தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2

தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களில் இருந்து தம்மைக் கவர்ந்த கதாநாயகிகளை பிரபல பெண் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்து நூல்கள் எழுதியுள்ளதைக் காணமுடிகிறது. இங்கும் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவதைக் காண்கிறோம். 

‘ஆ பாத்ர மதுரம்’:-

டாக்டர் முக்தேவி பாரதி ‘ஆ பாத்ர மதுரம்’ (அந்த கதாபாத்திரம் இனிமையானது) என்ற பெயரில் ‘நதி’ என்ற மாத இதழில் (2009 – 2013)  நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஐம்பது கட்டுரைகள் எழுதினார். தெலுங்கு நாவல் இலக்கியத்திலிருந்து தனித்துவம் மிக்க பெண் கதாநாயகிகளைப் பொறுக்கி எடுத்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார். அதனை    2014 ல் ‘விசாலாந்திரா’ பதிப்பகம் நூலாக வெளிக்கொணர்ந்தது. அதில் சில ஆண் எழுத்தாளர்களின் நாவல்களையும் மதிப்புரைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நூலில்  நாவலாசிரியர்களைப் பற்றிய குறிப்பு எதுவும் ஆசிரியர் தரவில்லை. நேரடியாகக் கதாநாயகிகளை மதிப்பிடுகிறார். 

“எளிய எழுத்துக்களைக் கொண்டு பெரிய படைப்புகளைச் செய்பவர் முக்தேவி பாரதி. விரிந்த எல்லைகளைக் கொண்ட தெலுங்கு புதினங்களில் இருந்து பெண் கதாபாத்திரங்களை அவர்களின் மகத்துவம் மாறாமலும் எழுத்தாளர்களின் நோக்கம் தெளிவாக வெளிப்படுமாறும் மிகச் சுருக்கமாகவும் முழுமையாகவும் அறிமுகம் செய்கிறார்” என்று கூறி இந்த நூலில் இருக்கும் சில கதாநாயகிகளின் மதிப்பீடுகளை எடுத்துகாட்டித் தன் முன்னுரையை முடிக்கிறார் சி. ஆனந்தராமம் என்ற பெண் எழுத்தாளர். டாக்டர் சி. ஆனந்தராமம் அறுபது நாவல்களும் நூறு சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவருடைய ஒரு நாவலின் கதாநாயகியும் இந்த நூலில் மதிப்பிடப்படுகிறார். 

இதில் வெளிப்படும் கதாபாத்திரங்களை சிருஷ்டித்த கதாசிரியர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. ‘வாசிரெட்டி’ சீதாதேவி மார்க்சிஸ்ட் பெண் எழுத்தாளராகப் புகழ் பெற்றவர். அவர் எழுதிய சமூக நாவல் ‘ம்ருக த்ருஷ்ண’ (கானல் நீர்). இந்த நாவலின் கதாநாயகி சுனந்தா, தான் கட்டிய ஆகாயக் கோட்டைகளின் திரை விலகியபோது, கசப்பான உண்மைகளை விழுங்குகிறாள். ‘அழகும் கவர்ச்சியும் இருந்தால் போதும், பெண்களுக்கு பணக்காரக் கணவன் கிடைத்து விடுவான் என்பது பொய். அழகாக இருக்கிறேன் என்ற எண்ணத்தால் ஆடம்பரத்தின் பின்னால் ஓடுவது கானல் நீரை நோக்கி ஓடுவது போன்றது’ என்ற கருப்பொருளை எடுத்துக் கொண்டு விஸ்தாரமாக சித்தரித்துள்ளார் கதாசிரியர். அத்தகைய சித்தரிப்பைச் செதுக்கி எடுத்தாற்போல் ஒரே கட்டுரையில் வடித்துள்ளார் முக்தேவி பாரதி. இந்த நாவல் 1992 ல் அதே பெயரில் திரைப்படமாக வந்தது. 

‘அரவிந்தா’ எழுதிய சிறந்த நாவல் ‘அவதலி கட்டு’ (மறுகரை). ஒவ்வொரு மனிதனும் இக்கரையில் வாழ்க்கையைத் தொடங்கி அக்கரைக்குச் செல்ல வேண்டியவனே. அத்தகைய மறுகரை எப்படி இருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஆனால் மறுகரை நாவலில் லீலா என்ற கதாநாயகி தன் வாழ்வில் எதிர்ப்படும் சூறாவளிகளைச் சமாளித்து ஆன்ம பலத்தோடு, வாழும் காலத்திலேயே அக்கரையைச் சென்றடைகிறாள். இதனையே ஜீவன் முக்தி என்பார்கள் போலும், லீலா, சாரதா என்ற இரு கதாபாத்திரங்களின் பன்முகத் தன்மைகளை விவரித்து, லீலாவின் கதாபாத்திரத்தின் சிறப்பை பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துகிறார் முக்தேவி பாரதி. கணவனின் கைகளில் லீலா அடைந்த அவமானத்தையும், அதே கணவனுக்கு இரண்டாவது மனைவி மூலம்  பிறந்த மகனை வளர்த்து ஆளாக்க முடிந்த லீலாவின் உயர்ந்த உள்ளத்தையும் சிறப்பாக வாசர்களின் முன் வைத்து மதிப்பிடுகிறார்.  

