கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்

Colours and textures: Siddhesh

ஓவியம் ஒரு நுண் கலை. அதை வரைவதும், பார்வையிடுவதும், புரிந்துகொள்வதும் மற்றும் ரசிப்பதும் இக்கலையின் நாயகர்களைத் தவிர வேறொருவர் கட்டமைத்திடுவது அவ்வளவு எளிதல்ல என்பது என் கருத்து. 

டாவின்சி, ரெம்ரன்ட், வான்கோ போன்றவர்களின் ஓவியங்களைப் பலமுறை பார்த்திருந்தாலும் அவர்கள் என்ன கூற விழைகிறார்கள் என்பது சரியாக புரிந்ததில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பல்வேறு கண்ணோட்டத்தில் ஆராயும் ஒவ்வொருவருக்கும், ஒரு தேடல் இருக்கும் என்பது நிச்சயம். 

இந்த இதழில் ஓவியங்களில் காணப்படும் அறிவியல் சார்ந்த சில தேடல்களைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த சில செய்திகளைக் கொண்டு ஆராயலாம்.

ஓவியங்களில் காணப்படும் வடிவமைப்புகள், கட்டமைப்புகள், நிறங்கள் மற்றும் செயல்முறைகளை ஆராய்வதன் மூலம் அறிவியல் உணர்வு அடிக்கடி வெளிப்படுகிறது. லியோனார்டோ டா வின்சி போன்ற கலைஞர்கள் தங்கள் கலைக்குள் அறிவியல் ஆய்வுகளை ஒருங்கிணைத்துள்ளார்கள். இது இன்று வரை தொடர்கிறது, ரெபெக்கா ரட்ஸ்டீன் பிளேட் டெக்டோனிக்ஸ் போன்ற அறிவியல் கருத்துக்களை தனது படைப்பில் பயன்படுத்தியுள்ளார். ஆராய்ச்சிகளாக கலைப்பணிகள் கலை, அறிவியல் பரிசோதனைகளுக்கு ஒத்ததாக செயல்படலாம், கருத்துக்களை சோதித்து, உணர்வுகளை கேள்விக்குட்படுத்தலாம். கருத்துக் கலை, கலைவியல் கோட்பாடுகளை ஆராய்வதற்கான ஒரு பரிசோதனை போல செயல்படுகிறது. இந்த பரிசோதனை இயல்பு கலைஞர்களுக்கு எல்லைகளை அகற்றி புதிய பரிமாணங்களை ஆராய அனுமதிக்கிறது. அறிவியல் பெரும்பாலும் முழுமையாக அறிவாற்றலுக்குரியதாகக் கருதப்படுகிறபோதிலும், கலை மற்றும் அறிவியல் இரண்டும் உணர்ச்சிகளை ஈர்க்கின்றன. கலை, அறிவியல் கருத்துக்களை மேலும் அணுகக்கூடியது மற்றும் உணர்ச்சிவசப்படுத்தக் கூடியதாகவும் மாற்ற முடியும், சிக்கலான கருத்துக்களை தொடர்புடைய முறையில் தொடர்பு கொள்ளவும் உதவும்.

பழமையான ஓவியங்கள், கலாச்சார சூழ்நிலைகள் மற்றும் கலை நோக்கங்களைப் பொறுத்து, அறிவியல் மற்றும் யதார்த்தமான பிரதிநிதித்துவத்தின் மாறுபட்ட அளவுகளை வெளிப்படுத்துகின்றன.  இவைகளின் அமைப்பு மற்றும் வரலாற்றை பகுப்பாய்வு செய்ய மேம்பட்ட படிம உருவாக்க நுட்பங்களை (Advance Image Processing Technology)  பயன்படுத்துவதன் மூலம் நவீன அறிவியல் அணுகுமுறையைத் தூண்டுகின்றன. “மேக்ரோஸ்கேல் மல்டிமோடல் கெமிக்கல் இமேஜிங்”, மொபைல் ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் எக்ஸ்ரே ஃப்ளோரசன்ஸ் போன்ற நவீன நுட்பங்கள், பழமையான கலைஞர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் முறைகளை சேதமில்லாத  பகுப்பாய்வு (non destructive testing analysis) செய்ய அனுமதிக்கின்றன. இது அவர்களின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. இந்த அணுகுமுறை வரலாற்று கலைப்பணிகளை பாதுகாப்பதிலும் புரிந்துகொள்வதிலும் உதவுவதோடு, கலை மற்றும் அறிவியல் துறைகளை இணைத்து, வரலாற்று சூழல்கள் மற்றும் கலை வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது.

