பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை

जल निश्चित रूप से अन्न से श्रेष्ठ है। इसीलिए यदि वर्षा न हो, तो लोग चिंता करते हैं और सोचते हैं, ‘पर्याप्त अन्न नहीं होगा।’ लेकिन यदि अच्छी वर्षा हो, तो वे प्रसन्न होते हैं और सोचते हैं, ‘अन्न प्रचुर मात्रा में होगा।’ ये सभी विभिन्न रूपों में जल हैं: पृथ्वी, अन्तरिक्ष, स्वर्ग, पर्वत, देवता और मनुष्य, पशु और पक्षी, लताएँ और वृक्ष, शिकारी पशु, कृमि, कीट और चींटियाँ। ये सभी विभिन्न रूपों में जल हैं। इसलिए जल की पूजा करो। Chāndogyopaniṣad (7.10.1)

நீர் உணவுக்கு மேலானது. அதனால் மழை பெய்யாமல் இருந்தால் மக்கள் கவலை கொண்டு ‘உணவு குறையும்’ என்று நினைப்பர். ஆனால், நல்ல மழை பெய்தால் மகிழ்ச்சி அடைந்து ‘உணவு நிறைந்திருக்கும்’ என்று எண்ணுவர். பூமி, இடைவெளி, வானம், மலைகள், தெய்வங்கள், மனிதர்கள், பறவைகள், மரங்கள், விலங்குகள், எலி, பூச்சிகள், ஈசல்கள்—இவையெல்லாம் நீரின் விதிவிவரங்களாகும். எனவே, நீரை பூஜித்து பணியாற்ற வேண்டும்.

சாந்தோக்கிய_உபநிடதம் (7.10.1)

இரண்டு ஆண்டுகளுக்கு‌ முன்புதான் அசோகமித்திரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு” நாவலை படிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இவ்வருடம் மூன்று வாரங்களுக்கு மேல் செகந்தராபாத்தில் தங்க நேரிட்டதால், ஒரு  ஞாயிறன்று, நாமும் ஏன் அசோகமித்திரன் நாவலில் விவரிக்கப்பட்ட இடங்களைத் தேடி, அக்கதையின் காலத்தையும் இடத்தையும் சற்று ஆராயலாமே என்று புறப்பட்டேன்.

 செகந்திராபாத் கிழக்கு மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி செயின்ட் ஜான்ஸ் ரோடு வழியாக சங்கீத் ஜங்ஷன் நோக்கி சென்ற போது, இடது புறத்தில் கீய்ஸ் பெண்கள் ஹைஸ்கூல் தெரிந்தது. அப்போல்லோ ஹாஸ்பிடலை தாண்டியவுடன், சங்கீத் ஜங்ஷன் வந்தது, ஆனால் சங்கீத் தியேட்டர் தற்போது அங்கு இல்லை.  இடது பக்கம் திரும்பி சரோஜினி ரோடில் நடக்க ஆரம்பித்த போது, வலது பக்கத்தில்  செயின்ட் ஆன் பள்ளியை காண முடிந்தது. சிறிது தூரத்தில் ஒரு நாற்சந்தை அடைந்தபோது, மெட்ரோ தூண்களும், பரபரப்பான சாலையும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. இங்கு ஒவ்வொரு சாலையும் கடப்பது என்பது ஒரு பிரம்ம பிரயத்தனம் தான்!

இடது புறத்தில் சற்று தூரத்தில், ஒரு முக்கோண வடிவிலான பெரிய பூங்கா ஒன்று தென்பட்டது. அங்கு சென்றவுடன் தான் கிளாக் டவர் கண்ணில் பட்டது. எழுபது வருடங்களுக்கு முன் இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். நாங்கள் மேட்டூர் சேலம் கேம்பில் இருந்தபோது அங்கிருந்த ரேடியோ மைதானத்தில், காலையிலும், மாலையிலும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடுவதும் மற்றும் உரையாடுவதும் நினைவில் ஆடியது. தற்போது இந்த இடம் வெறிச்சோடிக்கிடந்தது. 

