடன் பிணைத்திருந்த அவள் கையை ஆட்டி தட்சனா கேட்டாள்.

  “ஒன்னுமில்ல செல்லம், ஆயா ஊருக்குப் போகப்போறேன்ல அத நெனச்சுக்கிட்டேன்..” 

  “அச்சச்சோ… நீ ஊருக்குப் போயிட்டா என்னய யாரு பாத்துப்பா…” 

 “நீதான் எல்லாமே தெரிஞ்ச பெரிய பொண்ணாயிட்டியே. காலையில் ஒன்னத் தயார் பண்ணி பள்ளிக்கூடத்துல விட்டுட்டு ஒங்கம்மா வேலைக்குப் போவாங்க. சாயங்காலம் ஒங்க அப்பா வந்து ஒன்னய வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க..” 

 “அய்ய்யோ அப்ப  டெய்லி ஸ்கூலுக்கு வரனுமா..” 

  “ஆமா, நீதான் புத்திசாலிப் பொண்ணாச்சே. நல்லாப் படிச்சு அம்மா மாதிரி பெரிய ஆபிசரா ஆகனுமில்ல…”

  “ஆமாமா.. நான் நெறையப் படிப்பேன்…” 

  ஊரில் வளரும் சுந்தரின் மகன் மகேஷின் நினைவு எழுந்தது. இவள் சென்னைக்கு கிளம்பியபோது அவன்தான் மிகவும் அழுதான். நாள் முழுக்க இவளுடனேயே திரிபவன். அவன் அம்மாவின் ஊருக்குப் போகும்போது மட்டுமே பிரிவு. எப்போதாவது அவன் மட்டுமே வெளியே செல்வான். இப்போது முதல்முறையாக ஆயா இவனை விட்டுவிட்டு வெளியே செல்கிறார்  என்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

 ஊரில் இருந்தவரை வீட்டில் நடப்பது அத்தனையும் இவளின் விருப்பத்தையும் உத்தேசித்துதான். துரையின் விருப்பப்படி இவள் நடந்தாலும் குடும்பத்தின் அன்றாடம் இவளின் எண்ணப்படிதான் நிகழ்ந்தது. அங்கே இருந்தவரை உணரவில்லை தான் ஒரு மகாராணிபோல் வாழ்கிறோம் என்பதை. சென்னையின் அடுக்கக பெட்டி ஒன்றிற்குள் அடைபட்ட இரண்டாவது நாளில் அதை உணர்ந்தாள். ஊரில், யாரையும் எதிர்பார்க்காமல் எந்த இடத்திற்கும் செல்லமுடியும். தேவையைச் சொன்னால் நிறைவேற்ற சில பேர்கள். தோன்றும்போது மாங்கொல்லைக்குச் சென்று களைப்பாறலாம். பெரிய குடும்பத்துக்காரி என்பதால் ஆலோசனை கேட்டும் உதவி கேட்டும் நிதமும் யாரேனும் வருவார்கள். 

     ஆனால் அடுக்கத்தில் கதவைத் திறந்து வராந்தாவில் கூட நிற்கக் கூடாது. எவரையும் உற்றுப் பார்க்கக்கூடாது. எதையும் சத்தமாகப் பேசக் கூடாது. அதோடு இன்னொரு சங்கடமும் இருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக் கொள்ளும்போது இவர் இருக்கும் பக்கம் ஒருமுறை பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவது இவருக்கு கேட்காததுபோலவே இருக்க முயன்றாலும் முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது. அவர்கள் நாணத்துடன் சிரித்துக் கொண்டு நகர்வார்கள். இதுகூட தேவலாம். கணேசனின் உறவினர்கள் வரும்போதுதான் கூனிவிடுவாள்.  மகள் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்தாயிற்றா என்ற கேலியை  சிலாம்பு தைப்பதைப்பதைப்போல வெவ்வேறு மென்மையான வார்த்தைகள் மூலம் செருகிச் செல்வார்கள்.

அம்மா தனிமையை உணராமல் இருப்பதற்காக  ஐந்து குருவிகள் இருந்த அழகான சிறிய கூண்டை வாங்கிவந்தாள் சந்திரா. அக்குருவிகள் அவை உறங்கும் நேரம் தவிர மற்ற பொழுதெல்லாம் கெச்சலிட்டுக் கொண்டே இருந்தன. இது தனிமையைப் போக்குவதற்குப் பதிலாக தனிமை ஒன்றையே இல்லாமலாக்கி விட்டது. ஒரு வாரத்திற்குள் திருப்பிக் கொடுத்துவிட்டு ஒலி எழுப்பாத மீன் தொட்டி வாங்கி வந்தாள். 

