ரங் பர்ஸே

ஒரு பத்து நாட்களுக்கு  முன்பு, சோமர்வில் (பாஸ்டன் புறநகர் பகுதி) நகரத்திலுள்ள லிட்டில் இந்தியா கடைக்கு செல்ல நேர்ந்தது. அங்குள்ள டிவியில், “Rang barse bheege chunar wali, rang barse …’ என்ற பிரபலமான பாலிவுட் காணொளி வந்து கொண்டிருந்தது. என்னையும் மற்றும் சில இந்தியர்களையும் தவிர, அங்கு வந்திருந்த சில அமெரிக்கர்களும் இப்பாட்டை மிகவும் ரசித்ததைப் பார்க்க முடிந்தது. நவீன நாகரீக வளர்ச்சியில், நாற்பது வருடங்களுக்கு மேலாகியும் ஒரு ஹிந்தி பாடலானது, ஒரு சாதாரண பாட்டாக மட்டுமில்லாமல், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இந்தியாவின் ஒரு பகுதியை மட்டுமே ஆக்கிரமித்திருந்த ஹோலி என்ற ஒரு பண்டிகையை ‘பான் இன்டர்நேஷனல்’ ஆக மாற்றியிருப்பது, வெறும் வணிக நோக்கமா இல்லை ஒரு பண்டைய கலாச்சாரத்தின் ஈர்ப்பு சக்தியா என்பதை கணிக்க இயலவில்லை.

எனது நினைவுகள் நாற்பது ஆண்டுகளுக்கு பின்னால் செல்கிறது. 1981ல் நானும் எனது பீகாரி நண்பர்  கௌஷலும் ‘சில்சிலா’ திரைப்படம் பார்க்க பெங்களூருலிலுள்ள மெஜஸ்டிக் பகுதிக்குச் சென்றிருந்தோம். இப்படம் பார்த்த பிறகு, எனது நண்பர் ‘ரங் பர்ஸே’ பாட்டை எழுதியது யார் என்று தெரியுமா என்று கேட்டார். அமிதாப் பச்சன் பாடினார் என்று தெரியும், ஆனால் லிரிக்ஸ் யாருடையது என்று தெரியாது என்றேன். பிறகு மீரா பஜன் கேட்டிருக்கிறாயா என்றதற்கு பலமுறை லதா மங்கேஷ்கர் மீரா பஜன் கேட்டுள்ளேன். ஆனால், எம்எஸ் ஸின் ‘காற்றினிலே வரும் கீதம்’ என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்ற போது, அவர் மிரண்டது இன்னும் ஞாபகத்திற்கு வருகிறது! ஹிந்தி கலாச்சாரத்தை பற்றி அன்றைய தமிழர்கள் அறிந்த அளவிற்கு, வட இந்தியர்களுக்கு, தென்னிந்தியாவைப்  பற்றிய புரிதல் இல்லை – ரேகா, ஹேமமாலினி, வைஜந்தியமாலா போன்ற பல தமிழ் நடிகைகள் பிரபலமாக இருந்தாலும், இளையராஜா, ஏஆர்ரஹ்மானுக்குப் பிறகு தான் தமிழ் பாடல்கள் அங்கு பிரபலமாகியது. ‘ரோஜா’  ரிலீஸாகிய  வருடம், தில்லியில் எனது காஷ்மீர் நண்பர், அவர் குழந்தைகளுக்கு ரோஜாவின் தமிழ் கேசட் எங்கு கிடைக்கும் என்று என்னிடம் கேட்டு வாங்கி கொடுத்தார் என்றால் இன்று ஆச்சர்யபடுவதற்கு ஏதுமில்லை.

மன்னிக்கவும். எங்கோ சென்று விட்டேன். அன்றுதான், அமிதாப் பச்சனின் தந்தையார், ‘ஹரிவன்ஷ் ராய் பச்சன்’ ஒரு கவிஞர் என்றும், அவருடைய ‘மதுஷாலா’ புத்தகம் மிகவும் பிரசித்தமானது என்றும் தெரிய வந்தது.

