வரிசையில் ஒரு சிநேகம்

ஆங்கில மூலம் – லிந்தோய் சானு

தமிழாக்கம்: எம் ஏ சுசீலா – [WARI தொகுப்பிலிருந்து]

Karel Appel (1921-2006)
Oiseau au-dessus de la mer noire, 1958

சகி, தேநீரை மெள்ளப் பருகிக் கொண்டிருந்தபோது எல்லோரும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான செய்தியுடன் அவளது தங்கை மகன் அவளிடம் ஓடிவந்தான்.

‘‘‘மபோக்’(பெரியம்மா)! என்.ஆர்.எல்.  பெட்ரோல் பம்பிலே இன்னிக்கு பெட்ரோல் சப்ளை பண்ணப் போறாங்கங்கிற நியூஸ் உண்மைதான்.  தயவு செய்து சீக்கிரமாப் போங்க’’

– மூச்சிரைத்தபடியே பேசினான் தினேஷ்.

‘‘நிஜமாவா? நம்ம பிரார்த்தனை கடவுளை எட்டியிருக்கும் போல….’’ என்றபடி சுவையான தேநீர்க் கோப்பையை அப்படியே தரையில் வைத்து விட்டுத் தன் அறைக்குள் ஓடினாள் சகி.  வினாடி நேரத்தில் மெல்லிய சந்தன வண்ண ‘எனாஃபி’யும் (பாவாடை போன்ற வடிவில் உள்ள ஒரு மணிப்புரி ஆடை)  ஆலிவ் பச்சை வண்ணத்தில் பருத்தி ‘ஃபனே’க்கும் (துப்பட்டா) அணிந்தபடி வெளியே வந்தாள்.  அவள் வருவதற்குள் அவளது ‘ஆக்டிவா’ வண்டியை சுத்தம் செய்து வைப்பதில் மும்முரமாக முனைந்திருந்தான் தினேஷ்.

‘‘பையா! இப்ப போய் அதை சுத்தம் செய்யணும்னு அவசியம் இல்லை.  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வேகமாப் போறதுதான் நல்லது’’ சகி தன் ‘ஆக்டிவா’வில் குதித்தேறியபடி அதை ஓட்டிச் சென்றாள்.  

சற்று முன் தன் பெரியம்மா ஓய்வாக அமர்ந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்தபடி அவள் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து விடக்கூடாதே என்று மனதுக்குள் தன்னிச்சையாக வேண்டிக்கொண்டிருந்தான் தினேஷ்.  இப்போது சில நாட்களாகவே அவள் நம்பிக்கை இழந்தவளாகத்தான் இருந்தாள்.  அவனது பெரியம்மாவின் மகள் அந்த  அதிகாலை நேரத்தில் இன்னும் எழுந்திருக்கவில்லை.  தொந்தரவான ஏதாவது ஒரு செய்தி வந்தால் அவள் கத்துவாள் என்பது அவனுக்குத் தெரியும் இறுதித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் பதட்டத்தோடு இருந்த அவள் இப்போது எதற்கெடுத்தாலும் எரிச்சல்பட்டுக்கொண்டிருந்தாள்.

தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கும் பந்தயக்கார்கள் விரைவது போலவே தானும் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள் சகி.  சாகச நாயகர்களின் மேலாடையைப் போல அவளது ‘எனாஃபி’யும் அவளுக்குப் பின்னால் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.  அவள் ‘கியூ’வைப் பார்த்தாள்.  மிகமிக நீளமான வரிசை அது.  ஆனால் அவள் வைத்திருந்த நம்பிக்கை, அந்தக் காட்சியைக் கூட மதிப்புக்குரியதாய் ஆக்கியிருந்தது. 

 இன்றோடு எரிபொருள் தீர்ந்து இரண்டு வாரங்களாகிவிட்டிருந்தது. நீண்ட வரிசை கட்டி நின்றிருந்த வாகனங்களுக்குப் பின்னால் தனது ‘ஆக்டிவா’வையும் நிறுத்தி வைத்து விட்டு சுற்று முற்றும் பார்த்தாள் அவள்.  வாகனங்களின் வரிசை எல்லையற்று நீண்டு கிடப்பது போல அவளுக்குத் தோன்றியது.  உண்மையில் எரிபொருள் வாயு நிரப்பும் ஒரு ‘பம்’புக்கு முன்னால் உள்ள வரிசையில்தான் அவள் நிற்க வேண்டும்.  ஆனால் இப்போது அவள் இருக்கும் இடத்திலிருந்து பத்து நிமிடப் பயணத்தில் அது இருந்தது.  இப்போதைக்கு சற்றுத் தள்ளி இருந்த ஒரு இராணுவ முகாமும், அதற்கும் அப்பால் சாலையில் இருந்த ஒரு மருத்துவமனையுமே அவள் கண்ணில் பட்டன.  ஆனால் அவற்றை ஊடுருவிக் கொண்டு செல்லும் இந்த வரிசை கண்ணுக்கெட்டாத ஏதோ ஒரு இலக்கு வரை நீண்டு கிடந்தது.  சற்றுத் தாமதமாகத் துயிலெழுபவர்களைப் பொறுத்த வரை அது என்னவோ சற்று அதிகாலை வேளைதான்.  சாலையில் கூட்டம் அதிகமில்லை.  நடைப்பயிற்சி முடித்துத் திரும்பும் சிலர் கையில் சிறுசிறு மளிகைச் சாமான் பொட்டலங்களோடு சென்று கொண்டிருந்தார்கள்.  வரிசையில் நின்றிருந்தவர்களைப் போல அவர்கள் பதட்டமாகவோ, கவலையாகவோ காணப்படவில்லை.  சகி, தன் ‘ஆக்டிவா’வின் மேல் உட்கார்ந்தபடி சுற்றுப்புறத்தை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள்.  சட்டென்று பின் பக்கம் ஏற்பட்ட ஒரு சிறிய குலுக்கலால் விழிப்புற்றவளாகத் திரும்பிப் பார்த்தாள்.