நான்கு மீன்கள் சதா தொட்டிக்குள் சுற்றி வந்து கொண்டிருந்தன. உற்றுப் பார்த்தபடியே தவித்துத் திரியும் அவற்றின் நிலை தன்னைப் போலவே உள்ளதாக அழகம்மையை உணர வைத்தன. எனவே, ஐந்து நாட்கள் மட்டுமே அங்கிருந்தன. பிறகு தனக்குள்ளேயே ஆழ்ந்து பழைய நினைவுகளில் மூழ்கி தனிமையை தவிர்க்க பழகிக் கொண்டாள்.

   அன்றொருநாள் பால் திரிந்துவிட்டதால் புதிதாக வாங்குவதற்காக கடைக்கு சென்றுவிட்டு வரும்போது காவலாளியின் உதவியின்றி இவர்கள் பெட்டியை அடையமுடியவில்லை. ஐநூற்றி முப்பத்து நாலு என்ற எண்ணை மனப்பாடம் செய்வதற்கே மூன்று நாள் ஆனது. அந்த எண் மறந்துவிட்டிருந்தால் காவலாளியாலும் உதவியிருக்க முடியாது. ஆனால் இப்போது தட்சனா உதவியுடன் வெளியே சென்றுவர முடிகிறது. 

   வீட்டிற்குள்ளேயே அடைந்திருக்கும் அம்மாவின் நிலை கண்டு சந்திராவிற்கும் சங்கடம்தான். “எனக்கு வேற வழி தெரியலம்மா. வேலைக்கு ஏதோவொரு பெண்ணப் வைக்கவும் பயமாயிருக்கு. அவங்கள நம்பி பச்சப் புள்ளய எப்படி விட்டுட்டு போறது. அங்கங்கே நடக்குறதப் கேள்விப்பட்டு சக மனுசங்கள சந்தேகத்தோடேயே பாக்கற மாதிரி ஆயிடுச்சு…” 

  சந்திரா கூறியபோது அவளும் என்ன செய்வாள் என பாவமாகத்தான் இருந்தது. அழகம்மைக்காவது பரவாயில்லை சென்னைக்கு வந்திருக்கிறார். சந்திராவின் மாமியார் அமெரிக்கா சென்றிருக்கிறார்.  சம்மந்தியம்மா மீது இவருக்கு இரக்கம் சுரந்தது. 

   திருவிழா,  இல்லையென்றால் மிகமுக்கியமான விசேசங்களுக்கு மட்டுமே சந்திரா பேத்தியுடன் அழகம்மை மூன்று பேரும் ஊருக்கு செல்வது. மாப்பிள்ளை அரிதாகவே சேர்ந்து வருவார்.  சென்னைக்கு வந்து பிள்ளைக்கு நான்கு மாதம் ஆனபோது முதன்முதலில் மாரியம்மன் மதுயெடுப்புக்கு ஊருக்குச்  சென்றார்கள். இவளுக்காக ஊரில் அத்தனை பேரும் ஏங்கிக் கிடப்பார்கள் என்ற எண்ணத்துடன் சென்றாள். ஊரே தோரணமும் மைக்செட்டும் என அமர்க்களப்பட்டது. இவளின் நெருக்கமான தோழிகள் எப்ப வந்த, நல்லாருக்கியா என்பதற்குமேல் பேச எதுவுமில்லாமலானார்கள். வீட்டில் மருமகள் இவளை வாங்க என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்த வேலைகளுக்கு ஆட்களை ஏவியபடி ஓடி திரிந்தாள். பேரன் இவளைக் கண்டு கொள்ளவேயில்லை. அவன் வயதுப் பயல்களோடு தீவிரமாய் ஓடிக் களித்திருந்தான்.  சுந்தர், நல்லாயிருக்கியாமா என்று கேட்டுவிட்டு தட்சனாவை தூக்கிக் கொண்டு சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு வேறு வேலையாக சென்றுவிட்டான். துரை மட்டுமே இவளுக்காக ஏங்குபவராகத் தெரிந்தார். முன்பே மகனுடன் சரியாக பேசமாட்டார். மருமகளிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுவார். அவர்களுக்கிடையே அழகம்மை பாலமாக இயங்கிக் கொண்டிருந்தாள். சட்டென அவள் இல்லாமலானபோது அவர்களுக்கிடையே சரியான முறையில் இணக்கம் இல்லாமலாகிவிட்டது. மருமகள், பேரனிடமோ மகனிடமோ சொல்வதுபோல மாமனாரிடம் பேசினாள். அதைக் கண்டபோது அழகம்மையால் தாங்க முடியவில்லை. கண்ணாடிப் பெட்டியில் அகப்பட்ட ஈ போல மனம் பரிதவித்து எல்லாப் பக்கங்களிலும் மோதித் திகைத்தது. ஆனால் அவளால் செய்யக் கூடுவதும் ஏதுமில்லை. இரண்டு நாளில் கிளம்ப வேண்டுமே. இவளே எல்லாமாக இருந்து இயக்கிய வீட்டிற்கு இவளின் இருப்பே தேவை இல்லாமலாகிவிட்டது. கண்களில் திரண்ட நீரை யாருமறியாமல் முந்தானையில் ஒற்றினாள். 

