- ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை
- கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்
- நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்
- கல்லிலே கலைவண்ணம் கண்டார்
- உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்
- புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்
- அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்
- நவீன உலகை உருவாக்கும் கணிதம்
- விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்
- தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம்
- ரங் பர்ஸே
- தூக்கணாங்குருவி கூடு
- பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்
- ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
- பசுமையின் மனம் பாடும் ரகசியம்
- நீர் துளியில் நிகழும் புதுமைகள்
- எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
- வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்
- பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
- பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்
- ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?
- இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
- மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை
- நீலப் பிரகாசம்
- மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?
- இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து
கரும்பாறை போல் வலிமை
கனமிகு கிரானைட் மண்ணில்
காலத்தின் வேகத்திலும் கரையாமல்
கதைகள் சொல்லி நிற்கும் இன்றும்.

தக்காண பீடபூமியின் மேல் அமைந்துள்ள ஒரு குவிமாடம் வடிவில் அமைந்துள்ள ஒரு பெரிய கிரானைட் பாறை மீது அமர்ந்து கொண்டு, அருகில் இயற்கை அமைத்துள்ள கற்களை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
தக்காண பீடபூமியில் பாறைகளின் உருவாக்கம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடிப்புகளினால் உருவான பசால்ட் (basalt) பாறை அடுக்குகளில் உள்ளது. இந்த நிகழ்வு ‘டக்கன் டிராப்ஸ்’ (deccan traps) என்று அழைக்கப்படுகிறது. அடுக்கடுக்காக படிந்துள்ள பசால்ட் பாறைகள் பல லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேல் பரப்பில் காணப்படுகின்றன. தக்காண பீடபூமி ஆழமான உணர்வும் ஆயுட்காலமும் கொண்டது. இதில் கிடைக்கும் கறுப்பு (Black) மண் வகை பயிரிட மிகவும் உகந்தது. ஹைதராபாத், காலத்தால் செதுக்கப்பட்ட ஒரு நகரம். அதன் முதுமையடைந்த கிரானைட் பாறைகள், அமைதியான சாட்சிகளைப் போல, தக்காண பூமியின் ஆழமான வரலாற்றைப் பற்றிய பார்வையை வழங்குகின்றன. இந்த புவியியல் அடுக்குகளை ஆய்வு செய்வதன் மூலம், இப்பகுதியின் கதையை, அதன் நிலப்பரப்பை வடிவமைத்த சக்திகள் முதல் அதன் மீது உருவாகி அழிந்த நாகரிகங்கள் வரை, நம்மால் அறிய முடியும்

கிரானைட், ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேலோட்டத்தில் ஆழமாக உருவான ஒரு படிக அடித்தளமாகும். இது முதலில் குவார்ட்ஸ் (quartz), ஃபெல்ட்ஸ்பார் (feldspar) மற்றும் மைக்கா (mica) போன்ற மூன்று கனிமங்கள் உருகி மாக்மாவாக (magma)மிகுந்த அழுத்தத்தில் இருந்த நிலையில், மெதுவாக குளிர்ந்து திடமடைந்தன. பின்னர், டெக்டோனிக் (tectonic) சக்திகளால் இந்த கிரானைட்டுகள் மேற்பரப்புக்குத் தள்ளப்பட்டு, எண்ணற்ற ஆண்டுகளாக, மழை, காற்று மற்றும் வெப்பநிலை போன்ற தாக்கங்களால் மாறுபட்டு, முதுமையாக்கல் மற்றும் அரிப்பு ஆகிய இயற்கையின் இடைவிடாத சக்திகளால் நிலப்பரப்பில் செதுக்கப்பட்டன. இந்த சக்திகள் பாறைகளை வெடித்து, அவற்றை சிறிய துண்டுகளாக உடைத்து, இன்று நாம் காணும் தனித்துவமான வடிவங்களாக மாற்றின. இந்த செயல்முறைகள், காலகாலமாக செயல்பட்டு, ஹைதராபாத்தின் தனித்துவமான புவியியல் மரபை வரையறுக்கும் அற்புதமான பாறைகள் மற்றும் மேடுகளை உருவாக்கின.

