- தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை
- தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
- ‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)
- நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
- கே. சிவாரெட்டி
- கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
- பாபிநேனி சிவசங்கர்
- சையது சலீம்
- கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
தெலுங்கில்: டாக்டர். சி.எச். சுசீலா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
சையது சலீம் (1959, வயது 66)

பெண்களின் பிரச்சினை பற்றி பெண் எழுத்தாளர்கள் மட்டுமின்றி ஆண் எழுத்தாளர்களும் கவிதைகளும் சிறுகதைகளும் படைத்துத் தம் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள் என்பதைப் பார்த்து வருகிறோம். அடுத்து, பிரபல எழுத்தாளர் ‘சலீம்’ எழுதிய ‘வெண்டி மேகம்’ (வெள்ளி மேகம்) என்ற முக்கியமான நாவலைப் பற்றிப் பார்ப்போம்.
நாவலின் பெயரில் ‘வெண்டி’ (வெள்ளி) இருந்தாலும் நாவலின் உள்ளே சுத்தத் தங்கமே உள்ளது. கதாநாயகியின் பெயர் ‘அன்வர்’. அன்வர் என்றால் உருது மொழியில் ‘அழகு’ என்று பொருள். இந்த அன்வர் நற்குணமும் அடக்கமும் நிறைந்தவள். அதனால் அன்வர் என்ற பெயர் அவளுக்குப் பொருத்தமாக உள்ளது. ‘வெண்டி’ தூய்மைக்கு மறைமுகமான குறியீடு. மேகம் என்பது மயிலுக்கு நாட்டியம் செய்வதற்கான தூண்டுதல். வாசகர்களின் இதயம் என்ற மயிலுக்குப் புதிய அசைவுகளுக்கான அனுபவத்தைத் தருகிறது நாவல்.
ஏழை முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை விரிவாகச் சித்திரித்துத் தெலுங்கில் வெளிவந்த முதல் முஸ்லீம் பெண்ணிய நாவல் இது. சிறு வயதிலேயே பெரிய பிரச்சினைகளை தலை மேல் சுமந்து, கடினமான வேதனைகளை இதயத்தில் மறைத்துக் கொண்டு ஆதரிசத்தை உண்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு அன்வரிடம் காணப்படுகிறது. எந்தச் சமூகத்திலானாலும், எங்கிருந்தாலும் பெண்களுக்கு கட்டுப்பாடு என்பது கட்டாயம் விதிக்கப்படுகிறது. அதிலும் முஸ்லீம் பெண்களுக்கு இன்னுமொரு பங்கு அதிகம். ‘வெண்டி மேகம்’ ஒரு அசாதாரணமான பெண்ணின் கதை. முஸ்லீம் வாழ்க்கை விதானத்தில் பெண்களின் முக்கியத்துவத்தையும், பண்டிகைகள், விழாக்கள் ஆச்சார பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் விரிவாக நமக்குத் தெரிவிக்கும் முதல் தெலுங்கு முஸ்லீம் நாவல் இது. பெண்ணியத்தை ஒரு உரத்த விவாதமாக அன்றி, நுட்பமாக வெளிப்படுத்துவது இதன் சிறப்பு.
ஆண், பெண் இருவரின் திருமண பந்தத்தில் வயது வித்தியாசம் ஏற்படுத்தும் சிக்கல்களோடு, விவரம் புரியாத பதினோரு வயது அன்வருக்கும் முப்பத்தைந்து வயது பாஷாவுக்கும் திருமணம் நடந்தது என்ற அபத்தமான செய்தியோடும் கதை தொடங்குகிறது.