இப்போது அழகம்மை, துரையை மாங்கொல்லைக்கு அழைத்துச் சென்றாள். இவளை மகளுடன் அனுப்புவதற்கு ஏன் மாங்கொல்லையை தேர்ந்தெடுத்தார் என்பதை அறிய விரும்பினாள். அவர் தயக்கத்துடனேயே வந்தார். கொல்லையை அடைந்தபோது காரணம் புரிந்தது. மனிதப் புழக்கமே இல்லாமல் முழுவதுமாக முள் செடிகள் மண்டியிருந்தன. முன்பு இவள் வரும்போது சிறிதாக முளைவிடும்போதே முள்செடியை பிடுங்கி வேலியின்மீது போட்டு விடுவாள். துரை இவளின் கூர்ந்த பார்வையை எதிர்கொள்ளாமல் தலையைக் குனிந்து தவிர்த்தவாறு “இங்க வந்தா ஒன் நெனப்பு மனசெல்லாம் நெறைஞ்சு பாரமாயிடுது. ரெண்டு மூனு நாளைக்கு எந்த வேலையிலேயும் கவனம் இருக்கிறதில்ல. அதான்…” 

இவள் இங்கிருக்கும்போது இப்படியெல்லாம் ஒருமுறையும் பேசியதில்லை. இவளின் உதடுகள் லேசாக நடுங்கின. கண்களின் ஓரம் மெலிதாக நீர் துளிர்த்தது. 

“நீ இங்க இருக்கிற வரைக்கும் ஒன்னப்பத்தி எதுவுமே நெனச்சதில்லை. நீ போனப்பறந்தான் தெரிஞ்சது என்னோட பாதியா நீயிருந்தேன்னு. வீட்ல பேரன் கூட வெளையாடறப்பவும் வேற வேலைகள்ல இருக்குறப்பவும் ஒன் நெனப்ப கொஞ்சம் மட்டுப்படுத்த முடியும். ஆனா இங்க வந்தா என்னால தாங்க முடியாம ஆகிடுது…” இவளுக்கு முதுகைக் காட்டி வேலியாக அமைந்திருந்த கிலுவைச் செடியின் கூரிய நீண்ட முட்களை நீவியபடி சொல்லிக் கொண்டிருந்தார். 

அழகம்மை இரண்டு கைகளையும் இறுக்கக்கட்டி பொங்கும் தன் மனதை அடக்க முயன்றபடி கேட்டுக் கொண்டிருந்தாள். 

“அன்னைக்கி ஒருநா,  சாயந்திரமா வர்றேன்னு சொல்லிட்டு போனவன் மதியமே வந்திட்டேன். பசங்கதான் நீ இங்கே இருக்கேன்னு சொன்னானுங்க. அப்பதான் ரொம்ப நாசூக்காவும் கண்டிப்பாவும்  வெளிய தெரியிற ஒன்னைய வேறவொரு பொண்ணாப் பாத்தேன். குமரிப் பொண்ணாட்டமா பொகத்த வச்சிக்கிட்டு ஒவ்வொரு மரமா ஓடி பூவையும் தளிரையும் தடவுறதும் கொஞ்சுறதும் அதுங்கக்கிட்ட சிணுங்கிறதுமா… அப்படியே மனசு பூரிச்சிடுச்சு. நான் பாத்தது தெரிஞ்சா திரும்பப் பாக்கமுடியாத மாதிரி அந்த பிம்பம் கலைஞ்சிடும்னு அப்படியே சத்தங்காட்டாம போயிட்டேன்…” 

வேகமாக இரண்டடி எடுத்து வைத்து நெருங்கி அவரை  அப்படியே பினபக்கமாய் அழுத்தமாய் கட்டிக்கொண்டாள். அவரின் தோளில் இவளின் கண்ணீர் துளிகள் சிந்தி சட்டையில் பரவியது. 