இது ஆஷாட மாதமாதலால், அருகிலுள்ள துர்கா மாதா கோவிலில் பெரிய கூட்டம் தெரிந்தது. போனாலு திருவிழாக்காக, தெலங்கான மாகாணம் முழுவதும் விழாக் காலம் பூண்டிருந்தது. இரண்டு வாரமாக, ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் தெருக்கள் பக்தி, வண்ணம் மற்றும் தாளத்தின் ஒரு கண்கவர் காட்சியாக மாறியுள்ளது. பழைய ஆந்திர மாநிலத்திலிருந்து, தெலுங்கானா பிரிந்த 2014ம் ஆண்டிலிருந்து, இது ஒரு மாநில திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இப்போனாலு விழாவுக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. 1813 ஆம் ஆண்டு, ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத்தை ஒரு பயங்கரமான பிளேக் நோய் தாக்கியதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நோய் பரவியபோது, உஜ்ஜயினியில் நிலைகொண்டிருந்த ஹைதராபாத் இராணுவ படை, புகழ்பெற்ற மஹாகாளேஸ்வரர் கோவிலில் உள்ள தேவியை, நோயை நிறுத்தினால் ஹைதராபாத்தில் அவளுக்கு ஒரு கோவிலை நிறுவுவதாக வேண்டிக் கொண்டனர். அதிசயமாக, நோய் குறையத் தொடங்கியதால், அவ்வீரர்கள், செகந்தராபாத்தில் உஜ்ஜயினி மகாகாளி கோவிலை நிறுவியதாக கூறுகின்றனர். இதுதான் போனாலு திருவிழாவின் தொடக்கம். “போனம்” என்றால் தேவிக்கு படைக்கப்படும் உணவு அல்லது விருந்து. அந்த ஆரம்ப நாட்களில், போனாலு, தெலங்கானாவின் கிராமப்புற மரபுகளில் வேரூன்றிய, ஒரு எளிய, சமூகம் தூண்டப்பட்ட நிகழ்வாக இருந்தது. பக்தர்கள், பெரும்பாலும் பெண்கள், கரும்பு சர்க்கரை மற்றும் பால் அல்லது தயிருடன் சமைத்த சாதத்தை, வேப்ப இலைகள், மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அலங்கரித்த மண் பானைகளில் வைத்து, உள்ளூர் அம்மன் (எல்லம்மா, போச்சம்மா அல்லது மைசம்மா) கோவில்களுக்கு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். இந்த சடங்குகளில், மக்கள் நோய் மற்றும் துரதிர்ஷ்டத்திலிருந்து தங்கள் குடும்பங்களை பாதுகாக்க மஹாகாளியை வணங்குவதற்காக ஒன்று கூடினர். ஒருகாலம் வரை, ஆடு மற்றும் கோழி போன்ற விலங்கு பலிகள் பொதுவாக இருந்தன. அன்றைய விவசாய சமூகத்தில் இரத்தம் அளிக்கும் நம்பிக்கை தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தன. மஹாகாளியின் சகோதரராக கருதப்படும் போத்தராஜும், மஞ்சள், குங்குமம் மற்றும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டு, தீய ஆவிகளை விரட்டுவது போன்ற ஆற்றல்மிக்க நடனங்களுடன் ஊர்வலம் செல்லும் சம்பிரதாயம், இன்றும் நடைபெறுவதைக் காணலாம். 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், போனாலு தெலங்கானாவின் கிராமப்புற பண்பாட்டுடன் ஆழமாக இணைந்துள்ளது.  மேலும், நைசாம்களின் ஆதரவிலும் முக்கியத்துவம் பெற்றது. இந்த திருவிழா, பருவமழை மற்றும் பயிர்கள் தயாராகும் காலத்துடன் ஒத்துப்போவதால், ஆஷாட மாதத்தில் (ஜூலை–ஆகஸ்ட்) நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் முக்கிய கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று வழிபடுகிறார்கள்.  ஒவ்வொரு வருடமும், கோல்கொண்டா கோட்டையின் ஜகதம்பா கோவிலில் தொடங்கி, செகந்தராபாத்திலுள்ள உஜ்ஜயினி மகாகாளி, பால்கம்பேட் எல்லம்மா, லால் தர்வாஸாவின் சிம்மவாஹினி மகாகாளி, சில்கல்குடாவின் போச்சம்மா மற்றும் கட்டா மைசம்மா கோவில்களில் முடிவடைகின்றன.

