- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
சீன மருத்துவம்
சீன மருத்துவம் என்பது ஒரே மருத்துவமுறையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நாம் இன்று பார்க்கும் சீன மருத்துவம் என்பது பொ யு 1950 களில் பல்வேறு பாரம்பரிய சீன மருத்துவமுறைகளை தொகுத்து உருவாக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்1.

குறி உரைக்கும் எலும்புகள் (Oracle Bones)
பொ யு மு 16 – 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த எலும்புகள் மற்றும் ஆமை ஓடுகளில் எழுதப்பட்ட குறிப்புகள் பொ யு 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை சீனா மற்றும் 14 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான எலும்புகளிலிருந்து 1,30,000 குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் வருகுறி உரைக்கவும், காலநிலை கணிப்பு, வரைபடங்கள் போன்ற குறிப்புகளை கொண்டுள்ளன.
உதாரணமாக மருத்துவம் தொடர்பானவை கேள்வி – பதில் முறையில் வருகுறி உரைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மன்னர் தலைவலி கொண்டு இருக்கிறார், இது தெய்வக்கோபமா? என்பதற்கு ஆம் என்று பலி நிவர்த்தி சடங்கோ அல்லது “இல்லை, மூலிகை அளிக்கவேண்டும்” என்றோ வருகுறி உரைக்கும் குறிப்புகள் காணப்படுகின்றன.
ஆனால், இந்த எலும்புகளையே அரைத்து பல்வேறு நோய்களுக்கு குடிக்கும் வழக்கம் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவற்றை கண்டுபிடிக்கும் வரை சீனாவில் நிலவி வந்தது ஒரு நகைமுரண்.
மாவாங்க்டை கல்லறை
பொயு 1973 ஆம் ஆண்டு மாவாங்க்டை (Mawangdui) கல்லறைகளில் இருந்து நமக்கு பட்டு துணியில் எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகளும், பதப்படுத்தப்பட்ட மனித உடல்களும் கிடைத்தன. இந்த கல்லறைகள் பொ யு மு 168 யில் மூடப்பட்டது.
இங்கிருந்து கிடைத்த பட்டு துணியில் எழுதப்பட்ட மருத்துவ குறிப்புகள் (கண்டுபிடிக்கபட்ட போது 52 நோய்குறிகள் பற்றிய குறிப்புகள் – Wushi’er Bingfang-Recipes for Fifty-Two Ailments என்று பெயரிடப்பட்டவை) மரு, மூலநோய், பாம்புக்கடி, ஹெர்னியா போன்ற நோய்கள், காயங்களை அறுத்தும், சுட்டும் சிகிச்சை செய்வது, மோக்சிபஸ்ட்ஷன் (Moxibustion) மற்றும் நாடிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இதற்கு பலகாலம் முன்பே இருந்த முறைகளில் இருந்து தொகுக்கப்பட்டதாக இருக்கலாம்.
அங்கு கிடைத்த ராணி சென் ஷு யி (Xin Zhui) பதப்படுத்தப்பட்ட உடல் மிக நல்ல நிலையில் கிடைத்த ஒரு மம்மி ஆகும். இவரின் காலம் பொ யு மு 2 ஆம் நூற்றாண்டு. அவரின் பதப்படுத்தப்பட்ட உடலை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. அவரின் ரத்தவகை A. அவருக்கு சிஸ்டோசோமியா அழற்சி அல்லது நத்தைக்காய்ச்சல் (schistosomiasis) இருந்துள்ளது. அவரின் இதய தமனிகளில் மிக அதிகளவில் அடைப்பு காணப்படுகிறது. அவருக்கு பித்தப்பை கற்கள், கல்லீரல் நோய்கள், முதுகுவலி, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
அவர் தன் ஐம்பது வயதின் மத்தியில் இறந்து இருக்கலாம். அவரின் இறப்பின் காரணம் மாரடைப்பு/இதய செயலிழப்பு. அவரின் உணவுமுறை மிக அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சியை முக்கியமாக கொண்டுள்ளது!!! வியப்பளிக்கும் விதமாக அங்கு இருந்த மற்ற இரண்டு மம்மிகளை விட நீண்டநாள் உயிர் வாழ்ந்தவரும் இவர்தான்!!!
இயற்கை விசையை துணைகொள்ளல்
பண்டைய சீனாவில் மஞ்சள் ஆற்றின் நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. பேரரசர் யாவோ (Yao), ஹுவாங்டி பேரரசின் இளவரசன் குன் (Gun) வசம் அணைகள் கட்டி வெள்ளத்தை தடுக்கும் பொறுப்பை அளிக்கிறார். குன் ஒன்பது ஆண்டுகள் முயன்றும் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. சொர்க்கத்திலிருந்து, தானே வளரக்கூடிய, சுவாசிக்கும் மண்ணை ஞானத்தின் ஆதாரமாக கருதப்படும் ஒரு ஆமை திருடி வந்து அவரிடம் தந்தது. அதைக்கொண்டு அவர் அணைகளை, தடுப்பு அரண்களை கட்டுகிறார்.