‘‘ஐயோ! ‘சாரி’ இச்சே!(அக்கா) உண்மையாவே ’சாரி’.  என்னோட வண்டியை இங்கே நிறுத்தி வைக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருந்தது.  அதுதான்’’ என்று ஒல்லியான ஒரு பெண்மணி அவளிடம் மன்னிப்புக் கோரினாள்.  சகியின் வாகனத்துக்குப் பின்னால் இருந்த தன் துருப்பிடித்த ‘மொபெ’டைத் தள்ளியபடி போராடிக் கொண்டிருந்தாள் அவள்.

‘‘பரவாயில்லை’’ என்றபடி அந்தப் பெண்ணை நோக்கிப் புன்னகை செய்தாள் சசி.

‘‘இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கும், இல்லியா’’ என்று கேட்டபடி களைப்போடு தன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்ட அந்தப் பெண் தங்களுக்கு முன்னால் முடிவற்று நீண்டு செல்லும் அந்த வரிசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘‘ஆமாம்! ஆனா ஏதோ கொஞ்சமாவது கொடுக்கிறாங்க இல்லே’’ என்றபடி திரும்பிப் பார்த்து அவளுடன் பேச்சைத் தொடர்ந்தாள் சகி.

‘‘அது சரிதான்! இன்னிக்கு டீசல் கொடுக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு நான் காஞ்சிப்பூரிலே இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.  வீட்டிலே என் பசங்க தூங்கிக்கிட்டிருக்காங்க’’ என்று கவலையோடு பேசினாள் அந்தப் பெண்.

‘‘காஞ்சிப்பூரா? ஆமாம்,  அது ரொம்ப தூரத்திலேதான் இருக்கு.  அங்கேயிருந்து இதை ஓட்டிக்கிட்டா நீங்க வந்தீங்க?’’

‘‘இல்லை…. ஏற்கனவே இது காலி.  தள்ளிக்கிட்டேதான் வந்தேன்’’

‘‘நிஜமாவா?’’ என்று ஆச்சரியத்துடன் வாயைப்பிளந்தாள் சகி.

‘‘எவ்வளவு நேரம் ஆச்சு’’ என்று மெதுவாகக் கேட்டாள்.

‘‘காலையிலே மூணு மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்னோட பெரிய பொண்ணு கிட்டே சின்னக் குழந்தைங்களைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வந்தேன்’’

‘‘ஓ… உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?’’

‘‘மூணு. இரண்டு பொண்ணு. ஒரு குட்டிப்பையன்’’ என்று சொல்லிவிட்டு சிநேகத்தோடு புன்னகை செய்தாள் அந்தப் பெண்.

‘‘ஓ… எனக்கு ஒரே ஒரு பொண்ணுதான்.  இப்ப பத்தாவது பெரிய பரீட்சைக்குத் தயார் செய்துக்கிட்டிருக்கா’’

‘‘சரிதான், உண்மையை சொல்லணும்னா, இத்தனை குழப்பங்களுக்கும் நடுவிலே பரீட்சை வேற நெருங்கிக்கிட்டிருக்கு’’ என்றபடி அந்த நீண்ட வரிசையின் மீது மீண்டும் பார்வையை செலுத்தினாள் அந்தப் பெண்.

‘‘நிஜம்தான்! ஒரு சுதந்திர தேசத்திலே அடிமைகளா வாழற மாதிரி….?’’

‘‘அது இருக்கட்டும், ஆமாம் உங்க பேர் என்ன இச்சே’’ என்று திடீரென்று கேட்டாள் அந்தப் பெண்.

‘‘சகி. உங்கபேரு….?’’

‘‘தபலேய். நீங்க எங்கே இருக்கீங்க இச்சே?’’

‘‘நௌவ்ரெம் தாங்க் மமாங்க் லெய்காய்லே இருக்கோம்.  உங்களுக்கு ‘குட் ஹார்ட்’ பள்ளிக்கூடம் தெரியுமா?’’

‘‘தெரியுமே, அதுக்குப் பக்கத்திலேயா?’’

