பெசன்ட் நகர் பீச். மீன்களும் திமிங்கலங்களும் கரையில் இருந்து கடலைப் பார்க்கும் பொழுது. நீந்திக் களைத்து காற்று வாங்க வந்தமர்ந்து இருப்பர். அவைகள் மத்தியில் மலர்கள் போல் கவிஞர்கள் உலாவிக் கொண்டு இருப்பர். ஒவ்வொரு காற்றின் மீட்டலும் ஒரு இசையை அவர்கள் மனதில் உண்டாக்கிச் செல்லும். அந்த இசைக்கு சொல் கொடுத்து அதை வெளிப்படுத்த ஆழ்ந்து அமர்ந்தும், நடந்தும், திரிந்தும் கொண்டு இருப்பான் கவிஞன் அங்கு.
பாரி அடையாறில் வசித்து வந்தான். சரஸ்வதி நகர் பதினைந்தாவது தெரு. கிழக்கே பத்து நிமிடம் நடந்தால் கடற்கரை. பாரிக்கு சென்னையிலேயே அதிகம் பிடித்த இடம் அடையாறு. மரங்கள் அணிவகுத்து இருக்கும் சாலைகள். நிழல்கள், இலைகள், பூக்கள் நிரம்பி இருக்கும் தெருக்கள். வேலைக்காக வந்த இடம் என்றாலும் தன் வீட்டில் இருக்கும் ஒரு உணர்வையே அவனுக்கு அதிக நேரங்கள் அந்த இடம் அளித்து இருக்கிறது.
மாலைப் பொழுதுகளில் முருகன் அண்ணன் டீ கடைக்கு சென்று டீ குடித்து விட்டு, சிகரெட்கள் வாங்கிக் கொண்டு கடற்கரைக்கு செல்வது பாரியின் வழக்கம். முருகன் பேசித் தீராத ஒருத்தர். அதிகம் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து செல்வதிலேயே பாரிக்கு கவனம் இருக்கும். முருகன் அன்று புதிதாக ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.ஒரு டீயை சொல்லி விட்டு பாரி அவர்களை கவனித்தான்.
அவன் கவனத்தை ஈர்த்தது முருகன் பேசிக் கொண்டு இருந்தது அல்ல. அவர் பேசிக் கொண்டு இருந்த புதிய நபர். நீளமான தலை முடி, ஜோல்னா பை சிகரெட் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்த அவரது தோற்றம். புதிதாக அவன் வீட்டின் பக்கத்தில் குடி வந்திருப்பவர் என்று அவர்கள் பேசுவதை கவனித்த பொழுது அவனுக்கு தெரிந்தது.
“இந்தாப்பா பாரி, டீய எடுத்துக்கோ. எப்ப வந்த வேலை முடிச்சுட்டு?”
“இப்பதாண்ணா” என்று திடுக்கிட்டு சொன்னான். பாரி அவர் கவனித்ததை கவனிக்கவில்லை.
“இவரு உன் வீட்டுக்கு பக்கத்துலதான் குடி வந்து இருக்காரு, பேரு கிருஷ்ணன்”
“ஹாய், ஐ அம் பாரி” என்று சிறிது கூச்சத்துடன் அறிமுகப்படுத்திக்கொண்டான். கிருஷ்ணன் ஒரு இனிப்பான புன்னகை கொடுத்தார்.
பாரி அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
வானம் இருள் போர்வை போர்த்த ஆரம்பித்து இருந்தது. பாரி அமைதியாக டீயை குடித்துக் கொண்டு இருந்தான். சொற்களை எண்ணி பேசுகிறவன் என்று கிருஷ்ணன் பாரியை பார்த்தான்.
“பாரி, பீச் பக்கத்துல ஒரு கலெக்டிவ் இருக்கு, கடல் சுற்றுச் சூழல் மற்றும் பாதுகாப்புக்காக வேலை செய்யுற தான்னார்வ அமைப்பு. அங்கதான் புதுசா வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்கேன்.” என்று கிருஷ்ணன் பேச்சுக் கொடுத்தார்.
“ஓ! சூப்பர்! வாழ்த்துக்கள்!” என்று பாரி இருக்கையில் இருந்து கிளம்புவதற்காக எழுந்தான்.
“நாளைக்கு போகணும், சும்மா இப்ப போய் எந்த இடம்னு பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். ஆனா எனக்கு வழி தெரியாது. முருகன் நீங்க பீச்சுக்குதான் போறதா சொன்னாரு, நான் உங்க கூட வரலாமா?”
பாரி சற்று தயங்கி, பின்பு சரி என்றான்.