அவைகள் முதலில் வேலை செய்தாலும், பின்னர் ஒரு கட்டத்தில் பெருவெள்ளம் எல்லை மீறி பேரழிவை உருவாக்குகிறது. இதனால் கோபமுற்ற நெருப்பு கடவுள் ஜுரோங், குன்னைக் கொல்கிறார். ஆனால் இறந்த பின்னும் குன் உடல் அழியாமல் இருக்கிறது. அவர் உடலிலிருந்து மகன் டா யு (Da Yu) பிறக்கிறார்.
டா யு தனது தந்தையின் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். அவர் நீரைத் தடுப்பதற்கு பதிலாக, அதை வழிநடத்திச் செல்வதன் (channeling) மூலம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தினார். ஆறுகளை ஆழப்படுத்தி, புதிய கால்வாய்களை வெட்டி, நீரை கடலுக்கு திசை திருப்பினார். இந்த அணுகுமுறை வெற்றி பெற்றது, அவரிலிருந்து, சியா வம்சம் (Xia Dynasty) தொடங்குகிறது.
இயற்கையை தடுப்பதற்கு பதில், அதனுடன் இயைந்து ஞானத்தின் துணைகொண்டு வெற்றி அடைவதையும், தெய்வீக ஆற்றல் கொண்ட மண்ணாக இருந்தாலும் தவறான நோக்கமும் (திருடப்பட்டது) மற்றும் ஒழுங்கை தடுப்பதும் பேரழிவை கொண்டுவரும் என்றும் நம்பப்பட்டது.
சீன மருத்துவத்தின் ஆணிவேர் இங்கிருந்தே தொடங்குகிறது. மாறாத பிரபஞ்ச ஒழுங்கை, சரியான முறையில் வழிநடத்தி, அழிவைத் தவிர்த்து, அழியாமையை நோக்கிச் செல்வதை முன்வைக்கிறது.
சீன மருத்துவம் கன்பூசியனிசம், தாவோயிசம் மற்றும் புத்தமத தத்துவங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.
கன்பூசியனிசம்
தத்துவவாதி கன்பூசியஸ் அவர்களால் பொ யு மு 6 – 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது ஒரு அறவியல் கோட்பாட்டை உருவாக்கி அளித்தது. ஒரு மாறாத பிரபஞ்ச நெறிமுறையை அதனோடு இணைந்து வாழ்தலை வலியுறுத்துகிறது. ரென் (பரோபகாரம்), லி (ஒழுங்குமுறை), யி (நேர்மை), சி (ஞானம்), சின் (நம்பிக்கை) போன்ற பல கொள்கைகளை வலியுறுத்துகிறது. இதை சார்ந்து ஒழுகும் வாழ்க்கை அழிவின்மை நோக்கி இட்டுச்செல்லும் என்று கருதுகிறது.
தாவோயிசம்
தாவோயிசம் கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் லாவோசி (Laoz) ஆல் தோற்றுவிக்கப்படுகிறது. லாவோசி எழுதிய தாவோ டே சிங் புத்தகம் அடிப்படையாகக் கருதப்படுகிறது. அதற்கு பின் வந்த சுவாங்ஸி மேலும் தாவோ கொள்கைகளை விரிவாக்கினார். நாம் மருத்துவம் தொடர்பான தாவோ கொள்கைகளை சுருக்கி கொள்வோம்.
“தாவோ” என்ற வார்த்தைக்கு “வழி” அல்லது “பாதை” என்று பொருள். பிரபஞ்சத்தின் அடிப்படை ஒழுங்கு, இயல்பு மற்றும் இயற்கையான வழியைக் குறிக்கிறது. தாவோ என்பதே எல்லாவற்றையும் உருவாக்குகிறது, ஊடுருவி நிற்கிறது, ஆனால் வரையறுக்க முடியாதது. இது பெயரற்றது, வடிவமற்றது, ஆனால் அனைத்து பெயர்களுக்கும், வடிவங்களுக்கும் ஆதாரம். தாவோயிசத்தின் நோக்கம், இந்த தாவோவுடன் அதன் இயற்கையான ஓட்டத்தை புரிந்து இணைந்து வாழ்வதாகும்.
யின் (Yin) மற்றும் யாங் (Yang)
சீன கலாச்சாரத்தின் மும்மூர்த்திகள் என்று ஃப்யுசி (Fuxi), நியுவா (Nüwa) மற்றும் ஷென்னாங் (Shennong) குறிப்பிடப்படுகிறார்கள்.
ஆதியில் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த ஒழுங்கின்மை (chaos) ஒரு முட்டையாக இருந்தது. அதனுள் சமநிலை கொண்ட யின்-யாங் வடிவமாக டாஜி (Taiji) இருந்தது. அதனுள் இருந்து பான் கு (Pan Gu) விழித்தெழுந்தார். அவர் தன் கோடாரியால் யின் யாங் சமநிலையை பிளந்தார். அவர் எழுந்து நின்று பூமியையும், ஆகாயத்தையும் இரண்டாக பிரித்தார். அப்போது அவர் இறந்து போனார். அவரின் இறந்த உடலிலிருந்து இங்கு நாம் காணும் அனைத்தும் தோன்றின. அவரின் மூச்சு காற்றாக, இரத்தம் ஆறாக, அவரின் உடல் மலைத் தொடராக மாறியது. ஹுவாக்சு (Huaxu) என்ற ஒரு சக்திவாய்ந்த உயிரினம் உருவானது.
