நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்

அம்மாவும்,பெண்ணும் விடைபெற்றுப் போன பிறகு,அவனால்  அங்கு அதிக நேரம் உட்கார முடியவில்லை.வெளித் தோற்றம் அமைதியாக இருப்பவனைப் போலக் காட்டினாலும்,அவன் மன அமைதியை இழந்திருந்தான். ஒரு சமாதானமான  பதிலைக் கூட அவனால் அவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே.

“மாவட்ட அதிகாரிக்கு அனுப்பி ரிப்போர்ட்டைப் பெறவேண்டும். முதலமைச்சரை தலைமையாகக் கொண்ட குழுவிற்கு அது  சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  பிறகு, நிதித்துறையின் சம்மதத்திற்கு…”

ஐயோ! தன்னைப் பற்றியே வெட்கப்படுமளவிற்கு பேசத்தான்  அவனால் முடியும்.

    “இல்லை, அது முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு வேளை கை கூடினால் கூட மிகத் தாமதம் ஏற்படும்.”

      ஏன் அவனால் இப்படி வெளிப்படையாகப் பேசமுடியவில்லை? அதற்கு பதிலாக, நம்பிக்கை தருவது போலச் சுற்றி வளைத்துப்  பேசுவது, எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்வது ,பிறகு பிரச்னைகளை ஏற்படுத்தித் தேவையற்ற வகையில் அவர்களைத் துன்புறுத்துவது… அரசின் இயல்பான செயல்பாடு இதுதானே ? எப்படி அவனால் மட்டும் அந்தக் வழக்கங்களை மீறமுடியும்?

      “முரளி, உனது உதவாக்கரை அரசும்,அதன் அழுகிய சட்டங்களும்! நானும்,எனது குடும்பமும் உன் அரசு தரும் அந்தப் பயனற்ற பென்ஷனில்தான் பிழைக்கப் போகிறோம் போ!” கோபி அங்கிருந்தால் இப்படித்தான் எதிர்ப்பேச்சு பேசியிருப்பான்.ஆனால் அவன் இல்லை.  அவன் இருந்திருந்தால் அவன் மனைவியும்,மகளும் விண்ணப்பத்துடன் இங்கு  வந்திருக்க மாட்டார்கள்.

       “ரமா, இன்று நான் சீக்கிரம் கிளம்புகிறேன். இது,பொருளாதார ரீதியில் பின் தங்கிய பத்திரிக்கையாளர் குடும்பத்திற்குக் கிடைக்க  வேண்டிய பென்ஷன் விண்ணப்பம். நாளைக் காலை இதை நான் தாக்கல் செய்ய விரும்புகிறேன்.”

         “நிதி குறைவு என்பதால் இந்த வருடம் புதிய விண்ணப்பங்களை  ஏற்கக் கூடாது  என்று ஓர் ஆணை  வந்திருக்கிறதல்லவா?” அவள்  அந்த விண்ணப்பத்தைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.

        “அந்த ஆணையையும், வரவு செலவையும் விட்டு விடுங்கள். எனக்கு அந்த கோப்பு நாளையே வேண்டும்..” என்றான்

         அவள் அறையை விட்டுப் போன பிறகு அவன் நாற்காலியில்  சாய்ந்து  உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டான்.

         அவனுக்கு இன்னும் தலையில் முடி நரைக்கத்  தொடங்கியிருக்க்கவில்லை.முகம் சோகத்தால் வாடியிருந்தது. உடல்  மெலிந்திருந்தது. கோபியின் மனைவிக்கு எவ்வளவு வயதிருக்கும்? கால தாமதமான திருமணம் அவனுடையது. மகளுக்கும் பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கும்,கடவுளே! இந்தச் சிறிய வயதில்…

“சார், கோப்புகள் எல்லாம் காரில் இருக்கின்றன. டிரைவர்  தயாராக இருக்கிறார்.” என்று அவனுடைய அந்தரங்கச் செயலாளர்  ஞாபகப்படுத்தினார்.

  அவன் வெளியே வந்தான். மதிய வெய்யிலில் நகரத்தின்  தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. அவனுக்குள் ஒரு குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.

          கோபியின் மனைவியிடமும், மகளிடமும் தனிப்பட்ட  விருப்பத்தோடோ அல்லது நட்பின் நெருக்கத்தோடோ அவன் பேசவில்லை.சிறுமியிடம் பேரைக் கூடக் கேட்கவில்லை. விண்ணப்பத்தில் தாயின் பெயரிருந்தது. அவர்கள் கடும் பண  நெருக்கடியில் இருக்கவேண்டும். இல்லையெனில், அவர்கள் இந்த  விண்ணப்பத்தோடு இங்கே வந்திருக்க மாட்டார்கள். எனினும்,  அவர்களிடம் மற்ற விஷயங்களை ,குழந்தை பற்றி, அவள் படிப்பு பற்றி அவன் கேட்டிருக்க வேண்டும். அந்த வகையான மரியாதையையாவது அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்களா?  அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின்  செயல்பாடுகளில்  அப்படி ஓர் எதிர்பார்ப்பு இருந்ததாக வெளிப்படையாகத்  தெரியவில்லை. ஏதாவது வேண்டுகோளை முன் வைத்து ஓர் அரசு  அதிகாரியைச் சந்திக்க வரும் பல ஏழை மக்களின் கண்கள் ஒருவித  ஆதரவற்ற, பணிவான  பார்வையைக் கொண்டிருப்பதை அவன்  பலமுறை கவனித்திருக்கிறான்.அதைத்தான் அவன் இவர்களிடமும்  பார்த்தான். அவர்களின் சந்திப்பு  ஒரு சில கணங்கள்தான். சில  வார்த்தைகளிலான அறிமுகத்திற்குப்  பின்னால்,அவள் விண்ணப்பத்தை   அவனிடம் தந்தாள்.மௌனம் நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. அவன் அதைப்  பார்த்துக் கொண்டிருந்த போதே ,தங்கள் சந்திப்பு  முடிந்ததற்கான நேரம் என்று நினைத்து அவர்கள் புறப்பட எழுந்தனர். விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த மனிதரின் தோற்றம் படிப்படியாக  அவனுக்குள் எழுந்து ஒரு தெளிவை ஏற்படுத்தியது. தாயின்  பின்னால் நின்ற அந்தச் சிறுமியின் முகத்தை மீண்டும் பார்த்த  போது அவனுக்கு திடீரென்று நினைவுக்கு வந்தது : ஆமாம்,கோபி,  அதே முகம், கருவளையம் சுற்றிய அந்தப் பெரிய  கண்கள், அவன் அந்த விண்ணப்பத்தை  மீண்டும் பார்த்தான்.விண்ணப்பதாரரின்  பெயர் கே.வி.சுசீலா, பத்திரிக்கையாளர் கோபியின் விதவை  மனைவி என்றிருந்தது.

  விண்ணப்பத்தைப்  படித்து விட்டு அவன் நிமிர்ந்த போது, அவர்கள் அறையை விட்டு வெளியேறும் வகையில் கதவைப்  பாதி திறந்து நின்றனர். அந்தச் சிறுமி அவனைக் கலக்கத்தோடும், சோகத்தோடுமான உணர்வில் திரும்பிப் பார்த்தாள்.அந்தப் பரிதாபமான கண்களைப் பார்த்த பிறகும் கூட அவனால் ஒரு  வார்த்தை கூடச் சொல்ல முடியவில்லை. என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.அவனுடைய தவிப்பும், வருத்தமும் மேலும் அவனைத் தொந்தரவிற்குள்ளாக்கியது. கடைசியில் அவன்  எழுந்து நின்று மன்னிப்புக் கேட்கும் நிலையில் “திருமதி. நாயர்,  இதற்கான முறைகள்..”

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல்,வெறுமையாக  அந்தப் பெண்மணி அவன் சொல்வதைக் கேட்டாள். விண்ணப்பதாரரை வருத்தப்படுத்தாமல், விண்ணப்பம் வரவு செலவாண்டில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், வழக்கமான அரசாங்க மொழியில் சுற்றி வளைத்துப் பேசினான்.  எல்லாவற்றையும் கேட்ட பிறகு,“எனக்குத் தெரியும். நான் கிராம மற்றும் தாசில்தார் அலுவலகங்களுக்குப் போன போது என்னால்  இதை உணரமுடிந்தது.ஆனால் எல்லோரும் என்னிடம் சொன்னது  உங்களை அணுகினால் நீங்கள் நல்ல மனதோடு எனக்கு உதவி  செய்வீர்கள் என்பதுதான்.நாங்கள் அதை நம்புகிறோம்.உங்களைச்  சந்தித்துப் பேசியதே எங்களுக்குப் பெரிய நிம்மதி,” என்று அவள்  சொன்னாள்.

