கண்டான் சகோதரியை!

அந்த வனப் பிரதேசத்தின் மரங்களின் இடையே, பல இடங்களிலிருந்தும் அரிய மரங்களை கொண்டு வந்து நட்டு வளர்த்திருந்தனர்.  அமர வசதியாக சில சமப்படுத்தப் பட்ட  பாறைகள் இருந்தன.  லதா பவனங்கள் அங்குள்ளோரின் வசதிக்காக அமைத்திருந்தார்கள்.  பெரிய மரங்களின் நிழலில், பலர் அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் தவம் செய்ய வந்தவர்கள். பரிவ்ராஜகர்கள் எனும் துறவிகள்.  வெண்ணிற உடை அணிந்தவர்கள், வெண்ணிற கம்பளி ஆடைகளை அணிந்த பாகவதர்கள்.  அனேகமாக ப்ரும்ம சாரிகள்.   

 கபில வண்ண ஆடைகளுடன் இருந்தனர். இவர்கள் சாங்க்யர்கள் எனப்படும்  ஞான மார்கிகள்.   கபிலர் என்பவருடைய ஞான மார்கம், அதை ஏற்றுக் கொண்டவர்கள்.

சார்வாக எனும் ஜைன மதம் – தலை கேசத்தை மழித்துக் கொண்டிருந்தவர்கள் ஜைன சாதுக்கள். 

கா3ணாத என்ற முனிவருடைய வைசேஷிக என்ற சித்தாந்தம்  – இதை அனுசரிப்பவர் வைசேஷிகர்கள் – இவர்களும் சாதுக்களே- துறவிகளே. 

ஔபனிஷத – உபனிஷத்துக்கள், வேதாந்தம் இவைகளை அறிந்து ப்ரும்ம வாதிகளான தார்சனிக – தத்துவ விசாரம் செய்யும் வேதாந்திகள். 

ஐஸ்வர காரணிக என்பவர்கள் சிலர்.- இவர்கள் வேதங்களிலேயே  நியாயம் என்ற பிரிவில் தேர்ந்தவர்கள்.

காரந்தமி- कारन्धमि –  தாது வாதி, ரஸாயணம் அறிந்தவர். அந்த துறையில் விசேஷ அறிவு உடையவர்கள். 

தர்ம சாஸ்திரி – மனு முதலான ஸ்ம்ருதிகளை அனுசரிப்பவர். வாழ்வியல் தர்மங்களை சொல்லும் நூல்.

பௌராணிக, சாப்த தந்தவ –  யாகங்களை செய்பவர், மீமாம்சகம் என்ற துறையில் வல்லவர்கள்.  செயலே பலன் தரும் என்று நம்புபவர்.  கர்ம மார்கிகள்.. -வேத சாஸ்திரங்கள் சொல்லும் கடமைகளை நம்பிக்கையுடன் செய்பவர். 

சாப்3திக்- சப்த ப்ரும்மம் – நாதம் தான் முதன் முதலில் தோன்றியது என்பவர்கள். வியாகரணம் படித்து தேர்ந்தவர்கள்,  தரிசனம் எனும் தத்துவ அறிவுள்ளவர்கள். 

பாஞ்ச ராத்ரிகர்கள் – பஞ்ச ராத்ர எனும் பழமையான வைஷ்ணவ மதம் அதை அனுசரிப்பவர்கள்.

இன்னும் பலர். பல மத சம்பந்தமான கொள்கைகளை பின் பற்றுபவர்.  ஆகமங்களை கற்றுத் தேர்ந்தவர்கள், அதில் ஏதோ ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள்.

த்ரி சரணி – மூன்று புத்த தர்ம சங்கங்கள்.  சாக்ய என்பது புத்தரின் பெயர். கோசோ कोशो– பௌத்த சித்தாந்தம்- வசு பந்து என்பவர் எழுதியது.

