விசித்திர நாடகம்

டெல்லியைக் கடந்து ஃபரிதாபாத் நெடுஞ்சாலையில் கார் திரும்பியபோது, சட்டென்று நகரம் பின்னோக்கி நழுவியது. கார் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர, சுற்றியிருந்த நிலப்பரப்பு அசைய மறுத்து உறைந்து கிடந்தது. மூடுபனி விழும் குளிர் கால  மாலைப் பொழுது திட்டமிட்டபடி தன் இறுகிய கரங்களை விரித்துக் கொண்டிருந்தது.

பேராசிரியர் மன்பிரீத் சிங்கின் பண்ணை வீடு தனித்து நின்றது. சுற்றிலும் வேலி அடைக்கப்பட்ட ஒரு பரந்த ஏகாந்த நிலம். அக்கம் பக்கத்தில் வேறு வீடுகளே இல்லை; மனித நடமாட்டத்தின் சுவடுகளற்ற பிரதேசம் அது.

பாதி திறந்திருந்த இரும்பு வாயிலில் ஒரு பச்சை நிறப் பலகை தொங்கியது. அதில் வெள்ளை எழுத்துக்களில் எச்சரிக்கை: “Trespassers will be shot” (அத்துமீறுபவர்கள் சுடப்படுவார்கள்). உள்ளே அடியெடுத்து வைத்தபோது ஒரு விசித்திர சத்தம் கேட்டது. அது அந்த இரும்பு வாயிலில் தொங்கவிடப்பட்டிருந்த  பூட்டிலிருந்து கசிந்த ஒலி  என்பதைப் புரிந்து கொள்ள சில நொடிகள் பிடித்தன. அனுமதியற்ற அந்நியன் போல நான் என்னை உணர்ந்தேன். வாயிலைக் கடந்து, ஈரப்பதம் மிக்க ஒரு நீண்ட மண்பாதை உள்ளே என்னை  வரவேற்கும் விதமாய் நீண்டு சென்றது.

பண்ணை வீடு பிரம்மாண்டமாக இருந்தது. நுழைவாயிலின் சுவரில் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், வரவேற்க மனிதர்கள் யாரும்  காணப்படவில்லை. சுவர்கள் யாவும்  சீரான நிறத்தில் இல்லை; உதிர்ந்த சுண்ணாம்புப்  பூச்சுக்கு அடியில் பழைய சுவர்களின் அடுக்குகள் தெரிந்தன. சுவர்களின் இடுக்குகளில் ஈரம் கசிந்து கரும் கறைகளாக உறைந்திருந்தது. வாசற்கதவின் மேல் தொங்கிய ஒற்றை மின்விளக்கு எரிந்ததே தவிர, அங்கிருந்த படர்ந்து கொண்டிருக்கும் மாலை இருளை வெல்லும் சக்தியை அது கொண்டிருக்கவில்லை.

“வாருங்கள்…”

எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது. கேமராவில் எந்தக் கம்பிகளோ, இணைப்புகளோ கண்ணுக்குப் புலப்படவில்லை. வீட்டிற்குள் நுழைந்தபோது காற்று இன்னும் உறைந்து சிலிர்த்தது. அது பண்ணை வீடுகளுக்கே உரிய பிரத்யேகக் குளிர்; காற்று அசைவற்றுத் தேங்கிப் போன இடங்களின் மௌனக் குளிர். அறைகள் யாவும் விசாலமாக, அதே சமயம் அமானுஷ்ய வெறுமையோடு கிடந்தன. சத்தங்கள் எதிரொலிப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் அங்கே இருந்தன, ஆனால் சத்தம் எழுப்பத்தான் எவரும் இல்லை.

தரையில் விரிந்திருந்த கம்பளம் ஒரு காலத்தில் அடர் இரத்தச் சிவப்பாக இருந்திருக்க வேண்டும். இப்போது அது வெளிறிப் போயிருந்தது. அதன் மீது கால் வைத்தபோது, அதன் நார்ப்பகுதிகள் மென்மையாக அமுங்கிப் பாய்ந்தன.

சுவர்களை அலங்கரித்த நீண்ட புத்தக அலமாரிகளில் சீக்கிய வரலாறு, இறையியல், போர்க்கலை, துறவறம் சார்ந்த நூல்கள் மண்டியிருந்தன. நூல்களின் முதுகில் தங்கப் பதிப்பில் எழுதப்பட்டிருந்த தலைப்புகள் கால ஓட்டத்தில் மங்கியிருந்தன. சில புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்க, சிலவோ அவசரத்தில் உருவப்பட்டு, பின் கவனமின்றி திணிக்கப்பட்டவை போல் சரிந்து கிடந்தன.

