குமார சம்பவம் மஹா காவ்யம் – 2

இதனிடையில், தேவ லோக வாசிகள், தாரகாசுரனால் அதிக துன்பம் அனுபவித்தனர்.  வஜ்ரனகன் वज्रनखन्- என்பவனின் மகனான தாரகன் பலவானாக இருந்தான். அவனை எதிர்த்து நிற்கத் திறனின்றி அவர்கள் இந்திரனை முன்னிட்டுக் கொண்டு ப்ரும்மாவை சந்திக்கச் சென்றனர்.  

ப்ரும்மா அவர்கள் எதிரில் தோன்றினார். முகம் வாடி இருந்த தேவர்களைப் பார்த்தார்.  விடியற்காலையில் தாமரைக் குளத்தில் மலர்கள் தூங்குவது போல இருந்தது. அவரை அனைவரும் வணங்கினர்.  நான் முகனான அவர் வித்யைகளுக்கும்,வாக்குக்கும்  ஈசன்- தலைவன் என்பதால் வாகீசன் எனப்படுபவர்.  தாங்களும் பொருள் பொதிந்த சொற்களால் வேண்டினர். 

பகவானே! த்ரிமூர்த்தியான உங்களுக்கு நமஸ்காரம்.  முதன் முதலாக ஒரு முகமாக இருந்தவர். கேவலாத்மன்! முக்குணங்களையும் கொண்டு உலகை படைக்கவே சதுர்முகமானவர்.  பிரளய கால ஜலமே எங்கும் நிரம்பி இருந்த சமயம் நீங்கள் விதைகளை விதைத்தீர்கள். சராசரமும் தோன்றியது.  நாங்கள் தோன்றவும் தாங்களே காரணம். ஆயிரம் ஸூரியங்களின் ப்ரகாசத்தோடு ப்ரும்மாண்டம் உருக் கொள்ள காரணம் தாங்களே. 

முதலில் ஸ்ருஷ்டி மட்டுமே என்று இருந்தவர் பின்னால் தேவை அதிகரிக்கவும், ஹரி ஹர ப்ரும்மா என்ற மூவராக பிரிந்து உலகத்துக்கு நன்மை  செய்ய உங்கள் சக்தியை பகிர்ந்து கொண்டீர்கள்.  அதனால் பிறந்த உயிரினங்கள் வாழ்வும், பின் காலகதியடையவும் காரணம் நீங்களே. 

ப்ரும்மா தாம்பத்யம் என்பதை உண்டாக்கி, ப்ரஜைகளை பெருக்க வழி வகுத்ததை சொல்கின்றனர். 

தாங்களே பெண்ணாகவும், ஆணாகவும் பிரிந்து கொண்டு  தாம்பத்யம் என்ற முறை தோன்றவும், பின்னால், உலகில் பல விதமான உருவங்கள் தோன்றக் காரணமானவர்.  உங்களுடைய நோக்கமும் படைப்புத் தொழில் வளர வேண்டும் என்பதே. எனவே தான் உங்களை பெற்றோர்- தாயும் தந்தையுமானவர் என்கிறார்கள்.   பாகவதம் இரண்டாக பிரிந்த உருவத்தினரானார் என்று விளக்குகிறது.. 

காலத்தின் கணக்கும் உங்களைச் சார்ந்ததே என்பர்.  இரவு பகல் என்ற பிரிவினையும் சதுர் யுகம் – நான்கு யுகங்கள்,ஆயிரம் முறை கடந்த நேரம் -அது உங்களுக்கு பகல். அதன் பின் உங்கள் இரவு.  அந்த சமயம் ப்ரளயம் வரும். ப்ராணிகள் மூழ்கி மறைவர்.  இரவு முடிந்து அடுத்த பகல் அவை விழித்தெழும், அதாவது மறு படி பிறக்கும். இதையே ப்ராணிகளின் ஸ்ருஷ்டி காலம் என்பர்.