ஸி. ஆனந்தராமம் எழுதிய ‘சாரதா அல்லது நா சிருஷ்டி குருதே காவ்யம்’ என்ற நாவல்  ஒரு பரிசோதனை முயற்சி. உண்மையில் இந்த நாவலில் சொல்லும்படியாக கதை  எதுவுமில்லை. கதாநாயகி சாரதா மிகவும் பலவீனமானவள். அந்தக் கதாபாத்திரத்திடம் முக்கியமான மூன்று குணங்கள் இருந்தன. மனப்போராட்டம், இதயத்தில் ‘ராவி’ என்ற மனிதனிடம் கொண்ட காதல், எழுத்தாளர் ஆக வேண்டுமென்ற ஆசை. இந்த மூன்றில் மூன்றாவது மட்டுமே வலிமையானதாக மாறியது. அவளுடைய வாழ்க்கையில் எழுத்தாளர் ஆக வேண்டுமென்றால் எப்படிப்பட்ட மன எழுச்சி இருக்க வேண்டும், அதற்கும் படைப்புக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகளும் அதற்கான பதிலைத் தேடுவதும் சாரதவைத் தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தன. கதைக்கரு அத்தனை வலிமையாக இல்லாத இந்த நாவலின் காதபாத்திரத்தை அறிமுகம் செய்வது எளிதல்ல. ஆனால் முக்தேவி பாரதி சாரதாவின் உள் மனத்தையும் வெளிச் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி அழகாக வாசர்கர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.  

‘ராச்சகொண்ட’ விஸ்வநாத சாஸ்திரி (ராவி சாஸ்திரி) என்ற ஆண் எழுத்தாளர் எழுதிய மார்க்சிசம் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘ரத்தாலு ராம்பாபு’ என்ற நாவல். பிரத்தியேகமாக பெண்களின் பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு இந்த நாவலில் ரா.வி. சாஸ்திரி விரிவாக விவாதிக்கிறார் என்று கூறலாம். இவருடைய கதாபாத்திரங்கள் அனைவரும் அனாதைகள், துரதிருஷ்டசாலிகள், விதியால் வஞ்சிக்கப்பட்டவர்களே. ‘ரத்தாலு’ என்ற கதாநாயகியும் அப்படிப்பட்டவர்களில் ஒருத்தியே. அனாதையாக வாழ்க்கையைத் தொடங்குகிறாள். பகற்கனவு கண்டு ஆசை வலையில் சிக்கிச் சேரக் கூடாத வீட்டில் தஞ்சமடைகிறாள். பெண்களின் உடலைக் கொண்டு வியாபாரம், உதவியற்றவர்களுக்கு துரதிருஷ்டசாலிகளே துணை. அங்கு ரத்தாலுவைப் போன்ற மற்றொரு இளம்பெண் ரத்தாலுவுக்கு உதவி செய்கிறாள். ரத்தாலு வெளியே வருகிறாள். நாகரீகக் காட்டில் தன்னந்தனியாக ஒரு இளம் பெண். ஏதாவது வேலை செய்து பிழைக்கலாமென்றாலும் இயலாத சூழ்நிலை. ராம்பாபுவை எந்த எதிர்பார்ப்புமின்றிக்  காதலித்து முடிந்த அளவு உதவி புரிந்த போதும் பலனளிக்காத காதல். ‘ராவி சாஸ்திரி’ படைத்த இந்த ரத்தாலுவையும் அந்த அடித்தட்டு சமூகத்தையும் வாசாகர்களின் முன்னிறுத்தி அறிமுகம் செய்கிறார் முக்தேவி பாரதி. 

தெலுங்கு நாவல் இலக்கியத்தில் பெண்ணிய வாதத்திற்கு ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. தெலுங்கு பெண்ணிய இலக்கியத்திற்கு மூலஸ்தம்பம் என்று ஓல்காவைக் கூறிவிடலாம்.  “இவர் எழுதிய ‘ஸ்வேச்சா’ கல்கத்தா காளியின் நாவை விட பயங்கரமானவள்” என்கிறார் ‘சலம்’ என்ற பிரபல ஆண் எழுத்தாளர்.

பெரும்பாலானோர், ‘நாலு பேர் போகும் பாதையில் நடப்போம்’ என்று நினைப்பார்கள். தனக்கென்று ஒரு பாதையை எற்படுத்திக்கொள்பவர் குறைவே. ஓல்காவின் ‘ஸ்வேச்சா’ அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டது. பெண்களுக்கு மட்டுமே ஏன் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள் என்ற கேள்வியே இந்த நாவலுக்கான வித்து. இந்த நாவலின் கதாநாயகி சுதந்திரத்திற்காகவே திருமணம் புரிந்து கொள்கிறாள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு வேறு விதமான கட்டுப்பாடுகள். வேலை பார்த்து சம்பாதித்தாலும் கட்டுப்பாடுகளுக்குக் குறையவில்லை. இறுதியில் முன்னேற்ற சங்கத்தில் சேர்ந்தாலும் சக முன்னேற்றவாதியான இளைஞன் தன் மனைவி மீது காட்டும் அதிகார தோரணையைப் பார்த்து மனம் குமைந்து போகிறாள். சட்டமும் ஆண்களின் பக்கம்தான் நிற்கிறது. தன்  பிள்ளைகள் மீது பெண்ணுக்கு உரிமை இல்லையா? பெற்ற பிள்ளையைக்கூட விட்டு விட்டு சுதந்திரதிற்காக வீட்டைத் துறந்து வெளியேறுகிறாள் கதாநாயகி ஸ்வேச்சா. 