இப்படத்தில், ராஜஸ்தானி மற்றும் ஹரியான்வி கலந்த நாட்டுப்புற இசையில் அமைக்கப்பட்ட ராய் பச்சனுடைய மீரா பஜன் சாயலில் அமைந்த கவிதை, திரைப்பட ஸ்கிரிப்ட்டின் பொருத்தமான சூழலுக்கு ஏற்ப பாடலை மாற்றி அமைக்கப்பட்டதாகவும், மேலும் பாடல் வரிகள் இந்தியின் அவதி பேச்சுவழக்கில் அமைந்துள்ளது என்று எனது காலம் சென்ற நண்பர்  கூறியது ஞாபகம் வந்தது.. இவர் அவதியைத் தவிர, மைதிலி மற்றும் போஜ்புரியிலும் சரளமாகப் பேசுபவர். 

பாலிவுட் திரைப்படங்களில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் பாடல்கள், ஷோலே (1975) இல் “ஹோலி கே தின்”, சில்சிலா (1981) இல் “ரங் பர்ஸே”, மற்றும் யே ஜவானி ஹை தீவானி (2013) இல் “பலாம் பிச்காரி” போன்றவை, இந்தியாவின் இசை மற்றும் வண்ணங்களின் மூலம் கொண்டாட்டத்தை வடிவமைத்துள்ளன. இந்த பாடல்கள் ஹோலியின் மகிழ்ச்சியை மட்டும் அல்லாமல், காலத்திற்கேற்ப கலாச்சார மாற்றங்களையும் பிரதிபலிக்கின்றன – நாட்டுப்புற இசை முதல் நவீன, ஆற்றல் மிகுந்த பாடல்கள் வரை.

காணொளியில் அடுத்த பாடல் வரிகள் “tune hawa mein bhaang milaya”. ஹோலி பாடல்களின் வரிகளும் இந்த மாற்றத்தை பிரதிபலிக்கின்றன! ஹோலியின் இசையும் வண்ணங்களும் தலைமுறை தலைமுறையாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஹோலி என்பது வசந்த காலத்தையும் அறுவடையையும் கொண்டாடும் ஒரு பழங்காலப் பண்டிகை. அதன் தோற்றத்தை விளக்க பல இந்து புராணக்கதைகள் உள்ளன. இருப்பினும், அதன் வண்ணங்களுடன் தொடர்புடையது, ராதா, கிருஷ்ணரைப் பற்றியது. அவர் தனது காதலி ராதாவின் அழகான தோலுடன் ஒப்பிடும்போது தனது நீல நிற தோலைக் கண்டு வெட்கப்படுகிறார். எனவே தனது தாயாரின் அறிவுரைக்கேற்ப, ராதாவை தோலில் வண்ணம் பூசுமாறு பரிந்துரைக்கிறார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் கலையானது இந்தியாவின் பருவகால தாளங்களை பிரதிபலித்துக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்திய ஓவியங்களில் மிகுந்த செல்வச் செழிப்பைக் கண்ட ஒரு பண்டிகை  ஹோலியாகும். பண்டைய காலங்களில், கோயில் ஓவியங்கள் வசந்த பண்டிகைகளை சிக்கலான விவரங்களுடன் சித்தரித்துள்ளன. இடைக்காலத்தில் அரசவைகளில் ஹோலி காட்சிகளைப் பிடிக்கும் மினியேச்சர் ஓவியங்கள் காணப்பட்டன. இந்த கலைப்படைப்புகள் பெரும்பாலும் ராதா மற்றும் கோபியர்கள் மீது வண்ணங்களைப் பூசுவதை சித்தரித்தன, இது தெய்வீக அன்பைக் குறிக்கிறது. இவைகளில், ஹிமாச்சலத்தின் பஹாரி, ராஜஸ்தானின் ஃபாட் மற்றும் பிச்வாய், பீகாரின்  மதுபானி மற்றும் முகலாய கலை போன்ற பாரம்பரிய ஓவியங்கள், வண்ணங்களில் எழுதப்பட்ட ஹோலி விளையாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இலக்கியத்திலும் காளிதாசரின் குமார சம்பவம் மற்றும் மாளவிகாக்னிமித்ரா நாடகங்களில் இவற்றிற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. ப்ரஜ் பூமி (மதுரா ) பகுதியில் உள்ள பிருந்தாவனத்தில் கொண்டாடப்படும் ஹோலி இன்றும் மிகவும் பிரபலமானது. ராஜஸ்தானின் பில்வாராவைச் சேர்ந்த ஃபாட் கலைஞர் ஜோஷி (https://www.phadchitra.com/shree-lal-joshi) மற்றும் குடும்பத்தினர் ஆயிரம் ஆண்டுகளாக இக்கலை வடிவத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த  ஓவியங்கள் மூலம் ஹோலி விளையாட்டு மற்றும் அதை தழுவிய பல்வேறு கலாச்சார அம்சங்கள்  வெளிப்படுகின்றன. ஹோலி என்பது புண்ணியமிக்க திருவிழாவாகவும், கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதல் கதை மட்டுமன்றி காதலும் சமத்துவமும் கொண்டாடப்படும் பண்டிகையா கவும் கருதப்படுகிறது.

