இந்திரா பார்த்தசாரதியின் சிந்தனைகளைப் பற்றி சில சிந்தனைகள்

இலக்கியம், வரலாறு, அரசியல், நாடகம், உளவியல் என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பற்றிய கட்டுரைக்கு ‘இ.பா எனும் அறிவுஜீவி’ என்று தலைப்பு வைக்கலாம் என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இ.பா தனது கட்டுரையில் அறிவுஜீவி என்பது எப்படி இந்திய சூழலில் ஆங்கில புலத்தில் இயங்குவோருக்கு மட்டுமான சொல்லாக சுருங்கி விட்டது, அதற்கு மாற்றாக அறிஞர் எனும் சொல்லை நாம் கைக்கொள்ளலாம் என்று வாதிடுகிறார். ஆனால் அறிஞர் எனும் சொல் ஏதோ ஒருவகையில் மரபுத் தமிழோடு மட்டும் தொடர்புடையதாக இருப்பதினால் அதையும் பயன்படுத்த தயக்கமாக உள்ளது.  

கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள நானூறு பக்க நூலில் எண்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளில் கூறியது கூறல் இருந்தாலும் மிக சுவாரசியமான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன. குருதிப்புனல், வெந்து தணிந்தது காடு, கிருஷ்ண கிருஷ்ணா போன்ற நாவல்களை வாசித்தபோது இபா ஒரு ஃபிராய்டியர் என்று ஏற்பட்ட எண்ணம் இந்த கட்டுரைகளின் வழி மேலும் உறுதியானது. ஒட்டு மொத்த கட்டுரை தொகுப்பின் மீதான வாசிப்பாக இல்லாமல் இ.பா கட்டுரைகளில் முன் வைக்கும் கருத்துக்களுடனான உரையாடலாக சிலவற்றை எழுத விரும்புகிறேன். 

1. நகைச்சுவை விமர்சனம் ஆகும்போது அங்கதம் ஆகின்றது 

மேற்சொன்ன வரியை இ.பா ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். குறிப்பிட்ட கருத்தின் மீதான பார்வை என்றில்லாமல், இ.பாவின் பகடி எழுத்துக்களை பற்றி முதலில் சொல்லிவிட வேண்டும். அவரது பகடி எழுத்துக்கள் சிலவற்றை இந்த தொகுப்பில்தான் வாசித்தேன். ‘ஒரு இன்டலெக்சுவல் கதையும் இன்டலெக்சுவல் விமர்சனம்’ எனும் கட்டுரை அநேகமாக தமிழவனுக்கு எதிர்வினையாக எழுதி இருக்க வேண்டும். அரவிந்த் அடிகாவின் ‘வெள்ளை புலி’ க்கு புக்கர் விருது வழங்கப்பட்டதை ஒட்டி இ.பா அந்த நாவலை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதுகிறார். ‘ஒரு தார்மீக கோபம் இருந்திருந்தால் அந்த கோபம் கலை வடிவம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு நல்ல படைப்பாளிக்கு அவன் படைக்கின்ற பாத்திரங்கள் மீது, அவர்கள் நல்லவர்களோ தீயவர்களோ, அது முக்கியமில்லை, அவர்கள் பால் அவனுக்கு இருக்கிற அடிப்படையான அனுதாபம் கலை ரீதியாக வெளிப்படுவதுதான் இயற்கை. இந் நாவலில் அது துளி கூட வெளிப்படவில்லை’ என்பதே விமர்சனத்தின் சாராம்சம்.  அதற்கு எதிர்வினையாக தமிழவன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்பதை இபாவின் பதில் கட்டுரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ‘நான் பேசுவது உனக்குப் புரிகிறது நீ பேசுவது எனக்கு புரிகிறது இதைக்காட்டிலும் இலக்கியத்தின் மகத்தான வீழ்ச்சி வேறு எதுவாக இருக்க முடியும்’ என்று கிண்டல் செய்கிறார். விமர்சன கட்டுரை முழுக்க பின் நவீனத்துவத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வெறும் பெயர்களை உதிர்க்கும், படைப்பூக்கம் அற்று எழுதுபவர்களின் மீதான தாக்குதல்தான். ‘ஒரு கொசுவின் கனவு என்ற 1200 பக்கங்களுக்கு விரிவாக எழுதப்பட்டுள்ள ஹங்கேரிய நாவலை தமிழ் இலக்கிய பேராசிரியர்களும் நாவல் ஆசிரியர்களும் படிக்க வேண்டும் கொசுவே கனவா, கனவே கொசுவா என்று புஸீனா ப்ளாடிபலாவ் சொல்வது போல் ஒரு எக்ஸ்சிஸ்டன்ஷியல் குழப்பத்தில்  வாசகர்களை ஆழ்த்திவிட்டு கதை முடிவதற்கு முன் ஆசிரியரே இறந்து விடுகிறார் இதுதான் கலையின் பரிபூரண வெற்றி என்கிறார் ரொனால்டோ விளாடிமிர் டெம்பிளிஸ்கி’

