கிரிக்கெட்டில் ஆர்வமிருப்பவர்களை கடந்த இரண்டு வாரங்களாகக் கட்டிப் போட்டு இருப்பது டி20 உலகக்கோப்பை போட்டிகள்தாம். உலகக் கோப்பை என்றாலே எனக்கெல்லாம் நினைவுக்கு வருவது 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் நாம் வென்ற ஒரு நாள் உலகக் கோப்பைதான். கிரிக்கெட் மேல் ஆர்வம் வந்ததற்கே கூட அந்த வெற்றிதான் காரணம். ஆனால் அன்று போலில்லாமல் இந்த வருடம் இந்திய அணிதான் வெற்றிக்கான அதிகச் சாத்தியக்கூறு கொண்ட அணியாகக் களம் இறங்கி இருக்கிறது.
இந்தப் பத்தியை எழுதும் பொழுது இப்போட்டியின் முதல் இரண்டு வாரங்கள் முடிவு பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு பெற்ற அணிகள் யாரென்பது தெரிந்த நிலை. பல எதிர்பார்த்த நிகழ்வுகள், சில எதிர்பாரா முடிவுகள் என்று கலகலப்பாகி இருக்கிறது இந்தப் போட்டி. ஆனால் தொடக்கத்திற்கு முன்னம் நடந்த நிகழ்வுகளால் இப்போட்டி எப்படி நடைபெறுமோ என்ற எண்ணம் மேலெழுந்தது. நல்ல வேளையாக முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழி பொய்க்கும் வண்ணம் இடைஞ்சல்கள் இல்லாமல் போட்டிகள் நடப்பது பெருமகிழ்ச்சி.
உலகக் கோப்பைக்குத் தேர்வான இருபது அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில் இரண்டு பிரிவுகள் இந்தியாவில் பெரும்பான்மையான ஆட்டங்களையும் மற்ற இரு பிரிவுகள் பெரும்பாலான ஆட்டங்களை இலங்கையிலும் விளையாடும்படி திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவில் விளையாடும் பிரிவில் இருந்த பங்களாதேஷ் அணி, தங்கள் அணிக்கு இந்தியாவில் போதிய பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை முன் வைத்து இலங்கையில் விளையாடும் பிரிவுக்கு தங்களை மாற்ற ஐசிசியை நிர்பந்தித்தது. அந்நாட்டில் இருந்து ஐபிஎல்லுக்குத் தேர்வான ஒரே ஒரு வீரர் முஸ்தாபிஸூர் ரஹ்மான். ஆனால் அந்த ஏலம் முடிந்த பின் பிசிசிஐ அறிவுரையின் படி அவரைத் தேர்வு செய்த கொல்கத்தா நைட்ரைடர் அணி, அவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. அவர்கள் இதற்காகத் தனிப்பட்ட காரணங்கள் ஏதும் சொல்லவில்லை.
முஸ்தாபிஸூருக்குப் பாதுகாப்பு தர முடியாது என்பதால் இந்த ஒப்பந்தம் ரத்தானதாகச் சொல்லி, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற வாதத்தை முன் வைத்தது. ஆனால் அதை ஐசிசி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் போட்டியில் இருந்து விலகுவதாக பங்களாதேஷ் அணி அறிவித்தது. அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி தேர்வானது.
முதலில் இந்த முடிவு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவாக அறிவிக்கப்பட்டாலும் பின்னர் இது அவ்வணியின் விளையாட்டு வீரர்கள் கேட்டுக் கொண்டதாக மாற்றிச் சொன்னார்கள். உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை வேண்டாமென விளையாட்டு வீரர்கள் சொல்வார்கள் என்பது நம்பக் கடினமாகத்தான் இருக்கிறது.
இவர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் பல நாட்கள் இழுத்தடிப்புக்குப் பின் தங்கள் முடிவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். பின்னணியில் இதனால் பங்களாதேஷுக்கோ பாகிஸ்தானுக்கோ ஏதேனும் ஆதாயம் கிடைத்ததா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பொதுவில் மூக்குடைபட்டுக் கொண்டது போலத்தான் தோன்றுகிறது. இத்தனை நடந்த பொழுதும் ஐசிசி தங்கள் முடிவில் தெளிவாக இருந்ததும் இந்தியா இது ஐசிசி எதிர்கொள்ள வேண்டிய விஷயம் என்று தலையிடாமல் இருந்ததும் நல்ல விஷயங்கள் என்பது என் எண்ணம்.
அதே போல இந்திய பாகிஸ்தானிய வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளாததும் தவறெனச் சொல்லப்படுகிறது. இந்திய அரசாங்கம் தன் அணியினருக்கு இப்படி ஓர் அறிவுரை தந்திருந்தால் அதை அணியினர் பொருட்படுத்தித்தான் ஆக வேண்டும். இப்படி நல்ல உறவு இல்லாத நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளாதது டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நடப்பதுதான். அதைப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நாடகங்கள் எல்லாம் போட்டிகள் தொடங்குவதற்கு முன்புதான். அதற்கு பின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் மூன்று நாட்களில் பல எதிர்பாரா முடிவுகள் வந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தன.

