- தரவு ஏக்கம்!
- தகவல் இளக்காரம்
கணினிகள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, இந்தத் ‘தரவு’ (data) என்ற சொல் அதிகமாக தமிழில், எழுத்து வடிவத்தில் வரத் தொடங்கியது. அதென்ன ‘தரவு ஏக்கம்’? கட்டுரை ஆசிரியர் ஏதாவது சொற்பிழையாக எழுதி விட்டாரா? ‘தரவிறக்கம்’ என்றால், கணினி அல்லது திறன்பேசி மூலம் download செய்வது என்று ஓரளவிற்கு புரியும் விஷயமாகி விட்டது. போயும் போயும், யாராவது, தரவுக்காக ஏங்குவார்களா, என்ன?
அப்படி ஏங்கிய சாதாரணர்களில் ஒருவன் நான். நீங்கள் கூட, இந்தக் கட்டுரையை வாசித்த பின், அப்படிப்பட்டவராக இருக்கலாம். விஷயம் இதுதான். அப்படி ஒன்றும் பெரிய புள்ளியில்லை நான். ஆனால், குறைந்தபட்சம், ஒரு புள்ளிவிவரமாகவாவது இருக்க வேண்டும் இல்லையா? அதுவும் இல்லை. அதுதான் என் கோபத்திற்குக் காரணம்.
2018 –ற்கு முன் நான், புறநகர் ரயில் பிடித்து, பல்லாயிரம் மனிதர்களுடன் நகரில் பணிக்குச் செல்லும் ஒருவன். ஒரு நாள், உடல்நலம் சரியில்லை என்று பணிக்குச் செல்லவில்லை. அடுத்த நாள், புறநகர் ரயில் நிலையத்திற்குச் சென்றால், அதே பல நூறு மனிதர்கள் ரயிலுக்காக காத்திருந்தனர். அவர்களது எண்ணம் என்னவோ, வரப் போகும் ரயிலைப் பற்றித்தான். நேற்று வராத என்னைப் பற்றி அல்ல. அவர்களுக்கு நான் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
அவர்களை விட்டுத் தள்ளுங்கள். நான் பல நூறு டாலர்கள் மாதம் கொடுத்து பயணம் செய்யும் ரயில் நிறுவனத்திற்கு, ஒரு நாள் வருமானம் போய்விட்டதே என்ற கவலை கொஞ்சமாவது இருந்ததா? வந்தால் என் பணம், வராவிட்டால், இன்னொருவர் பணம். அவரவர் கவலை அவரவர்களுக்கு. சரியான நேரத்திற்கு நகரம் செல்ல வேண்டும்; இல்லையேல், பயணிகள், 10% கட்டணப் பணத்தைத் திருப்பிக் கேட்பார்கள். என்னைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?
வியாபாரம் என்றால், இப்படித்தான் இயங்கும் என்று விட்டு விட்டேன். கோவிட் வந்தது 2022 –ல். அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று முடிவானது. என் புறநகர் ரயில் நிறுவனம், ஓவென்று அழாத குறைதான். அரசாங்கம், அவர்களைத் தட்டிக் கொடுத்து, சமாளித்தது. நான் வேலை பார்க்கும் நிறுவனம், என்னை வீட்டிலிருந்து வேலை செய்தால் போதுமானது. கோவிட் நீங்கிவிட்டாலும், அலுவலகம் செல்லத் தேவையில்லை என்று சொல்லிவிட்டது. என் பார்வையில், ஓராண்டிற்கு, புறநகர் ரயில் நிறுவனத்திற்கு, என்னால் பல்லாயிரம் டாலர்கள் நஷ்டம்.
2024 –ல், ரயில் நிறுவனத்தின் அறிக்கை, என்னுடைய கோபத்திற்குக் காரணம். அவர்களது அறிக்கையில், சென்ற ஆண்டைவிட, இந்த ஆண்டு, 40% பயணிகள் அதிகமாகியுள்ளனர். இன்னும் கூடிய விரைவில், கோவிட்டிற்கு முந்தைய நிலைக்கு வந்துவிட வாய்ப்பிருக்கிறது என்றது அறிக்கை. ஒரு நாள், நான் பயணிக்காத போதும் அவர்கள் கவலைப்படவில்லை; சில மாதங்கள் பயணிக்காத போதும் கவலைப்படவில்லை. இப்பொழுது, பயணமே செய்யாவிட்டாலும் கவலையில்லை. என்ன அநியாயம் இது? நான் ஒரு புள்ளி விவரமாகக் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும், என்னுடைய ஜாதகமே இவர்கள் கையில் உள்ளது. என்னுடைய பிறந்த நாள், என்னுடைய கடன் அட்டை எண், என்னுடைய வீட்டு முகவரி, என் மின்னஞ்சல் எல்லாம் அவர்களிடம் உண்டு. எந்த நாளைக்கு, எந்த நேரத்திற்கு, எங்கிருந்து எங்குவரை பயணம் செய்கிறேன், எத்தனை செலவழிக்கிறேன் என்று எல்லாம் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும், சற்றும் என்னப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
புறநகர் ரயில் நிறுவனம் போல, இன்னொரு அமைப்பு, நான் வசிக்கும் ஊரின் அரசாங்கம். இவர்களது ஒரே குறிக்கோள், வருடம் ஒரு முறை சொத்து வரியை உயர்த்துவது. அதுவும் சில வருடங்கள், முந்தைய வருடத்தை விட 10% -க்கு மேல் உயர்த்துவது. ரயில் நிறுவனம் போல, இவர்களிடம் என்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் உண்டு. வருடம் ஒரு முறை ஒரு அறிக்கையை அனுப்புவார்கள். அந்த அறிக்கை வருவது, வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். இதுவரை நான் கட்டிய வரிக்கு நன்றி என்று ஒரு வருடம் கூடச் சொன்னதில்லை.