மற்றுமொரு நல்ல நாவல் ‘பீனாதேவி’ எழுதிய ‘புண்ணிய பூமியே கண் திற’. பீனாதேவி மார்க்சிஸ்ட் எழுத்தாளர். கதாநாயகி ராஜம்மா விவசாயி வீட்டுப் பெண். கரும்புப் பயர், கடன், வட்டி, வயல்களை இழந்து கூலி வாழ்க்கை. உடலை விற்கவும் துணிந்த சூழல், கொலைக் குற்றம். இறுதியில் ராஜம்மாவுக்கு ஒரே ஒரு ஆசை. ‘என்னைச் சீக்கிரமாக தூக்கிலிடுங்கள்’ என்கிறாள். புண்ணிய பூமி கண் திறந்ததா? ஏழை விவசாயிகளின் துயரங்களுக்கு விடிவு பிறந்ததா? சம சமுதாயம் எட்டாக் கனிதானா? இந்தக் கேள்விகளுக்கு பதிலை வாசகர்கள் தேட வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறது முக்தேவி பாரதியின் அறிமுகம். இந்த நூலில் 15 ஆண் எழுத்தாளர்கள், 35 பெண் எழுத்தாளர்களின் நாவல் நாயகிகளை மதிப்புரை செய்துள்ளார்.  

முக்தேவி பாரதி படைப்பாற்றல் மிக்க எழுத்தாளராக, நவீன நாவல்களின் பெண் கதாபாத்திரங்களை வாசகியாக உள்வாங்கி, விமரிசகராக ஆராய்ந்து, அந்தந்த பாத்திரங்களின் உள் மற்றும் வெளி வடிவங்களை வாசகர்களின் மனக்கண்களின் முன்னால் நடமாட விடுகிறார். படிக்கும் வழக்கம் குன்றியுள்ள இந்த நவீன காலத்தில் முக்தேவி பாரதி கதாபாத்திரங்களை சுருக்கமாகப் பரிச்சயம் செய்து வாசகர்களைப் படிக்கச் செய்து, அவர்களிடம் முழு நாவலையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறார். நலிவடைந்துள்ளது போலத் தோன்றும் நாவல் இலக்கியத்திற்கு இது ஒரு தூண்டுக்கோல்.  

‘கதாமதுரம்’:-

நெச்செலி இணைய மாத இதழ் கடந்த நான்கு ஆண்டுகளாக தெலுங்கு சிறுகதைகளின் கதாநாயகிகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. முதலில் ஜகதாத்ரி என்ற பெண் எழுத்தாளரும், அதன் பிறகு தமயந்தி என்ற பெண் எழுத்தாளரும், தொடர்ந்து டாக்டர் சி.ஹெச். சுசீலா என்ற பெண் எழுத்தாளரும் இந்தச் சிறப்பான பணியைச் செய்து வருகிறார்கள். 

‘கதாமதுரம்’ என்ற பெயரில் இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களுடைய சிறுகதைகளின் கதாநாயகிகள் தொடர்ந்து முப்பத்திரண்டு மாதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தற்போது கடந்த இருபத்தைந்து மாதங்களாக ‘கதாமதுரம் – ஆ பாத்த (பழைய) மதுரம்’ என்ற பெயரில் பழங்கால பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை நாயகிகளின் அறிமுக வரிசை வெளியாகி நம்மை வியக்க வைக்கிறது.  

அறிமுகம் செய்யும் எழுத்தாளர்கள் எழுதிய முன்னுரைகளே பல கதைகளைப் பேசுகிறது. அதோடு மதிப்புரைகளின் கீழே அந்தந்தக் கதைகளையும் கொடுத்திருப்பது வாசகர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.  

‘கதாமதுரம்’ தொடரில் நாயகிகளை அறிமுகம் செய்த எழுத்தாளர் ஜகதாத்ரி பற்றி முதலில் அறிவோம். இவர் பெயர் ‘பூசர்ல’ ஜகதாத்ரி. எம்.ஏ., (ஆங்கிலம்), ஆந்திரா யுனிவர்சிடி கோல்ட் மெடலிஸ்ட்.  எம்.ஏ., (ஃபிலாசஃபி), எம்.எஸ்.ஸி., (சைகாலஜி), எம்.எட்., பட்டங்கள் பெற்றுள்ளார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் படைப்புகளைச் செய்துள்ளார். ‘சஹசரணம்’ என்ற கவிதைத் தொகுப்பு 2014 ல் வெளியானது. இந்தக் கவிதை நூலுக்கு ‘போதூரி மாணிக்யம்மா’ நினைவுப் பரிசு 2015 ல் கிடைத்தது. அமெரிக்காவில் இயங்கும் ‘அஜோவிபோ கந்தாளம்’ பதிப்பகத்தார் ‘சரிலேரு நீக்கெவ்வரு’ (உனக்கு நிகர் யாருமில்லை) என்ற விருதை 2017 அளித்து ஜகதாத்ரியை கௌரவித்தனர். ‘விசாலாட்சி’, ‘சினுக்கு’ (மழைத்தூறல்) என்ற மாத இதழ்களில் தொடர்கள் எழுதி வருகிறார். ஆங்கில பத்திரிக்கையான ‘ஹன்ஸ்’ இண்டியாவில் கட்டுரைகளும் தொடர்களும் எழுதி வருகிறார். 

