தகவல் இளக்காரம்

This entry is part 2 of 2 in the series தரவு ஏக்கம்

என்னுடைய அரசாங்க தரவுத் தோல்விகளை முதல் பகுதியில் பார்த்தோம். அதற்காக, தனியார் துறையில், பெரும் வெற்றி பெற்றவன் என்று ஆகிவிடாது. ஏறக்குறைய, புள்ளி விவரமாக, அங்கும் தோல்விதான்! இரண்டு உதாரணங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம். தனியார் துறைக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு. அரசாங்கம், என்னுடைய அந்தரங்கத்தை மதிக்கும் சட்டங்களைப் பின்பற்றுவதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, நழுவுவது வழக்கம். தனியார் துறை, பெரிதாக பாசாங்கு ஒன்றும் கிடையாது. முகத்தில் அடித்தாற் போல, ‘அது அப்படித்தான்’ என்று சொல்லி விடுகிறார்கள்!

என்னுடைய முதல் தோல்வி என் செல்பேசி நிறுவனத்துடன். பத்தாண்டுகளுக்கு மேல் செல்பேசி நிறுவனத்துடன், என்னுடைய இணையம், செல்பேசி மற்றும், கம்பி தொலைபேசி சார்ந்த சேவைகளை வாங்கி வந்துள்ளேன். பத்தாண்டுகள் ஒருவருடன் பழகினால், அவர்களைப் பற்றி சொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டாமா? செல்பேசி நிறுவனத்திற்கு அப்படி ஒரு மறதி. நான் அவர்களை அழைத்தால், ஆரம்பத்திலிருந்து கதையைத் தொடங்க வேண்டும். என் செல்பேசி எண்ணைச் சொன்னால் மட்டும் போதாது, என் பிறந்த தேதியையும் சொல்லி, என் வீட்டு முகவரியையும் சொன்னால்தான் அடுத்த கட்டம்! கேட்டால், பாதுகாப்பாம்!

அடுத்த கட்டம் என்பது அலுப்பூட்டும் ஒன்று. பத்தாண்டுகளாக உங்கள் சேவைகளை பயன்படுத்தி வருகிறேன். இன்னென்ன சேவைகளைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்லி முடித்து, நமது ஒப்பந்தம் முடிவடைய சில வாரங்களே இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏன், இவர்களிடம் நான் சொன்ன அனைத்துத் தரவுகளும் உள்ளன. சந்தையில் பல போட்டியாளர்கள் இருந்தும், இவர்களது பதில் எப்பொழுதும் இதுதான்: “சற்று பொறுங்கள். உங்கள் கணக்கை ஆராய்ந்துவிட்டுச் சொல்லுகிறோம்”. ஒரு 20 நிமிடங்கள் அலுப்பூட்டும் கால் சென்டர் இசையை மிதக்கவிட்டு, அதன் பின், “நண்பரே, இணைப்பில் காத்திருந்ததற்கு நன்றி (இது இந்த உரையாடலில் வந்த முதல் நன்றி.). உங்களது கணக்கை ஆராய்ந்ததில், புதிய சலுகைகள் எதுவும் இப்பொழுது இல்லை. ஒரு 15% சலுகை சென்ற மாதம்தான் முடிவடைந்தது!”. சென்ற மாதம், என்னுடைய செல்பேசி எண், என்ன மறந்து விட்டதா? என்னுடைய செல்பேசி ஒப்பந்தத்தின் கடைசி தேதியும் நிறுவனத்திடம் உள்ளது. எந்த பயனர், தன்னுடைய ஒப்பந்தக் கடைசி தேதியை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்? 

இவர்கள் சொல்வது என்னவென்றால், இரண்டு வருட ஒப்பந்தம் என்று இருந்தால், ஒப்பந்தத்தின் கடைசி 6 மாதங்களில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இவர்களை அழைத்து, புதுச் சலுகைகள் ஏதாவது உள்ளதா என்று நச்சரிக்க வேண்டும். இல்லையேல் உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், மறக்காமல், மாதா மாதம் பில்லை மட்டும் கட்டி விடுங்கள். பில்லைக் கட்ட அவர்களது இணையதளத்திற்குச் சென்றால், உங்களது மின்னஞ்லைக் கொடுத்தவுடன், அனைத்து விஷயங்களும் மாயமாக, உங்கள் முன் நொடிகளில் காட்டப்படும். ஏனென்றால், நீங்கள் உடனே பில்லுக்குப் பணம் கட்ட வேண்டும். பில் கட்ட மட்டுமே ”நான்” ஒரு முக்கிய தரவு. மற்றபடி செல்பேசி மறதி, என்னை ஒரு புள்ளி விவரமாகக் கூட நினைக்காத விஷயம் கோபமூட்டும் ஒன்று.

என்னிடம் என்ன திறன்பேசி உள்ளது, நான் எத்தனைத் தரவைப் பயன்படுத்துகிறேன், யாரையெல்லாம் அழைக்கிறேன், எந்தெந்த நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று அனைத்து தரவுகளும் செல்பேசி நிறுவனத்திடம் உண்டு. ஆனால், செல் நிறுவனத்தைப் பொறுத்த வரை, பயனுள்ள தரவு, என்னுடைய மின்னஞ்சல் மற்றும் கடவுச் சொல் – ஏனென்றால், அது வரவு சார்ந்தது. இதையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களது செல்பேசி பயன்பாட்டில் (smartphone App) திரைத்தடவல் மூலம் பில்லை கட்டவும் வசதி செய்துள்ளார்கள். ஏன், இந்த தொடர்பும் வேண்டாமென்றால், உங்கள் வங்கியிலிருந்து மாதா மாதம் செல் பில்லுக்கு அவர்களே பணம் எடுத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறார்கள். மற்றபடி என்னைப் பற்றிய தரவுகளில் அவர்களுக்கு கொஞ்சமும் ஈர்ப்பு இல்லை! செல் நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்திற்குச் சென்றாலும், அவர்களுக்குக் கவலையில்லை. ஏனென்றால், அவர்களது பல பில்லியன் டாலர் வரவில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

