அதிபன்

நெஞ்சு படபடக்க, இமைக்க மறந்த இமைகளின் கீழ் கருவிழிகள் நிலைகொள்ளாமல் அலைபாய, உலர்ந்த உதடுகளும், வெளிறிய முகமுமாய், சொகுசான தனது சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்தார் ராஜகோபால். நடுக்குறச் செய்யும் குளிரூட்டியைத் தணிப்பதற்கும், சற்றுமுன் பதறியெழுந்தபோது தனது கைபட்டுக் கீழே விழுந்த காகிதக் கற்றையை பத்திரப்படுத்துவதற்கும், குவளையில் இருக்கும் தூயநீரின் பரப்பில் படியும் தூசிகளை மூடியைக்கொண்டு தடுப்பதற்கும் அவருக்கு மனம் வரவேயில்லை. அவரது கவனம் முழுவதுமாக தனது அறையின் நுழைவையொட்டிக் கிடந்த அந்தச் சிறிய கண்ணாடித் துண்டின் மீதே லயித்திருந்தது. அதன் கூர்நுனியில் படிந்திருக்கும் உதிரத்தை எண்ணும்போதெல்லாம் அகத்தினுள் சிறுவன் ஒருவனின் கோரமான ஓலம் கேட்டது.

எப்போதும் பிசிறின்றி சுத்தம் செய்யும் ஆனந்தி இன்று ஏன் தவறினாள்? இத்தனை பெரிய கண்ணாடித் துகள் எப்படி அவள் கண்ணில் சிக்காமல் போனது? வேண்டுமென்றே விட்டுச் சென்றாளோ?

எதிரே இருந்த கம்ப்யூட்டர் திரையில் சமமாய் பகுக்கப்பட்டிருந்த பன்னிரண்டு சட்டங்களிலும் ஓசையின்றி அசைந்துகொண்டிருந்த காட்சிகளை உற்று நோக்கினார். பள்ளிக்கூட வளாகம் நெடுக ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள் சீராய் இயங்கிக்கொண்டிருந்தன. லைப்ரரி வாசலில் நின்றுகொண்டிருந்த பி.டீ வாத்தியார் தர்மராஜை சுற்றி நான்கைந்து ஆசிரியர்கள் நின்றுகொண்டு கதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். இரண்டாம் வரிசையின் நான்காம் சட்டத்தில் இருந்த பத்தாம் வகுப்புக் காட்சியில், இரண்டு ஆசிரியைகளிடம் ஸ்வீப்பர் ஆனந்தி எதையோ மும்முரமாய் விளக்கிக்கொண்டிருந்தாள். வாலிபால் கோர்ட்டில் குழுமியிருந்த மாணவர் கூட்டம் ஒருவித பதற்ற நிலையில் எதையோ குசுகுசுத்துக்கொண்டிருந்தது.

ராஜகோபால் ஆழமாய் மூச்சிழுத்தபடி தனது அறையைச் சுற்றிப் பார்த்தார்.

வெற்றிக் கோப்பைகள், வெற்று நாற்காலிகள், சாதனைக் கதைகள் சொல்லும் வண்ணப்படங்கள், அதிகாரத்தை நிலைநிறுத்தும் தஸ்தாவேஜுகள், மேசைமேல் பரவிக்கிடந்த பேனாக்கள், மிட்டாய்கள், அவர் அவ்வப்போது சுழற்றி விளையாடும் உலக உருண்டை என அனைத்தும் தனக்கெதிராய் ஏதோ சதியில் ஈடுபடுவதைபோல் தோன்ற, உதிர்க்கப்பட்ட இறகென தவித்துப்போனார் அவர். இவ்விடம் என்று துல்லியமாய் சுட்டிக்காட்டிட முடியாத ஒரு வலி உடம்பின் பல பகுதிகளில் உதித்து மறைந்தவண்ணம் இருந்தது.

அறையின் கதவு தட்டப்படும் ஓசையும், அதன் பிறகு அது சடாரென திறந்துகொள்ளும் கீச்சொலியும் கேட்டது.

வெளிப்புறத்து வெளிச்சத்தினால் தரையில் கிடந்த அந்தக் கண்ணாடித் துண்டு ஒரே ஒரு கணம் மட்டும் வைரம்போல் மிளிர்ந்து மங்குவதைக் கண்ட ராஜகோபால் மெதுவாக நிமிர்ந்தார்.

கதவை வழக்கம்போல் மெதுவாக சாத்தாமல் தடாரென மோதவிட்டு அறையினுள் அகலக்கால் போட்டு நடந்துவந்த எல்.டி.சி குமரவேல் விபத்திற்குள்ளான சிறுவன் சற்றே கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரியை அடைவதற்கு முன்பே அவன் நினைவிழந்துவிட்டதாகவும், டாக்டர் சந்திரபோஸ் தனிப்பட்ட முறையில் அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதாகவும், சிறுவனின் பெற்றோர் எந்நேரமும் இங்கு வந்து சேரலாம் எனவும் தெரிவித்தார்.

