மாயமான் என்பது கம்பராமாயணத்தில் கம்பர் பயன்படுத்திய சொல். வனவாசத்தின்போது ராமனும் சீதையும் லட்சுமணனும் தண்டகாரண்யம் என்னும் வனப்பகுதியில் வசித்துவருகிறார்கள். ஒருநாள் மாலைப்பொழுதில் ராமனும் சீதையும் தனித்து உரையாடி மகிழ்ந்திருந்த வேளையில் அவ்வழியாக ஒரு மான் ஓடிச் செல்கிறது. பொன்னிற மேனி கொண்ட அந்த மானின் அழகில் மயங்கிய சீதை, அந்த மானைத் தனக்குப் பிடித்துக் கொடுக்குமாறு ராமனிடம் கேட்கிறாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வேகத்தில் உடனடியாக மானைத் தேடிப் புறப்படுகிறான் ராமன்.
பொன்னிற மேனியோடு ஒரு மான் இருப்பதற்கு வாய்ப்பில்லை என நினைக்கும் லட்சுமணன், ராமனைச் செல்லவேண்டாம் எனக் கூறித் தடுக்கிறான். ஆயினும் அவன் சொல்லைப் புறக்கணித்து ராமன் அந்த மானைத் தேடிச் செல்கிறான். சிறிது நேரத்தில் தொலைவிலிருந்து அவன் அலறும் சத்தத்தைக் கேட்டு லட்சுமணனும் அத்திசையை நோக்கி ஓடுகிறான். அந்தத் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு யாசகனைப்போல வேடம் தாங்கி அந்த இடத்துக்கு வந்த இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். அந்தத் தருணத்துக்குப் பிறகு இராமாயணத்தின் செல்திசை வேறொன்றாகிவிடுகிறது.
ராமாயணத்தில் மாயமான் என்பது ஒரே நேரத்தில் நான்கு அம்சங்களின் கூட்டுப்படிமமாக காட்சியளிக்கிறது. சீதையின் ஆசை, ராமனின் பேரன்பு, லட்சுமணனின் அக்கறை, மாரீசனின் தந்திரம் ஆகிய அனைத்தையும் அத்தருணத்தில் நம்மால் பார்க்கமுடியும். அந்தப் படிமத்தை வேறொரு கோணத்தில் சமகால அரசியலை முன்வைத்து ’மாயமான் வேட்டை’ என்றொரு முக்கியமான நாவலை எழுதியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. ஆனால் அவர் மாயமானை அல்ல, மாயமானை வேட்டையாடும் செயல்பாடுகளைப் படிமமாக்குகிறார். அந்த வேட்டையில் கூட்டாக ஈடுபட்டிருப்பவர்கள் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் ஆர்வலர்கள், கட்சிக்காரர்கள், முதலாளிகள். இப்படி பகுத்துக் காட்டுவதே அப்படைப்பின் சிறப்பம்சம்.
கிராம முன்னேற்றம், எல்லா வகைகளிலும் தன்னிறைவு பெற்ற கிராமம், வாழ்வைத் தேடி நகரங்களை நோக்கி கிராமத்தினர் வருவதற்கான அவசியத்துக்கே இடமில்லாத வகையில் கிராமங்களை மேம்படுத்துதல் ஆகிய எல்லாமே காந்தி காலத்துக் கனவுகள். சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த மாபெரும் கனவை நோக்கியே இருக்கவேண்டும் என்று உளமார அவர் விரும்பினார். ஆனால் சுதந்திர இந்தியாவில், ஒரு வசதிக்காக, மாநில நிர்வாகம், தேசிய நிர்வாகம் என நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல அடுக்குமுறைகளே ஒரு கட்டத்தில் கிராம முன்னேற்றம் என்கிற மாபெரும் கனவை நெருங்கிச் செல்வதற்குத் தடைகளாக மாறிவிட்டன.