பாரம்பரிய பட்டு சேலைகள் மற்றும் பாவாடை தாவணி அணிந்த பெண்கள், தங்கள் தலையில் அலங்கரிங்கப்பட்ட போனம் பானைகளை சுமந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒரு சிலர் சாமி பிடித்ததாக நம்பப்படும் மயக்க நிலையில் இருந்தனர்.  இவர்களது தெய்வீக ஆற்றலை அமைதிப்படுத்த பக்தர்கள் அவர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றுவதும், மகாகாளியின் உக்கிரமான சக்திக்கு மரியாதை செலுத்துவதும் ஒரு பழக்கமாம். சிலர் குறி சொல்வதையும் பார்க்க நேர்ந்தது. தாள இசை மற்றும் அம்மனை புகழ்ந்து பாடும் நாட்டுப்புற பாடல்களுடன், இவர்கள் ஊர்வலமாக செல்வதை, பல தெருக்களில் பார்க்க முடிந்தது.   கூகுள் மேப் துணையுடன் பரேட் கிரௌண்ட் நோக்கி அடுத்த கட்ட பயணம். இன்றும் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து கிரீன் லைன் மெட்ரோ ஏறி செகந்தராபாத் வெஸ்ட் ஸ்டேஷனுக்கு சென்றேன். இங்கிருந்து செகந்தராபாத் ஸ்டேஷன், ஆல்பா ஹோட்டல் மற்றும் மோன்டா மார்க்கெட்டை பார்வையிட்டுக் கொண்டு ஸ்டேஷன் ரோடு வழியாக ஸ்ரீ உஜ்ஜயினி மகாகாளி கோவில் சென்றடைந்தேன். இன்று இந்த கோவிலில் விசேஷமாதலால், தெருவெங்கும் ஜே ஜே என்று இருந்தது. பல இடங்களில் பானம் தூக்கிச் செல்லும் சில பெண்கள் செல்பி  எடுத்துக்கொள்ளவும், போட்டோ எடுக்கவும் அனைவரையும் அனுமதிக்கிறார்கள். இத்தனை கூட்டத்திலும், டிராபிக் மிகவும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தாலும், அனைவரும் பொறுமையாக தங்களின் இலக்கை நோக்கி செல்வது ஆச்சர்யமாக இருந்தது. கோவிலுக்கு அருகில் ப்ரோபஷனல் டான்சர்ஸ் மற்றும் போத்துராஜ்களின் நடனங்கள் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. இது எனது பள்ளி நாட்களில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவை ஞாபகபடுத்தியது. கோவிலுக்குள் நுழைவதற்கான வரிசை, அனுமார் வால்  போல் நீண்டு கொண்டே சென்றதால், நான் எனது அடுத்த இலக்கான டேங்க் பண்ட் ரோடை நோக்கி செல்ல ஆரம்பித்தேன்

