- தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை
- தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
- ‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)
- நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1
- கே. சிவாரெட்டி
- கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர்
- பாபிநேனி சிவசங்கர்
- சையது சலீம்
- கொடுத்துப் பெறுவதல்ல பெண்ணியம்
“நூறேள்ள பண்ட்ட” (ஆயிரங்காலத்துப் பயிர்) என்பது நூறு தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பில் சேர்க்கப்பட்டவர்கள் அனைவரும் பெண் எழுத்தாளர்கள். தொகுத்தவரும் சிறந்த பெண் எழுத்தாளர். இந்தத் தொகுப்பு 2000 ல் வெளியானது.
இவ்விதம் பெண் எழுத்தாளர்களைப் பெண் எழுத்தாளர்களே பாராட்டிப் போற்றும் விதம் போற்றத் தக்கது. சிறந்த பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் ஒரே தொகுப்பில் படிக்க கிடைத்ததை எண்ணி, ‘ஆகா, விருந்துதான்’ என்று மனம் மகிழ்கிறது. அறுநூறு பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்பில் எழுத்துக்கள் சிறியதாக எறும்பு போல் உள்ளன.

இந்தத் தொகுப்பை உருவாக்கிய டாக்டர். பார்கவி ராவ் பற்றி முதலில் அறிந்து கொள்வோம். இவருடைய தாய் மொழி கன்னடம். இவர் 1944 ல் பெல்லாரியில் பிறந்தார். அப்போதைய மதராஸ் மாநிலத்தில் படித்தபோது, தெலுங்கு, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் கற்றார். உஸ்மானியா பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்தார். ஆய்வுக் கட்டுரைகளும், கவிதைகள், சிறுகதைகள், ரேடியோ நாடகங்களும் எழுதியுள்ளார். நோபல் விருது பெற்ற முதல் நீக்ரோ இன இலக்கியவாதி ‘வோல் சோயிங்கா’ படைப்புகள் மீது ஆய்வு செய்து பி.ஹெச்.டி. பட்டம் பெற்றார். அப்போது ஏற்பட்ட நாடகத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ஞானபீட விருது பெற்ற ‘கிரீஷ் கர்னாட்’ எழுதிய நாடகங்களான யயாதி, ஹயவதனா, நாக மண்டலா, தலேதண்டா, துக்ளக், அக்னி வர்ஷம் போன்றவற்றை கன்னடத்திலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்தார். 1995 ல் சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பு விருது பெற்றார். ‘குண்டலோ தடி’ (இதயத்தில் ஈரம்), ‘சுக்க நவ்விந்தி’ (நட்சத்திரம் சிரித்தது), ‘நாபேரு’ (என் பெயர்). என்ற சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் பிரசுரமாகின. பார்கவி ராவ் 2008ல் காலமானார்.
டாக்டர். பார்கவி ராவ் ‘நூறேள்ள பண்ட்ட’ தொகுப்பு குறித்து என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போம். “ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்” என்று ஆரம்பிக்கும் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். அதன் பிறகு ரேடியோவில் எப்போதாவது ஒரு திரைப்படத்தைக் கேட்டு ரசித்திருக்கிறோம். டிவியும் கம்ப்யூடரும், மொபைலும் நம் வாழ்வில் ஒரு பகுதியாகாத அந்த நாட்களில் மாலை தீபம் ஏற்றும் முன்பே விளையாட்டும் வீட்டுப்பாடமும் முடித்துக் கொண்டு, இரவு உணவை விரைவாக முடித்துவிட்டு, வாசல் ஆளோடியில் அமர்ந்து பாட்டி கதை சொன்னால் தென்னை இலைகளின் இடுக்கிலிருந்து வெண்ணிலவு கூட ஆர்வத்தோடு கதை கேட்பதற்குக் காத்திருக்கும் அழகு, இதெல்லாம் இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்குப் புரியாத விஷயங்கள் லீவு நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கும், விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கற்பதற்கும் உலக அறிவு பெறுவதற்கும் எல்லாவற்றுக்கும் கதைகளே. குளிர்காலத்தில் சொக்கப்பானை கொளுத்தி அதைச் சுற்றிலும் அமர்ந்து அந்தத் தீயின் சாட்சியாக அன்றைய சமுதாயம் சிறந்த கதைகளைப் பகிர்ந்து கொண்டது. சமத்காரமும், சமயோசிதமும் நிறைந்த ‘காசீ மஜிலி கதைகள்’ (காசி பயணக் கதைகள்), ‘பொம்மைகள் சொன்ன கதைகள்’, கிளி சொன்ன கதைகள், வேதாளம் கூறிய கதைகள், ராஜகுமாரியைத் தூக்கிச் சென்ற ராட்சசனின் கதைகள், ராட்சசன் மறைத்து வைத்த ராஜகுமாரியை இளவரசன் காப்பாற்றிய கதைகள் இதையெல்லாம் தெரியாத, கேட்டிராத இந்தத் தலைமுறைக் குழந்தைகள் எத்தனை இழந்தார்களோ கூறுவது கடினம். கதை சொல்லவேண்டும் என்ற ஆர்வம், கதை கேட்கவேண்டும் என்ற உற்சாகம் இரண்டும் மானுட இனத்திடம் மறைந்துள்ளது.