தாங்கள் அயோனி, பிறவி இல்லாதவர்.  ஜகத்தே உங்கள் பிறப்பிடம். ஜகத் மறையும். உங்களுக்கு அந்தம்-முடிவு இல்லை. ஜகத்தின் ஆதியானவர், ஆனால் தாங்களோ அனாதி- ஆதி அந்தம் அற்றவர்.   ஜகதீசன் -ஜகத்தை நிர்வஹிப்பவர், தாங்கள் நிரீசன்- உங்களுக்கு மேல் ஆணயிட மற்றொருவர் இல்லை.  உங்களை நீங்களே  நன்கு அறிந்தவர்.   தன்னையறிந்தவர்.  தன்னையே பலவிதமாக படைத்துக் கொள்கிறீர்கள்.- ஸ்ருஜஸ்யாத்மானம் ஆத்மனா  தன் செயல்களால் தனக்குள்ளேயே அடங்கி விடுவீர்கள். स्वे महिम्नि प्रतिष्ठितं –ஸ்வே மஹிம்னி ப்ரதிஷ்டித: – தன் திறமையால் உறுதியானவன்  என்று வேத வாக்யம்.

(वेत्सि आत्मानं आत्मना सृजस्यात्मानं आत्मना | आत्मना कृतिना च त्वमात्मन्येव प्रलीयसे ||  தன்னையறித்து கொண்டவன், தன்னையே படைத்துக் கொள்ளவும் உங்களால் முடியும், தன் செயல்களால் தாங்கள் தங்களூக்குள்ளேயே மறைந்து விடுவீர்கள்.  இது ஒரு தத்வம். கீதை மற்றும் தர்ம சாஸ்திரங்கள் இதை விவரிக்கின்றன. ).  காளிதாஸனின் வாக்கு.

ஹே பகவன்! திரவமாக, சிறு குளம் முதல் சமுத்திரம் வரை வியாபித்தவர். ரஸாத்மகர் – நீரின் குணம் ரஸம். கடினமாக பானை முதலிய ஜட வஸ்துக்களாக இருப்பவர் தாங்கள்.  வெளிப்படையாக  மனிதனின் புலன்களுக்கு தெரியும் படியான உருவமும்,  புலனாகாமல் உணர்ந்து கொள்ளும் படியான மறை பொருளாகவும்,  பரமாணுவாகவும் உள்ளவர்.  கைகளால் பந்தாடக் கூடிய அளவு எடையற்றவர்,  அதே சமயம் அசைக்கவே முடியாத இமய மலையும் உங்கள் ரூபமே. செயல்களில் உங்களைத் தெளிவாக காணவும் முடியும், கண்களுக்கு புலனாகாத காரணமாகவும் உள்ளவர் தாங்கள். அணிமாதி சித்திகளில் ‘ப்ராகாம்யம்’ என்பது உங்கள் அருளே.  (யோகம் கற்று பலவித சாதனைகளைச் செய்தால் சில சக்திகள், சாதாரண மனிதனால் இயலாத செயல்களைச் செய்ய இயலும் என்பர். தூரத்தில் இருப்பதைக் காண்பது, வருவதை முன் கூட்டியே அறிவது போன்ற சில திறமைகள் எட்டு என்று சொல்வர்)

உங்கள் முகத்திலிருந்து ப்ரணவம் வந்தது.  சொல்லும் பொருளும் அதிலிருந்து வந்தது. யாகம் முதலிய செயல்களுக்கு இவையே அடிப்படை.  யாகங்கள் செய்வதன்  பலன் சுவர்கம்.  வேதத்தில்  உச்சரிப்பு மிக கவனமாக கையாளப் படும். அந்த வாக்கு உங்கள் அருளே.  வேதமயமான உங்களுக்கு நமஸ்காரம்.

அடுத்து சாங்க்யம்- அறிவியல்,கணிதம் என்ற ஞான மூர்த்தியாக துதிக்கின்றனர். 

பகவானே! உங்களை ப்ரக்ருதி-இயற்கை  என்பர். புருஷார்தம் – என்ற பிறவிப் பலன் தருபவர். அந்த கொள்கையும் அதை தெளிவு படுத்துபவரும் தாங்களே. மறை பொருளாக எளிதில் உணர முடியாத தத்வமாகவும் இருப்பவர்.  அதனால் உங்களை புருஷன் என்பர்.  

உலகில் பிறந்த அனைவருக்கும் மூத்தவர். தேவர்களின் தேவன். பரம் – அப்பாற்பட்டது எனும் பொழுது அதற்கும் அப்பாற்பட்டவர்.  எட்ட முடியாது என்பவைகளையும் தாண்டி இருப்பவர்.  தட்சன், மரீசி முதலானவர்களை படைத்தவர். 