‘‘ஆமாம், அந்த ஸ்கூல் கட்டிடத்தை ஒட்டி அடுத்ததா இருக்கிற தெருவிலேதான் நாங்க இருக்கோம்’’

‘‘ ‘தாமோ’(கணவர்)என்ன வேலை பார்க்கிறார்?’’ என்று தபலேய் இயல்பாகக் கேட்டாள்.

‘‘ஓ…. என்னோட வீட்டுக்காரரைப் பத்திக்கேக்கிறீங்களா? அவர் ஒரு தனியார் பள்ளிக் கூடத்திலே ஆசிரியரா இருந்தார்.  மூணு வருஷம் முன்னாடி இறந்து போயிட்டார்’’ என்று சர்வசாதாரணமாகப் பதிலளித்தாள் சகி.

‘‘ ‘ஐயையோ… ஏன் என்ன ஆச்சு?’’ என்று வருத்தமாகக் கேட்டாள் தபலேய்.

‘‘அந்த நாட்களிலே என்ன செய்யறதுன்னே தெரியாம நான் தவிச்சிக்கிட்டிருந்தேன்.  சுவாசிக்கிறது கஷ்டமா இருக்குன்னு முதல்லே சொன்னார்.  பள்ளிக் கூடத்திலே சாக்பீஸோடயே வேலை செய்யறதாலே இருக்கலாம்னு நான் நினைச்சுக்கிட்டிருந்தேன்.  அப்புறம் சில மாசங்களிலே அவரோட உடம்பு முழுசாவே பாதிக்கப்பட ஆரம்பிச்சிடுச்சு.  ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனோம்.  மூணே நாள் ஐசியூ…. அப்புறம் இறந்திட்டார்னு சொல்லிட்டாங்க.  எல்லாம் ரொம்ப வேகமா நடந்து முடிஞ்ச விஷயம்’’ தன் வாழ்க்கையின் வலிமிகுந்த தருணங்களை விரிவாக சொல்லிக் கொண்டிருந்தாள் சசி.  அவளது இறந்த கால சோகத்தோடு ஒப்பிடும்போது இந்த நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு நிற்பது கூடச் அற்பமானதாகத் தோன்றியது.  அவள் பேசுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டே இருபது முப்பது நிமிடங்களுக்கு ஒரு தரம் வாகனத்தை ஒரு அங்குலம் நகர்த்தி வைத்துக் கொண்டிருந்தாள் தபலேய்.  தன் கதையை சுருக்கமாக சொல்லி முடித்த சகி,

‘‘ஆமாம்…. உங்க வீட்டுக்காரர் என்ன செய்யறார்’’ 

என்று கேட்டாள்.

‘‘என்னோட வீட்டுக்காரர் டிரைவர் வேலை பார்க்கிறார் இச்சே.  இப்ப ஹைவேஸ்லே எல்லா வண்டியும் தடைப்பட்டு ‘ப்ளாக்’ ஆகி நிக்குது இல்லே? அதிலே ஏதாவது ஒரு வண்டியிலே அவரும் இருப்பார்.  அந்தப் பிரச்சினைகளையெல்லாம் எப்பதான் தீர்க்கப் போறாங்களோ’’ என்றாள் தபலேய்.

அவர்கள் இருவரும் தங்கள் வண்டிகளை மறுபடியும் சிறிது தூரம் முன்னகர்த்தி வைத்தார்கள்.

‘‘நீ சொல்றது சரிதான்! பதவி நாற்காலிகளிலே உட்கார்ந்திருக்கிற முட்டாள் பசங்களுக்கு நம்மளை மாதிரி உழைக்கிற ஜனங்களோட சிக்கல்கள் எப்பவுமே ஏற்பட்டதில்லையே, அவங்க இதெல்லாம் பார்த்து அனுபவிச்சிருந்தால்தானே’’ என்றவள் சாலையில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய விளம்பரத்தட்டி ஒன்றைக் கோபத்தோடு பார்த்தாள் சகி.

‘‘ ‘நகரோல் கி தெங்பேங்’ திட்டம்.  நம் எதிர்கால இளைஞர்களுக்காக’ மிகவும் சுத்தமான – விலையுயர்ந்த குர்த்தாக்களை அணிந்திருந்த சந்தோஷமான மனிதர்கள் அந்த விளம்பரத்தட்டியை நிறைந்திருந்தார்கள்.  குறிப்பிட்ட திட்டத்தை விட அந்தப் படங்களே அதில் மிகப்பெரிதாகப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.



வெயில் சற்று முதிர ஆரம்பித்திருந்தது.  சாலையில் கூட்டமும் அதிகரித்திருந்தது.

‘‘நான் என்ன செய்யப்போறேனோ தெரியலை இச்சே! எனக்கு மூணு குழந்தைங்க.  கடைசிப் பையன் இன்னும் கூட பச்சைக்குழந்தை.  என் நிலைமை ரொம்பக் கஷ்டமா இருக்கு.  நாத்தனார் மாமியார்னு யாராவது இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைச்சுப்பேன்.  ஆனா, எனக்கு யாருமே இல்லை’’

உள்ளங்கைகளில் தன் முகத்தைத் தாங்கிப் பிடித்தபடி இவ்வாறு எதையோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய்.