மேலும் இவ்வோயிங்களில், சிறிய பித்தளைக் கலங்கள் அல்லது மண் பாத்திரங்களில் இயற்கை மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ‘குலால்’ எனப்படும் நிறமூட்டல் பொடிகளையும் மற்றும்  வண்ணம் கலந்த நீரை தெளிப்பதற்கான  பிச்காரி போன்ற சிறு குழாய்களையும் காணலாம். ஆனால், பெரும்பாலும் எந்த பழைய ஓவியத்திலும் குலால் தூள்களை காற்றில் தூவுவது போன்ற காட்சி தென்படவில்லை.

பாரம்பரியமாக, குலால் வசந்த கால மலர்கள், பெர்ரி வகைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது, மேலும் அதன் பொருட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதாகவும் கருதினர். பொதுவாக பயன்படுத்தப்பட்ட நிறங்களில் மஞ்சள், சிவப்பு ochre, கரிய மை, indigo நீலம் மற்றும் லாபிஸ் லசுலி போன்றவை அடங்கும். இந்த கனிமங்கள் மரக்கொழுந்து (அ) பிசின் போன்ற பிணைப்பிகளுடன் கலந்து நீடித்த தன்மையை வழங்கியது. மேலும் மஞ்சள், பீட்ரூட், பலாஷ் பூக்கள், மருதாணி இலைகள் மற்றும் காக்டஸ் போன்றவை பிரகாசமான நிறங்களை உருவாக்கியது. இந்த நிறப்பொருட்கள் ஓவியங்களுக்கு இயற்கையான தோற்றத்தை வழங்கின. மாட்டின் சிறுநீர் (மஞ்சள்), நண்டு சிப்பியின் தூள் (வெள்ளை) மற்றும் விளக்கு கரி (கருப்பு) போன்றவையும் உபயோகத்தில் இருந்தன. இந்த இயற்கை மூலப்பொருட்கள் நீடித்த நிறங்களுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருந்தன. மேலும், இவை பாரம்பரிய ஓவியங்களின் நுணுக்கமான விவரங்களை அழகுபடுத்த உதவின.