ராஜகோபாலிற்கு குமரவேலின் கண்களை எதிர்கொள்ளத் தயக்கமாக இருந்தது. நிகழ்ந்ததை ஒரு விபத்தென்று ஏற்றுக்கொண்டபிறகும் தன்னுள் இருக்கும் ஒன்று மடிந்துச் சுருங்குவது ஏன் என்று அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“நான் வெளிய நிக்கறேன் சார்… பேரன்ட்ஸ் கொஞ்சம் எமோஷனலா வருவாங்க… என்ன இருந்தாலும் ஒத்த புள்ள… அவங்கள கண்ட்ரோல் பண்ண ஒருத்தர் இருக்கறது நல்லது” என்று சொல்லிவிட்டு விடைபெற எழுந்தார் குமரவேல்.

திடீரென ஒருவித வேதனையும் தனிமை உணர்வும் மேலோங்கிவிட, “ரூரல் ஏரியா… பெரிய பிராப்லம் ஆயிடுமோ குமரவேல்?” என்று நடுக்கத்துடன் கேட்டுவிட்டார் ராஜகோபால்.

நாற்காலியின் விளிம்பைப் பற்றிக்கொண்டு நின்ற குமரவேல் தனது முகத்தை சற்று தீவிரமாக்கிக்கொண்டு, “ஆகாது சார், பாப்போம்… இது ஆக்சிடன்ட்… நம்மள்ட்ட அதுக்கான எவிடென்ஸும் இருக்கு” என்று சொல்லி கம்ப்யூட்டர் திரையைச் சுட்டிக்காட்டினார்.

பிறகு, “பாத்துக்கிடலாம்… கவல படாதீங்க” என்று ஆறுதலாகச் சொன்னார்.

அவர் பார்வையெங்கிலும் படர்ந்திருந்த பரிதாபம் தேள் கொடுக்கென மாறி தன்னைத் துளைப்பதை உணர்ந்த ராஜகோபால் செய்வதறியாமல் தலையைக் கவிழ்த்திக்கொண்டார்.

வாசலை நோக்கி விடுவிடுவென நடந்த குமரவேல் அங்கே கதவின் அருகே கிடந்த கண்ணாடித் துண்டை தனது பாதத்தால் உதைத்துத் தள்ளி ஒரு ஓரமாக விழச்செய்தார். பிறகு கதவைத் திறந்துகொண்டு வெளியேறியவர் சட்டென திரும்பி, அறையினுள் ஒடுங்கி அமர்ந்திருந்த ராஜகோபாலை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மறைந்தார்.

தனது உடல் ஒருவிதமாய் நெளிந்து, குறுக விழைவதை உணர்ந்த ராஜகோபால் நன்கு சாய்ந்துகொண்டு அதைக் கட்டுப்படுத்த முனைந்தார். முழங்கை மயிர்கள் விறைத்து அதிர, அடிவயிற்றில் ஏதோ சுருள்வதைப்போல் இருந்தது.

காலையில், “அய்யயோ! சார்!” என்று கூச்சலிட்டபடி அறையினுள் ஓடி வந்த விமலாவைக் கண்டபோதும் இதுபோன்ற உணர்வே இருந்தது. அதீதமாய் பவுடரும், அடிக்க வரும் நிறத்தில் உதட்டுச் சாயமும், நெற்றிப்பொட்டில் லேசான குறுகுறுப்பைப் புகுத்தும் அத்தர் மணமுமாய் காட்சிதரும் விமலா, குழைந்து குழைந்து பேசி, அசடுவழியச் சிரித்து, புடவைத் தலைப்பு தோள்பட்டையில் படும் அளவு நெருக்கமாய் நின்று உரசும் விமலா, அப்போது முற்றிலும் உருகுலைந்தவளாக தோற்றமளித்தாள். விழியோரம் இரண்டிலும் கண்மைக் கசிந்து கருமை அப்பியிருக்க, தலைப்பின்னல் தளர்ந்து, கூந்தல் கற்றைகள் ஒழுங்கில்லாமல் பறந்துகொண்டிருந்தன.

அவளது கோலமே ராஜகோபாலை நிலைகுலையச் செய்திருந்தது.

கன்னத்தின் ஈரத்தை புறங்கையால் துடைத்தபடி விடுவிடுவென எதிரே வந்தவள் தனது கைகள் இரண்டையும் நீட்டி, ஈரைந்து விரல்களையும் விரித்தாள். வெள்ளைவெளீரென இருக்கும் அவளது உள்ளங்கையிரண்டிலும் குருதி படிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

“அய்யோ… விமலா… என்ன இது? என்ன? என்ன ஆச்சு?” ராஜகோபால் அதிர்ந்தார்.