பரேட் கிரௌன்டும், அருகிலுள்ள மணிக்கூண்டும் அப்படியே இருந்தாலும், குறுகிய சாலைகளிலும், பெருகிய வாகனங்களிலும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. நடைபாதை என்பது எள்ளளவும் இல்லை. இன்றும் இங்குள்ளவர்கள் சங்கீத் என்ற இடத்தை குறிப்பிட்டாலும், அந்த இடம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. நான் முப்பது ஆண்டுக்கு முன் வந்தபோது இருந்த செகந்திராபாத் ஸ்டேஷன் இன்று இல்லை. தற்போது இங்கு தமிழ் பத்திரிகைகள் கிடைப்பது கூட மிகவும் அரிதாகிவிட்டது. அசோகமித்திரன் விவரிக்கும் மோன்டா மார்க்கெட், ஆல்பா ஹோட்டல், இன்றும் இருந்தாலும், எழுபது வருடங்களுக்கு முன் செகந்திராபாத்தை விட்டுப் போன ஒருவர் திரும்பி வந்தால், அவரால் தன் இடத்தை  அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்றால், அது பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். பத்து வருடங்களுக்கு முன், சொல்வனத்தில் செகந்தராபாத்தை சேர்ந்த எஸ் சுரேஷ் என்பவர் தனது அனுபவத்தை அழகாக பகிர்ந்துள்ளார்.

கூட்ட நெரிசலாலும், பல இடங்களில் ரோடு பிளாக் செய்யப் பட்டிருந்தாலும், கூகுளும் திணற ஆரம்பித்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகையில், ஒரு இடத்தில் கூகுள், பன்சிலால்பேட்  படிக்கிணறு அருகில் உள்ளது என்று காண்பித்தது. சில நாட்களுக்கு முன்பு தான், உஸ்மானியா  பல்கலை கழகத்தில் நடை பயணம் செய்யும் பொது, English Foreign Languages University க்குள்ளே இருந்த படிக்கிணறை பார்க்க நேர்ந்தது. 

அடுத்த பத்தாவது நிமிடம், ஒரு பழமையான அதிசயம் என் கண்களுக்கு முன் தோன்றியது – பன்சிலால்பேட் கிணறு. அது அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பல மாடி கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது. இங்குள்ள காட்சியகம், படிக்கிணறுகளின் வரலாறு மற்றும் அறிவியல் ஆர்வத்தை தொட்டு உணர வைத்தது.

‘நீர்நிலைகளை மீட்டெடுப்பது, மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் மற்றும் அவற்றின் மூலம் நிலையான சமூகங்களை உருவாக்குதல் எனது முதன்மையான பணி’ என்கிறார், ஹைதராபாத்தைச்

சேர்ந்த கட்டிடக் கலைஞரும் உள்துறை வடிவமைப்பாளரும் மற்றும்  நீர் போராளி’ என்று அன்பாக அழைக்கப்படும் கல்பனா ரமேஷ். இவர் செகந்திராபாத்தில் உள்ள பன்சிலால்பேட்டை படிக் கிணற்றின் மறுசீரமைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

‘தெலங்கானாவின் மறக்கப்பட்ட படிக்கிணறுகள்’ என்ற ஹைதராபாத் டிசைன் ஃபோரம் (HDF) மற்றும் கட்டடக் கலைஞர் யஷ்வந்த் ராமமூர்த்தியால் தொகுக்கப்பட்டு 2023ல் வெளிவந்த புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. இந்த புத்தகம், வெறும் ஆவணப்படுத்தல் மட்டுமில்லாமல், மறைந்து கொண்டிருக்கும் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் ஒரு துடிப்பான முயற்சியாகும். மேலும் இது வரலாறு, கட்டடக்கலை, மற்றும் கலாச்சார மானுடவியலை ஒரு கவர்ச்சிகரமான கதையாக இணைக்க முயன்றுள்ளது. படிக்கிணறுகள் வெறும் பயன்பாட்டு கட்டமைப்புகள் மட்டுமல்ல, தெலங்கானாவின் சமூக-கலாச்சார அடையாளத்தின் உரைகல்‌ என்கிறது இப்புத்தகம்.  