இடைக்காலத்தில், குலாமின் நிறங்கள் தாவர மூலங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. வேப்ப இலை பொடிகளிலிருந்து (azadirachta  indica) பச்சை, மஞ்சள் கிழங்கிலிருந்து (curcuma  longa ) சிவப்பு மற்றும் மஞ்சள் – மஞ்சளிலுள்ள குர்குமின் மூலக்கூறு, நடுநிலை pH இல் பிரகாசமான மஞ்சளாகவும், சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு) போன்ற ஒரு காரத்துடன் சேரும்போது, சிவப்பு நிறமாக மாறும். பச்சை நிறத்திற்கு  மருதாணி இலைகளும், மஞ்சளுக்கு சாமந்தியும் (chrysanthemum), சிவப்புக்கு பலாசம் (flame of the forest), மாதுளை அல்லது சிவப்பு சந்தனம், நீலத்திற்கு இண்டிகோ மற்றும் கருப்புக்கு கரியும் பயன்படுத்தப்பட்டது.

https://cen.acs.org/articles/96/i9/Holi-colors-gives-vibrant-hues.html

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொழில்துறை உற்பத்தியுடன் செயற்கை ஹோலிப் பொடிகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின, ஏனெனில் துடிப்பான மற்றும் நீடித்து உழைக்கும் வண்ணங்களுக்கான தேவை அதிகரித்தது. இந்த செயற்கைப் பொடிகள் பாரம்பரிய தாவர அடிப்படையிலான வண்ணங்களை மாற்றின. இவைகள் செயற்கை வேதியியலுடன், வண்ணங்கள் பிரகாசமாகவும், சில சந்தர்ப்பங்களில் அதிக நச்சுத்தன்மையுடன் மாறும் வாய்ப்பினையும் கொண்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் ஹோலி பொடிகள் (அ) தூள்கள், உணவு, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சார்ந்த சாயங்களுடன் (FD&C colors), 95% க்கும் அதிகமான சோள மாவு கலந்த கலவையாகும்.

16ஆம் நூற்றாண்டுண்டுக்குப் பிறகே சோளமாவு போர்த்துகீசியர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. சோளமாவுதான் குலால் பொடிகளுக்கான அடிப்படைப் பொருளாகும். மிகை நுண்ணிய   துகள்கள் (ultra fine) உற்பத்தி செய்வதில் சோளமாவின் பணி ஒரு “வில்லனாக” தோன்றினாலும், மற்ற மாற்றுகளுடன் ஒப்பிடும்போது, இது இலகுவானது, குறைவான நச்சுத்தன்மை, மக்கும் தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் இது பரவலாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் குறைந்த நிறமிகளை தனது மேற்பரப்பில் சீராக பரப்புவதற்கு ஏதுவாக இருக்கிறது. சோள மாவை அடிப்படையாகக் கொண்ட பொடியை காற்றில் வீசும்போது அது மிக மெதுவாக கீழே வரும், அப்போது அது பல வண்ணங்களில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். சோள மாவு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்றாலும், அதன் நுண்ணிய துகள் அளவு (PM10) மற்றும் சாத்தியமான மாசுபாட்டின் கலவையானது ஹோலி கொண்டாட்டங்களின் போது உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.

சமீப காலத்திற்கு முன்பு வரை மேற்கத்திய நாடுகளில் ஹோலி ஒப்பீட்டளவில் அறியப்படவில்லை, ஆனால் தற்போது இந்த பண்டிகை உலகளவில் இடம்பெயர்ந்துள்ளது. இதனால், உலகில் பல ஆய்வாளர்கள் இப்பொடிகளை சோதிக்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் வெளிவந்துள்ள  சில ஆய்வு கட்டுரைகளை பின்னூட்டத்தில் காணலாம்.

இயற்கை வண்ணங்கள் குறுகிய கால சேமிப்பைக் கொண்டுள்ளதால், அவை விரைவில் சூரிய ஒளியில் மங்கிவிடும். அடர் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எளிதாக கிடைத்தாலும், இயற்கை நீலம் மற்றும் பச்சை நிறங்களை துடிப்பாகச் செய்வது தற்போது  சாத்தியமற்றதாக இருக்கிறது என்று சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனெனில் அவை விலையுயர்ந்த ஸ்பைருலினா ஆல்காவிலிருந்து (phycocyanin) வருகின்றன, மேலும் FD&C செயற்கை சாயத்தில் காணப்படும் அதே பிரகாசத்தை அடைய ஸ்டார்ச்சுடன் கலப்பதற்கு சுமார் பத்து மடங்கு அதிக பொருள் தேவைப்படுகிறது.