அவள் வாய்திறப்பதற்கு முன்பே நான்கைந்து மாணவர்கள் சூழ அறையினுள் அச்சிறுவன் அழைத்துவரப்பட்டான். எப்போதும் நெற்றி நிரம்பிய திருநீறு பட்டையுடன் சிவப்பழமாய் வகுப்பிற்கு வரும் அக்குழந்தையை அவர் நன்றாக அறிவார். அவன் பெயர் மணிகண்டன். மெலிந்த உடலும், களையான முகமாய் இருப்பான். எப்போதும் ஒளிவீசும் அவனது கண்களின் கீழ் இமை ஒன்றில் சிறிய கண்ணாடித் துண்டுக் குத்தி நின்றது. கன்னப்பரப்பெங்கும் கண்ணாடித் துகள்கள் படிந்திருந்தன.

“அய்யயோ… மணிகண்டா!” என இவர் நெஞ்சில் கைவைத்தபடி எழுந்தபோது அவன் “ஓ!!” என வீறிட்டான். செய்வதறியாமல் செவிகள் இரண்டையும் பொத்திக்கொண்ட ராஜகோபால், ஒருசில நொடிகளுக்கு தன்னையும் மறந்து, “கடவுளே! கடவுளே! கடவுளே!” என முணுமுணுக்கத் துவங்கினார். பிறகு தன்னிலை மீண்டு கண்திறந்தபோது எதிரே நின்ற விமலா அவரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் விழிகளில் சற்றுமுன் இருந்த வேதனையும், பதற்றமும் முழுதாய் வடிந்து, அதன் இடத்தை ஒருவித பற்றின்மை பிடித்துவிட்டதைப்போல தோன்றியது. நெஞ்சில் தேங்கி நின்ற எதையோ வெளித்தள்ளுவதைப்போல வாய்வழியாக மூச்சை வெளியிட்டபோது அவளது மொத்த உடலும் நுணுக்கமான ஓர் விலகலை வெளிப்படுத்தியது.

முழங்கையில் புல்லரிப்புடன் துவங்கி, அடிவயிற்றில் அச்சமென நிலைபெறும் அவ்வுணர்வு அதன் உச்சத்தை எட்டியது அப்போதுதான்.

வறண்டிருந்த கீழுதட்டை நாக்கினால் நீவிக்கொண்டு சப்புக்கொட்டினார் ராஜகோபால். பிறகு வாயினுள் எச்சிலைக் கூட்டி அதை விழுங்க முற்பட்டார். தொண்டைக்குழி வலித்தது. கோர்த்திருந்த விரல்களைப் பிரித்தபோது உள்ளங்கை இரண்டும் வியர்த்துப் பிசுபிசுத்தது. அவற்றை தனது கால்சராயின் மிருதுவான பரப்பில் துடைத்துக்கொண்டு வலதுபக்கம் திரும்பினார்.

ஓரமாய் இருந்த மீன்தொட்டியின் செவ்வக சுவரில் முகத்தை ஒட்டி வைத்திருந்த மஞ்சள் மீனொன்று அவரையே நோக்குவதைபோல் இருந்தது.

ஏதோ நினைவு வந்ததைப்போல் சடாரென எழுந்துகொண்ட ராஜகோபால், தொட்டியின் அருகே விரைந்து சென்று மேலிருந்த பலகையில் இருந்த அதற்கான உணவை உள்ளங்கையில் அள்ளி, நீர்ப்பரப்பின் மீது சிரத்தையுடன் தூவினார்.

பசித்திருந்த மீன்கள் அந்த உணவை லபக் லபக்கென உண்டு மகிழ்ந்தன.

ராஜகோபால் ஒருமுறை விம்மினார். பிறகு மூக்கை உறிந்தபடி விலகி நடந்து, சற்றுமுன் மணிகண்டன் நின்ற இடத்தில் சென்று நின்றபோது அவர் விழியிலிருந்து ஒருதுளி நீர் உதிர்ந்து கன்னம் நனைத்தது.

***

“இளமையும், திராணியும் இருக்கப்ப ஈட்டி குவிச்ச மொத்தத்தயும், முதுமையில வட்டியும் முதலமா திருப்பி செலுத்தறதுதான் வாழ்க்கபோல… செல்வாக்கு, மானம், மரியாதை… ஒன்னும் எஞ்சாது”

தன்னை வளர்த்து ஆளாக்கிய சுந்தரம் மாமா, தனது அந்திமக் காலங்களில் பேசிய அந்த வார்த்தைகளை நெடுங்காலமாக மறந்தேயிருந்தார் ராஜகோபால்.

