கட்டுரையாசிரியர் குறிப்பு:- இந்த நூல், இந்திரா பார்த்தசாரதி 1980களில் எழுதிய ஆய்வேட்டின் அடிப்படையில் உருவான ஒன்று. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் ஆய்வேடை ஒட்டி உருவான நூலாக வெளியாகி இருந்தாலும், ஆய்வில் பேசப்படும் சில விஷயங்கள் கடந்த நாற்பதாண்டுகளில் பல திசைகளில் விரிந்துள்ளன. பல கருத்துகள் காலாவதியாகிவிட்டன. குறிப்பாக ஆரிய திராவிட வாதம், ஆரிய படையெடுப்பு, இன வாதம் மற்றும் அந்நிய கலாச்சாரத் திணிப்பு போன்றவை இன்று தீவிர அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத காலாவதியான கருத்துகளாக மாறிவிட்டன. இருந்தாலும், ஆய்வின் காலத்தைக் கணக்கில் கொண்டு, நூலில் எழுதப்பட்ட வாதங்களை மட்டுமே கொண்டு எழுதப்பட்ட அறிமுகமாக இக்கட்டுரையை வாசகர்கள் அணுக வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையின் மைய கருத்தான தமிழ் மெய்யியலுக்கும் வைணவ சமயத்துக்கும் உள்ள தத்துவார்த்தத் தொடர்பை மட்டும் கருத்தில் கொண்டு கவனத்துடன் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
**
தமிழ் இலக்கியத்தில் வைணவம் எனும் இந்த நூல் தில்லி பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி சமர்ப்பித்த ஆங்கில ஆய்வேட்டை ஒட்டி உருவக்கப்பட்ட தமிழாக்க நூல். இன்று வரை வைணவம் எனும் சமய நடைமுறையைப் பல வழிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசிட்டாத்வைதத் தத்துவத்தின் நடைமுறை சமயமாக உருவாகி வந்திருக்கும் வைணவம் மனிதனுக்கும் பரம்பொருளான திருமாலுக்கும் உள்ள உறவைப் பற்றிப் பேசுகிறது. அத்வைத தத்துவத்தை ஒட்டியும் அதே சமயம் அதிலுள்ள பொருட்தன்மையான சித், அசித், ஈஸ்வரன் ஆகிவற்றின் உறவை அணுகிய விதத்தில் உள்ள திரிபை கையாண்டதால் விசேஷமான தத்துவம் எனப் பெயர் சூட்டப்பட்டது. விசிட்டாத்வைத தத்துவத்தின் நடைமுறை சித்தாந்தமாக வைணவத்தைப் பார்க்கலாம். வைணவ நெறிக்கு வித்திட்ட பக்தி இலக்கியத்தின் மையக்கொள்கையாகவும் ஆய்வு செய்யலாம். ஆழ்வார்களின் பாசுரங்களில் பொதிந்து கிடக்கும் ரசத்தை பக்தி இலக்கியத்தின் துவக்கமாகவும் இந்த நூல் முன்வைக்கிறது. ஆழ்வார்களின் அமுத மொழியை வேதக்கருத்துக்களுடன் இணைக்கும் பாலமாக வைணவ நெறியை ஆய்வு செய்யலாம். இப்படிப் பல வழிகளிருக்கும் போது, இந்திரா பார்த்தசாரதி வைணவ தத்துவத்தின் ஒரு பிரதான ஊற்று முகமாக அமைந்திருக்கும் வேத மரபு, தமிழ் கவி மெய்ப்பொருள் அழகியல் மரபு மற்றும் அவைதிக மதத்தின் சில விசேஷ கூறுகளைப் பேசுவது வழியாக ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார். பக்தி இயக்கமும் தத்துவமும் தென்னிந்தியப் பண்பாடு மற்றும் வரலாற்றுடன் இணையும் சித்திரம் மிகப்புதுமையாகவும் ரசமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் வழியாக தமிழ் இலக்கியத்தின் மெய்ப்பொருள் அழகியலிலிருந்து கொடுக்கும் தொடர்ச்சி வழியில் ஆழ்வார்களின் அமுத மொழியும் வைணவ தத்துவமும் அமைந்துள்ளதை இந்த நூல் நமக்குக் காட்டுகிறது.
சுவீரா ஜெயஸ்வால் எழுதிய வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நூலிலிருந்து சில கருத்துகளை இந்தக்கட்டுரையில் எடுத்துக்கொண்டிருந்தாலும், இந்தக் கட்டுரை இ.பா அவர்களின் ஆழ்வு மீதான விமர்சனம் கிடையாது. ஒருவிதத்தில் இ.பா நூலின் ஆய்வை அறிமுகப்படுத்தி வைணவத்தின் பன்முகங்களைக் கோர்த்துக் காட்டும் முயற்சி மட்டுமே. வைணவச் சமயம் நெடுங்கால மரபைக் கொண்டது. அம்மரபு பிற பல மூலங்களின் கிளைகளே. வைணவ மரபின் மெய்ப்பாடு, அறவியல், அழகியல் ஆகிய மூன்று பகுதியின் கூறுகள் எப்படி உருவாயின, எங்கனம் வளர்ந்தன எனச் சுட்டிக்காட்டுவது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வைணவத்துக்கு இருந்த பல முனைப் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காட்டுவதற்கான அவசியம் என்ன? ஆழ்வார்களின் வாழ்வையும் வைணவ நெறியின் பக்தி மரபையும் முன் வைப்பதற்கு ஆழ்வார்களின் சரிதையான குரு பரம்பரை வைபவம், உபதேச ரத்தினமாலை போன்ற நூல்கள் மரபான குருகுலக்கல்வியில் அமைந்திருக்கின்றன. ஆழ்வார்களின் வரிசை, அவர்களது கர்ண பரம்பரைக்கதைகள், அவர்கள் பிறந்த நட்சத்திரம், குருகுல வரிசை போன்றவை இந்த மூல நூல்களில் சொல்லப்பட்டிருந்தாலும், சில வரலாற்றுத் தகவல்களோடு இவை முழுமையாக ஒத்துப்போவதில்லை. ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் வாழ்ந்த காலத்தை பக்தி காலகட்டத்துக்கு (கிபி ஏழாம் நூற்றாண்டு) ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அமைத்திருப்பதாக குரு பரம்பரை வைபவம் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களின் கூற்றுப்படியும், மொழியியல் ஆய்வு வழியாகவும் வைணவ பிரபந்தங்கள் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என வகைப்படுத்தியுள்ளனர். ஆனாலும், ஆழ்வார்கள் கால வரிசை, அவர்களது பிறப்பிடம், பாடல் பெற்ற கோயில்களின் வரலாறு, நித்திய கைங்கர்யங்களை தொகுத்து வைக்கும் கோயிலொழுகு போன்றவற்றை ஆவணமாகக் கொள்ளமுடியும். மேலும், ஆழ்வார்களின் பாடல் அழகியலும், கருத்தியலும் தமிழர் பண்பாட்டு மரபோடு மிகவும் வேறுபட்டது எனும் கூற்றும் மரபான கருத்தாக இருந்து வந்துள்ளது. இந்திரா பார்த்தசாரதியின் இந்த ஆய்வின் மூலம் நம்மால் வைணவத்துக்கு என ஒரு அழகியல் மற்றும் அறவியல் மரபுத் தொடர்ச்சியை தமிழர் இலக்கியங்களிலிருந்து உருவாக்க முடிகிறது.
