- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
பொதுயுகம் நான்காம் நூற்றாண்டில் நடந்த ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிரேக்க மருத்துவம் படிப்படியாக செல்வாக்கை இழந்தது. மருத்துவம் மீண்டும் மதத்தின் ஒரு பகுதி ஆக ஆரம்பித்தது. கிறிஸ்தவ மடாலயங்கள் மருத்துவமனையாக செயல்பட ஆரம்பித்தன. நோய் என்பது பாவத்தின் விளைவு என்றும், அதை சரிசெய்ய மந்திர ஜெபங்கள், மன்னிப்பு, காணிக்கைகள் போன்றவை எழுந்துவர ஆரம்பித்தன. ஹிப்போகிரேடெஸ், கேலன் போன்றவர்களின் கோட்பாடுகள் செல்வாக்கிழந்து அவர்களின் நூல்கள் மடாலயங்களில் வைக்கப்பட்டன.
பெர்சிய நிலத்தில்
பெர்சிய நிலம் என்று குறிப்பிடும்போது மையமாக இன்றைய ஈரான் பகுதியை குறித்தாலும், பெர்சிய பேரரசு அதன் உச்ச காலத்தில் ஆட்சி செய்த நிலப்பரப்பு கட்டுரையின் மையம் கருதி கணக்கில் கொள்ளப்படுகிறது. இன்றைய இந்தியாவின் மேற்குப்பகுதி முதல் கிரேக்கம் வரை நீண்டிருந்த காலம், அறிவுப் பரிமாற்றத்தின் சித்திரத்திற்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஓரிறையா அல்லது இருமை நோக்கா?
பெர்சிய நிலத்தில், இன்றைய ஈரானில் சொராஸ்ட்ரியனிச மதம் பொ யு மு 2000 ஆம் ஆண்டில் தீர்க்கதரிசி ஜராதுஷ்டிராவால் (Zarathushtra) நிறுவப்பட்டது என கருதப்படுகிறது. சொராஸ்ட்ரியனிச மதத்தின் அடிப்படைகள் அதற்குமுன் இருந்து தொடர்ந்து வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுவே உலகின் முதல் ஓரிறை சமயமாக இருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது. நாம் இந்த தொடரின் எகிப்து அத்தியாத்தில் பொ யு மு 13-ம் நூற்றாண்டில் அக்கெனதென் ஆட்சிக்காலத்தில், சூரியக்கதிர்களின் தேவதையான அதின் என்ற ஒற்றைக்கடவுள் வழிபாட்டுமுறை இருந்ததை பார்த்தோம்.
சொராஸ்ட்ரியனிச மதத்தின் முழுமுதல் தெய்வம் அஹுரா மஸ்தா. அனைத்துவிதமான நன்மைக்கும், ஒளிக்கும், படைப்புக்கும் இவரே காரணமானவர்.

அங்கரா மைன்யு (Angra Mainyu) / அஹ்ரிமான் (Ahriman) என்பவர் அனைத்து தீமைக்கும் காரணம். அங்கிரா என்பது அழிவு, குழப்பமான, ஒழுங்கற்ற, தடுக்கும், தீங்கு விளைவிக்கும், கோப வெளிப்பாடு என்றும் மைன்யு (mainyu) என்பது மனம் அல்லது ஆவி (Spirit) என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
ஆகாயம், நீர், பூமி, தாவர இனங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் நெருப்பு ஆகிய ஏழு விதமான வழிகளில் இந்த உலகத்தை படைக்கிறார் அஹுரா மஸ்தா. அஹ்ரிமான் இவை ஒவ்வொன்றிற்கும் எதிர்மறையை உருவாக்குகிறார்.
அஹுரா மஸ்தா கவாவோட்தா (Gavaevodta) என்ற முதல் காளையை உருவாக்குகிறார். அஹ்ரிமான் எந்தவித காரணமும் இல்லாமல் தன்னால் முடியும் என்ற ஒரே காரணத்துக்காக அதைக் கொல்கிறார். அஹுரா மஸ்தா இறந்த காளையை நிலவுக்கு கொண்டுசென்று அதன் விதையை சுத்திகரித்து விலங்கு இனத்தைப் படைக்கிறார்.
அஹுரா மஸ்தா முதல் மனிதனான கயோமார்தனை (Gayomartan) படைத்தார். இவரும் அஹ்ரிமானால் கொல்லப்பட்டார். கயோமார்தனின் விதையை சூரியன் சுத்திகரிக்கிறது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிலிருந்து ஒரு ரூபார்ப் (rhubarb) செடி வளர்ந்து முதல் தம்பதியரான மாஷியா (Mashya) மற்றும் மாஷியானாக் (Mashyanag) ஆகியோரைப் பிறப்பிக்கிறது.