வெற்றுப் புலம்பலாகவும், சலித்த குரலில் சமயத்தில் மேற்கோளிடுவதற்கு உகந்த தத்துவமாகவும் மட்டுமே எஞ்சியிருந்த அச்சொற்கள், திடீரென அர்த்தமும் எடையும் பெற்று இடிபோல் அவர் தலைமேல் இறங்கியது, இரண்டு வருடங்களுக்கு முன்பு, இதே நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி வந்தபோதுதான். குடும்பத்தின் தயவைக் கோருபவராகவும், உற்றாரின் அச்சுறுத்தும் நலம் விசாரிப்புகளை ஏந்துபவராகவும், உடன் பணிபுரிபவர்களின் பரிதாபத்திற்கு உரியவராகவும் சில காலம் கழித்தபின்பு அச்சொற்கள் அசாத்திய விரிவுபெற்று அகத்தினுள் அவ்வப்போது ஒலிக்கும் அசரீரியென உருப்பெற்றிருந்தது.

அகவை அறுபதை நெருங்குகிறது என்று உடல் எலும்புகள் நினைவூட்டும்போதும், பணி ஓய்விற்குப் பிந்திய வாழ்க்கைத் திட்டங்களை சமவயதினர் விவாதிக்கும்போதும் தன்னைச் சூழ்ந்திருக்கும் காற்றில் முதுமையின் முடைநாற்றம் பெருகி வருவதை உணர ஆரம்பித்தார் அவர். ஏழ்மையிலிருந்து எம்பிக் குதித்து, அதிகார விருட்சத்தின் உச்சிக்கிளைப் பற்ற முனைபவன் சந்திக்கும் இடர்கள், துயரங்கள், தியாகங்கள், துரோகங்கள் என அனைத்தையும் திடமனதுடன் கடந்திருந்த அவரை ஒருவித அச்சமும் பதற்றமும் ஆட்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்திருந்தது. ஊழெனும் தண்டல்காரன் எக்கணமும் தனது வாசல் படியேறுவான் எனும் சஞ்சலம் அவரது இரவுநேரக் கனவுகளுக்கு அச்சுறுத்தும் வடிவங்களை வழங்கியது. அன்றைய தினத்தின் துவக்கத்தில் மணிகண்டனின் இடக்கண் உகுத்த உதிரத்துளிகளும், அவனது உச்சக்குரல் வீறிடலும், விமலாவின் விலகலும், கண்ணாடித் துண்டை எட்டி உதைத்த குமரவேலின் அலட்சியமும், அவரவர் பணியைச் செய்யாமல் சிறு சிறு குழுவாய் கூடிப் பேசுவதில் பணியாளர்கள் காட்டிய மீறலும் அவரது ஆழத்து அச்சத்தை நிரடி நரம்புகளை அதிரச் செய்திருந்தது.

எதேச்சையாக கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தபோது பள்ளிக்கூடத்தின் வாசலில் ஒரு ஆட்டோவில் மணிகண்டனின் பெற்றோர் வந்திறங்குவது தெரிந்தது.

எதிரே இருந்த பெரிய கடிகாரத்தில் தனது விழிகள் நிலைப்பதும், அதன் நொடிமுள் எழுப்பும் நுண்ணிய சத்தம் அத்தனை வீரியம் பெறுவதும் ஏன் என்று விளங்காமல் ஒருகணம் திண்டாடிப்போனார் ராஜகோபால்.

பளீரென பளபளக்கும் தனது அறையின் டைல்ஸ் தரை நெடுகப் பரவியிருந்த ரத்தக்கறைகளின் மேல் பினாயிலை ஊற்றித் துடைத்தபடியே, “விளங்காத ஊர் சார்… டீக்கடை உரண்டைக்கே காச்சுமூச்சுன்னு கத்தி, கலவரம் பண்ற ஆட்கள்… இத விபத்துன்னுச் சொன்னா ஏத்துக்கிடவானுங்களா? என்னன்னு சொல்லி சமாளிக்க போறோமோ!” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

அவளது கூற்றை உறுதிசெய்வதைப்போல மணிகண்டனின் பெற்றோர் வந்திறங்கிய ஆட்டோவிற்கு பின்னேயே நான்கைந்து பைக்குகளில் ஊரின் துடிப்பான இளசுகள் சிலர் வந்தடைந்து அவர்களுடன் இணைந்துகொள்வதைக் கண்டார்.

கைக்குட்டையால் முகத்தை ஒத்திக்கொண்டு மீண்டும் தனது கவனத்தைத் திரையில் குவித்தார் ராஜகோபால்.