மேலும், ஆழ்வார்களின் பாசுரங்கள் வேதங்களின் சாரம் என்பது மரபாகச் சொல்லப்படுகிறது என்றாலும் பக்தி இலக்கியத்தின் சில கூறுகளுடன் அவை இயைந்து போகின்றனவா எனும் கேள்வியும் ஆய்வும் இந்த நூலில் உள்ளன. குறிப்பாக, கர்ம வினைப்பயனும், சரணாகதியும் இருவேறு வழியிற் வீடுபேற்றை முன்வைக்கும் கருத்தாக்கங்கள். அதேபோல, இருத்தல் மற்றும் இன்மை சார்ந்த தத்துவார்த்தக் கேள்விகளை முன்வைக்கும் நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கான நேரடி தொடர்ச்சி வேதத்தில் உள்ளதா எனும் கேள்வியையும் இ.பா அலசுகிறார்.
ஆழ்வார்களின் பக்தி இயக்கம் முதல் பகுதியாகவும், ஆழ்வார்களின் தத்துவம் இரண்டாம் பகுதியாகவும் இந்த நூலில் அமைந்துள்ளன. இதில் முதல் பகுதியில் மூன்று இயல்கள் உள்ளன.
1) தமிழ்நாட்டில் ஆழ்வார்களுக்கு முன்னர் இருந்த திருமால் வழிபாடு
2) காலத்தால் முற்பட்ட ஆழ்வார்கள்
3) காலத்தால் பிற்பட்ட ஆழ்வார்கள்.
இப்பகுதி கிட்டத்தட்ட ஆழ்வார்களைப் பற்றிய குறிப்புகளுடன் அமுத மொழியான பிரபந்தத்தில் அவர்களது பங்கைப் பற்றியும் விளக்குகிறது. சங்கத்தமிழ் இலக்கியத்தின் மெய்ப்பொருள் கூற்றுடன் இயைந்து போகும் உணர்வெழுச்சிகளை ஆழ்வாரின் பாசுரங்களைக் கொண்டு இ.பா விளக்குகிறார்.
ஆழ்வார்களுக்கு முன்னர் இருந்த திருமால் வழிபாடு எத்தகையது? அதற்கும் வேதக்கடவுளான விஷ்ணுவுக்குமான உறவு என்ன? திருமால், விஷ்ணு, கிருஷ்ணன், பலராமன், இந்திரன் எனும் கடவுளர்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே பரம்பொருளின் பல அவதாரங்கள் / நிலைப்பாடுகள் எனும் கருதுகோள் எப்போது உருவானது? ஆரியக் கடவுள் திராவிடக்கடவுள் எனும் சித்தாந்தங்களை கடவுளரின் வரலாற்று வரிசை எனக்கொள்ள முடியுமா? ஆரியக்கடவுள் கருத்தாக்கம் தோன்றும் முன்னரே திராவிடக்கடவுள் பற்றி குறிப்புகள் என்னென்ன? இப்படிப் பல கேள்விகளை விரிவான விசாரணைக்கு முதல் பகுதியில் எடுத்துக்கொள்கிறார்.
வேத காலத்தின் தொடக்க நிலையில் இந்திரன் மேலான கடவுளாக வழங்கப்பட்டான். இந்திரனை வழிபடுவதை விட்டுவிடுமாறு ஆயர்களிடம் கூறிய கண்ணன் மலைப் பகுதி ஆயர்குடி மக்கள் தன்னை வணங்கும்படி செய்கிறான். ஒரு விதத்தில் வேதக்கடவுளை தன் வசப்படுத்தும் வழிமுறையாக இது இருந்தாலும் ஆரியர்கள் மற்றும் ஆரியரல்லாத இனக்குழுக்களை ஒன்று சேர்க்கும் சமரச வழிமுறையாகவும் இது தோன்றுகிறது. விஷ்ணு, விண், ஒரு பெரிய பறவை, வி-ஷ்ணு சாணு எனப் பலப்பெயர்களில் வழங்கப்படும் விஷ்ணு எல்லாவற்றிலும் வியாபித்து எல்லாமாக இருப்பவன். முல்லை நிலக்கடவுளாக இருந்த விருஷ்ணி குலத் தலைவன் கிருஷ்ணனுக்கு விஷ்ணுவின் குண நலங்கள் ஏற்றப்படுகின்றன. ஒரு விதத்தில் இனக்குழுவினருக்கான கடவுளர் மீது விண்ணிலிருந்து வந்த கடவுளின் குணங்கள் ஏற்றப்படுகின்றன. இனக்குழுவின் கடவுளுக்கு இது ஏற்றமாகவும் அமைந்துவிடுகிறது. அதுவரை ரிக் வேதத்தில் மட்டுமே விஷ்ணுவும் இந்திரனும் செய்த போர் பற்றிய தகவல்கள் இருந்தன. ஆர்யக்குலக்கடவுளின் சக்தியை இந்திரனிலிருந்து பெற்றதாக பாந்தாயன தர்மசூத்திரம் எனும் நூலில் முதலில் வருவதாக இ.பா கூறுகிறார். எப்படியாயினும் விஷ்ணு எனும் பெயருக்கான சொற்பிறப்பியல் வரலாறு முழுமையான ஒன்றாக அமையவில்லை. பல இலக்கியங்களிலிருந்து எடுத்தாளப்பட்ட அர்த்தமாகவே இது தோன்றுகிறது. ஒரு வகையில் சூத்திரங்களில் மட்டுமே பாடப்பட்டு வந்த கடவுளை ஒரு அவதாரமாக தங்கள் கண்முன் பார்ப்பதற்கும், தங்கள் குலத் தோன்றலாக வரிந்துகொள்ளவும் ஒரு வழிமுறையை அக்கால கவிஞர்களும் இனக்குழுவினரும் உருவாக்கியுள்ளனர். இது இந்திய சமய வரலாறு மற்றும் பண்பாட்டு வரைவில் மிக முதிர்ந்த சிந்தனை முறையாகத் தோன்றுகிறது. மனித குணங்களை கடவுளுக்குப் போட்டுப் பார்ப்பதும், கடவுளின் செயல்களை மனிதத் தலைவர்கள் மீது ஏற்றிப்பார்ப்பதும் மிகுந்து இருந்த காலகட்டம். ஒருவிதத்தில் அனைத்தையும் ஒருங்கிணைத்துக்கொண்டு சமன்வயத்தோடு அணுகும் இந்த இயல்பை இந்திய பண்பாட்டின் மையக்கூற்றாக நாம் வகைப்படுத்தலாம் என ஆசிரியர் கூறுகிறார்.