கதைகள் பிறந்து நூறாண்டுகள் ஆனதாக நாம் கூறிவரும் செய்தி, எழுத்துக்களைக் கற்று, காகிதத்தில் அச்சிட்டு நாம் படிக்கும் கதைகளைப் பற்றி. ஆனால் கணக்கற்ற காலம் முதலே வாய்வழி இலக்கியம், பேச்சோடு பேச்சாக நாம் கூறிக் கொண்ட கதைகளின் வயது, மனித இனத்திற்கு எத்தனை வயதோ அத்தனை. கதை சொல்வதில் பெண்களுக்கே முதலிடம். எத்தனை உயர்ந்த ஆணாக இருந்தாலும் அவன் கேட்ட முதல் கதையை அவனுடைய அம்மாதான் அவனுக்குச் சொல்லியிருப்பாள். கதை சொல்வது பெண்களின் பிறப்புரிமை. அது எங்களுக்கு பாலாடையோடு சேர்ந்து ஊட்டிய கலை. அனுபவங்களையும் உணர்வுகளையும் அழகாக உணர்ச்சிப் பெருக்கோடு எங்களால் கூறமுடிகிறது என்றால் அதில் ஆச்சர்யப்பட என்ன உள்ளது? அதனை நிரூபிப்பதற்கு சென்ற நூற்றாண்டு கதையாசிரியைகள் எழுதிய ஒரு நூறு கதைகளை தேர்ந்தெடுத்து இந்தத் தொகுப்பில் சேர்த்து உங்களுக்கு அளிக்கிறோம். இலக்கியத் துறையில் பெண்களான நாங்கள் சாதித்த முன்னேற்றத்தைப் பெருமையோடு எடுத்துக் காட்டும் சாகசமே இந்த முயற்சி.
சாகசம் என்று ஏன் கூறுகிறேன் என்றால், ஆணாதிக்க சமுதாய அமைப்பில் பெண்களின் வளர்ச்சிக்கும் சாதித்த முன்னேற்றத்திற்கும் அங்கீகாரம் குறைவு என்றே கூற வேண்டும். சென்ற நூற்றாண்டில் வந்த சிறுகதைத் தொகுப்புகள், சாஹித்திய அகாடமி, தெலுகு பல்கலைக் கழகம், கதா சாகர், நல்ல கதைகள், சிறுகதைச் சிலம்புகள் (மஞ்ஜீரம்), போன்ற தொகுப்புகளில் பத்து சதவிகிதம் கூட பெண் எழுத்தாளர்களின் கதைகள் இல்லை தொண்ணூறு சதவிதம் கதைகள் நாம் மீண்டும் மீண்டும் படித்த ஆண் எழுத்தாளர்களுடையதே. ‘தித்துபாட்டு’ (திருத்தம்), காலிவான (புயல்), யக்ஞம், போன்ற பல கதைகளின் ஆசிரியர்கள் எல்லாம் சந்தேகமற சிறந்த எழுத்தாளர்களே. அவர்களின் கதைகளும் நல்ல கதைகளே ஆனால் அவற்றோடு கூட பெண் எழுத்தாளர்களின் கதைகளையும் சேர்த்தால் அவர்களுக்கு என்ன குறைந்து போகும்? அதனால் ஆண் எழுத்தாளர்களுக்கு ரிசர்வேஷன் தராமல் முழுமையாக எல்லாம் எங்களுடைய கதைகளையே ஒரு தொகுப்பாக எடுத்து வந்து புதிய சகாப்தத்திற்கு அடிகோல வேண்டும் என்ற உற்சாகத்தால் விளைந்த பயிர் இது.
பல நூற்றாண்டுகளாக இலக்கிய சமுத்திரத்தைக் கடைந்ததன் பயனாக, காவியம், நாடகம், செய்யுள் போன்ற பல இலக்கியச் செயல்பாடுகளின் அடியில் ஒளிந்திருந்த நல்முத்து போன்ற சிறுகதை இலக்கியம் ஒரு நூறாண்டுக்கு முன் தான் மிதந்து வெளிவந்தது. சிறுகதையின் உருவம் என்ன? வடிவம் என்ன? என்று கூறும் ஆராய்ச்சி நூலில் மொழியியல் அறிஞரான ‘திரு. போரங்கி’ தக்ஷிணாமூர்த்தி ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகையில், “சுருக்கமாக இருக்கவேண்டும், பெரிய பெரிய வாக்கியங்களாலோ, நீண்ட வர்ணனைகளாலோ கதையின் உடல் சிக்கிச் சுருங்கி விடாமல், அடக்கி வாசிக்க வேண்டும். கதைக்கு அற்புதமான முடிவு கட்டாயம் இருக்க வேண்டும்” என்று அடித்துக் கூறுகிறார். தெலுங்கு சிறுகதை இலக்கியத்தில் ஒரு சிற்பியின் நுணுக்கத்தைக் காட்டிய புகழ்பெற்ற எழுத்தாளர்களான ‘சலம், குடும்பாராவ் கோபிசந்த், சாஸோ, புச்சிபாபு, பத்மராஜு, பாரத்வாஜா, வாகாடி, பலிவாட காந்தாராவ், மதுராந்தகம் ராஜாராம்’ போன்றவர்களின் கதைகளை மதிப்பீடு செய்த திரு ‘போரங்கி’ தக்க்ஷிணாமூர்த்தி, சிறந்த கதைகளுக்கும் நல்ல கதைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை விளக்கினார். ஆறுநூறு பக்கங்கள் கொண்ட இந்த ‘நூறேள்ளபண்ட’ தொகுப்புக்காக நூற்றுக்கணக்கான கதைகளை ஆய்வுக் கண்ணோடு படித்து திரு. தக்ஷிணாமூர்த்தி அவர்கள் பத்து பெண் எழுத்தாளர்களின் பெயர்களை எடுத்துக் கொடுத்து, அதிலிருந்து இரண்டு கதைகளை மட்டுமே மதிப்பீடு செய்தார்.
