
அண்மையில் காலமான அமெரிக்கத் தத்துவவாதியான ஜான் சர்ல், தத்துவ உலகில் நிலைபெற்றிருந்த கோட்பாடுகளைத் துணிச்சலுடன் சவால் செய்தவர். அவர் டேகார்ட் முதல் காண்ட் வரையிலான பெரும் மேதைகள் அனைவரும் ஒரு அடிப்படைத் தவறு செய்துவிட்டார்கள் என்று பகிரங்கமாகக் கூறினார். மனம், மொழி மற்றும் யதார்த்தம் குறித்த அவரது தீவிரமான கருத்துக்கள் அமெரிக்கத் தத்துவ உலகத்தில் மிகப்பெரிய விவாத அலைகளை உருவாக்கின.சர்லை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டியது அவரது தனித்துவமான தத்துவ அணுகுமுறையே ஆகும். அவர் சிக்கலான யோசனைகளைக்கூட தெளிவான, நேரடியான மொழியில் எழுதினார். அடர்த்தியானதாகவும், புரிந்துகொள்ளக் கடினமானதாகவும் இருக்கும் வழக்கமான தத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு மத்தியில், சர்லின் எழுத்து எளிமையாக மக்களைச் சென்றடைந்தது.
“டேகார்ட் தவறு செய்தாரா? காண்ட் குழப்பமடைந்தாரா? நவீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் தவறான பாதையில் செல்கிறார்களா?” – இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டு அதற்கான கோட்பாடுகளையும் உருவாக்கினார்.தனது கருத்துக்களைச் சொல்வதில் அவர் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. பெரும் தத்துவ ஜாம்பவான்கள் தொடங்கி, தற்கால அறிவியலின் போக்குகள் வரை அனைத்தையும் வெளிப்படையாக விமர்சித்தார். இந்த அசாதாரண அறிவுசார் துணிச்சலும், தனது நிலைப்பாட்டில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், அவரை ஒரே நேரத்தில் பலரால் சவால் செய்யப்படுபவராகவும், அதே சமயம் பரவலாக மதிக்கப்படும் ஒரு தத்துவ ஆளுமையாகவும் உயர்த்தியது.

நூற்றாண்டுகளின் தவறு
நமது புலனுணர்வுகள் சில நேரங்களில் நம்மைத் தவறாக வழிநடத்தக்கூடும் (உதாரணமாக, ஒரு மாயை அல்லது மாயத்தோற்றம் ஏற்படும்போது) என்ற எளிமையான உண்மையை தத்துவவாதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்த எளிய ஐயப்பாட்டிலிருந்து, தத்துவவாதிகள் ஒரு மிகத் தீவிரமான முடிவுக்குத் தாவினர், நாம் வெளி உலகத்தை நேரடியாக உணர முடியாது. இந்தத் தவறான பாதையில் பயணித்தவர்களில் பேகன், லாக், பெர்க்லி, மற்றும் ஹ்யூம் போன்ற பெரும் அறிஞர்களும் அடங்குவர். பாரம்பரியத் தத்துவவாதிகளின் இந்த முட்டுச்சந்தை ஒரு சிந்தனைப் பரிசோதனை மூலம் விளக்கினர். நீங்கள் இப்போது ஒரு கணினித் திரையைப் பார்ப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், உங்கள் மூளை தவறுதலாகச் செயல்பட்டாலோ அல்லது நீங்கள் Matrix திரைப்படத்தில் இருப்பது போல ஒரு கணினி உருவகப்படுத்துதலில் இருந்தாலோ என்னவாகும்?
இந்த மாயையான காட்சிக்கும் (Illusion) உண்மையான காட்சிக்கும் (Real Perception) இடையே நீங்கள் அகநிலை ரீதியாக (Subjectively) எந்த வித்தியாசத்தையும் உணர மாட்டீர்கள். எனவே, தத்துவவாதிகள் நாம் எப்போதும் வெளி உலகைப் பார்ப்பதில்லை, மாறாக நம் மனத்தால் உருவாக்கப்பட்ட மன-சார்ந்த உருவங்களை மட்டுமே (Mental-dependent representations) பார்க்கிறோம். வெளி உலகுக்கும் நமக்கும் இடையே புலனுணர்வு என்ற ஒரு திரை (Veil of Perception) உள்ளது என்று வாதிட்டனர். சர்லுக்கு இது அடிப்படைத் தவறு, அல்லது அபத்தம் என்று பட்டது. இந்த வாதம், நமது மனநிலையின் “உள்ளடக்கம்” (Content) மற்றும் அந்த மனநிலை உண்மையில் சுட்டிக்காட்டும் “பொருள்” (Object) ஆகியவற்றுக்கு இடையேயான குழப்பத்தால் எழுகிறது என்றார்.

