கூட்டு முயற்சியும் பொது நலமும்

This entry is part 19 of 10 in the series பொது நலம்

உலகளாவிய அளவில் சுகாதார ஏற்றத்தாழ்வுகள் (Health Disparities) இருப்பதை மறுக்க முடியாது. இவை பொருளாதார, கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் காணப்படும் நிலையற்றத் தன்மைகளில் இருந்து தோன்றுகின்றன. ஒரு மனிதனின் நலன், அவன் பிறந்த இடம், வாழும் சூழல், உயர் கல்விக்கான வாய்ப்பு, அதனால் செய்யக்கூடிய பணி என்பவற்றால் பெருமளவு தீர்மானிக்கப்படுகிறது. இதைச் சுகாதாரத்தின் சமூக நலத்தை தீர்மானிக்கும் காரணிகள் (Social Determinants of Health – SDOH) என்று அழைக்கிறோம்.

ஆனால் சுகாதாரம் என்பது உடல்நலம் சார்ந்தது மட்டுமல்ல என்று உலகச் சுகாதார மையம் வரையறுக்கிறது. மக்களின் நலன் என்பது அவர்கள் பிறக்கும் இடத்திலிருந்தே வடிவமைக்கப்படுகிறது. எனவே ஒரு சமதர்மச் சமூகம் (Equitable Society) உருவாக்க அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் சமுதாயம் என்ற மூன்று துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சமதர்மச் சமூகம் காண ஒவ்வொரு மனிதனும் நல்ல சுகாதாரம் அடைவது அவசியம். அதற்கான சமவாய்ப்பை வழங்க வேண்டியது அந்தச் சமூகத்தின் கடமை ஆகும். 

கோவிட் 19 தொற்றுநோய் நமக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுக்கொடுத்தது. எந்த ஒரு தனி அமைப்பும் சமுதாய நலனை முழுமையாகக் கவனிக்க முடியாது என்ற பாடம்தான் அது. சமுதாய நலனுக்கு அரசின் கொள்கை மட்டுமே போதாது, தனியாரின் நுட்பம் மட்டுமே தீர்வல்ல, சமுதாய வலிமை மட்டுமே ஆதரவல்ல. மூன்றும் இணைந்தால்தான் உண்மையான மாற்றம் நிகழும். இந்த கட்டுரையின் மூலம் அந்த மூன்றும் எவ்வாறு ஒன்றாக இயைந்து செயல்பட முடியும் என்று அறிந்து கொள்வோம்.  

எந்த வகையான பொதுவான காரணிகள்    சமூக நலனைக் கட்டமைக்கின்றன? சமூக நலத்தைத் தீர்மானம் செய்பவை எவை அல்லது பாதிக்கின்ற காரணிகள் எவை என்பதை அறிய வேண்டியது அவசியமாகும்

ஒரு மனிதனின் ஆரோக்கியம் மருத்துவச் சேவையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சிகள் சொல்வது என்னவெனில், ஒரு நபரின் உடல் நலனில் 80 சதவீதம் வரை மருத்துவமனை சார்பற்றக் காரணிகளால் — அதாவது சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகளால் — தீர்மானிக்கப்படுகின்றன.

அட்டவணை 1: சுகாதாரத்தின் சமூகநல வழிகாட்டிகள்  (SDOH Framework)

SDOH பிரிவுமுக்கிய காரணிகள்சமூக தாக்கம்தலையீட்டு வழி
பொருளாதார நிலைவருமானம், வேலைவாய்ப்புவாழ்க்கைத் தரம்திறன் மேம்பாடு
கல்வி வாய்ப்புபள்ளி தரம், அணுகல்எதிர்கால வாய்ப்புகள்இலவச கல்வி, உதவித்தொகை
சுகாதார சூழல்சுத்தமான நீர், காற்றுநோய் தடுப்புசுற்றுச்சூழல் கொள்கை
சமூக இணைப்புசமூக வலைப்பின்னல்மன நலன்குழு திரட்டல்
கட்டுமான சூழல்குடியிருப்பு, போக்குவரத்துநடைமுறை அணுகல்நகர திட்டமிடல்