ஹுவாக்சு தீடீரென கர்ப்பம் அடைந்து இரட்டையர்களான ஃப்யுசி (Fuxi) மற்றும் நியுவா (Nüwa) வை பெற்றெடுக்கிறார். அவர்கள் அண்டத்தின் அச்சாணியான குன்லுன் மலையில் இரண்டு தனித்தனி நெருப்புக் குவியல்களை உருவாக்கினர். பின்னர் அந்த நெருப்பு இறுதியில் ஒன்றாக மாறியது. அந்த நெருப்பின் கீழ், அவர்கள் கணவன்-மனைவி ஆக முடிவு செய்தனர். அவர்களில் இருந்தே உயிர்குலங்கள் தோன்றியது.
ஃப்யுசி (Fuxi) மற்றும் நியுவா (Nüwa) மனித தலையும், பாம்பு உடலும் கொண்டு ஒன்றாக பின்னிப் பிணைந்தவர்கள். ஃப்யுசி (Fuxi) ஆண், நியுவா பெண்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புடைய, ஆனால் எதிர்மாறான சக்திகளான யின் மற்றும் யாங் சமநிலையால் ஆனவை. யின் என்பது இருள், குளிர்ச்சி, பெண்மை, ஓய்வு, உள்ளே, கீழ்நோக்கியது மற்றும் வறண்ட தன்மை ஆகும்.
யாங் என்பது வெளிச்சம், வெப்பம், ஆண்மை, செயல்பாடு, வெளியே, மேல்நோக்கியது மற்றும் ஈரப்பதம் ஆகும்.

இந்த இரண்டு சக்திகளும் ஒன்றையொன்று உருவாக்குகின்றன, கட்டுப்படுத்துகின்றன, மாற்றுகின்றன மற்றும் முழுமையை உருவாக்குகின்றன. அவை நிலையானவை அல்ல, மாறாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும், ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகும்.
வு வேய் (Wu Wei)
வு வேய்என்பது“இயற்கையான செயல்பாடு” என்று பொருள்படும். இயற்கையான ஓட்டத்திற்கு எதிராக செயல்படாமல், பிரபஞ்சத்தின் லயத்திற்கு இணங்க செயல்படுவதைக் குறிக்கிறது. தாவோயிசம் தேவையற்ற அறிவு, ஆசைகள் மற்றும் சமூக அழுத்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தன் தூய நிலைக்கு திரும்புவது என்பதை முன்வைக்கிறது.
சி யின் சமநிலை (Balance of Qi)
சி என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் இயக்கும் உயிர் ஆற்றல். தாவோயிசத்தில், சி யின் ஓட்டத்தைப் புரிந்து கொள்வதும், அதை வளர்ப்பதும், சமநிலைப்படுத்துவதும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. உடலில் சியை எடுத்துச் செல்லும் ஆற்றல் பாதைகள் மெரிடியன்கள் (Meridians) எனப்படும். இந்த மெரிடியன்கள் உடலிலுள்ள உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஐந்து கூறுகள் (Five Elements/Five Phases) கோட்பாடு
ஐந்து கூறுகள் கோட்பாடு என்பது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் மரம் (Wood), நெருப்பு (Fire), பூமி (Earth), உலோகம் (Metal), நீர் (Water) ஆகிய ஐந்து அடிப்படை கூறுகளால் ஆனவை என்றும், இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளன என்றும் விளக்குகிறது. இந்த கூறுகள் உடலில் உள்ள உறுப்புகள், பருவங்கள், உணர்ச்சிகள், சுவைகள் மற்றும் நிறங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை.
