கோமுக்குட்டியும், விஷ்ணுநாராயணனும் சகோதரர்கள். ஒருவர்
குருவாயூரிலும், இன்னொருவர் பொன்னணியிலும் பிறந்தவர்கள்.
கடவுளின் முன்னால் பிறந்தவனுடைய கதையை முதலில் நாம் பேசலாம். கடவுள் என்பது இன்னமும் சந்தேகத்திற்குரிய ஒரு சமாச்சாரம் தான்; அந்தச் சந்தேகத்தை நீண்ட காலத்திற்கு மறைத்து வைப்பது சரியாக இருக்காது.
ஒரு கோயிலின் நுழைவாயிலில்தான் விஷ்ணுவின் தாய் கங்கரு அவனைப் பல சிரமங்களுக்கிடையில் பெற்றெடுத்தாள். அவமானம், சமுதாயம் என்ற இரண்டு ராட்சசர்களுக்கும் பயந்து குழந்தையை அப்படியே விட்டு விட்டு ஓடிப் போய் விட்டாள்.
கோயில் வாசலின் முகப்பில் கிடத்தப்பட்டிருந்த கடவுளின் குழந்தையான விஷ்ணுநாராயணன் முதல்முதலில் அழுத போது எந்த சப்தமும் எழாமல் காற்று மட்டும் வந்தது. பிறகு மெல்ல மெல்ல அந்தச் சத்தம் வளர்ந்தது. கதவைத் திறந்த பூசாரிதான் அந்தச் சத்தத்தை முதலில் கேட்டவர். இன்றும் கூட அவர்தான் அந்தச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்.
பூசாரியின் வீட்டில் பால் இல்லை. மிக அகலமாகவும், வெறியோடும் திறந்திருந்த விஷ்ணுவின் வாயில் கொஞ்சம் பிரசாதத்தை வைத்தார். விஷ்ணு அதைச் சப்பி விட்டு முழுங்கினான். பிறகு கண்கள் திறந்தன. அவன் இந்தப் பரந்த உலகத்தைப் பார்த்தான். சிரித்தான். அதற்குப் பிறகு பலரும் சிரிப்பதை அவன் பார்த்தான்.
அவன் நடந்தான். அவன் நடந்த போது பலரும் அவனோடு நடந்தனர்.
அவன் கீழே விழுந்தான். ஆனால் அவன் விழுந்த போது, சுற்றுப் புறத்தில் ஒரு குழந்தையையும் பார்க்க முடியவில்லை. எங்கிருந்தோ அந்தப் பூசாரி மட்டும் விரைந்து வந்தார்.
அப்போது வரை அவன் ஒரு கடவுளாக இருந்திருந்தான். அதன் பிறகு பூசாரி முயற்சித்து அவனுக்குள்ளிருந்த மனிதனை வெளிக் கொண்டு வந்தார்.
காக்கைக்கு முன்பாகவே எழுந்து விடுவான். கோவில் முற்றத்தின் ஊடே போகும் ஆற்றுத் தண்ணீரின் ஒலி கேட்டு அவன் விழித்துக் கொண்டு விடுவான். அந்தக் குளிர்ந்த தண்ணீரில் குளித்து், திருநீறு பூசிக் கொண்டு நாக கன்னிகைகள், தேவியை வணங்கி விட்டு ’பஞ்சாக்ஷரம்’, மற்றும் மனப்பாடம் செய்த பாடல்களைச் சொல்லிச் சாமி கும்பிடுவான். அவன் மனிதனாகி விட்டான். அதனால் வாழ விரும்பினான்.
யாரும் தன்னைக் கவனிக்காத ஒரு நாளில் ஆற்றில் நீந்தி மறுகரைக்குப் போய் விட்டான். தன்னுடைய ஈர உடைகளைக் காய வைக்க இடம் தேடிக் கொண்டிருந்த போது, திடீரென அவனுக்குள் எழுந்த “ நீ யார்?” என்ற ஒரு கேள்வி அவனைத் திடுக்கிட வைத்தது.
ஆச்சர்யத்தில் கண்கள் விரிய, அவன் தன் முன் நெற்றியைக் கைகளால் தொட்ட போது, திருநீறு மறைந்து போயிருந்தது. அப்போது “ நீ எங்கே போகிறாய்?” என்ற இன்னொரு கேள்வியும் அவனுக்குள் எழுந்ததைக் கேட்டான்.
அந்தக் கேள்விக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல், அங்கேயே நின்று விட்டான்.