இருவரும் நடந்து கடற்கரை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
பாரி எதுவுமே பேசவில்லை. அவனிடம் எந்த வியப்பும் இல்லாதவன் போல் அமைதியாக நடந்து சென்றான். ஒருவித ஆட்டோமேசன் புரோகிராமில் அவன் செயல்பட்டுக் கொண்டு இருந்த காலகட்டம் அது.
கிருஷ்ணன் பாரியை டிப்ரெஸ்டான ஆளா இருப்பான் என்று யூகித்தான், அவன் உளவியல் படிப்பின் பின்புலத்தை வைத்து.
பாரியைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று முடிவெடுத்து அவனும் அமைதியாகவே நடந்து சென்றான்.
கிருஷ்ணன் அமைதியாக நடந்து வந்தது பாரிக்கு மிகவும் பிடித்து இருந்தது.
பாரி அதை விரும்பினான்.
அவரிடம், ”நீங்கள் சரியான வேலையில்தான் சேர்ந்து இருக்கிறீர்கள்.” என்றான்.
கிருஷ்ணன் புரியாமல் திகைத்தான்.
“என்ன சொல்கிறான் இவன்?” என்று தலையை சாய்த்து கண்களை சுருக்கிப் பார்த்தான். அதில் ஒரு மெல்லிய சிரிப்பும் இருந்தது.
அந்த பார்வையை புரிந்துகொண்ட பாரி,”இல்லை, உங்கள் வேலைக்கும் உங்களுக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறது என்று தோன்றுகிறது. உங்களிடம் அதற்கு ஏற்ற உணர்வும் இருக்கிறது,” என்றான்
கிருஷ்ணன் மேலும் குழம்பினான். ஆனால் ஏதோ நல்லவிதமாக நம்மை எண்ணுகிறான் என்பதை அறிந்து கொண்டான்.
பாரி, “இதோ உங்கள் அலுவலகம் இந்த சாலையில்தான் இருக்கும்” என்றான்.
கிருஷ்ணன் புன்னகைத்து விட்டு, ”சரி, உங்க நம்பர் குடுங்க. ஃபிரியா இருக்கும் பொழுது மீட் பண்ணலாம்,” என்று பாரியின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டான்.
பாரி கடற்கரையை நோக்கி சென்றான். அங்கு அவன் கேட்க இருக்கும் இசை கச்சேரி காத்து இருந்தது.
பாரியும் கிருஷ்ணனும் அதற்கு பின் எல்லா வார இறுதிகளிலும் சந்தித்தனர். யாராவது ஒருவர் அறையில் வார இறுதியில் இரவு உணவு, குடி, வாழ்க்கையின் இருட்டுப் பக்கங்களில் வெளிச்சம் தேடும் பேச்சு என்று மாதங்கள் ஓடின.
இதில் கவிதைகள், கதைகள், இசை, ஓவியம் என்று அவர்கள் ஒருவரை ஒருவர் பொருந்தி, அந்த நேரங்களை இனிமையாக்கி அவற்றை விரும்பினர் இருவரும்.
முக்கியமாக கி.ராவின் பாலியல் கதைகளை ஒன்றாக அமர்ந்து வாசித்து சிலாகிப்பது, இளையராஜாவையும், ஹாரிஸ் ஜெயராஜையும் அறை முழுக்க நிறைத்து வைப்பது, ரசனையின்றி வாழ்வில் எந்த ருசியும் இல்லை என்று அறைகூவுவது. இவ்வாறே பித்துப் பிடித்த மனிதர்களாய் விடுமுறைகளை ஒன்றாக கலித்தனர்.
பாரி அதிகமாக அவற்றை விரும்பினான். அவன் இளைப்பாற நிழல் இல்லாத வெம்மையான தனிமை சற்று குளிர் கொண்டது.
பாரியின் ஆத்மார்த்த சிநேகிதன் ராகவன். பாரியை உள்ளும் புறமும் காட்டக் கூடியவன் என்று கூட சொல்லலாம். அவனை பாரி முழுவதுமாக நம்பினான். ராகவனின் ஐயங்கள், குறைகள் எல்லாம் பாரிக்கு தத்துவார்த்த கேள்விகள். அந்த அளவிற்கு ராகவனின் செயல்பாடுகள் இருக்கும். அதை பாரி உடனிருந்து கண்டவனாய் அன்புற்று இருந்தான் ராகவனிடம். பாரிக்கு அவன் ஒரு கண்ணாடியாக தெரிந்தான். அந்த கண்ணாடி கேள்விகளையும் தேடல்களையும் எழுப்பிக் கொண்டே இருந்தது.
ஒரு மாலையில் ராகவன் அவனை பார்க்க அவன் அறைக்கு வந்திருந்தான். பணி காரணமாக வெளியூர் செல்வதற்கு சென்னையில் இருந்து ராகவனுக்கு ஃபிளைட். இரவு தங்கி காலையில் ஃபிளைட்டுக்கு செல்வது என்று திட்டம்.