குஜராத் மற்றும் ராஜஸ்தானின் அலங்கரிக்கப்பட்ட, கோவில் போன்ற படிக்கிணறுகளைப் போலல்லாமல், தெலங்கானாவின் படிக்கிணறுகள் எளிமையான கிரானைட் கட்டமைப்புகள், அழகைவிட பயன்பாட்டிற்காக கட்டப்பட்டவை. காகத்திய மற்றும் குதுப் ஷாஹி காலங்களைச் சேர்ந்த இந்த கிணறுகள், மழைநீரை சேகரித்து, தக்கானின் கடுமையான, நீர்ப்பற்றாக்குறை உள்ள காலங்களில் சமூகங்களைக் காப்பாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டவை.

பன்னிரெண்டு கட்டடக் கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள், இந்த கட்டமைப்புகளின் நீரியல், புவியியல், மற்றும் சின்னவியல் ஆகியவற்றை ஆராய்ந்து, இடைக்கால அரச வம்சங்கள் எவ்வாறு வெப்பமிகுந்த காலநிலையில் நீர் மேலாண்மையை திறமையாக மேற்கொண்டனர் என்பதை விளக்கியுள்ளனர்.

இப்புத்தகம் கட்டடக்கலை நடைமுறை, மத மற்றும் சமூக சடங்குகளில் படிக்கிணறுகளின் பங்கு, மற்றும் பிராந்தியத்தின் கலாச்சார போர்வையில் அவற்றின் ஒருங்கிணைப்பு போன்ற ஆராயும் கட்டுரைகளை ஒன்றாக இணைக்கிறது.

ஸ்னேஹா பார்த்தசாரதியின், ‘நீருக்கு ஒரு புகழ்ப்பா’ என்ற முதல் கட்டுரை, டிநீரின் புனித மற்றும் நடைமுறை முக்கியத்துவத்தை பல நாகரிகங்களில், குறிப்பாக தெலங்கானாவின் பதுக்கம்மா திருவிழாவில், பூக்களை மூழ்கடித்து நீரை இயற்கையாக சுத்தப்படுத்தியதை விளக்குகிறது. மற்றொரு கட்டுரை, ஹைதராபாத்தின் பாவோலிகள், படிக்கிணறுகள் மற்றும் ஹைதராபாத்தின் வரலாற்று தோட்டங்கள் (baghs) இடையேயான நெருக்கமான தொடர்பை வெளிப்படுத்துகிறது, இந்த இடங்கள் பெண்களுக்கு சமூக மையங்களாக இருந்ததை, அங்கு உருது பாடங்கள், திருமண ஒப்பந்தங்கள், மற்றும் நீச்சல் பயிற்சிகள் குளிர்ந்த நிழலில் நடந்ததை வெளிப்படுத்துகிறது.

 அம்மாபள்ளி கோவில் படிக்கிணறு போன்றவை, ஒரு காலத்தில் 5,000 ஏக்கர் நிலத்தை பாசனம் செய்ய முடிந்தவை, இப்போது நிலத்தடி நீர் மறுசுழற்சி மற்றும் நகர்ப்புற வெள்ளத் தடுப்புக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றன.

இப்புத்தகத்தில், 40-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள், படிக்கிணறுகளின் எளிமையான அழகை காட்சிப் படுத்தியுள்ளன. இவை, இப்பிராந்தியத்தின் கடினமான கிரானைட் நிலப்பரப்பில் அமைந்துள்ள கட்டடக்கலையின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

இன்னும் 170-க்கும் மேற்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட படிக்கிணறுகள் இடிபாடுகளாக உள்ளதையும், குப்பைகள் மற்றும் நில ஆக்கிரமிப்பால் மூடப்பட்டுள்ளதையும் மறைக்காமல் எடுத்துக் காட்டியுள்ளது. இந்த “தலைகீழ் நீர் கட்டமைப்புகள்” முற்றிலும் மறைவதற்கு முன் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

இந்த புறக்கணிக்கப்பட்ட பாரம்பரியத்தை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தும் ஒரு படைப்பில். குதுப் ஷாஹி கல்லறைகளில் உள்ள படி பாவோலி போன்ற மறுசீரமைக்கப்பட்ட படிக்கிணறுகள், இப்போது பறவைகளுக்கு ஒரு சரணாலயமாக உள்ளது. இந்த கட்டமைப்புகள் மீண்டும் சமூகங்களுக்கு கலாச்சார இடங்களாகவோ அல்லது நீர்த்தேக்கங்களாகவோ பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.