மணிகண்டனின் அப்பாவின் தோளைத் தொட்டபடி குமரவேல் பேசுவதும், விஷயம் அறிந்து மணிகண்டனின் அம்மா வாயைப் பொத்திக்கொள்வதும் தெரிந்தது. பின்னிருந்த இளசுகளின் கூட்டத்தில் முதன்மையாய் நின்றவன் கைகளைக் குற்றம் சாட்டுவதைப்போல் வேகமாக அசைத்து எதையோ சொல்வதும், செக்யூரிட்டி கந்தசாமி அவர்களை ஆறுதல்படுத்தும் பாவனையில் அருகே செல்வதும் பின்னே நடந்தது.

ராஜகோபால் அந்தத் திரையைச் சுருக்கிவிட்டு, மற்றொரு திரையைத் திறந்து, அதில் அவர் சற்றுமுன் பதிவிறக்கம் செய்துவைத்திருந்த காணொளியை ஓடச்செய்து நோக்கினார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அரவிந்தன் மிக வேகமாய் சிலம்பம் பயிற்சி செய்வதும், திடீரென செவி அருகே வந்த பூச்சியைத் தவிர்க்கும் முயற்சியில் அவன் நிலையிழப்பதும், கையில் அசுரவேகத்தில் சுழன்றுகொண்டிருந்த கழி தறிகெட்டுத் தெறித்து, ஒரு ஓரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டனின் முகத்தைத் தாக்குவதும் அதில் தெளிவாக பதிவாகியிருந்தது. விழுந்த அடியில் மணிகண்டனின் மூக்குக்கண்ணாடி சுக்குநூறாய் சிதறி, அவனது இடதுகண் மற்றும் கன்னப்பகுதிகளை வசமாகச் சிதைத்திருந்தது.

ஆனால் சீற்றம் மிகுந்து காணப்படும் ஊர்க்காரர்கள் இதனைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் அளவிற்கு பொறுமையும் பக்குவமும் கொண்டிருப்பார்களா? அவர்களை ஆசுவாசப்படுத்தி, அமர்த்தி இதனைக் காண்பிப்பதற்குள் இங்கே ஏதேதோ சேதங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கும் என்று உறுதிபட தோன்றியது அவருக்கு.

மீண்டும் வாசல்பக்கத்து கேமரா காட்சியைத் திறந்தபோது அங்கே அந்த ஆட்டோவும் மணிகண்டனின் அம்மாவும் கிளம்பிவிட்டிருப்பது தெரிந்தது. அவர்கள் மணிகண்டன் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டார் ராஜகோபால். மணிகண்டனின் அப்பா அந்த இளசுகளிடம் ஏதோ அறிவுரை சொல்வதைப்போல இருந்தது. குமரவேல் மீண்டும் அவர் தோளைத் தொட்டதும், மெல்லத் திரும்பி, பள்ளிக்கூட வளாகத்தினுள் அடியெடுத்து வைத்தார் அவர். குமரவேல் அவரிடம் ஏதோ சொல்லிவிட்டு வேகமாக ஓடி உள்பக்கம் வந்தார்.

தன்னிடம் தகவல் சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்ட ராஜகோபால், பாதிக் கழன்ற நிலையில் இருந்த தனது ஷூக்களை அணிந்துகொண்டு, பெருமூச்செடுத்து, நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.

லஞ்ச் பிரேக்கிற்கான மணிச்சத்தம் ஒலித்து பள்ளிக்கூடத்தின் மங்கிய ஒளிகொண்ட இடைநாழிகள் முழுவதிலும் அதிர்வலைகளைக் கிளப்பியது. வழக்கமாய் பேரோசை எழுப்பியபடி எட்டுத்திக்கிலும் தெறித்தோடும் மாணவர்களின் உயிர்ப்பு அன்று சற்று மட்டுப்பட்டிருப்பதைப்போல் இருந்தது. நிலத்தில் விழுந்த மணிகண்டனின் உதிரமும் காற்றைக் கிழித்து ஊடுருவிய அவனது அலறலும் அவ்விடத்தை இறுகச்செய்திருந்தது.

ராஜகோபால் மீண்டும் கணினித்திரையை நோக்கினார்.

இம்முறை அவரது விழிகள் ஒவ்வொரு சட்டத்திற்குமாய் துடிப்புடன் தாவாமல், முதல் சட்டத்திலேயே நிலைகுத்தி நின்றுவிட்டது.

மிகவும் விஸ்தாரமான அவரது அறை அதில் மிகவும் சிறியதாக தோன்றியது. அதன் மையத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து கணினித் திரையை வெறித்துக் கொண்டிருந்தவன் ஒரு புழுவைப்போல் சிறியவனாக தோன்றினான்.

