“உங்கம்மா அடுத்த வாரம் யு. எஸ். போறாங்களாம்மே? நீ அதைபத்தி ஒண்ணுமே என் கிட்ட சொல்ல வில்லையே?“ சுரேஷ் தான் கேட்டான் ராதிகாவை.
ராதிகா பால்கனியில் தொட்டிகளில் வைத்திருந்த பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டிருந்தாள்.
“நேத்திக்கு தான் எங்கக்கா சொன்னா. நான் உங்க கிட்ட சொல்லணும்னு தான் நெனச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க!” என்றாள் ராதிகா புன்முறுவலுடன் அவனை நிமிர்ந்து பார்த்தபடி.
அவள் கணவன் இறந்த பிறகு ராதிகாவின் அக்கா யூஎஸ் இல் தன் மகனுடன் சில வருடங்களாக வசிக்கிறாள்.வெகு நாட்களாக அம்மாவை தன்னுடன் வந்து சில மாதங்கள் இருந்து விட்டு போகும்படி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
“ஏன் முன்னாடியே சொல்லலியா? யு. எஸ். போறதுன்னா எத்தனையோ மாசங்களுக்கு முன்னால பிளான் செஞ்சிருப்பாங்களே?” அவள் ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருக்க,
“என்ன? கேக்கறது காதில விழலியா? பெரிய போயஸ் கார்டன், தண்ணி ஊத்திக்கிட்டிருக்கா?” வார்த்தைகள் வெறுப்பாக வந்து விழுந்தன.
ராதிகாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. அலுவலகம் கிளம்பும் நேரத்தில் கோபம் வந்தால் அது எந்த திசையில் பாயும், எப்படி முட்டி மோதி நிற்கும் என்று சொல்லவே முடியாது.
“ரொம்ப நாளா போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்ப தான் முடிவாகியிருக்கும்னு நினைக்கிறேன்.“ என்று யோசித்து தயங்கி தயங்கி அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
“என்னாச்சு உங்களுக்கெல்லாம்? ஒரு காலத்தில இன்னிக்கி என்ன சமையல்ங்கிறதில ஆரம்பிச்சு என்ன கலர் புடவை இன்னிக்கு ஆபீசுக்கு கட்டிட்டு போகலாங்கிறது வரை தினமும் ஓயாம போன் பண்ணி பேசிப்பீங்களே அக்கா தங்கச்சி!”
ராதிகா இதற்கும் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நின்று கொண்டிருக்கும்போது அவனே கேட்டான் .
“ஏன் இப்போவெல்லாம் பேச்சு கொறஞ்சு போச்சு?” அவன் வார்த்தைகளில் ஒரு நக்கல் இருந்தது போல தோன்றியது.
பொதுவாக அவனுக்கு தன் அலுவலக வேலையைத் தவிர பெரிதாக பொழுது போக்கு என்று ஒன்றும் இல்லை. தொலைக்காட்சியில் செய்திகள் எப்போதாவது பார்ப்பான். அதிலும் அவனுக்கு பிடிக்காத அரசியல்வாதியைப் பற்றிய செய்தி என்றாலோ, அவனுக்கு பிடிக்காதவர்களின் நேர்முகம் ஏதாவது வைத்தாலோ சட்டென்று எரிச்சலோடு நிறுத்தி விட்டு போய் விடுவான். எப்பொழுதும் சக மனிதர்களை, உறவினர்களை விமர்சிப்பது தான் அவன் விரும்பி செய்யும் ஒரே வேலை என்று தோன்றும். அதிலும் அவர்களுடைய செயல்கள் எல்லாவற்றையும் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்து, குற்றங்கள் , குறைகளை கண்டுபிடித்து கேலி செய்வது கிண்டல் செய்வது, எள்ளி நகையாடுவது அவனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.. அதில் ராதிகா பங்கு கொள்ளாமல் ஒரு மௌனமான பார்வையாளராக இருப்பதே அவனுக்கு எரிச்சல் வரும்.