சமூக சீர்திருத்தம் குறித்து முதலில் சமூக நாடகம் எழுதிய திரு. குரஜாட அப்பாராவ் தான் சிறுகதை இலக்கியத்திற்குப் பிள்ளையார்சுழி போட்டார் என்று தெலுங்கு இலக்கிய வரலாறு கூறுகிறது. அது 2௦1௦ பிப்ரவரியில் வெளிவந்த ‘தித்துபாட்டு’ என்ற சிறுகதை. ‘திரு. அய்யங்கி வேங்கட ரமண்ணய்யா’ ஆசிரியராக இருந்த ‘ஆந்திர பாரதி’ என்ற இதழில் வெளிவந்தது. அதற்கு முன்பே சில சிறுகதைகள் வெளிவந்திருந்தாலும் அவற்றில் சிறுகதையின் வடிவம் சரியாக அமையவில்லை என்று விமரிசகர்கள் எடுத்துக் காட்டினார்கள். ஆனால் எதனாலோ அவர்கள் 19௦2 ல் விரிவாக சிறுகதைகள் படைத்த ‘பண்டாரு அச்சமாம்பா’ (1874-1904) பற்றிக் குறிப்பிடவில்லை. அப்போதைய ‘ஹிந்துசுந்தரி’ என்ற இதழ், ‘ஸ்த்ரீவிதியை’, ‘தன திரயோதசி’ முதலான அச்சமாம்பாவின் பல சிறுகதைகளை வெளியிட்டது.
19௦2 லேயே ‘பந்தர்’ என்ற நகரில் முதல் பெண்கள் சங்கமான ‘பிருந்தாவன ஸ்த்ரீ சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவிய அச்சமாம்பா தான் முதல் சிறுகதை எழுத்தாளர் என்று பெருமையோடு கூறி, அவருடைய சிறுகதையான ‘ஸ்திரீ வித்யை’யை (பெண்கல்வி) முதல் கதையாக இந்தத் தொகுப்பில் சேர்த்துள்ளோம். ‘குரஜாட அப்பாராவ்’ எழுதிய ‘தித்துபாட்டு’ தெலுங்கின் முதல் சிறுகதை என்று நினைப்பது தவறு என்று பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம். “வீட்டு ஆண்களால் வீட்டிற்குள் அடைக்கப்படும் பெண்கள் காக்கப்பட்டவர்கள் அல்லர். எந்தப் பெண் தன் ஆன்மாவைத் தானே காத்துக்கொள்வாளோ அவளே பாதுகாப்பாக உள்ளவள்” என்பது அச்சமாம்பா எழுதிய ‘அபலா சத் சரித்ர் மாலா’ என்னும் நூலின் முதல் வாக்கியம். இவர் எழுதிய கதைகளில் மொழி இலக்கணத்தின்படி மரபுச் சாயல் இருப்பதாகவும், குரஜாடா அப்பாராவின் கதை வழக்கு மொழியில் வெளிவந்த முதல் கதை என்றும் கூறிக் கொண்டாலும், குரஜாட அப்பாராவும் தன்னுடைய முதல் கதையை இலக்கண மரபுப்படியே எழுதி அதன் பிறகு திருத்தினார் என்று கூறுவதற்குச் சான்று உள்ளது. குரஜாடா அப்பாராவ் ‘கமலினி’ என்ற பெயரில் சொந்தமாக எழுதித் திருத்திய கையெழுத்துக் பிரதி கிடைத்துள்ளது. ‘அவசரால சூரியாரவ்’ எடுத்துவந்த ‘ஆணிமுத்துக்கள்’ என்ற தொகுப்பில் குரஜாட அப்பாராவ் மரபுப்படி எழுதிய பிரதியை அதில் சேர்த்துள்ளார். மற்றொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அச்சமாம்பா, அப்பாராவ் இருவரும் எழுதிய இந்த இரண்டு கதைகளின் கருப்பொருளும் பெண் கல்வியைப் பற்றியதே.
இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் ‘ஹிந்து சுந்தரி, சரஸ்வதி, க்ருஹலட்சுமி, விவேகவதி, தெலுகு ஜனானா’ போன்ற பத்திரிகைகள் இருந்தன. அவற்றுள் பெண்கள் அதிக அளவில் எழுதினார்கள். ஆனால் பல திறமைசாலிகளான பெண்கள் கூட ஒன்றிரண்டு கதைகள் எழுதி நிறுத்தி விட்டார்கள். அந்தக் கதைகளில் அதிக சதவிகிதம் தேசபக்தி, சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, பெண் கல்வி, விதவை மறுமணம் போன்ற கருபொருளைக் கொண்டு எழுதப்பட்டவையே. கணவனைப் புரிந்து கொண்டு அவனுடைய நிழலில் வாழ்ந்து அவனுடைய ஆசைகளை நிறைவேற்றி அவனுக்கு உறுதுணையாக நிற்கும் பெண்களே இந்த கதைகளின் நாயகிகள். ‘கனுபர்த்தி வரலட்சுமி’,’ ‘ஐந்து மாதங்களும் இருபது நாட்களும்’ என்ற சிறுகதையில் ருக்மிணியின் கணவன் கோபாலராவ் அந்நியத் துணி நிராகரிப்பில் சிறைக்குச் செல்கிறான். அப்போது குழந்தை பெற்று பச்சை உடம்புக்காரியாக இருந்த ருக்மிணி அபலையாக இல்லாமல் துணிவோடு சிந்தித்து, “சீ, என் கணவனுக்குப் பிடிக்காததோடு, அவனுடைய சிறைத் தண்டிக்கும் காரணமான இந்த அந்நியத் துணிகள் எனக்கு எதற்கு?” என்று கூறி கதர்த் துணி கட்டுகிறாள். ‘கெளரி விரதம்’ என்ற நோன்பையும் கதர்ப் புடவையோடு கடைப்பிடித்துக் கணவனை தான் நூற்ற நூலால் செய்த மாலையோடு வரவேற்கிறாள்.