சடாரென அச்சட்டத்தினுள் தடல்புடலாய் புகுந்த மணிகண்டனின் அப்பா, சொகுசான சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்தப் புழுவின் சட்டையைப் பற்றி, தரதரவென இழுத்து கீழே தள்ளினார். மேசைமேல் இருந்த பேனாக்களும், பெயர் பலகையும், அழைப்புமணியும் அவரைப் பின்தொடர்ந்து விழுந்து சிதறியது. கைகளால் முகத்தைப் பாதுகாத்துக்கொண்டு சுருண்டுகிடந்த அப்புழுவை சரமாரியாக உதைத்தார் அந்த மனிதர். பைக்குகளில் வந்த இளசுகளும் எப்படியோ உள்ளே நுழைந்துவிட, அனைவரின் பாதங்களும் அவர் மேனியை பதம் பார்க்கத் துவங்கின. பன்னிரண்டு சட்டங்களிலும் வசித்த மனிதர்கள் ஒவ்வொருவராய் அந்த முதல் சட்டத்தினுள் புகுந்து, அன்றுவரை தனது நிகரற்ற அதிகாரத்தினால் தங்களை ஆட்டிப்படைத்த புழு மிதிபட்டு நசுங்குவதை வேடிக்கைப் பார்த்தனர்.

அடிப்பவர்கள் ஓய்ந்தபிறகு, வேடிக்கைப் பார்ப்பவர்கள் கலைந்துசென்ற பிறகு அந்தப் புழுவிடம் எஞ்சப்போவது எது?

அக்கேள்வியால் உலுக்கப்பட்டு அதிர்ந்து விழித்த ராஜகோபாலிற்கு அவசரமாய் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ளத் தோன்றியது. பரபரத்தலைந்த அவர் விழிகள் மேசை முழுவதையும் கணநேரத்தில் மேய்ந்தது. பச்சைமை பேனா, பேப்பர் வெய்ட், தனது கையெழுத்தை ஏந்திநின்ற எண்ணற்ற காகிதங்கள் என எவற்றையும் உரிமையுடன் தீண்ட அவருக்கு அப்போது தயக்கமாக இருந்தது.

சட்டென தனது அலைபேசியை எடுத்த ராஜகோபால் விதிர்விதிர்க்கும் தனது விரல்களைக்கொண்டு மனைவியின் எண்ணை ஒவ்வொன்றாக டைப் செய்ய ஆரம்பித்தார். புதுமொழி ஒன்றின் அட்சரங்களை எழுதுவதைப்போல் அச்செயல் அவருக்கு மிகுந்த ஒவ்வாமையை வழங்கியது.

ஒருபோதும் தானாக அழைத்துப் பேசியிராத கணவர் திடுமென அழைத்ததைக் கண்டு பதறப்போகும் அவளிடம் என்ன சொல்வது?

நெற்றியைச் சுருக்கி எண்ணியபோதும் சொற்கள் திரண்டுவர மறுத்தன. அடிநெஞ்சில் ஆழமானதோர் வலியும், தேகம் முழுக்க ஒருவித கூச்சமும் உண்டானது.

மணிகண்டனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது தனது அறையினுள் பிரவேசித்த பி.டீ மாஸ்டர் தர்மராஜ், தன்னைத் தேற்றும் முனைப்புடன் உச்சரித்த ஒரு சொல் அப்போது நினைவுக்கு வந்தது.

உள்ளூர்காரரான அவர் தைரியமூட்டும் வாக்கியங்கள் சிலவற்றை சொன்னபிறகு, மிகவும் சரளமாக, “எதுக்கும் மசியலன்னா, எதாச்சு செட்டில்மென்ட் கிட்டில்மெண்ட் பண்ணிக்கிடலாம், கவலைய விடுங்க” என்று சொல்லியிருந்தார்.

ராஜகோபாலிற்கு சுருக்கென்றிருந்தது அப்போது.

“என்ன தர்மராஜ்? பணத்த வீசிட்டா மட்டும் போதுமா? எல்லாம் சரி ஆயிடுமா?” என்று கேட்டுவிட தோன்றினாலும் குரல் எழுந்து வரவில்லை.

அதே வேளையில், வெளியூரில் குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் மனைவி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோதும், வலுவற்ற அந்த உடலுடன் குழந்தைகள் மற்றும் சொந்தவீட்டை பராமரிக்க முடியாமல் அவள் தடுமாறியபோதும், உற்றார் உறவினர் இல்லத்து நல்லது கேட்டது அனைத்திலும் அவர் சார்பாய் முன்னின்று மானம் காத்தபோதும், ஏழு வயது இருக்கும்போது மகள் தனது இடதுகையை முறித்துக்கொண்டபோதும், பள்ளிப்படிப்பை முடித்திருந்த மகன் தனது மேற்படிப்பிற்காக அலையோ அலை என அலைந்தபோதும், இடையில் மனச்சோர்வு தாளாமல் அவன் தற்கொலைக்கு முயன்றபோதும் ஒரு குடும்பத் தலைவனாய் தான் செய்தது என்ன என்கிற வினாவுக்கு, ‘செட்டில்மென்ட்’ எனும் சொல்லைத் தவிர்த்த ஓர் பதிலை தன்னால் அளித்துவிட இயலாது என்று தோன்றியது அப்போது.