உலகப் பொதுநல மையத்தின் வரையறையின்படி, இந்தச் சமூக நல வழிகாட்டிகளைச் சரிவர நிவர்த்தி செய்யாமல் சுகாதாரச் சமத்துவம் அடைவது சாத்தியமில்லை. எடுத்துக்காட்டாக, எல்லாருக்கும் சரியானக் கல்வி வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். நல்லக் கடினமான நுழைவுத் தேர்வுகள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதற்கு தயாராகும் வரையில் அடிப்படைக் கல்வி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்போதுதானே மாணவர்களால் ஒரே மாதிரியான திறன்களுடன் தயார் நிலை இருக்க முடியும்? மாணவர்கள் ஒரே மாதிரியான சமதளத்தில் விளையாடும் தளத்தில் விளையாடினால்தான் வெற்றித் தோல்வியை சரியாக நிர்ணயிக்க இயலும். பல மாணவர்களுக்கு கணிதம் அறிவியல் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல், கல்லூரியில் சேர்த்துக்கொள்ளத் தகுதியைக் குறைப்பதால் என்ன பலன்? கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவர்கள் சரிவர படிக்க முடியாமல் போகலாம். இது அவர்களைக் கல்லூரியில் தோல்வி அடையச் செய்யுமே தவிர அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காது. மாறாக நல்ல அடிப்படைக் கல்வியை கொடுப்பதுதான் நல்ல ஆரோக்கியமான போட்டிக்கும் நல்ல கல்வி வாய்ப்புகளுக்கும் அழகு. 

 பொதுநலக் கூட்டுறவுக்கானச் செயல்களை முடுக்கிவிடும் பணியை(Mobilization for action for public health partnership MAPP) அமெரிக்க நோய்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு (Center for disase control) ஆரம்பித்து ஒரு வழிகாட்டுதலை வரைந்து கொடுத்தது. அந்த முறைப்படி, இரண்டு வழிகளில், சமுதாய நலனை கணக்கிடு செய்ய முடியும்.

முதலாவது சமுதாயத்தின் நேரடியாக அளவிடக்கூடிய சொத்துக்கள் — சமுதாயத்தில் ஏற்கனவே உள்ள தலைமை, உடனடியாக அணுகக்கூடிய அமைப்புகள், நம்பிக்கை, திறன்கள், இடங்கள், நிறுவனங்கள் ஆகியன இதில் அடங்கும். இரண்டாவது, சவால்கள் மற்றும் இடைவெளிகள், தேவைகள், அணுகல் தடைகள், கட்டமைப்புப் பிரச்சினைகள். முதாலாவதை அதிகரித்து இரண்டாவதைக் குறைத்தால் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். இதுதான் இந்த யோசனையின் எண்ணம். இது அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்

அட்டவணை 2: MAPP 2.0 ஆறு கட்ட செயல்முறை

கட்டம் (Phase)நடவடிக்கைமுடிவு
1. ஒழுங்கமைப்புபங்காளர் கண்டறிதல், நம்பிக்கை வளர்ப்புகூட்டு குழு அமைப்பு
2. தொலைநோக்குப் பார்வைகனவு சமுதாயத்தை வரையறுத்தல்தொலைநோக்கு அறிக்கை
3. மதிப்பீடுகள்4 பரிமாண கணக்கெடுப்புதரவு அடிப்படை படம்
4. முன்னுரிமைதரவு அடிப்படை தேர்வுசெயல் முன்னுரிமை பட்டியல்
5. இலக்கு & உத்திSMART இலக்குகள் அமைத்தல்செயல் திட்டம்
6. செயல் சுழற்சிசெயல்படுத்தல் & மதிப்பீடுதொடர் முன்னேற்றம்

MAPP 2.0 இன் தனித்துவமான அம்சம் என்னவெனில் அது நான்கு வெவ்வேறு கோணங்களிலிருந்து சமுதாயத்தை ஆய்வு செய்கிறது. இது சமூக விழுமியங்கள், கட்டமைப்பு தடைகள், அதிகாரச் சமநிலையின்மை என்பவற்றையும் புரிந்துகொள்கிறது. எடுத்துக்காட்டாக, காப்பீடு இல்லாதவர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்காக மருத்துவமனைகள் இருந்தாலும், அங்கே உள்ள நீண்ட வரிசையும் சிகிச்சைக்கான கால தாமத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அதே போல ஏழ்மையான பகுதியில் வசிக்கும் தாய்மையுற்ற பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள், ஊட்ட சக்தி உணவு கிடைக்காததால் என்ன குறை ஏற்படுகிறது என்பதையும் குறித்துக்கொள்கிறது. 