ராகவன் விஸ்கி கொண்டு வந்திருந்தான் பரிசாக. அதை அன்று இரவு குடிப்பது என்று திட்டம். ராகவனின் காதலி பார்வதியும் அவனுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறாள். அவளும் சென்னையில் இருந்ததால் ராகவன் அவளையும் இரவு பாரியின் அறைக்கே அழைத்தான்.
பாரிக்கு அவர்கள் மேல் அலாதி பிரியம். பாரிக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறான் ராகவன், எல்லாமுமாக.
அன்று மழை பெய்து கொண்டே இருந்தது. பார்வதி ராகவனுக்கு அழைத்து வந்து கூட்டிச் செல்ல முடியுமா என்று கேட்டாள். பாரியின் பைக் இருந்தது. ஆனால் மிக மோசமான நிலைமையில் இருந்தது.
“பாரி நான் போய் பார்வதிய கூட்டிட்டு வர்றேன்” என்று ராகவன் கேட்டான்.
“பைக் பிரச்சனைடா, செயின் கழண்றுடும் அடிக்கடி. நீ ஓட்டிட்டுப் போக முடியாது. ஹென்றி அண்ணா உங்க பைக் கொஞ்சம் தர முடியுமா?”
“நான் வீட்டுக்குக் கிளம்பிட்டேன்டா, ஆல்ரெடி டைம் ஆச்சு”
பாரி நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களை சந்திக்கும் பரபரப்பில் இருந்தான்.”நானே போய் கூட்டிட்டு வந்துடவா?” என்று ராகவனிடம் கேட்டான்.
“சரி, போயிட்டு வா” என்று ராகவன் கூறினான்.
பாரிக்கு அவன் என்ன செய்கிறான் என்பதில் துளியும் பிரக்ஞை இல்லை. பார்வதி ராகவனுடன் பைக்கில் வர எண்ணி இருக்கலாம். பைக் இல்லை என்றால் அவள் ஆட்டோவில் கூட வந்து இருப்பாள். பாரி இந்த எதையும் யோசிக்கவில்லை. ராகவனும் உடனே சரி போய் கூட்டிக் கொண்டு வா என்று சொல்லிவிட்டான்.
பார்வதி அவள் வீட்டு தெருவின் முற்றத்தில் காத்து இருந்தாள். கருப்பு நிறத்தில் ஒரு சேலை அணிந்து இருந்தாள். இரவை உடுத்தியவள் போல. அவள் ஒரு மூக்குத்தி அணிந்து இருப்பாள். அவளிடம் முதல் முறை பேசிய பொழுதே அது அழகாக இருக்கிறது என்று பாரி அவளிடம் சொல்லி இருக்கிறான். ஒரு நட்சத்திரம் அவள் முகத்தில் சுடர்வது போல அந்த மூக்குத்தி இரவில் தெரிந்தது.
அவர்கள் திரும்பும் வழியில் பைக்கில் ஒரு முறை செயின் கழண்டு விட்டது. பாரி அதை மாட்டிக் கொண்டு மிக மெதுவாகவும் கவனமாகவும் அவளை அழைத்து வந்தான். இதனால்தான் ராகவன் வர இயலவில்லை என்பதை பார்வதியிடம் தெரிவித்தான்.
பார்வதிக்கு பாரி அவளை அழைத்துச் செல்ல வந்தது விசித்திரமாக இருந்தது.
பார்வதி வெளிப்படையாக பேசிப் பழகும் குணம் கொண்டவள். பார்வதி குறித்து அவனுக்கு நல்ல அபிப்பிராயங்கள் இருந்தது. தைரியமானவள் என்றும் துணிச்சல் கொண்டவள் என்றும் அவளை நினைத்தான்.
அன்று இரவு பாரி கிருஷ்ணனையும் அழைத்து இருந்தான். இவர்கள் செல்லும் போதே கிருஷ்ணனும் ராகவனும் பாரியின் அறையில் இருந்தனர். பாரியும் பார்வதியும் முழுவதுமாக நனைந்து உள்ளே நுழைந்தனர். பாரிக்கு ஈரத்தால் குளிர் அடித்தது. பார்வதி அலட்டிக்காமல் இருந்தாள். அவள் சென்ற உடனேயே உடை மாற்ற சென்று விட்டாள். பாரி கிருஷ்ணனிடம் ஈரக் கைகளுடனேயே ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து குளிர் காய்பவன் போல பிடித்துக் கொண்டு வீட்டின் முற்றத்தில் அவர்களுடன் அமர்ந்தான்.
