நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்கள் – பகுதி- 1

தெலுங்கில்: டாக்டர். சி.ஹெச். சுசீலா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் 

நவீன தெலுங்கு இலக்கியத்தில் பெண்ணியக் கருத்துகளை வெளிப்படுத்திய ஆண் எழுத்தாளர்கள் பலர் உண்டு. 

“வாகர்தா விவ ஸம்ப்ருக்தௌ வாகர்த ப்ரதிபத்தயே, ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ” என்று மகாகவி காளிதாசர் பிரார்த்தனை செய்தது போல, ‘வாக்’ (சொல்) இல்லாமல் ‘அர்த்தம்’ இல்லை. பொருள், சொல்லிலிருந்து வேறுபட்டு இருக்காது. இவை பரஸ்பரம் ஒன்றையொன்று சார்த்திருக்கின்றன. ஆதி தம்பதிகளான பார்வதியும் பரமேச்வரரும் எவ்வாறு அர்த்த நாரீஸ்வரராக பிரிக்கமுடியாத தம்பதிகளோ அதேபோல் ஆணும் பெண்ணும் பிரிந்து வாழ முடியாதவர்கள்.   

ஆணாதிக்க உலகத்தில் ஆணுக்கு சமமான இடம் பெறுவதில் பெண்ணுக்கு இருக்கும் வாய்ப்புகளை விவாதிக்கும் அரிதான மேடை பெண்ணியம். சிலர் இதனைப் ‘பெண் விடுதலை இயக்கம்’ என்றார்கள். அந்தச் சொற்களே விடுதலைக்குப் போராட வேண்டும் என்ற பொருளை அளிக்கிறது. மேலும் சிலர் ‘பெண் ஸ்வேச்சை இயக்கம்’ என்றனர். சிலர் ‘பெண் விமோசன இயக்கம்’ என்றனர். ஆனால் இலக்கு ஒன்றே. 

பெண்ணுக்குக் கல்வியறிவும், பொருளாதார சுதந்திரமும் இல்லாததால் அவர்கள் உதவியற்று நிற்க நேர்ந்தது. பெண் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய தேவை ஏற்பட்டது. 

பெண்கள் எத்தனை விதமாக, என்னென்ன இழந்து நிற்கிறார்கள் என்று ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த முயற்சியைச் செயல்படுத்துவதற்குப் பெண்ணிய எழுத்தாளர்கள் கலம் பிடித்தார்கள். குரல் கொடுத்தார்கள். பெண்களின் முக்கியத்துவம், முன்னுரிமை, பெண் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பொருளாதார சமத்துவம் போன்றவற்றைப் பற்றி எழுதி, இலக்கியச் செயல்பாடுகள் மூலம் தம் புரட்சிச் சங்கை முழங்கினார்கள். ஆணாதிக்க சமுதாயத்தின் கருத்தியலுக்குக் கடிவாளமிட்டு, பெண் விமுக்திக்கு வழி காட்ட வேண்டும் என்றும் நீதியும் நியாயமும் ஸ்வேச்சையும், சமத்துவமும் ஆண்களுக்கு நிகராக வேண்டும் என்றும் கேட்கத் தொடங்கினார்கள். இந்த இயக்கம், புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தேவையான பண்பாட்டுப் புரட்சியைத் தூண்டியது.  

“பெண் எழுத்தாளர்களோடு சேர்ந்து சில ஆண் எழுத்தாளர்களும் பெண்ணிய இலக்கியப் படைப்புகளை எழுதி வருகிறார்கள். அவர்களுடைய கருத்துகளை அறிமுகம் செய்து ஆராயும் இலக்கியம் வரவேண்டும்” என்று பிரபல இலக்கிய விமரிசகர் காத்யாயனி வித்மஹே கூறுகிறார். சில ஆண் எழுத்தாளர்கள், பெண்கள் எழுதிவரும் பெண்ணியக்  கருத்தியலோடு ஒன்றுபட்டு, பெண்களின் உணர்வுகளை மதித்து, பல படைப்புகளைச் செய்தனர். பெண்கள் மட்டுமே அன்றி அவர்களுக்குத் துணையாக ஆண் எழுத்தாளர்களும் தம் பங்கு உதவியை அனைவரும் ஏற்கும் விதமாக அளித்து வருகிறார்கள். அவற்றில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற அனைத்தும் உள்ளன. 