‘நெச்செலி’ இணைய இதழில் ‘கதா மதுரம்’ தொடருக்கு இவர் எழுதியிருக்கும் முன்னுரையைப் பார்ப்போம். “நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்கள் இருபதாம் நூற்றாண்டில் படைத்த சிறுகதைகள் பல உள்ளன. அவற்றுள் பெண் எழுத்தாளர்கள் மட்டுமின்றி ஆண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் இருந்தும் பெண்களைப் பற்றிய எழுதிய கதைகளை இந்த தொடரில் பார்க்கப் போகிறோம். அதோடு அந்தந்த கதைகளையும் கீழே அளிக்கிறோம். தெலுங்கு இலக்கியத்தில் பலப் பல கதைகள் வந்துள்ளன, வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பிற மொழி இலக்கியங்களைப் போலின்றி இவை உலக மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்படுவதில்லை. முக்கியமாக ஆங்கிலத்திற்குச் செல்வது மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் உலக அளவில் யாருக்கும் தெலுங்கு இலக்கியங்களைப் பற்றித் தெரிவதில்லை. மீதி உள்ள இடங்களின், தேசங்களின் பெண் எழுத்தாளர்களைப் போலவே நம் பெண் எழுத்தாளர்களும் பெண்களின் சகல விதமான பிரச்சினைகளைப் பற்றியும் குரல் கொடுத்து, கலம் பிடித்து எழுதி வருகிறார்கள். இப்படிப்பட்ட கதைகளின் மொழிபெயர்ப்புகளைப் பதிப்பிக்கும் வகையில் மத்திய சாகித்திய அகாடமி போன்ற சில அமைப்புகள் முயற்சித்து வந்தாலும் இன்னும் பரவலாக மொழிபெயர்ப்புகள் நடந்து நம் கதைகள் பிற  மொழி பேசும் மக்களிடம் செல்ல வேண்டும். அப்போதுதான் தெலுங்கு இலக்கியத்திற்கு நல்ல கௌரவம் கிடைக்கும். 2019 ம் ஆண்டு ‘ஜோகோ அல்ஹர்த்தி’ என்ற பெண் எழுத்தாளர் ‘மேன்புக்கர்’ அவார்டு பெற்றுள்ளார். அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘செலஸ்டியல் பாடீஸ்’ என்ற நாவலுக்கு இந்தச் சிறந்த விருது கிடைத்துள்ளது. அரபு நாட்டுப் பெண்களின் வாழ்க்கையைக் கதை களமாகக் கொண்டு எழுதப்பட்டதால் இந்தப் படைப்பு மேலும் சிறப்புடையதாகிறது. அதே போல் பிற நாடுகள் மற்றும் பிற மொழிகளின் பெண் எழுத்தாளர்களின் கதைகளின் மொழிபெயர்ப்பும் தொகுப்புகளாக வருகின்றன அதே போல் தெலுங்கு பெண் எழுத்தாளரகளின் கதைகளும் பரவலாக வரவேண்டும். இது ஒரு சமுதாயத் தேவை. இந்தத் தொடரில் தெலுங்கு மொழியின் பெண் எழுத்தாளர்களுடைய சிறுகதைகளைப் பார்ப்போம். அவற்றை இளைய தலைமுறை வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்போம். அதுவே இதன் நோக்கம். இந்தத் தொடரில், பெண்களின் பிரச்சினைகளைக் கதைக் களமாகக் கொண்ட கதைகளை அறிமுகம் செய்து விவாதிப்போம்” என்று எழுதுகிறார். 

கதைகளின் அறிமுகத்தோடு எழுத்தாளர்களின் அறிமுகமும் இத்தொடரில் நாம் அறியக் கிடைக்கிறது. ‘நெச்செலி கதாமதுரம்’ தொடரில், ஜகதாத்ரி அறிமுகம் செய்த மூன்று கதைகள் என்ன என்று பார்ப்போம்.  

அண்மையில் காலமான ‘அப்பூரி’ சாயாதேவி எழுதிய ‘தட் ஈஸ்’ என்ற கதையின் மதிப்புரையோடு தொடரைத் தொடங்குகிறார் ஜகதாத்ரி. அடுத்து கே. ராமலட்சுமி எழுதிய ‘ஸ்வேச்சையில் இருந்து கூட்டிற்குள்’ என்ற கதையும், மூன்றாவதாக ‘சாகண்டி துளசி’ எழுதிய ‘ஆஷ்ட்ரே’ என்ற சிறுகதையும் வருகின்றன. 