டெல்லி கல்விச் சூழலும் இலக்கிய வட்டாரமும் கைக்கொள்ளும் பாவனைகள் குறித்து எழுதிய ஒரு பத்திக்கு ‘ஷேக்ஸ்பியர் சங்கர பாஷ்யம் படித்திருப்பாரா?’ என்று தலைப்பிட்டிருப்பார்.  விதவிதமான பேராசிரியர்கள் பற்றி சொல்கிறார். ‘இன்னொரு வகையான பேராசிரியர்களும் உண்டு அவர்களுக்கு பேச்சைக் காட்டிலும் மௌனம்தான் வலிமையான ஆயுதம். மிகச் சிறந்த அறிவாளி என்று ஒரு பரவலான அபிப்பிராயத்தை தம்மைப்பற்றி உருவாக்கி இருப்பார். இதுவே அவர் இலக்கிய மூலதனம். ஓரிரண்டு வார்த்தைகள்தாம் அவ்வப்பொழுது உதிர்ப்பார். திருமூலர் திருவாக்காக மற்றவர்கள் அதற்கு வியாக்கியானம் காண்பார்கள்.’  

2. சிலப்பதிகார வாசிப்பு

சிலப்பதிகாரத்தின் மீது ஒருவித ஃபிராய்டிய வாசிப்பை நிகழ்த்தி எழுதிய ‘கண்ணகி எனும் கற்பு இயந்திரம்’ என்ற கட்டுரையை குறிப்பிட வேண்டும்.. கல்லூரியில் ‘மழலை பருவத்திலேயே தமிழ் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி என தொடங்கும்’ தமிழறிஞர் ஒருவரின் சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையை பாடம் நடத்தவேண்டிய அசந்தர்ப்பத்தைச் சொல்ல தொடங்குகிறார். ஃபிராய்ட் என்ன சொல்லியிருப்பார் என்று சிந்திக்க தொடங்குகிறார். கற்பை காப்பாற்ற அக்குழந்தை என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்? என்றொரு கேள்வியை எழுப்பி ‘இருபத்தி நான்கு மணிநேரமும் ஜட்டியை கழற்றாமலிருக்கலாம். கண்ணகி காலத்தில் ஜட்டியில்லை என்றால் அரசிலை தவறிப்போய் கூட ஒதுங்கக் கூடாது என்று கவனமாக இருக்கலாம்’ என்பதாகப் போகிறது கட்டுரை.  கண்ணகி ‘வண்ணமற்ற’ இயந்திர மங்கை.  கண்ணகிக்கு அருந்ததி போல கற்புடையவளாக இருக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. திருமணத்தைக்கூட அதை அடைவதற்கான ஒரு சாதனமாகத்தான் பார்க்கிறாள். கோவலன் மாதவியிடம் சென்றதற்காக கடிந்து ஒரு சொல் கூட கண்ணகி பேசவில்லை. கோவலன் அவளை விட்டு பிரிந்திருந்தபோது அவனுக்கு கடிதமோ தூதோ கூட அனுப்பியதாக எந்த தகவலும் இல்லை. கோவலன் கலைஞர்களுக்கு உரிய நிலைகொள்ளா தன்மையும் ரசனையும்  உடையவன். (கூடவே நிலைகொள்ளும் தன்மை உள்ளவனைக் கலைஞனாக ஏற்றுக்கொள்ள நமக்கு என்ன தயக்கம் என்றொரு கேள்வியும் எழுந்தது). கோவலன் ஒரு சாதாரண மனிதனுக்குரிய விருப்பு வெறுப்புகள் உடையவனாக இருக்கும்போது தெய்வமாக வேண்டும் என்ற ஆவேசத்துடன் இருந்த ஒரு பெண்ணை மணந்ததுதான் அவன் குற்றம் என்பதே இபாவுடைய வாதம். காவிய தலைவன் மாசுமருவற்றவனாக இருக்க வேண்டும் எனும் இலக்கணத்தை உடைத்து அவனைப் பலவீனனாக உருவாக்கியுள்ளதில்  இளங்கோவடிகளின் மேதமை புலப்படுகிறது என்கிறார்.  முடிவாக, சிலப்பதிகாரம் குறித்து நமக்கு இருக்கும் பொதுப்பார்வையான கண்ணகியின் கற்பைச் சிறப்பித்து கூறுவதற்கு இளங்கோவடிகள் இதை இயற்றினார் என்பதை விட மனப்பொருத்தம் இல்லாத ஒரு மணவாழ்க்கையின் பாலைவன நிலையைச் சுட்டிக்காட்ட எழுந்ததே இக்காவியம் என்பது இபாவுடைய வாதம். 