வருடாந்திர நகர அறிக்கையில், மேயர், ஊர்வாசிகள் (எல்லாமே பொதுவாக இருக்கும், வரி கட்டுபவரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை), எவ்வளவு உயர்தர நகரத்தில் வசிக்கிறோம் என்று ஐஸ் வைப்பார். அதைத் தொடர்ந்து, உங்கள் வீட்டிற்கு வரும் குடிநீர், எப்படி பல நகரக் கட்டுப்பாட்டின் வெளியே உள்ள காரணங்களினால், விலை உயரும் என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுவார். கோவிட் காலத்தில், மற்ற ஆண்டுகளை விட சற்றுக் குறைவாக சொத்து வரியை உயர்த்தினாலும், அந்த ஆண்டுகளிலும் விட்டு வைக்கவில்லை.
நகரப் பராமரிப்பு, பள்ளிகள், சாலைகள் எல்லாவற்றிற்கும் சொத்து வரி மூலம் பணம் கட்டும் என்னை அவர்களுக்குத் தெரியுமா? சத்தியமாக இல்லை. இத்தனைக்கும், நகர அறிக்கையைப் பார்த்தால், அங்கு மனிதர்கள் வசிக்கிறார்களா என்ற சந்தேகமே வந்து விடும்! பட்ஜட்டும், செலவும், பற்றாக்குறையும் மட்டுமே, அந்த அறிக்கையில் இருக்கும். குறைந்த பட்சம், நகரத்தின் வருமானம், எந்தெந்தப் பகுதிகளிலிருந்து அதிகமாக வருகிறது என்று கூட அறிக்கையில் இருக்காது. பக்கத்தில் உள்ள நகரத்தை விட எப்படி .25% குறைவாக, நான் வசிக்கும் நகரத்தின் வரி உயர்வு உள்ளது என்பதை மட்டும் மார் தட்டிக் கொள்வார், நகர மேயர்.
இத்தனை வரி கட்டுகிறோமே, நமக்கில்லாத உரிமையா என்று நகரத்தை அழைத்து, வரி உயர்விற்கு காரணங்களைக் கேட்டுப் பார்த்தால், நான் ஒரு புள்ளிவிவரத்திற்கு தகுந்தவனே அல்ல என்று தெரிய வந்தது. அவர்களுக்குத் தேவை உங்களது வரி எண். வரி உயர்வைப் பற்றிய விளக்கம் கேட்டால், எப்பொழுது தீர்மானம் செய்யப்பட்டது, மேயரின் அறிக்கை என்று ஒரே பல்லவி தான். எப்படி எளிதாய் வரி கட்டலாம் என்று பல வரி செலுத்தும் முறைகளைச் சொல்லி உங்களை எரிச்சலடிப்பதில் இவர்களுக்குப் பேரானந்தம்.
நீங்கள் ஒரு முறை சொத்து வரி கட்டாவிட்டாலும், அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு முறை வரியைக் கட்ட மறந்து விட்டேன். அடுத்த முறை வரிப்பட்டியல் மின்னஞ்சல் மூலம் வந்தவுடன் தெரிய வந்தது முந்தைய சொத்து வரி கட்டாததன் விவரமும், அதற்கான வட்டியும். நகர அரசாங்கத்திலிருந்து, யாராவது ஒரு முறை அழைத்து, “வரி கட்ட மறந்து விட்டீர்களே. என்ன கஷ்டம் உங்களுக்கு?” என்று விசாரிக்க வேண்டியது தானே? என் தொலைப்பேசி, மின்னஞ்சல் என்று சகலமும் அவர்களிடம் உண்டு. ஏனென்றால், அவர்கள் பின்பற்றும் தரவுகளில் நான் இல்லை!
இத்தனை கடிந்து கொள்ளும் ஒரு வரி கட்டும் சாமானியருக்கு வரியுயர்வைப் பற்றிய அறிவுரையைக் கேட்டால், இன்னும் எரிச்சலூட்டும். ”இதைவிடக் குறைவாக சொத்து வரியுள்ள நகரம் நம் நாட்டில் இருந்தால், அங்கு சென்று விடுங்களேன்!” அப்படியே செய்தாலும், நான் இவர்களது புள்ளி விவரங்களில் வர மாட்டேன், எங்கள் ஊரில் உள்ள வீட்டு விற்பனை செய்யும் நிறுவனங்களின் புள்ளி விவரத்தில் மட்டுமே வரக் கூடும்!
இதைப் படித்த உங்களுக்கு, இது ஏதோ அரசாங்க கட்டண/வரி முறைகளில் உள்ள குறையோ என்று தோன்றலாம். சில தனியார் நிறுவனங்களும் உங்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அடுத்த பகுதியில் அதைப் பார்ப்போம். என் பார்வையில், தரவுக்கு இரக்கம் என்பதே இல்லை!
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

தரவுக்கு ஒன்றும் தெரியது. Data Collector -களுக்குத்தான் இரக்கம் என்பதே கிடையது.