பொன்னணி மசூதியையும், பெரிங்கன் மலையையும் கடந்து, அரபிக் கடலின் கரையை அடைந்த கோமுக்குட்டியின் காதுகளிலும் இதே இரண்டு கேள்விகள் கேட்டன.
கோமுவின் அம்மா, மலியக்கள் வீட்டின் வராந்தாவில் ஒரு பாயில் கிடந்து, வருந்தி மகனைப் பெற்றவள். பிறந்த போதே அவன் பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான அழைப்பைக் கேட்டான். அவன் தன் தாய்ப்பாலில் வளர்ந்தான். தலை முழுவதும் மழிக்கப் பட்டிருக்கும். காலில் தண்டை போட்டிருப்பான்.
மரக்கட்டையை இலைகளால் தேய்த்து பழுப்பு நிறமாக்கிய போர்டில் முசா முசலியார் எழுதியிருந்த குரான் வரிகளை அவன் மனப்பாடம் செய்திருந்தான்.
கையில் கத்தியை வைத்திருக்கும் ஒசானின் முன்னால் அவன் அழுது கொண்டே நிற்க, விருந்தினர்கள் நெய்யால் சமைக்கப்பட்ட அரிசி உணவு வகைகளை வயிறாரச் சாப்பிட்டு, திருப்தியில் ஏப்பம் விட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.
அரச மரங்களின் நிழல் படிந்த கிராமத்துச் சாலையில் மதப்பள்ளியை நோக்கி நடந்து போகும் போது அவன் தேவதைகளுடன் பேசிக் கொண்டே போவான்.
மழை பெய்யும் போது, உட்கார்ந்து மழைத் துளிகளையும், மின்னலையும் ரசித்துக் கொண்டிருப்பான்.
அம்மா நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது மெழுகுவர்த்திகள் ஏற்றி கல்லறை முகட்டில் வைத்து பிரார்த்தனை செய்தான். விரத நாட்களின் போது, அம்மாவுக்குத் தெரியாமல் பழைய சாதத்தை அப்பளத்தோடு சேர்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பான். பிறகு குற்ற உணர்ச்சியோடு தவிப்பான்.
மரக்காலணிகளின் ஒலி அவனுக்குப் பழக்கமாகி விட்டிருந்தது.
மசூதியில் உள்ள குளத்தில் குளித்து விட்டு, வழிபடுவான். மெக்காவையும், மதினாவையும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்கிருந்தது.
அப்போதுதான் ஒரு பெரிய சம்பவம் நடந்தது. ஒரு நாள் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். தன் நிழலையே தான் பார்க்கக் கூடாது என்ற கடவுளின் கட்டளையை சில கணங்கள் மறந்து விட்டிருந்தான். முழுவதுமாக மழிக்கப்பட்டிருந்த தன் மண்டையைப் பார்க்க அவனுக்கே வெட்கமாக இருந்தது. தன் சுருட்டை முடியை அழகாகச், சுத்தமாக சீவியிருக்கும் கிருஷ்ணன் குட்டி என்னும் நாயர் இளைஞனின் தோற்றம் ஞாபகத்திற்கு வர, கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.
அவன் கண்ணாடியைக் கீழே வைத்து விட்டு மசூதியைக் கடந்து ஓடினான். அரபிக் கடலின் கரையை அடைந்த போது, விஷ்ணுவின் காதில் கேட்ட “நீ எங்கே போகிறாய்?” என்ற அதே கேள்வி கோமுவிற்கும் கேட்டது.
அந்தக் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் அவன் மீண்டும் ஓட ஆரம்பித்தான்; விஷ்ணுநாராயணனும் எதிர்த் திசையில் ஓடி வந்து கொண்டிருந்தான்.
இசுலாம் மதத்தில் சேர பொன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் கீழ்சாதியைச் சேர்ந்த செருணிப் பெண்மணியை இருவருமே பார்த்தனர். நெடுஞ்சாலையில் சந்தித்த இருவருமே கை குலுக்கிக் கொண்டனர்.
மழிக்கப்பட்டிருந்த கோமுவின் தலையில் விஷ்ணு முத்தமிட்டான். கோமு விஷ்ணுவின் தலைமுடிக் கற்றையை விரல்களால் நீவினான். இதுதான் அவர்கள் நட்பின் ஆரம்பம்.
கணங்கள் மௌனமாகக் கடந்தன. தொடுவானம் கூட அவர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. கோமுதான் அமைதியைக் கலைத்தான்.
“ஹலோ நம்பூதிரி, ’நீ யார் என்பதற்கான அர்த்தமென்ன?” என்று கேட்டான்.
