கதிரின் எண்ணப்பெட்டியில் இருந்து வந்த பட்டியலைப் படிப்பதற்கான அன்றைய நேரத்தில், சூரியனின் மின்காந்தக்கதிர்கள் அதற்கான சமிக்கையை நீலாவிற்குள் பாய்ச்சின.
நீலாவின் அழகிய நீல நிறம் கொண்ட கண்கள் ஒளிர்ந்தன. இது 2386 ஆம் ஆண்டு. பெப்ரவரி 17. காலை மணி ஏழு.
நீலா ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்க, அவள் கைகள் கூரை வரை நீண்டிருந்த அகலமான குளிர்பதனப்பெட்டியின் பக்கமிருந்த மேசையில், உயிர்நெகிழியால்1 செய்யப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட பொருள் வைக்கும் குடுவைகளை அடுக்கிக்கொண்டிருந்தன.
- பாலாவை எழுப்பிப் பல் தேய்க்க வைக்க வேண்டும்
;
;
09. தீராவைத் துணி துவைத்து, அடுக்கி வைக்க ஆணையிட வேண்டும்.
10. இரவு உணவுக்கான லக்ஸாவைத் தயாரித்து வைக்க வேண்டும்.
இருந்த பத்து வேலைகளில் முதல் ஒன்றுக்கே எத்தனை சக்தி தேவைப்படும் என்று தெரியாது.
இந்த வீட்டில் மொத்தம் ஐந்து பேர் இருக்கிறார்கள். பாலா, மற்றும் கதிர் மட்டுமே இயல் மனிதர்கள்.மற்றவர்கள், வெவ்வேறு வடிவத்தில், மாறுபட்ட செயல்களுக்காக பணியமர்த்தப்பட்டிருக்கும் இயந்திரங்கள்.

இவர்களில், நீலா மட்டுமே இயந்திரப்பெண் ரகம். மற்றவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பும் நீலாவுடையது.
பாத்திரம் தேய்த்து துடைத்து அடுக்கவும், மேசையை சுத்தம் செய்யவும் கவின் இருக்கிறான்.
துணிகளை துவைத்து அடுக்கி, வீட்டை வாசனையான நீராவியில் சுத்தப்படுத்துவது தீராவின் வேலை.
உணவுத் தயாரிப்பு மற்றும் பாலாவை பார்த்துக்கொள்வது நீலாவின் வேலை.
சிங்கப்பூரின் கே கே மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் கதிருக்கு இந்த வாரம் இரவு நேர வேலை.
அவர் கண் நோக்கிய வேகத்தில், தானியங்கும் சக்தி கொண்ட, எடை இல்லாத, வெண்ணிற இறக்கைகள் தாமாகவே வந்து காந்தம் போல அவர் உடலில் பொருந்திக்கொண்டன.
நெற்றிப்பொட்டுக்கு அருகில் இருக்கும் விசையை, அவர் மூளையின் எண்ண அலைகளைக்கொண்டு,கண்களைச் சுற்றி இருக்கும் மிக நுண்ணிய இமையோடு சேர்ந்த இயந்திரக்குச்சிகள் அழுத்தினால், வெவ்வேறு முறைகளில் மருத்துவமனையை அடைந்துவிடலாம்.
முறை 1 தொடர்பிலா அதிவேகப் பயணம்: வேகக்குறியீட்டோடு ஒரு மனிதமுகம் குறுக்காக வெட்டப்பட்டிருந்தது. அதுதான் கதிர் பெரும்பாலும் பயன்படுத்தும் முறை.
வானம், காற்றை மட்டும் தொட்டபடி ஒரு நிமிடத்தில் ஜூரோங் கிழக்கிலிருக்கும் வீட்டிலிருந்து மருத்துவமனையின் அறைக்குள் சென்றுவிடலாம்.
அதி சிக்கலான அறுவை சிகிச்சையை இயந்திரங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பவராகக் கதிர் இருந்தாலும் யாருடனும் கண்ணோடு கண் சேர்ப்பது அவருக்கு அசௌகரியமாக இருக்கிறது.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் கதிர் போன்றோரை ஆட்டிசம்- அஸ்பெர்ஜர்ஸ்2 என்றார்கள்.
செயல் திறன் அதிகமுள்ள இவ்வகை மனிதர்களில் ஒருவர் மருத்துவர் ஆனந்த். அவரது ஒன்பதாம் தலைமுறை கதிர்.