1.கலைகளிலே அவள் ஓவியம்

சமீபத்தில் “Fabulous Railway Station Paintings from the Golden Age of Train Travel”1 என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தியர்கள் பெரும்பாலோருக்கு ரயில் பயணம் என்பது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் மற்றும் குறைந்த செலவிலும் செல்வதற்கு இது ஒரு முக்கியமான போக்குவரத்து வழியாகும். 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் சில தசாப்தங்கள் வரை ரயில் பயணத்தின் பொற்காலமாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் முன்பைவிட பலவிதத்தில் ரயில் நிலையங்கள் புதுமையாக உருவாகி வருகின்றன. வார்ப்பிரும்பு மற்றும் பெரிய கண்ணாடித் தாள்கள் போன்ற புதிய பொருட்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையங்கள் ஒரே நேரத்தில் நேர்த்தியாகவும் தொழில்துறையில் மேம்பட்டதாகவும் மற்றும் நாகரீகத்தை முன்வைத்து சிந்திக்கக்கூடியதாகவும் இருப்பதைக் காணலாம். 

பல வருடங்கள் ரயில் பயணம் என்பது உச்சகட்ட காலத்தில் இருந்தபோது, இரயில் நிலையங்களில் காணப்பட்ட பல நிகழ்வுகளையும், அக்காலத்தின் கலை, தொழில் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், பலர் பலவித பரிமாணங்களில் ஓவியம் மூலம் எடுத்துக்காட்டியுள்ளனர். இக் கட்டுரையின் சிறப்பு என்னவெனில், ரயில் பயணங்களுடன் தொடர்புடைய மெருகும், சாகசமும் கொண்ட அந்த காலத்தைப் பிரதிபலிப்பதோடு மட்டுமில்லாமல், பல்வேறு அறிவியல் மற்றும் கலை தொடர்பான செய்திகளையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது, ரயில் பயணத்தில் நாம் அனுபவித்த, ரசித்த பல நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தி காட்சி படுத்துகிறது. 

இந்த உயிர்த்துள்ளளான காட்சிகளின் கலைநயத்தையும் மற்றும்வரலாற்று சூழலையும் படிக்கும் போது, கோபுலுவின் ரயில் நிலைய ஓவியம் ஒன்று என் நினைவில் ஓடியது. 

பலமுறை எனது முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில்,  கோபுலுவின் இச்சித்திரத்தைக் காண்பித்து, அவர்களின் புரிதலைப் பற்றி விவாதித்திருக்கிறோம். 

கோபுலுவின் இந்த ஓவியம், இங்கிலாந்தைச் சார்ந்த கலைஞர் பிரித்தின் (W.P. Frith, 1862) “தி ரெயில்வே ஸ்டேஷன்” என்ற ஓவியத்தால் உந்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இருப்பினும், லண்டன் பேடிங்டன் ஸ்டேஷனில்  பல்வேறு குழுக்களுடன் ஒரு பெரிய கூட்டம் ரெயில் ஏற தயாராக உள்ளதை தத்ரூபமாக பிரதிபலிக்கும் ஓவியத்தை கோபுலுவின் சித்தரிப்புடன் ஒப்பிடாமல் இருக்க முடியாது.‌ இருந்தாலும், கோபுலு இரயில் வருவதற்கு முன், தென்னிந்திய ஸ்டேஷன் பிளாட்பாரம் அருகில், ஒரு குடும்பத்தினரைச் சுற்றி நடக்கும் சில பரபரப்பான நிகழ்ச்சிகளை, தனக்கே உரிய பாணியுடன் நகைச்சுவை உணர்வு கலந்து படம் பிடித்து காட்டியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. “Inspiration exists, but it has to find you working” says Pablo Picasso.

2. தொலைந்த பழங்களைத் தேடும்  தொல்லியல் தாவரவியலாளர்

இத்தாலியின் தொலைந்த அல்லது மறக்கப்பட்ட பழங்களைத் தேடுவதில் பெருகியாவைச் சார்ந்த முனைவர் இசபெல்லா டல்லா ராகியோன், மறுமலர்ச்சி கலை மூலம் இழந்த  பண்டைய கால பழ வகைகளை வெளிக்கொணர்வதற்கு தனித்துவமான அணுகுமுறையை மேற்கொண்டார். இதனால் இவருக்கு “பழம் துப்பறிவாளர்” என்ற பட்டமும் உண்டு. அவரது பணி கலை வரலாறு, விவசாய அறிவியல் மற்றும் துப்பறியும் பணிகளை ஒருங்கிணைத்து, இத்தாலிய உணவு மற்றும் கலாச்சாரத்தில் ஒரு காலத்தில் பொதுவான மறக்கப்பட்ட வகைகளை மீண்டும் கண்டுபிடித்து பாதுகாக்க வழிவகுத்துள்ளது.