ஒரு கனவை அடைவதற்கான செயல்முறைகளை வகுப்பதற்கு முன்பே, உடனடியாக கவனத்தைக் கோரும் பிற செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய நெருக்கடிகளில் அரசு சிக்கிக்கொள்கிறது. எண்ணற்றோரை அரவணைத்துக்கொண்டும் அனுசரித்துக்கொண்டும் தம் செயல்களில் ஈடுபடவேண்டி இருக்கிறது. ஆக்கபூர்வமான விதத்தில் ஒரேஒரு செயலைக்கூட செய்யாத சூழலில், கிராம முன்னேற்றம் தொடர்பான எல்லா வேலைகளும் செவ்வனே நடைபெறுவதுபோலவும் ஒவ்வொரு செயல்திட்டத்தையும் ஆழ்ந்த அக்கறையோடு கண்காணித்து வருவதுபோலவும் தம்மை வெளியுலகம் நம்பும் வகையில் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நம்பிக்கையை ஆழமாக விதைக்க எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறது அரசு. எரியாத விளக்கை அணையாத விளக்காக நம்பவைக்க முயற்சி செய்கிறது. அதற்குச் சாதகமாக சட்டத்தை எந்த அளவுக்குவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வளைத்துக்கொள்ளலாம் என்றும் கருதுகிறது.
சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தொடக்கத்தில் கனவாக இருந்த கிராம முன்னேற்றம் முழு அளவில் நிகழவே இல்லை. எங்கோ நிகழ்ந்த ஒரு சதவீத முன்னேற்றத்தையே ‘முன்னேறுகிறோம், முன்னேறிக்கொண்டிருக்கிறோம்’ என முழக்கமிட்டு பொதுமக்களை நம்பவைக்கும் முயற்சிகள் மட்டுமே நடக்கின்றன. வேட்டைக்குச் செல்லாமலேயே ‘இதோ வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டோம், இதோ தொட்டுவிட்டோம், இதோ கடந்துவிட்டோம், இதோ வென்றுவிட்டோம்’ என வாய்ப்பந்தல் போடுகிறது.
அந்த முழக்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் வகையில் முழக்கமிடுபவர்களின் முகங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறது அரசு. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கை அடையாத, இலக்கை ஒருபோதும் அடைய விரும்பாத வேட்டை நாடகம் நம் சமூகமேடையில் தினந்தோறும் அரங்கேறியபடியே இருக்கிறது. அரசு நிர்வாகத்தின் போலிமுகத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எளிய வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்திரா பார்த்தசாரதி 1980இல் எழுதிய நாவல் இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. இந்த அம்சமே இந்த நாவலின் முக்கியத்துவத்துக்குக் காரணம்.
நாவலின் தலைமைப்பாத்திரம் ஜெயராமன். டில்லியில் படித்து வளர்ந்து, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவன். இந்தியாவின் கிராம முன்னேற்றம் தொடர்பாக உள்ளூர ஆர்வமும் கனவும் கொண்டவன். ஒவ்வொரு கிராமத்தையும் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவதற்கான செயல்திட்டங்களை யோசித்துவைத்திருப்பவன்.
ஒருமுறை இந்தியாவின் மத்திய விவசாயத்துறை அமைச்சர் அமெரிக்காவுக்கு வருகை புரிகிறார். அவர் கலந்துகொண்ட விருந்தில் ஜெயராமனும் கலந்துகொள்கிறான். விருந்து மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடும்போது அமைச்சர் தன்னை இந்தியக் கிராம முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டவராகக் காட்டிக்கொள்கிறார். அவர் சொற்களை உண்மை என நம்பும் ஜெயராமன் தன் மனத்தில் திட்டங்களை அவரிடம் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறான். அவனை மேலும் உற்சாகப்படுத்தும் பொருட்டு போகிறபோக்கில் “உங்களைப்போன்றவர்கள் இந்தியாவிற்குத் தேவை. இந்தியாவின் திட்டக்கமிஷனில் இருப்பதற்கு முற்றிலும் தகுதியானவர் நீங்கள். நீங்கள் இந்தியாவுக்கு வரவேண்டும்” என்று ஆசையை விதைக்கிறார் அமைச்சர்.