மொழியின் மாயாஜாலம்
சர்லின் ஆரம்பகால பணிகள் மொழி தத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தின. 1960களில், J.L. ஆஸ்டினின் பணிகளை அடிப்படையாகக் கொண்டு, சர்ல் “பேச்சு செயல் கோட்பாட்டை” (Speech Act Theory) உருவாக்கினார். அவரது 1969 புத்தகம் “Speech Acts” இந்தத் துறையில் ஒரு மைல்கல்லாக மாறியது. நாம் எதையாவது சொல்லும்போது, நாம் வெறும் வார்த்தைகளை உச்சரிப்பது மட்டுமல்ல நாம் ஒரு செயலை செய்கிறோம். “மன்னிக்கவும்” என்று சொல்வது மன்னிப்பு கேட்கும் செயல். “வருகிறேன்” என்று சொல்வது வாக்குறுதி அளிக்கும் செயல். “மழை பெய்கிறது” என்று சொல்வது உண்மையை உறுதிப்படுத்தும் செயல். சர்ல் பேச்சு செயல்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்:
உறுதி கூறுதல்கள் (Assertives): “பூமி சூரியனைச் சுற்றுகிறது” – உலகம் எப்படி இருக்கிறது என்பதை கூறுதல்.
வழிகாட்டல்கள் (Directives): “கதவை மூடு” – மற்றவர்களை ஏதாவது செய்ய வைக்கும் கட்டளைகள்.
உறுதிமொழிகள் (Commissives): “நான் உதவுவேன்” – எதிர்காலத்தில் செய்யும் வாக்குறுதிகள்.
வெளிப்பாடுகள் (Expressives): “நன்றி!” – உணர்வுகளை வெளிப்படுத்துதல்.
அறிவிப்புகள் (Declarations): “நான் உங்களை கணவன்-மனைவி என்று அறிவிக்கிறேன்” – யதார்த்தத்தையே மாற்றும் கூற்றுகள்.
இந்த கோட்பாடு மொழியியல், சட்டம், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் மொழி செயலாக்கத்திலும் (Natural Language Processing) செயற்கை நுண்ணறிவிலும் சர்லின் யோசனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சீன அறை: செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான மிகப் பிரபலமான வாதம்
1980இல், ஜான் சர்ல் (John Searle) ஒரு சிந்தனைப் பரிசோதனையை முன்வைத்தார், அது தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. “சீன அறை வாதம்” (Chinese Room Argument) என்று அழைக்கப்படும் இது, செயற்கை நுண்ணறிவு (AI) எப்போதாவது உண்மையாக “சிந்திக்க” அல்லது “புரிந்துகொள்ள” முடியுமா என்ற மையக் கேள்வியை எழுப்பியது.
சிந்தனைப் பரிசோதனை
ஒருவர் சீன மொழி தெரியாதவராக இருந்து, ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். அவரிடம் சீன எழுத்துக்களை எப்படி கையாள வேண்டும் என்பதை விளக்கும் ஆங்கில வழிமுறைகளைக் கொண்ட ஒரு விதிப் புத்தகம் உள்ளது.
- அறைக்கு வெளியிலிருந்து சீன மொழியில் கேள்விகள் உள்ளே அனுப்பப்படுகின்றன.
- அறைக்குள் இருக்கும் நபர், அந்த எழுத்துக்களின் அர்த்தம் தெரியாமல், வெறும் விதிப் புத்தகத்தை மட்டும்பின்பற்றி, சரியான சீன பதில்களை வெளியே அனுப்புகிறார்.
- வெளியில் இருப்பவர்களுக்கு, அறைக்குள் இருப்பவர் சீன மொழியை சரளமாகப் புரிந்துகொள்கிறார் என்று தோன்றும்.