‘நவீன தெலுங்கு இலக்கியத்தில் ஆண் எழுத்தாளர்கள் படைக்கும் பெண்ணியம்’ என்ற தலைப்பில் இந்த கட்டுரை அமைகிறது.  நவீன காலத்தில் பெண்களின் வேதனை, கோபம் போன்ற உணர்வுகளைப் புரிந்து கொண்ட எழுத்தாளர்களான குரஜாட அப்பாராவ், குடிபாட்டி வெங்கடாசலம் (சலம்). கே. சிவாரெட்டி, பகவான், என்ட்லூரி சுதாகர், கொலகலூரி இனாக், பாபிநேனி சிவசங்கர், சையத் சலீம் முதலான பிரபல கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளை இங்கு ஆராய்வோம். 

1. குரஜாட அப்பாராவ் – (1862-1915):

பெண்களின் முன்னேற்றத்திற்குக் கங்கணம் கட்டிக் கொண்ட பண்பாடுள்ளவர்களுள்  இலக்கியத்தை ஆயுதமாக ஏந்திய ‘குரஜாட அப்பாராவ்’, முற்போக்குவாதிகளுக்கு அடித்தளம் அமைத்தவர். பெண்ணை கௌரவித்து மதிக்கும் ஆணுக்கு கௌரவம் கிடைக்கும் என்னும் உண்மையை உணர்ந்த சமூக சீர்திருத்த வீரர். அவர் படைத்த கதாபாத்திரங்களான ‘பூர்ணம்மா’வைப் பற்றி எழுதினாலும், “கடவுள்களே உங்கள் பெயரென்ன?” என்று கல்வியாளரான ‘சஞ்சாரம்மா’வைப் பற்றி எழுதினாலும், “தித்துபாட்டு” சிறுகதையைத் திறமையோடு வர்ணித்தாலும், படித்த முட்டாளான கணவனோடு குடும்பம் நடத்துவது பற்றிய சிறுகதை ‘கற்பூரம்’ படைத்தாலும்,  ‘மிட்டெல்டா’ பற்றி வர்ணித்தாலும், பேயாக மாறிய ‘பூனகம்மா’வின் மேல் பரிதாபம் காட்டினாலும், ‘கன்யாசுல்கம்’ நாடகத்தில் மீனாட்சி, புச்சம்மா என்ற கதாநாயகிகளின் பாத்திரங்களோடு அன்றைய சமகால சமுதாயத்தின் இயல்பை கண்ணுக்கு முன்னால் காட்டினாலும். பெண் இனத்தின் மேன்மையையே இலக்காகக் கொண்டு குர்ஜாடாவின் பேனா நகர்ந்தது.  

“குரஜாடாவின் பாத்திரங்கள் கண்களுக்கு வெளிச்சம் தருபவை. மாறிவரும் சமுதாயத்தின் குணங்களைத் தரிசிப்பதற்குத் தேவையான கருவிகளை அளிப்பவை. அவை அன்றைய வாழ்க்கையிலிருந்து பிறந்த இயல்பான பாத்திரங்கள். அதனால்தான் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை” என்று ‘சாகண்டி துளசி’ குரஜாடாவின் உள்ளத்தை எடுத்துரைத்தார். பெண்ணியம் என்று எங்கும் வெளிப்படாமல் ஒவ்வொரு பாத்திரத்திலும் பெண்ணின் உயர்வைக் காட்டிய பெருமை கொண்டவர் குரஜாடா. 

