முதல் மல்லிகைப்பூக்கள் (தாகூர் – பிறைநிலா)

வங்கமொழி & ஆங்கில மொழியாக்கம் : ரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

செடி நிறைய இலைகளே காணாமல் மல்லிகைப் பூக்கள். ஆகா! என்ன அருமையான காட்சி. 

தாத்தா வந்து விட்டு இன்றுகாலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். தாத்தா வந்தபோது அவரிடம் சித்தி (இன்னும் திருமணமாகவில்லை) ஆசை ஆசையாக எனக்காக, வண்ணவண்ண ரிப்பன்கள், குஜிலிப் பொட்டுகள் (பல நிறங்களில் பளபளக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள்), பலவிதமான மோஸ்தர்களில் வளையல்கள் எல்லாம் கொடுத்து அனுப்பியிருந்தாள். தாத்தா குடும்பத்தில் நான் முதல் பேரக்குழந்தை ஆனதால் என்னிடம் எல்லாருக்கும் கொள்ளைப் பிரியம்!

இப்போது சித்திக்கு நான் ஏதாவது கொடுத்தனுப்ப வேண்டும் என்று எனக்குள் 

ஒரு ஆசை. அப்போதுதான் வராண்டாவிலிருந்து தோட்டத்தில் செடி நிறைய மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூக்களைக் கண்டேன். அவை இரண்டடுக்கு மல்லிகை மலர்கள். இவற்றைப் பறித்து அனுப்பினால் என்ன எனும் சிந்தனை! ஆறு வயதுச் சிறுமிக்குத் தெரியுமா தாத்தா ஊர் சென்று சேரும்வரை அவை வாடாமல் இருப்பது கடினம் என்று! சித்திக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் எனும் ஆவல் மட்டுமே பெரிதாக வளர்ந்து நின்றது.

மழை வேறு பெரிய தூறலாகவே விழுந்து கொண்டிருந்தது. அம்மா கொடுத்த போர்ன்விட்டாவை லட்சியம் செய்யாமல், ஒரு பெரிய குடையை விரித்தபடி, பூக்கூடையையும் எடுத்துக்கொண்டு மல்லிகைப்பூ பறிக்கத் தோட்டத்திற்குச் சென்றுவிட்டேன். அத்தனை பூக்களையும் ஒன்றுவிடாமல் பறித்து என் பிரியமான சித்திக்குக் கொடுத்தனுப்பினேன். தாத்தா படியை விட்டிறங்கி விடைபெற்றுக் கொள்ளும்போது கண்களில் மழையாகக் கண்ணீர்; மல்லிகை வாசத்துடன் அவரையும் இறுக அணைத்துக் கொண்டேன்.

இந்த நினைவுகள் மல்லிகை வாசமாக என்னுள் அடிக்கடி கமழ்வதுண்டு. செடியில் மல்லிகைப் பூவைக் காணும் ஒவ்வொரு முறையும் எண்ணங்கள் என் சிறுமிப் பருவத்திற்குத் தாவி விரைந்தோடி விடுவதுமுண்டு. 

மல்லிகை, பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மலர். என்னை மிகவும் கவர்ந்த தாகூரின் சில கவிதைகளைத் திரும்பவும் படித்துக் கொண்டிருந்த ஒரு மழைநாளில், ‘பிறைநிலா’ (குழந்தைகளைப் பற்றியது) எனும் தொகுப்பில் மல்லிகை பற்றிய அற்புதமான கவிதையைப் படிக்க நேரிட்டது. இதோ நானே செய்த அதன் தமிழாக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்:

முதல் மல்லிகைகள் (The First Jasmines)

ஆ! மல்லிகை மலர்கள்! இந்த வெண்மையான மல்லிகை மலர்கள்!
எனது கைகளில் இந்த மல்லிகை மலர்களை நிறைத்துக்கொண்ட முதல்தினம் எனக்கு நினைவுக்கு வருகிறது, முதல் வெண்ணிற மல்லிகை மலர்கள்.

புன்னகைக் கொத்துக்களாய் மலர்ந்திருந்த மல்லிகை மலர்களைப் பறித்து நான் சித்திக்கு அனுப்பியது எனக்கு இன்னும் பசுமையாய் நினைவிலிருக்கிறது!