பாரிக்கு இதெல்லாம் தேவையா என்ற ஒரு சிந்தனை கூட இல்லை. அவளை ஒரு ஆட்டோவில் வர சொல்லி இருக்கலாம். இப்படி நனைந்து கொண்டு சென்று அவளை கூட்டி வர என்ன அவசியம்தான் இருந்தது?
பாரிக்கு அந்த குளிர் மிகவும் பிடித்து இருந்தது. மழையில் நனைந்து பிடித்த குளிர், வீட்டின் உள்ளே நுழைந்த தருணம் உண்டான வெம்மை அவனுக்கு இனிமையான ஒரு அரவணைப்பு போல் இருந்தது.
சட்டென அவன் நினைவில் ஒரு சொல் ஒலித்தது. “வார்ம்த்” என்றான் தன்னை அறியாமலேயே. எல்லோரும் சுற்றி அமர்ந்து இருந்தனர் அறையில். பாரி சொல்வதை ராகவன் புரிந்தவன் போல் சிரித்தான். பார்வதி குழம்பியவள் போல் பார்த்தாள். கிருஷ்ணன் வேறு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான் ராகவனிடம். பாரி எதையுமே கவனிக்கவில்லை. மது போத்தலை எடுத்து கையில் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த திரவத்தின் ஒளியும் பாரிக்குள் அந்த வார்த்தையை மீண்டும் எழுப்பியது. “வார்ம்த்” என்றான் சொக்கிய மன ஓட்டத்துடன்.
“ரொம்ப நல்லா இருக்குடா” என்று ராகவனிடம் பாரி சொன்னான். பார்வதி என்ன வார்ம்த் என்று கேட்டாள். பாரி மனநிலை அப்படி இருக்கிறது என்று அவளிடம் சொன்னான். பாரி வேறு எதுவுமே பேசவில்லை.
அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை கூட கவனிக்கவில்லை. அவ்வப்பொழுது அவர்கள் கண்களை பார்த்து ஒரு புன்னகை மட்டும் புரிந்துவிட்டு அவனுள்ளேயே ஆழ்ந்து இருந்தான்.
மழை விட்டு இருந்தது. ராகவன் பீச்சுக்கு போகலாம் என்று சொன்னான். எல்லோரும் புறப்பட்டு சென்றனர். மழை பெய்து இருந்ததால் யாரும் அன்று அங்கு தூங்கிக் கொண்டு இருக்கவில்லை. நால்வரும் கடற்கரையில் அமர்ந்தனர். மின் கம்பங்களின் ஒளி அரை பகலாக கடற்கரையை மாற்றி இருந்தது. மணல் மழையால் குளிர்ந்து இருந்தது. பாரிக்கு அது பிடித்து இருந்தது. பார்வதி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தாள். பாரிக்கு ஒரு சோகமான அலைவரிசை போல கேட்டது அந்த ஒலி.
பாரி அவளிடம் “நீ நிறைய பெண்கள் மாதிரி இல்லை. உன்னால் நீ விரும்புவது குறித்து தைரியமான முடிவுகள் எடுக்க முடிகிறது. உன் குழப்பங்கள் உன்னை சரியாகத்தான் வழி நடத்தும் என்று நம்பு” என்றான்.
அவளுக்கு பாரியின் வார்த்தைகளில் ஏற்பு இல்லை. நீ நினைக்கிற மாதிரி நான் இல்லை என்று கூறினாள். பாரி மேலும் ஏதும் கூறாமல், மவுனத்திற்கு திரும்பி விட்டான்.
சட்டென்று மழை வானில் இருந்து பிளந்து விழுந்தது. மின்கம்பங்களின் ஒளியில் அவைகள் நீளக் கோடுகள் போல தெரிந்தன. அவைகள் செங்குத்தாக இடைவிடாது மணலில் சொரிந்தன. பாரிக்கு அவை மிக அழகான காட்சியாக தெரிந்தன. “மின்துளிகள்” என்று அவன் மனம் பாடியது.
ஒரு உயிர் சக்தி அவனுக்கு கிடைப்பதாக அவன் நினைத்தான்.
அதிகமாக மழை பெய்ததால் நனையாமல் ஒதுங்கி நிற்கலாம் என்று புறப்பட்டனர். பாரிக்கு கரைக்கு அருகில் சென்று தண்ணீரில் நிற்க வேண்டும் என்று தோன்றியது. கிருஷ்ணனும் பாரியுடன் கரைக்கு சென்றான். ராகவனும் பார்வதியும் நனையாமல் இருக்க கடற்கரைக்கு முன்பு இருக்கும் உணவகத்தின் முகப்பிற்கு சென்றனர்.