அவர்கள் பூமி, விலங்குகள் மற்றும் தங்கள் படைப்பாளருடன் இணக்கமாக வாழ்கிறார்கள். அஹ்ரிமான் தோன்றி அவரே அவர்களின் படைப்பாளி என்றும், அஹுரா மஸ்தா ஒரு எதிரி என்றும் அவர்களுக்குக் கூறுகிறார். இந்தப் பொய்யை நம்பியதன் மூலம் முதல் பாவம் உருவாகிறது. அஹ்ரிமான் மனிதர்களுக்கு நோயையும், பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியையும் கொண்டு வந்ததாக கருதப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக மனிதர்கள் ஆஷா (Asha) என்ற சரியான பாதையை தேர்ந்துகொள்ளும் விருப்பத்தேர்வு (Free Will) பற்றியும், விடுதலையையும், நியாயத்தீர்ப்பு நாள் பற்றியும் பேசுகிறது. நாம் இந்த கட்டுரைக்கு தொடர்பான இந்த அளவோடு நிறுத்திக்கொண்டுள்ளோம்.

அஹ்ரிமான் சொராஸ்ட்ரியனிச மதத்தில் வழிபடப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அஹ்ரிமான் வழிபாடு பின்னர் ரோமானிய நிலத்தில் மித்ராயிசம் என்ற குறுங்குழுவாக நீடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மித்ராயிச கோவில்கள் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டு இருந்தன. ஏழு படிநிலைகள் வழியாக மீட்பை முன்வைத்தது.
அஹ்ரிமான் சிலையின் நான்கு சிறகுகள், நான்கு பருவங்களின் சின்னங்களைத் தாங்கியுள்ளன. இடியின் சின்னம் அவரது மார்பில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் தீயின் தெய்வமான வல்கனின் (Vulgan) சுத்தியல் மற்றும் இடுக்கியும் – மெர்க்குரி தெய்வத்தின் சேவல் மற்றும் கோல் (கடுசியஸ்) உள்ளன. மெர்க்குரி வணிகம், சொல்லாற்றல், தகவல் தொடர்பு, பயணிகள், எல்லைகள், அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றுக்கும், ஆன்மாக்களை பாதாள உலகத்திற்கு வழிகாட்டி அழைத்தும் செல்லும் தெய்வம்1.
இந்த தொன்மத்தில் ஒரு கேள்வி வருகிறது. சொராஸ்ட்ரியனிச மதம் முழுமுதல் தெய்வமாக அஹுரா மஸ்தாவை முன்வைக்கிறது. அஹுரா மஸ்தா படைப்பின் கடவுள். அவரே அனைத்தையும் படைக்கிறார். அப்படி என்றால் அஹ்ரிமானை அவர் படைத்தாரா? பின்னர் வந்த ஓரிறை சமயங்களில் எதிர்மறைத்தன்மை என்பது வீழ்ச்சியின் உருவாக (Fallen Angels) முன்வைக்கப்படுகிறது. ஆனால் சொராஸ்ட்ரியனிச மதம் இதை எப்படி விளக்கியது, அது மருத்துவத்துக்கு எந்த விதத்தில் தொடர்புடையது என்று கட்டுரைத்தொடரின் இறுதியில் பார்ப்போம்.
அலெக்சாந்திரியா நூலக அழிவில்
இதற்குமுன் அசூர்பனிபால் உருவாக்கிய நினிவே நூலகமும், கிரேக்க ரோம மருத்துவ அத்தியாயத்தில் அரசன் தாலமியால் உருவாக்கப்பட்ட அலெக்சாந்திரியா நூலகமும் எவ்வாறு மருத்துவ சிந்தனையின் மையமாக திகழ்ந்தது என்று பார்த்தோம்.
அலெக்சாந்திரியாவை கைப்பற்றிய அராபியப் படைத்தளபதி அம்ர் இபின் அல்-ஆஸ், கலீஃப் உமரிடம் நூலகத்தை என்ன செய்வது என்று கேட்டார். புனிதநூலுடன் முரண்படும் புத்தகங்களை எரித்துவிடும்படி அவர் ஆணையிட்டார். அப்படியானால் புனிதநூலுடன் உடன்படும் நூல்களை என்ன செய்வது என்று கேட்கப்பட்டது. அந்த கருத்துக்கள் ஏற்கனவே புனிதநூலில் உள்ளதால் அவையும் தேவையில்லை, எரித்துவிடுங்கள் என்று ஆணையிட்டார். நூலக புத்தகங்கள் சுமார் ஆறு மாதம் அலெக்சாந்திரியா நகர குளியலறைகளுக்கு விறகாக பயன்படுத்தப்பட்டன என்று 1200 களில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியர் கிரிகோரி பார் ஹெப்ரேயஸ் (Gregory Bar Hebraeus) குறிப்பிடுகிறார். இதற்கு ஏற்பும், மறுப்பும் இருக்கிறது.
ரோம சாம்ராஜ்யம் முடிவுறும் காலத்தில் 3 ஆம் நூற்றாண்டில் சாசனிய பேரரசால் பெர்சிய நிலத்தில் உருவாக்கப்பட்ட முக்கியமான ஒரு மையம் காண்டிஷாபூர் அகாடமி. கிரேக்க, பாரசீக மற்றும் இந்திய மருத்துவ மரபுகளை சார்ந்த அறிஞர்கள் ஒன்றுகூடி ஆராய்ச்சி செய்யும் இடமாக இருந்தது. பைசாந்தியப் பேரரசின் கொடுமைகளில் இருந்து அகதிகளாக வெளியேறிய கிரேக்க அறிஞர்களுக்கு காண்டிஷாபூர் அகாடமி புகலிடமாக விளங்கியது.