காப்பியங்களை எப்படி அணுகுவது  என்பதில் நமக்கொரு குழப்பம் எப்போதும் உள்ளது. நீதி நெறி மொழியும் வழிகாட்டி நூலா? மெய்யியல் நூலா? வரலாற்று தரவுகளுக்கான ஆதார நூலா? புனித நூலா? இலக்கிய பிரதியா? ஒரு காவியத்தை இலக்கிய பிரதியாக அணுகுபவர் பிற வாசிப்புகளின் ஆதிக்கத்தை மறுக்கிறார்.  காப்பியங்கள் மெய்யியல், வரலாறு, அரசியல், வாழ்க்கை நெறி என பல்வேறு இயல்களின் தொகையில் உருவானவை. புனைவே அத்தனை இயல்களையும் இணைக்கும் சரடு. முழுமையாக ஒப்புக்கொடுக்காமால் ஏதேனும் ஒரு கோணத்தை மட்டும் பற்றிக்கொண்டு வாசிக்கும்போது நாம் பிறவற்றை தவறவிடுகிறோம். காப்பியங்களைப் புனித நூலாக அணுகுவதா அல்லது கட்டுடைத்து பொருள்கொள்வதா என்பதோர் அரசியல் நிலைப்பாடு. கட்டுடைத்தலில் அழகியல் வாசிப்பு பின்னுக்கு சென்று அரசியல் வாசிப்பு மட்டும் மேலெழுகிறது.  இதிகாசங்கள் வடிவ அளவிலேயே கட்டுடைப்பை அனுமதிப்பவை என்பதாலேயே அவை வளரும் காப்பியங்கள் ஆகின்றன.  ஃபிராய்டியம், மார்க்சியம் போன்ற கோட்பாடுகளின் வழி இலக்கிய பிரதிகளை கட்டுடைப்பது இலக்கிய பிரதிகளை நமக்கு ஆழமாக துலக்குவதை காட்டிலும் அதற்கு பயன்படுத்தப்படும் கோட்பாடுகளின் வீச்சையும் எல்லைகளையும் நமக்கு உணர்த்துவது. கோட்பாட்டு வழி வாசிப்பை பிரதியை அணுகுவதற்கான ஒரு பரிமாணம் என்று கொள்ளலாம். ஒரே பரிமாணம் என்றல்ல. இ.பாவின் சிலப்பதிகாரத்தின் மீதான உளப்பகுப்பாய்வும் அப்படியான ஒரு சுவாரசியமான இடையீடு. இலக்கிய பிரதிகளின் மீது மேலதிக வாசிப்பை குவியச் செய்யும் வகையில் கோட்பாடுகளைப் பயன்படுத்துவது ஏற்புடைய வழி. 