 தள்ளி நின்றே அரசன் இது பதந்தன் இருக்கும் இடம் தான் என்று புரிந்து கொண்டான். அங்கு வானரங்கள் கூட வினயமாக தங்கள் இயல்பான சபலத் தன்மையை விட்டு அமைதியாக இருந்தனவாம். கிளிகளும் , சில பறவைகளும்,,புத்த, தர்ம, சந்த என்று உச்சரித்துக் கொண்டிருந்தன.    அபிதர்ம கோசம் – என்ற பௌத்த தர்ம சித்தாந்தம் என்பதை அங்குள்ளோர் படித்துக் கொண்டிருந்தனர்.  சாரிகா என்ற பறவைகள் புத்தர் சொன்ன தர்மங்களை சொல்லிக் கேட்டு  பத்து சீலங்களுக்கான பதங்களை உபதேசம் பெற்றவைகள் போல , குறைகளை தவிர்த்து, தாங்களும் தர்மோபதேசம் செய்பவன போல இருந்தனவாம்.  அது தான் முனி பரமேஸ்வரன்- திவாகர மித்ரன் என்ற  பௌத்த பிக்ஷுவின்  தவ வலிமை போலும். சிங்கத்தின் குட்டிகள் ஆசிரமத்தின்  திறந்த வெளிகளில் அமைதியாக அமர்ந்திருக்குமாம், அங்குள்ள ஆசனங்களில் இயல்பாக சிங்காதனத்தில் அமருவது போல இருக்குமாம்.  அருவிகளில் மான்களும்,மயில்களும்  நீரை குடிக்கும்.  பயிர்களில் தானியத்தை தாங்களே எட்டி பறித்து உண்ணும்.  அவருடைய பாதங்களில் வணக்கத்தை தெரிவிப்பது போல நாக்கால் நக்கி அவருடைய சாந்த குணத்தை தாங்களும் பெற விரும்புவது போல இருக்குமாம்.  புறா போன்ற பறவைகள் அவர் தோளில் அமர்ந்து தங்கள் கர கரப்பான குரலில் ஏதோ சொல்லுவது போல கத்துமாம். 

போதி சத்வருடைய ஜாதகம் என்பவைகளை ஜபமாக செய்தனர். அதனால் அடக்கமும், சீலமும், இனிமையான குணங்களும் வாய்த்தவர்களாக இருந்ததால், சார்தூலங்கள் என்ற புலிகள் கூட அவர்களிடம் நட்பாக இருந்தனவாம்.  கனிவான பார்வையே உபதேசம் செய்வது போல இருக்குமாம். சுத்தமான காவி வஸ்திரம் தரித்து அனைவரிடமும் அன்புடன் இருப்பவர் கண்களின் இமைகள் கீழ் நோக்கி தாழ்ந்து சம்சாரிகளின் துக்கத்தைக் கண்டு வருந்துவது போல இருக்குமாம். 

அவரே சகல சாஸ்திரங்களின் பொருளை முழுவதுமாக அறிந்தவர்.  எந்த வித தேவையும் இன்றி தவம் செய்வதில் ஈடு பட்டவர்.   பலவிதமான  தத்துவங்களையும் விவரமாக விளக்கத் தெரிந்தவர்.  மனிதர்களுல் மாணிக்கம் என்பது போல முதன் முதலில் கண்டவர் கூட வணங்கும்படி இயல்பான குண நலன்கள் உடையவர்.  அருளுக்கே அருளானவர், மதிப்பு என்ற தகுதிக்கே மதிப்பானவர் தியானம் என்பதற்கே தியானமானவர் என்று பலவிதமாக அருகில் இருந்தவர்களால் போற்றப்பட்டிருந்தார்.  