https://30stades.com/2022/03/18/holi-festival-celebration-in-traditional-indian-paintings-madhubani-pattachitra-phad-pichwai-pahari-art/#google_vignette

https://link.springer.com/article/10.1007/s12291-021-00975-0

https://www.mdpi.com/1660-4601/18/21/11090

DOI:10.1186/s12995-016-0130-9

மினுமினுக்கும் பாக்டீரியாக்கள்: நிலையான வண்ண தொழில்நுட்பங்களுக்கான நவீன வழிமுறைகள்

கடலில் காணப்படும் சில பாக்டீரியாக்கள் பல்வேறு முறைகளில் தனித்துவமான நிறங்களை உருவாக்குகின்றன. இவைகள் சூழலியல் (ecology) மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. உதாரணமாக, Synechococcus என்ற சயனோபாக்டீரியாக்கள் கடலில் உள்ள ஒவ்வொரு ஒளி  அலைநீளத்திற்கும் ஏற்ப தங்களின் நிறங்களை மாற்றிக்கொள்ளும் திறனை கொண்டுள்ளன. “க்ரோமாடிக் அடாப்டர்” (chromatic adaptor) எனப்படும் இத் தழுவல் குறிப்பிட்ட மரபணுக்களால் இயக்கப்படுகிறது. இதனால் இவைகள் நீல வெளிச்சம் பரவிய ஆழ்ந்த கடல் பகுதியிலிருந்து கரையோரம் மற்றும் கழிமுகங்களில் காணப்படும் பச்சை அல்லது சிவப்பு வெளிச்சம் வரை, பல்வேறு சூழல்களில் வாழ முடிகிறது. இது ஒளிச்சேர்க்கை (photosynthesis) மற்றும் கடல் உணவுச்சங்கிலிக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இதைத்தவிர கார்ட்டினாய்ட்கள் (astaxanthin) மற்றும் வையோலாசின் (violacein) போன்ற சில பாக்டீரியாக்கள், உயிரியக்க நிறமிகளை (bioactive pigments) உருவாக்குகின்றன. இவை சிவப்பு, ஆரஞ்சு, ஊதா மற்றும் நீலம் போன்ற பிரகாசமான நிறங்களை வழங்குகின்றன. இந்த நிறமூலங்கள் நோய் எதிர்ப்பு தன்மை அல்லது தொழில்துறையில் வேறு பயன்பாடுகளையும் கொண்டுள்ளன.

வேறு சில கடல் பாக்டீரியாக்கள், உதாரணமாக மரினோபாக்டர் அல்ஜினோலிடிகா கட்டமைப்பு நிறங்களால் (structural colors) ஒளிர்கின்றன. இவை, பாக்டீரியா காலனிகள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டு, ஒளியை பிரதிபலிக்கச் செய்யும் “ஃபோட்டோனிக் படிகங்கள் ” (photonic crystals) மூலம் உருவாகின்றன. உதாரணமாக, Cellulophaga lytica பச்சை, சிவப்பு மற்றும் ஊதா போன்ற மிரளும் நிறங்களை காட்சிப்படுத்துகிறது, பார்வை கோணத்தைப் பொறுத்து நிறம் மாறுகிறது. இந்த நிறங்கள் ஒளி அலைகளின் குறுக்கீடு (light interference) மூலம் உருவாகின்றன, இது பட்டாம்பூச்சி இறக்கைகள் அல்லது மயில் இறகுகளின் போன்றது.