ஒவ்வொரு மூன்று தலைமுறையிலும் அதே வகையான அதித்திறன் கொண்ட ஆட்டிசம் பாதிப்புள்ள மனிதர்கள் கதிரின் தலைமுறையில் இருந்தார்கள் என்பதைச் சொல்ல இயல்மனிதர்கள் யாரும் கதிரோடு தொடர்பில் இல்லை.
எல்லாருக்கும் வீடு என்பது சிங்கப்பூர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இருக்கிறது. சிறிய வீடுகளில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்குமாறு, பல்வேறு நிகழ்ச்சிகளை அரசாங்கம் நடத்திக்கொண்டு வந்திருக்கிறது.
சில நூற்றாண்டுகளில், இவ்வகை மனிதர்கள் அதிகமாகவும், ஆட்டிசம் இல்லாத மனிதர்கள் பத்து சதவீதம் என்றும் ஆகிவிட்டார்கள்.
அடிக்கடி ஏற்பட்ட போர் நடுக்க காலம், தொடர் வேலையின்மை, படிப்பு ஏற்படுத்தும் சுமை போன்ற பலவும் சேர்ந்து வாழ்தல் இனிதல்ல என்ற முடிவுக்கு மனிதர்களைத் தள்ளிவிட்டன.
பன்னிரண்டு வயதில் எழுதப்படும் பொதுத்தேர்வு முதல், தேச சேவை, கல்லூரிப்படிப்பு என்று பலவும் கொடுக்கும் தொடர் அழுத்தம் மனிதர்கள் எட்டமுடியாத அளவைத் தாண்டிவிட்டன.
மூளையில் கார்டிசோல்3 அதிகரித்தே இருப்பதால், மனிதர்கள் அழுத்தத்தோடு வாழ்வதைத் தவிர்க்க முடிந்ததில்லை. மரபணு மாற்றம் மிக வேகமாக நடந்துவருவதை தடுக்க முடியவில்லை.
பிள்ளை பிறப்பு சதவீதம் மெல்ல மெல்ல குறைந்து, கடந்த முன்னூறு ஆண்டுகளில், அறவே இல்லை என்றாகிவிட்டது.
சிங்கப்பூரின் விரைவு உணவகங்களில் இப்போது முன் அளவில் எல்லாருமாக கூடிப் பேசும் உணவகங்கள் மிகக் குறைந்துவிட்டன.
மக்களின் கற்பனைத் திறன் கவிதைகள், கதைகள் என்பதில் இல்லாமல் போனதால், முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த பாடல்களை, நீலா போன்றோர் தினமும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“ஆயிரம் மலர்களே மலருங்கள்” என்ற பாடல் நீலாவுக்கு மட்டும் உள்ளே ஒலித்துக்கொண்டிருந்தது.
மொழியின் கூறுகளை நினைவில் கொள்ள, இவ்வகைப் பாடல்கள் பேருதவி செய்தன. பேச்சு இல்லாத வாழ்க்கையில் மொழியை என்றாவது பயன்படுத்தினால் பழக்கத்தில் இருக்க வேண்டுமே என்பதற்காக இவை கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.
பாலாவை எழுப்புவது அவன் பெயரைக் கூப்பிட்டாலோ, தொட்டாலோ மட்டும் நடக்காது. அவனுக்குப் பிடித்தமானவற்றைக்கொண்டு தான் அவன் மூளையைத் தூண்ட வேண்டியிருக்கும். அவனுக்குப் பிடித்த மைசூரி என்ற இனிப்புப் பண்டத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து சூடு ஏற்றினாள் நீலா.
கடலை மாவில் சர்க்கரை சேர்த்து செய்யப்படும் பண்டம் அது.
“பாலா பாலா”
தலைமுடி கலைந்து நீர்த்தலையணையை அணைத்து வைத்திருப்பவனை அழைத்தாள்.
அந்தத் தலையணைக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன்கள் அசைந்துகொண்டிருந்தன. அவற்றின் நிறங்கள் மட்டுமல்ல, வடிவங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே தான் இருக்கும்.
பாலா அவதானக்குறை உள்ள பதினைந்து வயதினன்.
அவன் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவனுக்குப் பிடித்த செயல், ஒரு வட்டமான பாணியில், கால் வலிக்க ஓடிக்கொண்டே இருப்பதுதான்.