3. தமிழின் கலாச்சார தனிமை

சமஸ்கிருதம்- தமிழ் இருமை குறித்து இ.பா சில முக்கியமான பார்வைகளை எழுதுகிறார். மேலைநாட்டு பாதிப்பு ஏற்படும் வரை நம் தமிழ் கவிஞர்கள் அனைவருமே தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வடமொழி வெறுப்பு என்று எதுவும் தமிழில் இருந்ததில்லை என்று குறிப்பிடுகிறார். இந்த இருமையே ஒரு காலனிய கட்டுமானம்தான் என்பது அவருடைய பார்வை. இன்று ஆங்கிலம் வகிக்கும் தொடர்பு மொழி இடத்தை அன்று சமஸ்கிருதம் வகித்தது. கேரள நிலப்பரப்பை  சேர்ந்த ஆதி சங்கரர், தமிழகத்து ராமானுஜர் தொடங்கி சமஸ்கிருதத்திற்கு  தென்னிந்தியர்களும் தமிழர்களும் பங்காற்றியுள்ளார்கள். அந்தப் பாரம்பரியத்தை மறுதலிப்பது சரியல்ல.   ‘குறிப்பிட்ட சாதியை குறிப்பிட்ட இனத்தோடும்,  குறிப்பிட்ட மொழியோடும் பிணைத்துக் கூறுவது வரலாற்று பிசகு’ என்கிறார் இ.பா.  சாதியமைப்பை நிலை நிறுத்துவதில் தீவிரம் காட்டிய மனு சாஸ்திரமும் பிராமணீயத்தை கடுமையாகச் சாடிய சார்வாகமும் சமஸ்கிருத மொழியில் இருந்தன.  மார்க்சும் சரி ஹிட்லரும் சரி ஜெர்மானிய மொழியில்தான் எழுதினார்கள். மொழிக்கு பொதுப்படையான இயல்புகளை கற்பித்து அதை ஒதுக்குவது பிழை என்கிறார். இந்தியவியலுக்கு தமிழும் தமிழ்நாடும் அளித்த பங்களிப்புகளுக்கு நாம் உரிமை கோர வேண்டும். 

சமஸ்கிருத வெறுப்பு குறித்து இ பாவின் கருத்துக்கள் நிச்சயம் பரிசீலிக்க தக்கதே. சமஸ்கிருதம் எனும் பெயரே அது ‘உருவாக்கப்பட்ட’ மொழி என்பதை குறிப்பதுதான். இணைப்பு மொழியாக செயல்பட்டது எனும் கூற்று ஏற்கத்தக்கதே. லத்தீன், கிரேக்கம், ஹிப்ரு, சமஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகளுக்கு இல்லாத தனித்தன்மை தமிழுக்கு உண்டு. தமிழ் ஒரு வாழும் மொழி என்பது தான். ஜெயமோகன் ஒரு ஆங்கில கட்டுரையில் தமிழ் குறித்து மகாபாரத கதையிலிருந்து ஒரு உருவகத்தை எடுத்தாண்டிருப்பார். உடலின் ஒரு பாதி தங்கமாக இருக்கும் கீரிப்பிள்ளை. உயிர்த்துடிப்புடன் இருக்கும் ஒரு பகுதியும் உயிரற்று ஒளிவிடும் ஒரு பகுதியும் ஓருங்கே அமைந்த மொழி. வாழும் புதை படிமம். 

 நம் மொழியையும் பண்பாட்டையும் முழுமையாக அறிவதற்கு தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளும் தேவை. சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்ட அளவிற்கு தமிழின் முக்கியத்துவம் உணர்த்தப்படவில்லை என்பதற்கு என்ன காரணம்?  முடிவாக நாம் தனித்துவம் என்று கருதுவது உண்மையில் நம்மை தனிமைப்படுத்துகிறதா? என்றொரு கேள்வியை எழுப்புகிறார். தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள, ‘ஒரு நீண்ட இலக்கிய பாரம்பரியத்துக்கு வாரிசாக தமிழ் இருக்கின்றது என்பதே பிறமொழி பேசும் படித்தவர்களின் அடிமனத்தில் தமிழின்பால் ஒரு பொறாமை உணர்வு நிழலாடுவதற்குக் காரணமாக அமைந்தது, இதனால் தமிழில் குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்று கூறுகின்ற தமிழ் அறிவுஜீவிகள் பிறமொழி பேசும் மாநிலங்களில், குறிப்பாக தில்லியில் சுலபமாகப் பிரபலமாகி விடுகின்றனர். தமிழின் கலாச்சாரத் தனிமை நம்முடைய தனித்தன்மையின் தகுதி என்று சிலர் வாதிடுகிறார்கள் இந்தியா ஒரு நாடு என்று ஒப்புக்கொண்ட பிறகு பொது நீரோட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம். உண்மையில் நாம்தான் நம்முடைய பிரச்சனை.’ என்று தனது வாதத்தை வைக்கிறார். 