எங்கே, எக்கணம் துவங்கியது இவ்விரிசல் என்று அவரால் அறுதியிட்டுச் சொல்ல முடிந்ததேயில்லை.  கடைநிலை ஆசிரியனாய் துவங்கி, பிரசித்திபெற்ற பள்ளி ஒன்றின் முதல்வனாய் நிறைவுற்ற அவரது வாழ்வின் ஓட்டத்தில், ‘குடும்பத்திற்காக உழைப்பவன்’ எனும் சாமானிய பிம்பத்தைக் களைந்து, ‘உழைப்பிற்காக குடும்பத்தையே துறந்தவன்’ எனும் பகட்டான பிம்பத்தை தனதுள்ளம் சூடிக்கொண்டது எப்போது என்று அவருக்கு புரிந்ததேயில்லை.

மறுபுறம் உதிக்கப்போகும் மனைவியின் குரலுக்காக காத்திருந்தார் ராஜகோபால்.

இங்கே நிகழ்ந்தவற்றைப் பற்றிய தகவல்களை, நிகழவிருப்பதைப் பற்றிய தனது அச்சங்களை பகிரப்போவதில்லை எனும் தீர்மானத்தை எட்டியிருந்தது மனம்.

சாதாரணமாக இரண்டொரு சொற்கள் பரிமாறிக்கொண்டாலே போதும், சற்று நிதானம் பெறுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது முன்பைப்போலவே சடாரென கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்த குமரவேல், “பையனோட அப்பா வந்துட்டு இருக்காரு” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

“ம்” என்று சொல்லி, தலையசைத்த ராஜகோபால் போனை ஓரமாக வைத்துவிட்டு, கழுத்தில் வாள் இறங்கப்போகும் குற்றவாளியின் இருளடர்ந்த முகபாவத்துடன் அமர்ந்துகொண்டார்.

“பட்! பட்!” என்று ரப்பர் செருப்பின் ஓசை இடைநாழிச் சுவர்களில் மோதி எதிரொலிப்பது மெல்லிதாக கேட்டது.

அறை வாசலில் போடப்பட்டிருந்த திரைச்சீலை காற்றில் அசைந்து கதவின் கண்ணாடிப் பரப்பின்மேல் பல நிழலசைவுகளைத் தோற்றுவித்தது. ஒரே ஒருநொடி அத்திரை முழுதாய் உயர்ந்தபோது வெளியே இரண்டு உருவங்கள் நிற்பது புலமானது. அணுகிவரும் எதையோ உணர்ந்துவிட்டதைப்போல் தொட்டி மீன்கள் ஒருவித பரபரப்புடன் அங்கும் இங்கும் நீந்தத் துவங்கின.

வாசலை எட்டியபிறகும் அவர்கள் உள்ளே நுழையாதது ஏன் என்று ராஜகோபாலிற்கு முதலில் விளங்கவேயில்லை. பின்னர் அவர்கள் தனது அனுமதிக்காகவே காத்திருக்கின்றனர் என்று புத்திக்கு உறைத்தபோது பெரும் அபத்த அலை ஒன்று அவரையும், அவரைச் சூழ்ந்திருந்த அனைத்தையும் அறைந்து அற்பமாக்கியது.

வெடுக்கென எழுந்துகொண்டு, “என்ன அபத்தம்! என்ன அபத்தம்!” என்று தனக்குள் முணுமுணுத்தவாறு வாசலை நோக்கி விரைந்தார். எதை இழந்தாலும் இனி கவலையில்லை என்றொரு திடம் புகுந்திருந்தது அவருக்குள்.

கதவைத் திறந்து, மணிகண்டனின் அப்பாவை நேருக்கு நேராகச் சந்தித்து, “அய்யா, வாங்க…” என்று அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

குமரவேல் வெளியேவே நின்றுகொண்டார்.

நாற்காலியில் அமர்ந்துகொண்ட மணிகண்டனின் அப்பா, “காலைலயே பிரச்சனை ஆயிட்டுன்னு கேள்வி பட்டேன்” என்றார்.

ராஜகோபால் எதிர்நோக்கியிருந்ததற்கு முரணாக அவரது குரல் பணிவுடனே ஒலித்தது. விரல்நுனிகளை மேசையின் மீது பலமாய் ஊன்றி, கைகளின் நடுக்கத்தைத் தணித்தபடி, “அய்யா, என்ன மன்னிக்கணும்…” என பேசத் துவங்கியவரை இடைமறித்தார் அந்தப் பெரியவர்.

