அகாவே

அகாவே (Agave) என்னும் சொல் கிரேக்க மொழியின் பிரம்மாண்டமான, கம்பீரமான, புனிதமான, பாராட்டத்தக்க என்னும் பொருள் கொண்ட ’அகாவ்’விலிருந்து வந்தது.  கள்ளிக்கற்றாழைத் தாவரங்களான இவை அமெரிக்காவின் வறள் நிலத்தாவரங்கள். அகாவே பயிர்கள் மெக்சிகோவின் கலாச்சாரத்துடனும் மெக்சிகோ மக்களின் அன்றாட வாழ்வுடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பவை.

கள்ளிக்கற்றாழைகளில் இருந்துதான் மெக்சிகோவில் பழங்காலத்திலிருந்து உணவு, மதுபானம், நூல் ஆகியவை தயாரிக்கப்பட்டது. இன்று டெக்கீலா, மெஸ்கால் போன்ற பானங்களும் இதிலிருந்துதான் தயாராகின்றன. மெக்சிகோவின் கலாச்சாரமும், பொருளாதாரமும் இந்தத் தாவரத்துடன் நேரடியாகத்தொடர்புடையது.

மெக்சிகோவில் டெக்கீலா தயாரிக்கும் நீலக்கற்றாழை 3,00,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. கள்ளிக்கற்றாழைகளின் 157 சிற்றினங்களில் 76 சதவிகிதம் மெக்சிகோவில் தான் இருக்கிறது. இந்த 76-ல் 71 சிற்றினங்கள் மெக்சிகோவுக்கு மட்டும் சொந்தமான வேறெங்கும் வளராத ஓரிடப்பயிர்கள்(Endemic plants). 25 வருடங்கள் வரி உயிர் வாழும் இவற்றை வவ்வால்களும் தேன்சிட்டுக்களும் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.

மெஸ்கால் என்னும் மதுபானம் தயாரிக்க பல்வேறு வகை கற்றாழைகள் பயன்படுத்தப்படுகின்றன. மெஸ்கால் மாநிலங்களில் (ஒஷாகா, துராங்கோ, சான் லூயிஸ் போன்றவை) கூடுதலாக 1,00,000 ஹெக்டேருக்கும் மேல் இவ்வகைக்கற்றாழைகளின் சாகுபடி நடைபெறுகிறது.மொத்தத்தில், சுமார் 4,00,000–5,00,000 ஹெக்டேருக்கு மேல் மெக்சிக்கோவில் கற்றாழைச் சாகுபடி நடைபெறுகிறது. அவர்களின் அன்னைத்தெய்வம் மயாஹ்வெல்(Mayahuel) முலையூட்டிய மதுவே கற்றாழை மதுவான மெஸ்கால் என்னும் தொன்மம் மெக்சிகோவில் பிரபலம். மெஸ்கால் மதுவைக் குறித்த’’ அனைத்துத் துயர்களுக்கும் தீர்வு மெஸ்கால் அனைத்து மகிழ்வுகளுக்கும் அதுவேதான்‘’ என்னும் முதுசொல் அங்கு வெகுவாகப் புழக்கத்திலிருக்கிறதுமெக்சிகோ மக்களைப் போல உலகின் வேறெந்த பகுதி மக்களும் தாவரங்களுடன் இத்தனை நெருங்கிய தொடர்பில் இல்லை.

மாகேய் (Maguey) என்பது  அகாவே செடிகலான கள்ளிக் கற்றாழைகளை குறிக்கும் ஸ்பானிஷ் சொல். இந்த க்கற்றாழைகளின் இரண்டு வகைகள் டெக்கீலா அளிக்கும் Agave tequilana  மற்றும் மெஸ்கால் மது அளிக்கும் Agave americana, 

இவ்விரண்டு மட்டுமல்லாமல் மெக்சிகோவில் விளைந்த பல வகைக்கற்றாழைகள் மெக்சிகோ மக்களின் பலவிதமான தேவைகளுக்கு ஆதாரமாக இருந்தன. அகாவே அட்ரோவைரன்ஸ் (Agave atrovirens), என்னும் வகைக்கற்றாழை பல மருத்துவப்பயன்கள் கொண்டது