 நிரந்தரமாக இருப்பவர்.  யாகங்களில் பயன் படும் புரோடாசம் முதலிய பொருட்களும் நீங்களே.  அன்னமாக உணவாக யாகத்தில் பயன் படுவதும், அதே அன்னம் தோன்றக் காரணமும் நீங்களே.  உங்களை நேருக்கு நேர் காணவே சாதனைகள் செய்வர். உங்கள் அருளாலேயே அந்த தரிசனமும் இயலும்.  தியானமும் நீங்களே, தியானம் செய்விப்பவனும் நீங்களே. ( யாகத்தில் அக்னியில் போடும் முன் அன்னத்தை கையால் உருட்டி வைப்பது ஆமையின் வடிவத்தில் இருக்கும் -அதன் பெயர் தான் புரோடாசம்)

இப்படி அவர்கள் துதி செய்ததைக் கேட்டு, ப்ரும்மா, பதில் சொன்னார்.  மனப் பூர்வமான அவர்களின் துதியில் அவர் உண்மையான  நிலைமையை புரிந்து கொண்டார்.  சமாதானமாக நம்பிக்கை அளித்து பதில் சொன்னார். வாக்கின் நான்கு பிரிவுகள்,  நாதமாக அடி வயிற்றில் தோன்றுவது வாயிலிருந்து சொல்லாக வரும் வரை நான்கு நிலைகள் பரா,பஸ்யந்தீ, வைகரீ, மத்யமா என்பவை.  உயிர்களின் உடலில் வெளியில் கேட்க முடியாத ஒலி என்ற சப்தத்தின் தோற்றத்திலிருந்து வாயிலிருந்து வரும் சொல் அதற்கான பொருள் என்பவைகள் சொல்லுக்கு அதிபதி என்ற பொறுப்பில் இருப்பவர்.  இவர் அருளால் சொல்லைப் பெறுவதால் வாகீசன் எனப்படுபவர். வாக்கு- சொல் ஈசன் – அதற்கு தலைவன், பொறுப்பானவன்  என்பதால் அவர் சொன்ன பதில் முக்யத்வம் பெறுகிறது. 

பகவான் சொன்னார்:  உங்கள் வரவு நல்வரவாகுக- ஸ்வாகதம்.  நீங்கள் அனைவருமே ஆற்றல் உடையவர்கள், , திறமையுடன் உங்கள் பொறுப்பை நிர்வகிப்பவர்கள்.  அனைவரும் சேர்ந்து வந்திருப்பதில் வந்த காரணம் மிக முக்யமானது என்று அறிந்து கொண்டேன்.  அனைவருமே நீண்ட கைகளுடன் ஆரோக்யமாக உள்ளவர்கள்.   முழங்கால் வரை நீளமான கைகள் -அதுவே ஆற்றலை தரும் என்றார்.

குழந்தைகளே!  வழக்கமான உத்சாகம் எங்கே? பனி மூடிய நட்சத்திரங்கள் போல வாடிய முகத்துடன் வர என்ன காரணம் ? 

விருத்திரனை வதைத்த உயர்ந்த வஜ்ரம் என்பதை மறந்து விட்டீர்களா?  அதன் நுனி மழுங்கி விட்டதா? வருணனின் பாசம் எதிரியை நிலை குலைக்கச் செய்யும், அது எங்கே?  கருட மந்திரத்தால் கட்டுப்பட்ட சர்ப்பம் போல நீங்களும் செயலிழந்து போக என்ன காரணம்?

குபேரனுடைய மன:ஸல்யம் என்ற ஆயுதம், அவன் கைகளில் க3தை யம தண்டம் போல இருக்கும்.  அவனும் கிளைகள் உடைந்த மரம் போல நிற்கிறான்.  அதுவே ஏதோ சத்ருவிடம் தோற்று விட்டு வந்திருக்கிறான் என்பதைச் சொல்கிறது.  

யமன் ஏன் தரையில் கால்களால் கோலம் போட்டுக் கொண்டு நிற்கிறான். அவன் தண்டத்தின் சக்தி மறைந்து விட்டதா? அதுவும் அணைந்த நெருப்பு போல தன்  ஒளியையும் ஆற்றலையும் இழந்து விட்டதா?

ஆதித்யர்கள் பன்னிருவரும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? தபனம்-சுடுவது தான் அவர்கள் இயல்பு. படத்தில் வரைந்து வைத்தவர்கள் போல காணப் படுகிறார்கள். 