அவர்கள் போய்விட்டனர்.  அரையாக மூடப்பட்ட அந்த  பச்சை நிறக் கதவின் கீரிச்சொலி அவனது உள் மனதில் எங்கோ  ஓர் அதிர்வை ஏற்படுத்தியது.

“எல்லோரும் சொன்னார்கள்.நீங்கள்  நல்ல மனதோடு உதவி  செய்வீர்கள்”….

கோபி தன்னைப் பற்றி அவர்களிடம் ஏதாவது சொல்லி இருப்பானோ என்று நினைத்தான்.சொல்லாமலும் இருந்திருக்கலாம். அவன் சொல்லியிருந்தால், அவள் அப்படிப் பேசியிருக்க மாட்டாள். அவள் வார்த்தைகளில் நெருக்கமோ அல்லது அறிந்தது மாதிரியான  சாயலோ இல்லை.கோபி அப்படியான மனிதனில்லை.அவனுடைய  வகுப்புத் தோழர்கள்,உடன் வேலை செய்தவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு பதவிகளில் இருப்பவர்கள்.ஆனால் கோபிக்கு  அவர்களை தனக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொள்வது, அல்லது பெருமை பேசுவது என்பதெல்லாம் தெரியாது. அது  அவனுடைய குணமோ ,பழக்கமோ இல்லை.

அவன் வீட்டிற்குப் போன போது கதவைத் திறந்த மனைவி, ஆச்சர்யப்பட்டு “ காகம் தலைகீழாகப் பறக்கிறதா? ஏன் இவ்வளவு சீக்கிரம் இன்று ?” என்றாள்.

  உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்வது போல,“கடுமையான தலைவலி…சிறிதுநேரம்  படுத்துக் கொள்கிறேன்..”என்றான்.

     “காய்ச்சலிருக்கிறதா?”அவன் நெற்றியைத் தொட முயன்றாள்.

     “எனக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் படுக்க விடு,”என்றான்.

தன் மேலேயே அவனுக்குக் கோபம் வந்தது.படுக்கையில்  படுத்தான்.கண்களை மூடியபோது,சோகம் நிறைந்த அந்தச்  சிறுமியின் முகமே கண்ணில் தெரிந்தது.அந்தப் பெரிய கண்கள். ஒரு விம்மலைப் போல,ஒரு புலம்பலைப் போல அவள் தெரிந்தாள்.

      “இதைச் சாப்பிடுங்கள்,” தண்ணீர் மற்றும் மாத்திரையோடு வந்த  மனைவி சொன்னாள்.

      “எனக்கு வேண்டாம்,விமலா.சிறிதுநேரம் படுத்திருந்தால் சரியாகி விடும்.”

     “உங்களுக்குத் தலைவலி என்பதால்தான் மாத்திரை கொண்டு  வந்தேன்.தலைவலி இல்லாவிட்டால் வேறு என்ன சொல்லுங்கள். எனக்குத் தெரிந்தாக வேண்டும்.”

  “ஒரு நிமிட நேரம் அவளைப் பார்த்து விட்டு “உனக்குப்  புரியாது ,விமலா.இது என் அந்தரங்க வருத்தம்.” என்றான்

  “எனக்குப் புரியாத அந்த அந்தரங்க  வருத்தமென்ன? அது எனக்கும் தெரிந்தாலென்ன?”

  அவளுடைய ஆர்வத்தைத் தணிக்கும் வகையில், “இறந்து  போன என் நண்பனின் மனைவியும்,குழந்தையும் ஓர் உதவி வேண்டி  இன்று என்னைப் பார்க்க வந்திருந்தனர்.அவர்களுக்காக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.” என்று சொன்னான்.அவன் குரலில்  சிறிது படபடப்பு தெரிந்தது.

“அவ்வளவு கவலைப்பட  என்ன இருக்கிறது? எல்லோரும் பணத்துடன் அலுவலகத்திற்குப் போவார்களா?அவர்களுக்கு இது புரியாதா?வங்கியில் உங்களுக்குப் பணம் இருக்கிறது. ஒரு செக் அனுப்பி விடுங்கள். அவ்வளவுதான்.” என்று சொன்னாள்.

“அதனால்தான் சொன்னேன் உனக்குப் புரியாதென்று.முட்டாள், அவர்கள் பணம் கேட்க வரவில்லை,”எரிச்சலோடு பதிலளித்தான்.

“பிறகு…?”

“என் நண்பன் புகழ்பெற்ற பத்திரிக்கையாளன்.பொருளாதார நெருக்கடியில் வருந்துகிற இறந்த போன பத்திரிக்கையாளர்களின்  மனைவி  அல்லது குடும்பத்தினருக்கான் ஒரு பென்ஷன் திட்டத்தை  அரசு அறிமுகம் செய்திருக்கிறது.அவர்கள் பெற வேண்டிய அந்த உதவியைக் கேட்டு என்னிடம் வந்தனர். ஆனால் என்னால் அவர்களுக்கு உதவமுடியவில்லை.”

  “ஏன் நீங்கள் அப்படி ஒரு தவற்றைச் செய்தீர்கள்?அப்படியான  ஒரு பாவத்தை நீங்கள் செய்யவே கூடாது.அந்த ஏழைத்தாய் ,மற்றும்  சிறுமியின் சாபத்தை ஏன் வாங்கிக் கொள்ள வேண்டும்..?”

  தன்னை நியாயப்படுத்திக் கொள்ள அவன் எதையாவது சொல்லி இருக்கலாம்.ஆனால் சொல்லவில்லை.ஒரு தவறான அமைப்பு முறை  அல்லது அதன் ஓர் அங்கமாக இருக்கும் அவன் ஏன் அதற்கு  பொறுப்பேற்க வேண்டும். அவன் அமைதியாக இருப்பதைப்  பார்த்து, “யார் அந்த நண்பர்?” என்று கேட்டாள்.

  “உனக்கு அவனை ஞாபகமிருக்கலாம்.நவ ஜனதாவின் ஆசிரியர். வி.பி.ஜி. நாயர்–ஒரு நிகழ்ச்சிக்காக இங்கு ஒரு முறை வந்திருக்கிறான்.”

  “ஓ, ஆமாம்,”ஞாபகம் வந்தவள் போல சொன்னாள்.“எனக்கு அந்த குடிகாரரை ஞாபகமிருக்கிறது. குடித்து விட்டு வந்து இங்கு எவ்வளவு கலகம் செய்தார்.தன்னைச் சீரழித்துக் கொண்டு,குடும்பத்தையும் அழித்து.. மோசமானவர்.அரசு அந்த மாதிரியானவர்களுக்கு பென்ஷன் தருகிறதா?”

  அவன் எதுவும் சொல்லவில்லை.அவளுடைய பார்வையில்,  அவள் சொல்வது உண்மைதானே?கோபியின் அந்த முகத்தைத்தான் பார்த்திருக்கிறாள்.தவிர,ஏன் விஷயங்கள் அப்படியானது என்று அறிவது அவள் வேலையல்ல.

     “நான் முதலில் அவர்களுக்காகப் பரிதாபப்பட்டேன்… நீங்கள் செய்தது தவறென்று நினைத்தேன்.ஆனால் இப்போது,அந்தக்  குடிகாரரைப் பற்றிக் கேட்டபிறகு….எனக்கு வருத்தமேயில்லை… தன்னைப் பாழ்படுத்திக் கொண்டு மற்றவர்களையும் சீரழித்து…என்ன  முடிவு!” கதவைச் சாத்திவிட்டு தனக்குத்தானே சொல்லிக் கொண்டு போனாள்.

  அவள் சொல்லியவற்றை அவன் நினைத்துப் பார்த்தான். கொடுமைக்காரன், துரோகி குடிகாரன்! பாவம் கோபி!

  நீ உண்மையில் எப்படிப்பட்டவனென்று யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ,கோபி?

  யார் ஞாபகம் வைத்திருப்பார்கள்? உன்னை வைத்துத்  தங்கள் லட்சியங்களைச் சாதித்துக் கொள்ள விரும்பியவர்கள்  சாதித்துக் கொண்டு போய்விட்டார்கள்.மற்றவர்களுக்கு, நீ பூஜ்யம்தான்.  உன்னைப் போல மாறுவதற்கு முன்னால்,நான் என் பாதையை மாற்றிக்  கொண்டு விட்டேன்.முள் குத்துவது போலக் குத்தி நீ ஞாபகங்களை  வலிக்கச் செய்கிறாய்.