சித்திரம் : அருண்

திவாகர மித்ரன் என்ற அவரை தூரத்திலிருந்தே கண்ட அரசன் ஹர்ஷன், தன் தலையால், வாக்கால், மனதால் வணங்கினான்.  அவரும் தன் உள்ளத்து அன்பை, அரசனிடம் நெருக்கமான நண்பனாக,  பல காலமாக காணாமல் இருந்ததால். உத்சாகத்துடனும்  வரவேற்றார்.   மகானுபாவன்- உயர் குணங்கள் உடைய தலைவன், சகல விதத்திலும் மரியாதைக்குரியவன்,   இனிமையான தோற்றமும் குணமும் அனைவரையும் தன் பால் இழுக்கும் சக்தி இயல்பாக அமைந்தவனும், அசாதாரணமான  உடலமைப்பையும் பார்த்து வியந்து நோக்கியவராக மனப் பூர்வமாக வரவேற்றார்.   நல்ல வீரன், சமீபத்திய ஏதோ கவலை அவனை வாட்டுகிறது, என்று உணர்ந்தவராக இயல்பான கருணை உள்ளம் படைத்தவர், அதே கருணையுடனும், மரியாதை கலந்த ஆசீர்வாதங்கள்- அரசனுக்கு ஆரோக்யம் ஆசிர்வதிப்பது முறை- என்பதால் நீடுழி வாழ் என்பது போன்ற ஆசீர்வாதங்கள் சொல்லி,  இனிமையான குரலில் அழைத்தார்.  வந்தவரை வரவேற்பது என்ற முறையில், அருகிலிருந்த சீடனிடம்’ ஆயுஷ்மன்! கமண்டலுவை கொண்டு வா, பாதங்களில் நீர் விட்டு, முறையான அதிதி சத்காரங்களைச் செய்வோம் என்றார். (வந்தவர் களைப்பை நீக்க ஒரு மரபாக பாதங்களில் நீர் விட்டு, குடிக்க நீர் கொடுத்து உபசரிப்பது வழக்கம்)  அரசன் மனதில் நினைத்தான் .’ எந்த இரும்பு சங்கிலியாலும் இது போன்ற நட்புகள் கட்டப் படுவதில்லை. இயல்பான பரிவும். பாசமும்   இவரைப் போன்ற சாதகர்களிடம்  நிரம்பியுள்ளன போலும்.  அதனால் தான் க்ரஹவர்மா இவரைப் பற்றி அவ்வளவு உயர்வாக சொல்லியிருக்கிறான்’ .   அவரை பார்த்து ‘பகவன்! உங்களைக் கண்டதே எனக்கு கிடைத்த பெரும் பேறு. இந்த உபசாரங்கள் கூட அதிகமாக தோன்றுகிறது. உங்கள் அருட் பார்வை பட்டதிலேயே  என் பிறவிப் பயனை பெற்றதாக உணருகிறேன்.  உங்கள் அன்பான சொற்களே எனக்கு அபிஷேகம் செய்தது போல,  உங்களுடன் இந்த நிலத்தில் எதிரில் நிற்பதே சிறந்த ஆசனமாக இருக்க,  வேறு என்ன வேண்டும். தாங்கள் வசதியாக உங்கள் ஆசனத்தில் அமருங்கள். என்று சொல்லியபடி தரையில் அமர்ந்து விட்டான். 

‘வினயம் தான் சிறந்த ஆபரணம். அதிலும் ஆற்றலும், செல்வமும் உடைய அரசர்களுக்கு உயர் மணிகளால் ஆபரணங்களை அணிவது கூட பொருளற்றது.  சுமையே. ‘ என்றவர் மேலும் ஆசனத்தில் அமரச் சொல்லி வற்புறுத்தினார்.  தன் ஆசனத்தையே கொடுத்தார் பதந்தன் ( திவாகர மித்திரனின் மறு பெயர்)  அரசனை  கண்களால் அளப்பது போல பார்த்தார்.  நளினமான முகத்தையும், அகன்ற கண்களையும், கலி காலத்தின் கருமையை – குறைகளை களைவது போன்ற  பிரகாசமான  வரிசையான பற்கள்  என்று ஒவ்வொரு அங்கமாக பார்த்து மகிழ்ந்தார்.  தூய்மையான மலர் நிறைந்த கொடி மணம் வீசுவது போல நற்குணம்  நிறைந்த மனம் உடையவன், பழகுவதற்கு எளியவன் என்று அவர்  உள்ளம் கண்டு  கொண்டது.  