நவீன காலத்துப் பெண், வரலாற்றைத் திரும்ப எழுதுகிறாள் என்றார்.   பழையவற்றையும் புதியவற்றையும் இணைத்து  ஒரு புறம் அர்த்தாரீஸ்வராகவும், மறுபுறம் ஆங்கிலத்தில் குறிப்பிடும் ‘பெட்டர் ஹால்ப்’ ஆகவும் தென்படுகிறாள் பெண். ‘கணவனே தெய்வம்’ என்பது பழைய கூற்று. கணவன் என்பவன் ‘உடனிருப்பவன், தோழன்’ என்பது புதிய கூற்று என்ற குரல் கேட்கிறது.  

‘கன்யாசுல்கம்’ (ஆண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் எதிர்ஜாமீன்) என்பது அன்றைய சமூகத்தில் நிலவிய தீய ஆச்சாரம். குரஜாடா, பெண்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்ற பல்வேறு சமூகப் பழக்கங்களை எதிர்த்து, மக்கள் பேசும் மொழியில், 1892 ல் ‘கல்யாசுல்கம்’ என்ற நாடகத்தை எழுதினார். விலைமாதுவான ஒரு பெண்ணின் நேர்மைக்கும் ஆளுமைக்கும் எடுத்துக்காட்டாக ‘மதுரவாணி’ பாத்திரத்தை உருவாக்குகிறார் குரஜாடா. அவர் படைத்த பெண் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சிறப்பு கொண்டவை. “வசந்தசேனாவை விட மதுரவாணி உயர்ந்த படைப்பு” என்று தெலுங்கு கவி ‘ஸ்ரீஸ்ரீ’ (ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச ராவ்) வியந்து கூறியுள்ளார். “காமந்தகியை விட மதுரவாணி உயர்ந்தவள்” என்று ‘கேதவரப்பு ராமகோடி சாஸ்திரி’ கூறினார். “காள்ளகூரி நாராயணராவ்  எழுதிய ‘சிந்தாமணி’, ‘பானுகண்டி சுந்தரி’ ஆகியோரை விட மதுரவாணி உயர்ந்தவள்” என்று ‘ரமணாரெட்டி’ கூறினார். மதுரவாணி கதாபாத்திரம், மீதி பாத்திரங்களை விழுங்கி விட்டது. அதனால்தான் “கல்யாசுல்கம் நாடகத்தில் யாரிருக்கிறார்கள்? இருப்பது ஒரே ஒரு பாத்திரம் அது மதுரவாணி” என்று ஸ்ரீபாத கோபாலகிருஷ்ண மூர்த்தியிடம் அவருடைய நண்பர் கூறினார். (‘கன்யாசுல்கத்தின் மறுபுறம்’ பக்கம் 3௦, கோவெல சம்பத்குமாராசார்யா).

“நான் இரண்டாவது முறை ‘கன்யாசுல்கம்’ நாடகம் பகுதி இரண்டு எழுதினால், மதுரவாணி பாத்திரத்தை நானே மிக விரும்ப ஆரம்பித்து விடுவேன்” என்று குரஜாடா   கூறியது குறிப்பிடத் தக்கது (குரஜாடா கடிதங்கள் 1958, பக். 30). 

இந்த நாடகத்தில் ‘அக்னிஹோத்ர அவதானி’, பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கதாபாத்திரம். பணத்திற்காக பெற்ற பெண்ணையே விற்கத் துணிந்தவர். மூத்த  மகள் புச்சம்மாவை கிழவனுக்குத் திருமணம் செய்து வைத்து, கிழவன் இறந்த பின் அவனுடைய சொத்துக்காக கோர்ட்டுக்குச் சென்ற பணப் பேய். இரண்டாவது மகளை கிழவனானாலும் லாபம் கிடைக்கும் ‘லப்தாவதானி’க்கு மணம் செய்து வைக்கத் துணிந்த முட்டாள். அவ்வாறு அவர் செய்கையில், அவருடைய மனைவி ‘வெங்கம்மா’, துயரம் தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது, ஆபத்தில் காப்பவனாக ‘கிரீசம்’ அவளைக் காப்பாற்றுகிறான். ஆனாலும் அக்னிஹோத்ர அவதானி, “நிச்சயதார்த்தாம் செய்து விட்டேன். நீங்கள் இறந்தாலும், இருந்தாலும் எனக்குக் கவலையில்லை” என்கிறார். ‘புச்சம்மா’ தன் தம்பி வெங்கடேஷுக்கு டியூஷன் மாஸ்டராக வந்த ‘கிரீசம்’ செய்த சொற்பொழிவைக் கேட்டு, தங்கையின் திருமணத்தை நிறுத்துவதற்காக அவனோடு ஓடிப் போவதற்கும் தயாராகிறாள். 