‘தெலங்கானாவின் மறக்கப்பட்ட படிக்கிணறுகள்’ ஒரு பிராந்தியத்தின் பாடப்படாத பாரம்பரியம். இது வாசகர்களை இந்த பழங்கால கிணறுகளின் பழுதடைந்த படிகளில் இறங்கி நீரை எடுக்கவும், அங்குள்ள கற்களில் பதிக்கப்பட்டுள்ள கதைகளை கண்டறியவும் அழைக்கின்ற நவீன காதல் கடிதம்.

பெண்களால் கட்டப்பட்ட இந்தியாவின் பழங்கால படிக்கிணறுகள்!

முகலாய பேரரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜுக்காக எழுப்பிய தாஜ்மஹாலை (1632) அனைவரும் அறிவோம்.  ஆனால் எத்தனை பெண்கள் தங்களது காதலர்களுக்காக நினைவுச் சின்னங்களை நிறுவினார்கள் என்பது பற்றி யோசித்திருப்போமா என்று தெரியவில்லை. மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் போன்ற வறண்ட பகுதிகளில் காணப்படும்  பல படிக்கிணறுகள், இப்பகுதியைச் சேர்ந்த ராணிகள் மற்றும் இதர பெண் புரவலர்கள் அங்கிருந்தவர்களின்  குடிநீர்  தேவைகளை மனதில் கொண்டு, உருவாக்கிய காதல் சின்னங்கள்.

பதான் நகர் சரஸ்வதி நதிக்கரையில், ஒரு தலைகீழ் கோயிலின் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ராணி கி வாவ் மிகப்பழமையான படிக்கிணறாகும்.  பல நிலைகள் வழியாக கீழ் நோக்கிச்  செல்லும் படிகளைச் சுற்றியுள்ள தூண்களில், 800 கற்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  பெரும்பாலும் விஷ்ணு-அவதார கருப்பொருள்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வடிவியல் வடிவங்களைக் கொண்டுள்ளன. இவை அந்தக் காலத்தின் உயர்ந்த கைவினைத்திறனையும், தனித்துவமான மரு-குர்ஜாரா கட்டிடக்கலை பாணியையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் படிக்கிணறு 1063 ஆம் ஆண்டு சௌலுக்கிய (Chaulukya or solanki) வம்சத்தைச் சேர்ந்த ராணி உதயமதியால் தனது கணவர் ராஜா பீமதேவை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. காந்திநகர் (குஜராத்) அருகிலுள்ள அடலஜ் கி வாவ், தண்டாய் தேஷின் வகேலா (Vaghela) வம்சத்தைச் சேர்ந்த ராணா நீர் சிங்கின் நினைவாக அவரது மனைவி ருடாதேவியால்1498 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 

அகமதாபாத்க்கு அருகிலுள்ள தாதா ஹரிர் வாவ், முகமது ஷாவின் ஆட்சிக் காலத்தில், அரச செவிலியரான தாதா ஹரிர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. 

வரலாற்று விளக்கங்கள் பெண்களை பெருமளவில் புறக்கணித்துள்ள ஒரு சகாப்தத்தில், இந்தப் படிக்கிணறுகளுக்குப் பின்னால் உள்ள வரலாறு குறிப்பிடத்தக்கது.

https://www.indiatimes.com/news/india/stepwells-women-lovers-memory-579747.html

நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளில் ஃப்ராக்டல் (fractal) வடிவியல் (geometry)

ஃப்ராக்டல் வடிவங்கள் என்பது ஒரு சிறிய பகுதி முழு கட்டமைப்பை ஒத்திருக்கும் வடிவங்கள். இது இயற்கையில் மரங்கள், பனிக்கட்டிகள் மற்றும் கட்டிடக்கலைகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. சமீபத்தில் படிக்கிணறுகளின் வடிவங்களை கணினி மற்றும் கணித முறைகளால் ஆய்வு செய்து, அவற்றின் சிக்கலையும் அழகையும் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். இது பாரம்பரிய கட்டிடக்கலையைப் பாதுகாக்கவும், நவீன வடிவமைப்புகளுக்கு உதவவும் பயன்படுகிறது.