கிருஷ்ணனுக்கும் பாரிக்கும் கடற்கரையுடன் மிக நெருக்கமான உணர்வு இருந்தது. அவர்களின் வாழ்வில் கடற்கரை ஒரு பகுதியாக ஆகி விட்டு இருந்தது. அதிக நாட்கள் அவர்கள் கடற்கரைக்கு சென்று பேசிக் கொண்டு இருந்திருக்கின்றனர்.
குறிப்பாக பௌர்ணமி நாட்கள் அன்று பாரி கடற்கரைக்கு சென்று நீண்ட நேரம் நிலவை பார்த்து அமர்ந்து இருப்பான். முழு நிலவு கடலில் வழிந்து கரைக்கு வருவது போன்று இருக்கும் அந்தக் காட்சி. ஒரு ஒளிக் கீற்று கடலில் விழுந்து பாரியின் கண்களில் நுழைந்து அவனது இதயத்தை வெம்மை ஆக்கி ஒரு பொங்கும் உணர்ச்சியை அவனுக்கு அளிக்கும்.
வலதுபுறமாக சற்று தள்ளி கிருஷ்ணன் நின்று இருந்தான். பாரி அலைகள் வந்து மோதுவதை ஒரு குழந்தை அருகே வந்து அழைத்துவிட்டு ஓடிச் செல்வது போல பார்த்து நின்று இருந்தான். காற்றில் ஒரு பலூன் பறந்து வந்தது. அதை ஓடி எடுத்து வைத்துக் கொண்டான். அதை வானத்தில் உயர்த்திப் பிடித்து கத்தினான். கிருஷ்ணனும் கடலின் இருள் பரப்பை பார்த்து கத்தினான். இருவரும் சங்கிலிகளில் இருந்து விடுபட்ட மிருகங்கள் போல சுதந்தரமாய் அங்கு அலைகளுடன், மழையுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
திடீரென்று ஒரு மின்னல் பாரிக்கு வலது புறத்தில் வெட்டி பிராகசமான ஒரு நொடியை காட்டியது. அதை பார்த்து பாரியின் மனம் துள்ளியது.
“மாப்பிள்ளை இதான் அந்த தருணம்.
அந்த ஒளிதான், அந்த ஒளிதான்” என்றான் பாரி.
“ஆமாம், அதேதான், அதேதான்.”
கிருஷ்ணன் கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பரித்தான்.
இருவரும் மிக நிறைவுடன் அந்தத் தருணத்தில் இருந்தனர்.
நீண்ட நேரம் ஆகிவிட்டு இருந்தது. இருவரும் திரும்பி சென்றனர். ராகவனும் பார்வதியும் காணவில்லை. சிறிது நேரம் கழித்து பாரி தேடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து இங்கு இருக்கிறோம் என்று ராகவன் அழைத்தான். உணவகத்தின் வாசற்படிகளிள் இருந்து இருவரும் இறங்கி வந்தனர்.
கிருஷ்ணனும் பாரியும் அந்த மின்னலின் வெளிச்சத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.
பாரி அதை “எதிர்பாராத தருணத்தில் உண்டான வெளிச்சம், அது காட்டியது வெளிச்சத்தை மட்டுமே தூய வெளிச்சம்” என்று பூரித்து சொன்னான்.
கிருஷ்ணன் ஆமோதித்து “நம்மில் எழுந்த துள்ளலும் அதனால்தான், நம் மனம் இன்னது என்று தெரியாமல் எதிர்பாராமல் காத்திருந்ததே அதை அத்தனை ஆழமாய் உணர நம்மால் முடிந்தது” என்றான்.
நால்வரும் அந்த மூடிய உணவகத்தின் படிகளில் அமர்ந்து இருந்தனர். பாரி தன் கையில் இருந்த பலூனை பார்த்துக் கொண்டு இருந்தான். “வார்ம்த்”என்றான். நண்பர்களை நீண்டநாட்கள் கழித்து சந்திக்கிறான் பாரி. அதுவே அவனுக்கு அந்த இதமான அக வெம்மையை அளித்தது. ஒரு சுகமான ஜுரம் அவனை பீடித்தது போல. கிருஷ்ணனுக்கு பாரி ஏன் அந்த பலூனை நெருக்கமாக நினைக்கிறான் என்று புரிந்தது.
முன்பு ஒரு நாள் கடற்கரையில் இருந்து வரும்பொழுது பாரி அதே போன்று ஒரு பலூனை கண்டு எடுத்து வந்தான்.
“என்ன” என்று கேட்டதற்கு “இந்த பலூன் என்னைப் போன்றே தனியாக அலைந்து கொண்டு இருந்தது. இப்பொழுது அது என்னிடம் இருக்கிறது, நான் அதனிடம் இருக்கிறேன். இருவருக்கும் ஆறுதலாக இருக்கிறது இப்போது” என்றான்.