  அல்லது ,இந்த ஒரு காரணத்தினால்தான் உன் நினைவு  எனக்கு வலி தருகிறதா? அந்தச் சிறிய கிராமத்தில் நாம் பிறந்த  வளர்ந்த மகிழ்ச்சியான நாட்கள்.புதிய களங்கள் செயல்கள்..அவை உருவாக்கிய ஆழமான பிணைப்பு ! பத்திரம் எழுதும் வடக்குதல பரமேஸ்வரன் நாயர் மகன் கோபி, கோவில் பூசாரி விஷ்ணு  போத்துவின் மகன் முரளி  இருவருக்குமான நட்பு  தற்செயலானது.  நினைத்துப் பார்த்தால்,அது மிக இயல்பான ஒன்றுதான். பள்ளி  நூலகத்தில் படித்த ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரின்  புத்தகங்கள் குறித்த உரையாடல்களில், விவாதங்களில் தொடங்கிய அது எப்படியெல்லாம் வளர்ந்தது? பள்ளியின் பல்வேறு மாணவர்  அமைப்புக்கள் , நூல் நிலைய சங்கம், அரசியலின் ஓர் அங்கமான  பத்திரிக்கை என்று எல்லாவற்றிலும் இருவரும் இணைந்திருந்தனர்.

  இந்தி பிரச்சாரகரான புதிய சுகாதார அதிகாரி, மற்றும் புதிய ஆசிரியர் பைம்பள்ளி ஜோசப் ஆகியோரின் விருப்பத்திற்குகந்த  மாணவர்களானார்கள்.புதிய மனிதர்கள்,புதிய சிந்தனைகள் பற்றிய  அறிமுகம் அவர்களுக்குக் கிடைத்தது. சிறிய கிராம எல்லையிலிருந்து  மெதுவாக அவர்கள் உலகம் விரிந்தது.முக்கிய அங்கம் வகித்த  கத்தோலிக்க சர்ச்சுகள்,கான்வென்ட்டுகள்,கிராம சபைகள் என்ற  சூழலிலிருந்து விலகினர்.அவர்களின் அறிவுசார்ந்த உலகம் விரிந்து, தெளிவு பெற்றது.

ஒருநாள் அவர்களிருவரும் சேர்ந்து பள்ளிக்குப் போனார்கள். வழக்கமான பாதையில் போக விரும்பிய அவர்கள் சர்ச்சுக்கு  முன்னாலுள்ள மைதானத்தை அடைந்த போது,அங்கு   ஏராளமான   போலீசார் நின்றிருந்தனர்.சிறிது தொலைவில் மனிதர்கள் முகத்தில்  பயம் கொப்பளிக்கக் கூடியிருந்தனர்.அது மாநில காங்கிரசின் கீழ்ப்படியாமை குடிமுறை கூட்டம்.[ Civil Disobedience Program] அதன்  தலைவர் மேடையில் ஏறும் போது கைது செய்யப்பட்டார்.

  சில நிமிடங்கள் அதைக் கவனித்த கோபி“ வா,முரளி !இதுதான் நாம் தினமும் பள்ளிக்குப் போகும் வழி. இன்றும் நாம் இந்தச்  சாலையிலேயே போய்விடலாம்.” என்றான்.

தான் என்ன செய்கிறோம் என்று  அறிவதற்கு முன்னாலே அவன் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.அதே வேகத்தில் போலீஸ்  அவனைக் கைது செய்து வேனில் அடைத்தது. இங்குமங்கும்  கூட்டத்திலிருந்து சில முழக்கங்கள் கேட்டன.ஆனால் வேறு எதுவும்  நடக்கவில்லை.தொடக்கமாகக் தான் கைது செய்யப்பட்டோம் என்று  அவன் உணர்ந்தது அப்போதுதான்.

அது திட்டமிடப்பட்ட செயல்ல.அவன் அதற்குத் தயாராகவில்லை.

இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்கும் அல்லது நடக்க  வேண்டுமென்று  அவன் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.தன் வீட்டையும், பெற்றோரையும் நினைத்த போது இடி விழுந்தது போலிருந்தது. ஏழு படி அரிசியும்,ஏழு ரூபாய் சம்பளமும் வாங்கும்  கோயில் பூசாரியான ஏழை அந்தணரின் ஒரே மகன்.படிப்பைத்  தொடர வேண்டுமென்றால் அவன் கஷ்டப்பட்டாக வேண்டும்.படிப்பில்  கெட்டிக்காரன்.வயதான காலத்தில் தன் பெற்றோரின் சுமையைக் குறைக்க வேண்டுமென்றால் அவன் நன்றாகப் படித்து ஒரு வேலை  பெறவேண்டும்.அவன் அரசியலுக்காகப் பிறந்தவனில்லை.இளம் மனம் பொறுப்புகளின் கனத்தால் வலிக்க,அழுதான். கைது செய்யப்பட்ட  தலைவர்களில் ஒருவரான திரு.சாக்கோ அவனை ஆறுதல்படுத்தியது  அவனுக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது.                                                                        

  ஆனால் கோபி கவலைப்படாதவனாக இருந்தான்.எதிர்ப்பான  மனநிலையிலிருப்பவன் போல வெறித்து உட்கார்ந்திருந்தான்.  பின்னாளில் திரு.சாக்கோ அவனது அமைச்சரான பிறகு,யாரும்  அருகில் இல்லாத தருணத்தில் அவனிடம், “நீ இப்போது பெரிய  அதிகாரியாக மிடுக்கோடு நடந்து கொள்கிறாய். பல ஆண்டுகளுக்கு  முன்னால் போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட போது நீ எப்படி அழுதாய்  என்று ஞாபகம் இருக்கிறதா?”என்று நகைச்சுவையாகக்  கேட்டார்.

  திடீரென்று தன் ஆடையை இழந்தது போல அவன் வெட்கி நின்றான்.சில நிமிடங்கள் கழித்து, சிறிது தைரியமாக அவரிடம் “மிகுந்த பயத்தைத் தரும் இப்போதைய உள்துறை அமைச்சர், அன்றைய காலகட்டத்தில் மிக மென்மையானவராக இருந்தவரல்லவா?” என்று  கேட்டான்.

  திரு.சாக்கோ சிரித்துக் கொண்டே,“கோபி என்று உன்னுடன் ஒரு பையன் இருந்தானே?அவர்தானே இப்போது கட்சிச் செய்திதாளின்  ஆசிரியராக இருக்கும் வி.ஜி.பி.நாயர்?”

  அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.“அவர் மிக அதிகாரமுடையவராக வருவார் என்று எனக்குத் தெரியும்.எந்தக் 

கட்சியில் இருந்தாலென்ன? திறமைசாலி! என்ன அற்புதமான 

எழுத்தும்,பேச்சும்! அவரைச் சந்திக்கும் போது என் அன்பைத்

தெரிவியுங்கள்.முடிந்தால், ஒருமுறை அழைத்து வாருங்கள்.”என்று 

சொன்னார்.

  ஆனால் கோபி வாழ்க்கையில் உயராமல், மிக இழிவான  நிலையில் இறந்து போனதைப் பார்க்க திரு.சாக்கோ உயிருடனில்லை. எவ்வித மருத்துவக் கண்காணிப்புமின்றி,பின்தங்கிய மலைப்பகுதியில் பெஞ்சில் படுத்தபடியே கோபி செத்துப் போனான்.(அவனுக்கு  நெருக்கமானவர்களே ஏமாற்றுக்காரர்களாகி விட்டனர் )

  எப்படியோ, திரு.சாக்கோவின் உதவியால் கைதான அவர்கள்  இருவரையும் அன்று மாலையே அவர்கள் வீட்டில் விட்டுவிட்டனர். அவர்களிருவரும் சிறுவர்களென்பதால் வழக்கு எதுவும் பதிவு  செய்யக் கூடாதென்று திரு.சாக்கோ சொல்லிவிட்டார்.

என்றாலும்,அவர்கள் புகழ் அடைந்துவிட்டனர்.

         வீரமான தேச பக்தியாளர்கள்!

         சுதந்திரப் போராட்டக்காரர்கள்!

         எல்லா இடத்திலும் மக்கள் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

மரியாதையாக அவர்களைப் பார்த்து,மற்றவர்களுக்கும் காட்டினர் :

         — இந்தச் சிறிய வயதில்…!

         — என்ன தைரியம்….!

         — தியாகத்திற்குத் தயாரான நிலை…!இளைஞர்களுக்குக் கூட 

இல்லை.

  தைரியம்,தலைமை நிலை என்ற ஒளிவட்டம் அவனைச்சுற்றி. அவனுடைய பெற்றோர் கூட அந்தப் புகழில் மகிழ்ந்தனர்.அவனுக்கு  எதிராக அவர்கள் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.

அவன் உண்மையற்ற அந்தக் கற்பனையுலகில் வெகுநாட்கள் இருந்தான்.பழைய காலத்தில் அரசர்கள் ,தங்கச் சரிகையிலான  தலைப்பாகை அணிந்து,லகானைப் பிடித்து குதிரையில் பயணிப்பது  போல கற்பனையான உலகில் தன்னை இருத்திக் கொண்டு மகிழ்ந்தான்.