சில நடிகர்கள், நடிகைகளை அவனுக்கு கட்டோடு பிடிக்காது. அவர்கள் நடிக்கும் திரைப்படங்களை தொலைக்காட்சியில் ராதிகா விரும்பி பார்த்தால் அதற்கும் கோபப்பட்டு கூச்சல் போடுவான். அவள் பதில் சொல்லாமல் மௌனமாக தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு அடுத்த காரியத்தை பார்க்க சென்றால், அப்போதும் சும்மா விட மாட்டான்.
“உனக்கு சூடு சொரணை எதுவுமே இல்லையா? நீ ஜடமா? நான் எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டிருக்கேன் இவங்க நடிக்கிற படங்களை பார்க்காதேன்னு ” என்பான்.
அவன் மன விகாரங்களை பொருட்படுத்தாமல் மௌனமாக சாதாரணமாக இருக்க அவள் பழகி விட்டாள்.
வீட்டில் இருப்பது இரண்டே பேர். இருவரும் அலுவலகம் சென்று விட்டு வந்து வீட்டில் இருக்கும் அல்ப சொல்ப நேரத்திற்கும் எதில் குற்றங்குறை கண்டுபிடிப்பான் என்றே புரியாமல் சாதாரணமாக இருந்தே பழகி விட்டது ராதிகாவிற்கு.
வெறும் வாயை மென்று கொண்டிருந்தவனுக்கு அவல் கிடைத்தது போல அம்மா யூஎஸ் போகும் விவகாரம் இன்று மாட்டி விட்டது என்று நினைத்தாள்.
தொடர்ந்து அவன் ஏதோ பேசிக்கொண்டே போக, ராதிகா இந்த சம்பாஷணையை முடிக்க வேண்டும் என்பதற்காக,” என்னவோ அவரவர்களுக்கு அவரவர் காரியம், பிஸி. அவ்வளவுதான். மத்தபடி பெரிசா சொல்லிக்கும்படியா ஒண்ணுமில்லை“ என்று புன்முறுவலோடு சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதைக் கேட்க பொறுமையில்லாமல் அவன் வாசலுக்கு சென்று காரை எடுத்தான். நேரமாகி விட்டது. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தன் ஆடிட்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் அவன்.
‘அப்பாடா! நல்லபடியா இத்தோடு கெளம்பி போனாரே?’ ராதிகா வாசற்கதவை சார்த்தி கொண்டு உள்ளே வந்தாள். அவளும் அலுவலகம் கிளம்ப வேண்டும். அந்த நேரத்துக்கு அவனுக்கு ஏதோ பதில் சொல்லிவிட்டாளே தவிர அவள் மனதில், ‘என்ன ஆச்சு உங்களுக்கெல்லாம்? ஏன் பேச்சு கொறஞ்சு போச்சு?’ என்று அவன் கேட்ட கேள்வியே சுழன்று கொண்டிருந்தது.

ராதிகா ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. ஒரே மகன் பாலாஜி இப்போது தான் வேலை கிடைத்து புனே போயிருக்கிறான். இனிமேல் கல்யாணத்துக்கு பார்க்க வேண்டும். அவனைக் கேட்டால் ’28 வயசு தானேம்மா ஆறது? ஒரு ரெண்டு வருஷம் போகட்டுமே?’ என்கிறான். .
“நீ ஏம்மா இன்னும் வேலைக்குப் போற? நமக்கு என்ன தேவை இருக்கு? பேசாம வி. ஆர். எஸ் வாங்கிக்கலாம் இல்லே?” என்பான்.
“தேவைக்கு மட்டும் வேலை இல்லடா. எனக்குன்னு ஒரு எங்கேஜ்மெண்ட் வேணும். அது அறுவது வயசு வரைக்கும் இந்த அலுவலகத்தில் கிடைக்குங்கிறபோது இன்னும் ஒரு வருஷம் போனா தான் என்ன?” அவள் புன்முறுவலோடு பதில் கூறுவாள்.