இ.பா தமிழர்களின் அதீத தமிழ் பற்று தங்கள் மரபை தாங்கள் அறியவில்லை எனும் தாழ்வுணர்ச்சியிலிருந்து புறப்படுவதாக சொல்கிறார். சிக்கல் எங்கு தொடங்குகிறது? இயல்பான பண்பாட்டு இணையாக இருக்க வேண்டிய தமிழும் சமஸ்கிருதமும் அரசியல் மேலாதிக்கத்துக்கான கருவிகளாக மாறுவதிலிருந்து தொடங்குகிறது. அடிப்படையற்ற மொழி- இன- சாதி இணைப்பாக்கம் காலனியத்தின் பிழையான பிளவுவாத சட்டகம்.‌ தமிழர்களின் தாழ்வுணர்ச்சிச் சிக்கலாக சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காலனியக் கதையாடலை ஏற்று முதல் வினையாற்றியவர்கள் சீர்திருத்த இந்துத்துவ தரப்பு. அதற்கு இறுக்கமான எதிரிவினை ஆற்றியது தமிழ் தரப்பு. நமது அரசியல் சூழலுக்கு வாகாக இருப்பதால் சமஸ்கிருத – தமிழ் துருவப்படுத்துதல் கதையாடலை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டதன் சிக்கல். இது ஏன் நிகழ்ந்தது என்றல்லவா நாம் ஆராய்ந்திருக்க வேண்டும். தமிழின் முக்கியத்துவத்தை பிறர் அங்கீகரிக்கவில்லை என்பதால் நாம் சமஸ்கிருதத்தை அங்கீகரிக்க வேண்டியதில்லை என்பது சிக்கலை எளிமைப்படுத்துதல். இ.பா தமிழை இந்தியர்களும் உலகமும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள ஒரு வித்தியாசமான சிந்தனையை முன்வைக்கிறார். 

4.  ‘கிளாசிக்கல் தமிழ்’ Vs  ‘நவீன தமிழ்’

‘கிளாசிக்கல் தமிழ் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான பாரம்பரியம் என்ற உரிமை உணர்வு உண்டாக  வேண்டும் என்றால்  கிளாசிக்கல் தமிழ்-நவீன தமிழ் என்று பாகுபாடு கட்டாயமாக தேவைப்படுகிறது. சமஸ்கிருதமும் தமிழும் இந்தியா முழுவதற்கும் உரிமையானவை. கிளாசிக்கல் தமிழின்பால் உணர்ச்சிபூர்வமான உரிமைகளை கொண்டாடி, தங்களைத் தொடர்ந்து அன்னியப்படுத்திக்கொண்டு போவது தான் இக்கால தமிழர்கள் தங்களுக்கும் பாரதற்கும் செய்துவரும் துரோகம். கிளாசிக்கல் தமிழை ஒரு குறிப்பிட்ட புவியியல் வரையறையில் அடைப்பதை இக்கால தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.  பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் இடையே உள்ள இடைவெளி தமிழில் இருப்பது போல் வேறு எந்த மொழியிலும் கிடையாது கிளாசிக்கல் தமிழையும் நவீனத் தமிழையும் இரு வேறு மொழிகளாக பார்க்கும் மனப்பக்குவம் வர வேண்டும்.’ 