தன் இடுப்பை இறுக்கியிருந்த இவளின் கைகளை விடுவித்து தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டு மெல்ல உயர்த்தி அவர் முகத்தில் ஒற்றினார். அவர் விழிநீரின் இரு துளிகள் இவள் விரலில் பட்டு வழிந்தன.

“என்னைய மன்னிச்சிடு அழகு. சந்திரா வீட்டுக்கு போகச் சொல்றப்ப நீ முடியாதுன்னு சொல்லிடக் கூடாதேன்னுதான் நீ ரொம்ப சந்தோசமாயிருக்கிற இங்க கூட்டிட்டு வந்து சம்மதம் கேட்டேன். ஏன்னா பொம்பளைங்க முடியாதுன்னு சொன்னப்பறம் அந்த ஆண்டவனே கேட்டாலும் ஒத்துக்க மாட்டீங்கள்ல…”

சில கணங்கள் அமைதியாக கழிந்தபின் அவரே  “ஆனா எனக்குதான் இன்னிக்கி வரைக்கும் ரொம்ப வருத்தமாயிருக்கு… நம்ம மக வீட்டுக்குத்தான் போயிருந்தாலும் ஒனக்கு புடிச்ச எடத்தை விட்டுட்டு போற மாதிரி செஞ்சிட்டேனே…” குரல் கம்மியபோது உடல் லேசாக குலுங்கியது. 

அழகம்மையால் தாங்கமுடியவில்லை. வெடிப்பது போல் வந்த விம்மலை அடக்கியபடி “நீங்க கவலைப்படற மாதிரி ஒன்னுமில்லைங்க. ஒரு ரெண்டு நாளைக்குதான் ஒரு மாதிரி இருந்துச்சு. அப்புறம் எல்லாஞ் சரியாயிடுச்சு. இப்ப இங்கயிருந்ததவிட அங்க ரொம்ப சந்தோசமா இருக்கேன்…” 

அதைக் கேட்டதும் கோர்த்திருந்த கைகளை தலைக்குமேலே தூக்கியபடி திரும்பினார். விழிகள் விரிந்த அவர் முகம் மலர்ச்சி கொண்டிருந்தது. “நெசமாவா சொல்ற…” 

“ஆமாங்க. இங்கே மாமரம் மட்டுந்தானே இருக்குது. அங்கே சின்னச் சின்னதா பூச்செடிங்க நெறைய இருக்குது. ஒவ்வொரு பூவும் விதவிதமான நெறத்துல கண்ணப் பறிக்கும் தெரியுமா…” அவள் கண்களை விரித்து சிறுமிக்குரிய பாவனை காட்டியபோது அவரின் முகத்திலிருந்த கவலை முற்றாய் மறைந்தது.. இல்லாதவொன்றை எப்படி உடனே தன்னால் கூறமுடிந்ததென பிறகு பலமுறை வியப்புடன் யோசித்திருக்கிறாள். எப்படியாவது அவரின் கவலையை போக்கவேண்டும் என்பதற்காக மனம் செய்த மாயம் என்பதை உணர்ந்தாள். 

   அதன் பிறகு ஒவ்வொருமுறை ஊர் சென்று மீளும்போதும் இனி திரும்பச் செல்லவே கூடாது என உறுதி கொள்வாள். ஆனால் சில நாட்களிலேயே அவ்வுறுதி குறைந்து ஊருக்கு செல்வதைப் பற்றியும் அங்கு தான் திரும்பிச் சென்றால் சில தினங்களிலேயே பழைய மாதிரியே எல்லாம் மாறிவிடும் என்றும் அதே மகிழ்ச்சி தொடரும் என்றும் எண்ணியெண்ணி நம்பத் தொடங்குவாள். அடுத்து எப்போது ஊருக்கு செல்லலாம் என காரணம் தேடத் தொடங்குவாள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் கடும் அனலாய் முகத்தில் அறைய வேதனையுடன்  சென்னை திரும்புவாள். 

   அம்மாவின் முகத்தைப் பார்க்கும் சந்திரா குற்றவுணர்வில் கலங்கி “தட்சனாவ ஸ்கூல்ல போடற வரைக்கும் இரும்மா போதும். ஒன்னோட வேதனய என்னால தாங்க முடியலம்மா..” என கண்கள் கசிவாள். அப்போது அழகம்மையின் வேதனை இன்னும் அதிகரிக்கும். ஆனாலும் நிரந்தரமாக ஊருக்குச் சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சிறு நம்பிக்கையை மனதாழத்தில் பொதிந்து வைத்துள்ளாள். 