தன் தாய்நாட்டுக்குப் பயனளிக்கும் விதத்தில் ஏதேனும் செயலாற்ற வேண்டும் என்ற கனவை உடைய ஜெயராமனுக்கு அமைச்சரின் அழைப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய சொல்லை நம்பி, அமெரிக்க வேலையைத் துறந்து இந்தியாவுக்கு வருகிறான் ஜெயராமன். அவனுடைய ஒரே தங்கை அவன் எடுத்த முடிவை உணர்ச்சிவசப்பட்டு அவசரத்தில் எடுத்த முடிவென விமர்சனம் செய்கிறாள். அவளோடு தங்கியிருக்கும் ஓவியரான சுரேகாவுக்கும் அந்த முடிவு சரியெனப் படவில்லை. அவனுடைய பழைய நண்பன் சுந்தரமும் அவன் எடுத்த முடிவுக்காக விமர்சிக்கிறான். திட்டக்கமிஷனுக்கும் அவன் சந்தித்த அமைச்சருடைய துறைக்கும் தொடர்பே இல்லை என்று குறிப்பிடுகிறான். அவர்களுடைய சொற்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அமைச்சரைச் சந்திக்கச் செல்கிறான் ஜெயராமன்.
முதலில் அமைச்சரைச் சந்திப்பதற்கான வாய்ப்பே அவனுக்கு அமையவில்லை. பலமுறை அலைந்த பிறகே அவரைச் சந்திக்க முடிகிறது. தன் சொல்லை வேதமென நம்பி ஒருவன் இப்படி செய்துகொண்டிருந்த ஒரு வேலையை விட்டுவிட்டு ஓடி வருவான் என அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தொடக்கத்தில் சற்றே அதிர்ச்சியடைகிறார். பிறகு சலிப்பு ஏற்படும் வகையில் அவனுக்குப் பொருந்தாத சில வேலைகளைச் செய்யச் சொல்கிறார். அவன் திட்டக்கமிஷன் வேலை பற்றிய பேச்சை அடிக்கடி எடுப்பதை உணர்ந்ததும் தன்னுடைய அமைச்சகத்திலேயே புதிதாக உருவாகவிருக்கும் ஒரு துறைக்கு அவனை ஒரு அதிகாரியாக நியமிப்பதாகத் தெரிவிக்கிறார். அதை ஏற்க மனமில்லாத அவன் அவருடைய அலுவலகத்திலிருந்து வெளியேறுகிறான்.
அரசுத்துறைகளில் எல்லாச் சந்திப்புகளும் ஏமாற்றத்தில் முடிவடைந்த சூழலில் அவனுடைய இலட்சிய நிலைபாட்டை உணர்ந்த எதிர்க்கட்சியினரே அவனைத் தேடிவந்து சந்திக்கிறார்கள். அவனை ஆதரிக்கவும் முன்வருகிறார்கள். அவனுக்கு உடனடியாக ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை அளித்து, மக்களிடையில் சென்று சேரும் வகையில் சுதந்திரமான பொருளாதாரக் கருத்துகளை எழுதுவதற்கான சூழலையும் உருவாக்கி அளிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ளும்போதே அவனுடைய கனவின் தூய்மையும் இலட்சியவாதமும் களங்கமடைந்துவிடுகின்றன. சில நாட்களிலேயே அவன் ராஜ்யசபை எம்.பி.யாகவும் உயர்வு பெறுகிறான்.
அவனுடைய முக்கியத்துவத்தை அப்போதுதான் ஆளும் கட்சி உணர்ந்துகொள்கிறது. பொருத்தமான நபர்கள் வழியாக வலைவிரித்து அவனை ஆளும் கட்சிக்குள் இழுத்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவன் பிரதமரையே சந்தித்து உரையாடுகிறான். கடைசியில் அவனுக்கு அவன் நினைத்த வாய்ப்பே தேடி வருகிறது. அவனுடைய திட்டங்கள் அறிவிப்பாக மாறி எல்லாச் செய்தித்தாட்களிலும் இடம்பெறுகின்றன. தன் கட்சியின் சாதனை இதுவென பிரதமரும் அமைச்சகத்தில் இருப்பவர்களும் மார்தட்டிக்கொள்கின்றனர்.