சர்லின் கேள்வி: குறியீடு vs. அர்த்தம்
உண்மையில் என்ன நடக்கிறது? அறைக்குள் இருக்கும் நபருக்கு ஒரு சீன எழுத்தின் அர்த்தம் (Semantics) கூட தெரியாது. அவர் வெறும் எழுத்துக்களின் வடிவங்களை மட்டுமே கையாளுகிறார்.
சர்ல் இதிலிருந்து தனது முக்கிய வாதத்தை முன்வைக்கிறார்:
- கணினிகளும் இதேபோல் தான். அவை குறியீடுகளைக் கையாளும் (Syntax – வெறும் இலக்கண வடிவங்கள்) அமைப்புகள்.
- ஆனால், அவற்றின் அர்த்தத்தை (Semantics) புரிந்துகொள்வதில்லை.
இந்த வாதம் உடனடியாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியது, மேலும் புரிதல், உணர்வு, மற்றும் நுண்ணறிவின் இயல்பு குறித்த நமது சிந்தனையை ஆழமாக வடிவமைத்தது. நவீன AI கருவிகள் மிகத் திறமையாகப் பதில்களை உருவாக்கினாலும், அவை மனிதனைப் போல உண்மையில் புரிந்துகொள்வதில்லை, அவை வெறும் சிக்கலான புள்ளிவிவர வடிவங்களைப் (Statistical Patterns) பின்பற்றுகின்றன.
உயிரியல் இயல்புவாதம்: உணர்வுக்கு மூளை அவசியம்
தத்துவம் பல நூற்றாண்டுகளாகப் போராடி வரும் மனம்-உடல் பிரச்சினைக்கு (Mind-Body Problem), ஜான் சர்ல் ஒரு தனித்துவமான கோட்பாட்டை முன்வைத்தார்: “உயிரியல் இயல்புவாதம்” (Biological Naturalism). இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு இடையே ஒரு சமநிலையையும், நடைமுறை விளக்கத்தையும் முன்மொழிகிறது.

நிராகரிக்கப்பட்ட இரு தீவிரங்கள்
- கார்ட்டீசிய இருமை (Cartesian Dualism): இது மனமும் (ஆன்மா) உடலும் இரண்டு வெவ்வேறு பொருட்கள் என்ற கருத்தை முன்வைக்கிறது. சர்ல் இதை நிராகரித்தார்.
- பொருள்முதல்வாதம் (Materialism): இது மனம் என்பது வெறும் மூளையின் செயல்பாடு மட்டுமே என்று கூறுகிறது. சர்ல் இதையும் நிராகரித்தார்.
சர்லின் நிலைப்பாடு: உணர்வு ஒரு உயிரியல் அம்சம்
சர்லின் கூற்றுப்படி, உணர்வு என்பது வெறும் அற்பமான மூளைச் செயல்பாடு அல்ல, ஆனால் அது மூளையிலிருந்து பிரிந்த ஒரு பொருளும் அல்ல.
- உணர்வு என்பது உண்மையான, உயிரியல் நிகழ்வு. இது செரிமானம் அல்லது ஒளிச்சேர்க்கை போன்ற ஒரு இயற்கைச் செயல்பாடே ஆகும்.
- இது மூளையின் நரம்பியல் செயல்முறைகளால் ஏற்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், மூளையே மனதை உருவாக்குகிறது.
- இயற்பியல் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்டது , இதற்கு அதன் சொந்த தனித்துவமான பண்புகள் உள்ளன.
இந்த தனித்துவமான பண்புதான் First-person Ontology எனப்படுகிறது. அதாவது, நம்முடைய அகநிலை அனுபவங்கள் யதார்த்தத்தின் உண்மையான பகுதிகள்.
வலி என்பது நரம்பு செல்கள் சில வழிகளில் செயலாற்றுவதால் ஏற்படுகிறது (பொருள்முதல்வாதம் இதை விளக்குகிறது). ஆனால் வலியை “உணர்வது” அந்த அகநிலை, தனிப்பட்ட அனுபவம் வெறும் நரம்பியல் செயல்பாட்டின் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது. இந்த அகநிலை அனுபவமே உணர்வின் முக்கியமான பண்பு. உயிரியல் இயல்புவாதம், உணர்வு இயற்பியல் உலகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அதற்கு ஒரு தனித்துவமான குறைத்து மதிப்பிட முடியாத அகநிலை இருப்பு உள்ளது என்பதை வலியுறுத்துகிறது.