முக்கியமாக இது ஒரு மருத்துவ கல்லூரியாக இருந்தது. மருத்துவர்களுக்கான முறையான பாடதிட்டமும் தரப்படுத்தப்பட்ட உரிமத்தேர்வுகளும் இருந்தன. காண்டிஷாபூர் கிரேக்க, பாரசீக மற்றும் இந்திய மருத்துவ மரபுகளை முறையாகச் சேகரித்து வளர்த்து, பரப்பியது. கலீபாவின் படையெடுப்புகளில் முற்றிலும் அழிக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இதன் அறிஞர்களும், வழிமுறைகளும் பின்னர் ஞான மாளிகைக்கு இடம் பெயர்ந்தன.
ஞான மாளிகை (House of Wisdom)
பொ யு 7 ஆம் நூற்றாண்டில் பெர்சியாவின் பாக்தாத் நகரில் கலிஃப் ஹருன் அல்-ரஷீத் (பொ யு 786–809) என்பவரால் ஞான மாளிகை என்று பொருள் அளிக்கக்கூடிய Bayt al-Ḥikmah நூலகம் நிறுவப்பட்டது. அவரது மகன், கலிஃப் அல்-மாமூன் (பொ யு 813 – 833) ஆட்சியில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு துறைசார் ஞானிகளை உலகெங்குமிருந்து ஈர்த்தது.
இதன் முக்கிய நோக்கம் அனைத்து மொழிகளில் இருந்தும் அரபு மொழிக்கு மருத்துவம், வானியல், கணிதம் போன்ற பல்வேறு அறிவுத்துறைகளின் நூல்களை மொழிபெயர்ப்பதும் மற்றும் ஆராய்ச்சி செய்வதுமாக இருந்தது. மருத்துவத்தை பொறுத்தவரை இந்தியாவின் சரகர், சுஷ்ருதர் முதல் ஹிப்பாக்ரட்ஸ், கேலன் வரை அனைவரது படைப்புகளும் மொத்தமாக தொகுக்கப்பட்டன. அரபி மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன.
ஞான மாளிகையிலிருந்து வெளிப்பட்ட மிக முக்கியமான ஆளுமைகளின் மருத்துவ பங்களிப்பைப் பார்க்கலாம். (ஞான மாளிகை பல்வேறு துறை அறிஞர்களை உருவாக்கியது. அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. இங்கு நாம் குறிப்பிடும் அறிஞர்களும் பல்துறை அறிஞர்கள். அவர்களின் மிகமிக முக்கியமான மருத்துவ பங்களிப்பு மட்டும் குறிப்பிடப்படுகிறது)
மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள்
குஸ்டா இபின் லுகா (Qusta ibn Luqa, 820 – 912), பைசாந்திய பேரரசில் செய்த பயணங்கள் மூலம் கிரேக்க புத்தகங்களை கொண்டுவந்தார். பின்னர் அவற்றை அரபி மொழிக்கு மொழியாக்கம் செய்தார். இவர் எழுதிய A Treatise on the Difference Between Spirit and Soul புத்தகத்தில் இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளிலிருந்து இரண்டு நாளங்கள் எவ்வாறு வெளிவருகின்றன, அவற்றில் ஒன்று இதயத்தின் சுவாசத்திற்காக நுரையீரலுக்குச் செல்கிறது என்பதை விவாதிக்கிறது. இது அன்று நிலவிய கேலனிக் புரிதலிலிருந்து மாறுபட்டது. இது நுரையீரல் இரத்த ஓட்டத்தின் முன்மாதிரியாக (Pulmonary Circulation) கருதப்படுகிறது2.
ஹுனைன் இபின் இஷாக் அல்-இபாதி (Hunayn ibn Ishaq al-Ibadi, 808–873) கண் சார்ந்த மருத்துவத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். மனிதக் கண் குறித்த அவரது ஆய்வுகளை கொண்டு எழுதிய “கண் பற்றிய பத்து ஆய்வுக் கட்டுரைகள்” (Book of the Ten Treatises of the Eye) என்ற நூலில் கண்ணின் மையத்தில் படிக லென்ஸ் (crystalline lens) இருப்பதாக அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீர்க்கட்டிகள் (cysts) மற்றும் கட்டிகளின் (tumors) தன்மை, மேலும் அவை ஏற்படுத்தும் வீக்கம் பற்றியும், கருவிழிப் புண்களை (corneal ulcers) அறுவை சிகிச்சை மூலம் எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதையும், கண்புரை (cataracts) சரிசெய்வதற்கான சிகிச்சையையும் அவர் விளக்குகிறார்.
அல் கிண்டி (Abū Yūsuf Yaʻqūb ibn Isḥāq aṣ-Ṣabbāḥ al-Kindi 801 – 873) கணிதம் மற்றும் மருத்துவத்தில் தனக்கிருந்த அறிவை ஒருங்கிணைத்து ஒரு மருந்தின் வலிமையை அளவிட ஒரு கணித அளவுகோலை உருவாக்கினார். மேலும் நோயின் மிக முக்கியமான நாட்களை முன்கூட்டியே ஒரு மருத்துவர் தீர்மானிக்க உதவும் ஒரு முறையையும் (நிலவின் கட்டங்களின் அடிப்படையில்) உருவாக்கினார். இது மருத்துவத்தில் அளவீட்டை (quantification) நோக்கிய முதல் தீவிர முயற்சியாக கருதப்படுகிறது.