ஆனால் அத்திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க அவன் முனைந்ததும் அந்தப் பொறுப்பிலிருந்து அவன் மாற்றப்படுகிறான். ஒவ்வொரு பொறுப்பும் இதேபோல ஒருசில மாதங்களே நீடிக்கின்றன. திட்டவரைவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க முனையும் தருணத்தில் வேறொரு பொறுப்புக்கு அவன் மாற்றப்படுகிறான். ஒராண்டுக்குள்ளேயே அவன் சலிப்படைகிறான். அமெரிக்க வேலையை உதறிவிட்டு வர தான் எடுத்த முடிவு தவறோ என ஒருசில கணங்களில் தோன்றி அவனை அலைக்கழிக்க வைக்கிறது.

அரசு எந்திரத்தில் ஒருவருக்கும் ஒரு செயலைச் செய்துமுடித்து கனவை நனவாக்கும் உள்ளார்ந்த ஆர்வமோ, பிடிப்போ இல்லை என்பதையும் ஓய்வின்றி ஒவ்வொரு கணமும் செயலாற்றுவதுபோல நடித்துக்கொண்டிருந்தால் போதும் என்பதையும் அவன் புரிந்துகொள்கிறான். அதே சமயத்தில் மெல்ல மெல்ல தன்னைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலையையும் அவன் அறிந்துகொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனும் அதே சூழ்ச்சி விளையாட்டை அவர்களை நோக்கி விளையாடத் தொடங்குகிறான். அவன் உள்ளத்திலும் எண்ணத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக கறைபடியத் தொடங்குகிறது. இலக்கு என்னும் கனவு அப்படியே இருக்க, தந்திர விளையாட்டுகளும் தப்பித்துச் செல்தலுமாக வாழ்க்கை நகர்கிறது.
அவன் நீண்ட காலமாக எதிர்பார்த்த பொறுப்பை அளிக்கிறார்கள். இலட்சியக்கனவுகள் தொடர்பான அவனுடைய உரையாடல் ஒரு பேசுபொருளாக மாற்றமடைகிறது. எல்லோரும் அவனை நெருங்கிவந்து பாராட்டுகிறார்கள். ஆனால் அவை செயல்வடிவம் காணும் முன்பாகவே அவன் அங்கிருந்து மாற்றப்படுகிறான்.
ஒருசில மாதங்களுக்கு அமைச்சராகவும் செயல்பட அவனைத் தேடி ஒரு வாய்ப்பு வருகிறது. அவன் செல்லும் இடமெங்கும் கனவுகளை விதைக்கிறான். ஆனால் முளைக்கத் தொடங்கும் நேரத்தில் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டுவிடுகிறான். துரதிருஷ்டவசமாக அதுதான் ஒவ்வொரு முறையும் நடைபெறுகிறது.
ஒரு கட்டத்தில் வாஷிங்டன் தூதரத்துக்குச் சென்று இந்தியாவுக்கு எதிராக நிகழும் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்தி வெளிநாட்டினருக்கு இந்தியாவின் மீது மதிப்பு ஏற்படும் வண்ணம் செயலாற்றவேண்டும் என்கிற பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார் பிரதமர். அவனும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு வருகிறான். அமெரிக்காவில் அவனைச் சந்திக்கும் பழைய நண்பர்கள் அவன் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பாமல் அந்த நாட்டிலேயே அடைக்கலம் பெற்று வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம் என்றொரு யோசனையை வழங்குகிறார்கள்.