வெற்றிக்காக ஒழுங்கமைத்தல் (Organize for Success) என்பது ஓர் அடித்தளம் போல.

ஒவ்வொரு சமூகமும் இரண்டு முக்கியமானக் குழுக்களை அமைக்கின்றன. முதலாவது வழிகாட்டுக் குழு அல்லது Steering Committee  இரண்டாவது அன்றாட நடைமுறை நிர்வாகம் பார்க்கும் குழு(Core Group). . யாரெல்லாம் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும்? சுகாதார துறை மட்டுமல்ல — மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள், வணிக சமூகம், மத அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரின் பட்டியலையும் எடுத்துக்கொண்டு யார் எந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும். 

MAPP 2.0 ல் இந்தக் கட்டத்தில் ஆரம்பகட்ட ஆராய்ச்சிப் பணி தொடங்குகிறது (Starting Point Assessment). இதுவரை கொண்ட அனுபவங்களில் இருந்து என்ன கற்றோம் என்று ஆரய்வதே தொடக்கப் புள்ளியாக ஒவ்வொரு சமூதாயத்திலும் இருக்க முடியும். சமுதாய ஈடுபாடு, பங்காளர்கள், தரவு, சுகாதார முன்னேற்ற திட்ட முன்னுரிமைகள், சமத்துவ தலைமை ஆதரவு, ஆதாரங்கள் & திறன்கள் என்றப் பரிமானங்களைக் கொண்டு இந்த அனுபவங்கள் அமையும்.

முந்தைய அனுபவங்களைக் கொண்டு வருங்காலத்துக்கான தொலைநோக்குப் பார்வையை வரையறுத்தல் அடுத்தக் கட்ட பணி. இந்தக் கட்டத்தில்,   ‘நம் சமுதாயம் 5 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும்?’ என்ற கேள்வி மையமாக இருக்கும். இந்த விவாதங்களின் மூலம் ஒரு பொது தொலைநோக்கு அறிக்கை (Shared Vision Statement) உருவாகும். உதாரணமாக  ‘ஒவ்வொரு குடிமகனும் உடல், மன, ஆன்மிக ரீதியில் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதே இலட்சியம்.’என்பது ஒரு பார்வை.

இது வெறும் வார்த்தையல்ல. இது முழு செயல்முறையையும் வழிகாட்டும் நடுவண் கலங்கரை விளக்காகும். ஒவ்வொரு முடிவும் இந்த இலக்கை  நோக்கி நகர்கிறதா என்ற கேள்வியுடன் மதிப்பிடப்படும்.

தொலைநோக்குப் பார்வையை வரையறுப்பது இலேசான காரியம் அல்ல. அது நான்கு மதிபீடுகளைக் (The Four Assessments) கொண்டு அமையும்.

வெவ்வேறு கோணங்களில் இருந்து இந்த மதிப்பீடுகளைச் செய்யவேண்டும். முதலாவதானது சமுதாய கருப்பொருள்கள் & சக்திகள் மதிப்பீடு.  இந்த மதிப்பீடு, மக்களுக்கு என்ன முக்கியம்? அவர்கள் என்ன வலிமையை கொண்டுள்ளனர் போன்ற விவரங்கள் யாவும் கருத்துக்கணிப்புகள், கவனக்குழுக்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. உணர்வு ரீதியான பயம், நம்பிக்கை, கோபம், கனவுகள் போன்றவற்றையும் இந்தக் கருத்துக்கணிப்புகள்  கணிக்கின்றன.

இரண்டாவதாக உள்ளூர்ச் சுகாதார அமைப்பு மதிப்பீடு. இது அத்தியாவசிய சுகாதார சேவைகளை எந்த அமைப்புகள் வழங்குகின்றன? என்ன என்ன  இடைவெளிகள் உள்ளன? தேசிய பொதுநல பராமரிக்கும் முறைக் கருவியை எந்த அமைப்புகள் பயன்படுத்துகின்றன போன்றவை (National Public Health Performance Standards Program (NPHPSP) அடங்கியது.