இ.பா தனது போலந்து அனுபவத்தையும் துணைக்கழைத்து கொள்கிறார். போலந்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. அதைக் கற்றுக்கொண்டு தமிழகம் வரும் ஒருவர் நவீன பேச்சு தமிழை கேட்டால் அவர் கற்ற மொழியும் இதுவும் ஒன்றேதானா என்று குழம்பிப் போவார் என்கிறார். முதலில் இந்த சிந்தனையை வாசித்தபோது மிகவும் புரட்சிகரமான யோசனையாக தோன்றியது. ‘தொன்மை’ தமிழின் மீதான உரிமையை நாம் விட்டுக்கொடுப்பதன் வழி இந்திய அளவிலும் உலக அரங்கிலும் அதற்கொரு ஏற்பு நிகழுமா என்ன. மாறாக எவராலும் சீண்டப்படாமால் போவதற்கே வாய்ப்பு அதிகம். பண்பாட்டு வாரிசுகளான நாமே அதன் மீதான உரிமையை கைவிட்டுவிட்டால் வேறு எவருக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்படாது போகவே வாய்ப்பதிகம். ‘தொன்மைத் தமிழை’ அதன் புவியியல் எல்லைக்கு அப்பால் , ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான, உலகம் முழுமைக்கான மொழியாக கொண்டு செல்ல  வேண்டும் என்பது சரிதான் ஆனால் அதற்கு அந்த மொழியின் பண்பாட்டு வேர் நிலத்திலிருந்து அதைத் துண்டிப்பது எப்படி சரியான முடிவாகும்?  எப்படி சமஸ்கிருத வெறுப்பு ஒரு எதிர்வினையோ இதுவும் எதிர்வினை மட்டும்தான். தொன்மைத் தமிழுக்கும் நவீன தமிழுக்குமான இடைவெளியை குறைப்பதுதான் இன்னும் ஆழமாக வேர்விட வழிவகுக்கும். வேர்கள் நிலத்திலும் அதன் நிழல் இளைப்பாறல் உலகம் முழுமைக்கும் என்பதே தமிழ் சென்று சேர்வதற்கான வழி. அரசியல் மேலாதிக்கக் கருவியாக பண்பாட்டு விஷயங்களை உருமாற்றி வைத்திருக்கிறோம் என்பதால் மாற்றங்கள் மெல்லத்தான் நிகழும். ‘இந்திய இலக்கியம் என்ற ஒருமைப்பாட்டு இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும் என்பது அவருடைய கனவாக இருக்கிறது. ‘அதற்கு நான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் ஒரு சில பண்டிதர்களின் வருவாய் பெருக்க செம்மொழித் திட்டம் ஏற்பட்டது போல் ஆகிவிடும்’ என்று குறிப்பிடுகிறார். இந்தத் தொன்மைத் தமிழ், நவீன தமிழ் இரு மொழிகளாகப் பிரிப்பதும் உலகம் முழுக்க சில பண்டிதர்கள் வயிறு வளர்க்கப் பயன்படுமே அன்றி நடைமுறையில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாது என்றே எண்ணுகிறேன்.  

5. சோவியத்தின் சர்வாதிகாரம் பொதுவுடைமைத் தத்துவத்தின் தோல்வி அல்ல

ரஷ்யாவில் ஏற்பட்ட சர்வாதிகாரம் என்பது மார்க்சியத்தின் தோல்வி அல்ல மாறாக அது ஸ்டாலினின் தோல்வி என்று கருதுகிறார் இ.பா. மார்க்ஸ் கனவு கண்டது தொழிலாளர்களின் சர்வாதிகாரம் ஆனால் ரஷ்யாவில் ஏற்பட்டதோ கட்சியின் எதேச்சதிகாரம். பொருளாதாரப் புரட்சிக்கு பிறகு அரசியல் மறுமலர்ச்சி என்பது மார்க்ஸின் கணிப்பு. தொழில் துறையில் மிகவும் முன்னேற்றம் அடைந்த நாட்டில்தான் தொழிலாளர் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மார்க்ஸ் சொன்னார். ஆனால் தொழில்த் துறையில் மிகவும் பின்தங்கிய ரஷ்யாவில் முதலில் அரசியல் புரட்சி ஏற்பட்டது ஒரு முரண் என்பதால் மார்க்சியத்தின் தோல்வியாக கருதக்கூடாது. தான் ஆளப்படுகின்றோம் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படாமல் ஆளும் அரசாங்கமே சிறந்த அரசாங்கம் என்று காந்தி கூறியதற்கும் கம்யூனிச பரிணாம இறுதி நிலையில் அரசாங்கம் இருக்காது என்று மார்க்ஸ் கூறியதற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்  காட்டுகிறார். இந்திய மக்களுடைய பண்பாட்டை  உணர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என யாரும் உருவாகவில்லை. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அடைந்த வெற்றி இயக்கத்துக்குத் தோல்வியாக அமைந்தது என்று குறிப்பிடுகிறார். ஆகவே மார்க்சியத்தை புறக்கணிக்க முடியாது புதுப்பிக்க வேண்டும் என்கிறார்.