மேலான கடவுளாக இருந்த வேதக்கடவுளர் அவதாரங்களாக மண்ணில் நடக்க முடியும் எனும் கூறுமுறைகளை சில புராணங்கள் வழியாக நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. வேதங்களின் படி இந்திரன் ஆடாகவும் எருதாகவும் தன்னை மாற்றிக் கொண்டவன். அதே பண்பை திருமாலுக்குப் போட்டுப்பார்க்கலாம். திருமாலின் ஆரம்பகால அவதாரங்கள் விலங்கு வடிவாகவும் பிற்கால அவதாரங்கள் மனித வடிவையும் எடுப்பதை ஒரு வளர்ச்சி நிலையாக வரலாற்று ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். ஆனால் வேத காலத்தின் முற்பகுதியில் திருமாலுடனோ வேறு எந்த ஆதித்தியர்களுடனோ நாராயணன் இணைத்துக் காட்டப்படவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்திரனின் இயல்புகளைத் திருமாலுக்குப் போட்டுப்பார்த்தது போல, நாராயணனையும் திருமாலையும் இணைத்துக்காட்ட வேண்டிய கட்டாயம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் உருவானது என்பது வைணவ ஆய்வாளர்களின் முடிபு. பாந்தாயன தர்மசூத்திரம் எனும் நூலில் இந்த இணைப்பு முதலில் காட்டப்பட்டிருக்கிறது. பின்னர் தைத்திரிய ஆரண்யகம் நூலில் ‘ நாராயணன், விஷ்ணு, வாசுதேவன் என்ற அனைவரும் ஒரே தெய்வத்தின் பல பெயர்கள்’ எனச் சூத்திரம் சொல்கிறது.
அனைத்து நரர்களும் தங்குமிடம், நரர்களாகிய மனிதர்கள் சென்று சேரும் இடம், நரன் அயனம் – முடிவாகச் செல்லும் இடம் என நாராயணனுக்குப் பல பொருட்கள் உண்டு. ‘எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவன் தான் எல்லாவற்றிலும் இருப்பான்’ எனும் இடத்திற்கு விசிட்டாத்வைதம் வந்து சேர்ந்தது இப்படிப்பட்ட சொற்பொருள் கூட்டணியால் மட்டுமே என நினைப்பதற்கு இடமுண்டு. சொற்களின் பொருளைக் கொண்டு இப்படி ஒரு யூகத்திற்கு இடம் இருக்கிறது என்றாலும், முதலாழ்வார்கள் ஒன்றாகச் சேரும் கதையிலும் நான்காவது பொருளாக கடவுளின் இருப்பு அவர்களை அழுத்தியது எனும் தத்துவார்த்தப் பொருளிலும் இதை நாம் பார்க்க முடியும். கடவுளிடம் மனிதன் சென்று சேரும் எளிய வழியை முன்னிறுத்தியது.
நரன்கள் சென்று சேரும் இடமாக இருப்பதால் நாரயணனானது போல, கடவுளர் மண்ணில் இறங்கி வரும் கதைகளான அவதாரக்கதைகளும் உருவாகின. அவதாரங்கள் பத்து எனப் பொதுவாக எடுத்துக்கொண்டால், மச்ச அவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை இருக்கும் நிரையை, விலங்கு எனத் தொடங்கி வழியாக மனித அவதாரமாக சென்று அடைவதையும் கடவுள் சித்தாந்தத்தின் வளர்ச்சியாகப் பார்க்க முடியும். எல்லா அவதாரங்களும் பூமியில் வாழும் உயிர்களோடு தொடர்புடையன. பூமியையும், உயிர்களையும் காக்கும் பொருட்டு உருவாயின. ஒருவிதத்தில் கடவுளுக்கும் உயிர்களுக்கும் இருக்கும் ஒழிக்கவியலாத பிணைப்பை அவதாரக்கதைகள் காட்டுகின்றன. மண்ணிலும் உயிரிலும் உள்ள பிடிப்பை திருமாலின் முக்கியமான தத்துவமாக ஆழ்வார்களும் வளர்த்து எடுத்தனர். இப்படி கடல், மண், காற்று என உயிர்களின் வீடுகளைக் காக்கும் குணமாக கடவுளின் குணம் உருவானது. அப்படி காப்பவன் அந்தர்யாமியாக அனைத்திலும் நிறைந்து இருப்பதைக் கொள்கையாகக் கொண்டு விசிட்டாத்வைதம் விரிவடைந்தது.
எக்காலத்தில் திருமால் வழிபாடு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் பேசும் நிலத்தில் தோன்றியது?
இதற்குப் பல முரணான பதில்கள் இருந்தாலும், தமிழின் மூத்த நூலான தொல்காப்பியத்தின் அவதாரக் கதைகளிலிருந்த திருமால் வழிபாடு தென்னிந்தியாவில் பரவி இருந்ததை காட்டுகிறது. பதிற்றுப்பத்தில் ‘கமழ் குரர் துழாய் / அலங்கல் செல்வன் சேவடி பரவி’ எனத் திருவனந்தபுரத்தில் உள்ள திருமால் கோயிலைப் பற்றி வருகிறது. இந்தப்பாடல் குறைந்தது 2 கி.முவில் எழுதப்பட்டிருக்கலாம். கண்ணன் மற்றும் பலராமன் பற்றி புறநானூறு பாடல்களிலும், சுக்ரீவனுடனான இராமனது மந்திர ஆலோசனை பற்றி அகநானூறு பாடல்களிலும், கண்ணனின் சிறு வயதுக்கதைகள் கலித்தொகையிலும் கூறப்பட்டுள்ளன. சங்கப்பாடல் வரிசையில் இவை மிகப்பழமையானவை ஆகும். வடமொழி இலக்கியங்களில் கூட இல்லாத சில செய்திகள் இவற்றில் இருப்பதைப் பார்த்தால் ஆரியர் இல்லாத வகையில் பிற திருமால் வழிபாடுகள் தென்னிந்தியாவில் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. பிற்காலத்தில் ஆரியக்கடவுள் குறித்த கதைகளுடன் இக்கதைகள் இணைந்திருக்கலாம். பக்தி காலகட்டத்தில் உருவான பிற்கால தத்துவங்களாக அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம் போன்றவற்றுக்கு வலுவான தென்னிந்தியத் தொடர்பு இது போன்ற சங்க இலக்கியக்கதைகளிலிருந்தும், முன்னர் தமிழ் நிலத்தில் இருந்த மாயன், திருமால் வழிபாடுகளிலிருந்தும் அமைந்திருக்கலாம் என்பது ஆசிரியரின் கூற்று.