என்னுடைய இரண்டாவது தனியார் துறை உதாரணம், என்னுடைய காப்பீடு (insurance) நிறுவனம். என்னுடைய செல்பேசி நிறுவனத்திடம் உள்ள தரவுகள் பெரும்பாலும் இவர்களிடமும் உண்டு. என்னுடைய அழைப்பு பதிவுகளைத் தவிர, இவர்களிடம், என் வீட்டைப் பற்றிய விவரங்கள், என்னுடைய கார் பற்றிய விவரங்கள், என்னுடன் வசிக்கும் மற்றவர்களின் வயது என்று என்னைச் சுற்றியுள்ளவர்களின் மொத்த ஜாதகமும் இவர்களிடம் உண்டு. அமெரிக்காவிற்குத் தேவையான இந்திய கணினி விஞ்ஞானிகளை, Aliens என்று அழைக்கும் குடியேற்றத் துறையை சாப்பிட்டு விடுபவர்கள் இந்த காப்பீடு நிறுவனங்கள். 

கால் சென்டர்களிலேயே மிக மோசமானவற்றை காப்பீடு நிறுவனங்கள் நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். உங்களது பாலிசி எண்ணைக் கொடுத்தவுடன், அவர்களுக்கு உங்களைப் பற்றிய அத்தனை விவரங்களும் அவர்களிடம் இருந்தாலும், உங்களைத் தெரியாதவர்களாகவே நடத்துகிறார்கள். இத்தனைக்கும், Claim செய்வதற்கு தனியாக அமைப்பையும் வைத்துள்ளார்கள். Claim –க்காக அழைக்காத பட்சத்தில், உங்களை ஒரு வேண்டப்பட்ட வாடிக்கையாளராக நடத்துவதில் அப்படி என்ன கஷ்டம்?

அவர்களுக்கு உங்களுடனான உறவு தெரிந்திருக்க பல வழிகள் இருந்தும், நீங்கள், முதலில் உங்களது காப்பீடு நிறுவன உறவை அவர்களுக்கு விளக்க வேண்டியது, ஒரு பெரிய கொடுமை. அதன் பின், ஏன் காப்பீடு premium உயர்ந்துள்ளது என்று கேட்டால், அதற்கான பதில், நான் ஒரு புள்ளி விவரம் கூட இல்லை என்று மிகத் தெளிவாக்கி விடுகிறார்கள். ”நாட்டில் உள்ள கார்கள், சாலைகள், விபத்துக்கள் போன்ற விஷயங்களை, பகுதி வாயிலாக ஆராய்ந்ததில், (actuarial data) நீங்கள் வாழும் பகுதியில் விபத்துக்கள் அதிகமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், உங்களது premium சென்ற ஆண்டை விட 15% அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன், உங்களது கார், இன்னொரு வருடம் பழசாகி விட்டது. அதன் பாகங்கள் கிடைப்பது அரிதாகி விட்டது”. இந்த பதிலில் நான் எங்காவது இந்த கட்டண உயர்வுக்கு காரணமாகியுள்ளேனா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை. அடுத்த வருடம் நடக்காத விபத்திற்கு, பொருத்தப்படாத பாகத்திற்கு, இவர்கள் என்னிடமிருந்து காசு பார்க்கிறார்கள். இந்த உரையாடலில், பாலிசிக்கு பணம் தரும் என்னைப் பற்றிய எதுவுமே இருக்காது. ஏனென்றால், நான் இவர்களுக்கு ஒரு புள்ளி விவரம் கூட இல்லை. காப்பீடு நிறுவனங்கள் பயன்படுத்தும் Actuarial தரவுகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது, காரின் brand, வாங்கிய ஆண்டு, கார் ஓட்டப்படும் பகுதிகள், விபத்துக்கள், கார் திருட்டுகள் இவை மட்டுமே. Premium –ஐ முடிவு செய்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக எந்த விபத்திலும் நான் ஈடுபடவில்லை என்று சொல்லிப் பாருங்கள். இவர்களின் பதில், உங்களை ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று தோன்ற வைத்து விடுவார்கள். “அதனால் தான் உங்களது premium 15% உயர்ந்தது. இல்லையேல், அது 35% உயர்ந்திருக்கும்!”.

செல்பேசி நிறுவனத்தை விட மோசம் இவர்கள் – நேராக என்னுடைய வங்கியிலிருந்து premium பணத்தை எடுத்துக் கொள்வார்கள். வீட்டிற்கான காப்பீடு அதைவிட மோசம். சந்தையில், வீட்டின் விலை குறைந்தாலும்/ உயர்ந்தாலும், வீட்டின் காப்பீடு உயரும். அதற்கும் இவர்கள் வைத்திருப்பது actuarial data என்ற காப்பீடு மாதிரி. நான் ஒரு காரணமே அல்ல. நான் ஒரு பொருட்டும் இல்லை. ஆனால், சந்தையில் கட்டுமானப் பொருள்களின் விலையுயர்வு, ஈரான் போர் என்று அடுக்குவார்கள்.

சரி, இரண்டு பகுதிகளாக என்னை ஒரு புள்ளி விவரமாகக் கூட மதிக்காத உதாரணங்களைப் பார்த்தோம். அடுத்த பகுதியில் என்னை மதிக்கும் நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தரவு ஏக்கம்

தரவு ஏக்கம்!

Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.