இந்தக் கள்ளிக்கற்றாழை மலர்மொட்டுகள் மெக்ஸிகோவில் விரும்பி உண்ணப்படுகின்றன. கற்றாழையின் மஞ்சரிக்காம்பும்  நறுக்கி உண்ணப்படுகிறது. அங்கு விரும்பி அருந்தப்படும் மலரமுதும் சிரப் போல ப்பாட்டில்களில் விற்பனையாகிறது. இந்தக் கற்றாழைச்செடிகளினடியில் வாழும் எறும்புகளின் முட்டைகளும் மெக்சிகோ மக்களின் மிகக் குறிப்பிடத்தக்க உணவாக இருக்கிறது,

மெக்சிகோவின் பழங்குடி இனத்தவர்களான் அஸ்டெக்குகளின் காலத்திலிருந்தே புரதத்தேவைக்காக பூச்சிகளை உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது.  உலகெங்கிலும் பயிர்களை சாகுபடி செய்யும் வளமான நிலப்பரப்பு இல்லாத, மிகுந்த வறட்சி நிலவும் பிரதேசத்து மக்கள் இப்படி பூச்சிகளை உண்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 மெக்சிகோ ஐரோப்பாவின் பிடிக்குள் வந்தபின்னரும் தொடர்ந்த அந்த பழக்கம் இன்றும் கலாச்சார அடையாளத்தை இழக்காமல் இருக்கும் பொருட்டு தொடர்கிறது. வெட்டுக்கிளி, எஸ்கமோல் என்னும் எறும்பு முட்டை மற்றும் மேகுவே புழுக்கள் ஆகியவை மெக்சிகோ உணவு கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடம் கொண்டிருப்பவை. மெக்சிகோவில் மட்டும் சுமார் 400 உண்ணத்தகுந்த பூச்சிகள் அபரிமிதமாக இருக்கின்றன என்பதுவும் இந்த பூச்சி உண்ணுதலுக்கு முக்கியமான காரணம்.  மெக்சிகோவின் ஒஷாகா (Oaxaca) மாநிலம் இந்த பூச்சி உணவுகளுக்கு பெயர் பெற்றது.

எண்ணெயில் பொறிக்கப்பட்ட மொறுமொறுப்பான பூச்சிகள் மெக்சிகோவின் கடைதெருக்களில் மூட்டை மூட்டையாக விற்கப்படுகின்றன. ஓக் மரப்பூச்சியான ஜுமிலே, தேன் எறும்பு வகையொன்று, குளவி, தட்டான், வெல்வெட்  எறும்பு ஆகியவற்றின் முட்டைகள் போன்றவை அப்படியே சமைக்கப் படாமல் உண்னபடுகிறது

மெக்சிகோவின் பிரபல உணவுகளில் ஒன்றுதான் எஸ்கமோல் என்னும் எறும்பு முட்டை உணவு. இந்த எஸ்கமோல் கற்றாழைச்செடிகளின் அடியில் கூடுகட்டி வாழும் இரண்டு வகை எறும்புகளின் முட்டையில் செய்யப்படும் உலகப்புகழ்பெற்ற உணவு.

எஸ்கமோல் என்னும் சொல் ஆஸ்டெக்குகளின் நவாட்டி( Nahuatl.) மொழியில்  எறும்பைக்குறிக்கும் அஸ்ட்ல் (azatl), மற்றும் உணவைக்குறிக்கும் மோலி(molli) ஆகியவற்றிலிருந்து உருவாகியது.

இந்தக் குறிப்பிட்ட வகை எறும்பு முட்டைகளை உண்பது மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்பேனியர்கள் ஆக்கிரமிக்கும் முன்பே இருந்தது.