‘‘சரி….. உன் வீட்டுக்காரர் செய்யற  வேலையைத் தவிர வேற வருமானம் எதுவும் இருக்கா உங்களுக்கு? நீ எதுவும் வேலை பார்க்கிறியா?’’ என்று உள்ளார்ந்த அக்கறையோடு கேட்டாள் சசி.

‘‘ம்…. ஊறுகாய் விக்கிறேன்.  ஆனா இந்த ரோட்பிளாக் இருக்கிறதாலே போன சில வாரங்களா என்னாலே அந்த வேலையை செய்ய முடியலை.  ஊறுகாய் போடறதுக்கான சாமான்களும் பற்றாக்குறையா இருக்கு.  அப்பப்ப நான் ‘ஃபேனக்’ தைப்பேன்.  என்னோட கடைசிக் குழந்தை மட்டும் இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருந்தா ஏதாவது ஒழுங்கான ஒரு வேலையைத் தேடிக்கிட்டு இருந்திருப்பேன்’’

‘‘அது சரிதான், உங்க வீட்டுக்காரர் வேற வராததாலே உங்களுக்கு இப்ப கஷ்டமான சமயமாத்தான் இருக்கும்’’



தன் வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூட ஏதோ சொல்லிக் கொண்டே போனாள் தபலேய். இருவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிப் பகிர்ந்து கொண்டிருந்தனர். பின்னால் நீண்டு தொடர்ந்து போய்க் கொண்டிருந்த வாகன வரிசையின் மீதும் ஒரு கண் வைத்தபடியேதான் இருந்தாள் சகி.  இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடும் என்றே அவளுக்குத் தோன்றியது.

தபலேய் அவளது கதையைப் பேசிக்கொண்டே போக இடையே குறுக்கிட்டாள் சகி.

‘‘ஆமாம்…. காலைச் சாப்பாடு சாப்பிட்டியா….?’’

‘‘இன்னும் சாப்பிடலே இச்சே! நீங்க?’’

‘‘நான் ஒரு கப் டீ சாப்பிட்டேன்.  அது எப்பவோ ஜீரணமாகியிருக்கணும்.  இப்ப எனக்கு ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு’’ என்று ஏதாவது உணவுவிடுதி தென்படுகிறதா என்று சுற்று முற்றும் பார்த்தாள் சகி.

‘‘இச்சே! ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலே ஏதாவது ஹோட்டல்கள் இருக்கும்.  நீங்க போங்க.  நான் நம்ம ரெண்டு பேரோட வண்டிகளையும் பார்த்துக்கிறேன்.’’

‘‘ஆமாம்….. நீ சாப்பிடவேண்டாமா?’’ என்றாள் சகி.

‘‘எனக்கு நிஜமாவே பசியில்லை.  நல்லா இருக்கேன்.  வண்டியைப் பார்த்துக்கவும் ஆள் வேணுமில்லையா? நான் பார்த்துக்கறேன்.  நீங்க போய் ஏதாவது கொறிச்சிட்டு வாங்க” என்று பணிவுடன் சொல்லியபடி அவளைப் போகச் சொல்லி வற்பறுத்தினாள் தபலேய்.

‘‘அதனாலே பரவாயில்லையா…?’’ என்றபடி தன் ஆக்டிவாவை விட்டு வெளியே வந்தாள் சகி.

‘‘ஒண்ணும் இல்லை.  நீங்க போய் நல்லா சாப்பிட்டு வாங்க.  நாம இந்த இடத்திலேயே தான் இருக்கப்போறோம்’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்  தபலேய்.

‘‘சரி, அப்படீன்னா நான் வேகமாப் போயிட்டு வந்திடறேன்’’ என்று சிறிது தூரத்தில் தெரிந்த ஆஸ்பத்திரியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் சகி.  தனக்கு முன்னாலிருந்த வாகன வரிசைகளைத் தாண்டிக் கொண்டு போகும்போது இவ்வளவு பேருக்குப் பின்னால் தான் நிற்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொண்டாள்.

இறுதியாக ஒரு ஹோட்டலுக்குச் சென்று பலமான சிற்றுண்டியை வரவழைத்தாள்.  இரண்டு பூரி மசாலாக்களையும் பால் கலந்த சூடான தேநீரையும் விரைவாகக் காலி செய்துவிட்டுக் காசுகொடுக்கப் போன போதுதான் அவளுக்கு தபலேயின் நினைவு வந்தது, உடனே அவளுக்கும் ஒரு பொட்டலம் வாங்கிக் கொண்டாள்.

கையில் சூடான பார்சலுடன் திரும்பி வந்த சகி, அதை தபலேயிடம் தந்தபோது அவள் சற்று கூச்சத்தோடு புன்னகை செய்தாள்.

‘‘என்ன இச்சே இது…? உங்களுக்குக் கஷ்டம் கொடுத்திட்டேனோ? ஆனா.. ஒருவகையிலே சந்தோஷம்தான்.  ஆமாம், இது எவ்வளவு?’’