ஜகதாத்ரியைத் தொடர்ந்து ஆர். தமயந்தி என்ற பெண் எழுத்தாளர் 29 எழுத்தாளர்களின் கதைகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். ஆர். தமயந்தியை பற்றி அறிந்து கொள்வோம்.  

ஆர். தமயந்தி, பல இதழ்களில் துணை ஆசிரியராகப் பணி புரிந்த அனுபவம் கொண்டவர். நூறுக்கு மேல் சிறுகதைகள், பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நூல் மதிப்புரைகள், சினிமா ரிவ்யூக்குள், பிரபலங்களின் நேர்காணல்கள் ஆகியவற்றில் ஈடுபடுவடுவது இவருக்கு விருப்பமானதாக உள்ளது. கடுமையான விமரிசனங்களால் இலக்கியவாதிகளை அச்சுறுத்துவதை விட படைப்பிலிருக்கும் நல்ல கருத்துக்களைப் பாராட்டுவது சிறந்தது என்பது இவருடைய அபிப்பிராயம். குறைகள் இருந்தால் நல்லவிதமாக எடுத்துரைப்பது, சிறந்த படைப்புகள் கிடைப்பதற்கும் படிப்பதற்கும் வாய்ப்பளிக்கும் என்றும், அதுவே தான்  செய்ய நினைக்கும் இலக்கியச் சேவை என்றும் கூறுகிறார். ‘கதை இல்லாத கதை, இந்தக் கதை ஏன் பிடித்ததென்றால், நான் வாசித்த கதை’ ஆகிய பல தலைப்புகளில் ‘சாரங்கா, வாக்கிலி சாஹித்யம்’ போன்ற இணைய இதழ்களில் தொடர்கள் எழுதியுள்ளார். பல சிறுகதைகள் பிரபல தெலுங்கு வார, மாத இதழ்களில் பிரசுரமாகி உள்ளன. ஆர். தமயந்தி, தற்போது அமெரிக்கா, வட கரோலினாவில் வசித்து வருகிறார். 

இப்போது ‘கதாமதுரம்’ தொடருக்கு இவர் எழுதிய முன்னுரையைப் பார்ப்போம். “சிறுகதை இலக்கியத்தில் நான் படித்த பெண்களைப் பற்றி ஏன் எழுதத் தொடங்கினேன் என்றால்” என்று கூறி முன்னுரையைத் தொடங்குகிறார் ஆர் தமயந்தி. 

“எந்தக் கதையைப் படித்தாலும், யாருடைய கதையைக் கேட்டாலும் அதில் பெண் கதாபாத்திரம் என்ன என்று கவனமாகப் பார்த்து அந்தப் பாத்திரத்தை ஆராய்வது என் வழக்கம். இந்தக் கவனிப்பால் பல பெண்களின் மேன்மையை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நாம் முன்பென்றும் அறிந்திராத பெண்களும், அவர்களுடைய இயல்புகளும் கதைகளின் மூலம் அறிமுகமாகி, என்னோடு உரையாடுவதும், உயிரோடு நினைவில் நிற்பதுமாக சிறந்த அனுபவத்தைத் தருகிறார்கள். அதோடு, சில கதாநாயகிகள் என்னை வருத்தத்தில் ஆழ்த்தி விடுவதுமுண்டு. சோகக் கதாநாயகிகள் கனவில் கூட மறக்க இயலாதபடி, நினைவில் நின்று விடுகிறார்கள். ஏனென்றால் கதை வெறும் கற்பனை மட்டுமேயல்ல. உண்மையோடு கூடிய கற்பனையாக இருப்பதால் அந்தக்  காரெக்டர்களுக்கு உயிரோடு கூடிய ஒரு உண்மை வடிவம் இருந்தே தீரும். அந்த உண்மையானப் பெண் வடிவம் யார் என்பதை கதாசிரியர் மட்டுமே அறிவார். எழுத்தாளரின் கேமரா கண்கள் அத்தனை சூட்சுமமானவை. சமுதாயத்தில் நடக்கும் பெரும் மாற்றங்கள், பெண்களின் அந்தரங்களில் சுழலும் சூறாவளி போன்ற கொந்தளிப்புகள் போன்ற எல்லாவற்றையும் நம்மில் ஏற்றிவைக்கும் சிறந்த கருவி என்ன வென்றால் அது கட்டாயமாக சிறுகதை இலக்கியமே தவிர வேறில்லை என்று பேரிகை முழங்கிக் கூறி விடலாம். எந்தக் கதையை எழுத்தாளர் எழுதினாலும் அதில் கட்டாயம் பெண் கதாபாத்திரம் இடம் பெற்றும். அந்தப் பாத்திரம் சிறியதானாலும், அதன் முக்கியத்துவம் என்ன, எந்தக் காலத்தைச் சேர்ந்தது, அந்தப் பெண் எந்தத் திசையில் சிந்திக்கிறாள் போன்றவையே எனக்கு முக்கியம். அந்த அம்சங்களை முதன்மையாகக் கொண்டே இந்தத் தொடரை எழுதுகிறேன். உண்மையில் எனக்குத் தோன்றிய இந்த யோசனையை ‘நெச்செலி’ இதழாசிரியர் டாக்டர் கே. கீதாவிடம் பகிர்ந்தபோது, அவர் உடனே தன் அனுமதியைத் தெரிவித்து என்னை உற்சாகப்படுத்தினார். ‘நெச்செலி’ இதழைக் களமாக்கிக் கொண்டு உகளோடு உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த்த டாக்டர் கே. கீதாவுக்கு நன்றிகள். ஒவ்வொரு மாதமும் ஒரு கதையோடு, அந்தக் கதையின் பெண் பாத்திரங்களை அறிமுகம் செய்து, அவர்களின் விந்தையான ஏக்கங்கையும், உயர்ந்த சுபாவங்களையும் ஒன்று திரட்டி உங்களிடம் தருகிறேன்” என்று ஆர் தமயந்தி எழுதுகிறார். அவர் ‘கதாமதுரம்’ தொடரில் 29 சிறுகதைகளை அறிமுகம் செய்துள்ளார்.   