‘இன்று  இந்த உலகம் வணங்கத் தக்கதாக ஆகி விட்டது. தகுதியான மனிதனை, தகுதியான பதவியில் அமர்த்தி அவன் வழியில் செல்லும் பிரஜைகள் உள்ள நாடு இந்த பிரதேசம் தன் பிறவிப் பயனை பெற்று விட்டது. இனி சம்சாரம் என்பது துக்கம் என்று எவரும் வருந்த வேண்டாம். இவருடைய ஆட்சியின் கீழ் பிரஜைகள் மங்களகரமான அனைத்தையும் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.  எதிர்பாராமல் எனக்கு கிடைத்த  நல் வாய்ப்பு. இவரை வரவேற்று உபசரிக்கும் இந்த நிமிஷம் நான் அடையும் ஆனந்தம் சொல்லத் தரமன்று.  இது போன்ற மன நிறைவை, ஆனந்தத்தை பெற முன் பிறவிகளில் பல நன்மைகள்  செய்திருக்க வேண்டும் என்பர். எங்கள் சாதனைகளின் பலன் –(தேவானாம்ப்ரிய- இது ஒரு உபசாரமாக சொல்லும் சொல்- தேவர்களூக்கு பிரியமானவன்- புத்தரை குறிக்கும் ) இவர் வருகையால், இவரைக் கண்ட கண்கள் அடைந்து விட்டன.  திருப்தியடையும் வரை  அம்ருதம் உண்டவன் போல என் உடலும் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.  இன்றைய தினமே நன்னாள்.  ஆயுஷ்மானான (இது சிறியவர்களை அல்லது புதிதாக கண்டவர்களை விழிக்கும் சொல் )  இவரைக் கண்டவர்களின் தாயே புண்யம் செய்தவள் (அவள் பெற்ற மகன் காணும் பேறு பெற்றதால்)  .  அந்த பரமாணுக்கள் – எவை இவர் உருவம் அமைய பயன்பட்டவையோ, அவையும் புண்ய பலனை அடைந்து விட்டன.  சௌபாக்யங்களே  – நல்ல வளங்களே- புருஷனாக உருவம் கொண்டுள்ளன போலும். 

சத்யம் என்றும் அழியாத உண்மை என்றும் மோக்ஷம் அடைய விரும்பும் சாதகர்களும் நம்புகின்றனரோ, அந்த தத்துவம் மறு பிறவி பெற்றது போல,  எதிரில் காணப் பெற்றவர் மனித பிறவியை வேண்டுவர். அதனால் தானே இவரைக் கண் முன் கண்டோம் என்பதால் நாமும் பயனடைந்தோம். .  நம்மில் எவரும் மலர் அம்பு ஏந்தியவனைக் கண்டதில்லை. வன தேவதைகளின் மனம் இன்று நிறைந்திருக்கும்.    இந்த வனமும் இங்குள்ள மரங்கள் தாவரங்கள் கூட கண் முன்னே கண்டு மகிழ்ந்திருக்கின்றன.   மூதாதையர் தங்கள் குல விளக்காக வந்த இந்த அரசனை வாழ்த்தட்டும்.  இவ்வாறு பலவாறாக புகழ்ந்து சொன்னபின் அரசனைப் பார்த்து, சொல்லுங்கள் அரசே, எதற்காக இந்த சிரமம்? தேடிக் கொண்டு இந்த ஆசிரம தேசம் வந்த காரணம் என்னவோ’ என்றார். 

அரசன் பதில் சொன்னான்:  ‘ஆர்ய! உங்கள் வரவேற்பாலும், அன்பான உபசரிப்பாலும் என் மனம் நிறைந்துள்ளது. அமுதமாக பொழிந்த சொற்கள்.  உங்கள் அருளே அனைத்தையும் தரும் என்று இருக்க இதற்கு மேலும் நான் வேண்டுவது எதுவுமில்லை. இந்த வனத்தில் தேடி அலையும் நிலைக்கு ஏன் வந்தேன்
என்பதைச் சொல்கிறேன்.  என் உயிருக்கு உயிரான  பந்து,  என் இளைய சகோதரி அவளைத் தேடி வந்தேன். அவள் கணவன் போரில் மடிந்த பின் எதிரிகளின் கையில் அகப்படாமல் இருக்க இந்த விந்த்ய மலைக்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டிருக்கிறாள் என்ற வரை எனக்கு விவரங்கள் தெரிந்தன. அதன் பின் என்ன ஆனாள், எங்கிருக்கிறாள்  என்பதை அறியத்தான் நானே வந்தேன்.   யானை கலக்கிய குட்டை போல என் குடும்பத்தில் சில குழப்பங்கள் நிகழ்ந்து விட்டன. அசுபமான சில நிகழ்ச்சிகள், குணமற்ற வேடர்கள் போல சிலர் நடந்து கொண்டு விட்டனர்.   மகிஷத்தின் முதுகில் அமர்ந்து நெடுந்தூரம் பயணம் செய்வது போன்ற ஆயாசம்.  கூர்மையான அம்புகள் தைத்து விட்டன போன்ற வேதனை.  எண்ணியே இராத சில அருகில் இருந்தவர்களின் நம்பிக்கை துரோகத்தின் உறுத்தல். அவளைத் தேட வந்தவன் நான். இரவும் பகலுமாக இந்த அடர்ந்த வனத்தில் எதைத் தேடுவது என்பதே புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன்.  இந்த வேடச் சிறுவன் இந்த இடம் பற்றிச் சொன்னான். சொல்லுங்கள்.  எவர் மூலமோ கேட்டதோ, அல்லது நீங்களே கண்டதோ சிறிய  தடையம் (துப்பு) ஆனாலும் சொல்லுங்கள்.  என்றான். 