பாரிக்கு அந்த தருணம் மிக தித்திப்பாக இருந்தது. அதை நினைவு கூர்ந்து கொண்டே “இது நம்முடைய தருணம். ஐ வில் ஹாவ் திஸ் சான்ஸ், இதை விட மாட்டேன்” என்று உரக்கச் சொன்னான்.
ராகவனும் பார்வதியும் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தனர். நீண்ட நேரமாக பாரியும் கிருஷ்ணனுமே பேசிக் கொண்டு இருந்தார்கள். அதை பாரி உணர்ந்து அவர்கள் தனித்து விடப் பட்டுவிட்டார்களோ என்று எண்ணினான்.
அதற்காக வருந்தி ராகவனிடம் மன்னிப்பு கேட்டான். “நாங்க கொஞ்சம் ஓவரா போறோம்னு நினைக்கிறன், ரொம்ப சந்தோஷமா இருக்கோம் அதான் நீ தவறாக எடுத்துக்காதே” என்று ராகவனிடம் கூறினான்.
ராகவன் “ஆமாம்” என்று கூறினான். பார்வதி ராகவனிடம் “கேட்கட்டுமா?” என்று கேட்டாள். ராகவன் “கேள்” என்று கூற பாரியிடம் “இப்போ நீ என்ன சொன்ன?” என்று கேட்டாள்.
பாரி புரியாமல் பார்த்தான்.
“எதை கேட்கிற?”
“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. ஈவினிங்ல இருந்து வார்ம்த்னு சொல்லிட்டே இருக்க, என்ன சொல்ற நீ?”
“அது எனக்கு தோணுது, எனக்கு அந்த உணர்வுதான் இருக்கு சாயங்காலத்துல இருந்து. அதான் அதை சொல்லிட்டு இருக்கேன்.”
“ஐ வில் ஹாவ் திஸ் சான்ஸ்னு சொன்னியே அது என்ன?”
“நீ நிறைய கேட்கிற, என்னை இப்படி கேள்வி கேட்டு யோசிக்க வைக்காத” என்றான்.
“அதை நீ என்ன மீன் பண்ண?” என்று அவள் மீண்டும் கேட்க பாரிக்கு ஒன்றும் புரியவில்லை.
திடீரென்று முகத்தில் ஒரு அறை விழுந்தது போல் கபாலம் கலங்கியது போல், மீண்டும் கேவலமான ஒரு சிடுக்குக்குள் நுழைந்தது போல், ஒரு சிறையில்
அடைபட்டது போல் பதறி விழித்து உணர்ந்தான்.
அவள் ஒரு குற்றத்தை விசாரிக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.
“நீ என்கிட்டதான கேன் ஐ ஹாவ் எ சான்ஸ்னு கேட்ட?”
பாரியின் சுகமான வெம்மை குளிருக்கு திரும்பியது. அவனால் வார்த்தைகளை கோர்த்து எதுவும் பேச முடியவில்லை.
“ராகவா நான் அப்படியாடா சொன்னேன்?” என்று பாரி அவனிடம் கேட்டான்.
ராகவனும் “எனக்கும் அப்படிதான் கேட்டது” என்று கூற பாரி திகைத்து விட்டான்.
“பின் எதற்காக நீ மன்னிப்பு கேட்டாய்?” என்று ராகவன் கேட்டான்.
“ஓவரா போறோமா, மன்னிச்சுக்கோனு நீ எதுக்கு சொல்லணும்?”
பாரி,” அதை உங்களை தனித்து விட்டுவிட்டோம் என்று நினைத்து கேட்டேன். நீ வெகு நாட்கள் கழித்து என்னை பார்க்க வந்து இருக்கிறாய், உன்னை கவனிக்காது நான் கிருஷ்ணனுடன் அதிகமாக பேசிக் கொண்டு இருந்ததால், மேலும் நீ அமைதியாக இருந்ததால் உனக்கு ஏதாவது வருத்தமோ என்று எண்ணி கேட்டேன்.” என்று விளக்கிக் கூறினான்.
கிருஷ்ணனிடம் பாரி கேட்டான். கிருஷ்ணன் அங்கு நடந்து கொண்டிருந்த எதையும் கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தான். கிருஷ்ணன் தெரியவில்லை என்று கூறினான். பாரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
“பார்வதி சொல்றானா விசாரிச்சாதான் தெரியும், அதை அப்படியே நிராகரிக்க முடியாது” என்றான் கிருஷ்ணன்.
நண்பர்கள் மத்தியில் ஒரு பெரும் தனிமையை உணர்ந்தான். தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பாரிக்கு ஏற்பட்டுவிட்டது.