அடுத்த பத்தாண்டு காலங்களில் வந்த கதைகளின் கருப்பொருளில் தென்படும் பன்முகத்தன்மை, பெண் எழுத்தாளர்களின் சிந்தனைத் திறனில் வந்த மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் காட்டுகின்றன. இருநூறு கதைகளுக்கு மேல் எழுதி பல விருதுகளும் சாஹித்திய அகாடமியின் கௌரவமும் பெற்ற பெண் எழுத்தாளர் ‘இல்லிந்தல சரஸ்வதி தேவி’ எழுதிய ‘காட்டு மல்லி’ கதை இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைக்குள் எட்டிப் பார்த்து அவர்களிடையே நிலவும் அன்பையும் பாசத்தையும் நுணுக்கமாக வெளிப்படுத்தும் கதை இது. இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால், இந்தக் கதையில் கதை சொல்லி ஒரு பெண் அல்ல. சிவநாதம் என்ற ஆண். இவனுடைய பார்வை மூலம் கதை நகருகிறது. இந்தக் கதையின் பெண் கதாபாத்திரங்கள் தீர்மானமான ஆளுமைகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுதந்திரமாக யோசித்து முடிவெடுக்கக் கூடியவர்கள். ‘கொம்மரி பத்மாவதி தேவி’ எழுதிய ‘உமா’, ‘மாதிரெட்டி சுலோச்சனா’ எழுதிய ‘ஹக்கு’ (உரிமை) என்ற கதையின் ‘தேவயானி’ ஆகிய பெண் பாத்திரங்கள் இந்தப் பிரிவில் சேர்கிறார்கள். ‘ஆதிமத்யம் ரமணம்மா’ எழுதிய ‘சுஜாதா’ ஒரு சமகாலப் பெண் வடிவம். கணவன் பிறந்த வீட்டிலிருந்து பணம் கொண்டு வரும்படி சண்டை போட்டபோது வீட்டை விட்டு வெளியில் வந்து சுதந்திரமாகத் தன் காலில் தான் நிற்க நினைக்கிறாள். அவ்வளவுதானே தவிர அவள் கணவனின் காலில் விழுந்து கண்ணீர் விடவில்லை. பதிவிரதைகளின் கதைகளைச் சொல்லி அவளுக்கு ஆறுதல் கூற நினைக்கும் மாமியாருக்குப் பெண்களின் வரலாறு, அடக்குமுறை, பெண்களுக்கு நேர்ந்த அநியாயங்கள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி மாமியாரைச் சம்மதிக்கச் செய்கிறாள். “தாழம்பூவைப் போல நம் பெண்கள் மென்மையாக இருந்து தேவையான போது குத்த வேண்டும். அப்படிச் செய்தால் வெற்றி நமக்கே” என்று பெருமையோடு கூறுகிறாள்.
‘தென்னேட்டி ஹேமலதா, சௌரீஸ், கோடூரி கௌசல்யா தேவி’ ஆகியோரின் கதைகளில் புதிய கதையம்சங்களோடு கூட எழுத்து நடையில் வந்த மாற்றங்களும் தெளிவாக வெளிப்படுகின்றன. வேதனை, மகிழ்ச்சி, சிருங்காரம் ஆகியவற்றைச் சிறப்பாக வெளிபடுத்திப் படைப்புகளைச் செய்தார்கள். இவர்களுடைய கதைகள் வாசகர்களை ரியலிசத்திலிருந்து ரொமான்டிசத்திற்கு அழைத்துச் சென்றன. “வம்சிமோஹனின் அழகான கண்கள் எதோ ஒரு ஆனந்தத்தில் எந்த நோக்கமும் இல்லாமல் பார்த்த அந்த நேரத்தில் அவள் சென்று அவன் மேல் சரிந்தாள். அவளுடைய தங்க நிற மென்மையான கேசங்கள் அவனுடைய நீல வண்ணம் பிரபலித்ததாலோ என்னவோ சில கணங்கள் கருப்பாகத் தோன்றின” என்ற லதாவின் கதை ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ‘ஆச்சண்ட’ சாரதா தேவி, ‘சிவராசு’ சுப்பலக்ஷ்மி ஆகியோர் அந்த நாட்களிலேயே சிறப்பான மன நல ஆராய்ச்சியோடு படைப்புகளை இயற்றினார்கள்.