திடுக்கிட்டவராக பதந்தன் சொன்னார். ‘ ஸ்ரீமன்!  என் வரை எந்த விவரமும் தெரியவில்லையே. வெளியுலகம் பற்றி அதிகம் அறியாதவர்கள் நாங்கள்.  உங்கள் அருமை சகோதரியை பிரிந்த துக்கம் மிகக் கொடிது. ‘ தன்னால் உதவ முடியவில்லையே என்று பரிதவித்தவராக இருந்த அவரை அணுகி ஒரு பெண் துறவி எதோ சொன்னாள்.. அவளும் அங்கு வசிப்பவள் போலும்.   தானும் பரபரப்புடன் ஏதோ சொல்ல வந்தவள் போல இருந்தாள். பதந்தரை நோக்கி ‘பகவன்! பதந்த! மிகப் பெரிய ஆபத்து வந்துள்ளது. ஒரு பெண்ணைக் கண்டோம். நல்ல குலத்தில், வசதியாக வாழ்ந்தவளாகத் தெரிந்தாள். சிறு பெண். பலவந்தமாக எதோ கடுமையான கஷ்டத்தை அடைந்து விட்டவள் போல  சோகமே உருவாக நெருப்பில் விழ இருந்தாள்.  அவளை காப்பாற்றுங்கள். பகவன்! ஏதோ தாங்க முடியாத துக்கம் தாக்கி இருக்கிறது.  உயிரை விட துணிந்தவள், அவளை காப்பற்றுங்கள்.  உங்கள் தரிசனமே அவள் துக்கத்தை போக்கி விடும் – வனத்தில் வசிக்கும் அல்ப ஜீவன்களுக்கு கூட அருள் புரிபவர் நீங்கள் ’ என்றாள். 

அரசன் பரபரப்புடன் எழுந்தான். சந்தேகம் ஆட்கொள்ள,  தன் சகோதரியாக இருக்குமோ என்ற சந்தேகமே மனதை உலுக்க,  பேச முடியாமல் தொண்டயடைக்க, கண்களில் நீர் மல்க விசாரித்தான்.  அருகில் இருந்த ஒரு துறவியை விசாரித்தான். ‘ பாராசாரின்! துறவியே! இங்கிருந்து நீங்கள் குறிப்பிட்ட இடம் எவ்வளவு தூரம்/ அந்த பெண் உயர் குலத்துப் பெண் என்றாள் இந்த பெண்.   நான் அவளை உயிருடன் காண்பேன – பத்ரே! அவளைக் கேட்டாயா? தான் யார் என்று சொன்னாளா?  யார் அவள், யாருடைய மகள் அல்லது மனைவி,  எங்கிருந்து வந்திருக்கிறாள், என்ன காரணமாக வனம் வந்தாள், எதனால் நெருப்பில் விழ முடிவு செய்தாளாம்.  தெரிந்த வரை சொல்.  கேட்க விரும்புகிறேன், சொல்லு. உருவம் எப்படி இருந்தது, பார்த்த வரை சொல்லு என்றான். 