- மரம் (Wood): கல்லீரல் (Liver) மற்றும் பித்தப்பை (Gallbladder) ஆகியவற்றுடன் தொடர்புடையது. கோபம், வசந்த காலம், புளிப்புச் சுவை, பச்சை நிறம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- நெருப்பு (Fire): இதயம் (Heart) மற்றும் சிறுகுடல் (Small Intestine) ஆகியவற்றுடன் தொடர்புடையது. மகிழ்ச்சி, கோடை காலம், கசப்புச் சுவை, சிவப்பு நிறம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பூமி (Earth): மண்ணீரல் (Spleen) மற்றும் வயிறு (Stomach) ஆகியவற்றுடன் தொடர்புடையது. கவலை, கோடைக்காலத்தின் பிற்பகுதி, இனிப்புச் சுவை, மஞ்சள் நிறம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- உலோகம் (Metal): நுரையீரல் (Lung) மற்றும் பெருங்குடல் (Large Intestine) ஆகியவற்றுடன் தொடர்புடையது. துக்கம், இலையுதிர் காலம், காரமான சுவை, வெள்ளை நிறம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- நீர் (Water): சிறுநீரகம் (Kidney) மற்றும் சிறுநீர்ப்பை (Bladder) ஆகியவற்றுடன் தொடர்புடையது. பயம், குளிர் காலம், உப்புச் சுவை, கருப்பு/நீல நிறம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து கூறுகளுக்கு இடையே ஒரு “ஆக்க சுழற்சி” (Generative Cycle) மற்றும் ஒரு “கட்டுப்பாட்டு சுழற்சி” (Controlling Cycle) உள்ளது. இந்த சுழற்சிகளில் ஏதேனும் ஒரு குறைபாடு அல்லது அதிகப்படியான ஆற்றல் இருந்தால், அது உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
சான் ஜியாவ் (San Jiao) – மூன்று அக்னிகள்
பாரம்பரிய சீன மருத்துவத்தில், ஐந்து திட உறுப்புகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு திட உறுப்புக்கும் ஒரு உள்ளீடற்ற உறுப்பு ஃபு (Fu) அதன் இணையாக இருக்கும். உதாரணமாக, இதயம் ஒரு திட உறுப்பாகவும், சிறுகுடல் அதன் உள்ளீடற்ற அல்லது ஃபு உறுப்பாகவும் கருதப்படுகிறது. சான் ஜியாவ் ஒருவித உள்ளீடற்ற உடற்குழி என நம்பப்படுகிறது. இது அண்டம் மற்றும் பிண்டத்தின் (மனித உடல்) சக்தியான சி (Qi) யை அதன் தடையற்ற சுழற்சியை பேணுவதன் மூலம் மற்ற உறுப்புகளை சரியாக இயங்கச் செய்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.
சான் ஜியாவ் என்பதற்கு “மூன்று அடுப்புகள் அல்லது அக்னிகள்” என்று பொருள் கொள்ளலாம்.
மேல் அக்னி (Upper Burner): இது மார்புப் பகுதியில் உள்ள இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளுடனும் மற்றும் சுவாசித்தல் செயல்பாட்டுடனும் தொடர்புடையது. எனவே இது வானத்துடன் இணையாக கருதப்படுகிறது.
நடு அக்னி (Middle Burner): இது வயிற்றின் மேல் பகுதி, மண்ணீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளுடனும் மற்றும் செரிமான செயல்பாட்டுடனும் தொடர்புடையது. எனவே இது மனிதனுக்கு இணையாக கருதப்படுகிறது.
கீழ் அக்னி (Lower Burner): இது வயிற்றின் கீழே உள்ள சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளுடனும் மற்றும் சிறுநீரக-பிறப்புறுப்பு செயல்பாடுகளுடனும் தொடர்புடையது. எனவே இது பூமிக்கு இணையாக கருதப்படுகிறது.
மூன்று அக்னிகளின் சீரான இயக்கம் உடல் முழுவதும் திரவங்களை கொண்டு செல்வதற்கும், அரிப்பு மற்றும் சூட்டைக் குறைப்பதற்கும், வீக்கங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உடலுறுப்புகள் சார்ந்த நோய்களை சரிசெய்யவும் அத்தியாவசியமானது. மூன்று அக்னிகளும் சீராக செயல்பட்டால் உடலுறுப்புகள் சரியாக செயல்படும்.

நோய் அறிதல் முறைகள்
பார்த்தல், நுகர்தல், கேட்டல் மற்றும் நீண்ட விசாரிப்புகள் மூலம் நோய்கள் கண்டறியப்படுகிறது. மிக முக்கியமாக நாக்கு மற்றும் நாடி பரிசோதனை, யின் யாங் நிலை மற்றும் சி யின் தன்மையை அறிய பயன்படுத்தப்படுகிறது.
நாக்கு பரிசோதனை
நாக்கின் நிறம், வடிவம், மேற்புற படலம் (Coating), ஈரப்பதம், நிலை மற்றும் அசைவு போன்றவை பரிசோதிக்கப்படுகின்றன.
| சிவந்த நிற நாக்கு | இயல்பான நிலை | ஆரோக்கியம் |
| வெண்மை நிறம் | யாங் குறைவு | குளிர் நோய்கள், இரத்த குறைவு |
| சிவப்பு | உடல் வெப்பம் | காய்ச்சல், கல்லீரல் நோய்கள் |
| நீலம்/பச்சை நிற நாக்கு | சி குறைவு | வீக்கம், வலி, இரத்த அடைப்பு நோய்கள் |
| வீங்கிய வடிவ நாக்கு | உடல் ஈர பதம் அதிகம் | சளி, நீரிழிவு |
| மெலிந்த வடிவ நாக்கு | யாங் குறைவு | நுரையீரல் நோய்கள் |
| பிளவுபட்ட நாக்கு வடிவம் | யின் குறைவு | மன நோய்கள், காய்ச்சல், காயம் |
| மஞ்சள் மேற்புற படலம் | உடல் வெப்பம் அதிகம் | தொற்றுகள், காய்ச்சல் |
| ஈரமான நாக்கு | ஆரோக்கியம் | |
| நாக்கு ஒருபக்கம் இருக்கும் நிலை | மூளை தொடர்பான நோய்கள் | |
| வெண்மையான படலம் | குளிர்ச்சி | சளி, ஹார்மோன் குறைபாடு |
அட்டவணை: முழுமையானது அல்ல (புரிதலுக்கு)


நாடி பரிசோதனை
சீன மருத்துவத்தில் நாடி பரிசோதனை, யின்-யாங் சமநிலை, சி யின் ஓட்டம் மற்றும் உள் உறுப்புகளின் நிலை ஆகியவற்றை கொண்டு நோய் கணிக்கப்படுகிறது. நாடி இரண்டு கைகளிலும் Cun, Guan, Chi என்ற மூன்று இடங்களில் பரிசோதிக்கப்படுகிறது. நாடித்துடிப்பின் தன்மை, வலிமை, ஆழம், வேகம், நீளம் மற்றும் இலகு நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோய்களின் காரணங்கள் மற்றும் நிலை அறியப்படுகிறது.