முதல் போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தானை கிட்டத்தட்ட தோற்கடித்துவிட்டனர். அதே போல அமெரிக்கா இந்தியாவையும், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தையும், நேபால் இங்கிலாந்தையும் திணறச் செய்தனர். பெரிய போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவம் இல்லாத காரணத்தினாலேயே கடைசிக் கணத்தில் அவர்கள் கோட்டை விட்டனர். அவர்கள் முக்கியமான சில கேட்சுகளைக் கோட்டை விட்டதும் கூட ஒரு காரணம். யாருக்கும் வெற்றி உறுதி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. முதல் கட்டப் போட்டியில் எளிதாக வெற்றிபெறுவார்கள் என்று எண்ணப்பட்ட அணியினருக்கு வெற்றி நினைத்த அளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்றானது போட்டியின் மீது சுவாரசியத்தைக் கூடச் செய்தது.
இதற்கு முக்கியக் காரணம் ஆடுகளங்களை ஐசிசி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுதான். அவர்கள் ஆடுகளங்களை மட்டையாளர்களுக்கு மட்டும் சாதகமாக இல்லாமல் பந்து வீசுபவர்களுக்கும் சாதகமாக அமைத்ததால் வேகப் பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், மட்டையாளர்கள் என எல்லாருமே தம் திறமையைக் காட்ட வழி செய்தது. அதே போல தம் நாட்டு அணியினர் ஆடாத ஆட்டங்களுக்குக் கூட ரசிகர்கள் அதிகம் பேர் வந்து ஆதரவளித்ததும் பார்க்க நிறைவாக இருந்தது.
முதல் பிரிவு:

எதிர்பார்த்த மாதிரியே இந்தப் பிரிவில் இருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டார்கள். ஆனால் எதிர்பாரா வண்ணம் அவர்கள் சிரமப்பட்டுத்தான் தகுதி பெற்றிருக்கிறார்கள். முன்பு சொன்னது போல, அமெரிக்காவும் நெதர்லாந்தும் கடுமையாகப் போராடித்தான் தோற்றுப் போனார்கள். இத்தொடர் ஆரம்பிக்கும் முன்னர் இந்தியா 300 ரன் அடிக்குமா என்பது போலெல்லாம் பேச்சு இருந்தது. ஆனால் அவர்கள் கள நிலவரத்தைக் கண்டுகொண்டு நிதானமாகவே ஆடினர். அவர்கள் அதிகபட்சமாக நமீபியாவுடன் 209 ரன்கள்தான் எடுத்தார்கள். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா தொடர்ந்து மூன்று முட்டைகள் எடுத்தது எல்லாருக்குமே ஆச்சரியத்தைத் தந்தது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் யாரேனும் ஒருவர் நன்றாக விளையாடிக் கைகொடுத்தது இந்திய அணிக்கு நல்ல சகுனம். பந்து வீச்சும் பெரும்பாலும் நன்றாகவே இருந்தது. குறையாகச் சொல்ல வேண்டுமானால் ரன் எடுக்காமல் விட்ட பந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததும், பல கேட்சுகளைக் கோட்டை விட்டதையும் சொல்லலாம். பேட்டிங்கை விட பந்துவீச்சின் மூலம்தான் இந்தியாவின் வெற்றிகள் உறுதியாயின என்பது ஆச்சரியமான விஷயம்.
பாகிஸ்தான் அணியினர் முதல் போட்டியில் நெதர்லாந்துடன் திணறினர். ஆனால் சென்ற முறை தோற்ற அமெரிக்காவுடனான போட்டியில் எளிதாகவே வென்றனர். அதற்குப் பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணியினருக்கிடையே ஆன போட்டி. இதில் இந்தியா பாகிஸ்தானுக்குக் கொஞ்சம் கூட இடமோ நம்பிக்கையோ தராத வண்ணம் ஆடினர். பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டப் போட்டி பிசுபிசுத்துப் போனது. கடைசிப் போட்டியில் பர்ஹான் 100 ரன்கள் எடுத்தது இத்தொடரின் முதல் செஞ்சுரியாக அமைந்தது.
நெதர்லாந்தும் அமெரிக்காவும் எதிர்பார்த்ததை விட நன்றாக விளையாடினர். இந்தத் தொடர் அவர்களுக்கு நல்ல அனுபவமாக அமைந்திருக்கும். பெரிய அணிகளோடு மோதி வெல்லலாம் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு விதைத்திருக்கும். அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் அந்நாட்டு வீரர்கள் மற்ற நாட்டு வீரர்களோடு சேர்ந்து விளையாடிய அனுபவம் நிச்சயமாக அவர்களுக்குக் கை கொடுத்தது. நமீபியா மட்டும்தான் இன்னமும் இந்த நிலைக்குத் தயாராகவில்லை.