  மாணவர்கள் போராட்டம்,

       சட்டத்தை மீறுவது,

       விவசாயிகள் போராட்டம்,

       தொழிலாளர் இயக்கம்,

       ஆயுதக் கலவரங்கள்.

  சிறைகளில் அடைக்கப்பட்டான்.மறைவிடங்களைத் தேட வேண்டியிருந்தது. அந்த நாட்களில்,கோபியும் அவனும் சேர்ந்து  மறைவிடங்களில் இருந்து கொண்டு,கட்சி செய்தித்தாளைத் தயார்  செய்து கொண்டிருந்தனர்.அந்த அபாய நாட்களில் வரலாற்றின் வாள்  முனையில் அவர்கள் நடந்திருக்கின்றனர்.

  நவீன விஞ்ஞான பகுப்பாய்வு மற்றும் அனுபவ அறிவுப்படி, பாராளுமன்ற ஜனநாயகம் உன்னதமானது, இன்றைய தேவை  அதனுடைய பரீட்சார்த்தமான செயல் சார்முறைதான் என்று 

சொல்லி இறுதியில், அதுவரை நடந்ததெல்லாம் தவறென்று  அறிவிக்கப்பட்ட பிறகு முரளி அதிர்ந்து போனான்.புதிய திட்டத்தை  விளக்கிக் கொண்டிருந்த தலைவரை வெறுமையான முகத்துடன்  பார்த்தான்.

  “புரட்சி என்பது உண்மையில், ரகசியமாக நான்கு அல்லது  ஐந்து துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்வதல்ல. எதிரிகளை நேரடியாக எதிர்கொள்ளும் ஆழமான அனுபவமில்லாதவர்கள், தொழிலாளர்களை  முன்வைத்து நடத்தும் போரில் பங்கு பெறமுடியாது. அதனால்,  தோழர்கள் கோபி ,முரளி காவல் நிலையத்தை தாக்கும் பொறுப்பை  ஏற்கவேண்டும்”

  இதே தலைவர்தான் ஒருமுறை இந்த ஆணையைப் பிறப்பித்தார். கட்சிக்குள்ளாகவே மத்தியக் குழு உறுப்பினர் ஆசனுக்கு எதிராக  அவர் விமர்சனத்தை உருவாக்கினார். ஆசன் இம்மாதிரியான பாதகமான  செயல்களை அனுமதிக்க மாட்டார்.அதே மனிதர்தான் இப்போது புதிய  கொள்கை பற்றி வாதிடுகிறார்…அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மகிழ்ச்சியான அந்தப் பொழுதுகளை எண்ணிப் பார்த்த போது,  குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர், கட்சி  ஆர்வலர்கள் ஆகியோரை  பணக்காரக் குடும்பங்களிலிருந்து  தேர்ந்தெடுக்கும் முறையைக் கட்சி ஏற்று சில புதிய நிலைகளை  எடுத்தது, தன்னை வருத்தத்திற்குள்ளாக்கியது முரளிக்கு நினைவில்  வந்தது :  

எங்கே உங்கள் கொள்கைகள்,

புரட்சி, நில வாக்குறுதி..?

எங்கே உங்களின் சமத்துவம்…?

எவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டது?எத்தனை உயிர்கள் அழிந்தன? எத்தனை பிணக்குவியல்கள்…?எத்தனை குடும்பங்களின் கனவுகள்  சிதறின ?

  இவை எதற்காக ?

  ஏன் பயனற்றவற்றை  முழங்கிக் கொண்டு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் நிலையிலான மனிதத் தியாகங்கள்  நடந்திருக்க வேண்டும்?

கடைசியில்…பூரண அறிவு பிறந்த போது:

“நான் தவறான பாதையில் போய்விட்டேன் கோபி. தவறுகள் நடந்துவிட்டன.”

  ஒரு நள்ளிரவில், செய்தித்தாள் அலுவலகத்தை விட்டு  வெளியே வரும்போது, கடைசிப் பதிப்பு வேலை முடிந்த பிறகு,  தான் வேலையை விடப் போவதாக கோபியிடம் சொன்னான்.

  கீற்றாகத்  தெரியும்  நிலவொளியில் அவர்கள் நடந்து  கொண்டிருந்தனர். தலையை நிமிர்த்தி, ஊடுருவும் விழிகளோடு  கோபி தன்னைப் பார்க்கப் போவதை ,மங்கிய  ஒளியிலும் தன்னால்  உணரமுடியுமென்று நினைத்தான். ஆனால் அது நடக்கவில்லை.

மீதமிருந்த பீடியைப் புகைத்து முடிப்பதில் அவன் கவனமாக  இருந்தான்.வெகு நாட்களாக இதைத் தான் எதிர்பார்த்திருந்தது போல,  சரித்திரத்தின் மாறுதல் காலங்களில் இது போன்ற ஒரு சாதாரண  நிகழ்வை நான்  பலமுறை கண்டிருக்கிறேன் என்பது போல அதைக்  கேட்டுக் கொண்டிருந்தான்.

“அப்புறம்..?”

    “நான் எம்.ஏ. முடிக்க விரும்புகிறேன்.”

     “அப்புறம்..?”

     “பிறகு ஒரு சிறுவேலை தேடவேண்டும்.”

     “அவ்வளவுதானா..?”

     “இல்லை, படிக்க ,எழுத விரும்புகிறேன்.”

     “நீ அங்கேதான் போவாய் என்று எனக்குத் தெரியும்.பல  நூற்றாண்டுகளாக ஓடும் பூசாரி ரத்தம் !”

     “கோபி, பூசாரிதானே மாதத்திற்கு ஏழு ரூபாய் மட்டும் சம்பாதித்தார்? அவர்களின் ஒரே மகனான நான் உன்னுடன் சிறையிலிருந்த போதுதானே கவனிப்பாரின்றி,அந்த முதியவரும், அவர் மனைவியும் இறந்து  போனார்கள் என்பதை மறந்து விட்டாயா?”

     அவன் குரல் உயர்ந்து, தடுமாறிய போது, கோபி முதல் முறையாக  அவன் முகத்தைப் பார்த்தான்.“முரளி, நான் உன்னைக் காயப்படுத்த  விரும்பவில்லை. அது என்னால் முடியாத காரியம் என்று உனக்குத் தெரியாதா ?” என்று மன்னிப்பான தொனியில் கேட்டான்.

     அவனுடைய கண்கள் பனித்திருந்தை கோபி கவனித்திருக்க வேண்டும். அதனால் மிக மெல்லிய குரலில், “முரளி, நீ எப்போதும் உணர்ச்சிவசப்படுகிறவனாகவே இருந்திருக்கிறாய். நீ அதிலிருந்து  விடுபட முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இறுதியான ஒரு பகுப்பாய்வில், கோட்பாடு சார்ந்த விளக்கத்தில்….இல்லை,அது தேவையில்லை.மீண்டும் உன்னிடம் விவாதிப்பதில் எந்தப் பயனுமில்லை. எந்தக் காலத்திலும் நீ கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை.”

    அதை எந்த உணர்ச்சி வெளிப்பாடுமில்லாமல் அவனால் கேட்டுக் கொள்ள முடிந்தது. பின்பு அமைதியாக,“உன் அனுமானம் சரியானதென்றே நினைக்கிறேன். எனக்குக் கருத்து மற்றும்  லட்சியங்களோடுதான் தான் நெருக்கமிருந்திருக்கிறது. புரட்சி என்னும் சிந்தனைதான் என்னைக் கட்சிக்கு அழைத்து வந்தது… இன்று அவர்கள்  சிறந்த பாராளுமன்றப் பணி பற்றிப் பேசுகிறார்கள் ! இல்லை.. என்னைப் பொறுத்தவரை இது புரட்சிகரமான ஒரு கட்சியில்லை. அதனால்  நான் இங்கு பொருத்தமற்றவன்.”

        கோபி அவனைக் கோபம் கொப்பளிக்கும் முகத்தோடு  பார்த்தான். அவன் பதிலொன்றும் சொல்லவில்லை.