‘‘ஐயோ அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாதே, இதே மாதிரி இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு மதிய சாப்பாட்டைப் பத்தியும் நாம யோசிக்க வேண்டியதா இருக்கும்.  பாரு… நாம இன்னும் பாதிவழி கூடத் தாண்டலை”

“ஆமாம் இச்சே” என்று சொன்னபடி இச்சே வாங்கி வந்த சிற்றுண்டியை வாயில் திணித்துக் கொண்டாள் தபலேய். பிறகு அந்த இரண்டு பெண்களும் தங்கள் பேச்சைத் தொடர ஆரம்பித்து விட்டனர்.  இடையிடையே தாங்கள் சொல்லும் நகைச்சுவைகளுக்குத் தாங்களே சிரித்துக் கொண்டார்கள்.

சூரியன் உச்சிக்குப் போனபடி அந்த நீண்ட சாலையை இரக்கமேயின்றி அனல் பறக்கச் செய்து கொண்டிருந்தான்.  அதுவரை தங்கள் வாகனங்களில் அமர்ந்து கொண்டிருந்த பலரும் அருகிலிருந்த கட்டிட நிழல்களைத் தஞ்சமடைய ஓடிக்கொண்டிருந்தனர்.  சகியும் தபலேயும் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு – வாகன வரிசைக்குப் பின்னால் இருந்த விளம்பரத் தட்டி ஒன்றின் நிழலில் போய் நின்று கொண்டனர்.  அங்கே நின்றபடி அவர்களின் பேச்சு தொடர்ந்தது.  சகிக்குப் பகிர்ந்து கொள்ள நிறையக் கவலைகள் இருந்தன; வீட்டில் அவற்றைக் கேட்க எவருமில்லை.  இப்போதோ ஒருத்தி அவற்றை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.  இதுவரை இப்படிப்பட்ட நெஞ்சை உருக்கும் கதைகளைக் கேட்க தபலேய்க்குப் பொழுதே இருந்ததில்லை.  இப்போதோ அவளிடம் அதற்கான நேரம்  எக்கச்சக்கமாக  இருக்கிறது.  கொஞ்சம் முன்னால் நகர்ந்தாக வேண்டுமென்றால் அவ்வப்போதாவது அவர்கள் வரிசையில் வந்து நிற்க வேண்டியதாக இருந்தது.  தாங்கள் சென்று அடைய வேண்டிய இடத்துக்குச் சற்றுப் பக்கத்தில் வந்து விட்டதால் ஒருவருக்கொருவர் தங்கள் கதைகளைப் பரிமாறிக் கொள்வது அவர்களுக்கு சற்று தெம்பாக-ஆறுதலளிப்பதாக இருந்தது.

சகி, அங்கிருந்த மற்றவர்களை அதிகம் கவனிக்கவில்லை.

மதியச் சாப்பாட்டுக்குரிய நேரம் வந்துவிட்டதால் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் சற்று பதட்டப்படத் தொடங்கியிருந்தனர்.  சகி தன் சின்னஞ்சிறு கைபேசியை வெளியில் எடுத்தபடி 

“தபலேய்! நாம ரெண்டு பேரும் பேச்சில் மூழ்கிப் போய் இரண்டு பேரும் மறந்துட்டோம்.  நான் இப்ப என்னோட தங்கச்சி பையனைக் கூப்பிட்டு சாப்பாடு கொண்டுவரச் சொல்லப்போறேன்.  உனக்கும் அவனையே கொண்டு வரச்சொல்லிடறேன்.”

“ஐயையோ இச்சே…. வேண்டாம்! நான் பணம் கொண்டு வந்திருக்கேன்.  தெருவிலே விக்கிற எதையாவது வாங்கி சாப்பிட்டுக்குவேன்.  ஏற்கனவே நீங்க எனக்கு காலை டிஃபன் வேற வாங்கிக் கொடுத்திருக்கீங்க”

“இதோ பாரு! எனக்கு இங்கே தனியா சாப்பிடப் பிடிக்கலை.  வரிசையைப் பாரு!… நிக்கிற ஒவ்வொருத்தரும் வீட்டுக்குப் போய்ட்டுத் தங்களுக்குப் பதிலா வேற ஆளை வரச் சொல்லி நிறுத்தி வைக்கிறாங்க.   எனக்கு அப்படி நிறுத்தி வைக்க யாரும் இல்லை.  ஆனா வீட்டிலே இருந்து சாப்பாடு எடுத்துக்கிட்டு வர என்னோட தங்கச்சி  பையன் கட்டாயம் ஒத்துக்குவான்.  இன்னிக்கு ஒரு வேளை அவ வீட்டுக்கு வருவாளோன்னு நினைச்சு சோறு கொஞ்சம் கூடவே வச்சிட்டு வந்திருக்கேன் நான்.  அதனாலே எந்தப் பிரச்சினையுமே இல்லை.  நாம இப்படி சந்திச்சுக்கிட்டது விதியாலே முடிவு செய்யப்பட்ட மாதிரி இருக்கு எனக்கு”

“சரி இச்சே….! நீங்க ரொம்பப் பாசமா இருக்கீங்க. இன்னிக்கு நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்” என்றபடி புன்னகைத்தாள் தபலேய்.