Floating (மிதக்கும்), Soggy (சிதறிய), Empty (வெறுமையான), Leathery (திட), Scattered (சிதறிய), Hollow (உள்ளடக்கம் இல்லாத), Deep (ஆழமான), Firm (வலுவான), Hidden (மறைவான), Long (நீளமான), Surging (எதிரொலி), Short (குறுகிய), Rapid (வேகமான), Hasty (ஆக்ரோஷமான), Hurried (விரைவான), Moderate (நடுநிலை), Slow (மெதுவான), Knotted (முடிச்சான), Full (முழுமையான), Thready (மெல்லிய), Minute (சிறிய), Slippery (வழுக்கும் தன்மையான), Choppy (முறுக்கு), Wiry (உருண்டு), Tight (பிடித்த), Weak (பலவீனமான), Regularly intermittent (இடைவேளை), rapid-irregular (வேகமான-அசாதாரண), Stirred (தாளமாற்றம்) போன்ற 29 வகையான நாடித்துடிப்பு வகைகள் கொண்டு நோய் நிலை கணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாடித்துடிப்பும் Cun, Guan, Chi ஆகிய மூன்று நிலைகளிலும் கணிக்கப்படுகின்றது. ஒவ்வொரு இடத்திலும் நாடியின் தன்மை, வலிமை, ஆழம், வேகம், நீளம், மற்றும் இலகு நிலை கணிக்கப்பட்டு அவை நோயின் காரணத்தை அறிய உதவுகின்றன. மேலும் நாடிகள் உள்ளுறுப்புகளுடன் இணைத்து பார்க்கப்படுகின்றன. உதாரணமாக ஆழ்ந்த நாடித்துடிப்பு இதயத்துடனும், cun பகுதியில் உணரப்படும் நாடி சிறுகுடலுடனும் சம்பந்தப்படுத்தி பாரக்கப்படும்.
மெரிடியன்கள்

மெரிடியன் என்பது உயிராற்றல் சி யை உடலெங்கும் கொண்டு செல்லும் பாதைகள் என்று பொருள் கொள்ளலாம். இவை பொதுவாக இரண்டாக பிரிக்கப்படுகின்றன.
- ஜிங்மை (Jingmai) என்பது 12 தசையிடை மெரிடியன் (tendinomuscular meridians), 12 விரிகின்ற மெரிடியன்கள் (divergent meridians), 12 முதன்மை மெரிடியன்கள் (principal meridians), 8 அசாதாரண நாளங்கள் (extraordinary vessels) மற்றும் ஹுவாடோ சேனல் (Huato channel) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஹுவாடோ சேனல் என்பது கீழ் முதுகில் இருபுறமும் அமைந்துள்ள புள்ளிகளின் தொகுப்பாகும்.
- லுவோமை (luomai) அல்லது தொடர்புடைய நாளங்கள் என்பது 15 முக்கிய நாடிகளை (major arteries) கொண்டது. இவை 12 முதன்மை மெரிடியன்களைப் பல்வேறு வழிகளில் இணைக்கின்றன. மேலும், அவை தொடர்புடைய உள்உறுப்புகள் ஜங் ஃபு (Zung Fu) உடன் இணைகின்றன. மேலும் இவை உடல் முழுவதும் பரவும் நுண்ணிய நாடிகளின் கிளைப்பரப்பையும் உள்ளடக்கியது. இந்த நுண்ணிய 12 நாடிகள் குறிப்பாக தோலின் அடிப்பகுதியில் இருந்தும் (cutaneous regions), முதன்மை மெரிடியன்களின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் இவை வெளிப்படுகின்றன.
மொத்தமாக மெரிடியன்கள் 361 என்பதும் இவை சந்திர நாட்காட்டியில் இருக்கும் 361 நாட்களுக்கு இணையாக கூறப்படுகின்றன. இவை உடலின் ஒரு பாதிக்கு மட்டும் என்றும், மொத்த உடம்பிலும் வலது மற்றும் இடது பாகம் சேர்த்து 670 என்றும் குறிப்பிடப்படுகின்றன2.