அறுபதாவது தசாப்தம் தொடங்கிய போது சிறுகதைகளுக்கு மட்டுமல்ல, பெண்களின் படைப்புகளுக்கும் சிறந்த அடித்தளமும் பாதுகாப்பும் கிடைத்தன. முதல்தலைமுறை பெண் எழுத்தாளர்கள் அளித்த ஊக்கத்தோடு அதிக அளவில் பெண்கள் பேனைவைப் பிடித்தார்கள். ‘வாசிரெட்டி’ சீதாதேவி, ரங்கநாயகம்மா, மாலதி சந்தூர், ராமலக்ஷ்மி ஆருத்ரா, பானுமதி ராமகிருஷ்ணா ஆகியோரின் பெயர்கள் சில உதாரணங்கள் மட்டுமே. ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் உருவான பின்னர் அதிக அளவில் இங்கு இடம்பெயர்ந்தார்கள். இந்தத் தலைமுறையில் கதை எழுதிய பெண் எழுத்தாளர்கள் பலர் உயர் கல்வி கற்றவர்கள். பெரிய பதவிகளை வகித்ததால் ஏற்பட்ட ஆளுமையும், அனுபவமும் இவர்களுடைய கதைகளில் தென்பட்டது. ‘ஆனந்தராமம்’ பல்கலைக் கழகத்தில் பேராசியராகப் பணிபுரிந்தார். ‘வாசிரெட்டி’ சீதாதேவி அரசுப் பொறுப்பில் இருந்த உயரதிகாரி. இவருடைய ‘பானி ஆரஹா ஹை’ என்ற சிறுகதையில் சிறப்பான கிண்டல் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. ஹைதராபாத் நகரில் மூஸி நதியில் வெள்ளம் வந்த போது, அருகிலிருக்கும் சங்கரமடத்தில் புராண உபன்யாசம் செய்து கொண்டிருந்த சாஸ்திரி புராண நூல்களைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமாக ஓடி இறுதியில் தாகத்தால் இறப்பதாக முடிவது வாசகர்களின் மனத்தை நெகிழச் செய்கிறது. இலக்கியத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சில பாத்திரங்கள் அச்சில் வார்த்தாற்போல் இருக்கும். மாமியார் என்றால் கொடுமைக்காரி. சிற்றன்னை, ஓரகத்தி, நாத்தனார் என்றால் கெட்டவர்கள் என்றே கதைகளில் படைக்கப்பட்டனர். ஆனால் பானுமதி ராமகிருஷ்ணா படைத்த (அத்தகாரி கதலு) மாமியார் மிகவும் நல்லவர். உலக அறிவோடு கூட நகைச்சுவையும் காட்டி வாசகர்களுக்கு மட்டுமல்ல மருமகளுக்கும் பாசத்தைப் பகிர்ந்தார். மாமியாரை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு பானுமதி ராமகிருஷ்ணா நிறைய கதைகள் எழுதினார். நடிகையாக, பாடகியாக பன்முகத்திறமைசாலியாகத் திகழ்ந்த பானுமதியின் எழுத்துத் திறனை கௌரவித்து இந்திய அரசு பத்மஸ்ரீ விருதளித்தது.
இந்தத் தலைமுறை பெண் எழுத்தாளர்களைப் பற்றி முக்கியமாக ஒரு விஷயம் கூறவேண்டும். 6௦-7௦ களின் இடையில் பெண் எழுத்தாளர்கள் நிறைய பேர் சிறுகதைகளை எழுதினாலும் நாவல் எழுதுவதற்கே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். ‘டி. காமேஸ்வரி, யத்தனபூடி சுலோச்சனா ராணி, கொடூரி கௌசல்யதேவி, ரங்கநாயகம்மா, ஆனந்தராமம்’ முதலான பெண் எழுத்தாளர்களின் பல நாவல்கள் திரைப்படமாக வந்து வாசகர்களோடு கூட பார்வையாளர்களின் ஆதரவையும் பெற்றன.
மேலைநாட்டு கலாச்சாரமும், இலக்கியமும் ஏற்படுத்திய தாக்கத்தால் நாம் இறக்குமதி செய்து கொண்ட முற்போக்கு வாதம் பெண்ணீயம். இதனை நம்முடைய தேசம், காலம் சூழல்களுக்கு ஏற்ப பெண்ணீய கண்ணோட்டத்தோடு கடந்த இருபதாண்டு காலத்தில் பரவலாக கதைகள் வந்தன
“அப்போது எத்தனையோ முற்போக்கு எண்ணங்களும் புரட்சி மனப்பான்மையும் பிரசாரத்தில் இருந்தாலும் பெண்களின் விஷயத்தில் ஆணாதிக்க சமுதாயம் விதித்த கருத்தியலுக்கு சிறு அளவு கூட பங்கம் நேரவில்லை. புரட்சி இயக்கங்களில் பெண்களின் பங்கு அதிகரித்தபோது பெண்கள் அந்த இயக்கங்களில் ஆண்களின் ஆதிக்க மனப்பான்மையைக் கேள்வி கேட்டபோதுதான் பெண்களின் பிரச்சைகளில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படத் தொடங்கியது” என்கிறார் பிரபல பெண்ணிய எழுத்தாளர் ஓல்கா. ஆணாதிக்கத்தை எதிர்த்து, சமுதாயத்திலுள்ள இரட்டை நிலையையும், பாலியல் வேறுபாட்டையும் சவால் செய்யும் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. அதுவரை பெண்கள் ஆணுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதாகக் கதைகள் எழுதிய பெண் எழுத்தாளர்களும் இந்தப் புது முறையால் ஈர்க்கப்பட்டு இலக்கியம் படைக்கத் தொடங்கினர். பெண்ணியத்திலும் சில வேறுபட்ட கோணங்களும் குரல்களும் கதைகளில் தெளிவாக வெளிப்பட்டன. மார்க்சிஸ்ட் சிந்தனையோடு ரங்கநாயகம்மா எழுதிய ‘தலலு புச்சின மனுஷுலு” (மூளையற்ற மனிதர்கள்) மிகவும் சக்தி வாய்ந்த கதை. ஓல்காவின் கதைகள் (Radical Feminism) தீவிரமான பெண்ணீயத்திற்குச் சான்றுகள். ‘அப்பூரி சாயாதேவி, சீலா சுபத்ரா தேவி’ போன்றோரின் கதைகள் சமூக பெண்ணீயத்திற்கான (Social Feminism) விளக்கங்கள். பிரச்சனைகளுக்கான தீர்வைக் குடும்ப எல்லைக்குளேயே தேடிக்கொள்ள முடியும் என்று சில கதைகள் கூறுகையில், தன்னுடைய தனித்துவமான ஆளுமையை அழித்துக் கொண்டு சமரசம் செய்து கொண்டு வாழ்வதை விட, பெண் தனியாக இருப்பதே மேல் என்று வேறு சில கதைகள் போதிக்கின்றன. திருமண அமைப்பிலிருக்கும் சமத்துவமற்ற நிலையையும் அடக்குமுறையையும் சுட்டிக் காட்டி நிறைய கதைகள் வந்தன. திருமணம் என்ற உறவில் சிக்காமல் நண்பர்களாக சேர்ந்து வாழலாம் என்றும் பிரிந்து விடலாம் என்று தோன்றும் போது விவாகரத்து என்ற பேச்சுக்கு இடமிருக்காது என்றும் எஸ். ஜயா எழுதிய ‘ரெக்கலுன்ன பில்ல’ (சிறகுள்ள பெண்) ஒரு பரிசோதனை முயற்சியான கதை. இந்தத் தொகுப்பிலிருக்கும் ‘யாடி, முக்த, புருகு, ஜேபு, அனகனகா’ போன்ற கதைகள், பெண்களின் தனித்துவமான ஆளுமையைப் புதுமையாகவும் மாறுபட்டும் புது கோணங்களில் காட்டுபவை. வேலை தேடிக் கொண்டு பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கும் பெண்களும் எவ்வாறு சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் என்று கூறும் கதை ‘வாத்து பொன் வாத்து’.