பால்ய விவாகத்தால் விதவையான பெண்கள் உடல் இச்சைக்கு பலியாகி, நாசமாவதற்கு இந்த நாடகத்தில் ‘பூட்டகூள்ளம்மா’வும், மீனாட்சியும் உதாரணங்கள். சிறு பெண் குழங்தைகளை முதிய வயது ஆண்களுக்கு திருமணம் செயவிப்பதால் சமுதாயத்தில் இப்படிப்பட்ட அநீதிகள் அதிகரித்து விட்டன. பெண்கள் வீட்டு வேலைளைச் செய்து கொண்டு உணவும் சரியாகச் சாப்பிடாமல், சமையலறையிலேயே முடங்கிக் கிடந்து கட்டுப்பாடுகளுக்கு அடிமையாகி வாழ்ந்து முடிக்க வேண்டிய நிலைமை. 

உண்மையில், அன்றைய பெண்களின் இழிவான நிலையைக் கண்டு வேதனை அடைந்து சமுதாய சீர்திருத்தத்திற்கு முயன்று உழைத்தது ஆண்கள்தான். சிலர் சமுதாயத்தில் இறங்கி வேலை செய்தார்கள். சிலர் இலக்கியம் மூலம் சமூகத்தை சீர்திருத்தினார்கள். குரஜாடா, தான் எழுதிய கன்யாசுல்கம் நாடகத்தின் பெண் கதாபாத்திரங்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு அற்புதமாக வாதித்தார். தன் கருத்துக்களை நாடகமாகப் படைத்தார். பெண் இனத்திற்கு ஒரு அற்புதமான வழியைக் காட்டினார். குரஜாடாவின் மானசிக வேதனையைப் புரிந்து கொண்ட சமூக சீர்திருத்தவாதிகள், அவருடைய படைப்புகளைப் பாராட்டினார்கள். குரஜாடா, பெண்களின் பிரச்சினைகளை அவை எத்தனை வருத்தமளித்தாலும் நகைச்சுவை கலந்து மக்கள் பேசும் மொழியில் எழுதியதால் நாடகத்தைப் பார்ப்பவர், படிப்பவர் போன்ற அனைவரின் மனத்தையும் பக்குவப்படுத்தி, மாற்றத்தின் பக்கம் திருப்ப முடிந்தது. குரஜாடா, மனிதநேயத்தோடு பெண் கதாபாத்திரங்களைப் படைத்து, அந்நாட்களிலேயே பெண்ணியத்தை மறைமுகமாக விவாதித்து, இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டினார். அன்று இதுபோன்ற பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்குக் கூட மிகுந்த துணிச்சல் தேவைப்பட்டது. சம்பிரதாயத்தை அச்சுறுத்தும் எழுத்துக்களை அனைவரும் ஏற்கும் விதத்தில் சாமர்த்தியமாக அவர் எழுதியதால்தான் இன்றளவும் அந்த படைப்பும் அதன் கதாபாத்திரங்களும் நம் மனத்திற்குப் பிடித்தவையாக உள்ளன.  