உள் உறுப்பு கடிகாரம்
பாரம்பரிய சீன மருத்துவத்தில் (TCM), ஒவ்வொரு உள் உறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட நேர பிரக்ஞை உள்ளது, அதில் அந்த உறுப்பின் “Qi” (உயிர் சக்தி) மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது. இதை Body Clock அல்லது Horary Cycle / Organ Clock (Zang-Fu நேர வட்டம்) என்று அழைக்கின்றனர்.

சிகிச்சை முறைகள்
சீன மருத்துவத்தில் மூலிகைகள் பயன்பாட்டுக்கு வந்தது பற்றிய கதை சுவாரசியமானது.
சீன பண்பாட்டின் மும்மூர்த்திகளில் ஒருவரான ஷென்னாங் ஒரு தெய்வீக விவசாயி, மஞ்சள் அரசரின் தந்தை, ஜோவ் வம்சத்தின் முதல் மூதாதையராகக் கருதப்படுகிறார். இவரின் தாய் ஒரு டிராகனின் உடலிலிருந்து எழுந்த வாசனையை விழுங்கி அடுத்த ஒன்பதாவது நாள் இவரை பெற்றெடுத்தார். ஷென்னாங் பிறந்த மூன்றாவது நாள் பேசத் தொடங்கினார்.

இவரின் வயிறு உடலிலிருந்து தனியாக பிரிந்து இருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் சாப்பிட்டு அது என்ன செய்கிறது என்று கண்ணால் பார்த்து எது மூலிகை என்று கண்டறிந்தார் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு 365 மூலிகைகளை கண்டுபிடித்தார். இவரே சீன மக்களுக்கு விவசாய முறைகள், விதை பாதுகாக்கும் முறை, கலப்பை, கோடாரி, பணம், வியாபாரம் போன்றவற்றையும் கற்றுக்கொடுத்தார் என்று நம்பப்படுகிறது.
இவர் எழுதியதாகக் கருதப்படும் Shennong Bencao Jing (Classic of the Materia Medica) சீன மருத்துவத்தின் அடிப்படை ஆகும். இவரே சீன மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் தந்தையாக கருதப்படுகிறார்.
மஞ்சள் சாம்ராஜ்யத்தின் மூல புத்தகம் (Huangdi Neijing – Inner Canon of the Yellow Emperor) என்பது சீன மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் ஆகியவற்றுக்கு மூல புத்தகமாகக் கருதப்படுகிறது. நோயின் காரணம் கெட்ட ஆவிகள் என்பதிலிருந்து விலகி யின் யாங் சமநிலை, சி யின் ஓட்டம், மெரிடியன்கள், மூலிகைகள் பற்றி மிக விரிவாக பேசுகிறது. இது மஞ்சள் அரசரின் காலத்தில் பொ யு மு 200 களில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
பொ யு 150 – 219 களில் வாழ்ந்த ஜாங் ஜாங்ஜிங் (Zhang Zhongjing) சீன மருத்துவத்தின் ரிஷி என்று போற்றப்படுகிறார். இவர் தொகுத்த ஷாங்கான் ஸாபிங் லூன்” (Shanghan Zabing Lun- Treatise on Cold Pathogenic and Miscellaneous Diseases) என்ற புத்தகம் மரபார்ந்த சீன மருத்துவத்துக்கு அடிப்படை கட்டுமானத்தை வகுத்து தந்தது.
சீன மருத்துவம் யின் யாங் சமநிலை, சி யின் ஓட்டத்தில் ஏற்படும் தடை போன்றவற்றை நோயின் காரணமாக கருதுகிறது.
- வாழ்வியல் காரணிகளாக உணவு பழக்கம், தூக்கம், உடலுறவு
- சூழியியல் காரணிகளாக வெப்பம், குளிர், ஈரப்பதம், வெப்பநிலை மாற்றம்
- உணர்ச்சி நிலையின் கோபம், பயம், கவலை போன்ற உணர்வுகள்
- வயதாகுதல், நீண்ட கால நோய்கள் போன்றவை இச்சமநிலையை பாதிக்கின்றன.
இவற்றை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வர ஒன்றோ அல்லது பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி காஷாயம், மருந்துபொடிகள், நறுமண புகையூட்டிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
சீன மருத்துவத்தில் பெரும்பாலும் அனைத்தும் மருந்தாக பார்க்கப்படுகிறது. புலியின் ஆண்குறி பொடி ஆண்மை அதிகரிக்க, மனித ஆண்குறி பொடி இரத்த இழப்பை தடுக்க, மனித மலம் மற்றும் சிறுநீர் பூஞ்சை மூலம் வரும் நோய்களுக்கு, அந்தரங்க முடிகள் பாம்பு விஷத்தை முறிக்க, எறும்புதின்னியின் மேல் செதில்கள் பெண்களின் மாத சுழற்சி சீராக, பூரான் வலிப்பு நோய்களுக்கு என்று விசித்திரமான மருந்துகளின் நீண்ட பட்டியலை கொண்டுள்ளது.