விஷ்ணு தன் கையை உயர்த்தி, “எங்கே போகிறாய் என்பதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“கடவுளிடம்தான் கேட்க வேண்டும்.” என்றான் கோமு.
அறிவைத் தேடி அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். மம்பரம், மாகே, திருவங்காடி, ஓன்சியம் ஆகிய அயலகப் பகுதிகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமலே போனார்கள். செய்தித்தாள்களில் பயணக் கட்டுரைகள் எழுதிப் பதிப்பிப்பதில் வெற்றி கண்டார்களே தவிர, தங்களுடைய கேள்விகளுக்கு அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தத் தோல்வியால் மனமுடைந்த அவர்கள் இருவரும்,அங்கிருந்த பனியால் மூடப்பட்டிருந்த மலையுச்சியை திரும்பிப் பார்த்த போது திடீரென அங்கிருந்து ஒரு வெளிச்சம் தெரிந்தது.
மலையுச்சியில் ஒரு மனிதன் கழுத்தைச் சுற்றிய சங்கிலியோடு கூடிய சிலுவையும், நீண்ட அங்கியும் அணிந்து நின்றிருந்தான். காட்டுத் தேனும், கிழங்குகளும் தான் அவன் வாழ்வாதாரம் அவனைச் சுற்றி ஒருவித ஞான ஒளி தெரிந்தது.
“ஓ… வழி தவறிய குழந்தைகளே!” என்று அங்கிருந்து மிகச் சத்தமாகக் கத்தினான்.
கோமுவும், விஷ்ணுவும் அவனுடைய சீடர்கள் போல கீழே உட்கார்ந்தனர்.
நீண்ட சொற்பொழிவுகள். தொடர் பேச்சுக்களைக் கேட்ட பிறகு இருவரும் ஆங்கிலத்தில் பிழையின்றி படிக்கும், எழுதும் திறனைப் பெற்றனர்.( நல்ல வேளையாக எல்.டி.சி. யூ.டி.சிகளில் காலியிடங்கள் இல்லாததால் அவர்கள் அந்த அபாயத்திலிருந்து தப்பித்தனர்.)
அந்தக் கணத்திலிருந்து அவர்கள் இரு பெரும் புரட்சியாளர்களானார்கள். விஷ்ணு கோயில்களை வெறுத்து, சிலைகளை உடைத்தான். கோமு கிராப் முடி வைத்துக் கொண்டான்.’ நீ யார்’ என்ற கேள்விக்கு அவன் விடை கண்டு பிடித்துவிட்டான். கையைச் சுழற்றியபடி, ”நான் கோஜா மொகய்தீன் என்ற கோமு” என்று கூக்குரலிட்டான்.
கோயில்களும், சிலைகளும் நடுங்கத் தொடங்கின. மசூதிகளும், திரைகளும் அதிர்ந்தன. குருவாயூர், பொன்னணி நெடுஞ்சாலைகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் மலையடிவாரங்களிலும்,கோவில்,மசூதி முற்றங்களிலும் விஷ்ணுவும், கோமுவும் கையோடு கைகோர்த்து நடந்தனர்.
“உன் கடவுள் யார்?” என்று கோமு விஷ்ணுவிடம் கேட்ட அந்த நாள் வரை காலம் அமைதியாகச் சிக்கலின்றி கழிந்து கொண்டிருந்தது.
விஷ்ணு பேச்சற்று நின்று விட்டான். கோமுவிடமிருந்து இந்தச் சதியை அவன் எதிர்பார்க்கவில்லை. இரண்டு உடல்களுடனிருக்கிற ஒரு மனது என்ற எண்ணத்திலேயே வாழ்ந்த நேரத்தில் இந்த ஆபத்து உருவானது.
விஷ்ணு புத்திசாலி. அதனால் அவன் கோமுவுக்கு எதிராகச் செயல்பட முடிவு செய்தான். “குருஷேத்திரத்தின் அர்த்தமென்ன ?” என்று கோமுவிடம் ஓர் எதிர்க் கேள்வி கேட்டான்.
தான் இக்கட்டான நிலையிலிருப்பதை கோமு உணர்ந்தான். பல ’ ஷேத்திரங்களைப்” பார்த்தும், கேட்டும் இருக்கிறான்.ஆனால்’குருஷேத்திரம்” என்றாலென்ன? அது எங்கேயிருக்கிறது?