எனக்கு சூரிய வெளிச்சம், ஆகாயம், இந்தப் பச்சைநிற பூமி அத்தனையும் பிடிக்கும்.
நள்ளிரவின் இருளினூடே ஆற்றுநீரின் முணுமுணுப்பை நான் கேட்டிருக்கிறேன்

அம்மாவும் பாட்டியும் தாங்கள் இட்ட கருவடகம் வெயிலில் காயும்போது காக்கை, குருவிகளிடமிருந்து அவற்றைக் காக்கும் காவலுக்குச் சிறுவர்களான எங்களை அமர்த்துவார்கள். அப்போது கத்தரி வெயிலிலும் கடுமையிலும் திருட்டுத்தனமாக பாதிகாய்ந்த வடகங்களைத் துணியிலிருந்து பிய்த்துத் தின்னும் கலை, சுவை, அது தனிரகம்!! 

மேகங்கள் மிதந்து செல்லும் ஆகாயத்தில் அவற்றிற்கு வடிவங்கள் (யானை, சர்க்கஸ் கோமாளி, கரடி) அமைத்துக் கொடுத்து அவற்றைப் பெயர்சொல்லி ஊகிக்கக் கூறி விளையாடும் குழந்தைகள் விளையாட்டு! பிற்காலத்தில் திறந்தவெளிக் கச்சேரிகளில் ஆகாயத்தை நோக்கியவாறே கேட்ட ‘சௌந்தரராஜம் ஆச்ரயே’வில் பாடகர் ‘நந்த நந்தன ராஜம்’ எனப்பாடும்போது குட்டிக் கிருஷ்ணனின் லீலைகளை அந்த மேகங்களில் கண்டு களிக்கத் தோன்றியது.

இலையுதிர்கால சூரியாஸ்தமனங்கள் தனிமையின் விரயத்தில், புதுமணப்பெண் ஒருத்தி தனது முட்டாக்கை விலக்கிக் காதலனை அணுகுவதுபோல சாலையின் வளைவில் என்னிடம் வந்துள்ளன;
இருப்பினும் என் குழந்தைப்பருவத்தில் அந்த இனிய வெண்மைநிற மல்லிகை மலர்களைக் கையில் ஏந்தியதுதான் எனது நினைவில் இன்னும் இனிமையாக இருப்பது.

அவரவர்களுக்குத் தம் வாழ்க்கையின் சில அதிசய அபூர்வப் பொழுதுகளும் நினைவுகளும் மறக்க இயலாதது. நண்பர்களுடன் ரயிலில் கன்னியாகுமரிக்குப் பயணித்தபோது, அது பௌர்ணமி இரவு; நிலா வெள்ளிட்டுப் பளிச்சென்று சிரிக்கின்றது. என் தலையில் நான் சூடியிருந்த மல்லிகை மலர்களின் நறுமணமும்  எங்கிருந்தோ மிதந்து வந்த ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா’ என்ற பாரதி பாடலும் சொர்க்கலோகத்துக்கே அழைத்துச் சென்றன தெரியுமா?

எத்தனையோ மகிழ்ச்சியான நாட்கள் என் வாழ்க்கையில் வந்துள்ளன; திருவிழா தின இரவுகளில் நான் அதனைக் கொண்டாடுபவர்களுடன் சேர்ந்து சிரித்து மகிழ்ந்ததுண்டு.

நவராத்திரி மாலைப்பொழுதுகளில் மல்லிகை- கனகாம்பரம் வைத்துத் தைத்த சடைப்பின்னலுடன் பட்டுப்பாவாடையில் வீடுவீடாகச் சென்று புதிதாகக் கற்றுக்கொண்ட கிருதிகளைப்பாடி, சுண்டல் வாங்கிக்கொண்டு வருவதும், வீட்டில் அண்ணா, தம்பி, அப்பா, தாத்தா ஆகிய ஆண்கள் ஒவ்வொருவர் வீட்டுச் சுண்டலையும் ‘அனலைஸ்’ செய்து, உப்பு குறைச்சல், கடலை இன்னும் வேகவேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது சிறுவர்களாகிய நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதும் ஒரு கொண்டாட்டம்தானே!