மூன்றாவதாக, சமுதாயச் சுகாதார நிலை மதிப்பீடு. இது நோய் விவரங்கள், மரண காரணங்கள், ஆயுட்காலம், ஆரோக்கிய நடத்தைகள், ஆபத்துக் காரணிகள்  ஆகியவை அனைத்தையும் தரவு அடிப்படையில் கணிக்க கருத்துக் கணிப்பு செய்து தகவல்களை சேகரிக்கிறது. பிறகு அவற்றை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியல் இடவும் பயன்படும்.

நான்காவதாக எதிர்காலத்தை மாற்றும் சக்திகளைக் கணிக்கும் முறைகள். அவை என்ன? தொழில்நுட்ப மாற்றங்கள், மக்கள்தொகை மாற்றங்கள், பொருளாதார போக்குகள், சட்ட மாற்றங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இவை குறித்த சிந்தனைகள் இதில் அடங்கும்

அடுத்தபடியாக மதியூகப் பிரச்சினைகள் கண்டறிதல் (Strategic Issues)

நான்கு மதிப்பீடுகளின் தரவுகளை ஒன்றிணைத்து மதியூகப் பிரச்சினைகளை கண்டறிவது இந்த கட்டத்தின் இலக்கு. ஒரு மதியூகப் பிரச்சினை என்பது வெறும் நோய் மட்டுமல்ல — அது ஒரு கட்டமைப்பு இடைவெளி. எடுத்துக்காட்டாக,: ‘நம் சமுதாயத்தில் குறைந்த வருமான குடும்பங்கள் தடுப்பூசி சேவைகளை அணுக இயலவில்லை’ என்பது ஒரு மதியூகப் பிரச்சினை.

மதியூகப் பிரச்சினைகளைக் கண்டறிந்த பின் அவற்றைத் தீர்க்க இலக்குகள், குறிக்கோள்கள் & உத்திகள்ஏற்படுத்துவது. 

பிரச்சினை கண்டறியப்பட்டதும் SMART இலக்குகள் (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound) அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு இலக்கிற்கும் யார் பொறுப்பு? கால வரையறை உண்டா? இவை யாவும் உள்ள சமூகப் பொதுநல முன்னேற்ற திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கடைசியாகச் செயல் சுழற்சி (Action Cycle)

இவை எல்லாம் சுழற்சியாக மீண்டும் செயல் படத் தொடங்கும்,இது முடிவு மட்டுமல்ல, அங்கே ஒரு புதிய தொடக்கம் ஆரம்பம் ஆகிறது. திட்டமிடல் → செயல்படுத்தல் → மதிப்பீடு → திட்டமிடல் என்ற தொடர்ச் சுழல் தொடர்கிறது. ஒவ்வொரு சுழலும் முந்தையதிலிருந்து கற்று மேம்படுகிறது

1. சமுதாய கருப்பொருள்கள் & சக்திகள்சமுதாயத்தின் அக்கறைகள், வாழ்க்கை தரம் மற்றும் கிடைக்கக்கூடிய சொத்துக்கள்2. உள்ளூர் சுகாதார அமைப்பு10 அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் உள்ளூர் கட்டமைப்பு திறன்
3. மாற்ற சக்திகள்தொழில்நுட்பம், பொருளாதாரம், சட்டம், சுற்றுச்சூழல் போன்ற புற காரணிகள்4. சமுதாய சுகாதார நிலைநோய் விவரங்கள், ஆயுட்காலம், ஆபத்து காரணிகள், சமூக சுகாதார ஏற்றத்தாழ்வுகள்

இவற்றை எல்லாம் குறித்துக்கொண்டால் போதுமா? இந்த இடைவெளியை எப்படிக் குறைப்பது? அதற்கான பங்குதாரர்களை எப்படிப் பெறுவது? ஒரு வெற்றிகரமான சமுதாயக் கூட்டுக்கு பலதுறை பங்காளர்கள் (Multisector Partners) தேவை. இந்த ஆய்வுகள் சமுதாய அங்கத்தினர்களால் அவர்களையும் கூட்டாகச் சேர்த்தே செய்யப்பட்டதால், அந்த சமூகத்தில் இருந்த நிறுவன அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்கள் பங்குதாரர்கள் ஆக முன்வந்தனர். பல்துறை முயற்சிகளில் 90 சதவீதம் நேரான சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அதைக் கீழே உள்ள அட்டவணை விளக்குகிறது.