அஸ்டெக் பழங்குடியினரின் சடங்குகள் விழாக்கள் பாடல்கள், நடனம், விருந்துகள் என எல்லாவற்றிலும் எஸ்கமோல் உணவு தவறாமல் இடம் பெற்றிருந்தது. 1503-1520-வரை அஸ்டெக்கின் மன்னராக இருந்த மோக்டெஸுமாவுக்கு (Moctezuma Xocoyotzin) சிறப்பு நிகழ்வுகளின் போதெல்லாம் எஸ்கமோல் உணவு  பரிசளிக்கப்பட்டதை பல வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

16-ம் நூற்றாண்டில் ஸ்பெயினைச்சேர்ந்த இனவரைவியலாளரும் இறையியலாலருமான ஃப்ரே (Fray Bernardino de Sahagún) பல பழங்குடியினத்தவர்களுடன் இணைந்து எழுதிய “General History of the Things of New Spain”, என்னும் ஸ்பெயினின் ஆக்கிரமிப்புக்கு முன்பாக  அஸ்டெக்குகளின் வாழ்க்கை அவர்களின் உணவு , கலாச்சாரம் ஆகியவை விவரிக்கப்பட்ட நூலில் எஸ்கமோல் உள்ளிட்ட பல சிறப்பு உணவுகள் முதல் முறையாக விவரிக்கபட்டிருக்கின்றன.

ஃப்ரே  இந்த ஆய்வுக்காக 1545 லிருந்து அவர் மரணமடைந்த 1590 வரை தொடர்ந்து 50 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார். 2500,பக்கங்கள் 12 தொகுதிகளாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுமார் 2000 சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன.உணவு எப்படி அஸ்டெக்குகளின் கலாச்சாரத்துடன் இணைந்திருந்தது எனச்சொல்லும் இந்நூல் அஸ்டெக்குகள் கடவுள்களுக்கு   படைத்த உணவுகளையும் விவரிக்கிறது.

எஸ்கமோல் (escamoles) எனப்படும் இந்த இருவகை எறும்புகளின் முட்டைகள் மெக்சிகோ, லத்தீன அமெரிக்கா. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரத்யேகமான உணவாக இருக்கிறது.  அகாவே  கற்றாழைகள், பாறைப்பிளவுகள் சப்பாத்திக்கள்ளி உள்ளிட்ட பிற கள்ளிச்செடிகள், சிதைந்த மரக்கட்டைகள் ஆகியவற்றில் இந்த எறும்புகள் கூடுகட்டும். Liometopum apiculatum மற்றும் Liometopum occidentale var. luctuosum ஆகிய இரண்டு எறும்புகளின் முட்டைகள் தான் எஸ்கமோல் உணவுக்காக சேகரிக்கப்படுபவை.

இந்த எறும்புகள் பிற எறும்புகளையும் சிறு பூச்சிகளையும் தான் உண்ணும் தாவரங்களை உண்பதில்லை என்பதால் இந்தக் கற்றாழைகளின் வேர்களை அவை சேதப்படுத்துவதில்லை. அகாவே மஞ்சரிகளின் மலரமுதினையும் இந்த எறும்புகள் விரும்பி உண்ணும்.

கற்றாழைச்செடிகளின் அடியில் சுமார் 2 அடி ஆழத்தில் இந்த எறும்புக்கூடு அமைந்திருக்கும்.  இந்த கூடுகளை எறும்புகள் மண்ணை உமிழ் நீருடன் சேர்ந்து பிசைந்து  ஸ்விஸ் சீஸ் போல ஆங்காங்கே துளைகள் கொண்ட  அட்டைப்பெட்டி போன்றதொரு அமைப்பாக உருவாக்கும். கூட்டினுள் 4 அல்லது 5  trabecula என்னும்  பெரிய அறைகள் நடுவில் இருக்கும்படி கட்டப்பட்டு அதில் முட்டைகள் சேமிக்கப்படும். 