பெண்ணீய கண்ணோட்டத்தோடு கதைகளை விடக் கவிதைகளே அதிக அளவில் வந்தன. அறிவுப் பூர்வமான தீவிரமான குரல்கள் கதைகளை விட கவிதைகளில் தெளிவாக கேட்டதற்கு, கவிதைச் செயல்பாட்டில் மறைந்துள்ள சக்தி காரணமாக இருக்காலாம். கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணைக் கொடுமைகள் போன்ற பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தைக் கதைப் பொருளாகக் கொண்டு ஏராளமான கவிதைகள் வெளிவந்தன. ‘ஜயப்ரதா, கொண்டேபூடி நிர்மலா’ போன்றவர்கள் கதைகளை விடக் கவிதைகளே அதிகம் எழுதினார்கள்.
கதைகள், கவிதைகள் ஆகியவற்றோடு கூட பெண்ணீய கண்ணோட்டத்தில் வெளிவந்த மற்றும் சில இலக்கியச் செயல்பாடுகள் கட்டுரைகளும். செய்திப் பத்திரிக்கைகளில் வரும் (காலம்ஸ்) பத்திகளும். ‘குப்பிலி பத்மா’ எழுதிய ‘மைதானம்’, ம்ருனாளினி எழுதிய ‘கோமலி கங்காதரம்’, வசந்தா கண்ணபிரான் எழுதிய ‘தீவ்ரமத்யமம்’ போன்றவை இவற்றில் சில. ‘விஜயா, ஷோபாபட்’ போன்ற பெண் எழுத்தாளர்கள் தம் கட்டுரைகளில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். இவர்களுடைய படைப்புகள் சமகால பிரச்சனைகளுக்குச் சிறந்த எதிர்வினையாக விளங்கின. ‘பத்திகள்’ பற்றிக் கூறும்போது முக்கியமாக நினைவுக்கு வருவது ‘மாலதி சந்தூர்’ எழுதிய ‘ப்ரமதாவனம்’. நாற்பதாண்டுகளுக்கு மேலாக ‘பிரமாதவனம்’ மூலம் வாசர்களோடு உரையாடி, ஆறுதல் கூறி, உற்சாகப்படுத்தி அறிவை வளர்க்கும் கருத்துக்களை எளிமையான மொழியில் எழுதி அனைவரின் அங்கீகாரத்தையும் பெற்ற சிறப்பு அவருடையது. அதேபோல் பரவலாக இலக்கியம் படைத்தபடி அலுப்பு என்பதை அறியாத போர் வீரனைப் போல குடிப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு இயக்கத்திற்குத் தலைவியாக நின்றதோடு, இலக்கியச் சேவையை விட சமூக சேவைக்கு முதலிடம் அளித்த எழுத்தாளர் ‘மல்லாதி சுப்பம்மா’. ‘அஸ்மிதா, அன்வேஷி’ போன்ற அமைப்புகள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு முயற்சித்தபடி ‘பூமிகா’ போன்ற பத்திரிக்கைகளையும் நடத்தி பெண்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் போராடினார்கள்.