கோட்பாடுகள், தத்துவங்களுக்கு நாம் ஒரு தூய்மையை அளிக்கிறோம்.  கோட்பாடுகளை, தத்துவங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை நடைமுறைச் சவால்களாக மட்டும் குறுக்கி கொள்கிறோம். நடைமுறைச் சவால்களை கணக்கில் கொள்ளாத  கோட்பாடுகள் ஆபத்தானவை.  செயல்முறையாக இயல்பாக்கம் செய்யும் எந்த கோட்பாட்டின் மீதும் எனக்கு ஐயம் உண்டு. மார்க்சியம் போன்ற அரசியல் பொருளியல் கோட்பாடு பல்வேறு ‘மாறுதல்களை’ கணக்கில் கொள்ள வேண்டும். மார்க்சியத்தை அறிவியல் என்று சொல்பவர்களை  கண்டுள்ளேன்.  என் நோக்கில் அது தொழிற்புரட்சியின் காலகட்டத்தில் உருவான ஒரு கருதுகோள் மட்டுமே. இக்காலகட்டத்திற்கு பொருந்தும் சில கூறுகளை உள்ளடக்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொதுவுடைமைவாதிகள் ஜனநாயகத்தில் பங்கெடுத்ததன் வழி மார்க்சியத்தை வீழ்த்திவிட்டார்கள் என்பது முக்கியமான பார்வை. மார்க்சியம் முன்மொழியும் தலைகீழ் புரட்சிகள் ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. இங்கே எல்லாம் மெல்ல உருவாகிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான, பலவீனமான வழிமுறையே என்றாலும் ஜனநாயகத்திற்கு மாற்றாக நாம் வேறொன்றையும் உருவாக்கி விடவில்லை. ஆகவே இந்தியப் பொதுவுடைமைவாதிகள் தேர்தலில் பங்கேற்றது மார்க்சிய நோக்கில் சமரசம் என்றாலும், அதுவே இன்றும் பொது உரையாடலில் கம்யூனிசத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.    

6. தமிழக அரசியலின் பிம்ப வழிபாடு

நிறைய எழுதப்பட்ட விஷயம்தான். நடுகல் வழிபாட்டில் இருந்து நாயக வழிபாடுக்கான வேர்களை காண்கிறார். அரூவ அத்வைத கோட்பாடுகள் கோலோச்சிய இந்திய நிலத்தில் உருவத்தை முன்னிறுத்தும் பக்தி மரபு தமிழ் நிலத்தில்தான் தோன்றியது. தலைவருக்கும் தொண்டருக்குமான உறவை உணர்ச்சிப்பூர்வமான நாயக நாயகி பாவத்தின் நீட்சியாக காண்கிறார். உணர்ச்சி செறிவு தான் கல்லை கலையாக்கும் அற்புதத்தை உருவாக்க முடியும். சந்திரலேகா போன்ற பிரம்மாண்ட செட் போட்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தமிழில்தான் எடுக்கப்பட்டது என்பதையும் இணைத்து காண்கிறார். திராவிட இயக்கங்கள் பிம்ப கவர்ச்சியை முன்னிறுத்தி அதிகாரத்தை அடைந்தன எனும் பார்வைக்கு மாற்றாக ஏற்கனவே இங்கு செல்வாக்கோடு இருந்த வழமையைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. கோவில் விளைவுகள் (விழாக்கள்??), உற்சவங்களோடு தேர்தல் அரசியலுக்கு உள்ள ஒப்புமையை அளிக்கிறார். ‘ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டிருந்தால் உண்மையாகவே அச்சமுதாயப் புரட்சிக்கு காரணமானவர்கள் புத்தரைப் போலவோ அல்லது இயேசுநாதர் போலவோ அல்லது லெனினை போலவோ மிகப்பெரிய சிந்தனையாளர்களாக இருந்திருந்தால் நம்முடைய இலக்கியம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்நிலையில் இருக்காது என்று உறுதியாக கூறலாம். சமூகத்தில் கிடைக்கக்கூடிய சில்லறை பலன்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு இடைக்கால எழுச்சிதான் புரட்சி என்ற போர்வையை அணிந்து கொண்டது எனலாம.’ என்கிறார். பகுத்தறிவின் வழி ஆளுமை வழிபாட்டை மறுப்பதைக் காட்டிலும் தகுதியான ஆளுமையை வழிகாட்டியாக கொள்வது தவறில்லை. தமிழ் மனத்திற்கு உகந்த வழிமுறை அதுவாக இருக்கக்கூடும் என்று இ.பாவின் வழி நான் புரிந்து கொள்கிறேன். ‘இசையிலும் நடனத்திலும் உயர்ந்த தளத்தை எதிர்பார்க்கும் தமிழ்நாட்டு கலா ரசிகர்கள் வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டிருக்கும் சீரிய விமர்சனப் பார்வை மனோபாவத்தை நாடகத்தையும் திரைப்படத்தையும் பொருத்தவரையில் ஏன் மேற்கொண்டு இருக்கிறார்கள்? இதற்கு விடை தேடுவதில்தான் தமிழ் நாடகத்திற்கு எதிர்காலம் இருக்கிறது’ என்று எழுதுகிறார். இன்று  விஜய் முதல்வரானதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் ஒரு காரணம் என்பதாக யோசிக்க சுவாரசியமாக உள்ளது. 