உதாரணமா,க ஒரு பெரிய சதுரத்தை எடுத்துக் கொண்டு, அதை நான்கு சிறிய சதுரங்களாகப் பிரிப்போம். இப்போது, அந்த ஒவ்வொரு சிறிய சதுரத்தையும் மேலும் நான்கு சிறிய சதுரங்களாகப் பிரிப்போம். இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்யும் போது. ஒவ்வொரு படியிலும் உள்ள சிறிய சதுரங்கள், முதல் பெரிய சதுரத்தைப் போலவே தோன்றும், ஆனால் அளவில் சிறியவையாக இருக்கும். இந்த திரும்பத் திரும்ப வரும் முறை ஒரு ஃப்ராக்டல் உருவாக்குகிறது. ஃப்ராக்டல் பகுப்பாய்வுஎன்பது வெவ்வேறு அளவுகளில் திரும்பத் திரும்ப வரும் முறைமைகளை ஆராயும் ஒரு முறையாகும். இதை உபயோகித்து  எளிய விதிகளிலிருந்து, எப்படி சிக்கலான வடிவங்கள் உருவாகிறது என்பதை அறிய முடியும். ஒவ்வொரு மட்டத்திலும் பிரிவு முறை ஒரே மாதிரியாகத் தோன்றும். இந்த “சுய-ஒத்த தன்மை” (self-similarity) ஃப்ராக்டல்களின் மையமாகும்—எளிய வடிவங்கள் அல்லது விதிகள் திரும்பத் திரும்பி சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்குகின்றன.

ஃப்ராக்டல் பகுப்பாய்வு இந்த திரும்பத் திரும்ப வரும் முறைகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றின் சிக்கல்தன்மையை அல்லது அவை இடத்தை எவ்வாறு நிரப்புகின்றன என்பதை ஆராய்கிறது. இது ஒரு படத்தை பெரிதாக்கி, எவ்வளவு நெருக்கமாகப் பார்த்தாலும் ஒரே வடிவமைப்பு மீண்டும் மீண்டும் தோன்றுவதைப் போன்றது.

படிக்கிணறுகள் ஆண்டு முழுவதும்,  குறிப்பாக வறண்ட காலங்களில் நீர்மட்டம் குறையும் போது, நீரை வழங்குவதற்காக, கட்டப்பட்டவை. இவை வெப்பமான காலத்தில் குளிர்ந்த ஓய்விடங்களாகவும், சமூக அல்லது மதக் கூட்டங்களுக்கான இடங்களாகவும் பயன்பட்டன.

ஒரு படிக்கிணறு இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: ஒன்று நீர் சேமிப்பதற்கான செங்குத்து குழி அல்லது கிணறு. இன்னொன்று, நீரை அடைவதற்கான படிகள் அல்லது பாதைகள் மற்றும் அறைகள் கொண்ட தொடர் கட்டமைப்பு. பெரும்பாலும் வளைந்து, நெளிந்து அல்லது குறுக்கு வடிவங்களில் அமைந்துள்ள இப்படிகள், நீர்மட்டத்தை எளிதாக அடைய உதவுகின்றன.

குஜராத், ராஜஸ்தான் மற்றும் பிற வறண்ட பகுதிகளில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  கட்டப்பட்டுள்ளன. சில தரவுகள், இந்து சிந்து வெளி நாகரிகத்தின் காலத்திலிருந்தே உள்ளன என்று கூறுகிறது.