வலப்புறம் இருந்த பெரிய அறையின் மையத்தில் ஒரு மேசை. அதன் மேல் ஒரு புத்தகம் திறந்திருந்தது. அருகிலேயே சில நூல்கள் அடுக்கப்பட்டிருந்தன. மேசையின் ஒரு மூலையில், காகிதங்கள் பறக்காமல் இருக்க தேவைக்கதிகமான அளவில் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.

மேசைக்குப் பின்னர் நான் சந்திக்க வந்தவர்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். அவர் சில கணங்களுக்கு ஒரு நிழலுருவமாகத் தெரிந்தார். அவருக்குப் பின் பாதி மூடியிருந்த ஜன்னல் திரைகளின் இடுக்குகள் வழியே மாலை நேரத்து வெளிச்சம் உள்ளே வரலாமா வேண்டாமா என்ற  தயக்கத்துடன் கசிந்தது . வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடையே ஒரு தெளிவற்ற எல்லை நிலவியது.

அந்தப் பெருமௌனத்தின் நடுவே, பேராசிரியர் மன்பிரீத் சிங் மேசையிலிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக, மிக நிதானமாக நகர்த்திக் கொண்டிருந்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் அவர்; சீக்கிய வரலாற்றியலில் உலகளாவிய நிபுணர். பல மாதக் காத்திருப்புகளுக்கும், எண்ணற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களுக்கும் பிறகே இந்தச் சந்திப்பு சாத்தியப்பட்டிருந்தது.

அவர் நிமிர்ந்து என்னை நோக்கினார். அந்தப் பார்வையில் ஒரு பேராசிரியரின் கூர்மையான ஆய்வுக் கண்கள் இல்லை; மாறாக, ஒரு மேலோட்டமான உபசரிப்பு மட்டுமே இருந்தது. என் பெயரை நான் சொன்னபோது, “தெரியும். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்,” என்றார்.

“நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறீர்கள் என்று மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தீர்கள்,” என்றார். சொற்களை மிகக் கவனமாக, தனக்கு அன்னியமான ஒரு மொழியை கவனத்துடன்  கையாளுவது போல் மெதுவாக உச்சரித்தார்.

“சீக்கியத்தைப் பற்றி எழுத விரும்பும் ஒரு தமிழ் எழுத்தாளர்…” எனத் தொடர்ந்தவர், “இது பொதுவாக நடப்பதில்லை,” என்றார்.

அவர் உடல் அசையவில்லை, ஆனால் கண்கள் மட்டும் லேசாகப் புன்னகைத்தன.

“நான் தமிழன்தான், ஆனால் இந்த நாவலை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறேன்,” என்று நான் மெல்லக் குறுக்கிட்டது அவர் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை.

“இந்தியா என்பது ஒரே ஒரு நேர்க்கோட்டு வரலாறு அல்ல. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியின் மரபைத் தொட்டுத் தழுவும்போதுதான் அது உயிர் பெறுகிறது. உங்களைக் காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.”

அந்தக் கணத்தில், அந்த வீட்டின் மௌனமும் குளிரும் சற்று தளர்வது போல் எனக்குத் தோன்றியது. நான் ஒரு சாதாரண பண்ணை வீட்டிற்குள் இல்லை, ஒரு பிரம்மாண்டமான வரலாற்று மரபின் முன்னால் நிற்கிறேன் என்ற உணர்வு என்னைப் பற்றியது.

அப்போதுதான், நான் மகாராஜா ரஞ்சித் சிங்கைப் பற்றி ஒரு வரலாற்று நாவல் எழுதிக் கொண்டிருந்த விபரத்தை அவருடன் பகிர்ந்துகொண்டேன்.

அவர் சட்டென்று தலை நிமிர்ந்தார். மூக்கின் நுனியில் தொங்கிய கண்ணாடியை அவர் விழிக்கருகே நகர்த்தினார். 

“ஏன்?”

“அவருடைய வாழ்க்கை ஒரு மாபெரும் சாகசக் கதை போலப் பரவசமூட்டுகிறது,” என்றேன்.

அவர் சிரித்தார் — இந்த முறை அதில் ஒரு மெல்லிய நையாண்டி இழைந்தது.