பாரி இப்படி ஒரு பழி தன்மேல் வருகிறதே என்று பதறினான்.
ராகவன் பாரியிடம் “நீ குடித்து இருக்கிறாய், அதனால் சொன்னதை மறந்து விட்டாய்” என்று கூறினான்.
பாரிக்கு அது சுத்தமாக புரியவில்லை.
பாரி ராகவனிடம் “நீ கூட நான் சொன்னேன் என்று சொல்லவில்லை, அப்படிதான் கேட்டது, நினைக்கிறேன் என்றுதான் சொல்கிறாய். நீயும் குடித்து இருக்கிறாய், உன் மனம் நான் சொன்னது போல கற்பனை செய்கிறதா என்ன?” என்றான்.
அவர்களின் விவாதங்கள் ஒரு அனலை பாரியின் உள்ளத்தில் கிளப்பியது.
“நான் இங்கு உங்களுடனே இல்லை இதற்கு முந்திய கணம் வரை” என்று மனதினுள் உழன்று கொண்டே இருந்தான்.
ஆனால் பாரி ஒரு தவறான முயற்சியை கையில் எடுத்தான். பேசி குழப்பத்தை தீர்க்கலாம். புரிந்து கொள்ளக் கூடியவர்கள்தான் என்று அதீத நம்பிக்கை அவர்கள் மேல் பாரிக்கு இருந்தது.
ராகவனின் மேல்தான் அந்த நம்பிக்கை அதிகமாக இருந்தது. எந்த நம்பிக்கையும் அன்று எடுபடவில்லை.
ஒரு கட்டத்தில் பாரி புரிந்து கொண்டான், நிராயுதபாணி ஆகி விட்டதை.
பாரி கேட்ட மன்னிப்பு மொத்தமாக அவனை குற்றவாளியின் கூண்டில் ஏற்றி விட்டது.
ராகவன் பாரிக்கு ஒரு ஆறுதலை கூறிக் கொண்டே இருந்தான். “குடித்ததால் தான் நீ இப்படி பேசிவிட்டாய்” என்பதே அது. பார்வதியும் ராகவனும் அதை அப்படி முடித்துக் கொள்ளவே விரும்பினர்.
தயாளர்கள் மன்னிக்க முன்வந்து கொண்டே இருந்தனர். பொறுத்துக்கொள்ள இயலாதவனாய் அவர்களுக்கு தன் ஆள்மனதில் கூட அப்படி ஒரு இச்சை இல்லை என்று கூற விளைந்தான். “தானாக எப்படி அது வெளி வரும்” என்று தர்க்கத்தால் வாதாடினான்.
“அப்படி ஆசை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை” என்று ராகவன் கூறினான். பார்வதியும் அதை ஆமோதித்து “உணர்ச்சி வேகம் ஒன்றில் கேட்டு இருக்கலாம்” என்றாள்.
பாரிக்கு இவர்களுக்கு தன் நெஞ்சை பிளந்து காமிக்க தான் வேண்டும் என்று தோன்றியது. அனுமன் காட்டியது போல.
பாரி புயல் கடலாய், நிர்மூலமாய், கொந்தளித்துக் கொண்டு இருந்தான்.
பாரியை மன்னிக்க தயாராக இருந்தனர் அனைவரும். கருணை உள்ளங்களின், மேன்மை பொருந்தியவர்களின் இதற்கு முன் இனித்த எல்லா சொற்களும் கசந்தன பாரிக்கு.
பாரி ஏற்கவில்லை. அவன் ஏற்காத வரை அவர்களும் ஓயவில்லை.
பாரி வருவதாக சொல்லி விட்டு கிளம்பினான்.
நடந்து செல்கையில் உலகத்திற்கே தான் ஒரு அந்நியன் ஆகிவிட்டது போல உணர்ந்தான். ஒரு தொடர்பு கூட மீதம் இல்லாமல் இந்த உலகத்தின் கனமான ஒரு சுமையை சுமந்து செல்பவன் போல நடந்து அறையை அடைந்தான்.
காலை வெளிச்சம் பரவ ஆரம்பித்து இருந்தது. பாரியின் மஞ்சள் அறை அவனுடன் சேர்ந்து தகித்தது.

பாரிக்கு நடந்தவைகள் குறித்து கேள்விகள் எழும்பிக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் தானே அவளிடம் கேட்டு இருக்கக் கூடுமோ என்று கூட எண்ண ஆரம்பித்து விட்டான்.
பாரிக்கு வேதனை தாள இயலவில்லை. எண்ணங்களை அடுக்கினான் மிகுந்த பிரயத்தனப்பட்டு.
பாரிக்கு ஒரே ஒரு விடைதான் கிடைத்தது.