அவன் சொன்னான்: மகா பாக! கேளுங்கள். இன்று விடியற்காலையில் எழுந்து வழக்கம் போல என் பிரார்த்தனைகளை செய்து முடித்து விட்டு, இந்த நதியின் கரையில் மென்மையான மணலில்  நடந்து சென்று கொண்டிருந்தேன்.  இளம் காலை, காற்றும் சுகமாக இருக்க வெகு தூரம் சென்று விட்டிருந்தேன்.  ஓரிடத்தில்  குன்று  தடுக்கும் – நதி  அதைச் சுற்றிக் கொண்டு செல்லும் .  புதர்கள் அடர்ந்த இடம். யாரையும் காணவில்லை. பல பெண்கள் அழும் சத்தம் மட்டும் கேட்டது.  அமைதியாக இருந்த இடம் – திடீரென இந்த அழுகுரல் கேட்கவும் விரைந்து ஓடி அருகில் சென்றேன். பல பெண்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த பெண்ணோ, பிடிவாதமாக நெருப்பில் இறங்க முயன்றாள்.   யாரோ துரத்தி வந்தார்களோ, என்ன காரணம் தெரியவில்லை பாதங்கள் வீங்கி இருந்தன. நகங்கள் உடைந்து கிடந்தன – அடிபட்டிருந்தது போலும்.   போஜ பத்திரங்களால் முழங்காலில் கட்டு போட்டிருந்தாள்.  வழியில் பேரீச்ச மரங்கள்  உண்டு. முள் கிழித்ததோ என்னவோ.  தண்ணீர் விட்டான் கிழங்குகள் என்போம், அதிலும் முள் உண்டு. அது தான் குத்தியதோ, கீறல்கள் தெரிந்தன.  தாறு மாறாக வளர்ந்த கொடிகள் அவள் ஆடையில் சுற்றிக் கொண்டு விட்டன போலும்.  உருவி எடுத்ததால் கிழிந்து விட்டிருந்தன.  தாமரைத் தண்டை வீசியெறிந்தது போல வாடி மெலிந்து இருந்தாள். அவ்வளவு தான் எனக்குத் தெரிந்தது. சாப்பிட்டாளா, தாகமா என்ன செய்தாள் என்பதும் தெரியாது.  உலகை விட்டே வெகு தூரம் போக விரும்பியதாகத் தெரிந்தது.  சிவந்த தேகம். காட்டு யானை சேற்றில் மூழ்கி விட்டதை போலவும், கணவனோ, பெற்றோரோ அருகில் இல்லாமல் ஏதோ பயங்கர அனுபவம் பெற்றவள் போல இருந்தாள். கேசம் விரிந்து கிடந்தது.  உடன் இருந்தவர்கள் திடமாக தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். (பலவிதமான வர்ணனைகளுடன் அந்த மலைப் பிரதேசத்து தாவரங்கள் பற்றிய செய்தியும் மிக விவரமாக கொடுக்கப் பட்டுள்ள பகுதி)  

அருகில் சென்ற என்னை மரியாதையுடன் வணங்கினாள். என்னவென்று அழைப்பேன். இரக்கம் தான் அதிகமாகி இருந்தது.  நல்ல குலத்தில் வந்தவள் என்பது தவிர எதையும் ஊகிக்க முடியவில்லை. வத்ஸ! என்றால் பொருத்தமாக இல்லை. தாயே என்பது அதிகம், சகோதரி என்பேனா, தேவி என்று பொதுவாக அழைப்பேனா சந்தேகம் வந்தது.   பல விதமாக அழைக்கும் சொற்கள் மனதில் வந்தாலும் எதுவும் சரியாகப் படவில்லை. ராஜபுத்ரி என்றால் – நிச்சயமாக தெரியாதவளை சொல்லலாமா, பத்ரே- மரியாதை குறைவாக பட்டது, ஆயுஷ்மதி என்ற பொதுவான அழைப்பு எனக்கு அந்த நிலையில்  பொருத்தமாக படவில்லை,  என்று இவ்வாறுயோசித்து யோசித்து அனைத்தையும் விலக்கி விட்டேன்.  அதற்குள் அந்த பெண்களில் ஒருவள் முதியவள் என்பது தலை நரைத்திருந்ததால் தெரிந்தது,  என்னிடம் ஏதாவது உதவி பெற முடியுமா என்று யோசித்தவள் போல விசாரித்தாள். பகவன்! பரிவ்ராஜகர்கள் பொதுவாக அனைத்து பிராணிகளிடமும் பரிவுடன் இருப்பவர்கள். தீக்ஷை எடுத்துக் கொண்ட க்ஷபணர்கள்(ஜைன மதத்தினரும்)   அதே போலத் தான்  யாரானாலும் உதவ தயாராக இருப்பவர்கள்.  சாக்ய முனிவர்கள் – பௌத்தர்கள் –  ஜீவ கருணையைத் தான் முதலாக சொல்கிறவர்கள்.  முனிவர்களும் ஜீவ தயை தான் தர்மத்தின் முதல் படி என்பவர்கள். அது தான் பரலோக சாதனம் என்பர். ஒரு ஜீவனின் உயிரை காப்பாற்றுவது போல உயர்ந்த செயல் மற்றொன்று கிடையாது.   இந்த எங்கள் யஜமானி, இவள் தந்தை மறைந்து விட்டார். கணவனும் மறைந்த பின், சகோதரன்  போன இடம் தெரியவில்லை என்பதாலும்,  தனக்கென்று சந்ததி இல்லாததாலும்  செய்வதறியாது திகைத்தாள். அந்த சமயம் சத்ருவும் உதாசீனமாக எதோ சொல்ல, அந்த அவமதிப்பை பொறுக்க மாட்டாதவளாக நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தாள். 