உலகம் வெறும் கருப்பு வெள்ளையாக இல்லை. சில நேரங்களில் அது இன்னும் மாறுபட்டதாக இருக்கும், சில உயிரினங்கள் ஒளி அவற்றைத் தாக்கும் கோணத்தைப் பொறுத்து மாறும். ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கைகள் அல்லது ஒரு மயிலின் இறகுகளைப் பற்றி யோசித்துப் பார்ப்போமே. நாம் அவற்றைச் சுற்றி நகரும்போது, ​​அவற்றின் சாயல்கள் மாறுகின்றன. இவை கட்டமைப்பு வண்ணங்களின் எடுத்துக்காட்டுகள். குறிப்பிட்ட அலைநீளங்களை உறிஞ்சும் நிறமிகளைப் போலல்லாமல், கட்டமைப்பு வண்ணங்கள் நானோ அளவிலான கட்டுமானத் தொகுதிகளின் உள், ஏற்பாடு மற்றும் அவை ஒளியில் எவ்வாறு குறுக்கீடுகின்றன என்பதைப் பொறுத்தது. இந்த கட்டமைப்பு சில அலைநீளங்களைப் பிரதிபலித்து மற்றும் மற்றவற்றைத் தடுத்து, தெளிவான, மாறுபட்ட வண்ணங்களை உருவாக்குகிறது.

பாக்டீரியாக்கள் கட்டமைப்பு நிறத்தையும் உருவாக்க முடியும், தனிநபர்களாக அல்ல, ஆனால் குறிப்பிட்ட வடிவங்களைக் கொண்ட காலனிகளாக இருக்கும் போது. ஒரு காலனியில் உள்ள மில்லியன் அல்லது பில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் கட்டமைப்பு நிறத்தை அடைய, ஒரு பெரிய அளவிலான அமைப்பு மற்றும் தகவல்தொடர்பு தேவைப்படுகிறது. இந்த வழிமுறைகளுக்கான பதில்களைக் கண்டறிய, Max Planck Institute of Colloids and Interfaces, the biotech company Hoekmine, the Universities of Utrecht, Cambridge and Jena பல்கலைக்கழகங்கள் மற்றும் பிறவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, பரந்த அளவிலான பாக்டீரியாக்களின் மரபணுக்களை பகுப்பாய்வு செய்தது.

ஆராய்ச்சியாளர்கள் முதலில் ஆய்வகத்தில் பல்வேறு வகையான பாக்டீரியாக்களை வளர்த்து, LED விளக்குகளின் கீழ் அவற்றின் பதில்களைக் கண்காணித்தத்தில், பார்வைக் கோணத்தின் அடிப்படையில் எவ்வாறு வண்ண மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை கண்டறிந்தனர். பாக்டீரியாக்கள் தேன்கூடு போன்ற ஒரு அறுகோண வடிவத்தில் தங்களை ஒழுங்கமைக்கும்போது கட்டமைப்பு நிறம் ஏற்படுகிறது, அதை  நாங்கள் ஃபோட்டானிக் படிகம் (photonic crystal) என்று அழைக்கிறோம்,” என்கிறார்,  மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் கொலாய்டுகள் மற்றும் இடைமுகங்களின் நிலையான மற்றும் உயிரியல்-ஈர்க்கப்பட்ட பொருட்கள் துறையின் இயக்குனர் Silvia Vignolini.

அடுத்த முக்கியமான படி பாக்டீரியாவின் டிஎன்ஏவை வரிசைப்படுத்துவதாகும். சமீபத்திய ஆண்டுகளில் மரபணுவியல் அறிவியலில் ஏற்பட்ட புரட்சி, கட்டமைப்பு நிறத்திற்கும் மரபணுக்கள் காரணமாக இருக்கும் என்று இக்குழு கருதியது.  மரபணு வரைபடங்களை குறியாக்கம் செய்வதன் மூலம், கட்டமைப்பு வண்ண உருவாக்கத்துடன் தொடர்புடைய பல புரதங்களை குழு அடையாளம் கண்டது. பின்னர் அவர்கள் ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கி பயிற்சி அளித்ததில், எந்த பாக்டீரியாக்கள் ஒளியைக் கையாளும் என்பதை துல்லியமாக கணித்தனர்.