இதில் பேசப்பட்ட மற்றொரு பிரச்சினை ஏழ்மை. அன்வருக்குத் திருமணம் செய்வதென்பது போதும் போதாத வருமானத்தில் வருந்திய தந்தை ‘மீராசா’ வுக்கு சக்திக்கு மிஞ்சிய செயல் தான் என்றாலும் தந்தையாகத் தன்னுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி, மகனும் மருமகளும் அழுத்தம் கொடுத்ததால் 35 வயது பாஷாவோடு திருமணம் செய்விக்கிறான். அன்வரின் பக்கம் நின்ற மற்றொரு அண்ணன் ‘ரஹமதுல்லா’ ரோஷத்தோடு வீட்டை விட்டுச் சென்று விட்டான். அன்வரின் தாய் தொண்டை அடைக்க எச்சில் விழுங்கினாளே தவிர வாய் திறந்துப் பேச இயலாமல் போனாள். அவளுடைய அபிப்பிராயத்திற்கு வீட்டில் மதிப்பு இல்லை. கணவன் ‘மீராசா’ கூறியதைக் கேட்பதைத் தவிர அவள் என்றுமே மறு வார்த்தை பேசி அறியாள். ஆண்களின் முடிவுக்குத் தலை வணங்குவதைத் தவிர சொந்த கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவளுக்கு என்றுமே இல்லை. வருத்தம் ஏற்பட்டால் மெளனமாக சகித்துக் கொள்வாள். இது அநியாயம் என்றோ, இது நியாயம் என்றோ அவள் எப்போதும் வாயைத் திறந்து கூறியதில்லை.
பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அன்வரைத் தட்டி எழுப்பி, “பாஷா மியா சே நிக்கா கபுல் ஹை?” (பாஷாவை மணம் புரிய சம்மதமா?) என்று கேட்டபோது தூக்கக் கலக்கத்திலேயே சிறுமி, “கபுல் ஹை” என்றாள். அவ்வாறு அசைத்து அசைத்து எழுப்பி மூன்று முறை சொல்ல வைத்துத் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். கருப்பு மணி மாலையை அம்மா அன்வரின் கழுத்தில் அணிவித்தாள். அப்போது அவளுடைய கைகள் நடுங்கின. இதயம் கனத்தது. கண்கள் பனித்தன. “சீ, பாழாய்ப்போன பெண் பிறவி” என்று சலித்துக் கொண்டாள். உயிருள்ள மரக் கட்டைப் போல ஆனாள் அந்தத் தாய். அந்த திகிலோடு துடிதுடித்துப் போனாள். வாழ்க்கை முழுவதும் நசுங்கிப் போனாள்.
பெண்களுக்கு, அதிலும் முக்கியமாக முஸ்லிம் பெண்களுக்கிருக்கும் மற்றொரு பிரச்சினை கல்வியறிவு இன்மை. அது எத்தனை அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் வழி வகுக்கிறது என்பதைக் கூறி, முக்கியமாக அதன் மதிப்பை அறியாத முஸ்லிம் இளைய தலைமுறை ஏன் முன்னேறுவதில்லை என்பதையும் ‘சலீம்’ உதாரணங்களோடு விவரிக்கிறார். ஒரு பெண் கல்வியறிவு பெற்றால். அவள் மட்டுமே அல்ல அந்தக் குடும்பமும், அவளுடைய ஊரும் எத்தனனை பயன் பெறும் என்பதை ‘அன்வர்’ மூலம் நிரூபிக்கிறார் சலீம். அவளுடைய சிறு வயதில் படித்த அரபி, உருது மொழிகள் மதத்தின் மேல் கௌரவத்தை வளர்த்தன. ‘வேங்கடரத்னம் பந்துலு’வின் உதவியோடு மெட்ரிகுலேஷன் படித்த போது கல்வியின் மதிப்பை அறிந்து, தன்னைச் சுற்றி இருந்த முஸ்லிம் பெண்களுக்கு கல்வியின் மதிப்பை அன்வர் எவ்வாறு பகிர்ந்தாள், எவ்வாறு அவர்களை முன்னேற்றினாள் என்பதை சலீம் உயர்வாகக் கூறுகிறார்.
பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு, சுதந்திரம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தென்படாது. அன்வரின் மாமியார் ‘குல்சும்பி’, கணவன் இறந்து பின்னும், அத்தனை தைரியமாக இருந்தாள் என்றால் அதற்குக் காரணம் அவள் பெயரில் இருந்த ஐந்து ஏக்கர் மசூதி மானியம். அதுவே அவளுக்கு மலையளவு துணிவைத் தந்தது. அதனால்தான் மகன் பாஷா வீணாகத் திரிந்து, தீய பழக்கங்களில் சிக்கிப் பயனற்றுப் போனாலும் அவள் தைரியத்தை இழக்கவில்லை. பாஷா, அன்வருக்குச் செய்த அநியாயத்தைக் கண்டித்தாள் தாய் ‘குல்சும்பி’. அன்வரை மருமகளாகப் பார்க்காமல் மகளாகவே பார்த்து கண்களில் விளக்கேற்றிப் பாதுகாத்தாள். மாமியார் மருமகள் என்றால் ஒருவருக்கொருவர் ஆகாது என்ற கூற்றுக்கு மாறாக விளங்கினர் அவர்கள் இருவரும். அன்வர் கதாபாத்திரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு நடந்த ஆதரிசமான பாத்திரம் ‘குல்சும்பி’யுடையது.
சலீம் தேர்ந்தெடுத்த பாத்திரங்களின் பெயர்கள் கூட பொருளோடு கூடியவை. மக்காவிலிருந்து ஓடி வந்த ‘மஹம்மத் ப்ரவக்தா’வுக்கு ‘குபா’வில் வரவேற்று உணவளித்த பார்வையற்றவன், நல்ல குணவான், உயர்ந்த தைரியசாலி ‘குல்சும் இபின் ஹதம்’. அதுமட்டுமல்ல அன்வரின் சின்ன மகன் ‘ஜிலானி’ யின் மகள் பெயரும் ‘குல்சும்’. அன்வர் அறிந்த மாமியார் ‘குல்சும்’, மனத்தில் நிறைந்த மலர் என்றால் அன்வரின் பேத்தி ‘குல்சும்’, அவர்களுடைய விருப்பங்கள் என்னும் நறுமணத்தின் ஆரம்பம்.
அன்வரின் கணவன் பாஷா, ‘சைதாபி’ என்ற தாழ்ந்த குலப் பெண்ணோடு தகாத உறவு கொண்டிருந்தான். ஒரு முறை அன்வர் மேல் கொண்ட கோபத்தால் சைதாபியை ‘நிக்காநாமா’ (மணம்) செய்து கொண்டான். சைதாபியின் தம்பிதான் ‘ஆதம்’. அவன் அன்வரை சொந்த அக்காவைப் போல கௌரவித்து அவளிடம் மத தர்மங்களையும் மர்மங்களையும் கற்றுத் தன் குல மக்களின் வாழ்க்கையயை முன்னேற்றப் பாதையில் எப்படி நடத்த வேண்டும் என்று கற்றான். அவர்களை ஏன் ‘ஆதா முஸ்லீம்’ என்று தாழ்வாகப் பேசுகிறார்கள் என்பதை எழுத்தாளர் சலீம் விவரமாக விளக்கிக் கூறுகிறார்.
பாஷாவிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை ஒவ்வொரு முறையும் விபரீதமாக மாறி, அன்வருடைய சிறு வயதுத் தோழன் ‘நசீரின்’ முகச் சாயலைத் தன் மகன் ஜிலானியில் தேடுவதற்கு முயற்சித்ததான். எப்போதோ சிறு வயதில் பக்கீராக மாறி அண்ணனின் மகள் அன்வரைப் பார்க்க வந்தவரைத் தாங்க முடியாமல் அபாண்டமாகப் பழி கூறினான். துக்கத்தையும் அவமானத்தையும் தழுதழுக்கும் அழுகையையும் விழுங்கிப் பழகிய அன்வருடைய பொறுமை வேறு யாருக்கும் சாத்தியமில்லை. சந்தேகம் என்ற பூதம் பாஷாவின் மனத்தையும் சிந்தனையையும் விஷமாக்கியது. ‘ரஃபீ’ வுக்கு அன்வர் சிற்றன்னை என்று கோள் மூட்டி ஆரம்பம் முதல் அவர்களிருவரின் இடையில் சண்டை மூட்டினான் பாஷா. கணவனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மாமியாரை சம்மதிக்கச் செய்து மசூதி மானியத்தை ‘ரஃபீ’ பெயரில் எழுதச் செய்து, தான் பிச்சைக்காரியாக மாறிய அன்வரின் தியாகத்தைச் சொற்களால் அளக்க இயலாது.