அரச குமாரியாக வாழ்ந்தவள், யாரிடமும் கடுமையாக பேசி அறியாதவள், அவள் உலகமே அரண்மனைக்குள் என்று பாதுகாப்பாக  இருந்தவள், இன்றி, மலரை விட மென்மையான மனம் படைத்தவள் எங்கள் தலைவி.  கனவிலும் குரு ஜனங்கள், முதியவர்கள் சொல்வதை எதிர்த்து பேச மாட்டாள். திடுமென வந்த ஆபத்து, புற உலகில் தனித்து விடப்பட்டவள்  உலகத்தில் பற்றுதலும் அகன்று விட்டதால் மரணத்தை தானாக வரவேற்கிறாள்.  மனஸ்வினி, அவமதிப்பை பொறுக்க மாட்டாள். சுகுமாரி, காட்டில் வழி தெரியாமல் அலைந்து களைத்து விட்டவள்.  பின் தொடர்ந்த்து வந்த எங்களைப் பிரிந்து வெகு தூரம் வந்து விட்டாள்.   எங்கள் நல்ல காலம் இவளை சமயத்தில், கண்டோம். காப்பாற்றுங்கள், என்றாள். நான் சமாதானம் செய்தேன். ‘ஆர்யே! பயப்பட வேண்டாம். எங்கள் அருகில் வந்து விட்டதால், இனி எங்கள் பொறுப்பு. இவள் சோகம் தீர தேவையானதை செய்வோம். ஒரு முஹூர்த்தம் பாதுகாத்துக் கொண்டிருங்கள். எங்கள் குரு நாதரிடம் போய் சொல்கிறேன்.  பகவான் சுகத  (புத்த பிக்ஷுக்களை ச் சொல்லும் வட்டார வழக்கு)  அருகில் தான் இருக்கிறார். பரம தயாளு அவர். நான் போய் விவரங்களை தெரிவிக்க வேண்டியது தான் அவரே வந்து விடுவார்.  அவருடைய கனிவான பார்வையாலும், இனிமையான சொற்களாலும் உங்கள் தலைவியை சமாதானப் படுத்தி விடுவார்.  இவர்களுடைய இயல்பான நற்குணங்களும் இவரை காக்கட்டும், இதோ வருகிறேன், என்று சொல்லி ஓடி வந்தேன், என்றான்.   சீக்கிரம் வாருங்கள், என்று சொல்லி அந்த முதியவள் என் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.   அதை உங்களிடம் தெரிவிக்க ஓடி வந்தேன் என்றான். 430