“அப்படியென்றால்… கடைசி சீக்கிய குருவின் வாழ்க்கையை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்?”

என்னிடம் பதில் இல்லை. என் மௌனம், குருவின் உன்னத தியாகத்திற்கும் ரஞ்சித் சிங்கின் பேரரசுக்கும் இடையே இருந்த பெருவெளியை நிரப்ப முயன்றது.

“விசித்திர நாடகம்…” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

அடுத்த சில மணி நேரங்கள் அவர் குரு கோவிந்த் சிங்கின் வாழ்க்கையைப் பற்றி விவரித்தார். நீதிக்காகவும் தர்மத்திற்காகவும் தன் தந்தை குரு தேக் பகதூரையே இழந்த  மகன்; தன் நான்கு புதல்வர்களையும் போர்க்களத்தில் பலி கொடுத்த தந்தை; குரு கோவிந்த் சிங் தன்னுடைய  சுயசரிதைக்கு வைத்துக் கொண்ட பெயர்  ‘பிசித்தர்  நாடக்’. மன்பிரீத் அந்த வார்த்தையை உச்சரித்தபோது, என் மனம் அதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டது — விசித்திர நாடகம்.

“இது வெறும் வரலாறு அல்ல,” என்றார் மன்பிரீத். “இது இறைவனின் நாடகம்.”

அவருடைய கண்களில் ஒரு பிரகாசம்  சுடர்விட்டது. அவர் ஒரு வரலாற்றாசிரியராக அல்ல, நீண்ட ஆன்மீகப் பெருவெளியைக் கடந்து வந்த ஒரு ஞானியைப் போல என் கண்களுக்குத் தெரிந்தார். ஒரு வரலாற்றாசிரியனின் பேரார்வம் அவன் வாசிக்கும் பொருளைப் போலவே அவனை ஒலிக்கச் செய்கிறதோ?

மேசையின் ஓரத்தில் இருந்த ஒரு புத்தகத்தை மெல்லத் தொட்டார்.

“குரு கோவிந்த் சிங்கைப் பற்றி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதையைப் படித்திருக்கிறீர்களா?”

அது முற்றிலும் நான் எதிர்பாராத ஒரு கேள்வி. என் பதிலுக்காக அவர் காத்திருக்கவில்லை. புத்தகத்தை வேகமாய் விரித்து, அந்தப் பக்கத்தைக் கண்டறிந்து, சில ஆங்கில வரிகளை உரத்த குரலில் வாசித்தார். அது தாகூரின் வங்காள மூலக் கவிதையின் மொழிபெயர்ப்பு என்பது தெளிவாகத் தெரிந்தது:

“தங்கள் உயிரையே தியாகம் செய்கிறார்கள்

ஒரு கணமும் தயங்காமல்.

‘சுதந்திரம்’ என்ற கொடியின் நிழலில்,

அனைவரும் ஒன்றிணைகின்றனர் —

பெருமையானவரும் தாழ்மையானவரும்,

பிராமணனும் ஜாட்டும், வேறுபாடின்றி…”

அவர் வாசித்து முடித்துத் தொடர்ந்தார்.

“இது வெறும் வரலாறு அல்ல. பக்தியும் வீரமும் ஒன்றிணையும் ஒரு உன்னதக் கணம். தாகூர் இதை எழுதும்போது அவர் சீக்கியராக மாறவில்லை — ஒரு முழுமையான இந்தியராகத் தன்னை விரிவுபடுத்திக் கொண்டார்.”

அந்தக் கணத்தில் எனக்குள் மகாகவி பாரதி மின்னலென வந்து போனார். பாரதி குரு கோவிந்த் சிங்கைப் பற்றிப் பாடியபோது, ஒரு  வட இந்தியாவின்  வீரமிக்க ஒரு குருவைப்  பற்றி மட்டும் எழுதவில்லை; தன் சொந்த ஆன்மாவின் உள்மனச் சுதந்திரத்தின் வடிவத்தையே அங்கே வடித்திருந்தார்.

“அநீதியும், கொடுமையும் அழித்திடுஞ் சாதி;

மழித்திட லறியா வன்முகச் சாதி; “

ஒரு மொழியில் எழுந்த பெரும் குரல், மற்றொரு மொழியில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. குரு கோவிந்த் சிங் வெறும் வரலாற்று நாயகர் மட்டுமல்ல, கலாசாரங்களை இணைக்கும் ஒரு மாபெரும் பாலம்.