பெண்ணீயத்தோடு கூட சற்றேறக்குறைய அதே காலத்தில் தெளிவைப் பெற்ற மற்றுமொரு இலக்கியச் செயல்பாடு ‘தலித்தியம்’. இது ‘குலத்தின் அடிப்படையில் அடக்குமுறைக்கு ஆளானவர்களுடைய வேதனையின் இலக்கிய வடிவம்
சமுதாயம் குலத் தொழில் செய்தவர்களை மதிக்காமல் அவர்களை தாழ்வாகப் பார்த்து உதவியற்ற நிலைக்குத் தள்ளியது. காந்திஜி அவர்களை ‘ஹரிஜனங்கள்’ என்று அன்போடு விளித்தார். அம்பேத்காரின் தலைமையில் சமத்துவத்திற்காக போராட்டம் தொடங்கியது. அரசாங்கம் சட்டப்படி பாதுகாப்பு அளித்து சலுகைகளும், ஒதுக்கீடுகளும் அறிவித்தது. அதன் மூலம் தலித்தியத்திற்கு ஒரு தீர்மானமான எல்லை உருவானது. தலித் வர்க்கங்களின் உழைப்பைத் திருடியவர்களை எதிர்ப்பது நியாயம் தான் என்ற கதைப் பொருளோடு பல சிறந்த இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. ‘உன்ன லக்ஷ்மி நாராயணா’ எழுதிய ‘மாலபல்லெ’, ‘ஸ்ரீபாத’ எழுதிய ‘மாதிகபல்லெ’, ‘சலம்’ எழுதிய ‘மாதிகம்மாயி’ போன்ற ஆண் எழுத்தாளர்களின் படைப்புகள் வாசகர்களைத் தட்டி எழுப்பின. ஆனால் பெண்ணீயவாதக் கதைகளை பெண்கள் எழுதுவதே சிறந்தது என்பது சிலருடைய அபிப்பிராயமாக இருந்தது போல, தலித்திய வாதக் கதைகளை தலித்துகளே எழுதுவது சிறந்தது என்ற அபிப்பிராயம் பரவலாக எழுந்தது. அவ்வாறு இல்லாத போது படைப்புகளில் அனுதாபம் (சிம்பதி) இருக்குமே தவிர, உணர்வுசார் பரிவு (எம்பதி) இருக்காது என்ற விமரிசனம் எழுந்தது. ‘கொலகலூரி இனாக்’, ‘அல்லம் ராஜய்யா, பி.எஸ். ராமுலு, சதீஷ் சந்தர்’ போன்றவர்கள் சிறந்த படைப்புகளை அளித்தனர். ஆனால் இந்த வகையில் பெண்கள் எழுதிய தலித்தியக் கதைகள் மிகக் குறைவு. திரு. கே. லக்ஷ்மி நாராயாணா சேகரித்துப் பிரசுரித்த புத்தக வரிசையில், ஸ்ரீ லீலா சரோஜினி (மாதிகவாடு 1930), ‘கொட்டுமுக்கல மங்காயம்மா’ (ஐயோ பாவம் 1935), ‘ஆயபெள்ளி ராமலட்சுமி’ (தன்யஜீவுலு 1941) கதைகளைப் படிக்கும் போது அப்போதைய சமுதாயத்தின் வராலாறு கண்ணெதிரில் வந்து நிற்கிறது. இந்த வகையில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய தலித்திய கதைகள் அதிகம் கிடைக்கவில்லை. பாலினப் பாகுபாட்டோடு கூட குலத்தின் அடிப்படையிலும் அநியாயத்திற்கு ஆளானவர்கள் தலித் இனப் பெண்கள். இந்தக் கண்ணோட்டத்தோடு வெளிவந்த கதைகளில் ‘கீதாஞ்சலி, கே. வரலட்சுமி, ‘எல்லி’ அருணா’ போன்றோரின் கதைகள் சில.
இந்த ‘நூறேள்ள பண்ட’ என்ற தொகுப்பைப் பயிரிடுவதற்கு விதைகளைக் கொடுத்து, நீர் ஊற்றி, நாற்று நட்டு, எரு அளித்து, களை எடுத்து, உழைப்பையும் சக்தியையும் நல்கிய இலக்கிய உழைப்பாளிகள் அனைவருக்கும் எவ்வாறு நன்றி கூறுவது? எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும் அது குறைவே.
பெண் ‘எழுத்தாளர்களின் கதைகளையெல்லாம் திரட்ட எண்ணம் கொண்டவுடன், எழுத்தாளரும் கலைஞருமான திருமதி லீலா வீர்ராஜு இது போன்ற பெண் எழுத்தாளர்கள் எழுதிய ஒரு பெரிய தொகுப்பு இதுவரை வரவில்லை. நாம் எடுத்து வருவோம் என்று உற்சாகமூட்டினார். உடனே எழுத்தாளினிகளின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டு, முகவரிகளைச் சேகரித்து, புதிதாகக் கதை ஒன்று எழுதி அனுப்புமாறு கடிதம் எழுதினோம். ஒரு சிலர் உடனே புதுக் கதைகள் எழுதி அனுப்பினாலும், மூத்த பெண் எழுத்தாளர்கள் பலரும், இப்போது புதுக்கதை எழுத முடியாது என்றும், தாம் எழுதியவற்றில் பிடித்ததை எடுத்துக்கொள்ளும் படியும் கூறினார்கள்.
அப்போது ஆரம்பமானது எங்களுடைய வேட்டை. கிடைத்த இடத்திலிருந்தெல்லாம் புத்தகங்களைச் சம்பாதித்து, கதைகளைப் படித்து, விவாதித்து மீண்டும் பட்டியல் தயாரித்தோம். மறைந்த எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர்கள் என்று இவ்வாறு இருபதாம் நூற்றாண்டை தசாப்தங்களாகப் பிரித்து, பெயர்களை எழுதிக் கொண்டோம். கிடைக்காதவர்களோடு கடிதம் மூலம் உரையாடினோம். கிடைத்தவர்களின் வீடுகளுக்குச் சென்று கெஞ்சி, அனுமதி பெற்று கதைகளைச் சம்பாதித்தோம். இந்த வேட்டையில் எங்களுக்கு முதன்மையாக உதவியவர் இலக்கிய நண்பர் திரு. ‘கோருசு ஜகதீஸ்வர ரெட்டி’. நூலகங்களுக்கு எல்லாம் சென்று அலைந்து பழைய பத்திரிக்கைகளைப் பெற்று வந்தார். திரு. ‘ராமடுகு ராதாகிருஷ்ண மூர்த்தி’ அமைத்திருந்த தனிப்பட்ட நூலகத்தை அவருடைய அனுமதி பெற்றுக் கொள்ளையடித்து கதைகளைச் சேகரித்து வந்தார். ‘அப்பூரி’ சாயாதேவி, ‘கோவிந்தராஜு ராதாகிருஷ்ண ராவ்’, ஸ்ரீனிவாசன், சீலா சுப்ரத்ரா தேவி, ‘ஸஜயா’ ஆகியோரின் கதைகளைப் பெற்று வந்து தந்ததோடு கதைகளின் தேர்விலும் எங்களுக்கு உதவினார்.