 மாபெரும் கூடுகளான இவற்றில் இந்த அறைகளிலிருந்து தள்ளி 4 அல்லது 5 மீ  தொலைவில் பாதுகாப்பாக ராணி எறும்பு வாழும் அறை இருக்கும் ஒவ்வொரு அறையும் பிற அறைகளுடன் ஒரு குறுகிய திறப்பு வழியாக இணைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ராணி எறும்பு ஒரு நாளில் சுமார் 5000 முட்டையிடும். ராணி அல்லாத வேலைக்கார எறும்புகளும்  கருவில்லாத முட்டைகளிடும். புரதம் நிரம்பிய அவற்றைப் பிற எறும்புகள் உண்ணும். 

எறும்புக்காலனிகளில் சுமார் 40,000-த்திலிருந்து 60,000 வேலைக்கார எறும்புகள் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இந்த எறும்புக்கூடுகள் ஒவ்வொன்றும் சுமார் 3-லிருந்து 4 கிலோ முட்டைகளை உருவாக்கும். ஒரு பருவத்திற்கு 3 முதல் 5 முறை இவை முட்டையிடுகின்றன.

இந்த எறும்பு முட்டை சேகரிப்பது அத்தனை எளிய காரியமல்ல. Escamoleros  எனக்குறிப்பிடபப்டும் இந்த எறும்பு முட்டை சேகரிப்பவர்கள் கூட்டமாக வாகனங்களில் அந்தப்பாலை நிலத்துக்குச் செல்வார்கள் எறும்புக்கூடு இருக்கும் வயல்பகுதிகளுக்கு  வாகனங்கள் வரமுடியாதென்பதால் இறங்கி அகாவே கற்றாழை வயல்களுக்குள் நடந்து செல்வார்கள்.

 தூத்துக்குடியில் முத்தெடுக்க கடலுக்குள் செல்பவர்கள் தங்கள் மனைவியின் சகோதரன் கையில்  இடுப்புக்கயிற்றைக் கொடுத்து விட்டுத்தான் மூழ்குவார்கள். அப்படித்தான் இங்கும் மிக நம்பிக்கையான ஒருவருடன் இரண்டிரண்டு பேர்களாக பிரிந்து சென்று எறும்புக்கூடுகளைத் தேடிச் செல்வார்கள். பெரும்பாலும் இந்த ஜோடி வருடக்கணக்காக மாறாமலிருப்பதுண்டு. அப்பா மகன் ஜோடியையும் இங்கு சாதாரணமாகப் பார்க்கலாம்.

 ஒருவருக்கு 1-லிருந்து 5 எறும்புக்கூடுகள் வரை  சொந்தமாக வைத்திருப்பதும் உண்டு. எறும்பு முட்டைச் சேகரிப்பை அவர்கள் அறுவடை என்னும் பொருளில்  capar  என்று குறிப்பிடுகிறார்கள்

மிக ஆக்ரோஷமாகக் கடிக்கும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க உடலெங்கும் பன்றிக்கொழுப்பை பூசியபின்னர் தங்கள் பாதங்களைப் பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளும் இவர்கள் கற்றாழையின் வேருக்கடியில் செல்லும் எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து கூட்டை கண்டுபிடிப்பார்கள். கரண்டி போன்ற ஒரு கம்பியால் மண்ணைத்தோண்டி கூட்டைப் பார்த்ததும் எறும்புக்கூட்டின் மேல்மண்ணை மண்வெட்டியால் மெல்லத்தட்டி உதிர்ப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் எறும்புகளைக் கொல்லக்கூடாது, முட்டைகளை சேதப்படுத்தக் கூடாது என்னும் கவனம் இருக்கும். கூட்டை திறந்தவுடன் கூட்டிலிருந்து கடுமையான நெடி கிளம்பும்.

எறும்புகள் உருவாக்கும் இந்த நெடி கெட்ட வாயு எனப்பொருள்படும்;  ’la pedorrilla’ என்ப்படுகிறது. இந்த எறும்புகளையுமிவர்கள் கெட்ட வாயு உண்டாக்குபவை என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள்.( “the farty ant.”)