அபு ரெய்ஹான் முஹம்மது இபின் அஹ்மத் அல்-பிர்ரூனி (Abu Rayhan Muhammad ibn Ahmad al-Biruni 973 – 1050 ) நவீன புவி அளவியலின் தந்தை, இந்தியவியல் நிறுவனர் மற்றும் முதல் மானுடவியலாளர் என்று பல்வேறு விதமாக அழைக்கப்படுகிறார். பிர்ரூனி, “கிதாப் அல்-ஸைதலா ஃபி அல்-திப்” (Kitab al-saydala fi al-tibb – மருத்துவ மருந்தியல் பற்றிய புத்தகம்) என்ற ஒரு மருந்தியல் நூலை (pharmacopoeia) எழுதினார். இது சிரிய, பாரசீக, கிரேக்க, பலுச்சி, ஆப்கான், குர்திஷ் மற்றும் சில இந்திய மொழிகளில் உள்ள மருந்துப் பெயர்களுக்கான ஒத்த சொற்களைப் பட்டியலிடுகிறது.
அலி இப்னு அல்-அப்பாஸ் அல்-மஜூசி (10 ஆம் நூற்றாண்டு), மருத்துவம் மற்றும் உளவியல் குறித்த பாடநூலான “கிதாப் அல்-மாலிகி” (Kitab al-Maliki or Complete Book of the Medical Art) என்ற புத்தகத்தை எழுதியவர். மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவின் தேவையையும், மருத்துவ நெறிமுறைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. உளவியல் உடலியல் (psychophysiology) மற்றும் உளவியல் சார்ந்த மருத்துவத்தில் (psychosomatic medicine) ஒரு முன்னோடியாக கருதப்படுகிறார்.
கேலன் கொள்கைகளை கேள்விக்கு உட்படுத்தல்
அபூ பக்ர் முஹம்மத் இப்னு ஸக்கரியா அல்-ராஸி ( Abu Bakr al-Razi, 864-935) இஸ்லாமியப் பொற்காலத்தில் வாழ்ந்த ஒரு பாரசீக மருத்துவர், தத்துவஞானி மற்றும் இரசவாதி ஆவார். இவர் எழுதிய The Comprehensive Book on Medicine என்ற இந்த 23 தொகுதிகளைக் கொண்ட மருத்துவப் பாடநூல், மகப்பேறு மருத்துவம் (gynecology), மகப்பேறியல் (obstetrics), புற்றுநோயியல் (oncology) மற்றும் கீமோதெரபி (chemotherapy), மற்றும் கண் அறுவை சிகிச்சை (ophthalmic surgery) ஆகியவற்றிற்கு அடித்தளமாக அமைந்தது.
இதைவிட நான் முக்கியமாக கருதுவது அல்-ராஸி எழுதிய al-Shukūk ʿalā Jalīnūs (Doubts about Galen) என்ற நூல்.
மருத்துவத்தை தத்துவத்துடன் இணைக்கும் அல்-ராஸி, சுதந்திரமான சிந்தனை மருத்துவப்பயிற்சிக்கு அவசியம் என்று வலியுறுத்துகிறார். காய்ச்சல் குறித்த தனது சொந்த மருத்துவக் கண்டுபிடிப்புகளுடன் கேலனின் விளக்கங்கள் ஒத்துப்போகவில்லை என்றும், எனவே சில சந்தர்ப்பங்களில் தனது மருத்துவ அனுபவம், கேலனின் அனுபவத்தை விட மேலானது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அல்-ராசி அரிஸ்டாட்டில் வழி பின்பற்றி கேலன் உருவாக்கிய என்றும் இருக்கும் பிரபஞ்சம் (eternity of the world) என்பதை கேள்விக்கு உள்ளாக்கினார். கேலன், பிரபஞ்சம் அதன் பொதுவான அம்சங்களில் மாறாமல் உள்ளது. ஒரு விஷயம் மாறாமல் இருந்தால், அது அழிவிற்குரியதல்ல (not corruptible), அழிவில்லாதது என்பதால் அது பிறப்பில்லாதது (ungenerable) என்றும் பொருள். எனவே பிரபஞ்சம் எப்போதும் இருந்துள்ளது, என்றும் இருக்கும் என்றார்.
ஒரு பொருள் நீண்ட காலம் மாறாமலிருந்தாலும், ஒரு நேரத்தில் முழுமையாக அழிந்துவிடலாம். ஒரு கண்ணாடி உடைதல் அல்லது நிலையான இடத்தில் கட்டிய ஒரு கட்டிடம் அடித்தளத்தில் ஒரு வெளிப்புற அடிக்கொடுப்பதன் மூலம் இடிந்து விழுவது போல என்றார். ஒரு பொருளுக்கு இயற்கையான அழிவுக்குணம் இல்லையென்பது மட்டும் அது அழியாது என்பதற்கான சான்று இல்லை. அதை வெளியில் இருந்து அழிக்கக்கூடிய வெளிக்காரணம் (external cause) இருப்பதை தவிர்ப்பதும் அவசியம் என்றார்.