மருத் கணங்களுக்கு அவர்களுடைய வேகமே குணம்.  வேகமாக பெருகி அந்த நதி நீர் திடுமென தடைப்பட்டு, திரும்பி சுழித்துக் கொண்டு வருவது போலவும், அந்த தடையால் வேகத்தை இழந்த நதி போலவும் இந்த சப்த மருத் கணங்கள் இருக்கிறார்கள். 

பதினோரு ருத்ர கணங்களுக்கும் என்ன கஷ்டம்?  ஜடைகளும் மகுடங்களும் நழுவி விழுந்து விடும் போலவும், சந்திர கிரணம் எங்கோ தொங்கிக் கொண்டிருக்க முகம் வாடி இருக்கிறார்கள். அவர்கள் ஹூங்காரமே எதிரிகளை விரட்டுமே.   ருத்ரனின் படைகளுக்கு அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் ஹூங்காரமே – ஒலியே ஆயுதம்.

உங்கள் அனவருக்குமே நல்ல பதவி இருந்தது. பலவானாக மற்றவர்களுக்கு அபயம் அளிக்கும் நிலையில் இருந்தவர்கள். கையில் அஸ்திரம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் அடிக்கக் கூடாது என்ற நியமம் தன் புஜ பலத்தில் அதீத நம்பிக்கை வைத்து நிரபராதிகளை அடித்து விடக் கூடாது என்பதற்காக ஏற்பட்டது.  இது ஒரு எச்சரிக்கை மட்டுமே. இந்த நியமத்தை முன்னோடியாக வைத்து அழிக்க வேண்டிய சத்ருக்களையும் அடிக்காமல் விட்டு விட்டீர்களா. 

குழந்தைகளே, சொல்லுங்கள்.  என்ன கஷ்டம், எதை நாடி இங்கு வந்தீர்கள்?  என் வேலை படைத்தல். அதிலேயே என் கவனம், ஆற்றல் எல்லாம். என் படைப்பில் வந்த உயிரினங்களை சதா காப்பாற்றும் வேலையில் உங்களை நியமித்து இருந்தேன்.  அது தானே உங்கள் பொறுப்பும்.

வாஸவன் மெள்ளச் சொல்ல ஆரம்பித்தான். மந்தமாக அடித்த காற்றிலேயே வாடி விட்ட கமலம் போன்ற முகத்துடன், தன் ஆயிரம் கண்களால் குருவான ப்ரும்மாவைப் பார்த்து பதில் சொன்னான்.   பொதுவாக சஹஸ்ர நயனன் என்றாலும் வெளிப்படையாக அவை தெரியாது. மற்றும் மரியாதை நிமித்தமாகவும் குருவான வாசஸ்பதி, ப்ரும்மாவிடம் தன் இயல்பான இரு கண்களுடன் பேசினான்.  அவரும் ஜலஸாசனன்-  நீரில் மலரும் மலர், இங்கு தாமரை அதுவே அவர் அமரும் இடம்.  கை கூப்பி வணங்கியபடி அவரிடம்  தங்கள் கஷ்டத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.  

பகவானே! நீங்கள் சொன்னது சரியே. எங்களை பொறுப்பு கொடுத்து பதவிகளில் அமர்த்தினீர்கள். அவைகளை எதிரிகள் அபகரித்துக் கொண்டு விட்டனர்.  ஒவ்வொரு உயிரிலும் உங்கள் ஆத்மா உள்ளதே, எப்படி இது வரை நீங்கள் அறியாமல் இருந்தீர்கள்.  உங்களிடம் வரம் பெற்றவன் தான் தாரகன் என்ற அசுரன். மூவுலகையும் ஆட்டி வைக்கும் தூம கேதுவாக வளர்ந்து விட்டான்.  அவன் செய்யும் உபத்ரவம் தாங்க முடியவில்லை.

தாரகனிடம் பயந்து ஆதவனின் வெப்பம் கூட கமலங்கள் மலரத் தேவையான அளவே அவன் தாபம் வெளிப் படுகிறது.  கடோர கிரணன்- அவனுடைய கதிர்கள் கடுமையான வெப்பத்துடன் கூடியது என்று பெயர் தான். தற்சமயம் மந்தோஷ்ணம் – மிக குறைவாகவே அவனுடைய சக்தியை காட்டுகிறான்.

சந்திரனின் கலைகள் இப்பொழுது இல்லை. சதா சர்வ காலமும் அவன் தாரகனுக்கு அனுகூலமாக தேய் பிறை  என்பதையே விட்டு விட்டான்.  மகா தேவனின் தலையில் அலங்கரித்த சந்திர லேகா- சந்திரனின் கலை என்பதே இல்லை. 