“ஆக, இன்னும் ஒரு வருஷம் நீ அப்பா கிட்டேயிருந்து தப்பிக்கலாம்னு பார்க்கிறே அதானே விஷயம்?”
ராதிகா ,”போடா! குறும்புக்காரா!” என்பாளே தவிர்த்து கணவனை பற்றி அவனிடம் குற்றங்குறை எதுவும் சொல்ல மாட்டாள்.
அவனுக்கும் அப்பாவைப் பற்றி நன்றாகவே தெரியும். அவர் கோப தாபங்கள், எப்போதும் சிடுசிடுவென்றிப்பது எல்லாம் அவனும் பார்த்தது தானே? அவன் என்ன காரியம் செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடித்து விமர்சித்துக்கொண்டே இருப்பாரே? அவன் விரும்பிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்க விடவே மாட்டாரே? அம்மாவுடன் தொலைபேசியில் பேசும்போது அவரை பற்றி விசாரித்து விட்டு ,”நல்ல வேளைம்மா! நான் எஸ்கேப்!” என்பான் சிரித்து கொண்டே.
அந்த சனிக்கிழமை. சுரேஷ் அலுவலக வேலையாக காலையிலேயே கிளம்பி செங்கல்பட்டு சென்று விட்டான். சென்னையை தாண்டி வெளியே போவது அவனுக்கு சுத்தமாக பிடிக்காத விஷயம். அதுவும் அவனே காரை ஓட்டிக் கொண்டு போக வேண்டியிருந்தால் ரொம்பவே எரிச்சல் பட்டு காலையிலிருந்தே ஒன்றும் இல்லாததற்கெல்லாம் கோபப்பட்டு கத்தி கொண்டிருப்பான். காலை உணவிலிருந்து எல்லாமே வெளியில் தான். திரும்பி வர எப்படியும் மாலையாகி விடும். அவன் சென்ற பின் வீடே நிசப்தமாக இருப்பது போல தோன்றியது ராதிகாவிற்கு.
அது இரண்டாவது சனிக்கிழமையானதால் விடுமுறை. அதனால் ராதிகா வீட்டில் இருந்தாள். அவள் வரைக்கும் சமைத்து சாப்பிட்டானவுடன் பொழுது போகாமல் தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி திருப்பி கொண்டிருந்தவள், பொதிகையில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படம் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து தொலைக்காட்சி பெட்டி எதிரே பரபரப்பாக சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். சுரேஷ் வீட்டில் இல்லை. தொந்தரவு இல்லாமல் அவளுக்கு பிடித்த படத்தை ரசித்து பார்க்கலாம் என்று மனதில் இனம் புரியாத சந்தோஷம்.
‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தில் நடிகை லட்சுமி நடித்த அந்த கல்யாணி கதாபாத்திரத்தின் பாத்திரப்படைப்பு ராதிகாவிற்கு மிகவும் வியப்பாகவும் அதிசயமாகவும் இருக்கும். முதன் முதலில் அதை நாவலாக படித்த போதும், பிறகு அதையே சினிமாவாக பார்த்த போதும், ‘இப்படி கூட ஒரு பெண் இருப்பாளா?’ என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. யோசித்து பார்த்தால் ராதிகாவிற்கு அப்போ 19 வயசு தான் இருக்கும். நடுவில் ஓரிரு முறை தொலைக்காட்சியில் வைத்த போது பார்த்த நினைவு. அப்போதெல்லாம் அதை அவளை பெரிதாக பாதித்த மாதிரி தோன்றவில்லை. ஆனால் இன்று 40 வருஷங்களுக்கு பின் முழு கவனத்துடன் கருத்தூன்றி அந்த படத்தை பார்த்தபோது பிரமித்து போனாள். ‘ஆஹா! எப்பேர்ப்பட்ட ஒரு உன்னதமான பாத்திரப்படைப்பு!’ என்று மனசு ஆர்த்து ஆர்த்து போனது. அந்த வயதில் இந்த கதாபாத்திரத்தை பற்றி தனக்கு புரியாத விஷயங்களெல்லாம் இப்போது புரிவதைப் போல ஒரு தெளிவு. ஒரு வேளை தன் வயதினால் வந்த மன முதிர்ச்சியால் இந்த மனநிலை ஏற்படுகிறதோ? தன் மன எல்லைகள் விரிவடைந்திருக்கிறதோ?