மைசூரி என்றபடி மெதுவாகக் கண்களைத் திறந்தான்.
இன்று மைசூரி, நாளை வேறு ஏதாவது என்று யோசிக்க வேண்டியிருக்கும். அவனுக்குத் தொடர்ந்து தூண்ட ஏதாவது இருந்தாக வேண்டும். அவனுக்கும் ஒவ்வொரு நாளுக்கான திட்டம் வேண்டும். ஆனால் அதே திட்டம் எல்லா நாளும் தொடர்ந்தால் சலிப்பாகி விடுவான்.
கதிரும், அவரின் மகனான பாலாவும் ஒருவருக்கொருவர் கண் பார்த்துப் பேசுபவர்கள் அல்ல.
இருவரும் பேச முடிந்தவர்கள். ஆனால் ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களின் மூளை இயங்குகிறது.
கதிருக்கு அவருக்குப் பிடித்த விஷயத்தை மட்டும் மிக ஆழமாகப் பேசப் பிடிக்கும். ஆனால், எதிரில் இருப்பவர் உள்வாங்குகிறாரா என்று யோசிக்கும் அமைப்பு இல்லை.
புற்றுநோய் இப்போது உலகத்தில் முற்றிலும் தீர்க்கப்பட்டு விட்டது.
இதுவரை அறிவியல் தீர்க்காத பெரும்புதிர் ஆட்டிசம்.
கதிரின் பேச்சு கருப்பு-வெள்ளை ரகம். அவருக்கு அன்றாடம் ஒரு செயல் திட்டம் இருக்க வேண்டும். சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அநியாயங்களில் ஏதேனும் ஒன்றை அவர் உணர நேர்ந்தால் எரிமலை வெடிக்கும்.
சரிசமம் என்றில்லாத ஒன்றைக் கண்டால் அவர் மனது, மற்றவர்களை விட அதிகத் துக்கம் கொள்ளும்.
எரிமலை என்பது பெரிய விஷயங்களில் மட்டுமல்ல, சிறியவற்றில் கூட வெடிக்கும்.
போன வாரத்தில் ஒரு நாள் திடீரென்று சில சென்டிமீட்டர் அளவே ஆன வெல் ஆன் கருவியில், இன்றைய அறுவை சிகிச்சை வேறொரு நாளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தகவல் வந்தது.
கதிர் வெளி உலகில் பெரும்பாலும் தன் முகப்போக்கை கட்டுப்படுத்தக் கவசம் போன்ற ஒன்றைப் பயன்படுத்துகிறார். ஆனால், அவரது உள்மனம் இவ்வகை மாற்றங்களின் போது பெரிய பேரலையைப் போல அடித்து ஓய்கிறது. பேரலைக்குப் பின்னால் அமைதி வர பல மணிநேரங்கள் ஆகும்.
முன்னெல்லாம் ஜப்பானிய குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க, எல்லா வீடுகளிலும் இரும்புக் கதவு மற்றும் அகலமான, அழுத்தமான சுவர்களோடு ஓர் அறை இருந்தது.
இப்போது அவருக்கென்று உள்ள அமைதித்தூளியில் ஏறி அமர்ந்துவிடுகிறார். அதில் அமர்ந்துகொண்டால் யார் கண்களுக்கும் தெரிய மாட்டார். யாராலும் அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியாது.
அந்தப் பெரிய வகைத் தூளி துணியால் செய்யப்பட்டது அல்ல. அது மனித உடலின் கருவறை போன்ற மேற்பரப்பு நயமும், வெளிச்சமும், சத்தமும், நீரோட்டமும் கொண்டது. அவர் உடலின் எடைக்கும், நீளத்திற்கும் ஏற்பத் தாமாகவே மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. தொட்டால் அவரை இளைப்பாறச் செய்யும் வல்லமை கொண்டது.
அதன் விலை உயர்வகை சிற்றுந்தை விட சற்றே அதிகம் என்றாலும், சிங்கப்பூர் அரசாங்கம் இவ்வகையினர் வாழும் வீடுகளில் இது போன்ற அமைப்புகளைக் கட்டாயம் ஆக்கி இருக்கிறது.
அந்தத் தூளியில் படுத்துக்கொண்டு முன்னும் பின்னும் போய் வரும்போது அந்தத் தாலாட்டில் அவர் மனம் அமைதி கொண்டுவிடும்.