“சார், இது விபத்து சார்… நீங்க என்ன செய்வீங்க? வீட்டம்மாவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டேன்… அவ பாத்துக்கிடுவா… நீங்க விடுங்க… பயலுக்கு ஒன்னும் ஆவாது…”

ராஜகோபால் அவர் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தார். சுவாசம் சீராவதைப்போல் தோன்றினாலும் மார்பின் இடையே வேறு விதமான எடை ஒன்று உருப்பெறத் துவங்கியிருந்தது. தொண்டையைச் செருமி குரலை ஒழுங்காக்கிக்கொண்டார்.

“அய்யா, இந்த வீடியோ இருக்கு பாருங்க… ஒம்பதாப்பு படிக்கற பையன் ஒருத்தன்… இன்னைக்கு சனிக்கிழமைல? அதனால சிலம்பம் கிளாஸ் இருந்துச்சு… அப்ப…”

“சார்… சார்… நீங்க இத விடுங்க… ஆதாரமெல்லாம் எதுக்கு… என்ன நடந்துச்சுன்னு குமரவேல் சொன்னாப்ல… விடுங்க…”

“அய்யா… என்ன இருந்தாலும்… என் பொறுப்புல இருக்கற… என்ன நம்பித்தான நீங்க…”

காய்த்துப்போயிருந்த தனது கையை உயர்த்திக் காட்டி ராஜகோபாலை அமைதிப்படுத்தினார் பெரியவர்.

ஒருகணம் அவர் முகத்தின் சுருக்கங்கள் அனைத்தும் அடர்த்திபெற்று கண்களில் ஒருவித தீவிரம் குடியேறியது.

சன்னமாய் ஒலித்த அடிக்குரலில், “சார்… இது என் விதி… அவ்வளவுதான்… விடுங்க… உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமும் இல்ல” என்று சொன்னார் அவர்.

ராஜகோபால் தனது கன்னத்தசை இரண்டும் அதிர்வதை உணர்ந்தார். புதுரத்தம் பாய்ந்ததைப்போல் முகமெங்கிலும் ஒருவித உஷ்ணம் பரவ, கைவிரல்கள் ஒருவித முறுக்குடன் மடங்கி விரிந்தன.

“கண்டமேனிக்கு கடந்த பள்ளிக்கூடம் நீங்க வந்த பிறவுதான் நிமுந்து நிக்கு… ஊர் பிள்ளேல் இப்பதான் விரும்பி பள்ளிக்கூடம் வருதுங்க… சாரு ரொம்ப பதறிபோயிட்டீங்கன்னு குமரவேல் சொல்லிட்டு கடந்தாப்புல… ஏற்கனவே ஒருக்க இங்கன இருக்கப்பத்தானே உடம்பு சுவமில்லாம போச்சு? நீங்க எதுக்கு இம்புட்டு…” என்று தனக்குத்தானே என பேசிக்கொண்டே சென்றார் பெரியவர்.

அவர் மௌனமானதும், “ஒரு நிமிஷம்…” என்றபடி மெல்ல எழுந்துகொண்டு தனது மேசையின் கீழ் விழுந்துகிடந்த காகிதக் கற்றைகளை அள்ளியெடுத்து அழகாக அடுக்கினார் ராஜகோபால். பிறகு குளிரூட்டியின் வேகத்தை சற்று தணித்துவிட்டு, அழைப்பு மணியை அழுத்தினார்.

அடுத்த ஐந்தாவது நொடியில் அறையினுள் இருந்தார் குமரவேல். 

“குமரவேல்… தண்ணிய மாத்துங்க… தூசி படிஞ்சு, குடிக்க முடியாத மாதிரி இருக்கு பாருங்க… அப்புறம் வண்டி அரேஞ் பண்ணுங்க… அய்யாவ நானே ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறேன்!” ராஜகோபாலின் குரலில் அதிகாரம் தளும்பியது.

குமரவேல் எந்தவித ஆச்சரியத்தையும் வெளிக்காட்டாமல் அவரிட்ட ஆணையை செயல்படுத்தச் சென்றார்.

கதவைப் பணிவுடன் சாத்திவிட்டு அவர் வெளியேறுவதை நோக்கிக்கொண்டிருந்த ராஜகோபால், தனது கைபேசியில் தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக ஒலித்துக்கொண்டிருந்த மனைவியின் அழைப்பை சற்றும் பொருட்படுத்தாமல், சொகுசான தனது சுழலும் நாற்காலியில் சாவகாசமாய் அமர்ந்துகொண்டார்.


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.