கதாமதுரம் – ‘ஆ பாத்த (பழைய) மதுரம்’:- 

அடுத்து, சிறுகதை நாயகிகளை அறிமுகம் செய்யும் பணியை டாக்டர். ஸி.ஹெச். சுசீலா எடுத்துக் கொண்டார். இவர் 1900 – 1950 இடைப்பட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்த 25 பெண் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைகளை மதிப்பிட்டுள்ளார். பழைய எழுத்தாளர்களின் அறிமுகம், கதைச் சுருக்கம், மதிப்பீடு என்ற வரிசையில் எழுதியுள்ளார். சிறுகதைகளை இந்தத் தொடரோடு இணைக்கவில்லை.   

முதலில் எழுத்தாளர் டாக்டர். ஸி.ஹெச். சுசீலா பற்றிப் பார்ப்போம்.  

பேராசிரியர் டாக்டர். ஸி.ஹெச். சுசீலா, விஸ்வநாத சத்தியநாராயணாவின் ‘கின்னெரசானி’ பாடல்களின் மீதி எம்ஃபில்., செய்தார். ‘முள்ளபூடி’ வேங்கடரமணாவின் இலக்கியப் படைப்புகளின் மேல் பி.ஹெச்.டி. செய்தார். யுஜிசி உதவியோடு மைனர் ரிசெர்ச் ப்ராஜெக்ட், மேஜர் ரிசெர்ச் ப்ராஜெக்ட் ஆகியவற்றைச் செய்தார். குண்டூர் அரசு பெண்கள் டிகிரி காலேஜில் நீண்டகாலம் பணி புரிந்தார். பின்னர் ஓங்கோல் செப்ரோலுவில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றார். ஆச்சார்ய நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தில் செனட் மெம்பராகவும், பாதுகாப்பு (டிஃபென்ஸ் எடுகேஷன்) கல்வி பி,ஏ. ஸ்பெஷல் தெலுங்கு முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘லெசன்ஸ்’ ரைட்டராகவும், எடிட்டராகவும் பணிபுரிந்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்துள்ளார். மாநில மகிளா கமிஷன் ஏற்பாடு செய்த நியூடெல்லி மாநாடுகளில் பங்கு பெற்றதோடு ஆகாஷவாணி, தூரதர்ஷன் நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். அரசாங்க, தனியார் அமைப்புகளில் ‘ரிசோர்ஸ்’ பர்சனாகப் பணிபுரிந்தார். தன் தந்தையார் பெயரால் நூல் விமரிசனத் துறையில் சிறந்து விளங்குபவருக்கு ‘அமரர் ஸி.ஹெச். லட்சுமி நாராயணா’ நினைவு இலக்கிய விருதைக் கடந்த மூண்டு ஆண்டுகளாக அளித்துவருகிறார். வரிசையாக, ‘கடியால ராம்மோகன ராவ், ‘ராச்சபாளெம்’ சந்திர சேகர் ரெட்டி, கே.பி. அசோக்குமார்’ ஆகியோருக்கு இந்த அவார்டை வழங்கினார். மாணவர்களை உற்சாகமூட்டும் பல நிகழ்சிகளை நிர்வகித்தார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்வதோடு, திருமலா திருப்பதி தேவஸ்தானம், அன்னமாச்சார்யா ப்ராஜெக்ட் ஆகியோரின் உதவியோடு அன்னமாசார்யா தேசிய மாநாடு ஏற்பாடு செய்து நடத்தினார். மாநில அரசின் நல்லாசிரியர் விருது, மதராஸ் தெலுகு அகாடமி விருது, என்.டி.ஆர். தெலுகு மகிளா விருது, இந்திராகாந்தி சேவா புரஸ்காரம், மதர்தெரசா விருது, பெண்ணிய எழுத்தாளினி விருது, விஸ்வநாத சத்தியநாராயணா இலக்கிய விருது, இலக்கிய விமரிசனத்தில் கவி சந்தியா சிகாமணி விருது, ‘கின்னெர ஆர்ட்ஸ் அண்ட் கொவ்வலி’ விருது போன்ற பல விருதுகள் இவரை வந்தடைந்தன. பல பத்திரிக்கைகளில் ‘பகடி’ எனப்படும் ‘பெரடி’களை எழுதியுள்ளார். ‘பெண்ணீயம், ஆண் எழுத்தாளர்கள்’ என்ற சுவாரசியமான விமரிசன நூலை எழுதியுள்ளார். இதுவரை இவருடைய பத்து நூல்கள் வெளியாகி உள்ளன. 