பிறகு கூட்டுக்குள் கையைவிட்டு trabecula வைத் தேடி குப்பைக்கூளங்களுடன் எறும்பு முட்டைகளை மெல்ல வெளியே எடுத்து ஒரு சல்லடையில் வைப்பார்கள். உடனிருக்கும் மற்றொருவர் சல்லடையால்  குப்பைகளிலிருந்து முட்டைகளைச் சலித்தெடுப்பார். சுமார் அரைக்கிலோ வரை ஒரு நாளைக்கு சேகரித்த பின்னர் எறும்புக்கூடுகள் மீண்டும் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும்.    70% முட்டைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவற்றை சேதமில்லாமல்  கூட்டிலேயே விட்டுவிட்டு கூட்டைப் பழையபடி மூடிவிட்டு திரும்புவார்கள். எல்லா முட்டைகளையும் அறுவடை செய்தால் அடுத்த பருவத்தில் எறும்புகளும் முட்டைகளும் இருக்காது அல்லது எறும்புகள் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் முட்டையிடத்துவங்கும் என்பதால் முட்டை அறுவடை மிகக்கவனமாக நடைபெறும்

முட்டைகளைஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அந்தி சாய்கையில் அனைவரும் வாகனங்களில் வீடுதிரும்புவார்கள்.

பிறகு குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வாசலில் வட்டமாக அமர்ந்து இறந்த எறும்புகள் பிற குப்பைகளிலிருந்து  முட்டைகளைச் சுத்தப்படுத்தும் வேலை பின்னிரவு வரை ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும்

இடைத்தரகர்கள் மறுநாள் காலையில் வந்து கிலோவுக்கு 200 லிருந்து 300 பெசோக்கள் கொடுத்து முட்டைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார்கள்.  ஒரு பொது இடத்தில் வைத்து எடைபோட்டு விலையை உரக்க கூவிக்கூவிச்சொல்வார்கள் யாருடைய வாளியில் அதிக முட்டை இருந்தது, எந்த வாளி அதிக விலைக்குச்சென்றது என்பது  உரக்கச் சொல்லப்படும்போது பிறர் அன்றைய வெற்றியாளரைக்கட்டிக்கொண்டு வாழ்த்தி  க் கொண்டாடுவார்கள்.

அந்த வரள் நிலத்தின் முக்கியமான வருமானமாக இந்த எறும்பு முட்டை சேகரிப்பு இருக்கிறது.ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 கிலோ முட்டைகளைச் சேகரிக்கும்.  ஒரு வருடத்தில் சுமார் 8000 பெசொக்கள் இவர்களுக்கு இந்த  எஸ்கமோல் சேகரிப்பில் கிடைக்கும்.

இந்த எறும்பு முட்டைகள் பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்தச் சமயத்தில் மெக்சிகோவிற்கு இந்த உணவைச் சுவைக்க வென்றே பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள்  செல்வதுண்டு.

 தரகர்களால்  உணவகங்களுக்குச் கொண்டுசெல்லப்படும் முட்டைகள் அங்கு மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு குளிர் சாதனப்பெட்டிகளில் சேமிக்கப்படும்.

இந்த முட்டைகள் மிக லேசாகச் சுமார்  5 நிமிடம்வரை வெங்காயம், வெண்ணெய் மற்றும் மெக்சிகன் தேயிலையான epazote வின் நல்ல நெடிகொண்ட இலைகளுடன் சேர்ந்து சமைக்கப்படும்.

வறுத்த பொரியைப்போல தோற்றமளிக்கும், வெள்ளையிலிருந்து தந்தம் அல்லது பழுப்பு நிறமாகி இருக்கும் இந்தச் சமைத்த எறும்பு முட்டை உணவு லேசான இனிப்புடன் சீஸ் சுவையுடன் இருக்கும்.