சி யின் ஓட்டத்தில் மெரிடியன்களில் ஏற்பட்ட தடைகளை நீக்க ஊசி கொண்டு மெல்லிய அழுத்தம் கொடுக்கும் அக்குபஞ்சர் பரிந்துரைக்கப்படுகிறது.
வெப்பநிலை மாறுபாடு மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை சரிசெய்ய கப்பிங் மற்றும் மோக்சிபஸ்ட்ஷன் முறை பயன்படுத்தப்படுகின்றன.
கப்பிங் Cupping Therapy என்பது கோப்பைகளை தோல் மீது வைத்து, எதிர்மறை அழுத்தம் (negative pressure) மூலம் தோலை மேலே தூக்கி, உடலின் உள்ளே சக்தி ஓட்டங்களை தூண்டுவதற்கும், மெரிடியன்கள் பாதையிலுள்ள தடைகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
காயங்களை சீராக்குதல், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், சி (உயிர்சக்தி) ஓட்டத்தை சரிசெய்தல், குளிர், ஈரம் அல்லது வெப்பம் போன்றவற்றை சரிசெய்தல், உடலின் நச்சுக்களை வெளியேற்றுதல் போன்றவற்றிற்கு பயன்படுத்தபடுகிறது.
மோக்சிபஸ்ட்ஷன் (Moxibustion) மூலிகைகளை (Mugwort) எரித்து அதனால் உருவாகும் வெப்பத்தை உடலிலுள்ள குறிப்பிட்ட அக்குபஞ்சர் புள்ளிகளில் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் ஒரு உஷ்ண சிகிச்சை (heat therapy) ஆகும்.
பெரியம்மை நோய்த்தடுப்பு முறை
பொ யு 1000 ஆண்டு வாக்கில் பெரியம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டவரிடமிருந்து சீழ் அல்லது காய்ந்த தோலை எடுத்து, ஆரோக்கியமானவர்களுக்கு அளிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றலை பெற முடியும் என்று சீன மருத்துவ குறிப்புகள் கிடைக்கின்றன.
மிகக்குறைந்த அளவு நோய் பாதிப்பு கொண்டவரின் காய்ந்த தோலை எடுத்து பொடி செய்து, வெள்ளியால் செய்த குழாயில் வைத்து மூக்கில் ஓதுவதன் மூலம் நோய் தடுப்பாற்றல் பெற முடியும் என்று கண்டறியப்பட்டது. இது ஒரு சடங்குமுறையாக பின்பற்றப்பட்டது3.
வாழ்வியல் காரணிகளை சரிசெய்ய மசாஜ், உணவுப் பழக்கம், தாய் சி போன்ற முறைகளும் இணைத்து பரிந்துரை செய்யப்படுகின்றன. பொதுவாக, மருந்து என்று மட்டுமல்லாமல் ஒரு முழுமை வாழ்க்கை முறையை பரிந்துரை செய்கின்றன.
இளமையை மீட்டெடுக்கும் ரசவாதம்
கல்லீரலே உடலின் மையம் என்ற பார்வை திரண்டு வருவதை கிரேக்க ரோம மருத்துவத்தில் பார்த்தோம். தாவோயிசம் சி, ஜிங், ஷென் ஆகிய மூன்று பொக்கிஷங்களை பட்டியலிடுகிறது. வாழ்வின் சாரம், பிராணன், ஆன்மா என்று பொருள் கொள்ளலாம். சீன மருத்துவத்தில் சிறுநீரகம் வாழ்வின் அடிப்படை சாரமான ஜிங் (JING) இருக்கும் இடமாக பார்க்கப்படுகிறது. இதுவே பிறப்பு, வளர்ச்சி, இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சிறுநீரகத்தின் சி குறைவது நோய்கள் மற்றும் முதுமையை கொண்டுவருவது, மரணத்தில் முடிவது என்று கருதப்படுகிறது.
| வயது | உடல் மற்றும் Qi மாற்றங்கள் |
| 0 – 7 | பிறப்பின் பின் சி (Qi) வளர்ச்சி தொடங்குகிறது; முதுகெலும்பு உறுதியாகிறது |
| 8 – 14 | இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன |
| 21 – 35 | சிறுநீரக சி மற்றும் ஜிங் உச்ச நிலையை அடைகின்றன |
| 36 – 49 | சிறுநீரக ஜிங் மெதுவாக குறையத் தொடங்குகிறது |
| 50 – 60 | பார்வை மங்கல், எலும்புகள் மெலிவடையும், மனச்சோர்வு அதிகரிக்கலாம் |
| 60+ | Qi மற்றும் Jing மேலும் குறைந்து உடல் இயலாமை காணப்படுகிறது. |
சிறுநீரக சி குறைவின் அறிகுறிகள்
தூக்கமின்மை, செவித்திறன் குறைதல், முதுகுவலி, முழங்கால் வலி, இரத்த அழுத்த குறைவு, எளிதாக சோர்வடைதல், பாலியல் உறவில் நாட்டம் குறைதல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை, ஜீரணம் குறைதல், நுரையீரல் சளி பாதிப்புகள் போன்றவை உடல் அளவிலும்,
நினைவு மங்குதல், பயம், மனச்சோர்வு, இயலாமை உணர்வு, நோய் எதிர்ப்பாற்றல் குறைதல், கவலை போன்ற மன அறிகுறிகளும் தோன்றும்.