ஜெயராமனுக்கு அத்திட்டத்தில் உடன்பாடு இருந்ததா, இல்லையா என்பதைப்பற்றிய தெளிவாக குறிப்பு நாவலுக்குள் இல்லை. அவன் எந்த முடிவை எடுத்தாலும், இலட்சியவாதத்தோடு தொடங்கிய அவன் பயணம் சந்தர்ப்பவாதத்தோடு இணைந்து செயலாற்றவேண்டிய நிலைக்கு இறங்கிவிட்டது என்னும் குறிப்பு மட்டும் தெளிவாக இருக்கிறது. கட்சி அரசியலும் ஆட்சி அரசியலும் ஒவ்வொருவரையும் சந்தர்ப்பவாதியாக உருமாற்றும் உண்மையை நாவலின் கடைசிக்கணம் தெளிவாகவே உணர்த்துகிறது.
நாவலின் தொடக்கக் காட்சியில் போகிற போக்கில் வாசகர்கள் எளிதாகத் தவறவிடும் வகையில் ஒரு தருணத்தைச் சித்தரித்திருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. ஆனால் அத்தருணத்துக்கும் இந்த நாவலின் மையத்துக்கும் ஆழமான ஒரு தொடர்பு இருக்கிறது என்பதை நாவலின் இறுதிப்பகுதியை எட்டும்போது நாம் உணரலாம்.
ஜெயராமனின் வீட்டில் அக்காட்சி நடைபெறுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தன் பழைய நண்பனைப் பார்ப்பதற்காக ஜெயராமன் புறப்படுகிறான். அப்போது சில நிமிடங்கள் கூடத்தில் அமர்ந்திருக்கும்போது அவனுக்கும் அவனுடைய தங்கையான நளினாவுக்கும் அவளுடைய தோழியான ஓவியர் சுரேகாவுக்கும் இடையில் அவனுடைய இந்தியப்பிரவேசம் தொடர்பாக ஓர் உரையாடல் நிகழ்கிறது. அப்போது நளினாவுடைய நண்பர்கள் ஒரு நாடக ஒத்திகைக்காக அந்த வீட்டுக்குள் வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் தம் சகோதரன் ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்துகிறாள் நளினா.
ஆர்வத்தின் காரணமாக அவர்களிடம்” என்ன நாடகம்?” என்று கேட்கிறான் ஜெயராமன். ”த ஆப்பிள் கார்ட்” என்று நாடகத்தின் பெயரைச் சொல்கிறாள் நளினா. “அது அரசியல் நாடகமல்லவா?” என்று வியப்படைகிறான் ஜெயராமன். “ஆமாம். இந்த நாடகம் ஆடிட்டோரியத்துக்குள்ளே நடக்கப்போகிறது. ஆனால் அதைவிட பெரிய நாடகம் வெளியே நடக்கிறது” என்று கேலியாகப் பதில் சொல்கிறாள் நளினா. அத்துடன் உரையாடலை முடித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான் ஜெயராமன். பிற காட்சிகள் அடுத்தடுத்து நடைபெறத் தொடங்குகின்றன. முழு நாவலையும் வாசித்துமுடித்த பிறகு, மெல்ல மெல்ல எல்லாவற்றையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து தொகுத்துப் பார்த்துக்கொள்ளும் தருணத்தில் இந்த நாடகத்தைப்பற்றிய குறிப்புக்கும் மொத்த நாவலுக்கும் இடையிலுள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. சலிப்பே இல்லாமல் கணம்தோறும் வெளியே நடைபெறுகிற நாடகத்தைத்தான் ‘மாயமான் வேட்டை’ வழியாக நமக்கு உணர்த்துகிறார் இந்திரா பார்த்தசாரதி. அவருடைய நாவல் கலைப்படைப்பாகக் கருதப்படுவதற்கு இதுதான் காரணம்.