சமூக யதார்த்தம்: நம் ஒப்பந்தங்களால் உருவான உலகம்
1990கள் மற்றும் 2000களில், சர்ல் ஒரு புதிய துறையில் ஆராயத் தொடங்கினார். அவரது புத்தகங்கள் “The Construction of Social Reality” (1995) மற்றும் “Making the Social World” (2010) இந்த யோசனைகளை விரிவாக்கின. பணம், அரசாங்கம், திருமணம், சொத்துரிமை இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? மலைகள் மற்றும் ஆறுகள் மனிதர்கள் இல்லாமலும் இருக்கும். ஆனால் ஒரு இருபது டாலர் நோட்டு? ஒரு ஜனாதிபதி? இவை நமது கூட்டு ஒப்பந்தத்தால் மட்டுமே இருக்கின்றன. சர்ல் “அடிப்படை உண்மைகள்” (brute facts) மற்றும் “நிறுவன உண்மைகள்” (institutional facts) இடையே வேறுபடுத்துகிறார். அடிப்படை உண்மைகள் இயற்பியல் உலகத்தில் இருக்கின்றன, அதாவது “இந்த பாறை 10 கிலோ எடை”. நிறுவன உண்மைகள் மனித நிறுவனங்களுக்குள் மட்டுமே இருக்கின்றன “இருபது டாலர் நோட்டு”.
இதை விளக்க சர்ல் ஒரு எளிய சூத்திரத்தை வழங்குகிறார்: “XYC”
- இந்த காகிதத் துண்டு (X) பணமாக (Y) கருதப்படுகிறது நமது பொருளாதார அமைப்பில் (C)
- இந்த நபர் (X) ஜனாதிபதியாக (Y) அங்கீகரிக்கப்படுகிறார் நமது அரசியல் அமைப்பில் (C)
- இந்த வார்த்தைகள் (X) திருமணமாக (Y) எண்ணப்படுகின்றன சட்ட சூழலில் (C)
இதன் அடித்தளம் “கூட்டு நோக்கம்” (collective intentionality, நாம் ஒன்றாக நம்பும்போது, நாம் யதார்த்தத்தை உருவாக்குகிறோம். இது வெறும் கற்பனை அல்ல, உண்மை.

However, constructing such a taxonomy is no simple task because several different and crisscrossing distinctions need to be recognized. With some hesitation, here is a simplified version of the hierarchical relations between the different types of fact.
Distinction between brute and institutional facts
பார்வையின் தத்துவம்: விஷயங்களை அப்படியே பார்த்தல்
சர்லின் பிற்காலப் பணிகளில் ஒன்று காட்சி உணர்வு பற்றிய அவரது 2015 புத்தகம் “Seeing Things as They Are: A Theory of Perception”. இந்த நூல் டேகார்ட்டுக்குப் பிறகு உணர்வு தத்துவத்தில் நிகழ்ந்த அனைத்தும் தவறானது என்ற அவரது தைரியமான கூற்றை விரிவுபடுத்துகிறது. பாரம்பரிய தத்துவஞானிகள் ”நாம் நேரடியாக மேஜைகளையும் மரங்களையும் பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, முதலில் மன-சார்ந்த “உணர்வு-தரவுகளை” (sense-data) அல்லது “எண்ணங்களை” பார்க்கிறோம், பின்னர் அவற்றின் மூலம் வெளி உலகத்தை ஊகிக்கிறோம்” என்று கருதுகிறார்கள். சர்ல் “நேரடி யதார்த்தவாதத்தை” (Direct Realism) ஆதரித்தார். நாம் வெளிப் பொருட்களை நேரடியாக உணர்கிறோம். உணர்வு வெளி உலகத்துடன் அகநிலை மனத்தை நேரடித் தொடர்பில் வைக்கிறது. கண்ணாடி வழியாக பார்ப்பது போல அல்ல, நேரடித் தொடர்பு. இங்கே சர்லின் முக்கிய நுண்ணறிவு மீண்டும் உள்ளடக்கம்(Content) மற்றும் பொருளுக்கு (object) இடையிலான வேறுபாடு. மாயைகள் மற்றும் மாயத்தோற்றங்கள் உணர்வு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன (உலகம் ஒரு குறிப்பிட்ட வழியில் இருப்பதாக நாம் பிரதிநிதித்துவம் செய்கிறோம்) ஆனால் உண்மையான பொருள் இல்லை (அந்த வழியில் இருக்கும் எந்த உண்மையான விஷயமும் இல்லை).