“ஆமாம்! இப்படி வெயில்லே வறுபடணும்னு நாம ரெண்டுபேரும் இன்னிக்குக் கொடுத்து வச்சிருக்கோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி கைபேசியில் தன் மருமகனை அழைத்தாள் சகி.

இரண்டு முறை அழைத்தபின் 

“என்ன மாபோக்” என்ற பதில் வந்தது.

“பையா, பேமா படிக்கிறாளா இல்லையா” என்று கவலையோடு அவனிடம் கேட்டாள் சகி.

“ஆமாம்! இன்னிக்குக் காலையிலே முழுசும் படிச்சா மதியம் சாப்பிட்ட பின்னாலே ஒரு தூக்கம் போடப் போயிட்டா.  ஆமாம்….. நீங்க பெட்ரோல் பம்ப் பக்கத்திலே போயிட்டீங்களா இல்லையா?” என்று பரபரப்போடு கேட்டான் தினேஷ்.

“ம்ஹூம்…. இல்லவே இல்லை.  எனக்கு முன்னாலே இன்னும் அம்பது வண்டி நிக்குது” என்று அலுப்போடு சொன்ன சகி, பிறகு அன்போடு புன்னகைத்தபடி அவனிடம் பேசினாள்.

“அது எப்படியோ…. போகட்டும் போ.  நீ உன் பெரியம்மா பொண்ணை இன்னிக்கு நல்லா கவனிச்சிக்கிறேங்கிறதே நிஜத்திலே எனக்கு சந்தோஷமா இருக்கு.  நீ ஆசைப்பட்ட  அந்தச் சின்ன மியூசிக் சாமானைக் கட்டாயம் உனக்கு நான் வாங்கித் தருவேன்.  அப்புறம்… இப்ப நான் உன்னைக் கூப்பிட்டது வேறொரு உதவிக்காக…”

“வரிசையிலே ஆள் மாத்தி நிக்கிறதுக்காகவா….?”

“இல்லே இல்லே….. எனக்கு இங்கே பொழுது நல்லாதான் போயிக்கிட்டிருக்கு.  எனக்கு சாப்பாடு மட்டும் கொண்டு வந்து கொடு போதும்! இரண்டு பேருக்கு வேணும்”

“ரெண்டு பேரா? இன்னொண்ணு யாரு மாபோக்?”

“நீ கொண்டு வா சொல்றேன்…. சாப்பாடு அந்த அளவுக்கு இருக்கும்னுதான் நினைக்கிறேன்.”

“ம்! நிறையவே இருக்கு.  ராத்திரிக்கும் சேர்த்து நீங்க சமைச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்.  ஆமாம்… அங்கே அப்படி என்ன சந்தோஷமான பொழுதுபோக்கு உங்களுக்கு இப்ப…?” என்று சாதாரணமாகக்கேட்டான் தினேஷ்.

“இதோபாரு…. நான் சும்மா ஏதோ ஜோக்கடிச்சேன், இப்ப நான் சொன்னதை செய்.  ரொம்ப நேரம் ஆக்கிடாதே சீக்கிரம் வா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சகி.

மருமகன் தன்னிடம் கேட்டதை தபலேயுடன் அவள் பகிர்ந்து கொள்ள இருவரும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.  சகியின் குடும்பம், அவளது வக்கீல் சகோதரி, சகோதரியின் மகள், மகன் தினேஷ் என்று அவர்களது பேச்சு அந்தத் திசையில் செய்ய ஆரம்பித்திருந்தது.

பத்து நிமிடம் கழித்து சாப்பாடும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு தன் ‘ஸ்போர்ட்ஸ்’ சைக்கிளில் அங்கே வந்து சேர்ந்தான் தினேஷ்.

“மாபோக்! பேமா எழுந்தாச்சு… நீங்க சீக்கரம் வந்திடுவீங்கன்னு அவகிட்டே நான் சொன்னேன்” என்றபடியே அங்கே நின்ற நீண்ட வரிசையைப் பார்த்தபடி புன்னகைத்தான் தினேஷ்.

“நான் நினைச்சது தப்பு போல இருக்கு”

“ஆனா…. இன்னிக்கு சாயங்காலம் இருட்டறதுக்குள்ளே எங்களாலே அங்கே போக முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.  அவளைக் கஷாயத்தை சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லு.  ரொம்பப் படிச்சா பைத்தியம் பிடிச்சுப் போயிடுவா” 

-இவ்வாறு பேசியபடியே அவன் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்ட சகி, அதிலிருந்த ஒவ்வொன்றையும் பிரிக்க ஆரம்பித்தாள்.