“இந்த மாதிரியுடன், சர்வதேச திறந்த அறிவியல் களஞ்சியங்களிலிருந்து 250,000 க்கும் மேற்பட்ட பாக்டீரியா மரபணுக்களையும் 14,000 சுற்றுச்சூழல் மாதிரிகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்தோம் ,” என்று ஜெனா பல்கலைக்கழகத்தின் வைரஸ் சூழலியல் பேராசிரியரும் “மைக்ரோவர்ஸின் சமநிலை” என்ற சிறப்புத் தொகுப்பின் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் Bas E. Dutilhகூறுகிறார்.

மேலும், கட்டமைப்பு நிறத்திற்கு காரணமான மரபணுக்கள் முக்கியமாக பெருங்கடல்கள், நன்னீர் மற்றும் இடைநிலை மண்டலங்கள் மற்றும் ஆழ்கடல் பகுதிகள் போன்ற சிறப்பு வாழ்விடங்களில் காணப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, மனித நுண்ணுயிரி போன்ற புரவலன்-தொடர்புடைய வாழ்விடங்களில் உள்ள நுண்ணுயிரிகள் மிகக் குறைந்த கட்டமைப்பு நிறத்தைக் காட்டுகின்றன என்பதும் இவர்களின் ஆய்வில் தெரிய வந்தது.

வண்ணமயமான பாக்டீரியா காலனி கட்டமைப்புகள் ஒளியைப் பிரதிபலிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. ஆச்சரியப்படும் விதமாக, இந்த மரபணுக்கள் சூரிய ஒளி இல்லாமல் ஆழமான பெருங்கடல்களில் வாழும் பாக்டீரியாக்களிலும் காணப்படுகின்றன. வைரஸ்களிலிருந்து பாக்டீரியாவைப் பாதுகாப்பது அல்லது மிதக்கும் உணவுத் துகள்களை திறம்பட காலனித்துவப்படுத்துவது போன்ற முக்கியமான செயல்பாடுகளுடன் செல் அமைப்பின் ஆழமான செயல்முறைகளை வண்ணங்கள் பிரதிபலிக்கக்கூடும் என்பதை இது குறிக்கலாம். இந்த கண்டுபிடிப்புகள் இந்த இயற்கை கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட புதிய, நிலையான தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கக்கூடும்.

பாக்டீரியாவின் உண்மையான நிறங்களை வெளிப்படுத்துவது ஒரு சுவாரஸ்யமான அடிப்படை அறிவியல் சாதனை மட்டுமல்ல, நிலையான மற்றும் செலவு குறைந்த உற்பத்தி பயன்பாடுகளுக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்கிறார்கள் இவ்விஞ்ஞானிகள். பாக்டீரியாக்களுக்கு தேவை சிறிய இடம் தான், உணவளிப்பதும் மிகவும் எளிது, விரைவாகப் பெருகும் மேலும் இயற்கை சுழலுக்கு மிகவும் உகந்ததாகும். அதிக ஆற்றல், அதிக நீர் தேவைப்படும் மற்றும் சில நேரங்களில் நச்சுத்தன்மையுள்ள சாயங்கள் மற்றும் நிறமிகளை நீக்கி, வண்ணங்களை உற்பத்தி செய்ய அவற்றை வளர்க்க முடியுமா என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆய்வகத்திலிருந்து வண்ணத்தை எடுத்து தொழில்துறைக்குள் கொண்டு சொல்லமுடியுமா என்று நமக்கு தோன்றும் கேள்விக்கு, எஸ்பிபி குரலில் இப்படி பாடலாமா? “வண்ணம் கொண்ட பாக்டீரியாவே, நீரை விட்டு வாராயோ, நீருக்குள் பாதை இல்லை, வண்ணம் கொள்ள வழியுமில்லை”.

https://phys.org/news/2024-07-bacterial-glitter-possibilities-sustainable-technologies.html

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை

தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம் தூக்கணாங்குருவி கூடு

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.