நவீன பார்வை அறிவியல் இதை ஆதரிக்கிறது என்று சர்ல் வாதிடுகிறார். ஒளி வரிசைகள் நமது விழித்திரையில் விழுகின்றன, நமது மூளை ஒரு உணர்வு பிரதிநிதித்துவத்தை உருவாக்குகிறது. இந்த பிரதிநிதித்துவம் உலகத்துடன் பொருந்தினால், நாம் துல்லியமாக உணர்கிறோம். இல்லையென்றால், நாம் தவறாக உணர்கிறோம். ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், செயல்முறை என்பது வெளி உலகத்துடன் நேரடி ஈடுபாடு.

விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள்
ஜான் சர்லின் தத்துவம் எப்போதும் விமர்சனமற்றதாக இருந்ததில்லை. அவரது மிகவும் பிரபலமான சீன அறை வாதத்தை பலர் சவால் செய்தனர்; குறிப்பாக சில செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியாளர்கள், அவர் AI அமைப்புகளின் சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சியின் திறனைப் புரிந்துகொள்ளத் தவறியவர் என்று கருதினர். மேலும், அவரது உயிரியல் இயல்புவாதக் கோட்பாடும் விமர்சகர்களை ஈர்த்தது. சில தத்துவவாதிகள் அவரது கோட்பாடு மிகவும் கட்டுப்படுத்தக்கூடியது என்று கருதினர். அதாவது, உணர்வுக்கு ஏன் ஒரு உயிரியல் மூளை மட்டுமே தேவை? சில சிக்கலான செயற்கை அமைப்புகளால் உணர்வை அடைய முடியாதா? என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பினர். சர்லின் பிற்காலப் பணிகளும் விமர்சனங்களைச் சந்தித்தன. உதாரணமாக, அவரது 2015 புத்தகம் Seeing Things as They Are இல், அவர் நவீன உணர்வு உளவியலின் பணிகளைப் போதுமான அளவு ஈடுபடுத்தவில்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். அவர் “நாற்காலியிலிருந்து” (From the Armchair), அதாவது அனுபவ ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுடன் போதுமான ஈடுபாடு இல்லாமல், தனது கோட்பாடுகளை உருவாக்கினார் என்று வாதிடப்பட்டது. உணர்வு என்பது செரிமானம் அல்லது ஒளிச்சேர்க்கை போன்ற ஒரு இயற்கையான வகை என்று சர்ல் வலியுறுத்தினால், அவர் அதை அனுபவ ஆராய்ச்சியின் தனிமையில் ஆய்வு செய்ய முடியாது. எனவே, சர்ல் ஒரு இயல்புவாதியாக இருக்க விரும்பினாலும், போதுமான அறிவியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபடவில்லை என்ற ஒரு முக்கிய முரண்பாடு அவர் மீது வைக்கப்பட்டது.
இந்த அறிவுசார் விமர்சனங்களுக்கு அப்பால், சர்லின் பணி ஒரு சமூகவியல் விமர்சனத்தையும் எதிர்கொண்டது. அவரது படைப்புகளில் பெரும்பாலும் ஆண் தத்துவவாதிகள் மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டனர் மற்றும் அவர்களுடனேயே அதிகம் உரையாடப்பட்டது. ஜி.இ.எம். அன்ஸ்கோம்ப் (G.E.M. Anscombe), கேத்லீன் அட்கின்ஸ் (Kathleen Atkins), சுசன்னா சீகல் (Susanna Siegel) போன்ற பெண் தத்துவவாதிகளின் முக்கியமான பங்களிப்புகள் குறிப்பாக உணர்வு மற்றும் மனதின் தத்துவத் துறைகளில் பெரும்பாலும் சர்லால் அங்கீகரிக்கப்படவில்லை.