2. சலம் (குடிபாட்டி வெங்கடாசலம்) – (1894-1979): 

‘குடிபாட்டி வெங்கடாசலம்’ பெண் சுதந்தித்திற்காக தெலுங்கு மொழிக்குக் கிடைத்த துணிச்சலான படைப்பாளி. பெண்களின் உரிமைக்காக இலக்கியப் பக்கங்கள் மூலம்  சமூக அமைப்போடு போர் புரிந்த சீர்திருத்தவாதி. தனி மனிதனைக் குடும்ப உறவுகள் முற்றுகை இட்டும், சமூகம் கட்டுப்படுத்தியும் மூச்சுவிட முடியாமல் தவிக்கச் செய்த போது, அவனை வெளியில் இழுத்து, வாதங்கள் மூலமும் சிந்தனைகள் மூலமும் அவனுடைய மனத்தில் கூடுகட்டிக் கொண்டிருந்த அடிமைத்தனத்தை உடைத்து, சுதந்திரத்தை அளித்த எழுத்தாளர் சலம். 

இந்தியா முழுவதும் அரசியல் விடுதலைகாக போராடிக்கொண்டிருந்த காலத்தில், பெண்ணுக்குக் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று படைப்புகளைக் கொண்டு போராடினார் சலம். “எதனை சம்பிரதாயவாதிகள் கொடிய விஷம் என்று நினைகிறார்களோ, அதனையே இன்று முன்னேற்ற இயக்கம், ஆரோக்கியமான செயல்பாடாக ஏற்றுள்ளது” என்று தெலுங்கு கவிஞர் ‘ஸ்ரீஸ்ரீ’ புகழ்ந்தார். எவ்வாறு, “இளைஞர்களின் மனத்தைக் கெடுக்கிறார்” என்று கூறி சாக்ரடீசின் நெறிமுறைகளைத் தவறாக புரிந்து கொண்டு அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றார்களோ, அதே போல் கடுமையான பழமைவாதிகள் ‘சலம்’ என்ற படைப்பாளரின் எழுத்துக்களை விலக்கி வைத்தார்கள்.  அவருடைய படைப்புக்களை புகழ்பெற்ற எந்த பத்திரிக்கையும் வெளியிடவோ விளம்பரம் செய்யவோ முன்வரவில்லை.  

“பெண்ணுக்கும் உடல் உண்டு 

அதற்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும் 

அவளுக்கும் மூளை உண்டு 

அதற்கு ஞானம் அளிக்க வேண்டும் 

அவளுக்கும் இதயம் உண்டு 

அதற்கு அனுபவம் அளிக்க வேண்டும்” என்ற உண்மையை உணராத இந்த தேசத்திற்கு நான் எழுதும் கருத்துக்கள் புரியுமா?” என்று என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஐயம் கொண்டார் சலம். அதனால்தான் அவருடைய படைப்புகள் எதிர்பார்த்த அளவு வேர் ஊன்றவில்லை. பெண்ணுக்கு ஆணாதிக்க உலகம் எவ்வாறு கட்டுப்பாடு விதித்தது என்று தன் எழுத்துகளில் விவரித்தார் சலம். தர்க்கத்தோடு விமர்சித்தார். 

‘ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்ய மர்ஹதி’ என்ற கூற்றை பலமாக நம்பி அந்நாட்களில் “பெண்ணுக்கு சுதந்திரமா?” என்று வாய்பிளந்த பெரிய மனிதர்கள் இருந்தார்கள். 

“சமுதாயத்தில் பெண்ணின் வாழ்வு இருளாகவும் குறுகியதாகவும் இழிவாகவும் இருப்பதைப் பார்த்துத் தாங்க முடியாமல், பொறுக்க முடியாமல் ஆத்திரம் கொண்டு பல யுகங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்களைத் தட்டித் திட்டி எழுப்பும் மிகப்பெரும் யக்யம் சலம் செய்து வரும் இலக்கியப் புரட்சி” என்றார் ‘ரங்கநாயகம்மா’. 

ஆசைகள், கோரிக்கைகள், கிளர்ச்சிகள், ஸ்வேச்சைக்கான போராட்டம். மன வேதனை ஆகியவற்றால் அமைதியின்மைக்கு உள்ளான பெண்களுக்கு ‘அஞ்சேல்’ என்று தார்மிக ஆதரவு அளித்த அபய ஹஸ்தமாக விளங்கின சலம் படைத்த இலக்கியங்கள். சம சமுதாயம் படைக்க விரும்பி, அதில் ஆண் பெண் சமத்துவத்தை விளைவித்து, எண்ணங்களில் மாற்றம் ஏற்படுத்த விரும்பிய திண்மை நிரம்பிய சீர்திருத்தவாதி சலம். 