அவனுக்கு எப்படி குருஷேத்திரம் தெரியும்? அவனுடைய வீட்டிற்கு அருகில் எந்தக் கோயிலுமில்லை. கதகளியை அவன் பார்த்ததோ, சந்தோஷப்பட்டதோ இல்லை. கோயில் கதவைத் திறந்த பூசாரியின் உருவம் அவன் கற்பனையில் மட்டும்தான் இருக்கிறது. ஆட்டக்கதையை எழுதிய உன்னைவாரியரோடு அவனுக்கு எந்தச் சம்பந்தமுமில்லை.

இந்த விதமான சிந்தனைகளிலேயே அவர்கள் ஏழு நாட்களைக் கழித்தனர். எட்டாவது நாளில் கோமு மெட்ராஸ் மெயிலுக்காக கோழிக்கோடு ரயில் நிலையத்தில் காத்திருந்த போது, விஷ்ணு தன் பெட்டியோடு வந்தான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
“எங்கே போகிறாய்?” விஷ்ணு கேட்டான்.
“காசிக்குப் போகிறேன்.” கோமு பதில் சொன்னான்.
“குறிப்பிடும்படியாக ஏதாவதா?”
“குருஷேத்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்ளத்தான்.”
“நீ எங்கே போகிறாய்?”
“அலிகாருக்கு்.”
“எதற்கு?”
“கடவுள் யார் என்று ‘நான் தெரிந்து கொள்ள வேண்டும்.”
மெட்ராஸ் மெயில் வரும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு நின்றனர்.
காசிக்குப் போகும் வண்டியும், அலிகாருக்குப் போகும் வண்டியும் தனித்தனி பிளாட்பாரங்களில் நிற்க, அவர்கள் கண்ணீரோடு விடை பெற்றுக் கொண்டனர்.
விஷ்ணு அலிகார் போய்ச் சேர்ந்தான். மற்றவர்களை நையாண்டி செய்யும் தன்மை அங்கு மனிதகளிடம் இருப்பதை கவனித்தான். டன்லப் மற்றும் மாமிசம் சாப்பிட்டான்.
குளிர்காலம் வரப் போவதையடுத்து, மனிதர்கள் மேற்கத்திய உடை அணிந்திருந்தனர். திரையால் தங்களை மறைத்திருந்த அழகிய பெண்களையும், மீசை வைத்திருந்த இளைஞர்களையும் பார்த்தான். நவாப்களின் பழைய பாழடைந்த அரண்மனைகளைப் பார்த்தான்/ மசூதிகளின் முற்றங்கள் வழியாக நடந்தான். ’சலாம் அலைக்கும்’ என்று மிகச் சரியாகச் சொல்ல முடியாமல் சொல்லி நண்பர்களை வாழ்த்தினான். ரம்ஜான் விரதமிருந்தான். தொப்பி மற்றும் நீண்ட அங்கி அணிந்தான். கேள்வி் — பதில் பாணியிலமைந்த நிகழ்ச்சியிலும், கவியரங்களிலும் கலந்து கொண்டான்.
இவ்வளவு செய்தும், அவனால் அவனாக இருக்க முடியவில்லை. மற்றொரு மனிதனாக மாறிப் போனான்.
கோமு காசியில் பல கோயில்களுக்குப் போனான். கோவணம் மட்டும் அணிந்திருந்த குருமார்களையும், கங்கை நதிக் கரையில் அரைகுறை ஆடைகளோடு நீராடிக் கொண்டிருந்த இளம்பெண்களையும் கவனித்தான். அவர்களின் குளியல் முடிந்த பிறகு, அவர்களோடு சேர்ந்து கொண்டு கோயிலுக்குள்ளே போனான். மதில்களில் திரிந்து கொண்டிருந்த குரங்குகளுக்கு நிலக் கடலைப் பருப்புகள் கொடுத்தான். பக்தர்கள் தொடர்ந்து கோயில் மணியடிப்பதைக் கேட்டுச் சிலிர்த்தான்.
யோகாசனப் பயிற்சிகளைப் பார்த்தான். ருத்ராட்சிரத்தைக் கையில் வைத்திருந்தான்.,மகேஷ் யோகி, சத்யசாயி பாபா ஆகியோர் படங்கள் பொறித்திருந்த ஆடைகளை அணிந்திருந்தான்.பத்ரிநாத், ரிஷிகேஷ் போன்ற புனித ஸ்தலங்களுக்குப் போனான்.
ஆனாலும் அவனால் அவனாக இருக்க முடியவில்லை. இன்னொரு மனிதனாக மாறியிருந்தான்.