ராஜஸ்தானிலுள்ள சாந்த் பவோலியிலுள்ள (Chand Bouli)  படிக்கிணறு,  13 மாடிகளில் 3,500 படிகளைக் கொண்டு, குறுக்கு, வைர வடிவ முறையில் (diamond shape) அமைந்துள்ளது. படிகள் ஒரு பெரிய வடிவியல் வடிவத்தை உருவாக்குகின்றன, மேலும் படிக்கட்டின் சிறிய பகுதிகள் ஒத்த வடிவியல் வடிவங்களைத் திரும்ப திருப்பி, ஒரு ஃப்ராக்டல் விளைவை உருவாக்குகிறது.

குஜராத்திலுள்ள ராணி கி வாவ் படிக்கிணறு, சிக்கலான செதுக்கல்கள் மற்றும் படிகளைக் கொண்டு, ஃப்ராக்டல் முறையில் மீண்டும் மீண்டும் தோன்றும் வடிவங்களைக் கொண்டுள்ளது. வளைவுகள் அல்லது படி முறைகள் போன்ற எளிய வடிவங்களிலிருந்து சிக்கலான வடிவமைப்பு உருவாகிறது.

தில்லியில் உள்ள அக்ரசேன் கி பவோலியிலுள்ள  படிகள் மற்றும் வளைவுகள் மீண்டும் மீண்டும் வரும் வடிவியல் முறைகளைக் காட்டுகின்றன. 

இம்மாதிரியான கட்டமைப்புகள் செயல்பாட்டுடன் கூடுதலாக பார்வைக்கு அழகு சேர்ப்பதுடன், நீர் சேமிப்பு அமைப்பை கலைப் பொருளாகவும் மாற்றியுள்ளன. மேலும், மீண்டும் மீண்டும் வரும் முறைகள் (பிணைக்கப்பட்ட படிகள் அல்லது வளைவுகள் போன்றவை) கட்டமைப்பை வலுவாக்கி, நீரின் அழுத்தத்தையும் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை அதிர்வுகளையும் தாங்க உதவுகிறது. 

 படிக்கிணறுகள் என்பவை நீரைச் சேமித்து அணுகுவதற்காக பூமிக்கு அடியில் செதுக்கப்பட்ட பெரிய, கலைநயமிக்க படிக்கட்டுகளைப் போன்றவை. அவற்றின் கோடைகாலத்தில் நீர்மட்டம் குறையும்போது, படிக்கிணறுகளின் அடிப்பகுதி மேற்பரப்பை விட 5–6°C குளிர்ச்சியாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.  

 வடிவமைப்புகள்—வெவ்வேறு அளவுகளில் மீண்டும் மீண்டும் வரும் முறைகள்—இவற்றை வலுவாகவும், அழகாகவும், திறமையாகவும் ஆக்குகின்றன. பரமர் மற்றும் மிஸ்ராவின் ஆய்வறிக்கை, சந்த் பவோரி அல்லது ராணி கி வாவ் போன்ற இந்த பழங்கால கட்டமைப்புகள், புரிமான வடிவவியலைப் பயன்படுத்தி நடைமுறை மற்றும் அழகியல் கட்டிடக்கலையை இணைத்து, இன்றைய நீர் பாதுகாப்புக்கு பாடங்களை வழங்குவதைக் காட்டுகிறது.

The Indian Stepwells – India: https://brasaussiedesign.com/the-indian-stepwells-india/

Fractal Geometry in Water Conservation Structures: Step Wells and Tanks in India

Indian Journal of History of Science 55(2) DOI:10.16943/ijhs/2020/v55i2/154675

Fractal-Based Computational Approach and Visual Complexity Analysis of Indian Traditional Stepwell Chand Baori:

https://doi.org/10.52842/conf.caadria.2023.2.009

The Revival of India’s Stunning Stepwells : https://reasonstobecheerful.world/reviving-indias-stepwells-water-scarcity/

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை

வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள் பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.