இதன் தொடர்ச்சியாக, நான்கு ஹூயுமர் (humors) கோட்பாட்டை அல்-ராஸி கடுமையாக விமர்சித்தார்.
உடல்நலம் மற்றும் இயல்பான உடல் வெப்பநிலைக்கு இந்த ஹூயுமர் சமநிலை முக்கியம் என்று கேலன் கருதினார். வெவ்வேறு வெப்பநிலையுள்ள ஒரு திரவத்தை உடலில் செலுத்துவதன் மூலம் இந்த சமநிலையை சீர்குலைக்கலாம், இதனால் உடல் வெப்பம் அதிகரிக்கும் அல்லது குறையும் என்பது கேலனின் வாதம். ஆனால் அல்-ராஸி ஒரு சூடான பானம் உடலின் இயல்பான வெப்பநிலையை விட அதிகமாக சூடாக்கும். எனவே, ஒரு பானம் அதன் வெப்பத்தையோ அல்லது குளிர்ச்சியையோ உடலுக்கு மாற்றுவதற்குப் பதிலாக, உடலிலிருந்து ஒரு எதிர்வினையைத் தூண்டும் என்பதை நிரூபித்தார். இது அதுவரை கோலோச்சிய நான்கு ஹியுமர் தத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியது.
அல்-ராஸியின் ரசவாதப் பரிசோதனைகள், எண்ணெய்த்தன்மை, எரியக்கூடியத்தன்மை மற்றும் உப்புத்தன்மை போன்ற பொருளின் பிற பண்புகளைக் காட்டின. இவை பாரம்பரிய தீ, நீர், பூமி மற்றும் காற்று போன்ற அடிப்படைக்கூறுகளின் மூலம் விளக்க முடியாதவையாக இருந்தன.
“இந்த நூலை எழுதுவதில் சத்தியத்தின் வழியே என்னை நடத்தும்படி நான் கடவுளிடம் பிரார்த்தித்தேன். அறிவுக்கடலான கேலனிடம் இருந்து நான் நிறையப் பெற்றிருந்தும் அவரை எதிர்த்து விமர்சிப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. அவர்தான் குரு, நான் சீடன். இந்த மரியாதை அவரது கோட்பாடுகளில் தவறாக உள்ளதை சந்தேகிக்க என்னை ஒருபோதும் தடுக்காது, தடுக்கவும் கூடாது. இந்தக் காரியத்தை மேற்கொள்ள கேலன் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று நான் என் இதயத்தில் ஆழமாக உணர்கிறேன். அவர் உயிருடன் இருந்திருந்தால், நான் செய்வதற்காக அவர் என்னைப் பாராட்டியிருப்பார். நான் இதைச் சொல்கிறேன், ஏனென்றால் கேலனின் நோக்கம் சத்தியத்தைத் தேடி கண்டுபிடிப்பது மற்றும் இருளிலிருந்து ஒளியைக் கொண்டுவருவது. நான் வெளியிட்டதைப் படிக்க அவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன்” என்று அல்-ராஸி குறிப்பிடுகிறார்.
நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் சுற்றித் திரிந்து தங்கள் போலி மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை விற்று வந்த போலி மருத்துவர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் அவர் கடுமையாகத் விமர்சித்தார். மருத்துவர்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் மனித இயல்பிற்கே எதிரானது என்றும், குணப்படுத்தக் கூடிய மற்றும் முடியாத நோய்களுக்கு உள்ள வேறுபாட்டையும் விளக்கினார். புற்றுநோய், தொழுநோய் போன்றவற்றில் சிகிச்சை பலனின்றி போவது மருத்துவர்கள் தவறல்ல என்றும், மருத்துவர்கள் தொடர்ந்து தங்கள் அறிவை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அல்-ராஸி இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். அதற்கான செல்வம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. அவர் ரசவாதம் மூலம் தாமிரத்தை தங்கமாக மாற்றியதே அதன் நிதி பின்புலம் என்று கருதப்பட்டது!
இபின் சினா “அல்-ராஸி மெட்டாபிசிக்ஸில் தலையிட்டு தனது திறனை மீறுகிறார். அவர் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றை பரிசோதனை செய்வதுடன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் – உண்மையில் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு பல விஷயங்களில் தனது அறியாமையை வெளிப்படுத்தினார்” என்று விமர்சித்தார்!
மருத்துவர்களின் இளவரசன் இபின் சினா / அவி சென்னா (980-1037)

புகழ்பெற்ற அல் அடுதி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த இபின் சினா எழுதிய கிதாப் அல்-ஷிஃபா (The Book of Healing) மற்றும் கனூன் ஃபித்-திப் (The Canon of Medicine) ஆகிய இரு புத்தகங்கள் அடுத்த 600 ஆண்டுகள் மருத்துவத்தில் தீவிர செல்வாக்கை செலுத்தின.