இந்தத் தொகுப்பு விரைவாக முழுமையடைய வேண்டும். இந்தப் பயிர் பொங்கலுக்குள் அறுவடையாக வேண்டும் என்ற என் உற்சாகத்திற்குத் துணையாக, ‘நான் இருக்கிறேன் அஞ்சாதே’ என்று தைரியம் கூறினார் ‘பாண்ட்லைன் நிர்மலா’. அவரும் சுநீதாவும் சிரத்தையாக டைப் செய்து கொடுத்தார்கள். பல எழுத்தாளர்கள் அச்சு திருத்திக் கொடுத்து உதவினார்கள். இங்கு நாங்கள் எதிர்கொண்ட சில இடையூறுகளைப் பற்றிக் கூற வேண்டும். தொகுப்பில் கதைகளை எந்த வரிசையில் அமைப்பது? எழுத்தாளர்களின் மூத்த வயதின்படியா? கதைகள் வெளியான வருடமா? சீனியாரிட்டி என்றால் பிறந்த வருடமா? கதை எழுதத் தொடங்கிய வருடமா? கவிதை அதிகம் எழுதி சமீபத்தில் கதைக் களத்தில் புகுந்தவரை எங்கு வைப்பது? எழுத்தாளராகப் புகழ் பெறாவிட்டாலும் தொகுப்புகள் வெளிவராவிட்டாலும் சிறப்பான கதைகளை எழுதிக் கொடுத்தவர்களுக்கு எத்தனை முக்கியத்துவம் அளிப்பது? நூறாண்டுகளில் வந்த இலக்கியத்தை கணிக்கும் போது சமகால எழுத்தாளர்களை எந்த எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும்? இத்தகைய குழப்பகங்ளோடு முன்னேறிச் சென்று ஒரு வழியாகத் தொகுப்பை நிறைவு செய்தோம்.
கதைகளின் தேர்வு பற்றி ஒரு வார்த்தை. பெண் எழுத்தாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி அவர்களுக்கு பிடித்த இரண்டு கதைகள், எங்களுக்குப் பிடித்த இரண்டு கதைகள் என்று ஒவ்வொருவருக்கும் நான்கு கதைகள் முதலில் தேர்ந்தெடுத்து. அதிலிருந்து ஒன்றை நாங்கள் நான்கு பேர் கூடித் தேர்ந்தெடுத்தோம். பரிசு பெற்றது, நல்ல விமரிசனங்களை பெற்றது, அனைவருக்கும் பிடித்தது என்று தேர்வானவையே இந்த தொகுப்பில் உள்ளன. இன்னொரு பிரச்சினை கதைகளின் நீளம். ஒவ்வொரு கதையும் ஆறிலிருந்து எட்டு பக்கம் வரை இருந்தால் அறுநூறு பக்கங்களுக்குள் வரும் என்று கணக்கிட்டோம். ரொம்பப் பெரிய கதைகளை அவை சிறந்ததாக இருந்தபோதிலும் எடுத்து விட்டுக் கொஞ்சம் சின்ன கதைகளைச் சேர்த்தோம்.
பெண்கள் படைத்த இலக்கியத்திற்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் இலக்கிய விமரிசனங்களும் வரவில்லை. பொழுது போகாமல் பெண்கள் கதை எழுதுகிறார்கள் என்ற அலட்சியமாக விமரிசித்தனர் சிலர். கதைகள் அற்புதமாக இருந்தால், ‘இதை இந்தப் பெண்களா எழுதினார்கள்? கணவன்மார்கள் எழுதி மனைவி பெயரில் அனுப்பியிருப்பார்கள்’ என்றவர்களும் உண்டு. விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்த போது, ‘இவை எப்படிக் கிடைத்தன என்று எங்களுக்குத் தெரியும்’ என்று ஆத்திரப்பட்டவர்களும் உண்டு. அவ்வாறன்றி, இந்தப் புதிய நூற்றாண்டில் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு நேர்மையான மதிப்புரைகள் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என்று பார்கவி தேவி தன்னுடைய முன்னுரையில் தெரிவிக்கிறார்.
நீண்ட வரலாறு கொண்ட பரந்த தெலுங்கு இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களை யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டலும், சக பெண் எழுத்தாளர்கள் பாராட்டிக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்கிறார்கள். அவர்களை நாமும் வாழ்த்திப் பாராட்டுவோம்.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.

நல்ல கட்டுரை வாழ்த்துக்கள். ஒரு விஷயம்.
ஆயிரங்காலத்துப்பயிர் என்று நூறேண்ட்ல பண்ட்ட மொழிமாற்றம்
கொள்வது சரியாகப் படவில்லை.
அது மக்கள் சமூகம் பற்றியது
இதுவோ விளைச்சல் படைப்பு குறித்தது
ஆயிரம் காலத்துப் பயிரை தெலுங்கில் ‘வெய்யேள்ள பண்ட்ட’ என்று கூறுவார்கள். இங்கு நூறு கதைகளைத் தேடிச் சேர்த்ததால் ‘நூறேள்ள பண்ட்ட’ என்று தொகுப்புக்குப் பெயர் வைத்தார்கள். பயிர் விளைச்சலுக்கு ஆகும் சிரமம் இதிலும் இருந்திருக்கிறது. தமிழில் ‘நூறு காலத்துப் பயிர்’ என்று எழுதினால் சரியாக வராது என்பதால் ஆயிரம் காலத்துப் பயிர் என்று மொழிபெயர்த்தேன்