        நகரின் மிகப் பழைய இடத்திலிருந்த அந்த மோசமான  சிறிய கட்டிடத்தின் ரகசியப் பகுதியிலிருந்து, ஒருவரிடமிருந்து ஒருவர்  விடை பெற்றுக் கொண்டனர்.அந்த இடத்தில் தான் அவர்கள் சேர்ந்து  வெகுகாலமாகத்  தங்கியிருந்தனர். அவர்கள் வாழ்க்கையின் பல சம்பவங்களுக்கு அந்த இடம் சாட்சியாகி இருந்திருக்கிறது. புத்தகங்கள், பீடிக்கட்டுகள், நெருப்புக் குச்சிகள் என்று எல்லாம் அங்கு பரவிக் கிடந்தன. மேல்கூரை விதானம் சிலந்திக் கூடுகளோடு இருந்தது. அணில் கூடுகள்  தொங்கிக் கொண்டிருந்தன. அருகில் வேகமாகப் போகும் ரயில்களின்  சப்தத்தால் மர ஜன்னல்களின் தூலங்கள் ஆட்டம் கண்டன. முற்றத்து மரங்களில் உட்கார்ந்து கொண்டு பறவைகள் ஒவ்வொரு காலையிலும்  வம்படித்துக் கொண்டிருக்கும். இனி அவன் இவைகளை எல்லாம்  மீண்டும் பார்க்க வேண்டியதில்லை.

        அவனுடையது என்று சொல்லிக் கொள்வதற்கு அங்கு எதுவுமில்லை. எல்லாமே இருவருக்கும் சொந்தமானது.அவன் எதையும் எடுத்துக் கொள்ளாமல் புறப்பட்டான். பேசவும் அவன் முயற்சிக்கவில்லை. விலைமதிப்பற்றதாகத் தான் எண்ணியிருக்கும் உணர்ச்சிகளை தன் வார்த்தைகளின் தொனி வெளிப்படுத்தி, தான் அவமானப்படுவோமோ  என்று பயந்தான்.

     நீ உணர்ச்சிவசப்படுபவன்…இல்லை…அது இன்னும் வலி தருவதாக இருக்கும்.

    ஆனால் புறப்படும் போது கோபி அவன் கைகளைப் பிடித்துக்  கொண்டு, “முரளி ! நமக்கிடையே இல்லாதது கட்சி உறவு என்ற  ஒன்று மட்டும்தான் ”என்றான்.

    “கோபி! நீ அதை எனக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை.”      திடீரென்று, கோபி அவனைத் தழுவிக் கொண்டான். கடந்து  போன காலத்தின் கிராமத்துச் சிறுவர்களாக இருவரும்  சிறிது  நேரமிருந்தனர். செம்மண், சேற்றுத் தரைகளில் ஓடியும், வண்டிச்  சக்கரங்களை உருட்டியும் ,வளைந்தும் தவழ்ந்தும் தட்டான்களைப்  பிடித்ததுமான காலங்கள்.. தட்டான்களை சிறிய கற்களை தூக்க  வைத்ததும்..அவை அவர்களின் விரல் நுனிகளில் சிக்கித் தவித்ததும்..

     ஒரு சிறு கணம்தான்!

     காலச் சக்கரம் உருண்டு, பயம் தருகிற அபாயகரமான சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தை காலம் தந்து அவர்களையே  தட்டான்களாக்கி, சுமைகளைச் சுமக்க வைத்து…அது பெரும் சுமை…  திடீரென அவர்கள் பிரிந்து ,தடுமாறினர்.

மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.  “நான் எழுதுகிறேன்.எங்காவது,எப்போதாவது  சந்திப்போம்” என்று  நடக்கும் போது அவன் சொன்னான்.

  கோபியிடம் எழுதுவதாகச் சொல்லியிருந்தாலும்,அவன்  எழுதவேயில்லை. அவனால் நடிக்க முடியாது, கோபிக்கு எழுதும் போது அவனால் ஒரு வேஷதாரியாக முடியாது. கடந்த காலத்தில் அவர்களை இணைத்திருந்த ஏதோ ஒன்று காணாமல் போக, நட்பும் நெருக்கமும் இருப்பது போல அவனால் நடிக்க முடியவில்லை.

  அவன் வேலை பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் சார்ந்தது. அதனால் அவனுக்கு கோபியைப் பற்றிய செய்திகள் தெரியும்.  அவனை எப்போதாவது சந்திக்க முடிந்தது.

  அவர்களின் கடைசி விடைபெறலுக்குப் பின்பு முதல் முறையாக  அவனுடைய அலுவலகத்திற்கு வந்த கோபி, “துறை அமைச்சருக்கு  நீ  மிகவும் வேண்டியவன் என்று கேள்விப்பட்டேன்.” என்று சிரித்துக்  கொண்டே ஒரு கேலியான குறிப்போடு  உரையாடலை  ஆரம்பித்தான். 

“உன் கட்சியும்தான் அந்த அமைச்சகத்தோடு  இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் உங்கள் கட்சித் தலைவருக்கும் நான் வேண்டியவன் என்று சொல்வதும் மிகப் பொருத்தமாக  இருக்குமல்லவா?” என்று சிரித்துக் கொண்டே பதில் தந்தான்.

     கோபியின் கட்சி உடைந்து, அதன் ஒரு பிரிவு மற்ற  கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி செய்த காலகட்டம் அது. கோபியை ஆசிரியராகக் கொண்ட கட்சிச் செய்தித்தாள் பிறகு  சிறுபான்மைக்  குழுவுக்குச்  சொந்தமானது. கடந்த காலத்தில் அவனுக்கு பெரிய  எதிரியாக இருந்த கட்சியில் அவனிருப்பதை கேலியின் சாயலோடு  முரளி சுட்டிக் காட்டுவதாக கோபி நினைத்திருக்க வேண்டும்.  அவனுடைய வார்த்தைகளால்  கோபி காயமடைந்திருக்க வேண்டும், “செய்தித்தாள் படிப்படியாகத் தரமிழந்து  கொண்டிருக்கிறது. அதன் விற்பனையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. சில தலைவர்கள், நான்கு அல்லது ஐந்து ஆசிரியர் குழு உறுப்பினர்கள், நான்  மற்றும் செய்தித்தாள். வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்குக்  கூடப் போராடுகிறோம். நீ எனக்கு தயவுசெய்து உதவ வேண்டும்.  அரசிடமிருந்து அதிக விளம்பரங்களை எனக்கு வாங்கித் தா. அதை  உன்னிடம்  சொல்லத்தான் நான் வந்தேன். நான் கேட்டால் நீ  உதவி செய்வாய் என்று கட்சியினர் நம்புகின்றனர்,” என்று விசனத்தோடு  மெல்லிய குரலில் சொன்னான்.

       அவன் வெகுநேரம் கோபியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் நொறுங்கிப் போனது போல உட்கார்ந்திருந்தான். கண்களினடியில் கறுப்பு வளையங்கள்.

       என்ன ஒரு முரண்!

       பச்சை நிறத் துணியால் மூடப்பட்ட அரசாங்க  மேஜையில்  தொலைபேசி , சிவப்பு ரிப்பன்கள் கட்டப்பட்ட கோப்புகள் , சன் மைக்கா சுவர்கள் சுற்றும் மின்விசிறிகள், திரைசீலைகள்  காற்றில் படபடக்க  எதிரெதிராக உட்கார்ந்து  இருப்பதே பெரிய  முரண்! .காலத்தின் கோலம் மனிதனை எதிர்பாராத வகைகளில் செயல்பட வைக்கிறது!

      செய்தித்தாள் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில்தான்  விளம்பரங்கள் கொடுக்கப்படுவது என்பதையும், அந்த உறுதியான சட்டங்களை மீறக்கூடாதென்பதையும் கோபி அறிய மாட்டானா? இல்லை , அதிகார வர்க்கத்தின்  வழக்கமான உளறல்தானென்று  அவன் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். “கோபி ,நான் ஒரு  சாதாரண  அரசு ஊழியன்! என்னால் உனக்கு எப்படி உதவமுடியும்? முதல்வர் உன்னுடைய கட்சியின் ஆதரவாளர்தானே ? நீ அவரிடமிருந்து ஆணையைப் பெற்றால் செயல்படுவது எனக்குச்  சுலபம்.” என்று அவன் சொன்னான்.

     கோபிக்கு முதல்வரை நன்றாகத் தெரிந்திருந்த போதும்,அவன் சொன்னதிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு அந்த விஷயத்தை மீண்டும் அவன் பேசவேயில்லை. கிளம்புவதற்கு முன்னால்,சுற்றிமுற்றிப் பார்த்து விட்டு யாருமில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு,“ ராஸ்கல், உன்னுடைய  வீட்டிற்கு என்னைக் கூப்பிடவில்லை. நான் உன் திருமணத்திற்கு  வரவி்ல்லையென்று உனக்குக் கோபம் என்று எனக்குத் தெரியும். நான் எதன் பிடியில் சிக்கியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியாது. ஏன் என்னால் வரமுடியவில்லை என்பதை அப்போதுதான் நீ புரிந்து  கொள்வாய். வீட்டிற்கு வந்து உன் மனைவியைச் சந்தித்துப் பேசுகிறேன் என்று சொல்.”என்றான்.

  ஆனால் அவன் வரவில்லை. வெகு காலம் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை.