அரசன் அந்த பிக்ஷு சொன்ன விவரங்களைக் கேட்டு கண்களில் நீர் வழிய தன் சகோதரி தான் என்பது தீர்மானமாக உள்ளுணர்வு சொல்ல, காதுகள் கேட்டுக் கொண்டிருந்தாலும் மனது அதை உள் வாங்காமல் அடுத்து தான் செய்ய வேண்டியதை நினைத்தது.  சந்தேகமேயில்லை. தன் உடன் பிறந்தவள் தான் . தன் மேலேயே கோபம் தலைக்கேறியது.  அந்த ஸ்ரமண ஆசார்யன்- ஜைன குரு – அவரிடம் சொன்னான்.’ ஆர்ய! நிச்சயமாக அவள் என் சகோதரி தான்.  சகோதரன் .நான் இருப்பதை எப்படி மறந்தாள்.  மந்த பாக்யன் நான். என்னை க்ரூரன் என்றோ, உதவ மாட்டேன்  என்றோ நினைத்திருக்க மாட்டாள். விதியின் போக்கில் உடன் இருந்து கெடுத்த அவள் கணவனின் குடும்பத்தினரிடம்  அவள் என்ன துக்கம் அனுபவித்திருந்தால் இப்படி ஒரு முடிவைத் தேடியிருப்பாள்.  காரணமின்றி அவள் வாழ்க்கையில் அவமதிப்புகளை முதன் முதலாக சந்திக்கிறாள் அதனால் ஏற்பட்ட தடுமாற்றமே.  ஆர்ய! வாருங்கள். எனக்கு அந்த பெண் இருக்கும் இடம் அழைத்துச் செல்லுங்கள். என் சகோதரி அல்ல, வேறு ஏதோ ஒருவள் என்றாலும், தயவு செய்து நீங்களும் அவள் துக்கம் தீர உதவி செய்யுங்கள்.  வாருங்கள்’ என்று சொல்லிக் கொண்டே தான் முன் நடந்தான். பிக்ஷு அந்த பிரதேசத்தை அறிந்தவர். அதிக சிரம மில்லாத பாதையில் அரசனை அழைத்துச் சென்றார்.  

வழியில் உடன் வந்த சாமந்தர்கள், அரசனைத் தேடி வந்தவர்களும் குதிரைகளை நடத்திக் கொண்டு வந்து சேர்ந்து கொண்டனர். அனைவரும் வேகமாக அந்த புத்த பிக்ஷுவின் மகள் வழி காட்ட, வேகமாக நடந்து சென்றனர்.  அருகில் செல்லச் செல்ல பல பெண்களின் குரல்கள் கேட்டன. தேவதைகளை வேண்டிக் கொண்டிருந்தனர். தர்ம தேவதையே, எங்கிருக்கிறாய் என்றும், குல தேவதைகளே காப்பாற்ற ஓடி வாருங்கள் என்றும், பூமித் தாயே இன்னமும் பொறுப்பாயா, எங்கள் மகளை இந்த துன்பத்திலிருந்து விடுவிக்க மாட்டாயா என்றும் , புஷ்ய பூதியின் குடும்ப விளக்காய் வந்த திருமகள் எங்கள் செல்வி,  இவள் அனாதையாக மடிவதா? தேவி  இவள் என்றும் மங்களகரமானவள், இவள் கணவனை அழித்து விட்டதால் இவள் வாழ்க்கையே பயனின்றி போக வேண்டுமா?  பகவன்! பக்த ஜனங்களின் துக்கத்தைக் கண்டும் கானாமல் இருப்பாயா உன்னை சுபக என்பார்களே, தூங்கி விட்டாயா  (புத்தர்),  ராஜ தர்ம, உன்னை புஷ்ய பூதி தன் உயிருக்கும் மேலாக மதித்து நடந்தானே, அவனுடைய பிரியமான மகள் இவள், ஏன் பராமுகமாக இருக்கிறாய்?  விந்திய மலையே ஆபத்துக்களில் காப்பவன் என்ற பொருளில் விபத்பாந்தவன் என்போம், வணங்குகிறோம், நீதான் கேளேன், தாயே மகா வனமே, உன் மடியில் சரணடைந்தோம், இவள் கணவனின் அன்பைத் தவிர எதுவும் அறியாதவள்,  நல்ல நடத்தை உள்ளவள், குணவதி, யாருக்கும் இவளால் துன்பம் நேர்ந்ததும் இல்லை, வேறு விதமாக துன்பம் அடைந்தவர்களுக்கு அடைக்கலமாகவும் இருந்த எங்கள் தலைவி  இவள், ராஜ புத்ரி, யசோவதி, தாயே, என்று அரற்றிக் கோண்டிருந்தனர்.  வீரர்களான  உடன் பிறந்தவர்களே, யாரும் வர மாட்டீர்களா. – பெண்களின் அழுகுரல் பலத்து கேட்டது.  மேலும் வன தேவதைகளை அழைத்தும் வேண்டிக் கொண்டனர்.  நர்மதா நதியை, பறக்கும் பறவைகளே என்றும் யானைகளை என்று ஒவ்வொருவரையும் அழைத்து வேண்டியதாக கவியின் வர்ணனை. 

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

தொடரும் தேடல் ஹர்ஷனின் உறுதிமொழி

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.