தமிழ் இலக்கிய வகைகளின் பொருளியலிலும், தத்துவ அடிப்படையிலும், இலக்கிய ரசனையியல் வகையிலும் ஆழமாகத் தோய்ந்த ஒன்றாக பிற்கால வைணவம் உருவானது எனும் கூற்றை நிறுவியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர். இயற்கையின் பல பரிமாணங்களின் புறத் தோற்றங்களான ஐவகை நிலங்கள், அவற்றில் வாழ்ந்த புராதன இனக்குழுக்களின் நம்பிக்கைகள், பொருளாதார நிலைமை போன்ற பலவற்றோடு பிரிக்க முடியாத உறவு கடவுள் வளர்ச்சிக் கொள்கையில் உள்ளது. இயற்கையின் பல்லுயிர் ஓம்பும் தன்மையும், பல ரூபங்களில் அந்தர்யாமியாக நிறைந்துள்ள நாராயணன் எனும் கொள்கையும் இதன் மையம். இவ்வகையில் புறச் சான்றுகள் எதுவும் இல்லாது குணத்தோற்றங்களாக கடவுளின் பல வகையினர் உருவாகத்தொடங்கினர் எனலாம். வேளாண்மையோடு நெருங்கிய தொடர்புடைய கடவுளாக நாராயணன் ஆகும்போது பாஞ்சராத்திர ஆகமத்தின் புற நிகழ்வாக பாஞ்சராத்திர சத்ரா எனும் நரபலிச் சடங்கிலிருந்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சத்ரா எனும் கூட்டுபலி சடங்கு வேளாண் நிலத்தின் உணவை இனக்குழுவுக்கு பகிர்ந்து அளிக்கும் நிகழ்விலிருந்து தொடங்கியிருக்கலாம். ஐந்து இரவுகள் நடக்கும் இந்தச் சடங்கின் குறியீட்டுத்தன்மை பாஞ்சராதிர ஆகமாக ஆகி இருக்கலாம். பாஞ்சராத்ர மரபு ஏறத்தாழ ஆயிரமாண்டுகள் பல படிநிலைகளாக பரிணாமம் அடைந்து வந்த ஒரு தத்துவ – வழிபாட்டு முறை. வைணவ மதத்தின் அடிப்படைகளுக்கு இந்த மரபே அடித்தளமாக அமைந்தது. சுருக்கமாக இது அருவமான தத்துவத் தெய்வம் உருவம் கொண்ட வழிபாட்டுத்தெய்வங்களாக ஆவதற்கான தத்துவ அடிப்படையையும், அழகியல் அடிப்படையையும், சடங்குமுறைகளையும் வகுத்தளிக்கிறது.
பலராமன் மற்றும் கண்ணன் வழிபாடு பழைய தமிழ் நிலங்களில் வீர யுகத்துக்குப் பின்னர் தோன்றிய புகழ் பாடல்களிலிருந்து நிலைபெற்றிருக்கலாம். சங்கத்தமிழ் பாடல்களில் பல புராணக்கதைகளும், விஷ்ணு புராணத்தின் உலக உருவாக்கக் கதைகளும் உள்ளன. திருமாலின் ஐவகை நிலை பற்றி பரிபாடலில் வரும் பாடல்:
பாழ்என, கால் என, பாகு என ஒன்று என,
இரண்டு என, மூன்று என நான்குஎன ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை
இங்கே குறிப்படும் ஐவகை நிலைகளானவை பரம், வியூகம், விபவ, அந்தர் யாமித்துவம், அர்ச்சை என்பவன ஆகும். இவை அனைத்தும் இறைவன் உறையும் நிலை பற்றி குறிப்பன. பரம் எனும் உயர்ந்த நிலையில் இருக்கும் நாராயணன், நித்ய விபூதிகளின் ஆட்சி எல்லையில் வியூகமாக வெளிப்படுகிறான், உலக உயிர்களுக்கு என அவதாரமாக வெளிப்படும் போது விபவ நிலையிலும், அவ்வுயிர்களின் இதயங்களில் இரண்டறக் கலக்கும்போது அந்தர்யாமி நிலையிலும், புற இருப்பாக இறைத்திருமேனிகளாக (கோயில் சிலைகள்) இருப்பதை அர்ச்சை (அர்ச்சனை என்பதை அர்ச்சை நிலையை துதிப்பது) நிலையாகவும் அறியலாம். இவை ஒவ்வொன்றையும் பரிபாடல் குறிப்பிடுகிறது.
பாழ் எனும் சூனியனாக இருப்பவனும் நீ, ஐந்து பூதங்களின் உறைவிடமாகத் திளைபவன் நீ, ஆறு ஞானேந்திரயங்கள், ஏழு தாதுக்கள், எட்டு திக்குகள் , ஒன்பது கோள்கள் என நால்வகை ஊழிகாலங்களான கிருத, திரேதா, துவாபர மற்றும் கலி காலங்களின் ஆய்விலும் நீயே அந்தர்யாமியாக இருக்கின்றாய். கடவுளரை இயற்கையின் கர்மேந்திர மற்றும் ஞானேந்திர வெளிப்பாடாகக் காட்டும் மரபு தமிழின் தனித்தன்மை. ஆரியர்களிடையே தோன்றிய நாராயண வழிபாடு மற்றும் ஆயர்களில்லாத மக்களிடையே தோன்றிய வாசுதேவ கிருஷ்ண வழிபாடும் இணைந்த காலத்துப்பிறகு எழுதப்பட்டதாக இந்த பரிபாடல் பாடல்கள் அமைந்திருக்க வேண்டும்.
தமிழ் மெய்யியலுக்கும் வைணவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
விசிட்டாத்வைத தத்துவம் தனித்த ஒன்றாக உருவாகவில்லை. உபநிடத சிந்தனைகள் காட்டிய ஒருமைப்பாடு, கடவுளுக்கும் உயிருக்கும் உண்டான ஆத்ம சரீரத் தொடர்பு ஒரு இழை. மற்றோரு இழையாக வேத மறுப்புக் கொள்கையினர் காட்டிய ஒரு கடவுள் கோட்பாடு. ஆழ்வார்களின் திராவிட மரபுக் கோட்பாடு இன்னொரு இழை. இம்மூன்றும் சேர்ந்து உருவான கலவையாக நம்மால் விசிட்டாத்வைத தத்துவத்தின் வளர்ச்சிப் போக்கைப் புரிந்துகொள்ள முடியும். திராவிட மரபுக் கோட்பாடு என்பது சங்கத் தமிழ் நிலம் காட்டும் மெய்யுணர்வு நிலைக்கு (மெய்ப்பொருள்) மிகவும் நெருக்கமானது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளுக்குரிய ஒழுக்கங்களின் உயிர்க் கூறுகளாக முறையே புணர்தல், இருத்தல், ஊடல், பிரிதல், இரங்கல் ஆகியவற்றைத் தொல்காப்பியம் விளக்குகிறது. புணர்தல், பிரிதல் ஆகிய இரு உணர்வுகளுக்குள் ஐந்து ஒழுக்கங்களையும் நச்சினார்க்கினியர் அடக்குவார். ஆழ்வார் பாடல்களில் பக்தர்களின் மனத்திற்குள் இறைவன் இரண்டறக்கலந்து காதல் விளையாட்டாக ஆழ்வார்களது அனுபவம் தொடங்குகிறது. அப்படி பிரிக்கமுடியாதபடிக்கு அமைவதைப் புணர்வாகவும், அப்புணர்வு நிலையிலிருந்து பிரிந்து உலகாயத காரியங்களில் ஈடுபடும் போது ஏற்படும் உணர்வைப் பிரிவுத் துயராகவும் நம்மால் பார்க்க முடியும். புணர்தல் நேரம் எனும் அனுபவம் குறைவாகவும், உலகக்காரியங்களில் ஈடுபடும்போது ஏற்படும் பிரிவு நீண்ட காலமாகவும் இருப்பதால் நாலாயிரப்பாசுரங்களில் பிரிவு அதிகம் பேசப்பட்டுள்ளது. சங்கத் தமிழ் பாடல்களிலும் பிரிவு சார்ந்த பாடல்களே அதிகம். அப்படி பரத்துவக்கடவுளைப் பாடும் நித்தியசூரிகளைப் போல, அர்ச்சையிலும், அந்தர்யாமியாகவும் நாராயணனை உணரும் போது ஆழ்வார்களுக்குப் பலவிதமான உணர்வு நிலைகள் ஏற்படுகின்றன.