  இதற்கிடையே கோபி வேலை செய்யும் செய்தித்தாள் நின்றுவிட்டது என்றும் அவன் வேறொரு புதிய பதிப்பில் வேறு நகரத்தில் வேலை செய்கிறான் என்றும் அவன் கேள்விப்பட்டான். கடந்த காலத்தில் அதை  அவன் ஒரு ஏகாதிபத்திய செய்தித்தாள் என்று சொல்வது வழக்கம்.

அது அவனுக்கு ஒரு புதிய வாழ்க்கையாக இருக்க வேண்டும். கட்சி குறித்த கடுமையான  கட்டுப்பாடுகள் அங்கில்லை —வித்தியாசமான  விருப்பங்களுக்கும், பொழுது போக்கு தரத்திற்கும் ஏற்றவகையில்  வடிவம் கொடுப்பது என வேலையும் எளிமைதான்.பத்திரிக்கை இயலின் பல்வேறு பார்வைகளை கோபியின் திறமை வெளிக் கொண்டு வந்தது. அதனால் உரிமையாளருக்கு அவனை மிகவும்  பிடித்துப் போனதில் வியப்பில்லை.

காங்கோ,வியட்நாம் ஆகிய இடங்களுக்கு அவனை அனுப்பினார்கள். எகிப்து, பாலஸ்தீன், சிலி, கவுடமலா மற்றும் லிபியா ஆகிய  இடங்களிலிருந்து செய்திகள் அனுப்பினான்.சுவையான  செய்திகள், தகவலறியும் கட்டுரைகள், அரசியல் கூர் பார்வை என்று அவன் எழுதியவை பத்திரிக்கையின் பெயரைப் பிரபலப் படுத்தியது.அவன் பிரபலமானான். வட்டார மற்றும் சர்வதேச  பத்திரிக்கைத் தொழிலாளர்களின்  சங்கங்களில் அவன் பொறுப்புள்ள பதவி வகித்தான்.அவர்களின் மாநாடுகளில் அவன்தான் முக்கியப் பேச்சாளர்.

  அந்தச் சமயத்தில் அவன் கோபியைச் சந்திக்க நேர்ந்தது.  பிரஸ் கிளப்பின் தொடக்க விழாவில் கோபி இருந்த  நகரத்திற்கு  அரசின் பிரதிநிதியாக முரளி  போக வேண்டியிருந்தது. விழாவிற்குப்  பின்னர் அமைச்சரோடு புறப்பட்ட போது கோபி அவனைத் தனியே  அழைத்து, “ நீ இரவு உணவில் கலந்து கொள்ளப் போவதில்லையா ?  உன்னிடம் பேசக் கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. உன்  பழைய தோழன் வி.ஜி.பி நாயர் பிரபலமான  மதிப்பிற்குரிய வி.பி.ஜி  நாயராக எப்படி மாறினானென்று கேட்க  உனக்கு விருப்பமில்லையா?”  என்று கேட்டான்.

கோபியின் முகம் தெளிவாகவும், தொனி சுய கேலியாகவுமிருப்பதை யாராலும் உணரமுடியும்.“இன்று அமைச்சரோடு எனக்கு இன்னும்  இரண்டு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அது முடிந்த பிறகு இரண்டு மணி  நேரத்திற்குள் இங்கு வருகிறேன்.” என்று மென்மையாகச் சொன்னான்.

அவன் திரும்பி வந்தபோது, எதிர்பார்க்காத அதிர்ச்சியான  உண்மையைச் சந்திக்க வேண்டியிருந்தது. நகரத்தின் முக்கிய மனிதர்கள் கூடியிருந்த பெரிய விருந்தில், கண்ணுக்குத் புலப்படும் வகையில் கோபி ஒழுங்கற்ற நிலையில் நின்றிருந்தான். அவனருகே வந்து தடுமாறி  நின்று தெளிவற்ற குரலில் பேசினான்.பேச்சு சம்பந்தமின்றி இருந்தது.  கோபி அவனைத் தழுவிக் கொண்டு மிகப் பரிதாபமான  தொனியில்  பேசியதைக் கவனித்த  பலர் அவனை இரக்கதோடு பார்த்தார்கள்,  பேச்சைக் கவனிப்பது போல  பாவனை செய்து சிறிது நேரம்  அங்கு உட்கார்ந்திருந்தான்.ஆனால் கோபி என்ன சொன்னான்  என்பதை அவனால் கேட்க முடியவில்லை.ஆழ்மனதின்   குற்றவுணர்ச்சி, தோற்றுப் போன உணர்வு தொனி, பயனற்ற நிலை,  சுய இரக்கம் என்று எல்லாவற்றையும் அவன் வெளிப்படுத்தியது   போலிருந்தது.

“வீட்டிற்கு வா ,என் மனைவியையும், மகளையும் பார்க்க  வேண்டாமா ?” என்று அவன் பலமுறை கேட்டான்.

     கோபி தன் திருமணம் பற்றி அவனிடம் சொல்லவில்லை. அது பற்றித் தனக்குத் தெரியாது என்று  அவன் ஞாபகப்படுத்திய போது, கோபி மீண்டும் பழைய கதையையே பாடினான், “நான்  யாரிடமும் சொல்லவில்லை.வீட்டிற்கு அவளைக் கூட்டி வந்தேன். அவ்வளவுதான். சங்கர வாரியரை உனக்கு ஞாபகமிருக்கிறதா ? தியாகி சங்கர வாரியர்? நாம்தான் அவரை தியாகியாக மாற்றினோம். காவல் நிலைய முகாமைத் தீயிட்டுக் கொளுத்துவதற்கு அவரை நாம் அனுப்பினோம். அவருடைய மகள்தான் சுசீலா, “

தந்தையின் முன்னாள் கூட்டாளியும், பிரபல  பத்திரிக்கையாளருமான கோபி தனக்கு ஏதாவது வேலை வாங்கித்  தரமுடியுமென்ற நம்பிக்கையில்  அவள் தன்னிடம் வந்ததாக கோபி  சொன்னான். அவள் சங்கர நாயரின் மகள் என்று தெரிந்ததும், அவனால்  எதுவும் பேசமுடியவில்லை. அவளுடைய வறுமையையும்  குடும்பத்தின் நிலையையும் பார்த்த பிறகு கோபி தன்  நோய்வாய்ப்பட்டிருந்த  தாயிடம் “ நான் அவளை விடப் பதினைந்து  வயது பெரியவன். ஜாதியும் வேறானது. நீயும் ,அவளும் ஒப்புக்  கொண்டால்..”

  பல வருடங்களுக்கு முன்பு செய்த பாவத்தைச் சொல்வதான  தொனி அது. “சங்கர வாரியருக்கு ஏற்படுத்திய கொடுமை போதாதென்று, இப்போது அவர் மகளுக்கு …என்று நீ நினைக்கலாம்” என்று கோபி நக்கலான தொனியில் சொன்னான்.

  அந்தக் கொடுமையான நகைச்சுவையை அவனால் ரசிக்க  முடியவில்லை.தவிர , கோபியின் வார்த்தைகள் அவனுக்குள்  வேதனையான பழைய ஞாபகங்களைத் தர மனம் அழுதது. கோபியின் வீட்டிற்குப் போய் ,அவன் மனைவியைப் பார்த்து கடந்த காலத்தில் நடந்தவற்றிற்கு மன்னிப்புக் கேட்க நினைத்தான்.ஆனால் கோபியின்  போதை அப்போது அவனுடன் போக விடாமல் தடுத்தது. இன்னொரு  முறை போகலாமென்று முடிவு செய்தான். அந்த நிமிடம், கோபியின் அரையுணர்வு  நிலையிலிருந்து தப்பிக்க விரும்பினான் .கோபியை  காயப்படுத்தி விடக்கூடாதென கவனமாகப் பேசினான், “ கோபி,  இன்னொரு நாள் கண்டிப்பாக உன் வீட்டிற்கு வருகிறேன்.இப்போது   நான் போக வேண்டும். நாளை இன்னொரு முக்கிய மாநாடு இருக்கிறது.  ஏற்கெனவே  ரயிலுக்கு நேரமாகி விட்டது.”