“நான் எதற்காக மன்னிப்பு கேட்டேன் என்பதை விளக்கி விட்டேன்.
அதை அவர்கள் ஏற்கவில்லை.
நான் மாற்றிக் கூறுவதாக சொல்கிறார்கள்.
அப்படி என்றால் நான் பொய் சொல்லக் கூடியவன் அவர்களைப் பொறுத்தவரையில்.
அதன் மூலம் எல்லாம் நிரூபிக்கப்பட்டுவிட்டதாக கருதுகிறார்கள் என் மேன்மை பொருந்திய நண்பர்கள். உண்மையாகவே மேன்மை பொருந்தியவர்கள்தான்.
இந்த மாதிரி விஷயங்கள் நடக்கக் கூடும்தான் என்றும், நாம் அனைவரும் அடல்ட்ஸ் என்பதால் இதை கூட புரிந்து கொள்ள முடியாமல் இங்கு யாரும் இருக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
இதன் பின்னணியில் நான் குற்றவாளி ஆக்கப்பட்டு பல நேரம் ஆகி விட்டது.
போதை காரணமாகதான் நான் மறந்து விட்டு ஏற்க மறுக்கிறேன் என்பது என் மேல் அவர்கள் காட்டும் கரிசனம்.
நான் கேட்டது ஒன்றும் அவ்வளவு பெரிய தப்பு இல்லை என்கிறார்கள்.நான் ஒப்புக்கொண்டால் போதும் அவர்களுக்கு.
உண்மையிலேயே விரிவுடைய மனம் உடையவர்களா இவர்கள்?”
பாரியின் மனம் இடைவிடாது அரற்றியது.
“ஆனால் நான் மன்னிப்பு கேட்டது இன்னதற்காகத்தான் என்று சொல்வதை அவர்கள் ஏற்கவில்லை என்றால், நான் மாற்றிக் கூறுகிறேன், பொய் சொல்கிறேன் என்று தானே அவர்கள் நினைக்கிறார்கள்“
பாரிக்கு அறையின் வெளிச்சம் தன்னை எரிக்கிறது என்று தோன்றியது. முழு உலகமும் ஒரு சிலந்தி வலை தர்க்கப் பின்னல்களாக தெரிந்தது. தூய தர்க்கம் இதில் சாத்தியமில்லை என்று தோன்றியது. தனித்த ஒரு நிகழ்விலேயே, வேறு எந்த முன்னனுமானமும் இல்லாத போதே ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் அர்த்தம் வெளிப்பட்டு ஒருதர்க்கம் வெள்ளக் கூடும். இது சிலந்தி வலை பின்னல் என்று தோன்றியது. நம்மை வேருடன் இழுத்து விழுங்கி அழிக்கும் அமிலக் குழி. பின்னல்கள் கொண்ட நரம்பு வலை.”
“பிறர் அறியாததை அறிபவன் நீ” என்று பாரிக்கு ஒரு எண்ணம் வந்தது. “நான் கவிஞன்” என்று பாரி தன்னையே வியந்து கொண்டான்.
அறையில் இருந்த மது போத்தலை எடுத்தான். எரிச்சல் எழுந்தது அவனுள். மூளை ஓட ஆரம்பித்தது.
அனைவருமே குடித்துத்தான் இருந்தனர், பார்வதியை தவிர.
“அப்படிதான் கேட்டது போல் இருக்கிறது” என்று ராகவன் சொல்லும் கணமும், பார்வதியின் மன ஓட்டங்களும் பாரிக்கு புரியத் தொடங்கியது.
இங்கு உணர்ச்சிதான் வெல்ல இயலும், அன்புதான் வெல்ல இயலும் என்று பட்டது பாரிக்கு.
ராகவன் தன்னை இப்படி ஒரு கோழை என்றா நினைக்கிறான் என்று தாங்கிக் கொள்ளவில்லை பாரியால்.
பாரி குடிக்க ஆரம்பித்தான். மனதின் இடை எழுந்து நிற்க இயலாத துயரில் அவனை ஆழ்த்தியது. இதுதான் யோசிக்கிறான் என்று இல்லாத கலக்கம் அவன் எண்ணங்களில்.
ஜன்னல்களின் வழியே காற்று வேகமாக வீசியது. வெளி அறையில் அலமாரியில் இருந்த பலூன் பறந்து வந்து பாரியின் காலடியில் மோதி நின்றது. அதை எடுத்து பற்றிக் கொண்டான். அவனுள் புன்னகை எழுந்தது. அவனுக்கு அது ஆறுதலை தந்தது.
அந்த கணம் அப்படியே படுக்கையில் சாய்ந்து உறங்கச் சென்றான்.
Discover more from சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026
Subscribe to get the latest posts sent to your email.