பண்டைய ஓவியங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளில் உள்ள துப்புகளை அறிவதன் மூலம், நூற்றுக்கணக்கான பழைய தாவரங்களை அடையாளம் கண்டு, மறுமலர்ச்சி இத்தாலியின் விரிவான பல்லுயிரியலை ராகியோன் வெளிப்படுத்தியுள்ளார். 

பாரம்பரிய ஆராய்ச்சி முறைகளான காப்பக ஆலோசனை, கைவிடப்பட்ட வயல்வெளிகள் மற்றும் துறவற பழத்தோட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம், சான் லோரென்சோ டி லெர்ச்சியிலுள்ள 12 ஆம் நூற்றாண்டடைச் சேர்ந்த பண்ணை தோட்டத்தில் நூற்றுக்கணக்கான தாவரங்களை இவரால் அடையாளம் காண முடிந்தது. இவர் சென்ற இருபது வருட ஆய்வில், மத்திய இத்தாலியின் பலாஸ்ஸோக்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்ட மறுமலர்ச்சி ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள, ஆனால் நேர் பார்வைக்குப் புலப்படாத பழ வகைகளில் விலைமதிப்பற்ற தடயங்கள் மறைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

பார்வை ஒன்றே போதுமே

இன்னொரு ஓவியம், பெர்னார்டினோ டி பெட்டோவால்  எழுதப்பட்ட ‘மடோனா வித் சைல்டு’ (1495). நீலநிற அங்கியில் இருக்கும் மடோனாவிற்குக் கீழே தெரிவது ‘மாடு-மூக்கு’ ஆப்பிள். இப்பழம் தற்போது அரிது என்றாலும், அறுநூறு ஆண்டுகளுக்கு முன், மிகவும் பொதுவானது என்கிறார் ராகியோன். 

நாற்பது ஆண்டுகளாக, Archeologia Arborea, அல்லது Arboreal Archeology என்ற மத்திய இத்தாலிய நிறுவனம், பழங்களின் மரபணு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து, உள்ளூர் பழங்கால பழ வகைகளை தேடி வருகிறது. இந்த அமைப்பின் வேளாண் வல்லுநர்கள் கிராமப்புற சமூகங்களில் மறக்கப்பட்ட கலாச்சாரங்களைக் கண்டறிந்து, பழ விதைகள் மூலம் நாகரிகங்களை புனரமைக்க முற்பட்டுள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கைவிடப்பட்ட மடங்கள் மற்றும் பண்ணைகள், மறுமலர்ச்சி கலைப்படைப்புகள், பழங்கால ஆவணங்கள் மற்றும் வயதான விவசாயிகளின் வாய்மொழி சாட்சியங்களில் இதற்கான விடைகளைக் தேடுகின்றனர். ஆர்க்கியோலாஜியா ஆர்போரியாவில் உள்ள பழத்தோட்டம் கலாச்சார பாரம்பரியம் மற்றும் பல்லுயிர்களின் சரணாலயமாகும். இது ஒருமுறை காணாமல் போகும் விளிம்பில் உள்ள உயிரினங்களை மறுபடியும் செழிக்க உதவுகிறது.

1950 களில் இத்தாலி ஒரு தொழில்துறை பொருளாதாரத்திற்கு மாறியது, விவசாயிகள் வேலை தேடி நகரங்களுக்கு ஓடியதால், பல நூற்றாண்டுகள் பழமையான நடைமுறைகளையும் மற்றும் பண்ணைகளையும் இழக்க நேரிட்டது. 

ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில் ஒவ்வொரு பழத்திற்கும் நூற்றுக்கணக்கான வகைகள் இருந்தனவாம். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் இடங்களுக்கு ஏற்றவகையில் அமைந்திருந்தது. அம்ப்ரியாவில் கிடைக்கும் ஆப்பிள், பேரிக்காய் மற்றும் செர்ரி வகைகள், வெனிஸ், புளோரன்டைன் அல்லது பீட்மாண்டீஸ் போன்ற நகரங்களில் கிடைக்கும் வகைகளிலிருந்து  வேறுபட்டவை. டல்லா ராகியோனின் கூற்றுப்படி, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1,000க்கு‌ மேற்பட்ட பேரிக்காய் வகைகள் இருந்தன. இன்று,  ஐரோப்பாவில் இத்தாலி பேரிக்காய் உற்பத்தியில் முதலாவதாக இருந்தாலும்,  பேரிக்காய் மற்றும் ஆப்பிள் இரண்டிற்கும், வெறும் நான்கு வகைகளே 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நூற்றாண்டு காலமாக

முந்தைய பழங்களின் மரபணுக்களில் குறியிடப்பட்ட தகவமைப்புத் திறனை இழந்துவிட்டதனால், காலநிலை மாற்றத்தைக் கணித்து அந்த பழைய பழவகைகளைப் பாதுகாப்பது இத்தாலிய பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமானது என்கிறார் ஆர்க்கியோலாஜியா ஆர்போரியாவின்  வேளாண் விஞ்ஞானி மரியோ மரினோ.

3. அரிது, அரிது இயற்கையில் நீல நிறம் அரிது4

ஆஞ்சியோஸ்பெர்ம்களில் உள்ள அந்தோசயினின்களால் இயற்கையில் கடைசியாக பரவிய வண்ணம் நீலம்.  நீலமானது ஒரு சிறிய எண்ணிக்கையிலான பாசிகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களிலும் தோன்றும், ஆனால் இந்த உயிரினங்களுக்கு இயற்கையான நீல நிறத்தின் மிகுதியுடன் மிகக் குறைவான தொடர்பு உள்ளது. நீலத்தை எவ்வாறு இனப்பெருக்கம் செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க மனிதகுலத்திற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ‘இண்டிகோஃபெரா டிங்க்டோரியா’ போன்ற தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இண்டிகோ சாயம் இதற்கு சிறந்த உதாரணம். அந்தோசயினின்களால் கூட எளிதாக நீல நிறத்தை  அடைய முடியாது என்பது வேதியியல் பாடம். தாவரங்கள் இந்த நிறத்தை சரிசெய்வதற்காக பல உத்திகளைக் கையாளுகிறது. முதல் பாலியோலிதிக் குகை ஓவியங்களில் நீலம் இல்லை. அந்தச் சித்தரிப்புகள் சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களைப் பயன்படுத்தி மட்டுமே செய்யப்பட்டன.  நீல எல்இடிகள் மற்றும் லேசர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறத்திற்குப் பிறகே வந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான், மரபியல் பொறியியலாளர்கள் நீல மலர்களை உருவாக்கினர். 

இயற்கையான நீலத்திற்கான தேடல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

‘நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம், காரணம் ஏன்’ என்ற ராமனின் கடலின் நீல நிறம் பற்றிய ஆரம்பகால ஆராய்ச்சி ‘ராமன் விளைவில்’ தொடங்கி‌ இன்று ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்ற நவீன நுட்பமான தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது. நாளை இது ஒரு கைபேசி போன்ற ஒரு கையடக்க ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டரைக் கொண்டு ஃபிரான்செஸ்கா மற்றும் பெட்டோவா ஓவியங்களின் காணப்படும் நீலநிறத்தின் உண்மைத்தன்மையை லாபிஸ் லசூலி, அசூரைட்  மதிப்பீடு செய்யும் என்றால், ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. குறிப்பிட்ட வண்ணச்சாயங்களின் வேதியியல் அமைப்புகளை அடையாளம் காணுவதன் மூலம், ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் காலகட்டம் அல்லது கலைஞருடன் ஒத்துப்போகிறதா என்பதை சரிபார்க்கவும், கலை பாதுகாப்பு மற்றும் வரலாற்று ஆய்வுகளில் இன்றியமையாததாகவும் ஏற்கனவே மாறியுள்ளது.