அவனை சோகமாகப் பார்த்தபடி,“ முரளி, நாம் பெரிய அளவில் மாறிவிட்டோம்! தன்னலமில்லாமல் நம்மால் ஒரு வார்த்தை கூடப்  பேசமுடியவில்லை. இப்போது என்னிடமிருந்து விலகத்தானே விரும்புகிறாய்? நான் உன்னைக் குறை சொல்ல மாட்டேன்.இந்தக்  குடிகாரன் உனக்கு இப்போது வழிப்போக்கன். உன்னால் என்னைப்  பொறுத்துக் கொள்ளவோ அல்லது மன்னிக்கவோ இயலாமல்  போகலாம். ஆனால் சிலசமயம், நீ பழைய நாட்களைத் திரும்பிப் பார்க்கும் போது, என்னை இரக்கத்தோடு் பார்க்க முயற்சித்தால், உன்னால் புரிந்து கொள்ள முடியும்….பிறகு உனக்கு ஞாபகம்  வரும் :  

  ஏழைச் சிறுவனான நான் பின்தங்கிய கிராமத்திலிருந்து தன் திடநம்பிக்கைகளின் பின்னணியை மட்டுமே நம்பி வந்தவன். இந்த பலம்தான் புதிய உலகங்களையும் முன் தெரிந்திராத  நிலைகளையும் நானறியத் தூண்டிற்று. கோபி–பத்திரங்கள் எழுதும்  வடக்கேதலா பரமேஸ்வரன் மகனுக்கு பூசாரி விஷ்ணு போத்தியின் மகன் முரளிதரன் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தான். உன்  கொள்கைகளுக்கு உண்மையாக உன்னால் அந்த  வழியை விட்டு  விலகமுடிந்தது. எனக்கு அதைச் செய்ய  தைரியமில்லை. நான் எப்போதும் உன்னைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  உன் நம்பிக்கை ,பொறுப்புகள், மனவுறுதி ஆகியவற்றோடு உன்னால்  எப்போதும் சமரசம்  செய்து கொள்ள முடிந்தது. கட்சியும் ,கட்சித்  தோழமையும் மிக வலிமையானது என்று  உறுதியாக  நம்பி்னேன். அவை உடைந்த போது, நம்பிக்கைகள் தொலைந்து, நான் ஆதரவற்றுப்  போனேன். நெடுஞ்சாலையில் காற்றின் போக்கிற்கேற்றபடி ஒரு  சருகு  பறப்பதைப் போல நான் பறந்தேன். இப்போது , இது  என்னுடைய தற்காலிக வீடு. அவ்வளவுதான். அடுத்த காற்றில் நான்  எங்கே பறப்பேன் என்று யாருக்குத் தெரியும்?…நாம்  பிறகு  சந்திக்கலாம். குட் நைட்.” 

  விருந்து அரங்கத்தின் பெரும் சப்தத்திற்கிடையே நடந்து போன  கோபியை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். வைகறையில்,  கொள்கையின் அடிப்படையில் எங்கோ பூத்த ஒரு நீலத் தாமரை ,  கடந்த போன காலத்திற்கு தன்  மணத்தை மட்டும் கொடுத்து  விட்டு இப்போது காய்ந்து எரி சூரியனின் ஜுவாலையில்  விழுந்து விட்டது.

  கோபி ,உன் சரிவை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. தூக்கத்தில் நடப்பது போல அவன் எழுந்து போனான்.

      ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு விடுமுறை நாளில், “நீ வீட்டில்  இருக்கிறாயா என்றறிய போன் செய்தேன். ஞாபகமிருக்கிறதா ,ஒரு பழைய சத்தியம் — உன் மனைவியைச் சந்தித்துப் பேசுகிறேன் என்று  சொன்னது.” என்றான்.

       கடந்த சந்திப்பின் போது தான் நடந்து கொண்ட விதத்திற்காக கோபி மன்னிப்பு கேட்க வருகிறான் என்று முரளி நினைத்தான்.ஆனால்  அப்படியில்லை.அவன் நிலைமை இன்னும் இரக்கத்திற்குரியதாகி  விட்டது. முரளி தன் மனைவியை அறிமுகம் செய்தபோது ,  உயர்ஜாதி மனிதர்களிடம் பேசுவது போல கோபி எழுந்து நின்று  மிகப் பணிவாகப் பேசினான்.

“வணக்கம் அம்மா, இந்த எளியவனும் ,உயர்ந்த உங்கள்  கணவரும் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள். நான், பத்திர எழுத்தர்  வடக்கேதலா பரமேஸ்வரன் நாயரின் மகன் கோபி. இந்த  எளியவனும், உங்களின் மதிப்பிற்குரிய கணவரும் சேர்ந்து பல  விஷமத்தனங்கள் செய்திருக்கிறோம். காவல் நிலையத் தாக்குதல்கள்,  பஸ்களை எரிப்பது, தண்டவாளங்களையும், பாலங்களையும் தகர்ப்பது  என்று…ஆனால் இப்போது, நான் எதுவும் செய்யவில்லை. அது  கடந்த காலம்..உயர்ந்த  உங்கள் கணவர் இப்போது, மிக  மரியாதைக்குரியவர். நானும் மரியாதைக்குரியவன். ஆனால் நான்  ஒரு குடிகாரன். அம்மா, என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம்.  குடித்தால் கூட நான்  தொந்தரவு  செய்பவனில்லை…நான்  மரியாதைக்குரியவன்… என்னை வீட்டில்  அனுமதித்தற்காக பயப்பட  வேண்டாம்.”

  விமலாவின் முகத்தில் அப்பிக் கிடந்த பயத்தைப் பார்த்துவிட்டு, அவன் கோபியை உட்கார வைத்தான். “கோபி, எப்போது இங்கு  வந்தாய்? எங்கே தங்கியிருக்கிறாய்?”என்று  கேட்டான்.  

  “காலையில்தான் வந்தேன். சீக்கிரம் திரும்பிப் போக  வேண்டும்.டாக்சியில்தான் வந்தேன்.அதிலேயே திரும்பி விடுவேன்.  பத்திரிக்கையாளர் உரிமைகள் தினத்தையொட்டி வந்தேன். கூட்ட  அமைப்பின்படி கொடியேற்றுவது, கொள்கை குரல் முழக்கம் என்று  எல்லா சடங்குகளையும் முடித்தாயிற்று. பெரும்பாலானவர்கள்  புதியவர்கள் .நான் அங்கில்லையென்றால் என்ன நினைப்பார்கள் ?  முதலாளித்துவம், கருங்காலி என்று நாம் உபயோகப்படுத்திய  வார்த்தைகள் ஞாபகமிருக்கிறத? பின்னால் நின்று கொண்டு யாருக்கும் கேட்காமல் நான் கத்துவேன்.நான் நம்பாதவைகளையும் கூட செய்யத் தொடங்கி விட்டேன்.”       

  விமலா காப்பியைக் கொண்டு வந்தபோது,“அம்மா,  மன்னியுங்கள்  இந்த எளியவனுக்குத் தேநீர் வேண்டாம்.அது தவிர  வேறெதுவுமில்லையா?” என்றான் கோபி.

  “முரளி ,நான் விடை பெறுகிறேன். தாமதித்தால் டாக்சி கட்டணம்  அதிகமாகிவிடும். இன்னொரு முறை என் மனைவியோடும், மகளோடும் வருகிறேன்.என் மகளை உனக்கு மிகவும் பிடிக்கும். மிக அருமையாகப் பாடுவாள்..” என்று முரளியைப் பார்த்து  சொன்னான்.

பின் விமலாவிடம் திரும்பி,“ இந்த எளியவன் அறியாமல்  ஏதாவது முட்டாள்தனமாகப் பேசியிருந்தால் நீங்கள் மன்னியுங்கள். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தயவுசெய்து..”

       தேநீர் கோப்பையைத் தொடாமலேயே போய்விட்டான்.

       அதற்குப் பிறகு அவர்கள் சந்திக்கவில்லை.

       தன் மனைவி,மகளுடன் அவன் வருவதாகச் சொன்னான்.

       ஆனால் மனைவியும் ,மகளும் மட்டும் தனியாக வந்தனர்….

“உனக்கு என் மகளைப் பிடிக்கும். அவள் அருமையாகப் பாடுவாள்.”

  அவள் பெயரென்ன ?அவன் கேட்க மறந்து விட்டான்.

  பாடப்படாத பாடல் போல அவள் மனதிலேயே தங்கிவிட்டாள்.

  கோபியின் கட்டுப்பாடில்லாத குடியும்,முறையற்ற வாழ்க்கைப் போக்கும் அலுவலக விதிமுறைகளுக்கு எதிராக இருந்து வேலையில்  சிக்கல்களை ஏற்படுத்தின என்று பின்பு அவனுக்குத் தெரிந்தது. கோபி எதற்கும் ஒத்து வராததால் உரிமையாளர் அவனை வீட்டில்  ஓய்வெடுத்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார்.சில நாட்களுக்குப்  பிறகுதான் சம்பளத்தை அவர்கள் வீட்டிற்கு அனுப்பியதை கோபி உணர்ந்தான். இரக்கம் காட்டி அவர்கள் சம்பளம் தருகிறார்கள்  என்பதையும்,அது பிச்சைக்காரனுக்குக் காட்டப்படுகிற இரக்கம் என்ற உண்மையையும் கோபி்யால் தாங்க முடியவில்லை. அதனால் அவன் ராஜினாமா செய்தான்.அவன் குடிகாரனாக இருந்த போதும், தலைநிமிர்ந்தே நடப்பேன் என்று பறை சாற்றினான்.