கிட்டத்தட்ட நாராயணனும் பத்து அவதாரங்களும் ஆழ்வார்களுடனேயே வாழ்ந்தது போலத் தோன்றும்படி அவர்களது பாடல்கள் உள்ளன. ரூபமாக இப்போதும் ராமர் ராவணுனுடன் போருக்குச் செல்கிறார் என நினைத்து போருக்குத் தயாரான குலசேகர ஆழ்வார் முதல் தன்னுடனேயே அரூபமாக இருப்பவராக நினைத்திருந்த நம்மாழ்வார் வரை இக்கூற்றைக் காணலாம். உள்ளுறைத் தெய்வங்களாக இருந்ததால் நொடிப்பிரிவும் நீண்ட காலப் பிரிவாக அவர்களுக்குத் தெரிந்தது. அவர்களது உலகத்திலிருந்த பொருட்கள் எதுவும் வெறும் அசித் அல்ல. சித்துடன் இணைய வைக்கும் ஈஸ்வர ஸ்வரூபங்கள். வேள்வியில் அமைந்த யாக குண்டமும், உணவுக்குத் தேவையான நெருப்பும் ஒன்றான இறைவனை அவர்களது அகத்துடன் இணைக்கும் வழிமுறைகள். மண்ணும், விண்ணும், வாயுவும், நீரும் இறைவனோடு உயிரை இணைக்கும் வழிகளே. ஆழ்வார்கள் தங்களது பெயருக்கு ஏற்ப இறைவனை தங்களுக்குள் ஒருவராக ஆழ்ந்து உணர்கின்றனர். அப்படிப் பாடப்பட்ட ஈரத் தமிழ் பாசுரங்களை ஆழ்வார்களின் அமுதமொழி என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட அனுபவத்தில் ஆழ்வார்களுக்கு நாராயணன் மீதான காதல், பரிவு, விலக்கம், தயை எல்லாம் உருவாகின்றது. அகப்பாடல்களின் தலைவன் தலைவியின் காதலையும், பிரிவு ஏக்கத்தையும் தொடர்ந்த ஒரு உணர்வாக ஆழ்வார்களின் பக்தி இருந்தாலும், பெயர் சொல்லி தனித்தன்மையுடன் இனங்காணும் மரபு அங்கு இல்லை. அவன், அவள் என்று அவர்கள் சுட்டப்படுகிறார்கள். பக்திக் கவிஞர்களான ஆழ்வார்கள் இந்த மரபை மாற்றினர். கடவுளின் பெயரும், அவதாரச் செயல்களும், குண நலன்களும் பாசுரங்களில் அதிகம் பாடப்பட்டன.
தலைவன் தலைவி எனும் நிலையிலிருந்து மேம்பட்டு பக்தன் நாராயணன் எனும் இடத்திற்கு பக்தி காலகட்டம் மாற்றம் கொண்டது. ஆசிரியரின் கூற்றுப்படி சங்கப்பாடல்களின் உணர்வுகளும் அகண்ட உருவம் பெற்று பக்தி இலக்கியமான ஆழ்வார்களின் அமுத மொழியில் வார்க்கப்பட்டன. உதாரணத்திற்கு, தத்துவவாதியும், மெய்யுணர்வுக் கவிஞருமான நம்மாழ்வார் தம்முடைய எல்லாப் பாசுரங்களிலும் பிரிவு உணர்ச்சியையே, பழைய அக மரபில் உண்மையும் நம்பகத்தன்மையும் கூடிவரும் முறையில் விளக்குகிறார். தன்னையே நாயகியாக வெளிப்படுத்தும் அவருடைய அனுபவம் முழுமையானது. அரூபமாக நாராயணன் அவருடனேயே இருக்கின்றான்.
வெறிவிலக்கு, அறத்தொடு நிற்றல், உடன்போக்கு எனும் துறைகள் விவரிக்கும் அகப்பாடல்களைத் தொடர்ந்து நம்மாழ்வார் பாடல்களிலும் இப்படிப்பட்ட ஒப்புமைகளை ஆசிரியர் முன் வைக்கிறார். தலைவியுடன் கூடிய பின்னால், அவளை மணப்பதற்கு விரும்பும் தலைவன், பொருள் காரணமாகச் சிறிது காலம் அவளை விட்டுப் பிரிகிறான். அச்சிறு பிரிவைக் கூட தாங்காத தலைவி அவனை நினைத்து மனத் துயரில் வாடுகிறாள். அவளுடைய மேனி ஒளி குன்றி பசலை பாயவே, அவளுக்கு ஏதோ துன்பம் நேர்ந்து இட்டது என்று கருதிய நற்றாய், செவிலித்தாய், பிற உறவினர்கள் ஆகியோர் குறிபார்க்க கூட்டுவிச்சியை அழைக்கின்றனர். தலைவிக்கு காதல் நோய் எனக் கூறி அவளை அனுப்பிவிடுகிறாள் தோழி. இது வெறி விலக்கு எனும் துறை. திருவாய்மொழியிலும் திருவிருத்தத்திலும் நம்மாழ்வார் இத்துறையில் பாசுரங்கள் அமைத்துள்ளார்.
திசைக்கின்ற தேயிவள் நோய; இதுமிக்க பெருந்தெய்வம்
இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது
திசைப்பின்றி யேசங்குசக்கர மென்றியவள் கேட்கநீர்
இசைக்கிற்றி ராகில் நன்றே இல் பெறும் இது காண்மினே
திருமங்கை ஆழ்வார் பக்தனுக்கு ஏற்பட்டது பிரிவு நோய் என்கிறார். பரம்பொருள் மட்டுமே இலக்கு எனவும் வேறு எந்த பொருள்களோடும் சமரசம் இல்லை என்றும் தெரிவிக்கிறாள். ஒவ்வொரு மனத்திலும் இடைவிடாது நடக்கும் குருக்ஷேத்திரப்போரான நல்லதுக்கும் கெட்டதுக்குமான போரை சக்கரம் என்கிறாள்.
அறத்தோடு நிற்றல் என்பது தலைவியின் காதலைப் பற்றி பெற்றோரிடம் கூறும் தோழியின் செய்தி அறிவிப்பாகும். திருவிருத்தத்தில் இத்துறையில் ஒரு பாசுரம் உள்ளது. தன் களவுக் காதலைத் தோழியிடம் கூறித் தன் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி அதன் மூலம் பிறருடன் மணம் பேசப்படுவதையும் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறாள்.
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற உண்ட பெரு வயிற் றாளனை வாவகி மாட்டு
இருங்குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற
பெருங்கிறி யானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே
சம்பந்த ஞானம் என்பது இறைவனுடன் உறவு பூண நினைக்கும் சித்தின் தெளிவு. இங்கு வெண்ணை திருடும் செயல் என்பது பக்தனின் ஆன்மாவைத் தேடி அதைத் திருடும் இறைவனின் செயலைக் குறிக்கிறது. மனித ஆன்மா தசை, குருதி, இவற்றால் மூடப்பட்ட உடம்பினுள் இருப்பது போல, நன்கு முறுக்கேறிய கயிற்றால் கட்டப்பட்டு உறியில் மண்பானையினுள் வெண்ணெய் உள்ளது.