’த ஆப்பிள் கார்ட்’ என்னும் அரசியல் பகடி நாடகத்தை எழுதியவர் பெர்னார்ட்ஷா. அவர் எழுதி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் இன்றைக்கும் அந்நாடகத்தின் உள்ளடக்கம் நம் சமூகத்துக்குப் பொருத்தமாகவே உள்ளது. மேக்னஸ் என்பவன் ஒரு நாட்டின் அரசன். ப்ரோட்டியஸ் என்பவன் அந்த நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருப்பவன். அரசன் மக்கள் நலனை விரும்பும் மனிதன். அவன் வகுத்தளிக்கும் திட்டங்கள் எல்லாமே மக்கள் முன்னேற்றத்துக்கானவை. ஆனால் பிரதமர் பொறுப்பில் இருக்கும் ப்ரோட்டியஸுக்கும் அவனுடைய பிற அதிகாரிகளுக்கும் அத்திட்டங்களில் ஆர்வம் இல்லை. அதே சமயத்தில் அந்த ஆர்வமின்மையை அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதுமில்லை.
திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எல்லாமே நடந்துவருவதுபோன்ற ஒரு தோற்றத்தை அவர்கள் அரசனிடம் தொடர்ந்து உருவாக்கி, நம்ப வைக்கிறார்கள். அரசனிடம் பணிவோடு இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். அதே சமயத்தில், அரசனுக்கு எதிராகவும் மக்கள் நலன் கருதாதவர்களாகவும் செயல்படுகிறார்கள். தம் நடிப்பால் தொடர்ந்து அரசனை நம்பவைக்கிறார்கள். மக்களையும் நம்ப வைக்கிறார்கள்.
இந்திரா பார்த்தசாரதி தன் நாவலில் ஆட்சி அமைப்பில் அதிகாரம் அடங்கியிருக்கும் ஒவ்வொரு அடுக்கையும் அதன் நடிப்பையும் செயலின்மையும் ஒவ்வொரு காட்சியிலும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ’அக்குவேறு ஆணிவேறாக’ சுட்டிக் காட்டுகிறார். இறுதியாக, நாவல் முடிவடையும் தருணத்தில், மாயமான் வேட்டைக்கும் த ஆப்பிள் கார்ட்டுக்கும் உள்ள நெருக்கத்தை நாமே புரிந்துகொள்கிறோம்.
நடிப்புக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு அல்லது பொருட்படுத்தாத அளவுக்கு நம்மை நாமே மாற்றிக்கொண்டோமா அல்லது நம்மை யாராவது மாற்றினார்களா என்பது ஒவ்வொருவரும் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. நாமே மாறினோம் என்பது பதிலென்றால் நாம் அனைவருமே போலி மனிதர்கள். நம்மை யாரோ மாற்றினார்கள் என்பது பதிலென்றால் நாம் அனைவருமே சின்னச்சின்ன லாபங்களுக்காக கூழைக்கும்பிடு போடும் தந்திரசாலிகள். எந்த வேட்டைக்கும் செல்லாமல், வேட்டைக்குச் செல்வதுபோல நடிக்கும் மோசக்காரர்கள்.

பாவண்ணன்
கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வழங்கப்படும் 2022ஆம் ஆண்டுக்கான இயல் விருது பெற்ற பாவனன், 1980-களுக்குப் பிந்தைய காலகட்டத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவர் தமிழ் எழுத்துக்கு நேரடியான, யதார்த்தமான நடையைக் கொண்டு வருவதிலும், இவர் படைப்புகள் இதுநாள்வரை ஆராயப்படாத வாழ்வின் புதிய பரிமாணங்களைத் திறந்து காட்டுபவை. புதுச்சேரி-கடலூர் பகுதியின் மொழியும் மக்களும் இலக்கியத்தில் இடம்பெற்றனர். கன்னட இலக்கியத்தை, குறிப்பாக அதன் தலித் இலக்கியத்தை, தன் மொழிபெயர்ப்பின் மூலம் தமிழ் இலக்கிய மரபில் இணைப்பதற்கு வழிவகுத்தவர்.
2005-ஆம் ஆண்டின் சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதையும், 2022-ஆம் ஆண்டு கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதையும் பெற்றவர்.
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