“ஐயோ… சூடா இருந்திருந்தா குழம்பு இன்னும் கூட நல்லா இருக்கும்.  எப்படியோ நான் செஞ்சிருக்கிற வறுவல் பிரமாதமா இருக்கும் பாரு” என்றபடி தன்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்த தபலேயிடம் பாத்திரத்தைத் தந்தாள்.  தினேஷ் அப்போதுதான் முன்பின் அறிமுகமில்லாத அந்த நபரைப் பார்த்தான்.  அது தன் பெரியம்மாவின் நெருங்கிய தோழியாக இருக்கக் கூடுமென்று அவனாகவே நினைத்துக் கொண்டான்.  சள்ளை பிடித்த அந்த வேலையையும் கூட பொறுத்துக்கொண்டபடி அவள் சந்தோஷமாக இருப்பது அவனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

“மாபோக்….. அப்ப நான் வீட்டுக்குக் கிளம்பறேன்.  அம்மா அஞ்சுமணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்திடறேன்னு சொல்லியிருக்காங்க.  அது வரைக்கும் நீங்க இங்கேயே மாட்டிக்கிட்டிருந்தா நான் வேணும்னா உங்களுக்குப் பதிலா வந்து நின்னுக்கறேன்” என்றான் தினேஷ்…

“நல்லது…. ரொம்ப சந்தோஷம் பையா… பத்திரமா பார்த்துப்போ”  இணக்கமான சுபாவம் கொண்ட தன் மருமகனை அனுப்பி வைத்துவிட்டு தபலேயின் பக்கம் கவனத்தை மீண்டும் திருப்பினாள் சகி.  அந்தப் பெண்மணி சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“உங்க குழம்பு அவ்வளவு நல்லா இருக்கு இச்சே.  வறுவலுமே நல்லாதான் இருக்கு.  ’கோலம்னி’யைப் (மணிப்பூர் பகுதியில் கிடைக்கும் மருத்துவ குணமுள்ள ஒரு கீரை வகை) பொரியல் செஞ்சா இவ்வளவு நல்லா இருக்கும்னு எனக்கு இது வரைக்கும் தெரியவே தெரியாது”

 “ம்….! அது நானா யோசிச்சு சொந்தமா செஞ்சதாக்கும்” என்று மனம் விட்டுச் சிரித்துக்கொண்டே சொன்னாள் சகி.  “ம்.., நானே என்னைப் பத்திப் பெருமை அடிச்சுக்கறேன்”

தபலேயும் அதைக் கேட்டு சிரித்தாள்.  ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் எவர்சில்வர் ஸ்பூன்கள் ஓசையிட்டுக்கொண்டிருக்க, இருவரும் தங்கள் தங்கள் பாத்திரங்களிலிருந்து உணவைச் சாப்பிட்டபடி இருந்தனர்.

நேரம் கழித்து சாப்பிட்டதால், சத்தமும் சந்தடியும் நிறைந்திருந்த அந்தச் சாலையிலும் கூட சகிக்குத் தூக்கம் செருகிக் கொண்டு வந்தது.  தனக்கும் அவ்வாறே இருப்பதாகச் சொன்னாள் தபலேய்.  தற்செயலாக நடந்த அவர்களது சந்திப்பு – ஏதோ வெகுநாள் கழித்து ஒருவரையொருவர் மீண்டும் சந்தித்துக் கொண்டது போலத் தோன்றியதால் வரிசையில் நின்றிருந்த மற்றவர்களுக்கு அவர்கள் இருவர் மீதும் பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.  அவர்களிடையே நிலவிய சகோதரபாவம் அப்படி இருந்தது.  ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் தாங்கள் கதையைப் பகிர்ந்து கொண்டார்கள்.  மற்றவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்டு உள் வாங்கிக் கொண்டார்கள்.  தாங்கள் சொல்லிக் கொள்ளும் சின்னச்சின்ன ஜோக்குகளுக்கெல்லாம் மனம் விட்டுச்சிரித்தார்கள்.

வானம் இலேசாக இருட்டிக் கொண்டு வந்தபோது அவர்களுக்கு முன்னால் ஏழு வகானங்கள் மட்டுமே பாக்கி இருந்தன.  பேராசையோடு தன் ஆக்டிவாவைப் பிடித்துத் தள்ளியபடியே தனக்குப் பின்னால், நின்றிருந்த தபலேயையும் திரும்பிப் பார்த்தாள் சகி.  அவர்கள் தங்களுக்குள் ஒரு புன்னகைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்; இறுதியில் ஒரு வழியாக அவர்கள் தங்கள் இலக்கை எட்டி விடும் நிலையில் இருந்தார்கள். தெரு விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக எரியத் தொடங்கியிருந்தன.  வீடுகளிலும் கடைகளிலும் இருந்த விளக்குகளும் மின்ன ஆரம்பித்தன. கையில் ‘ஹோ’ஸைப் பிடித்தபடி வியர்க்க விறுவிறுக்க பெட்ரோல் பம்பில் நின்றபடி தாகம் கொண்ட வாகனங்களுக்கெல்லாம் எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த பணியாளை நேருக்கு நேராகப் பார்த்தாள் சசி.  இருவர் செல்லக் கூடிய தன் வாகனத்தின் இருக்கையை மேலே தூக்கி பெட்ரோல் டேங்கின் மூடியைத் திறந்தாள்.  அது காலியாக வெறிச்சோடிக் கிடப்பதை அவளால் பார்க்க முடிந்தது.  இப்போது அவளால் அதில் கொஞ்சம் எரிபொருள் நிரப்ப முடிந்துவிடும்; அதன் பிறகு அவள் உலகம் முன்பு போல சுழல ஆரம்பித்து விடும்.  அவள் தன் வாகனத்தை முன்னோக்கித் தள்ளினாள்.  வண்டியின் பெட்ரோல் பேங்கிற்குள் ‘ஹோ’ஸின் முனை செருகப்பட்டபோது அவளிடமிருந்து ஒரு சந்தோஷப் பெருமூச்சு எழுந்தது.  உள்ளே எரிபொருள் சுழன்று விழும் ’விர்’ரென்ற சத்தம், பெட்ரோலின் மணம், அதை ஊற்றியபடியே மீட்டரைப் பார்த்துக் கொண்டிருந்த வியர்வை படிந்த பணியாளனின் முகம் என்று எல்லாமே அவளுக்கு சந்தோஷமளிப்பதாக இருந்தன.  