கீழுள்ள சங்கத்தமிழ் இயல்புகளை விரித்தெடுத்து ஆழ்வார் பாசுரங்களில் நயம்பட இணைத்துள்ளார் ஆசிரியர். இவை வெறும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளும் வகைமையை மட்டும் சார்ந்ததல்ல. மாறாக, மனித மனதின் பரிணாம வளர்ச்சியையும், இறைவனின் படிநிலை வளர்ச்சியையும் காட்டுகிறது. நெஞ்சோடு கிளைத்தல், ஆற்றாமை, கூடல் இழைத்தல், நன்னிமித்தம், பொழில் கண்டு மகிழ்தல், தூது எனும் பலத் துறைகளின் ஏற்றத்தை பக்தன் நாராயணன், பிரபத்தி, உபாயம் உபேயம் எனும் பல வைணவ கோட்பாடுகளுடன் இணைத்துக்காட்டியுள்ளார்.
அறவியல் மனிதனின் தேர்வு
மனிதனின் அனுபவம் முழுவதையம் ஒன்றுபட்ட நிலையாகத் தருக்க நெறி குறுக்கியுள்ளது. அறச் சிந்தனையை அறிவுக்கூர்மை நிறைவு செய்யாது. தருக்க நெறிப்படி சத் (உண்மை) என்பது மிக உயர்ந்த தத்துவம். ஆனால் மனித வாழ்வின் ஆழமான மதிப்புகளை சீர்தூக்கிப்பார்க்க அரூப நிலையில் உள்ள சத் உதவாது. கடவுளை விளக்குவதற்கு அவனை அரூபத்திலிருந்து உண்மை உலகுக்குக்கொண்டு வர வேண்டும். இதை சாத்தியப்படுத்த அறத் தத்துவம் தேவைப்படலாம். வேதங்களைப் பொருத்தவரை முன்னமே விதிக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு ஏற்ப ஒவ்வொருவனும் கடமையைச் செய்தால் சுவர்க்க இன்பங்களை அடைய முடியும். நன்மைகளின் கூர்முனையாகவும் ஆதாரமாகவும் கடவுள் விளங்குகின்றான் என வேதாந்தம் கூறுகிறது, உயிர்கள் அனைத்திலும் புகுந்து உள்தளமாகப் பரவியுள்ள இறைவனுக்கு ஓர் கடமை உள்ளது. மனிதனை திருத்திப் பணி கொள்ளும் கடமை. அப்படிப்பட்ட செயலைச் செய்ய பக்தனைத் திருத்தி அற வழியில் நடக்கச் செய்யும் வழிமுறைகளை இறைவனின் கோட்பாடு கொண்டிருக்க வேண்டும்.
இல்லது முள்ளதும் அல்ல தவனுரு
எல்லையி லந்நலம் – புல்குபற் றற்றே
கடவுள் இருக்கிறான், உண்மை உள்ளது எனும் நிலையில் மட்டுமே மனிதன் பார்க்காமல் முடிவில் பக்தனின் நலம் என்பதே முக்கியம் எனும் நிலைக்கு சில கோட்பாடுகள் உருவாக வேண்டியது அவசியம். கர்மவினைக் கோட்பாட்டின் விதிமுறைகளை ஆழ்வார்கள் மீறிச் செல்கிறார்கள். இதில் தான் வேத கருத்துகளை மேலும் வளர்த்திச் செல்லும் திசையில் ஆழ்வார்கள் பயணிக்கின்றனர். தன் எதிர்காலத்தை உருவாக்குவதும் அழிப்பதும் தனி ஒருவனிடம் உள்ளது எனும் இடத்திற்கு பக்தியின் வீச்சை கொண்டு செல்கிறார்கள். கர்மா என்பது முற்றிலும் எதிர் செயல். அதாவது, தனி மனிதனின் எதிர்காலத்தை ஆக்கும் திறன் அவனிடம் மட்டுமே உள்ளது என்பதை மறுப்பது கர்மவினை. இறைவன் அருளைப் பெறுபோது பெரிய பாவங்களையும் மீறி மீட்சியை அடைய முடியும் எனும் கோட்பாட்டை ஆழ்வார்கள் அடைந்தனர்.
ஒரு பாசுரத்தில் தான் செய்த தவறுகளையெல்லாம் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பட்டியல் இடுகிறார். அறவியல் ஞானத்தின் படி தீமைகளை அப்புறப்படுத்துவதில் தான் இறைவன் அளிக்கும் மீட்சி உள்ளதே தவிர பழங்கணக்குகளைப் பார்ப்பதில் இல்லை. ஆழ்வார்கள் காட்டிய கடவுள் அவர்களுள் ஒருவன். கடவுளின் உயரத்தையும் இருப்பையும் அடைவதும் பிரிவதுமாக அவர்களது உணர்வனுபவங்கள் இருந்திருக்கின்றன. அப்படி ஒரு அனுபவத்துக்கு உடல் என்பது அத்தியாவசியமான ஒன்றாகிறது. ஆனால் கடவுளை அடையும் தோணியாகவும், கடவுளை அடைய கடக்க வேண்டிய நதியாகவும் உடல் அவனுக்கு அமைந்திருக்கிறது. உடம்பு என்பது புற வடிவத்தைக் குறிக்கும் குறியீடு மட்டுமல்ல. ‘உடல் மிசை உயிரெனக் கரந்தனன்’ என்கிறது திருவாய்மொழி. வைணவ தத்துவத்தின் சரீர சரீரி கோட்பாடு என்பது இருப்பு நிலையையும் உயிர் நிலையும் மாறி மாறிக் காட்டுகிறது. மேற்கத்திய இருத்திலியல் கோட்பாடோடு இ.பா ஒப்புமை காட்டும் இடம் அதனுள் இருத்தல் அதற்காக இருத்தல் என்பதை உணர்த்துகிறது.
எனதாவியார்? யான் யார்? எனும் இடத்தில் நம்மாழ்வார் தன்னையும் ஆத்மாவையும் பிரிக்கும் இயல்பைக் காட்டுகிறார். இதில், எனது ஆவி, என்பது கடவுளுக்கு உரியது. கடவுளைச் சார்ந்திருப்பது. அது தனித்து இயங்க முடியாதது. ‘அடியேனுள்ளான், உடலுள்ளான்’ எனும் இடத்தில் தானும் உடலும் இரு உண்மை இருப்புகள் எனும் விசிட்டாத்வைத கொள்கையைக் காட்டுகிறது. இதில் ஆத்மா/ஆவியின் இயல்பு கடவுள் சேர்ந்திருப்பது/சேரத்துடிப்பது/சேராததை நினைத்து வருந்துவது. ஆவிக்கொரு பற்றுக்கொம்பாக அவனது பரதந்திரியம் அல்லது இயக்கம் அமைந்திருக்கிறது.