அடுத்து ‘நெச்செலி’ இணைய மாத இதழில் வெளிவந்த ‘கதாமதுரம் – ஆ பாத்த (பழைய) மதுரம்) தொடருக்கு டாக்டர். ஸி.ஹெச். சுசீலா எழுதிய முன்னுரையைப் பார்ப்போம். 

இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் தம் சக பெண்களை அறியாமையில் இருந்து விடுவிப்பதற்கு பெண் கவிஞர்களும் பெண் எழுத்தாளர்களும் இலக்கிய படைப்புகளைச் செய்தார்கள். ஐந்தாறு வகுப்புகள் வரைப் படித்து, திருமணமாகி குடும்பப் பொறுப்புகளோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இல்லத்தரசிகள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஆண், பெண் பாகுபாடுகளை அடையாளம் கண்டு அதுபற்றிச் சிந்தித்தார்கள். இலக்கியங்களைப் படைத்தார்கள். 

பெண் கல்வியின் தேவை, பெண் சுதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிக் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதினார்கள். நாடெங்கும் சுதந்திரப் போராட்டம் கிளர்ந்தெழுந்த நேரத்தில் தம்முடைய கணவன்மார்களோடு சேர்த்து தாமும் களத்தில் குதித்தார்கள். சிலர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தம் கணவன்மார்களுக்கு தைரியம் கூறி குடும்பப் பொறுப்பைத் துணிவோடு சுமந்தார்கள். 

இந்த நேரத்தில் பெண்கள் தேசத்திற்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு முன்பாகத் தம் தனிப்பட்ட விடுதலை முக்கியமென்று எண்ணினார்கள். குடும்பம், சமுதாயம், தேசம், அன்னியரிடமிருந்து விடுதலை போன்றவற்றின் மீது பரவலாக இலக்கியம் படைத்தார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்களும், பெண் எழுத்தாளர்களும் வரலாற்றின் நினைவுகளில் இருந்து காணாமல் போய் விட்டார்கள். விரல்விட்டு எண்ணக் கூடியவர்களை மட்டுமே இன்று நாம் அறிகிறோம். 

முக்கியமாக பெண் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றித் தேடிய போது பலருடைய பெயர்கள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களில் பெரும்பாலோரின் படைப்புகள் கிடைப்பதில்லை. கிடைத்தவரை, அன்றைய பெண் இலக்கியவாதிகளின் சிந்தனைத் திறன், தனிப்பட்ட சுதந்திரத்திற்காக அவர்கள் பட்டபாடு, மூட நம்பிக்கைக் சேற்றில் அழுத்திக் கொண்டிருந்த சமுதாயம் குறித்த அவர்களின் வேதனை ஆகியவற்றைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது. 

இந்திய விடுதலைக்குப் பிறகு பெண்கள் கல்வி கற்பதும் அவர்களுக்காக மேலும் பல பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படுவதும் நிகழ்ந்ததால் பெண் கல்வியும் வளர்ச்சியும் பெருகின. பெண் இலக்கியங்கள் பரவலாக வெளி வந்தன. தம் சக பெண்களுக்குச் கூறவந்த கருத்துக்களை வசீகரமான முறையில் எடுத்துரைக்க வேண்டும் என்ற முயற்சியில் சிறுகதைப் படைப்பு சிறந்தது என்று தீர்மானித்தார்கள். பத்திரிக்கைகளில் எழுதியதோடு சில பெண் எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டார்கள். 

இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அமிர்தோற்சவம் நடந்த நேரத்தில் தெலுங்கு மொழியில் பெண்களின் படைப்பாற்றலை பரிசீலிக்கும் தேவை உள்ளது என்று உணர்ந்து, அன்றைய பெண்கள் சிலருடைய கட்டுரைகளும் கவிதைகளும் சேகரிக்கப்பட்டு பிரசுரமாயின. 

சிறுகதைகளின் விஷயத்தில் உண்மையில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாயே முதல் கதை சொல்லியாக விளங்குகிறாள். படிக்காத தாய் கூட பிடிவாதம் பிடிக்கும் தன்  குழந்தையைச் சமாதானப்படுத்தத் தனக்குத் தெரிந்த கதைகளைக் கூறுகிறாள். தன்  கற்பனையையும் சேர்த்துக் கூறுகிறாள். இந்தக் கோணத்தில் யோசித்துப் பார்த்து,  ‘சிறுகதைகள் பெண்களின் சொந்தம்’ என்று கூறினால் ஆணாதிக்க உலகிற்குக் கோபம் வரலாம்.  