சென்ற மாதம், ப்ரூக்ளின் மியூசியம், எல்லையற்ற நீலம் என்ற கருப்பொருளில், பண்டைய கலாச்சாரங்களிலிருந்து இன்று வரை நீலம் தோய்ந்த பொருள் அம்சங்கள், உலகளாவிய வரலாறு, கலாச்சார விழுமியங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் சர்வதேச வர்த்தகம் பற்றிய கதைகளை காட்சிப்படுத்தியுள்ளது.3

4. “முற்போக்காளர்கள் தங்களுக்குப் பிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்”

says5 Paul Bloom, professor of psychology at the University of Toronto, and a professor emeritus of Psychology at Yale University

பால் ப்ளூம் அறிவியல் ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தல் பாகுபாட்டை (confirmation bias) எதிர்கொள்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் தங்கள் முன்னணி நம்பிக்கைகளை ஆதரிக்கும் ஆதாரங்களைத் தேடுவதில் அதிகமாக ஈடுபடுகிறார்கள், அதே சமயம் முரண்பட்ட தரவுகளை கவனிக்காமலோ அல்லது தெரிந்தோ விட்டுவிடுகிறார்கள் என்பது இவரின் வாதம். இந்த மனநிலையை “சேனை வீரர் மனநிலை” எனவும், இதில் விஞ்ஞானிகள் தங்கள் கோட்பாடுகளை பாதுகாக்கும் முயற்சி என்றும் குறிப்பிடுகிறார். தவிர்க்க முடியாததற்கான திறந்த மனம் இல்லாமல் இருப்பது பாகுபாடு ஆராய்ச்சியில் பொருத்தமற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என்றும் வலியுறுத்துகிறார். எனவே, எந்தவொரு கருத்தியல் நம்பிக்கையோடு ஒத்துப்போகும் ஆராய்ச்சியின் முடிவுகளைப் பற்றிய கடுமையான சோதனை மற்றும் விமர்சன மதிப்பீட்டின் தேவையை வலியுறுத்துகிறார். இந்த பாகுபாடுகளை அங்கீகாரம் செய்து குறைக்குமாறு அறிவியல் மீது மேலும் சமநிலை கொண்ட அணுகுமுறை ஒன்றை அவர் ஆதரிக்கிறார. இதன் மூலம் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்தலாம் என்பது இவரின் கருத்து.

பால் ப்ளூம் தனது கட்டுரையில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சாத்தியமான பாரபட்சங்களைப் பற்றி விளக்க ‘ஜிஞ்சர் ரோஜர்ஸ் மற்றும் ஃப்ரெட் அஸ்டேர்’ நடன உவமையைப் பயன்படுத்தியுள்ளார். 

ஜிஞ்சர் ரோஜர்ஸ் உவமை என்பது ஒரு பிரபலமான சொற்றொடரைக் குறிக்கிறது.  இந்தச் சொற்றொடர் பல்வேறு துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் கூடுதல் சவால்களை எடுத்துக்காட்டப் பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையில், ஆய்வாளர்கள் தங்களின் ஏற்கனவே உள்ள நம்பிக்கைகள் அல்லது கருத்தியல் விருப்பங்களுடன் ஒத்துப்போகும் சில யோசனைகள் அல்லது “அறிவியல் கண்டுபிடிப்புகளை” எவ்வாறு விமர்சனமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை விவாதிப்பதற்காகப்  பயன்படுத்தப்பட்டது. ஜிஞ்சர் ரோஜர்ஸ் பற்றிய சொற்றொடர் துல்லியமற்றதாக இருந்தாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதைப் போலவே, ஒருவரின் விருப்பமான கருத்தை ஆதரிக்கும் சில அறிவியல் கண்டுபிடிப்புகளும் மிக எளிதாக ஏற்றுக்கொள்ளப்படலாம்.

ஆராய்ச்சி முடிவுகள் ஒருவரின் கருத்தியல் நிலைப்பாட்டை ஆதரிக்கிறதா அல்லது சவால் விடுகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், அறிவியல் கண்டிப்பு மற்றும் சந்தேகத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி ப்ளூம் பரந்த அளவில் குறிப்பிடுகிறார். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அதன் தாக்கங்களைப் பற்றிய துல்லியமான புரிதலை உறுதிசெய்ய, வாசகர்கள், குறிப்பாக முற்போக்குவாதிகள், தங்கள் சொந்த நம்பிக்கைகளை ஆதரிப்பதாகத் தோன்றும் கூற்றுக்களையும் கூட கேள்வி கேட்கவும் சரிபார்க்கவும் அவர் ஊக்குவிக்கிறார். 

1Railway Station Paintings, Golden Age of Train Travel | DailyArt Magazine

2https://www.smithsonianmag.com/arts-culture/meet-italian-fruit-detective-who-investigates-centuries-old-paintings-clues-produce-180985227/

3https://www.nytimes.com/2024/10/03/arts/design/brooklyn-museum-200-art-collection.html

4https://doi.org/10.1016/j.dyepig.2022.110925

5https://www.chronicle.com/article/why-progressives-should-question-their-favorite-scientific-findings


ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.