இந்த இரு நிலைக்கோட்பாட்டை Bicameral brain எனும் மூளையின் இருவித செயல்பாட்டகம் சார்ந்தும் நம்மால் பார்க்க முடியும். பிரக்ஞையின் பரிணாம வளர்ச்சியை ஆய்ந்து வந்த ஜூலியன் ஜேய்ன்ஸ் 1976 ஆம் ஆண்டு இந்த கோட்பாட்டை உருவாக்கினார். பரிணாம வளர்ச்சியின் போக்குக்கு ஏற்றார்போல மனிதப் பிரக்ஞையும் வளர்ந்ததை ஒரு கோட்பாடாக முன்வைக்கும் அவர், கிட்டத்தட்ட மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனித பிரக்ஞையில் ஏற்பட்ட சமன்வயவாதம் இருவித மூளை இயக்கங்களை ஒன்றிணைத்தது என்கிறார். அதுவரை, வலது மூளை சொல்வதை உடலுக்கு வெளியே இருந்து வந்த கட்டளைகள் / கடவுளின் ஆணைகள் என்பதாக இடது மூளை புரிந்து செயலாக்கி வந்ததால் உருவான எதிர்ப்பற்ற தன்மை, மதக் கோட்பாடுகள், குருமார்களின் செய்திகள், ஆண்டவனின் கட்டளைகள் போன்றவையாக அவர் பகுக்கிறார். ஒரு கட்டத்தில் பிரக்ஞையின் சுய இயக்கம் சார்த்த தன்னுணர்வு வந்ததும் இருவேறு மூளைகளும் ஒரே உடலுக்குள் இயங்கி ஒன்றோடு ஒன்று இணைந்து மனித இயக்கத்தை சமன்படுத்தியது என்பது ஜூலியனின் கோட்பாடு. நவீன நனவியலில் மூளையின் இவ்விரு விதமான செயல்பாடுகளும் பிரிவினைகளும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருவதால் இந்த கோட்பாடு தனது சாத்தியங்களை அண்மைக்காலத்தில் இழந்துவிட்டது. ஆனாலும், ஒரே உடலில் அடைபட்டுக்கொண்ட இருவித மூளைப்பகுதிகளும் உருவாக்கும் கற்பனை சாத்தியங்கள் அதிகம் உண்டு. ஒருவிதத்தில் ‘தானும் யானும்..கலந்து அழிந்தோம்’ என நம்மாழ்வார் சொல்வதைக் கொண்டு ஒரு உடலுக்குள் இருக்கும் ஆவி அடையத்துடிக்கும் கடவுளையும், மற்றொரு பகுதி உடல் சார்ந்த உலகியல் இயக்கங்களில் ஈர்க்கப்படுவதோடும் நாம் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இந்த தொடர் சமரை ஆழ்வார்களின் பாடல்களில் பிரதானமாகக் காணலாம் என இ.பா முன்வைக்கிறார்.
உணர்ந்துணர்ந்துரைத் துரைத் திறைஞ்சுமின்
மனப்பட்ட தொன்றே
எனும் படி, உனது சொந்த மதிப்புகளுக்குத் தோற்றமாக உனது சொந்த அனுபவமே உள்ளது என்று பொருளைக்கொடுக்கும் பாசுரம். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உளத்தொலைவை உருவாக்கிட, உளவியல் பூர்வமான நிகழ்வாக செளலப்பியத்தை (இறைவன் அடைவதற்கு மிகவும் சுலபமானவன்) இறைவனின் பண்புகளுள் ஒன்றாக ஆழ்வார்கள் பாடுகின்றனர். மண்ணுலகத் தொடர்பு உடைய இறைவனாக இருப்பதால் அவனை அடைவது மேலும் சுலபமான ஒன்றாகிறது. கைங்கர்யம் எனும் வைணவக் கோட்பாடு பக்தியுடன் கூடிய சேவை எனும் பொருள்வரும் செயல்பாடு. அதில் ஈடுபடும் எல்லாருமே நாராயணனைத் தேடிச் சேருவதற்காகக் கூடி இருப்பவர்கள். அவர்களுக்கு சமயம், சாதி சார்ந்த பாகுபாடில்லை. பக்தி மட்டுமே அவர்கள் அனைவரையும் இணைக்கிறது. வைணத்தின் உயரிய அறக்கோட்பாடாக இது பின்படுத்தப்படுகின்றது. கால, இட எல்லைகளைக் கடந்து ஒருவனுள் கடவுளை நெருக்கமான உறவு பூணும் நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையிலான தொலைவு குறைக்கப்படுகின்றது. இது மனிதனை கடவுளை நோக்கி உயர்த்துகிறது. சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இப்பயணத்தில் உண்மைப் பொருளாகின்றன.

அழகியல் – பக்தி என்ற உணர்வு
கடவுள் எனும் கோட்பாட்டின் அழகியல் என்ன? கடவுள் மீட்சி அளிப்பவனாக உள்ளான். அதே சமயம் குலத்தலைவனான அவனது பரிணாமப் பாதையில் அவன் அரசனும் கூட. அவதாரமாக அவன் மக்களை ஆண்டு வந்திருக்கிறான். அப்போது அவன் அறநீதி சார்ந்த விதிகளை உருவாக்கி உள்ளான். மனித மீட்சிக்கானப் பாதையில் செயலின் முதன்மை நோக்கமாக கர்மா உள்ளது. அவன் தவறான நோக்கத்தில் தன்னைச் செலுத்திக்கொள்ளும்போது அற நெறிக்கு எதிராகச் செல்கிறான். அதனால் வீடுபேறு அடையாமல் போகிறான். ஆனால் அவனை அப்படியே விட்டுவிட முடியுமா? மனிதனின் முயற்சி என்ன? கர்ம வினைப்பயனை மீறி அவன் செயலாற்றி வீடு பேறு எனும் இன்பத்தை அடைய முடியுமா? கடவுள் மீது எல்லையற்ற கருணையை அவன் வைத்துக்கொள்ளும் போது வீடுபேறுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அன்பு, கருணை, அழகு மூன்றின் மொத்த வடிவமாகக் கடவுள் அமையும் போது புதிய கடவுள் கோட்பாடு ஒன்று உருவாகிறது. இதுவே கடவுள் சார்ந்த அழகியலுக்கான தொடக்கமாக இருக்கலாம் என ஆசிரியர் கருதுகிறார்.
நீலத்தடவரை மேல் புண்டரீக நெடுந்தடங்கள்
போல பொழிந்தெமக் கெல்லா இடத்தவும், பொங்கு முந்நீர்
ஞானப் பிரான் விசும் புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம் பிரான் கண்ணின் கோலங்களே
உண்மைப்பொருள் என்பது என்ன? மேற்கூறிய திருவிருத்த பாசுரத்தில், அருவி நீரோடும் தாமரை மலர்களோடும் கூடிய ஒரு மலையைத் தலைவி கண்டது உண்மை அனுபவம். அது மலையல்ல. அவளுடைய தலைவனான நீலநிறக் கடவுள் என்று அனுபவ மூலமாக அவள் உணர்ந்ததும் உண்மைப்பொருள். எதிர் பெய்து பரிதல் எனும் சங்கத் தமிழ் கோட்பாட்டின் படி உருவ வழிபாடு என்பது பிரிவு காலத்தில் தலைவனுடன் தொடர்புடைய பொருட்கள் அனைத்தையும் பார்த்து அவனை நினைத்து துயறுரும் / பரிதல் நிலை. ஆழ்வார்களுக்கு இப்படிப் பல பொருட்கள் அவர் நினைவின் ஞானப்பிரானை ஞாபகமூட்டுகிறது.