உப வனங்களில் மலர்கள் உதிர்ந்து விழுந்து விடாமல் கவனமாக வாயு வீசுகிறான். தாள மரங்களின் பெரிய இலைகளை மட்டுமே அசைக்கிறான். விசிறி வீசுவது போல.

நதிகளின் அரசன்  சமுத்திரம். அவனுக்கு உபாயனம்-பரிசாக கொடுக்க ரத்தினங்களை உத்பத்தி செய்வதிலேயே முனைந்திருக்கிறது. சமுத்திர ராஜனுக்கு இதுவே கவலை.  முத்துக்கள் முழுமையாக வளர்ந்து பரிசுப் பொருளாக கொடுக்க தயாராக வேண்டுமே என்பதே.  

வாசுகி முதலானவர்கள், தங்கள் முடியில் உள்ள மணிகளால் இரவை பகலாக்கும் வண்ணம் ஒளி விட்டபடி நிற்கின்றன. அணையா விளக்கு, தூண்டவும் தேவையில்லை.

இந்திரன் தானே அவனுக்கு பணிவிடை செய்கிறான். -கற்பக மரத்தின் பொருட்களை அவன் கேட்ட போதெல்லாம்  அணிகலன்களோ, மற்றும் எந்த உயர்ந்த பொருளோ கொடுக்கத் தவறுவதே இல்லை. இவ்வளவு உபகாரங்கள் தேவர்கள் செய்த போதிலும் பதிலுக்கு அவன் அபகாரமாகவே தண்டிக்கிறான். அவன் செயல்களால் மூவுலகையும் வாட்டி எடுக்கிறான்.

நந்தன வனத்தில் புத்தம் புது தளிர்களுடன் இருக்கும் பூக்களையும், இளம் தளிர்களையும்  தேவ லோக பெண்கள் அலுங்காமல் பறிப்பார்கள். அதை கோடாலியால் வெட்டி சாய்க்கிறான். அவசியமே இன்றி இந்த தேவர்களை வேலை வாங்கவே அவர்களை இரவு முழுவதும் சாமரம் வீச வைக்கிறான். வந்திகள்- இந்திர சபையில் பாடும் பாடகர்கள், அவர்கள் கண்களில் நீருடனே பாடுகிறார்கள். 

மேரு மலை தன் மாளிகையை விட உயரமாக இருக்க பொறுக்காமல், அதன் சிகரத்தை உடைத்து தன் மாளிகைகளில் உத்யான வனங்களில் விளையாட்டுப் பொருளாக வைத்திருக்கிறான். மந்தாகினீ நதியில் திக் கஜங்கள் மூழ்கி விளையாடும். அதுவும் அவனுக்கு பொறுக்கவில்லை. மந்தாகினி நதியில் மட்டுமே மலரும் பொன் நிற கமலங்களை தன் வீட்டு கிணற்றில் போட்டு வைத்திருக்கிறான்.

தேவ லோக வாசிகள் பூ மண்டலத்தைச் சுற்ற விமானங்களில் செல்வதில்லை. அதனால் ப்ரபோ! நாங்கள் விரும்புவது இது தான். அவனை அடக்குங்கள். அது தான் எங்களுக்கு சாந்தியை, அமைதியைத் தரும். மோக்ஷம் வேண்டுபவர்கள், கர்ம பந்தனம் என்பதிலிருந்து விடுவிக்குக் சேனானீ, சேனைத் தலைவன் என்பவனை தாங்கள் படைக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுதல். 

தேவ சைன்யத்தை முன்னின்று நடத்த தகுதியான வீரன், சேனாபதி வேண்டும். எந்த அசுரன் எங்கள் குலங்களை அழிப்பதே நோக்கமாக எங்கள் வீரர்களை அபகரித்து, கட்டி வைத்து தானே வெற்றி வீரன் என்று கோஷமிடுகிறானே, அவனிடமிருந்து  வெற்றி என்ற ஜயலட்சுமியை மீட்டுத் தரவேண்டும். 