தி கேனன் ஆஃப் மெடிசின் (The Canon of Medicine) கீழ்வரும் தலைப்புகளில் ஐந்து புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
- அடிப்படை மருத்துவ மற்றும் உடலியல் கோட்பாடுகள், உடற்கூறியல், உணவுமுறை மற்றும் பொதுவான சிகிச்சை முறைகள் பற்றிய கட்டுரைகள்.
- மருத்துவப் பொருட்களின் பட்டியல், அவற்றின் பொதுவான பண்புகள் பற்றிய கட்டுரையுடன் அகர வரிசைப்படி அடுக்கப்பட்டவை.
- உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான நோய்களின் கண்டறிதல் மற்றும் சிகிச்சைமுறை.
- முழு உடலையும் உள்ளடக்கிய நோய்நிலைகளின் கண்டறிதல் மற்றும் சிகிச்சைமுறை.
- மருந்துகூட்டுகளின் தொகுப்பு (ஃபார்முலரி).
அவிசென்னா, காய்ச்சி வடிகட்டுதல் (distillation) மூலம் பூக்களிலிருந்து அத்தரை முதன்முதலில் பிரித்தெடுத்தவர். மேலும், அவர் நீராவி வடிகட்டுதல் (steam distillation) முறையைப் பயன்படுத்தி ரோஜாச் சாறு (rose essence) போன்றவற்றை தயாரித்தார். இவற்றை அவர் இதய நோய்களுக்கான அரோமாதெரபிக் சிகிச்சைகளில் பயன்படுத்தினார்.
இபின் சினா மக்கள் சுவாசத்தின் மூலம் மற்றவர்களுக்கு நோயைப் பரப்ப முடியும் என்றும் காசநோய் தொற்று மூலம் பரவுவதையும் ஊகித்தார். நீர் மற்றும் அழுக்கு மூலம் நோய் பரவுவது குறித்தும் விவாதித்தார். மயாசம் (miasma) மற்றும் தொற்று (contagion) கோட்பாடுகளின் ஒரு கலப்பின வடிவத்தை முன்மொழிந்தார்.
தத்துவத்தின் வழியே நவீன அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தல்
அவிசென்னா, மற்ற ஞான மாளிகை அறிஞர்களைப் போல அரிஸ்டாட்டில் தத்துவ முறைக்கு விளக்கம் எழுதவில்லை. மாறாக அதன் நீட்சியாக சொந்தமாக ஒரு தர்க்க முறையை உருவாக்கினார். 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் அரிஸ்டாட்டில் முறையை கைவிட்டுவிட்டு முழுவதுமாக அவிசெனிய தர்க்கமுறைக்கு மாறியது.
அவர் அரிஸ்டாட்டிலிய தர்க்கத்தில் போதாமைகளை நிரப்ப காலம் (Temporal) மற்றும் சாத்தியம் (Modal) சார்ந்த இரு கூற்றுகளை தர்க்கத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் முன்வைப்புகளில் “எல்லா நேரங்களிலும்”, “பெரும்பாலான நேரங்களில்”, மற்றும் “சில சமயங்களில்” போன்ற காலத்தை விளக்கும் சொற்களை கொண்டு விளக்கினார்.
உதாரணமாக ஒரு காய்ச்சல் எப்போது தொடங்கியது, எவ்வளவு காலமாக இருக்கிறது, எது முதலில் வந்தது – காய்ச்சலா, இருமலா? போன்ற பல கூற்றுகள் temporal தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்து நோய் அறிதல் மற்றும் சிகிச்சையில் மாற்றத்தை ஏற்படுத்தின.
காய்ச்சலை சிகிச்சை செய்யாமல் விட்டால் என்ன நிகழும்? அதன் சாத்தியங்கள், சாத்தியமின்மை, தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் அதன் நிகழ்தகவு போன்றவை modal தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்து நோய் க்கான காரணங்களை அறிதல் மற்றும் சிகிச்சையில் மாற்றத்தை (Etiology-Diagnosis-Treatment-Prognosis) ஏற்படுத்தின .
(இவை கட்டுரைக்காக பொதுப்புரிதலில் மிக மிக எளிமையான சித்திரமாக அளிக்கப்படுகிறது. அவிசெனிய தர்க்கம் மிகமிக விரிவானது. கணிதம், நவீன அறிவியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டது.)
மேலும், அவிசென்னா தன் தர்க்க முறையின் அடிப்படையில் சிண்ட்ரோம் (பல்வேறு நோய்குறிகள் இணைந்து வெளிப்படும் நிலை) என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்தார்.
குறைத்து அறியும் தர்க்கத்தின் (Deductive logic) முதல் கட்ட ஊகம் மற்றும் அனுமானங்களை மேலும் பல்வேறு அமைவுகளில் (Premises) வைத்து அறியாமல் எவ்வாறு முடிவை அடைய இயலும் என்று கேள்வி எழுப்பினார்.
தொகுத்து அறியும் தர்க்கம் (Inductive logic)
அரிஸ்டாட்டில் முன்வைத்த தொகுத்தறியும் தர்க்கம், பல அமைவுகளில் (Premises) பிரபஞ்சம் தழுவிய முடிவை சென்றடைய உதவாது என்றும், அறிவியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தியே முடிவை அறியவேண்டும் என்றார். (பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் பிரான்சிஸ் பேக்கன் இதை மேலும் விரிவுபடுத்தி அளித்தார்.)