இந்த கிரானைட் பாறைகள் வெறும் புவியியல் அம்சங்கள் மட்டுமல்ல; அவை வரலாற்று ஆவணங்களாகும், இப்பகுதியின் கடந்தகால காலநிலை, தாவரங்கள் மற்றும் ஆரம்பகால மனித குடியிருப்புகள் பற்றிய தடயங்களை பாதுகாக்கின்றன. பாறைகளை காப்பாற்றும் சங்கம் இந்த இயற்கை அதிசயங்களை பாதுகாக்க உழைக்கிறது, அவற்றின் கலாச்சார மற்றும் அறிவியல் மதிப்பை அங்கீகரிக்கிறது.
ஹைதராபாத்தின் கிரானைட் கதை, புவியியல் காலத்தின் ஒரு பதிவு, இயற்கை சக்தியின் சான்று, மற்றும் பூமிக்கும் அதன் குடியிருப்பாளர்களுக்கும் இடையேயான ஆழமான தொடர்பின் நினைவூட்டல். இந்த அடுக்கு அடுக்கான பாறைகளை ஆராய்வதன் மூலம், நாம் பூமியின் வரலாறு மற்றும் அதில் நமது இடத்தைப் பற்றிய ஆழமான புரிதலை அடைய முடியும்.
கோல்கொண்டா பகுதியைச் சுற்றி உள்ள பாறைகள், அந்தப் பகுதியின் பண்டைய புவியியலையும், சமயம் சார்ந்த மாறுதல்களைப் பற்றிய கதையை பேசுகின்றன.
இப்பகுதியின் புவியியல் கதை, கோல்கொண்டா நிலப்பரப்பை அலங்கரிக்கும் பாரம்பரிய கிரானைட் பாறைகள் மூலம் தொடங்குகிறது. இந்த கிரானைட் பாறைகள் ப்ரோட்டெரோசாயிக் (proterozoic) காலத்திலே உருவானவை. இவை தென்னிந்தியா முழுவதும் பரவி உள்ள Peninsular Gneissic Complex எனப்படும் பாறை அமைப்பின் பகுதியாகும். இந்த பாறைகளுடன் இணைந்த இந்தியாவில் உள்ள 150 கிம்பர்லைட் (kimberlite) குழாய்களில் 120க்கும் மேற்பட்டவை கோல்கொண்டா பகுதியில்தான் உள்ளன. இதனால் இது உலகப் புகழ்பெற்ற வைர உற்பத்தி மற்றும் புவியியல் ஆய்வுக்கான முக்கியமான இடமாக மாறியது.

இந்த புவியியல் தன்மையே கலாச்சார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. கொல்லூர் மற்றும் அதன் சுற்றியுள்ள மையங்களில் இருந்து கோஹினூர் (Kohinoor), ஹோப் (Hope), ரெஜன்ட் (Regent), தர்யா-இ-நூர் (Darya-e-Nur) போன்ற புகழ்பெற்ற வைரங்கள் கண்டறியப்பட்டன. இதனால் சர்வதேச வணிகர்கள், பேரரசுகள், யாவரும் இந்த பகுதியை நோக்கி வரத் தொடங்கினர்.
13ம் மற்றும் 14ம் நூற்றாண்டுகளில் நிலவிய காகதீய மற்றும் பாமனி அரசுகள் பாறை அடித்தளங்களைச் சார்ந்த கோட்டைகளை கட்டினர்.
இவ்விடத்தில் பின்னர் குதுப் ஷாஹிகள் (Qutb Shahis) இஸ்லாமியர்கள் மற்றும் நிஜாம்கள் வந்து அதற்கும் மேலான கட்டிடக்கலையை உருவாக்கினார்கள். அவர்கள் இயற்கை பாறைகளுக்கு இடையே அரண்மனைகள், கல்லறைகள் போன்ற கட்டிடங்களையும் இணைத்து அமைத்தனர்.
குதுப் ஷாஹிப் ஆட்சியில் கோல்கொண்டா ஒரு இராணுவக் கோட்டத்திலிருந்து ஒரு கலாசார தலைநகராக மாறியது (1495-1687). அவர்கள் பாரசீகத்தில் மற்றும் இந்திய கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கினர்.
பல இடங்களில் பாறையின் மீது பாரசீக எழுத்துக்கள், ஹிந்து சின்னங்கள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன – இது சமய கலந்தாய்வுகளுக்கும் சமூக மாற்றங்களுக்கும் சான்றாக விளங்குகிறது.
வைர வர்த்தக மையமாக கோல்கொண்டா உருவானதால் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து குடியேறினர். இதனால் இசை, நடனம்,, உணவியல், மொழி, கலை ஆகிய துறைகளில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டன.

நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் மொழி, ஆட்சி, மற்றும் சமூகவியல் மாறுதல்களுக்கு இக்கற்கள் இன்றும் சாட்சியாக விளங்குகின்றன.

ஹைதராபாத் நகரின் புறநகர்ப் பகுதிகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துகின்றன. இந்த ஓவியங்களில் ஆமைகள், மீன்கள் மற்றும் வடிவியல் வடிவங்கள் சிவப்பு நிறத்தில் (red ochre) வரையப்பட்டுள்ளன, இவை அருகிலுள்ள நீர்நிலைகள் மற்றும் குவார்ட்சைட் கருவிகளின் துண்டுகளை அடிப்படையாகக் கொண்டு மெசோலித்திக் காலத்தைச் சேர்ந்தவையாக அறியப்படுகின்றன. மேலும், சித்திபேட் மாவட்டத்தின் தாசர்லபள்ளி மற்றும் மேட்சல் மாவட்டத்தின் யாதரம் ஆகிய இடங்களில் பத்து பாறை ஓவிய தளங்கள் கண்டறியப்பட்டன. இவற்றில் யானைகள், மனிதர்கள் மற்றும் விலங்கு உருவங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் ஹைதராபாத் பகுதியில் பழங்கால மனித வாழ்க்கை மற்றும் கலைத்திறனைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
https://indianexpress.com/article/cities/hyderabad/prehistoric-rock-paintings-telangana-7915834
செகந்தரபாதுக்கு அருகிலுள்ள மௌலா அலி மலை (Moula Ali Hills), மூன்று மலைத்தொடர்களில் ஒன்றாக, தனித்துவமான பாறை அமைப்புகளையும், வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இம்மலையின் உச்சியில் அமைந்துள்ள தர்கா, ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. 1578ஆம் ஆண்டு குதுப் ஷாஹி வம்சத்தின் இப்ராஹிம் குதுப் ஷாவின் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த தர்கா, ஹஸ்ரத் அலியின் கைரேகை பதிந்த பாறையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மசூதி, ஆஷூர்கானா மற்றும் பரதாரி போன்ற கட்டமைப்புகள் இங்கு எழுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் மாதத்தில் நடைபெறும் உர்ஸ் திருவிழாவில், இந்து மற்றும் முஸ்லிம் பக்தர்கள் உட்பட பலர் இங்கு வந்து வணங்குகின்றனர், இது இப்பகுதியின் ஒருங்கிணைந்த மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகிறது.
1935இல் நடந்த அகழ்வாராய்ச்சிகளில், நியோலிதிக் கால பொருட்கள் மற்றும் மெகாலிதிக் கல்லறைகள் கண்டறியப்பட்டன, இது இப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது.
https://doi.org/10.62656/SIJSS.v22i3.802
ஹைதராபாத்தின் பரிணாம வரலாற்றைச் சுமந்த பில்லியன் ஆண்டுகளள் பழமையான கற்கள் இன்று தத்தளிக்கின்றன. இன்றைய நகரம் வளர்ச்சியின் பெயரில் வேகமாக உருண்டு செல்கையில், சில கற்கள் மட்டும் அங்கும் இங்கும் சாட்சிகளாக நின்றுகொண்டு இருக்கின்றன, பிறந்ததலிருந்தே அவ்விடத்தின் உயர்ந்த கலாசார வேறுபாடுகளுக்குப் பின்னணியாக இருந்த அந்த பாறைகள்.
இதோ இங்கு எழுந்து கொண்டிருக்கும் இக்கட்டிடங்கள், வெறும் சிமெண்ட் மட்டுமல்ல, அதற்குள் புதைக்கப்பட்ட ஒரு பழங்காலக் கல், ஒரு வரலாற்று சின்னம், ஒரு அனாதை சிங்கப்பாறை. ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், மற்றும் லின்கோ ஹில்ஸ் போன்ற இடங்களில் ஒளிரும் வெளிப்பாடுகளுக்குப் பின்னால் அழுத்தப்பட்டிருக்கும் கதைகள் அவை. ஒரு காலத்தில் இதே இடங்களில் கம்பீரமாக எழுந்து நின்ற பாறைகள், இன்று வணிகத் தொடர்புகளால் வேரறுக்கப்பட்டு கேட்பாரற்ற நிலையில் தனித்து விடப்பட்டுள்ளன.