ஆனால் பாலாவின் சவால்கள் வேறு வகை.
பாலாவின் மூளை இயங்கும் வேகத்தில் வார்த்தைகள் இயங்குவதில்லை.
பாலாவுக்கு நண்பர்கள் இல்லை. அவனைப் போல அவதானிப்பு குறைபாடுள்ளவர்கள்4 தத்தம் உலகில் இருப்பதையே விரும்புகின்றனர்.
எப்போதாவது கதிர் பேசும்போது, அவர் பேச்சின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத பாலா ஓரிரு வார்த்தைகள் நடுவில் பேசினால், அது இருவரையும் பத்தாம் உலகப்போர் அளவுக்குக் கொண்டு சேர்க்கிறது.
அடிப்படையான வேலைகளான பல் தேய்த்தல், குளித்தல், கழிவறை பயன்பாடு போன்றவற்றைக் கற்றுக்கொள்ள பாலாவுக்கு எட்டு வயதானது.
கழிவறையில், நீராவி குளியலுக்கான அறையும், குளிப்பதற்கான இடமும் தனியாக இருக்கின்றன. கழிவறை சூடாகவும், இல்லாமல், ஜில்லென்றும் இல்லாமல் அவனுக்கு வசதியான வெப்பநிலையைக் குளிர்நாளில் கூட தானாகவே சரிசெய்துகொள்ளும் அதிநவீனத்திறன் கொண்டிருக்கிறது.
மலம் வெளியான பின்பு, தானாகவே கண்ணுக்குத்தெரியாத நுரைத்திரையை ஏற்படுத்தி, அரை நொடிக்குள் நூறு சதவீதம் நுண்ணியிர்களைக் கொன்று சுத்தப்படுத்திவிடும் வசதியும் இருக்கிறது.
சிங்கப்பூர் அரசாங்கம் வீட்டுக்கு ஒரு பிள்ளையைச் செயற்கை முறையிலாவது, உருவாக்கித் தருகிறார்கள்.
வீட்டுக்கு ஒரு பிள்ளை என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிள்ளை எப்படி இருந்தாலும் வளர்ப்பது கட்டாயம்.
கதிருக்கு தன்னோடு ஒரு குழந்தை இருப்பது மனதுக்கு பிடித்த ஒன்றாக இருந்தது. அதிலும் பாலா யாரையும் தொந்தரவு செய்வது மிக அபூர்வம்.
அவதானத்தில் குறை இருப்பவர்கள் படிக்கக்கூடிய அளவில் அவனது பாடத்திட்டம் எளிமையாக்கப்பட்டிருந்தது.
கவின், தீரா, நீலா – எல்லாருக்குமான மின்கல அறை5 வீட்டின் முன்பக்கத்தில் இருக்கிறது. அதே அறையில்தான் இந்த வீட்டுக்கான மொத்த எரிவாயு, சூரியக்கதிர் மின்சாரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் விசைப்பலகைகள் இருக்கின்றன.
நீலா பாலாவை எழுப்பும் முன்னர் அவனுக்குப் பிடித்த உணவான இடியாப்பம் மற்றும் தக்காளி குருமாவை தயார் செய்திருந்தாள். எழும்போது நல்லபடியாக எழுந்தால் தானாக தயார் ஆகிவிடுவான்.
இன்று அப்படி நல்ல நாளாக அமைந்தது.
பாலா இடியாப்பத்தில் கை வைத்து, அதில் இருக்கும் நூல் இழைகளை கையால் வருடியபடி இருந்தான்.
அவன் பேச்சுக்கொடுத்தால் சாப்பிடமாட்டான். நீலா காத்திருந்தாள். நீலா பணியமர்த்தப்பட்டு பத்து மாதங்கள் ஆகின்றன.
முன்னெல்லாம் ஒவ்வொரு இயல் மனிதப் பணிப்பெண்ணும் பணிமாற்றம் ஆகும்போது, ஒரு வீட்டின் இயல்பு, மனிதர்களின் பண்புகள், வேலையில் உள்ள வித்தியாசங்கள் போன்றவற்றை, அந்தந்த வீட்டின் உரிமையாளர் சொல்லிக்கொடுக்க வேண்டியிருந்தது.