சர்லின் சிந்தனை மரபு: துறைகள் தாண்டிய தாக்கம்
ஜான் சர்லின் தாக்கம் பல துறைகளில் இன்றும் வலுவாகத் தொடர்கிறது. அவரது கருத்துக்கள் இன்றும் அடிப்படை விவாதங்களைத் தூண்டுகின்றன. சர்லின் பேச்சு செயல் கோட்பாடு நடைமுறை மொழியியலில் ஓர் அடிப்படை கருத்தாக மாறியுள்ளது. மொழி ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தொடர்பு நிபுணர்கள் அனைவரும் சர்லின் யோசனைகளைப் பயன்படுத்துகின்றனர். மொழி வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல, அது ஒரு சமூகச் செயல் என்ற அவரது நுண்ணறிவு, மொழி கற்பித்தல் மற்றும் பயன்பாட்டு முறையை மாற்றியது. சீன அறை வாதம் (Chinese Room Argument) செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் ஒரு தவிர்க்க முடியாத விவாதப் பொருளாக இன்றும் உள்ளது. இன்று, ChatGPT மற்றும் பிற பெரிய மொழி மாதிரிகள் வியக்கத்தக்க திறன்களைக் காட்டினாலும், சர்லின் கேள்வி இன்னமும் பொருத்தமானது: இந்த அமைப்புகள் உண்மையில் “புரிந்துகொள்கின்றனவா” அல்லது வெறும் வடிவங்களைப் பொருத்துகின்றனவா? சர்லின் வாதம் AI பாதுகாப்பு மற்றும் AI நெறிமுறைகள் பற்றிய விவாதங்களில் மையமானது. சில AI ஆராய்ச்சியாளர்கள் அவரது வாதத்தை நிராகரித்தாலும், அது AI இன் வரம்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளைப் பற்றி தெளிவாக சிந்திக்க உதவியது என்று பலர் ஒப்புக்கொள்கிறார்கள். பிரக்ஞை (Consciousness) மற்றும் நோக்கம் (Intentionality) பற்றிய சர்லின் யோசனைகள் அறிவாற்றல் அறிவியலில் கோட்பாடுகளைப் பாதித்துள்ளன. உயிரியல்புவாதம் (Biological Naturalism) மனம்-உடல் பிரச்சினை பற்றிய விவாதங்களை வடிவமைத்துள்ளது. பிரக்ஞை இயற்பியல் உலகின் பகுதியாக இருந்தாலும், அதற்குத் தனித்துவமான, அகநிலைப் பண்புகள் உள்ளன என்ற அவரது வாதம் பிரக்ஞை ஆய்வுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக யதார்த்தத்தைப் பற்றிய சர்லின் கோட்பாடு, சமூகவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சட்டக் கோட்பாடு போன்ற துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, பணம் எவ்வாறு மதிப்பைப் பெறுகிறது, அரசாங்கங்கள் எவ்வாறு அதிகாரத்தைப் பெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அவரது யோசனைகள் உதவுகின்றன. “கூட்டு நோக்கம்” (Collective Intentionality) பற்றிய அவரது கருத்து, குழு நடத்தை மற்றும் சமூக இயக்கங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது.
தத்துவத் துறையில், சர்லின் மரபு சிக்கலானது. அவர் பல ஆதிக்கம் செலுத்தும் பார்வைகளை சவால் செய்தார், புதிய விவாதங்களைத் தூண்டினார், மற்றும் அடுத்த தலைமுறை தத்துவவாதிகளுக்குத் தைரியமாகச் சிந்திக்க ஊக்குவித்தார். சர்ல் தனது கடினமான யோசனைகளை தெளிவான மொழியில் பொது மக்களுக்காக எழுதியதன் மூலமும், நவீன தத்துவத்தை அணுகக்கூடியதாக மாற்றியதிலும் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது.
மேலும்:

முந்தைய தொடர்புள்ள பதிவுகள்:
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள்
- மனம், மூளை மற்றும் பிரக்ஞை
- நுண்ணறிவு – நூல் அறிமுகம்
- உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?
- கணினியியலில் சிந்தனைச்சோதனைகள்
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