எஸ்கமோல் தனி உணவாகவோ, இணை உணவாகவோ அல்லது தொடுகறியாகவோ கிடைக்கிறது.இது கிடைப்பது அரிது என்பதாலும் சேகரிப்பது மிகுந்த கடினமென்பதாலும் இந்த உணவின் விலை மிக அதிகமாக இருக்கிறது.

பரிமாறப்படும் எஸ்கமோல் உணவின் அளவு 10 லிருந்து 15 கிராம் தான் இருக்கும்.  உலகின் பல பாகங்களிலும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களில் இந்த உணவின் விலை 15-லிருந்து 50 அமெரிக்க டாலர் வரை இருக்கிறது.

எஸ்கமோல் உணவுகளின் உலகப்பிரசித்தி காரணத்தால் இந்த எறும்புகள் இப்போது பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன,

மெக்ஸிகோவிலிருந்து 130 கி மீ தொலைவில்  மெஸ்குவிட்டல் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் தனியார் பண்ணையான Teotlacualli யில் பலதரப்பட்ட காய்கனிகளும் கீரைகளும் கூடவே எஸ்கமோல் எறும்புகளும்  வளர்கின்றன. இங்கு மெக்சிகோ மக்களின் விருப்பத்துக்குரிய பூச்சிகளும் உருவாக்கப்படுகின்றன

தனது தாய்மாமாவிடமிருந்து தன் 11 வது வயதில் எஸ்கமோல் முட்டைகளைச்சேகரிக்க கற்றுக்கொண்ட, கடந்த பத்தாண்டுகளாக எஸ்கமோல் முட்டைகளை உருவாக்கிவரும் அந்தப்பண்ணையின் உரிமையாளரான ஜோஸ் இந்த முட்டைகளைச் சேகரிப்பதற்கான பயிற்சி தலைமுறைகளாக மெக்சிகோ மக்களால் கற்றுக்கொள்ளப் படுகிறது என்கிறார்.

எஸ்கமோலைப்போலவெ  நீலக்கற்றாழையான Agave tequilana-வின் சதைப்பற்றான இலைகளில் ஒட்டி இருக்கும் meocuiles எனப்படும் பட்டாம்பூச்சிகளின் முட்டையயும் இங்கு பிரபல உணவுதான்    

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பூச்சியியலாளர் லூயிஸ் (Louis Sorkin) கடந்த ஐந்து வருடங்களில் பூச்சிகளை உண்பதில் மக்களின் விருப்பம் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்கிறார்.

உலகெங்கிலும் சுமார் 1900 பூச்சி வகைகளும் முட்டை வகைகளும் 60% மக்களால் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது இந்தியக் கிராமங்களில் நூற்றாண்டுகளாக ஈசலை உண்ணும் வழக்கம் இருக்கிறது. நான் சிறுமியாக இருக்கையில் பொரியுடன் வறுத்த ஈசல் உருண்டைகளைப் பலமுறை சுவைத்திருக்கிறேன். மழைக்காலங்களில் கூடைகளில் ஈசலை விற்றுக்கொண்டு வருபவர்களையும் பார்த்திருக்கிறேன், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், கம்போடியா, நெதர்லாந்து ஆகிய பல நாடுகளில் இந்த பூச்சி உணவு புழக்கத்தில்  இருக்கிறது.

நிச்சயமாக பூச்சி உணவுகள் வருங்கால சூப்பர் உணவுகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை அதிக புரதம், முக்கியமான அமினோ அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பமிலம், குறைந்த கொழுப்புக் கொண்டிருக்கும் பூச்சிகள் நிச்சயம் நல்ல ஊட்டச்சத்து உணவாக இருக்கும். 2050-ல்  9 பில்லியனாகவிருக்கும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதில் விவசாயிகளுக்கு உண்டாகவிருக்கும் பெரும் அழுத்தத்தையும் இந்த பூச்சி உணவு குறைக்கும் வாய்ப்பிருக்கிறது.

இன்னும் இவற்றைச் சுவைக்காதவர்கள் முயன்று பார்க்கலாம்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.