பங்காளர் வகைகள் மற்றும் பங்கு விளக்கம்

பங்குதாரர் வகைபங்குஆதாரம்எடுத்துக்காட்டு
அரசு (Public)கொள்கை, நிதி, தரவுவரி வருவாய், ஆணைமாநில சுகாதார துறை
தனியார் (Private)நுட்பம், நிர்வாகம்லாபம், CSRமருத்துவமனைகள், NGO
சமுதாயம் (Community)அனுபவ அறிவு, நம்பகத்தன்மைஉள்ளூர் தெரிவுசுய உதவிக் குழுக்கள்
கல்வி (Academic)ஆராய்ச்சி, மதிப்பீடுமானியம், நிபுணத்துவம்பல்கலைக்கழகங்கள்

இந்த பங்காளர்களால் என்ன நன்மைகள் ஏற்படலாம்? அரசு தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்படத் தொடங்கும் என்ன நன்மைகள் ஏற்படலாம்? 

அரசின் கொள்கை ஆதரவும் தனியாரின் திறனும் இணையும்போது கட்டமைப்பு திட்டங்கள் (Infrastructure Projects) திறம்பட செயல்படுகின்றன. உதாரணமாக அமெரிக்காவில் மருத்துவமனைகள் மற்றும் உள்ளூர் சுகாதார துறைகள் இணைந்து FQHC (Federally Qualified Health Centers) திட்டங்களை நடத்துகின்றன. நியூஜெர்சியிலேயே 21 சமூக நல மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் 51 % சமூகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் நிர்வாக அமைப்பில் இருக்க வேண்டும் என்பது விதி. 

அரசுடன் சமுதாயம் நேரடியாக இணைவது மிக முக்கியம். இல்லாவிட்டால் திட்டங்கள் நிர்வாகப் பொறுப்பில் இருந்து அடிமட்ட உழைப்பாளர்கள் நோக்கி வரும். அவை— மக்களின் உண்மையான தேவைகளை பிரதிபலிக்காமல் போகக் கூடும்

அதுவே, அரசு இயந்திரம்,  தனியார் அமைப்புகள்,  சமுதாய அமைப்புகள் ஆகியவற்றுடன் இயைந்து ஒரு முக்கோண கட்டமைப்பில் இயங்கும்போது சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றுகின்றன.

MAPP 2.0 இன் ஆறு அடிப்படை கொள்கைகளில் ‘நம்பிக்கைகொண்ட உறவுகள்’ (Trusted Relationships) ஒன்று. இது வெறும் வார்த்தையல்ல — இது கூட்டின் அடித்தளம். வரலாற்று ரீதியான அநீதிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை எளிதில் நம்பாது. இந்த நம்பிக்கை இடைவெளியை மூட வேண்டும்.

படி 1வெளிப்படைத்தன்மை (Transparency): தகவல்களை மறைக்காமல் பகிர்தல், முடிவெடுக்கும் செயல்முறையை திறந்து வைத்தல்
படி 2பொறுப்பு (Accountability): செய்ததற்கும் செய்யாததற்கும் பொறுப்பேற்றல், சமுதாயத்திடம் வழக்கமான அறிக்கையிடல்
படி 3சமத்துவமான பங்கேற்பு (Equitable Participation): முடிவெடுக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை விட யார் இல்லை என்பதை உணர்ந்து அவர்களையும் அழைத்து வருதல். அனைத்து குரல்களும் கேட்கப்படுவதை உறுதி செய்தல்
படி 4கலாச்சார உணர்திறன் (Cultural Responsiveness): வெவ்வேறு சமுதாயங்களின் வரலாறு, மதிப்புகள், கலாச்சாரத்தை மதிப்பிட்டு செயல்படுதல்

இவை தவிர சமதர்ம சமூதாயம் அமைய மேலும் செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

கொள்கைMAPP 2.0 மதியூகம்எதிர்பார்க்கப்படும் முடிவு
சமூக அதிகாரமளித்தல்சமுதாய தலைமை கட்டமைப்புபங்கேற்பு மேம்பாடு
நம்பிக்கையான உறவுகள்வெளிப்படைத்தன்மை & பொறுப்புநீடித்த கூட்டு
தரவு அடிப்படை நடவடிக்கைகலப்பு முறை ஆராய்ச்சிசான்று அடிப்படை தலையீடு
காரணிகளை ஆராய்தல்அவற்றை ஒருங்கிணைத்தல் கட்டமைப்பு மாற்றம்
தொடர்ச்சியான கற்றல்சுழற்சி மதிப்பீடுதகவமைப்பு மேம்பாடு