அரிஸ்டாட்டில் தர்க்கப்படி ,
ஒரு ஆய்வாளன், நான் இந்த காகத்தைப் பார்க்கிறேன் அது கருப்பாக இருக்கிறது → நான் அந்த காகத்தைப் பார்கிறேன் அது கருப்பாக இருக்கிறது → பல ஆயிரம் காகங்களை பார்த்த பின் → அனைத்து காகங்களும் கருப்பு நிறம் என்ற முடிவுக்கு வருகிறார்.
இபின் சினா, இதை மறுக்கிறார். ஆயிரக்கணக்கான காகங்களை பார்த்தாலும் அது அடுத்த காகம் வேறு நிறத்தில் இருக்கும் சாத்தியத்தை மறுக்கவில்லை. எனவே அது பிரபஞ்ச உண்மையாக மாறுவதில்லை என்றார்.
இபின் சினா தஜ்ரிபா என்ற பரிசோதனை முறையை முன்வைத்தார்.
(கீழ்காணும் முறை இபின் சினா முன்வைத்த தத்துவ அடிப்படையிலிருந்து உருவகிக்கப்பட்டு ஒரு புரிதலுக்காக அளிக்கப்படுகிறது. இவை அவரின் நேரடியான விளக்கங்கள் இல்லை)
- கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் முறையான அவதானிப்பு (Randomized controlled trial): ஒரு குறிப்பிட்ட மூலிகையை உட்கொண்ட பிறகு சிலர் குணமடைவதை வெறுமனே கவனிப்பதற்குப் பதிலாக, பல்வேறு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் அந்த மூலிகையின் திறனை அவதானிப்பதை இபின் சினா வலியுறுத்தினார்.
- ஒப்புமை முறை (Method of Agreement): ஒரு குறிப்பிட்ட மூலிகை (A) பல்வேறு நோயாளிகளிடம் மற்ற காரணிகள் (C, D, E) மாறினாலும், ஒரு குறிப்பிட்ட விளைவை (B) தொடர்ச்சியாக ஏற்படுத்தினால், அது ஒரு முடிவை வலிமையாக உறுதிபடுத்தும்.
- நோயாளி 1: A + C + D எடுத்துக்கொள்கிறார், B விளைவு கிடைக்கிறது.
- நோயாளி 2: A + E + F எடுத்துக்கொள்கிறார், B விளைவு கிடைக்கிறது.
- ஊகம்: A, B ஐ ஏற்படுத்துகிறது என்று தோன்றுகிறது.
- காரணம் இல்லாதபோது விளைவில் இல்லாததை தேடுவது (Method of Difference): மிக முக்கியமாக, கூறப்படும் காரணம் இல்லாத சூழ்நிலைகளையும் இபின் சினா கருத்தில் கொள்கிறார். மூலிகை (A) கொடுக்கப்படாவிட்டால், மற்ற காரணிகள் இருந்தாலும், விளைவு (B) ஏற்படவில்லை என்றால், அது முடிவை மேலும் வலுப்படுத்துகிறது.
- நோயாளி 3: C + D எடுத்துக்கொள்கிறார், B விளைவு கிடைக்கவில்லை.
- ஊகம்: A என்பது B க்கு முக்கியமானது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
- சமகால மாறுபாட்டைக் கருத்தில் கொள்வது (Concomitant Variation): காரணம் மற்றும் விளைவின் அளவு தொடர்புபடுகிறதா என்பதை கவனிப்பது (எ.கா., அதிக மூலிகை வலுவான விளைவுக்கு வழிவகுக்கிறது).
- Falsifiability: வரையறுக்கப்பட்ட அல்லது வாய்மொழிச் சான்றுகளின் (anecdotal evidence) அடிப்படையில் உலகளாவிய மருத்துவக் கூற்றுக்களைப் பொதுமைப்படுத்துவதை குறித்து இபின் சினா எச்சரிக்கிறார்.. ஒரு ஒற்றை முரண்பாடான நிகழ்வு, ஒரு உலகளாவிய கூற்றை செல்லாததாக்க போதுமானது வரையறுக்கப்பட்டஎன்று வாதிடுகிறார்.
காரண-காரிய தொடர்பை பல்வேறு வழிகளில் நிறுவவேண்டும், வெறும் தொடர்பை குறிப்பது அறிவியல் அல்ல என்றார். தொகுத்து அறியும் தர்க்கத்தின் சிக்கல் (Problem of induction) இன்னும் இருப்பதால் தத்துவ தளத்தில் “முழுமையான” நிச்சயத்தன்மையை ஒரு கருதுகோள் அடையவில்லை என்றாலும், இபின் சினா முறை அதற்கு முன்னர் இருந்த முறைகளை விட மிக உயர்ந்த அளவிலான அனுபவவாத நிச்சயத்தன்மையையும் மற்றும் நடைமுறை நம்பகத்தன்மையையும் வழங்கியது.