ப்ரும்மா பதில் சொன்னார். பொறுக்கி எடுத்த பதங்களால் அவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் நன்மைக்கான வாக்குறுதியை அளித்தார்.  மேகம் கர்ஜித்தபின் மழைத் தூறல் போல அந்த வாக்குறுதி தேவ சமூகத்தை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது.  உங்கள் விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும். சிறிது காலம் பொறுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு ஒரு ஸ்ருஷ்டி-படைப்புத் தொழிலை செய்ய வேண்டியுள்ளது. 

இந்த தைத்யாசுரன், தன் பாக்யத்தின் உச்சத்தில் இருக்கிறான், விஷமுள்ள மரமேயானாலும் ஏதோ காரணத்திற்காக தானே வளர்த்து விடப் பட்டது. உடனடியாக சாய்க்க முடியாது. வரம் கொடுத்தவனே நான் தானே. 

இந்த அசுரன் தவம் செய்து என்னிடம் என்னை யாரும் கொல்லக் கூடாது என்ற வரம் கேட்டான்.  நியமங்களுடன் ஒரே நினைவாக தவம் செய்தான். உலகமே  அதன் வெப்பத்தால் தவித்தது. அந்த சமயம் உலகையும் காக்க வேண்டும் அவன் தவம் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம்.  அதனால் சம்மதித்தேன்.  அதன் பின் தவம் செய்வதை விட்டு சாந்தமானான்.

தாரகனை யாராலும் அடக்க முடியாது . மகாதேவனின்  தேஜஸுடன் பிறக்கப் போகும் அவர் மகனால் தான் அவன் முடிவு வரும்.  முதன்மையான தேவர் அவருடைய  ஜோதிக்கு விஷ்ணுவோ, நானோ, நிகராக மாட்டோம்.  தமஸ் என்பதே இல்லாத சுத்த சத்வமான பரமாத்மா அவரே. அவரால் முடியாது என்பதே எதுவும் இல்லை. 

அவர் வம்சம் வளர என்ன செய்வோம் என்ற வினா எழ பதில் சொல்கிறார்.  உமா பனி  மலையின்- இமயத்தின்  பெண்ணாக வளருகிறாள். அவளை அவரிடம் சேர்ப்பிக்க முயற்சி செய்யுங்கள். மகாதேவரும் தவத்தில் ஆழ்ந்து இருக்கிறார். கட்டை போன்ற அசையாத நிலையில் அவரிடம் யாராலும் நெருங்க முடியாது.  உமாவை அவர் மனதில் ஈடுபாடு கொள்ளும்படி செய்யுங்கள். காந்தம் இரும்பை இழுப்பது போல இழுக்கச் செய்வது தான் ஒரே உபாயம்.   அவள் தான் அவர் மகனைத் தாங்க சக்தியுள்ளவள். ஜலமயமான அவளுடைய சக்தி தாங்கும்.

சிதிகண்டனுடைய ஆத்மா அவளிடம் பிறக்கட்டும். தேவ சேனாபதியாக பதவி ஏற்கட்டும். அசுரனால் சிறை வைக்கப் பட்ட  தேவ மகளிர்  மற்றும்  தேவர்களுக்கு உண்டான தளையை அறுத்து அனைவரையும் விடுவிப்பான். வருங்கால நன்மை அதில் தான் உள்ளது. இப்படிச் சொன்னவர் உடனே மறைந்து விட்டார்.

தேவர்கள் கூடிப் பேசி கந்தர்பன் என்ற காம தேவனை நினைத்தனர்.  பூக்களே அவன் ஆயுதம்.   பூக்கள் சுற்றிய அவனுடைய வில். அதனால் அவன் மலரை வில்லாக வைத்தவன் என்றே அழைக்கப் படுபவன். அந்த வில்லே அழகிய பெண்களின் புருவம் போல வளைந்து இருக்கும். அவன் மனைவி ரதி. அவள் கங்கணங்களே வில். தன் பரம மித்ரனான வசந்தனுடன் (வசந்த பருவ காலம்) மரத்தின் பூவை தன் வில்லில் வைத்துக் கொண்டு அருகில் வந்து நின்றான்.

(இது வரை ஸ்ரீ காளிதாசனின் குமார சம்பவம் என்ற காவ்யத்தின் ப்ரும்மா சாக்ஷாத்காரம் ब्रह्म साक्षात्कारम् – ப்ரும்மா நேரில் தோன்றுதல் என்ற இரண்டாவது அத்யாயம்)

(அடுத்த இதழில் அடுத்த அத்தியாயத்தைக் காண்போம்)

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம் குமார சம்பவம் மஹா காவ்யம் – 3

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.