ஆரேகான் என்ற மாநிலத்தில் உள்ள ஒரு சின்ன நகரம். அங்கே இருக்கிற ஒரு  சுகாதாரத் துறை MAPP கட்டமைப்பைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளி சமுதாயத்திற்கானச் சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்தியது, ஆரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், போர்ட்லேண்ட் மாநகரம், சமூக சுகாதார நிறுவனங்கள் என்று பன்முகப் பங்காளர்கள் இணைந்து ஒரு பொது தொலைநோக்கு அறிக்கையை உருவாக்கினர். இந்தக் கூட்டு நட்பு 115,000 மாற்றுத்திறனாளிக் குடிமக்களுக்குச் சுகாதார நிரல்களை வழங்கியது.

இன்னொரு நல்ல சான்று ஓஹையோ மாநிலத்தில் உள்ள ரிச்லேண்ட் கவுண்டி சுகாதார நலத் துறையைச் சார்ந்தது. இந்தத் துறை பல அமைப்புகளுடன் இணைந்து MAPP செயல்முறையைத் தொடங்கியது. பொது மருத்துவமனை, சமுதாயச் சுகாதார மையங்கள், அரசு நிறுவனங்கள், மத அமைப்புகள், வணிகச் சமூகம், கல்வி நிறுவனங்கள் என்று பரந்த வட்டம் அமைக்கப்பட்டது.

இந்தச் சமதர்மச் சமுதாயம் காணும் வழியில் உள்ள சவால்களையும் கணிக்க வேண்டும் என கூறியிருந்தோம். 

கூட்டு நிர்வாகம் (Partnership Governance): பலதுறைப் பங்காளர்களை ஒரே நோக்கோடு ஒரே வழியில் நடத்துவது சவாலானது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அமைப்பு நிதி நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளன

குறுகிய காலத்திற்கு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் நீண்டகாலத்திற்கு நிதி உறுதிப்படுத்துவது கஷ்டம். பல பொதுநல ஆராய்ச்சிக் குறிப்புகள் காட்டுவது என்னவெனில் SDOH திட்டங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதற்கு சமூக ஒப்பந்தம் (Social Compact) தேவை.

வெவ்வேறு நிறுவனங்கள் தரவைப் பகிர்வதில் தனியுரிமை மற்றும் போட்டி அச்சங்கள் உள்ளன.

வெவ்வேறு இனக்குழுக்களுடன் பணிபுரிய சரியான மொழி, அணுகுமுறை மற்றும் நம்பிக்கை தேவை.

இந்தச் சவால்களுக்கு ஏதேனும் தீர்வு காண வழி இருக்கிறதா எனப் பலரும் ஆரய்ந்ததில் சிலத் தெரிவுகள் புலப்பட்டன. 

ஒருங்கிணைந்த தரவு அமைப்புகள் செய்வது ஒருவழியாகப் புலப்பட்டது. பல நிறுவனங்களின் தரவை மேகக்கணினியில் ஒரே இடத்தில் சேகரிக்கும் மாதிரி நல்ல யோசனையாக முன்மொழியப் பட்டது.

சமுதாயமே நிதி ஒதுக்கீடு முடிவுகளில் நேரடியாகப் பங்கேற்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

மாநில நிதி, தொண்டு நிறுவன மானியங்களை ஒரு பாய்மரமாக இணைப்பது, அதன் மூலமாக மக்களும் அவற்றைச் செலவு செய்ய ஆலோசனைகளை வழங்க முடியும். மக்களே ஆலோசனைகளை முன்வைப்பதால், ஊதாரித்தனமாகச் செலவு செய்ய விரும்ப மாட்டார்கள். 