பெண்ணியம், பரவலாகத் தொடர்கின்ற இந்தக் காலத்தில் கவிதாயினிகளும், எழுத்தாளினிகளும் எல்லா வடிவுகளிலும் தம் எண்ணங்களையும், எதிர்கால ஆசைகளையும் தயக்கமின்றியும் எந்தவித அச்சமின்றியும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் 75 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளினிகளின் சிந்தனைகளும், ஆசைகளும் எப்படி இருந்தன? கதைகளில் எதுவரை தம் முற்போக்கு எண்ணங்களை வெளியிட்டார்கள்? என்ற ஆர்வத்தோடு அன்றைய சிறுகதைத் தொகுப்புகளை ஆராய்ந்து பார்த்தேன். ஏதோ சில காரணங்களால் இரண்டாவது பதிப்புக்குக் கொடுத்து வைக்காத பழைய நூல்கள் சிதையும் நிலையில் இருந்தன. எழுத்தாளினிகள் பெருமளவில் சிறுகதைகளை எழுதிக் குவித்தாலும் பெரும்பாலும் ‘பாத தூளி’, ‘கார்யேஷு தாசி’ போன்ற கதைகளே அதிகம் இருந்தன.   

சில கதைகள் பெண்ணின் ஆளுமை வெளிப்படும் விதமாக ஒளிவீசி ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின. ‘ஃபெமினிசம்’ என்ற சொல்லுக்கு ‘ஸ்த்ரீவாதம்’ (பெண்ணியம்) என்று பெயரிட்டு தெலுங்கு இலக்கியத்தில் எண்பதாவது தசாப்தத்தில் கவிதைகளும் கதைகளும் நாவல்களும் மிக அதிக அளவில் பரபரப்பாக வெளிவந்தன. இதே பெயரோடு இல்லாவிட்டாலும் அதற்கு முன்பே எழுத்தாளினிகள் சிலர் பெண்களின் தன்மானத்திற்கு இழுக்கு நேரும் பிரச்சினைகளைப் பெண்கள் தம் ஆளுமையால் எவ்வாறு தீர்த்துக் கொண்டார்கள் என்று விளக்கும் இலக்கியங்களைப் படைத்தார்கள்.  

முக்கியமாக இந்திய சுதந்திரத்திற்கு முன்பே சிறுகதை எழுத்தாளினிகள் அற்புதமான பெண் கதாபாத்திரங்களைப் படைத்து பெண்ணின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் கதைகள் எழுதியது ஓரளவு வியப்பையும் ஆனந்தத்தையும் அளிக்கிறது. மேலும், அன்றைய அரசியல், பொருளாதாரம், சமுதாயச் சூழ்நிலைகள் குறித்து பெண்களுக்கு இருந்த புரிதலையும் அடையாளம் காண வேண்டிய தேவை உள்ளது. அப்படிப்பட்ட நல முத்துக்களைப் போன்ற கதைகளின் விமரிசனங்களைப் பார்ப்போம்” என்று கூறி ஸி.ஹெச், சுசசீலா இருபத்தைந்து பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மாதம் ஒன்றாக ஆராய்ந்து அறிமுகம் செய்துள்ளார். 

‘நாரீ சாரின்ச்சின நவல’ (தெலுங்கு புதினப் பெண்கள்):

‘நெச்செலி’ தெலுங்கு இணைய இதழில் தொடர்ந்து நாற்பத்தைந்து மாதங்கள் வெளிவந்த ‘தெலுங்கு புதினப் பெண்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரைகள் பெண் எழுத்தாளர்களையும் அவர்கள் படைத்த பெண் கதாபாத்திரங்களையும் கொண்டாடுபவை. சிறந்த நூல் விமரிசகரான டாக்டர் ‘காத்தியாயனி வித்மஹே’ அவற்றை எழுதியுள்ளார். 

‘டாக்டர் காத்தியாயனி வித்மஹே’ காகதியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரிந்தார். இவர் பிறந்த இடம் வாரங்கல். தற்போதும் அங்கேயே வசிக்கிறார். கதைகள் கவிதைகள் விமரிசன நூல்கள் என்று 24 நூல்கள் பிரசுரமாகி உள்ளன. மேலும் 28  நூல்களுக்குத் தொகுப்பாசிரியராக பொறுப்பு வகித்தார். மனித உரிமை இயக்கத்திற்குத் துணையாக நிற்கும் இவர் ‘மக்கள் ஜனநாயக மேடை’ என்ற இயக்கத்தை அமைத்து அதன் செயலாளராக உள்ளார்.  

‘தெலுங்கு புதினப் பெண்கள்’ என்ற கட்டுரைத் தொடரில் பெண் எழுத்தாளர்களின் அறிமுகமும் அவர்கள் படைத்த நாவல்களின் பெண் கதாநாயகிகளின் அறிமுகமும் சிறப்பான முறையில் காணக் கிடைக்கிறது. அந்தத் தொடருக்கான முன்னுரை மிகவும் சுவாரசியமான ஒன்று. இந்தத் தொடரின் இருபத்து மூன்று கட்டுரைகள் சொல்வனம் இதழில் தொடராக வெளிவந்தன. ‘தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள்’ என்ற இந்த கட்டுரையில் இந்தத் தொடரைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது.     

அடுத்த பகுதியில் ‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்) என்ற நூறு சிறுகதைகளின் தொகுப்பில் பெண் எழுத்தாளர்கள் எவ்வாறு கொண்டாடப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். 

தெலுங்கு பெண் எழுத்தாளர்கள்

தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை ‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்)

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.