7. இலக்கிய அனுமானங்கள்

இ.பா மரபிலக்கியம், நவீன இலக்கியம் குறித்து சில கூர்மையான அவதானிப்புகளை எழுதியிருக்கிறார்.  ‘பழைய தமிழ் இலக்கியம் தமிழ் நுண்கலைகள் ஆகியவற்றின் வாரிசாகப் பிறந்த நமக்கு அவற்றின் தரத்துக்கு இணையான தகுதி இருந்தால்தான் அவற்றின் இன்றும் மாறுபட்ட புதிய இயக்கங்களை தோற்றுவிப்பதற்கான தன்னம்பிக்கை ஏற்படும்.  ஒரு தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவற்றைப் பற்றியே வாய் வலிக்க பேசிக் கொண்டிருப்பது ஒரு சுலபமான பயிற்சி.’ எனும் கருத்து ஒருவகையில் அவர் முன்வைத்த கிளாசிக்கல் தமிழ், நவீன தமிழ் இருமைக்கு எதிரானது.    

தமிழின் தொடக்ககால நாவல்தான் ‘கமலாம்பாள் சரித்திரம்’ ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ‘பத்மாவதி சரித்திரம்’ ஆகிய மூன்றையும் தமிழின் மூன்று இலக்கிய போக்குகளுக்கான முன்மாதிரியாக காட்டுகிறார். ராஜம் அய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’ தீவிர இலக்கியத்தின் உள் குரலின் வெளிப்பாடு. பிரதாப முதலியார் சரித்திரம் வெகுமக்கள் எழுத்துக்கான தொடக்கம். ‘பத்மாவதி சரித்திரம்’ பிரச்சார  இலக்கியத்தின் தொடக்கம்.  

இன்னொரு அவதானிப்பு. ‘அச்சு இயந்திரம் இலக்கியத்தை ஜனநாயகப்படுத்தியதன் காரணமாக சலுகைகளை இழந்த மேல்வர்கம் தன்னை தனித்து அடையாளப்படுத்திக் கொள்ள ஆமையை போல் உள்பட்ட ஓட்டில் ஒடுங்கிக் கொண்டு கலைக்காக கலை,  நவீனத்துவம் போன்ற கோஷங்களை தற்காப்பு கேடயங்களாக கொண்டது. தொழில் புரட்சிக்கு முன் இந்த உள்வட்ட வெளிவட்ட பாகுபாடு இருந்ததாக தெரியவில்லை.’ என்கிறார். கலை இலக்கிய ரசனையில் தராதரம் எப்போதும் இருக்கும். ஆனால் அவை சார்ந்த மேட்டிமை உணர்வு அவசியமில்லை என்பதே என் பார்வை. 

அறுதியிட்டுக் கூறுவதைவிட உரையாடலுக்கு அழைப்பது இ.பாவின் கட்டுரைகளின் இயல்பாக உள்ளது.

சுனில் கிருஷ்ணன்

ஆயுர்வேத மருத்துவரும், நவீன காந்தியருமான சுனில் கிருஷ்ணன், தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி வருகிறார். பிறப்பு தொடர்பான மரபு, சடங்குகள், மதம், உளவியல், மருத்துவம் ஆகிய பல்வேறு கோணங்களை ஆராய்ந்த அவரது முதல் நாவலான நீலகண்டம், மனித இனத்தின் அடிப்படைப் பிரச்சினை ஒன்றை வெற்றிகரமாக முன்வைத்ததாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. கேந்திர சாகித்ய அகாடமி வழங்கும் இலக்கியத்திற்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர் இவர். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமது காந்தியச் செயல்பாடுகளுக்காக தலாய் லாமாவால் கவுரவிக்கப்பட்டார். இவரது நாவலான குருதிவழி, 2025ஆம் ஆண்டு இறுதியில் யாவரும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.


Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.