குரு கோவிந்த் சிங்கைப் பற்றிய உரையாடல் மேலும் சில நிமிடங்கள் நீடித்தது. அது முடியும் தறுவாயில், நான் பேராசிரியரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன் — மகாராஜா ரஞ்சித் சிங் பற்றி நான் எழுதி வரும் நாவலின் பாதி முடிந்த முதற்கட்ட வரைவை அவர் படித்துப் பார்க்க வேண்டும் என்பதே அது.

மாதங்கள் உருண்டோடின. அவ்வப்போது எங்களுக்குள் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்தன — சுருக்கமான, மரியாதையான, நேரடியான வரிகள்.

ஒருவழியாக நாவலை முழுமையாக முடித்துவிட்டு, அதன் முழு வடிவத்தையும் அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். ஆனால், இந்த முறை அவரிடமிருந்து பதிலே வரவில்லை. நான் காத்துக் கிடந்த நாட்களில் ஒருநாள், தினசரிப் பத்திரிகையின் ஒரு செய்தி என் பார்வையில் பட்டது. அதைப் படித்ததும் என் உடல் அப்படியே உறைந்துபோனது.

“பரிதாபாத்தில் நிலத்தகராறு: வரலாற்றாசிரியர் மன்பிரீத் சிங் தன் சொந்த சகோதரர்கள் இருவரைச் சுட்டார். மூத்த சகோதரர் சம்பவ இடத்திலேயே பலி. இளைய சகோதரர் உயிருக்குப் போராடுகிறார்.”

செய்தி மிகச் சுருக்கமாக இருந்தது. விவரங்கள் ஏதுமில்லை. ஒரு எல்லைச் சுவர். சில அடி நிலம். அவ்வளவுதான்.

அந்தச் செய்தியை வாசிக்கும்போது, என் கண் முன்னால் அந்த ஃபரிதாபாத் பண்ணை வீடு வந்து நின்றது — பாதி திறந்திருந்த இரும்பு வாயில், ஈரமான மண்பாதை, அறையின் மையத்தில் இருந்த மேசை, காகிதங்களை அழுத்திப் பிடித்திருந்த அந்த கனமான கல். ஒரு காலத்தில் இரத்தச் சிவப்பாய் இருந்து, பின் வெளிறிப்போன அந்தத் தரைக் கம்பளம். இந்தக் காட்சிகளோடு சேர்ந்து, துறவறத்தைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் உன்னதமாகப் பேசிய அவரின் சாந்தமான குரல் என் காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

அந்தச் செய்தியை நான் இரண்டாம் முறை படிக்கவில்லை. படிக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. தியாகம் பேசிய அந்த ஆன்மீகக் குரலோடு, துப்பாக்கியின் கொடூரச் சத்தத்தை இணைத்துப் பார்க்க என் மனம் முற்றிலுமாக மறுத்தது.

அன்று மாலை, பாதி மூடிய ஜன்னல்களுடன் இருந்த அந்த அறை, வெளிச்சத்திற்கும் இருளுக்கும் நடுவே ஒரு தீர்மானிக்க முடியாத புள்ளியாக நின்றதே… இன்று, அந்த எல்லைக் கோடு இரத்தத்தால் வரையப்பட்டிருக்கிறது. புத்தகப் பக்கங்களில் தூங்கிக் கொண்டிருந்த இரத்தம் தோய்ந்த வரலாறு, மெல்ல மெல்ல ஒரு மனிதனின் சொந்த வீட்டிற்குள் — நிலத்திற்குள் — இறங்கி, அதன் ஆழமான அடுக்குகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

என்னால் என் நாவலின் வரைவை மீண்டும் திருத்தவோ, ஏன்… அதைத் திறந்து பார்க்கவோ கூட முடியவில்லை. வாரக் கணக்கில் என் மின்னஞ்சல் பெட்டியைத் திறக்கவே பயந்தேன். தினமும் பத்திரிகைத் தாள்களைப் புரட்டும்போது பயத்தோடும் எதிர்பார்ப்போடும் அவர் பெயரைத் தேடுவேன். ஆனால், நாளாக நாளாக அந்தச் செய்தி ஊடகங்களில் இருந்து மறைந்தது. மனிதர்கள் மிக வேகமாக மறந்துவிடுகிறார்கள்; பத்திரிகைகள் அந்த மறதியை இன்னும் துரிதப்படுத்துகின்றன.

செய்தி வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒருநாள் அவரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது.