சமுதாயத்தில் கௌரவமாக வாழ்வதற்கு யாரையும் அண்டியிருக்காமல் உடலை வருத்திப் பணி புரிவது என்ற மந்திரத்தை அன்வரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். ‘ஐ.எல்.டி.டி’யில் வேலை பார்த்தாலும் தன் வயலைத் தானே உழுதாலும், வியர்வை சிந்தினாலும் தன்மானத்தோடு பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தாள். அவளுடைய அழகை அனுபவிக்க நினைத்த சூப்பர்வைசரிடமிருந்து ‘ஆதம்மா’வின் உதவியோடு தப்பித்து, இறுதியில் அவளே சூப்பர்வைசராவது எதேச்சையாக நடந்ததல்ல. அவளுடைய உழைப்புக்குக் கிடைத்த பலன். ஒரு பெண் பொருளாதாரத்தில் பலமாக இருந்தால் அவள் யாரையும் சார்ந்திருக்காமல் வாழலாம். அத்தகையவள், பெண் சுதந்திரத்திற்கும், பெண் ஆளுமைக்கும் ஒரு சின்னமாக விளங்குவாள் என்று ‘வெண்டி மேகம்’ நாவல் குறிப்பால் உணர்த்துகிறது. அதற்கு ‘குல்சும்பி’ நல்ல உதாரணம்.
நசீரோடு பேசிக் கொண்டிருந்த அன்வர், 18 வயதிலேயே வேதாந்தி போல பேசியதைப் பார்த்து, “உனக்குப் படிப்பறிவு இல்லை. ஆனாலும்” என்று கேட்டபோது, “படிக்காவிட்டால் என்ன? வாழ்க்கையை விடப் பெரிய புத்தகம் என்ன இருக்கு?” என்ற கூறிய பதில் மிகவும் ஆழமானது.
எந்தவித படிப்பும் இல்லாத முஸ்லீம் பெண், ‘தலாக்’ கொடுத்த பின் எவ்வாறு வாழ்வாள்? குல்சும்பி, அன்வரிடம் கூறிய சொற்கள் உண்மையான முஸ்லீம் பெண்ணியத்திற்கு உதாரணம். “முஸ்லீம் பெண்ணுக்கு படிப்பு இல்லாமல் போவது, பொருளாதார சுயபலம் இல்லாமல் போவது ஆகியவற்றால் ஆணின் கொடுமைக்கு அடங்கிப் போகவேண்டி வருகிறது. இந்த வீடும், நிலமும் என் பெயரில் இருப்பதால் ஒரு வேளை சாப்பிட்டாலும் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்கிறேன். இல்லாவிட்டால் அவன் ‘சீ’ என்றாலும் ‘தூ’ என்றாலும், காலால் உதைத்தாலும், மூஞ்சி மீது துப்பினாலும் ஒரு வாய் சோற்றுக்காக அவனுடைய காலின் கீழ் கிடக்க வேண்டிய நிலை உருவாகும். இதோ பார், அன்வர், இப்போதோ செல்கிறேன், கேள். உனக்குப் பெண் குழந்தை பிறந்தால் அவளை நன்றாகப் படிக்க வைத்து வேலை பார்க்கச் சொல். நம் முஸ்லீம் பேட்டையில் ‘ரஃபி’ பள்ளிக்கூடம் சென்ற முதல் சிறுவன். அது போல என் பேத்தி முதன் முதலில் வேலை பார்க்கும் முஸ்லீம் இளம்பெண்ணாக வேண்டும். நான் உயிரோடு இல்லாவிட்டலும் என் பேச்சை மட்டும் மறக்காதே” என்றாள். அவளுடைய சொற்களில் பெண்களை செருப்புக் காலின் கீழே நசுக்கும் எறும்பைப் போல நடத்தும் ஆணினத்தின் மேல் கோபம் நிரம்பி உள்ளதைப் பார்க்க முடிகிறது. பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசி, நடுநடுவில் முஸ்லீம் பெண்களின் சுதந்திரத்தை அன்வரின் பேத்தி குல்சுமைக் கொண்டு சொல்ல வைப்பதில் சலீமின் உள்ளம் வெளிப்படுகிறது.