மழைநாட்களின் மூட்டமான காலைப்பொழுதுகளில் இலக்கற்ற பாடல்களை நான் முனகியதுண்டு.

சில நாட்களில் உறக்கத்திலிருந்து விழிக்கும்போதே பாடல் ஒன்று சிந்தையில் உருவாகிவிடும். அது ‘பனைமரமே, பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே?’ எனும் குழந்தைப் பாடலாகவோ அல்லது ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ எனும் திரைப்பாடலாகவோ இருக்கும். பாட்டின் டியூனைப் பொறுத்தே அன்றைய மனோநிலையும் அமைந்துவிடும்!!

என் கழுத்தில் அன்புக்கரங்களால் பின்னப்பட்ட மாலைப்பொழுதின் மாலைகளான வகுள (மகிழ) மலர்மாலைகளை நான் அணிந்ததுண்டு.

ஆண்கள் மலர்மாலைகளைக் கழுத்தில் அணிவது தாகூர் காலத்திய வங்கத்து வழக்கம் என என் வங்க நண்பர் கூறினார். நான் பாட்டிவீட்டு மகிழமரத்திலிருந்து உதிர்ந்த மலர்களைப் பெரிய நீண்ட மாலைகளாகக் கட்டிப் படங்களுக்குச் சாற்றுவதுண்டு. எப்போதாவது தலையிலும் வைத்துக் கொள்வதுண்டு.

இருப்பினும் நான் குழந்தையாக இருந்தபோது, கைகளில் நிறைந்திருந்த முதல் புதிய மல்லிகை மலர்களின் நினைவு எனது இதயத்தில் நிரம்பியிருக்கிறது.

ஆனால் மல்லிகை மலர்கள் – அவை தனி ரகம். அவற்றிற்கு ஈடு அவை மட்டுமே! 

ஆக, தாகூரின் அழகான கவிதை, பல எண்ணங்களை எழுப்பிவிட்டுவிட்டது.

இந்தப் பாடலும் கடந்துவிட்ட குழந்தைப்பருவத்தை நினைவுபடுத்தி உள்ளத்தை வருடிச் சொல்கிறது. தோழிகளுடன் நட்பில் களித்த கன்னிப்பருவத்தைக் கண்முன் விரிக்கிறது. 

மதுரையில் மல்லிகை மலர்களை எண்ணிக்கையில் தான் வாங்க வேண்டும், நூறு, இருநூறு, ஆயிரம் என்று; முழம் போட்டல்ல!! நெருக்கமாகக் கட்டி குண்டுகுண்டாக இருக்கும். பார்ப்பதற்கே அவை தனி அழகு.

மல்லிகை மலருக்கு ஒரு தனிச் சிறப்பு. இதனைப் போற்றாத கவிஞருமில்லை; பாடாத பாடகருமில்லை! 


தியாகராஜ ஸ்வாமி ராமனைப் பூஜிக்க  ‘துளஸி தளமுலசே’ எனும் மாயாமாளவராகக் கிருதியில்: ‘கரவீர மல்லிகா சுகந்தராஜ சுமமு…‘ என்று பாடியுள்ளார். இறைவனைப் பூஜிக்கச் சிறந்த மலர்களுள் ஒன்று மல்லிகை. முத்துஸ்வாமி தீக்ஷிதரும் ‘வல்லபா நாயகஸ்ய’ எனும் பேகட ராகக் கிருதியில் ‘மல்லிகா ஜாதி சம்பக ஹாரஸ்ய, மணிமாலாஸ்ய,’ என்று பாடியுள்ளார். ‘வாசமிகு மல்லிகை, ஜாதி, சம்பகம் ஆகிய மலர்களால் ஆன ஹாரத்தை, மாலையை அணிந்தவர்’ எனக் கணபதியைப் போற்றுகிறார்.

பெரியாழ்வாரின் திருமொழியில் கிருஷ்ணனை அவனுடைய தாய் மலர்சூட அழைப்பதாகப் பாடல்கள் உண்டு. அதில் செண்பகம், மல்லிகை, பாதிரி, கருமுகை, செங்கழுநீர், இருவாட்சி, குருக்கத்தி, புன்னை, மருவு, தமனகம் என ஒவ்வொரு மலரையும் அதன் விசேஷத்தையும் உயர்வையும் கூறுவாள் தாய். மல்லிகையை மருவி மணம் கமழ்கின்ற மல்லிகை என்பாள். மல்லிகையின் வாசம் நம்மை வந்து தழுவிக் கொள்ளுவது! எத்தனை அழகான சொல்லாடல்!