இரண்டாம் பிரிவு:

அதிர்ச்சி தந்த பிரிவு என்றால் இந்தப் பிரிவைத்தான் சொல்ல வேண்டும். கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியா முதலில் ஜிம்பாப்வேயிடமும் பின்னர் இலங்கையிடமும் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ஜிம்பாப்வே பின்னர் இலங்கையையும் தோற்கடித்து இப்பிரிவின் முதலிடத்தைப் பெறும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இலங்கை, ஆஸ்திரேலியா போல இவர்கள் நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்கக் கண்டத்திற்கான தகுதிச் சுற்றுகளில் விளையாடித்தான் இவர்கள் தேர்வானார்கள். அதனால் இவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் அசாதாரணமாக விளையாடி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அயர்லாந்துடனான போட்டி மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இவர்கள் ஏழு புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.
இலங்கையுடனான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒன்பது ஓவர்களில் 104 ரன்கள் குவித்திருந்தாலும் இறுதியில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கையின் நிசான்கா பிரமாதமாக விளையாடிச் சதமடித்தார். இலங்கை எளிதாகவே ஆஸ்திரேலியாவை வென்றது.
முதல் பிரிவில் நமீபியாவைப் போல இந்தப் பிரிவில் இந்த நிலைக்குத் தயாராகாத அணி ஓமான். முதலில் இலங்கை இவர்களோடு எடுத்த 225 ஓட்டங்களும் பின் அயர்லாந்து எடுத்த 235 ஓட்டங்களும்தான் முதல் சுற்றின் அதிகமான ஓட்டங்கள். இலங்கை அணியின் தலைவர் ஷனகா 19 பந்துகளில் எடுத்த அரைச்சதம் குறிப்படத்தக்கது. இவற்றை எல்லாம் தாண்டி ஆஸ்திரேலிய அணியின் எதிர்காலம்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பேசுபொருள் ஆகி இருக்கிறது.
மூன்றாம் பிரிவு:

பங்களாதேஷ் இல்லாமல் போனதால் மேற்கிந்தியத் தீவுகளும் இங்கிலாந்தும் இப்பிரிவில் இருந்து தேர்வு பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். ஆனால் எல்லாப் போட்டிகளிலும் வென்று மேற்கிந்தியத் தீவுகள் முதலிடத்தைப் பெற்றது ஓர் இன்ப அதிர்ச்சி. என்றைக்கு நன்றாக விளையாடுவார்கள் என்றைக்குச் சொதப்புவார்கள் என்று நிச்சயமில்லாமல் ஆடக்கூடியவர்கள் தொடர்ந்து நன்றாக விளையாடியது எனக்குத் தனிப்பட்ட அளவில் மிக்க மகிழ்ச்சி. முதல் போட்டியில் ரொமாரியோ ஷெப்பேர்ட் ஹாட்ரிக் எடுத்தது குறிப்பிடத்தக்கச் சாதனை.
எளிதில் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து முதலில் நேபாளத்துடனும் பின்னர் இத்தாலியுடனும் திணறியது ஆச்சரியம் அளித்தது. பங்களாதேஷ் அணி இருந்திருந்தால் இவர்கள் தேர்வாயிருப்பார்களா என்று நினைக்கத் தோன்றிய அளவிற்கு மோசமாக விளையாடினார்கள். ஸ்காட்லாந்து இத்தாலியை வென்றதாலும் இத்தாலி நேபாளத்தை வென்றதன் மூலமும் நேபாளம் ஸ்காட்லாந்தை வென்றதாலும் இப்பிரிவில் சோப்ளாங்கி அணி என்று சொல்லும் விதத்தில் யாருமே இல்லாமல் போனது இணை நிலை நாடுகளின் தரம் மேலேறி வருவதற்கு அடையாளம்.
நான்காம் பிரிவு:

நான்கு பிரிவுகளின் கடினமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரிவு இந்தப் பிரிவுதான். அதற்கேற்ப இதுவரை நடந்தவற்றிலேயே பரபரப்பான ஆட்டம் தென்னாப்பிரிக்காவும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்தது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 187 ஆட்டங்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் இரண்டு பந்துகள் இருக்கும் பொழுது தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி 187 என்ற எண்ணிக்கையைச் சமன் செய்தது. அதற்குப் பின் நடந்த சூப்பர் ஓவரும் சமத்தில் முடிய, உலகக் கோப்பை வரலாற்றிலேயே இரண்டாவது சூப்பர் ஓவர் தேவைப்பட்ட ஆட்டம் என்றானது. அதில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் கடும் முயற்சி தோல்வியடைய தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் வென்றிருக்க வேண்டிய ஆட்டம் இது.