காஜகுடா மலை (Khajaguda hill), இயற்கையின் சிறந்த உருவாக்கங்களால் நிரம்பிய ஒரு இடம், இன்று சுற்றிப் போடப்பட்ட வேலிகள் கொண்டு ‘பாதுகாப்பு’ எனும் பெயரில் பொதுமக்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட இடமாக மாறியுள்ளது. அந்த கடைசி சில பாறைகளும் இப்போது சிறையிலடைக்கப்பட்ட நினைவுகள் போல காட்சி அளிக்கின்றன.
இந்த இடிபாடுகளுக்கிடையே இருப்பது சில கற்கள் மட்டுமே. அவற்றைத் தழுவி, சுற்றி நடப்பதற்கு இடமளிக்க முயல்கிறார்கள் சிலர். இளம் மாணவர்கள் சுவர்களில் அழகான ஓவியங்களை வரைந்து நகருக்கு வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியப்படாத ஒன்று, நகரம் சூழ்ந்திருந்த 6,000 ஆண்டுகளுக்கு மேலான பாறை ஓவியங்கள், இப்போது அழிந்து போனவை அல்லது கால வெள்ளத்தில் மறைக்கப்பட்டவை.
கடந்த ஆண்டு வெளியான ஆவணப்படம், “The Other Kohinoor: The Rocks of Hyderabad”, பாறைகளின் மௌனத்தையும், முடிவுகளுக்குள்ளான அழிவையும் விளக்க முற்படுகிறது. இது இன்றைய தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வு சுடராக அமையும் என்று நம்புகிறது.

இன்றைய நகரத்தில், யாரோ ஒருவரால், யாருக்காகவோ கட்டப்படும் கட்டிடங்கள், அவ்விடத்தின் பாரம்பரியத்தை அழித்துக் கொண்டு செல்கிறது. ஆனால் அங்கு ஏற்படும் இடைவெளியில், யாரோ சிலர் அந்த வேரை தழுவ முயல்கிறார்கள் என்பது இன்றைய நிதர்சனம். சிறிய பாறைகள் இப்போது நகரத்தின் ஓரங்களில் ஒளிந்து கொண்டு, தொலைந்து போன அடையாளங்களை சுமந்து நிற்கின்றன.
இது குறித்து தி ஹிந்துவில் வந்துள்ள செய்தியின் சுட்டி
அடுத்த முறை, உங்கள் அருகில் இருக்கும் பாறையை சற்று கூர்ந்து நோக்குங்கள். அது சொல்வது நம் முந்தைய தலைமுறை பேசத் தவறிய வரலாறாக இருக்கலாம்.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