பறக்கும் மனிதன் – உடல் மனம் இருமை உருவாக்கம்
இபின் சினா மன்னரை நோயிலிருந்து காப்பாற்றியது அவருக்கு அரசியல் எதிரிகளை உருவாக்கியது. மன்னரின் இறப்பிற்கு பின் எதிரிகளால் அவர் சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போது அவர் “பறக்கும் மனிதன்” என்ற கருத்தாக்கத்தை வெளியிட்டார்.
ஒரு மனிதன் அப்போதுதான் உருவாகக்கப்பட்டு காற்றில் மிதப்பதாக கற்பனை செய்தால், அவன் உடலில் பொருண்மையாக எந்த தொடர்பும் உணரப்படாத நிலையிலும் அவன் தான் இருப்பதாகவே நினைப்பான் என்றார்.
இது உடல் சார்ந்த புலன் உணர்வு இல்லாத நிலையிலும் சுய இருப்பு இருக்கமுடியும் என்றும் எனவே ஆன்மா, பருப்பொருளான உடல் இல்லாத நிலையிலும் இருக்கமுடியும் என்றும் வாதிட்டார். மனம் என்பது உடல் கட்டமைப்பைச் சார்ந்தது அல்ல என்பது உடல் – மனம் என்ற இருமை நிலையை நோக்கி நகர்ந்தது.
முகமது கஜினி படையெடுப்பில் Isfahan இல் இருந்த அவரது வீடும் நூலகமும் எரிக்கப்பட்டது. உயிருக்கு பயந்து ஓடியபடி இருந்தவர் உடல்நலகுறைவால் 1037 ஆம் ஆண்டு மறைந்தார்.
இப்னு அல்-ஹைதம் ( Ḥasan Ibn al-Haytham 965 – 1040 ) நவீன ஒளியியலின் தந்தை என அறியப்படுபவர். இவர் எழுதிய கிதாப் அல்-மனாசிர் (Book of Optics) புத்தகத்தில் அறிவியல் வழிமுறை என்றால் என்ன என்று கீழ்கண்ட விளக்கத்தை அளித்தார்.
- கவனித்தல் (Observation)
- சிக்கலை கண்டறிதல் (Statement of problem)
- கருதுகோள் உருவாக்குதல் (Formulation of hypothesis)
- பரிசோதனை மூலம் கருதுகோளை சோதித்தல் (Testing of hypothesis using experimentation)
- பரிசோதனை முடிவுகளை பகுப்பாய்வு செய்தல் (Analysis of experimental results)
- தரவுகளின் விளக்கம் மற்றும் முடிவை உருவாக்குதல் (Interpretation of data and formulation of conclusion)
- வெளியிடுதல் (Publication of findings)
இதுவே இன்றைய நவீன அறிவியலின் அடித்தளமாகும்.
ஞான மாளிகை அழிப்பு
ஞானமாளிகை பொ யு 1258 இல் பாக்தாத் முற்றுகையின் போது மங்கோலிய இராணுவத்தால் துரதிர்ஷ்டவசமாக அழிக்கப்பட்டது. டைகிரிஸ் ஆற்றில் புத்தகங்கள் அனைத்தும் வீசப்பட்டதால் மையின் காரணமாக நீர் கருப்பாக ஓடியதாகக் கூறப்படுகிறது. புத்தகங்களின் மேல் அட்டைகள், தோலில் செய்யபட்டவையாக இருந்ததால் படைவீர்களின் கால்களுக்கு காலணியாக மாற்றப்பட்டன.
இஸ்லாமிய பொற்காலத்தில், உலகின் பல்வேறு மொழி மருத்துவ நூல்கள் அரபி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டன.
புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வந்தன. அடிப்படை தத்துவ கட்டுமானத்தின் போதாமைகள் கண்டறியப்பட்டு, புதிய முறைகள் மூலம் இன்றைய நவீன அறிவியல் முறைக்கு அடித்தளம் இடப்பட்டது.
கணிதம், இயற்பியல் போன்ற பிறதுறைகள் மருத்துவத்துடன் இணைத்து பார்க்கப்பட்டன. 1500 ஆண்டுகள் கோலோச்சிய ஹிப்பாக்ரட்ஸ், கேலன் கொள்கைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.
அல்-அந்தலூஸ் (Al-Andalus)
அல்-அந்தலூஸ் என்பது 8 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை ஐபீரிய தீபகற்பத்தின் (Iberian Peninsula) பெரும்பகுதியை முஸ்லிம்கள் ஆட்சி செய்த காலத்தையும், பகுதியையும் குறிக்கிறது. இது இன்றைய ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளை உள்ளடக்கியது.

மங்கோலிய படைகள் ஞான மாளிகையை அழித்தாலும், ஐபீரிய தீபகற்பம் வரை வரவில்லை. அல்-அந்தலூஸ் மையமே ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்துக்கு வித்தாகக் கருதப்படுகிறது.
சான்றாதாரங்கள்
- https://en.wikipedia.org/wiki/Arimanius
- https://academic.oup.com/eurheartj/article/42/26/2522/6181771?login=false
- McGinnis, Jon (July 2003). “Scientific Methodologies in Medieval Islam”.
- https://www.iranicaonline.org/articles/avicenna-index/
- Medieval and Early Modern Science- Crombie, A. C.
- Introduction to the History of Science -Sarton, G.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