“நல்ல வழக்கறிஞராக நம் முஸ்லீம் பெண்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பது என் விருப்பம்” என்கிறாள். “முஸ்லீம்களின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டிய தேவை உள்ளது தாதிமா (பாட்டி). உதாரணத்திற்கு ‘பர்தா’ சிஸ்டம் உள்ளது அல்லவா? அதனைக் கட்டாயமாக முஸ்லீம் பெண்களின் மீது திணிக்க நினைப்பது தவறு. அண்மையில் சில தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் பர்தா அணியாத இளம் பெண்களின் முகத்தில ஆசிட் தெளிப்போம் என்று அச்சுறுத்துகின்றன. அடிப்படையான மத சூத்திரங்களைக் கடைப்பிடிப்பது வரை சரிதான். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களில் நம் பெண்களுக்கு சுதந்திரம் தேவை” என்று தன் சுதந்திரமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறாள் சின்ன ‘குல்சும்’.
“அத்தனை ஏன் தாதிமா, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் டிவியையும் சங்கீதத்தையும் சினிமாவையும் ஓவியம் வரைவதையும் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதையும், பிரகாசமான் வண்ண வண்ண உடைகளை அணிவதையும் தடை செய்துள்ளார்களாம். நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக் ஆகியவற்றோடு கூட செஸ் விளையாட்டு, பில்லியர்ஸ் போன்றவற்றையும் தடை செய்துவிட்டார்களாம். இது கொடுமை இல்லையா? ஒரு பெண் தன் விரல் நகத்திற்கு அழகு செய்து கொண்டாள் என்று அவளுடைய விரல் நுனியை வெட்டி விட்டார்களாம். நாம் இருபதாம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா அல்லது இன்னும் காட்டுவாசி யுகத்தில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது, தாதிமா. என் உத்தேசத்தில் எந்த மதத்திலும் ஹிம்சைக்கும் அநியாயத்திற்கும் கொடுமைக்கும் பலி ஆவது பெண்களே. அதிலும் நம் முஸ்லீம் பெண்களுக்கு மேலும் கீழான நிலைமை” என்கிறாள்.
பொதுவாக நாடகங்களில் முடிவுரையை கதாநாயகனைக் கொண்டு பேச வைப்பது வழக்கம். ஆனால் இந்த நாவலில் கதாநாயகி இறுதியுரை கூறுகிறாள். அன்வரின் சொற்களோடு நாவல் முடிகிறது. “உன்னைப் போன்ற படித்த முற்போக்குச் சிந்தனையுள்ள முஸ்லீம் பெண்களால் தான் பெண் சுதந்திரம் சாத்தியமாகும். உன் போன்ற இளைய தலைமுறைப் பெண்கள் கட்டாயம் சாதிப்பார்கள்”.
‘அன்வர்’ என்ற கிராமத்துப் பெண் ஆதரிசமான பெண்ணாக, தைரியமாக, முன்னேறி, வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக, பண்பாடுள்ளவளாக வாழ்ந்தாள் என்பதை இயல்பான அழகோடு சலீமின் எழுத்துக்கள் ‘வெண்டி மேகம்’ நாவலின் மூலம் நமக்கு விளக்குகின்றன. அவர் இன்னும் இது போன்ற மக்களுக்கு உதவும் பெண்ணிய இலக்கியங்களை அளிக்க வேண்டும்.
அடுத்த பகுதியில் மேலும் சில ஆண் எழுத்தாளர்களின் பெண்ணிய படைப்புகளைக் காண்போம்.
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