எழுத்தாளர் கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீகாந்தை பார்க்கும்போது கல்யாணிக்கு ஏற்படும் காதல், நேசம், அதை அவள் முகத்திலேயே பலவித பாவனைகளில் வெளிப்படுத்தும் விதம். அப்பப்பா! எப்படி உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டும் முகபாவங்கள்!
முக்கியமாக தன் கூட இருக்கும் மனிதர்களை அவரவர்கள் குறைநிறையுடன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் நிபந்தனையற்ற அன்பு. அப்பேர்ப்பட்ட அன்பே உருவான கல்யாணியை சந்தேகப்பட்டு அவள் கணவன் பிரியும்போது, எழுத்தாளர் ஜெயகாந்தனே மனம் நெகிழ்ந்து முன்னுரையில் எழுதியிருப்பார், ‘என்ன செய்து ஏது செய்து அவர்களை சேர்த்து வைப்பது என்று தெரியாமல் கல்யாணியின் காலை உடைத்து போட்டேன்’ என்று.
தொலைக்காட்சி சேனலை நிறுத்தியதும் வீட்டில் அலாதியான ஒரு அமைதி தவழ்ந்தது. வீட்டில் அவள் மட்டுமே தனியாக இருந்ததினாலோ என்னவோ அன்று முழுவதும் அந்த சினிமாவே அவள் மனதை ஆக்கிரமித்து கொண்டிருந்தது. சந்தோஷம், குறும்பு, துக்கம், வேதனை என்று பலவித பாவங்களை வெளிக் கொணர்ந்த கல்யாணி கதாபாத்திரத்தின் முகமே மனதில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. நம்மைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சி, வருத்தம் ஏதுமில்லாமல் சமமான மனநிலையில், ஒரு வேடிக்கை பார்க்கும் பாவனையோடு வாழ வேண்டும் என்று பளீரென்று நம்மை உலுக்கி எடுத்து சொன்ன படம் என்று தோன்றியது.
அந்த படத்தைப் பற்றிய நினைவிலேயே மூழ்கி இருந்த ராதிகாவின் சட்டென்று மனதில் காலையில் கணவன் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்டது போல தோன்றியது. நம் மனதிற்குள் ஆசாபாசங்கள் அலைமோதும்போது தான் பிறர் செயல்களில் ஒரு தேவையற்ற அதீத ஆர்வம், குறுகுறுப்பு அதனால் மனதில் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி அதை தொடர்ந்து யார் என்ன செய்தாலும் அதில் குற்றங்குறை காண்பது என்று எல்லா எதிர்மறை உணர்வுகளும் ஏற்படுகிறது என்று தோன்றியது. அதை கடந்த வந்து விட்டோமானால் எல்லோரும் நல்லா இருக்கணும்னு ஒரு மௌனமான பிரார்த்தனையோடு அவர்களை கடந்து போக முடியும் என்றே தோன்றியது.
மணி மாலை நான்காகி விட்டது. எந்த நிமிடமும் சுரேஷ் வீட்டுக்கு வந்து விடுவான். ஆனால் இன்று அமைதியான சூழலில் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்து ரசிக்க முடிந்தது. பரந்து கிடக்கும் வாழ்க்கையில் இது ஒரு மிக சின்ன விஷயம் தான். அவளுக்கே புரிந்தது. ஆனாலும் அந்த நிறைவு மனதை ஆட்கொள்ள, சுரேஷ் வந்து என்ன கேள்வி கேட்டாலும் அவனை எதிர்கொள்ள தயாராக முகத்தில் ஒரு புன்முறுவலுடனும் மன நிறைவுடனும் சோபாவில் போய் அமர்ந்தாள் ராதிகா.
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.

இந்த “தரிசனம்” கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும்…