அமெரிக்கா போன்ற மேலைநாட்டுக்கு இந்தச் சமுதாயப் பங்களிப்பு சரியாக வரும். இந்தியா, தமிழ்நாட்டுச் சூழலுக்கு எப்படிச் சரியாக வரும் என்கிறீர்களா? பொதுநலச் சமூகக் கூட்டணிக் கொள்கை அமெரிக்காவில் உருவானதுதான் என்றாலும் அதன் அடிப்படைக் கொள்கைகள் உலகளாவிய தன்மை கொண்டவை. தமிழ்நாடுச் சூழலில் பார்க்கும்போது, பஞ்சாயத்துகள், இலாப நோக்கு இல்லா நிறுவனங்கள், மாநிலச் சுகாதாரத் திட்டங்கள், சுய உதவிக்குழுக்கள் (SHG), கல்லூரிகள் என்று ஏற்கனவே ஒரு பல்துறை கட்டமைப்பு உள்ளது. இதைத் தர்க்கரீதியில் ஒழுங்கமைத்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம். கிராமப் பஞ்சாயத்துக்குகள், கிராம சேவக் என்ற அமைப்புகள் இதை ஒட்டியே இருக்கின்றன.

அமெரிக்க MAPP 2.0 கட்டமைப்புதமிழ்நாடு அமைப்பு
மாநகர் பொதுநலத் துறைமாவட்ட சுகாதார அலுவலகம்
பொதுநலக் கருத்துக் கணிப்புகிராம சுகாதார கணக்கெடுப்பு (VHS)
சமூக நல கூட்டுறவுசுய உதவிக்குழு, ஊராட்சி
சமதர்ம உடல்நல திட்டம்NRHM / PM-JAY கட்டமைப்பு

சமதர்மச் சமூகம் என்பது ஒரு கனவு மட்டுமல்ல — அது ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்முறை. CDC-NACCHO இன் MAPP 2.0, அரசு-தனியார்-சமுதாய மூன்றிணைவு கூட்டுகள், சமூகத் தீர்மானிப்பிகளை கவனிக்கும் கொள்கைகள் மற்றும் நம்பிக்கையான உறவுகள் என்ற நான்கு தூண்களில் அந்தக் கட்டமைப்பு நிற்கிறது.

பல்வேறு பல்துறை சமுதாயக் கூட்டுகளின் ஆய்வு நமக்கு நம்பிக்கை தருகிறது. பெரும்பாலான  கூட்டு முயற்சிகள் சமுதாயத்தில் நேரான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. நடை பாதைகள் அமைக்கப்பட்டன, சமூகத் தோட்டங்கள் உருவாகின, புகைப்பிடைப்பதை தடைசெய்யப்பட்டப் பூங்காக்கள் மக்கள் வரவேற்பை பெற்றன.  இவை எல்லாமே மக்களாலேயே சாத்தியமாயிற்று

நாடு முழுவதற்குமான சமதர்ம சமூகத்தை  ஒரே இரவில் ஏற்படுத்த இயலாது. ஆனால் சரியான கட்டமைப்பு, நேர்மையான கூட்டு, நம்பிக்கையான உறவுகள் மற்றும் தரவு அடிப்படை முடிவுகளின் மூலம் — ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு சமூகத்தை மாற்றுவது மூலம் ஏற்படுத்தலாம். அந்தக் கனவு விரைவில் நனவாகும், 

குறிப்புகள் மற்றும் நூற்பட்டியல்

1. NACCHO & CDC (2023). MAPP 2.0 Handbook. National Association of County and City Health Officials.

2. CDC (2022). Social Determinants of Health. Centers for Disease Control and Prevention.

3. WHO (2022). Social Determinants of Health. World Health Organization.

4. Puckett, M. et al. (2022). Health Departments Role in Addressing SDOH. Public Health Management and Practice.

5. Taylor, L. & Nichols, L. (2018). Social Determinants as Public Goods. Health Affairs.

6. Praxis Project (2023). Social Determinants of Health Equity Framework.

7. National Academies Press (2017). Communities in Action: Pathways to Health Equity.

8. CTB (2023). MAPP: Mobilizing for Action through Planning and Partnerships. Community Tool Box, University of Kansas.

9. NCBI Bookshelf (2002). Models for Collaborative Planning in Communities. Future of Public Health in 21st Century.

10. Wiesner, P.J. & Corso, L.C. (2004). Mobilizing for Action through Planning and Partnerships. Encyclopedia of Public Health.

பொது நலம்

உடல்நலக் கல்வி உடல்நலம் — ஒரு உலகளாவிய கேள்வி

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.