சலத்தின் இலக்கியப் படைப்புகள் அனைத்திற்கும் மையமாக பெண்ணியம் விளங்கியதாகத் தோன்றுகிறது. பெண்ணுக்கு இருந்த பல பிரச்சினைகள், பெண்களால் ஏற்பட்ட எல்லையில்லாத பிரச்சினைகள், சமுதாயத்தின் சமகால பிரச்சினைகள், திருமணமாகாத பெண்ணின் பிரச்சினைகள், திருமணமான பெண்ணின் பிரச்சினைகள், வேலைக்குச் சென்ற பெண்ணின் பிரச்சினைகள், வேலை கிடைக்காத பெண்ணின் பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சினைகள், மோகத்தால் விளைந்த பிரச்சினைகள், ஸ்வேச்சையால் விளைந்த பிரச்சினைகள் என்று இவை எல்லாவற்றிலும் பெண்ணே மையப்புள்ளியாக விளங்கினாள். இத்தனை விதமான பிரச்சினைகளும் சலம் படைத்த இலக்கியத்தில் கருப்பொருளாக விளங்கின. இவற்றில் தீர்வு, புரட்சி, விமரிசனம், சம்பிரதாயத் திருத்தங்கள் எல்லாம் பேசப்பட்டன. சலம் படைத்த ‘பெண்களுக்கு ஆதரவான இலக்கியங்கள்’ ஆந்திரதேசத்தை ஆட்டிவைத்தன. அவருடைய எழுத்துக்களால் போலி சம்பிரதாயங்கள் அடித்துச் செல்லப்பட்டன. குடும்ப அமைப்பு சரிந்தது என்று சொல்லலாம்.  

“பொருளிலும், நடையிலும் தெலுங்கு கதைகளில் சலம் எடுத்து வந்த மாற்றம் புரட்சிகரமானது. சலம் இல்லாவிட்டால் தெலுங்கு படைப்பிலக்கியம் இன்று இருப்பது போல இருந்திருக்காது” என்றார் ‘ராச்சமல்லு ராமச்சந்த்ருடு’ (ரா.ரா).  

சலம் எழுதிய கதைகளில் காணப்படும் திருமண சுதந்திரம், பாலியல் சுதந்திரம்  போன்றவற்றை ஆராய்ந்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர் கூறியவற்றில் என்ன தவறு என்றும் தோன்றுகிறது. பண்டைய காலத்திலிருந்து பெண்ணைத் தாயாகவும், வீட்டுக்கு விளக்காகவும், தியாக மூர்த்தியாகவும் புகழ்ந்தபடியே மறுபுறம் ‘அசூர்யம்பஸ்ய’ அதாவது சூரியனையே பார்க்காதவளாக, வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாதவளாக, ஆளுமையோ சுதந்திரமோ அற்றவளாகப் பார்த்தார்கள். இதையெல்லாம் நினைத்தாலே இதயம் பதறுகிறது. மனோதத்துவ அறிவியலை இணைத்து ‘சலம்’ தன் மன  வேதனைகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். பிறந்தது முதல் பெண்ணை அடிமையாகப் பார்க்கும் நூல்களையும், சம்பிரதாயங்களையும், ஆச்சாரப் பழக்க வழக்கங்களையும் தர்க்கத்தால் எதிர்கொண்டார். தன்னுடைய கதாபாத்திரங்களை  சமுதாயக் கட்டுப்பாட்டை உடைத்தெறிபவர்களாகப் படைத்தார். 

மேலும் சில ‘பெண்ணியம்’ எழுதிய ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

தெலுங்கு பெண் எழுத்தாளர்கள்

‘நூறேள்ள பண்ட்ட’ (ஆயிரங்காலத்துப் பயிர்) கே. சிவாரெட்டி

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.