இதற்கு முன் அமீரக, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து விக்கெட்டு இழப்பின்றி 175 ஓட்டங்கள் எடுத்து வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே அமீரக அணி கனடாவை வீழ்த்தி தனது முதல் வெற்றியையும் பெற்றது. இப்பிரிவில் கனடா அணியினர் வெற்றியே பெறாமல் வெளியேறினர். ஆனால் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்நாட்டைச் சார்ந்த யுவராஜ் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். இவருக்கு 19 வயதுதான். உலகக் கோப்பைப் போட்டிகளில் சதமடித்தவர்களில் மிக இளையவர் என்ற சாதனையைப் படைத்தார் யுவராஜ். நியூசிலாந்தை எளிதாக வென்ற தென்னாப்பிரிக்கா இப்பிரிவின் முதலிடத்தைப் பெற்றனர்.
மொத்தத்தில் இந்த முதல் சுற்று எதிர்பாராத பல பரபரப்பான ஆட்டங்களை அளித்தது. இச்சுற்றின் கதாநாயகன் ஜிம்பாப்வேதான். போராடித் தோற்ற ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதல் பரிசு. ஆனால் வென்றிருக்க வேண்டிய ஆட்டங்களை அவர்கள் தங்கள் தவறுகளால்தான் தோற்றனர். அமெரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, நேபாளம் நன்றாகப் போராடினர். இணைநிலை நாடுகள் இத்தகையப் போட்டிகளில் பங்கு பெறுவது நல்ல அனுபவத்தைத் தரும், அவர்கள் முன்னேற ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது இவ்வணிகளைப் பொறுத்த வரை உண்மையானது.
குறிப்பாக முதல் சுற்றின் முடிவில் நான்கு போட்டிகளில் பதிமூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளைப் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த வான் ஷால்க்வைக். இந்தியாவுடன் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இவர் எடுத்திருந்தார். இரண்டாமிடத்தில் இருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. நான்கு போட்டிகளில் இவர் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஆனால் இவர் தனக்கான ஓவர்கள் அனைத்தையும் வீசும் வாய்ப்பைப் பெறவில்லை. அது கிட்டி இருந்தால் இன்னும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருப்பார் என்பது ரசிகர்கள் கருத்து. மட்டையாளர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பர்ஹான் 220 ரன்கள் எடுத்து முதலிடத்திலும் இலங்கையின் நிசான்கா, மெண்டிஸ் இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இரண்டாம் கட்டம்:
சூப்பர் 8 என்றழைக்கப்படும் இரண்டாம் கட்டப் போட்டிகளில் முதல் கட்டப் போட்டிகளில் தத்தம் பிரிவில் முதலிரண்டு இடத்தைப் பிடித்த அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மோதப் போகின்றன. இதில் எந்த அணி எந்தப் பிரிவில் இடம் பெறும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இருப்பது அவ்வளவு சரியில்லை என்பது என் எண்ணம். போட்டிகள் தொடங்கும் முன்னரே ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் முதல் பிரிவிலும் இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இரண்டாம் பிரிவிலும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஏதேனும் அணி இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்றால் அவர்கள் பிரிவில் இருந்து தேர்வான அணி அவர்கள் இடத்தை எடுத்துக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பொதுவாக முதல் கட்டப் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அணி இரண்டாமிருக்கும் அணி என்றுதான் இரண்டாம் கட்டத்திற்கான பிரிவுகள் முடிவு செய்யப்படும். அப்படிச் செய்யாமல் போனதினால், முதல் கட்டப் பிரிவிகளில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகளுமே ஒரே பிரிவில் இருக்கிறார்கள். இவர்களில் இரு அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது நியாயமில்லை என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம். அடுத்த முறை இதை ஐசிசி கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இனி இரண்டாம் சுற்று ஆட்டங்கள்!
● இதற்கு முன் ஜிம்பாப்வே அணியினர் ஆஸ்திரேலியாவை இரு முறை உலகக் கோப்பை போட்டிகளில் வென்றிருக்கின்றனர். முதல் வெற்றி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில் 1983ஆம் வருடம். இரண்டாவது முறை 2007 டி20 உலகக் கோப்பை தொடரில். இந்த இரண்டு போட்டிகளிலுமே கோப்பையை வென்றது இந்தியாதான். இது மூன்றாம் முறையும் நடக்குமா?
● சென்னையில் இந்தியா ஜிம்பாப்வே போட்டி நடை பெற இருக்கிறது. இதற்கு முன் இவ்விரு அணிகளும் இந்தியாவில் விளையாடியது 2001-02 வருடம்!
● இறுதியாக ஒரு கேள்வி – முதன்முதலாக எந்த வருடம் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன?
***
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