  கடைசியாகச் சென்றபோது சந்திரா வீட்டில் தான் சங்கடத்துடன் இருப்பதைக் கூறினாள். துரை மருமகளின் மாற்றத்தை வேதனையுடன் கூறினார். “நான் வெளியிலேயே அதிக நேரத்த கழிச்சிடுறேன். எனக்கு பெரிசா தெரியல. ஆனா நாள்பூரா வீட்டுக்குள்ளேயே இருந்து சகிச்சிக்கிறது ஒனக்கு கஷ்டமா இருக்கும். சந்தோசமா பொண்ணு வீட்லேயே இருக்கப் பாரு…”  “தட்சனா பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்ச ஒடன ஊருக்கு போகலாம்னு சந்திரா சொல்றா. அங்கேயே இருக்கேன்னு எப்படிச் சொல்றது..” என்று இவள் கூறியபோது அவர் முகம் சுருங்கியது. 

     விரைந்து சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு ஒதுங்கியபடி நடந்து பிரமாண்டமான அடுக்கத்திற்குள் தட்சனாவுடன் அழகம்மை நடந்தாள். என்னென்னவோ கதைகளை அவள் கூறிக் கொண்டு வந்தாள். இரைச்சலில் அவள் சொல்வது  புரியாதபோதும் உம் கொட்டியபடி வந்தாள். இதுவரை ஆயாவின் கைபிடித்து பின்னால் வந்த தட்சனா  சுற்றுச் சுவரைக் கடந்தவுடன்  முன்னால் சென்று ஆயாவை அழைத்துச் செல்பவளாக மாறினாள். ஐந்து தொகுதிகளாக இருந்த அடுக்கத்தில் சரியாக இவர்கள் செல்லவேண்டிய தொகுதிக்குச் சென்று மின்தூக்கியை இயக்கி  சரியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். 

    சந்திராவும் அவள் கணவனும் எட்டு மணிக்குத்தான் வந்தார்கள். அழகம்மை சமையலை முடித்துவிட்டு தட்சனா தொலைக்காட்சியில் வைத்திருந்த சட்சட்டென காட்சி மாறிக்கொண்டேயிருக்கும் நிகழ்ச்சியில் மனம் லயிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சந்திரா முகத்தை கழுவிவிட்டு இரவு உடை மாற்றிக் கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்தாள். 

  “தட்சனா அடம் பிடிக்காம ஸ்கூல்லேர்ந்து வந்தாளா..” 

“சமத்தாயிட்டா. கையப் பிடிச்சுக்கிட்டு கூடவே வந்தா. திங்கிறதுக்கு பண்ணிக் கொடுத்தேன். சாப்டுட்டா…” 

  அம்மா… என்று தயக்கமாய் அழைத்தபடி இவளின் கையை தன் கைக்குள் எடுத்துக் கொண்டாள். வியப்புடன் தாழ்ந்திருந்த சந்திராவின் முகத்தை நோக்கினார். “அம்மா, இப்ப டாக்டரத்தான் பாத்திட்டு வல்றோம். மூனு மாசங்கிறத கன்பார்ம் பண்ணினாங்க…” என ஏதோ தவறு செய்துவிட்ட சிறு பெண்போல் கூறினாள்.

  மகளை அப்படியே அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டார். 

“சந்தோசமான விசயத்த ஏன் பயந்துக்கிட்டு சொல்ற,..” என்று அவளிடம்  கேட்டபோதே இவ்விசயத்தை சொன்னால் துரை கவலையின்றி இருப்பார் என்றும் ஆசுவாசம் தோன்றியது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மிதவை”

  1. அன்புள்ள சிவா,
    இத்தனை ஆழமான அழுத்தமான ஒருசிறுகதையை படித்ததில் நிறைவுற்றேன். படிமங்களில் கதைகளை நகர்த்தும் வித்தையை நன்றாக வெளி படுத்தி உள்ளீர்கள். அதிலும் துரை அழகம்மையைப் பிரியும் போது மாமர கிழை ஆடுவதும் கிளிகள் பறப்பதும் எத்தனையோ எண்ண அலைகளை என்னுள் படர வைத்தது. தற்கால முதியவர்களின் நிலையை இவ்வளவு தெளிவாய் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.