மூன்று, நான்கு வருடங்கள் கழிந்தன. விஷ்ணுவும், கோமுவும் ஊருக்குத் திரும்பினார்கள். ஒரு நாள் நெடுஞ்சாலையில் அவர்கள் சந்தித்தனர். இருவருமே சிரித்துக் கொள்ளவில்லை. குசலம் விசாரித்துக் கொள்ளவுமில்லை.
கோமு தலையை மொட்டை போட்டிருந்தான். தலையில் தொப்பி. விஷ்ணு தலையை முடியைத் தூக்கிப் பின்புறம் கட்டியிருந்தான்.
இருவரின் முகத்திலும் அன்பு என்பதற்கான தடையமேயில்லை. கண்கள் வெறுப்புணர்ச்சியைக் கொட்டின. காந்தத்தில் பிடிபட்டிருந்த கம்பிகளாக இவ்வளவு காலம் இருந்த அவர்கள் தங்களை விலக்கிக் கொண்டார்கள்.
“நான் பழைய கோமு இல்லை, என்பதை ஞாபகம் வைத்துக் கொள் அநதண இளைஞனே. என் பெயர் இப்போது பவாக்கி” என்று கோமு கத்தினான்.
“தெரியும் மாப்பிள்ளா. நானும் என் பெயரை மாற்றிக் கொண்டு விட்டேன். நான் இப்போது ’மாதோக்’ என்று விஷ்ணுவும் கத்தினான்.
ஒருவரையொருவர் தீர்த்துக் கட்ட எறிகுண்டுகளைக் கையில் எடுத்தனர்.
அப்போதுதான்—
தொலைவில், மிகத் தொலைவில் காலாட் படையின் அணிவகுப்பு மற்றும் ஊதுகொம்பின் முழக்க ஒலியை அவர்கள் கேட்டனர். படை அருகில் வந்ததும், அவர்கள் தளபதியைப் பார்த்தனர்.
ஒரு நடுத்தர வயமனிதர் மார்பில் பூநூலின்றி.
“ஏய்.. உங்கள் இருவரையும்… நான் கொன்று விடவா?”
ஓர் அரிவாளைப் போல இருக்கின்ற ஆயுதத்தைக் காட்டினார்.
“உங்களுக்கு.. என்னைத் தெரியுமா?” அவர் கேட்டார்.
“தெரியாது.” ஒரே நேரத்தில் பதில் இருவரிடமிருந்தும் வெளிப்பட்டது.
’உம்…நான் ச.. சங்கரன்.”
“நீங்கள் பெயரை மாற்றிக் கொண்டு விட்டீர்களா?” யாரோ கேட்டார்கள்.
“இல்லையில்லை. நான் அந்தச் சுருக்கமான பெயரை மட்டுமே நீளமாக்கினேன்..”–அவர் விளக்கினார்.
கோமு மற்றும் விஷ்ணுவின் கைகளிலிருந்த கை எறிகுண்டுகள் கீழே விழுந்தன.
~o0o~
மூலம்: புனத்தில் குஞ்அப்துல்லா ( Punathil Kunjabdulla)
ஆங்கிலம்: கே.எஸ். நாராயணப் பிள்ளை
தமிழாக்கம் : தி.இரா.மீனா
ஆட்டக்கதா : கேரளாவில் உள்ள ஒரு வகையான நாட்டிய நாடகம்
டன்லப் : அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ரொட்டிக்கு [பிரெட்டு} வழங்கப்படும் பெயர்.
நன்றி : Under The Wild Skies , An Anthology of Malayalam Short Stories,
National Book Trust, India Editor K.Sachidanandan
புனத்தில் குஞ்அப்துல்லா மலையாள இலக்கிய உலகின் புரட்சிகரப் படைப்பாளிகளில் ஒருவர். மருத்துவராக இருந்த போதிலும் இலக்கியத்தின் மீது பேரார்வம் கொண்டவர். எம்.டி.வி.யை வாழ்க்கையிலும்,இலக்கியத்திலும் குருவாகப் போற்றியவர்.
மருந்து, பரலோகம், ஷேத்ர விளக்குகள் ,கண்ணாடி வீடுகள் உள்ளிட்ட ஏழு நாவல்கள் நீலநிறமுள்ள தோட்டம் கத்தி உள்ளிட்ட பதினைந்து
சிறுகதைத் தொகுப்புகள், பயண நூல்கள் என நாற்பத்தி ஐந்திற்கும் மேற்பட்ட படைப்புகள் இவருடைய பங்களிப்பாக அமைகின்றன.
முட்டத்து வர்க்கி விருது, மாத்ருபூமி விருது, கேரள சாகித்ய விருது, விஷ்வபீடம் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
~o0o~
Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