திருவுடையாள் மணவாளா!
திருவரங்கத்தே கிடந்தாய்!
மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப் பூச்சூட்ட வாராய்!

(பெரியாழ்வாரின் திருமொழி)

என அழைப்பதாக அமைந்த பாடல்.

சங்கப்பாடல்கள் அழகான மல்லிகை மலர்களைப் போற்றி பல செய்திகளைக் கூறும். பரிபாடல் எனும் எட்டுத்தொகை நூலிலிருந்து பதினோராம் பாடலின் சில வரிகள்.

காளையரும் கன்னியரும் பொங்கிவரும் வைகை நீரில் களிப்போடு நீராடுகின்றனர். ஒரு பெண் தன் கைகளில் பவளவளைகளை அணிந்துள்ளாள். அதைப் பார்த்த இன்னொருத்தி, குவளைத்தண்டைப் பறித்து பச்சைநிற வளைபோலத் தன் கரத்தில் சுற்றிக்கொண்டு அழகு பார்த்தாள். கல்லகாரப்பூ என்னும் குளிரிப்பூவினால் ஒருத்தி மாலை தொடுத்தாள். “இப்படி மாலை தொடுத்தால் நன்றாக இல்லை,” என்று அவளைத் தடுத்து வேறொரு பெண் நெய்தல் மலர்களை மல்லிகை மலர்களிடையே இடை இடையே வைத்துத் தொடுத்தாள். இவ்வாறு பெண்கள் வைகையில் நீராடிக் களித்தனராம். கேட்கவே இன்பமாக இல்லை?

பவளவளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை
‘நில்லிகா’ என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலைவளாய்

(பரிபாடல்-11; நல்லந்துவனார்; நாகனார் இசையமைத்தது)

மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி எனும் பத்துப்பாட்டு நூல் மதுரையின் அழகினையும் சிறப்பினையும் வர்ணிப்பது. இதில் கடைசிப்பாடல் சொல்நயத்துடன் பொருள்நயமும் வாய்ந்தது:

மல்லிகையே சங்கத்தமிழ் என வரையறுக்கிறது இப்பாடல்! சொல் எனப்படும் அழகான மலர் தோன்றி, அதில் பொருள் எனும் வாசமிகு பூந்தாது நறுமணம் கமழ்கின்றது; ஆகவே குளிர்ச்சியான மலர்மாலைகளை அணிந்த பாண்டிய மன்னனின் தமிழ்மொழியானது நறுமணமிக்க மல்லிகைமலர்களால் ஆன மலர்மாலையேதான்.

சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால் – மல்லிகையின்
வண்தார் கமழ்தாமம் அன்றே மலையாத
தண்தாரான் கூடல் தமிழ்.

ஆகா! நமது இனிய தமிழை இப்படியும் போற்றக்கூடுமா என வியக்கத் தோன்றுகிறதல்லவா?

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் (பொது நூற்றாண்டு 1) மதுரையை அழகுற வர்ணிக்கின்றது. கோவலன் மதுரையை அடைந்து விட்டோமா எனப் பாணர்களைக் கேட்கும்போது அவர்கள், “மதுரையை அணுகும்போது அகில், சந்தனம், மல்லிகை, புனுகு ஆகியவற்றின் கலவையான மணம் கமழும் தென்றல் நம்மைத் தழுவிச் செல்லும்,” என்பர்.

காழ் அகில், சாந்தம்………..
………………………………….
தாதுசேர் கழுநீர், சண்பகக் கோதையோடு,
மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப்
போது …………………………………. (சிலப்பதிகாரம்)

இவ்வாறு பலப்பல பாடல்கள். 

தாகூரின் குழந்தைக்கான பாடல் ஒன்று இவ்வாறு எண்ணங்களை அலைகளாக வாரி வீசி முழுக்காட்டி விட்டது. இதுவும் சிலபொழுதுகளில் வேண்டியதுதான்! 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.