  அதற்குப் பிறகு கோபியைப் பற்றி ஒன்றும் தெரியவி்ல்லை. முரளி யோசிக்கவுமில்லை.

மிகப் பரிதாபமான இறப்பு.

தெருநாயின் இறப்பு.

கோபியின் இறப்பு குறித்து மக்கள் விவரித்தது இப்படித்தான்.

யதேச்சையாக ஒரு செய்திதாளில் கோபியின் மரணத்தைப் பற்றிய  குறிப்பைப் பார்த்தான்.

  பத்திரிக்கையாளர் வி.ஜி.பி. நாயர் நேற்று காலமானார்.

  அவன் அந்த செய்தியையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பத்திரிக்கையாளன்.. ஒரு ’பத்திரிக்கையாளன்!! ’ அவ்வளவே.

  கோபி! நீ யாராக  இருந்தாய் என்று யாருக்காவது தெரியுமா? எனக்கும் கூட ?

  மலைகளையும், காட்டுப் பாதைகளையும் கடந்து, நாம் ஏன்  கிராமத்தை விட்டு காட்டுமிராண்டித்தனமான நகரத்திற்கு  வந்தோம்?

  வயல்களின் அருகேயான வள்ளிக்காவு கோயிலில் நான்  பூசாரியாக இருந்திருக்க முடியும். உனக்கு உன் அப்பாவின் பத்திர  அலுவலகமிருந்தது.மாலையில் சூரியன்  வயல்களுக்கிடையேயும்,  குன்றுகளுக்கிடையேயும் மறையும் போது அதன் பொன்னிறக் கதிர்கள் பரவுகிற கோயிலுக்கு முன்னாலுள்ள ஆலமரத்தினடியில் நாம் உட்கார்ந்திருக்கலாம்.அங்கு, ராமகிருஷ்ணர்,சுவாமி விவேகானந்தர், மகரிஸ்ரீ அரபிந்தோ ஆகியவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம். பிறகு ஆலமர இலைகளின் சலசலக்கும் ஒலியோடு மெதுவான , ஆழமான வழிபாட்டு மந்திரங்களும் சேர்ந்து கொள்ளும்.கடைசியில் பத்மநாப மாரர் சங்கு ஊதி,கோயிலின் கடைசி கால பூஜை என்பதைக் காட்ட நாம் கோயிலை நோக்கி நடக்கலாம்.முற்றத்தில் நிறைந்திருக்கும்  புனிதமான கொன்றை, குவலம் மரங்கள் ,துளசி, அந்திமந்தாரையின் மணத்தை நுகர்ந்து கொண்டு சுற்றித் திரிந்திருக்கலாம்

  நாம் எதையும் சாதிக்கவில்லை.இந்தப் பெரிய உலகில், நம்மைப் போல அற்பமான மனமுடைய மனிதர்களைப்  படைத்தது யார்? தடுமாற்ற அலைகளை உருவாக்கியது யார்? அந்த அலைகளை புயலாக மாற்றியது யார்?

சுதந்திரம், சமத்துவம், சமூகம்.

அந்தப் புயலில் மற்றவர்களைப் போல நாமும் பறந்தோம். அவ்வளவுதான். உன் வார்த்தைகளில் ,ஒரு நெடுஞ்சாலையில் காய்ந்த சருகுகளாய்.

கருத்தியல் விளக்கப்படி, இது வரலாற்றின் தவிர்க்க முடியாத நிலை…எனினும் இதை மனித வாழ்வை நோக்கிய கொடுமை என்று  அர்த்தம் கொள்ள முடியாது. கோபி ! செய்த குற்றத்திற்காக நான்  வருந்தவில்லை. நாம் காலத்தின் பகடைக்காய்கள். காலம் மீண்டும்,  அதே மாதிரியான சூழ்நிலைக்கு நம்மை விரட்டித்  தள்ளியிருந்தால்  நாம் மீண்டும் அதையே செய்திருப்போம்..

ஆனால் பயம் தரும் சில நிலச்சரிவுகளால், நம்முடைய  பயனற்ற வாழ்க்கையின் ,அடி அடுக்கு பறந்து போக, நீலத்தாமரையின் வேர்கள் தலைகீழாகி மொட்டு முறிந்தது. அதுதான்  என் மனதை கண்ணீரால் நிரப்புகிறது. பதைபதைப்பான நெஞ்சோடு  அதை நான் பார்க்கிற போது அந்த மொட்டு ,ஒரு குழந்தையாக மலர்ந்ததைப் பார்க்கிறேன்.. .மண் பட்ட அழுக்கான ஆடை அணிந்த ஒரு குழந்தை, பெரிய விழிகளைக் கொண்ட ஒரு குழந்தை.

நீலத் தாமரையைச் சாயலாக் கொண்ட அந்த கண்களை முன்னால் நான் எங்கே பார்த்திருக்கிறேன்? கண்ணீர் நிறைந்த சோகமான கண்கள்…?

  பெயரைக் கேட்கக் கூட அவன் மறந்துவிட்டான்…     

  அடுத்த நாள் அலுவலகம் போனவுடன், அந்தக் கோப்பிற்கான  அனுமதி ஆணையை வழங்கினான். துறை அதிகாரியிடம் அதைக் கொடுத்து விட்டு, “ரமா, அரசு ஆணை இன்றே வழங்கப்பட வேண்டும். மறந்து விடாதீர்கள். எனக்கும் அதன் காப்பி வேண்டும்.”

        “இந்த வரவு செலவு பட்டியலில் இதற்கான எந்த நிதியும் அனுமதிக்கப்படவில்லை, அதனால் இந்த விண்ணப்பம்..” என்று துறை அதிகாரி சொன்னார்.

          முரளி அவரை நிறுத்தினான்,“ பரவாயில்லை.இது சிறப்பு வழக்காகக் கருத்தப்பட வேண்டும் என்று குறிப்பில் தெரிவியுங்கள்.” 

          “சார், இது பென்ஷன் கமிட்டியால் தீர்மானிக்கப்பட வேண்டியது. இல்லையெனில் அதிகாரிகளால் பென்ஷன் கமிட்டியின்.  அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று புகார்கள் எழும். பிறகு முதல்வர்..” துறை அதிகாரி விளக்க முயன்றார்.

         “கவலைப்படாதீர்கள் ரமா. அதனால்தானே நான் இந்த ஆணையை இன்றே வழங்க  வேண்டி முதல்வருக்கு அனுப்புகிறேன்?  தற்போதைய முதல்வர் இதை மறுக்க மாட்டார். தன் அரசியல் பயணத்தை முதல்வர் ஆரம்பித்தது இறந்து போன இந்தப்  பத்திரிக்கையாளனின் சீடனாகத்தான். அவருடைய விதவை  மனைவிக்குத்தான் இந்த பென்ஷன் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று அவன் நிதானமாகச் சொன்னான்.

        கோப்பில் இல்லாத செய்திகளை அவன் சொன்னதைக் கேட்ட துறை அதிகாரி எந்தக் குறுக்கீடுமின்றி வெளியே போனார்.

       அவர் போன பிறகும்,அந்த பச்சை நிற அரைக் கதவுகள் இன்னமும் ஊசலாடிக் கொண்டிருந்தன. அவன் அதையே வெறித்தான்.— தன் மிகப் பெரிய விழிகளோடு, அவள் திரும்பிப் பார்ப்பதைப் போல்…

       “என்னை உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்பது போல.

       நீலத்தாமரை போன்ற கண்கள், ஈரமாக, உதவியற்று , கண்கள்…

       “கண்ணே ,உன் பெயரென்ன ?”


மொழிபெயர்ப்பு சிறுகதை : மலையாளம்

மூலம்  :    என்.மோகனன்

ஆங்கிலம் உஷா நம்பூத்ரிபாத்

தமிழில் :    தி.இரா.மீனா

நன்றி : Dakshina – A Literary Digest of South Indian Languages 1986—1988 Sahitya Academy

பிரபல மலையாள பெண் எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் மகனான என்.மோகனன் சிறந்த சிறுகதை, மற்றும் நாவலாசிரியர். ’இன்னலதே மழ’ என்ற நாவலுக்காக  கேரள சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். எந்தே கதை,  துக்கத்திந்தே ராத்ரிகள்,சினேகத்திந்தே வியாகரணம், பூஜைக்கெடுக்காத பூக்கள் ஆகியவை இவர் சிறுகதைத் தொகுதிகளில் குறிப்பிடத் தக்கவை.

Series Navigation<< ஐந்து பெண்கள்மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.