“மன்னிக்கவும். சில தனிப்பட்ட காரணங்களால் உங்கள் நாவலைப் படிப்பது தாமதமானது. இப்போது முழுவதும் படித்துவிட்டேன்.

சில வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன.

பக்கம் 84-ல், ரஞ்சித் சிங் 1808-ல் ஜம்முவைக் கைப்பற்றினார் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால், அது 1812-ல்தான் முழுமையாகச் சாத்தியப்பட்டது.

அதேபோல, சீக்கியப் படையில் இருந்த ஐரோப்பிய தளபதிகளைப் பட்டியலிடும்போது, பிரான்சு நாட்டைச் சேர்ந்த ‘அல்லார்ட்’ (Allard) என்பவரை நீங்கள் விட்டுவிட்டீர்கள்.

வரலாற்றுத் துல்லியம் மட்டும்தான் ஒரு புனைவின் யதார்த்தத்தைக் கூர்மையாக்கும்.

மற்றபடி எல்லாம் நலம்.

மன்பிரீத் சிங்.”

அந்த மின்னஞ்சலின் ஒற்றை வரி என் மனதில் ஆழமாய் தைத்து நின்றது:

“மற்றபடி எல்லாம் நலம்.“

அந்த வார்த்தைகளில் எந்தப் பதற்றமும் இல்லை; எந்தக் குற்ற உணர்ச்சியின் எடையும் அதன் மேல் இல்லை. மிக இயல்பாக, தங்களுக்குரிய இடத்தில் கச்சிதமாக அமர்ந்திருந்தன அந்தச் சொற்கள். அந்த மின்னஞ்சலை இரண்டாம் முறை படிக்க எனக்குத் துணிச்சல் வரவில்லை. கணினியின் திரைக்குப் பின்னாலிருந்து அவரே என் முன்னால் நின்று அதை உரக்க வாசிப்பது போன்ற ஒரு பிரமை எழுந்தது.

மற்றபடி எல்லாம் நலம்…

அந்தப் பண்ணை வீட்டின் கசப்பான, உறைபனிக் குளிர் என் அறைக்குள்ளும் ஊடுருவியது போல் இருந்தது. துப்பாக்கிச் சூட்டிற்கு முன்பும் சரி, பின்பும் சரி — அவரின் குரல் மாறவே இல்லை; அதே அறிவுஜீவித்தனமான அமைதி. அதுதான் என்னை உலுக்கியது, பயமுறுத்தியது. வன்முறை அவர் குரலை உடைக்கவில்லை; மாறாக, வன்முறை ஏற்கனவே அவரது ஆளுமையின் ஒரு பகுதியாகத்தான் இருந்திருக்கிறது.

பயத்தில் கணினியை உடனே அணைத்தேன். திரை இருண்ட பின்பும், என் விரல்கள் விசைப்பலகையின் மேல் அப்படியே உறைந்து கிடந்தன.

அன்று அவருடைய மேசையில் காகிதங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த அந்தப் பாரமான கல் — ஒழுங்கைப் பேண வைக்கப்பட்டது என்று நினைத்தேன். உண்மையில், அது தனக்கு அடியில் எதை அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது?

அன்று அந்தக் கம்பளம் வெளிறிக் கிடந்தது. ஆனால், இப்போது என் நினைவுகளில் அதன் அசல் இரத்தச் சிவப்பு நிறம் மீண்டும் திரும்பி வந்திருந்தது. ஒரு சிவப்பு நிறம் ஏன் வெளிறிப் போகிறது? காலத்தால் அல்ல… நாம் அதைக் கவனிக்காமல் கடந்து போகும் அலட்சியத்தால்!

வரலாற்றுத் துல்லியம் புனைவுக்கு யதார்த்தத்தைத் தருகிறது என்று அவர் எழுதியிருந்தார். ஆனால், புனைவின் யதார்த்தம் எங்கே முடிகிறது, நிஜத்தின் கொடூரம் எங்கே தொடங்குகிறது என்று அவர் சொல்லவே இல்லை.

அன்று மன்பிரீத் “விசித்திர நாடகம்” என்று சொன்னபோது, அவரே அந்த நாடகத்தின் ஒரு கொடூரமான பாத்திரமாக உருமாறுவார் என்று நான் சொப்பனத்திலும் நினைக்கவில்லை. அப்போது அது எனக்கு வெறும் ஒரு புத்தகத்தின் தலைப்பாக மட்டுமே இருந்தது!


Discover more from சொல்வனம் | இதழ் 375 | 27 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.