பணத்தைக் கொடுத்துவிட்டு வாகனத்தைக் கிளப்பினாள் அவள்.  அதுவும் உற்சாகமாக உறுமியது.

தபலேய் தன் வண்டியில் பெட்ரோல் நிரப்பிக் கொள்வதற்கு வசதியாக – எதிர்முனையில் தன் வண்டியை நிறுத்தியபடி மலர்ந்த முகத்தோடு அவளைத் திரும்பிப் பார்த்தாள் சகி.  ஆனால் தபலேயிடமிருந்து அவளுக்கு எந்த எதிர்வினையும் கிடைக்கவில்லை.  கண்ணீர் நிரம்பிய கண்களோடு துருப்பிடித்த தன் வண்டிக்குப் பக்கத்தில் அவள் நின்றுகொண்டிருந்தாள்; அவளை ஒட்டி மற்றவர்களும் கூட்டமாகச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.

“பெட்ரோல் அவ்வளவுதான், தீர்ந்து போச்சு, இனிமே,அடுத்த தரம் வரும்போதுதான்‘சாரி’ “என்றான் பெட்ரோல் பம்ப் பணியாள்.

சகி, தன் வாகனத்தை ஒட்டியபடி தபலேயின் அருகே செல்ல முயன்றாள்.  ஆனால் அதற்குள் பெட்ரோல் பம்பில் பயங்கரமான கூச்சலும், குழப்பமும் நிலவ ஆரம்பித்திருந்தது.  முழுநாளும் அங்கே காத்து நின்றிருந்துவிட்டு வெறுங்கையோடு வீட்டுக்குச் செல்ல நேர்ந்ததில் மக்கள் எரிச்சல் அடைந்திருந்தனர்.  கோபாவேசத்தோடு கூடியிருந்த அந்த மக்கள் திரளுக்கு நடுவே தபலேயை அவளால் பார்க்க முடியவில்லை.  எங்கும் ஒரே குழப்பம். நேரமும் ஆகிவிட்டிருந்தது.  

சகி, வீட்டை நோக்கித் தன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள். தபலேயை மறுபடி ஒரு முறை சந்திப்பது இனிமேல் தனக்கு சாத்தியமாகப் போவதில்லை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.

அடிக்குறிப்பு

முழுக்க முழுக்க நிலத்தால் மட்டுமே சூழப்பட்டிருக்கும் மணிப்பூருக்கு தேசிய நெடுஞ்சாலைகள் வழியே டிரக்குகள் மூலம்தான் அத்தியாவசியப் பொருட்கள் வந்து சேர்வது பழக்கம்.  ‘ப்ளாக்கேட்’ எனப்படும் சாலை மறியல், அங்கே வழக்கமாக நடந்தேறும் ஒன்று.  வெவ்வேறு அமைப்புக்களும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்காக மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம் நடத்தும்போது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு விடும்.  சில வேளைகளில் இத்தகைய தடைகள் மூன்று நான்கு மாதங்கள் வரையிலும் கூட நீளுவதுண்டு.  இப்படிப்பட்ட வழித்தடைகள் நேரும்போது கடைகளிலும், சந்தைப் பகுதிகளிலும் இருக்கும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதால் அவற்றின் விலை கறுப்புச் சந்தையில் மிக மிகக் கூடுதலாக இருக்கும்.  இத்தகைய சாலைத் தடுப்பின்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஏதாவது ஒரு பெட்ரோல் பம்பின் முன்னால் வரிசை கட்டி நின்று கொண்டிருப்பதும், வரிசையில் முந்த வேண்டும் என்பதற்காக மனிதர்கள் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடப்பதும் மணிப்பூரில் வாடிக்கை.  அத்தகைய ஒரு காட்சியே இந்தச் சிறுகதையின் பின்புலம்.

தமிழில் இந்திய இலக்கியம்

வேட்டை நாய் குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “வரிசையில் ஒரு சிநேகம்”

  1. லிந்தோய் சானுவின் கதைகளும், அவர் கதை கூறும் முறையும், அவரது மொழியும் வாசிக்க சுவையாக இருக்கின்றது. செம்மையாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பால் ஈர்க்கப்பட்டு இந்த நூலை வாங்கி வாசித்தோம்.

Leave a Reply to நிர்மல்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.