அறிந்துகொள்வதில் அல்ல அனுபவிப்பதில் தான் அழகியல் உருவாகிறது. ரசக் கோட்பாடு என்பது அழகியல் இன்பம். அவனை அறிந்துகொள்வதை விட அனுபவிப்பது பேரின்பத்துக்கு வழிவகுக்கும். கடவுளை ஆனந்த வடிவமாக உபநிடதங்கள் விளக்குகின்றன. இந்த ஆனந்தத்தை உணரும்போது பக்தி கூட ரசமாக மாறுகிறது. இறைவன் அறியக்கூடியவன் எனும் நிலையிலிருந்து அனுபவித்து ரசித்து ஆனந்தத்தை உருவாக்கக்கூடிய நிலைக்கு உயர்த்தபடுகிறான். பாகவதம் இந்த நிலையை நன்கு உணர்த்திய நூல். அவன் பக்தனின் மனம். விஷ்ணுவின் புகழையே அந்த பக்தனின் மொழி விளக்குகிறது. கடவுளின் புகழ் மொழிகளைக் கேட்கவே அவனது காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரம்-ஆதேயம், நியமக-நியம்ய, சரீர-சரீரி, சேஷ-சேஷி உறவு எனும் பல படிநிலைகளில் இறைவனுக்கும் பக்தனுக்கும் உண்டான உறவை அழகியல் / பக்தி மரபு விளக்குகிறது.
மெய்ப்பொருள் இயல் (உலகியல் தொடர்பு), அறவியல், அழகியல் ஆகிய மூன்றும் சமன்வயமாக செயலாற்றி உருவான கோட்பாடாக விசிட்டாத்வைத மரபு விளக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ் மரபின் மெய்யான தொடர்ச்சியாளர்களாக ஆழ்வார்கள் உள்ளது கண்கூடு. பக்தி என்பது தன்னளவில் ஒரு திராவிடக் கோட்பாடு என்பதும், சாதி வேறுபாடுகளின்றி மிக எளிய மனிதனுக்கும் அணுக்க உறவு கொள்ளும் சாத்தியத்தை உருவாக்கியதிலும் இக்கோட்பாடு முதன்மை வகிக்கிறது என்பதும் நூல் ஆசிரியரின் கூற்று. சமூக ஒன்றிணைந்த செயல்பாடுகள் வழியாக அழுத்தம் பெறும் மனிதனின் அடிப்படையான உணர்வுகள் என்பதை தமிழ் மரபு மெய்ப்பாடு எனத் தொகுத்துள்ளது. ஒரு விதத்தில் மனதிற்குள் உண்டாகும் உணர்வை உடம்பில் வெளிப்படுத்திக் காட்டுவது மெய்ப்பாடு. இந்த மனித உணர்வுகளை உலகப்பொதுமையான கடவுள் உயிர் எனும் கோட்பாடாக உயர்த்திக்காட்டினர் ஆழ்வார்கள்.
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார்
முன்புநா நதவஞ்சுவன்
மன்னுடை இலங்கையரண் காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நானறிவேன்…
…என்னுடைய பந்தும் சூழலும் தந்து போகு நம்பி!
உள்ளது உவத்தலும், இல்லது காய்தலும் எனும் ஊடல் மெய்ப்பொருளை திருவாய்மொழி பேசும் பாடல். ஊடலின் காரணமாகத் தலைவி (ஆழ்வார்) இறைவனின் அனைத்துச் செயல்களையும் விரித்துரைக்கிறாள். அவனிடம் சினம் கொள்வது போல நடிக்கிறாள். கடவுட் கோட்பாட்டுக்கு அழகு பூர்வமான அணுகுமுறையை இது தருகிறது. புராணங்களில் காட்டும் வீர தீரச் செயல்களையும், பரமபத நாதனின் வைகுண்ட ஏற்றங்களையும் கூறுவதனால் அவனது கடவுள் பண்பு கூடுவதே தவிர, அவனுடன் ஊடிச் சண்டையிடுவதன் மூலம் கிடைக்கும் அந்நியோன்னியம் ஆழ்வாருக்குக் கிடைப்பதில்லை. புராணங்கள் அனைத்தும் தெற்கே தொகுக்கப்பட்டவை எனக்குறிப்பிடும் இ.பா, ஆழ்வார்கள் காலத்துப்பின் பாகவத புராணம் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார். வைதீகச் சமயங்கள் வகுத்த கடுமையான பாதைகளுக்கு எதிரிடையாகத் தோன்றிய பக்தி மக்களுக்குத் தனித்த கடவுளரை உருவாக்கித் தந்தது. பொலிக பொலிக பொலிக என போயிற்று வல்லுயிர்ச் சாபம் எனும்படி கர்மவினைப் பாவங்களிலிருந்து மனிதர்களை காப்பாற்றும் வழியும், மனித வடிவக் கடவுளுடன் காதற்பண்பையும் ஊட்டி மக்களின் மனதை ஈர்த்தது. கலித்தொகை உள்ளிட்ட பண்டைய சங்கப் பாடல் சிலவற்றிலும் ஆழ்வார் அருளிச் செயலிலும் பொது மக்களுக்கு ஏற்ற வைபவம்களை கடவுளின் பண்புகளாகக்கூறும் பாங்கு அமைந்துள்ளது. சமயஞ்சாராத கவிதைகளுக்காகத் தொல்காப்பியர் தொகுத்த மெய்ப்பாடு, ஆழ்வார்களின் சமயப்பாசுரங்களுக்கு எடுத்தாளப்பட்டது. அது வைணவ நெறிக்கு மிக வலிமையான அஸ்திவாரமாக அமைந்தது என்பது ஆசிரியரின் முடிவாக நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களில் வைணவம், பரிசல் பதிப்பகம், 2022
கிரிதரன்

சிறுகதைகள், அறிவியல் புனைகதைகள், இசை குறித்த கட்டுரைகள், இலக்கிய விமர்சனம் ஆகிய பல தளங்களில் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். எஸ். மகாதேவன் எழுதிய ‘Introduction to Carnatic Music’ (கர்நாடக இசைக்கு ஓர் அறிமுகம்) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே.
இவருடைய சில கதைகள், தமிழ் இலக்கியத்தில் அரிதாகவே காணப்படும் மேற்கத்திய இசை பின்னணியிலும், ஹார்ட் சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியிலும் அமைந்துள்ளன. கிரிதரனின் எழுத்துநடை தீவிரமானதாகவும், தடையின்றி ஓடுவதாகவும், உருவகங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இணைய தமிழ் இலக்கிய இதழான சொல்வனம் டாட் காமின் இலக்கிய ஆசிரியர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். 2019-ஆம் ஆண்டு அரூ அறிவியல் புனைகதைப் போட்டியில் ‘பல்கலனும் யாம் அணிவோம்’ எனும் கதைக்காக வெற்றி பெற்றவர் இவர்; மேலும் 2012-ஆம் ஆண்டு வம்சி சிறுகதைப் போட்டியிலும், 2009-ஆம் ஆண்டு நியூஹாம், லண்டன் சிறுகதைப் போட்டியிலும் வெற்றி பெற்றவர்.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.


மிகவும் அற்புதமான ஆழமான கட்டுரை. மனமார்ந்த நன்றிகள்.