ஒன்றுக்கும் மேற்பட்ட இயல்மனிதர்களை பணியில் வைத்தால், அவர்கள் போட்டி, பொறாமையில் ஈடுபடுவதும் அங்கங்கே நடந்தது.
இவர்களில் மூவரில் நீலாவைத் தவிர மற்றவர்களால், வேறு வேலைகள் செய்யவும், அவற்றைப் பற்றி சிந்திக்கவும் முடியாது என்பதால், பெரும்பாலும் சிக்கல்கள் இல்லை.
இன்னமும் கைகள் இடியாப்பத்தில் தான் இருக்கின்றன. கைகளில் எடுத்து பிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அருகில் இல்லாமல் உள்ளே நகர்ந்தாள் நீலா.
அதீத கவனமும் பேச்சும் அவனுக்கு ஏற்புடையது அல்ல.
“டன் டன் டகுடன் டன் டன் டன் டன்”
வாசலில் இடிபோன்ற ஓசையோடு சிங்க நடனம் ஆரம்பித்திருந்தது.
காதுகளை மூடிக்கொண்டு தலைகவிழ்ந்து மிகுந்த அழுத்தத்தில் கண்ணீர் விட ஆரம்பித்தான் பாலா. அதிக சத்தத்தை அவன் மூளை ஏற்றுக்கொள்ள வில்லை.
பாலா மட்டுமல்ல, தீராவும், கவினும் அவர்களின் இயல்பை மீறி செயல்பட்டனர். தீராவின் கையிலிருந்த துணிகள் மொத்தமும் கிழிபட்டுக் கொண்டிருந்தன.
கவினின் கைவசம் இருந்த கண்ணாடி குடுவைகள் அனைத்தும் நொறுங்கி சிறுபொட்டலமாக ஆகியிருந்தன. அத்தனையும் சில நொடிகள் நடந்துக்கொண்டிருந்தன.
இந்த வீட்டில் உள்ள அனைத்து வேலைகளைப் பற்றி படித்திருந்தாலும், சீனப்புத்தாண்டைப் பற்றிய பகிர்வுகள் எப்படியோ விடுபட்டிருந்தன.
வெளியில் உள்ள தாளத்தின் ஓசை அதிகரித்துக்கொண்டே வந்தது. பாலாவின் நெற்றி நரம்புகள் புடைக்கலாயின. தீராவும், கவினும் செயல் இழந்தாற்போல, விரைத்திருந்தனர்.
தன் செயற்கை நுண்ணறிவு மூளையைப் பயன்படுத்தி வெற்றிடத்துக்கான விசையை செயல்படுத்தினாள் நீலா.
எல்லா கதவு சன்னல்கள் தாமாகவே அடைப்பட்டன. வீட்டைச் சுற்றி, பிராணவாயு திரைபோல எழுந்தது.
சத்தத்தால் வெற்றிடத்தைக் கடக்க முடியவில்லை.
அமைதி வீட்டை சூழ்ந்தது. பாலாவின் முகம் மீண்டும் நிமிர்ந்தது. சுவாசிக்க மறந்தவனைப்போல இருந்தவன் அமைதியானான்.
கணநேரத்தில் திசை தப்பியிருந்த பாலாவும், தீரா, கவின் போன்றோருக்கும் தான் அருந்துணையாய் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டாள் நீலா.
இந்த நிகழ்வை உடனடியாக அழியாத பக்கங்களில் பதிந்துக்கொண்டாள்.
அதைக்கொண்டு அவள் தனக்குத்தானே எழுதிக்கொண்ட விருதுக்கான விண்ணப்பத்தையும், அந்த வீட்டில் நடந்த நிகழ்வை தங்களின் மத்திய கண்காணிப்பு களஞ்சியத்தில் சரிபார்த்து சிங்கப்பூர் அரசாங்கம் அந்த ஆண்டிற்கான சிறந்த இல்லப் பணியாளருக்கான விருதை நீலாவுக்கு வழங்கி கௌரவித்தது.
**********************************************************************
பயன்படுத்தப்பட்ட சொற்களின் விளக்கம்:
1.உயிர்நெகிழி: Bioplastic
2. அஸ்பெர்ஜர்ஸ்:Asperges Syndrome
3. கார்டிசோல்: Cortisol hormone
4. அவதானிப்பு குறைபாடுள்ளவர்கள்: Attention Deficient
5. மின்கல அறை: Battery Room
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