இவற்றை சரிசெய்ய பல்வேறு மூலிகை கலந்த கூட்டு மருந்துகள், அக்குபஞ்சர் முறைகள், உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகள்
இதனுடன் ரசவாதம் முறைகளும் இணைந்து பரிந்துரை செய்யப்படுகின்றன.
உடல் என்பது ரசவாதம், அமிர்தம் உருவாகும் ஒரு பாத்திரம் (Ding) போலக் கருதப்படுகிறது. சீன மருத்துவ ரசவாதம் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது:
- வெளிப்புறம் சார்ந்த ரசவாதம் (Waidan): உலோகங்கள், மூலிகைகள், பாதரசம் போன்றவற்றை பயன்படுத்தி சாகாவரம் அளிக்கும் மருந்துகளை உருவாக்கும் முறையாகும்.
- உள்நோக்கிய ரசவாதம் (Neidan): மூச்சு பயிற்சி, தியானம், வாழ்வியல் ஒருங்கமைப்பு மற்றும் மூலிகை மருந்துகளை பயன்படுத்தி உள்முக ரசவாதத்தை உருவாக்கும் முறையாகும்.
சீன மருத்துவத்தி்ன் வழியே
சீன மருத்துவத்தின் மூல புத்தகங்களை தவிர்த்து மற்ற புத்தகங்கள் அனைத்தும் நோயாளியின் தனிப்பட்ட குறிப்புகளாக (Case Studies) பதிவு செய்யப்பட்டன. ஒருவருடைய நோயையும், அதற்கு பயன்படுத்திய சிகிச்சை முறைகளையும், அதன் விளைவையும் விரிவாக பதிவு செய்துள்ளனர்4. மருந்துகள் அல்லது மருத்துவ குறிப்புகள் போன்று இல்லாமல் ஒவ்வொரு நோயாளியும் தனிப்பட்டவர், ஒவ்வொரு நோயும் தனிப்பட்டது எனவே அவருக்கான சிகிச்சை முறையும் தனிப்பட்டதாகவே இருக்கமுடியும் என்ற பார்வைக்கோணத்தில் இருந்தே இவ்வாறு தொகுக்கப்பட்டன. இவ்வாறு தொகுப்பது ஒரு தனி ஆவணப்படுத்தும் முறையாக வளர்ந்தது. மிங் பேரரசு ஆட்சிகாலத்தில் தனிப்பட்ட முறையில் ஒருவர் இவ்வாறு தொகுத்து வெளியிடுவது பரவலாக இருந்தது. இது மனிதகுல ஞானத்தொகையின் மிகப்பெரிய ஒரு களஞ்சியம்.
சீன மருத்துவதின் அடிச்சுவட்டில் இருந்தே ஜப்பானிய, கம்போடியா, வியட்நாம், கொரியா மருத்துவமுறைகள் கிளைத்து வளர்ந்தன.
சீன மருத்துவ ஆவணக்குறிப்புகளை ஆராய்ந்து அதன்வழியே மலேரியா நோய்க்கு ஆர்ட்டிமிசினின் (Artemisinin) என்ற மருந்தைக் கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானி து யூ யூ (Tu Youyou) அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சீன மருத்துவம் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை மீட்டெடுத்தாலும் அதன் முதன்மை நோக்கம் என்ன என்பதை தாமரை சூத்திரம் (Lotus Sutra) எழுதிய குரு நான்யு ஹுயிசி (Nanyue Huisi பொ யு 515-577) அவர்களின் கீழ்கண்ட பாடல் மூலம் அறியலாம்.
“நான் விசுவாசத்தைப் பாதுகாப்பதற்காக நீண்ட ஆயுளைத் தேடுகிறேன், உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக அல்ல. அனைத்து துறவிகளும் ஞானிகளும் எனக்கு உதவ வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இதனால் நான் சில நல்ல மாய காளான்களையும் [ஜி], தெய்வீக அமிர்தங்களையும் [ஷெண்டன்] பெற்று, எல்லா நோய்களையும் குணப்படுத்தவும், பசி தாகம் இரண்டையும் நிறுத்தவும் முடியும்.
இந்த வழியில் நான் சூத்திரங்களின் வழியைத் தொடர்ந்து தியானங்களில் ஈடுபட முடியும். மலைகளின் ஆழத்தில் ஒரு அமைதியான இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பேன் என்று நம்புகிறேன், அங்கு எனது திட்டங்களைச் செயல்படுத்த போதுமான தெய்வீக அமிர்தங்களும், மருந்துகளும் இருக்கும். இதனால் வெளிப்புற அமிர்தங்களின் [வைடான்] உதவியால் நான் உள் அமிர்தத்தை [நெய்டன்] அடைய முடியும்”
சான்றாதாரங்கள்
- https://www.mcgill.ca/oss/article/medical-critical-thinking-health-and-nutrition/no-traditional-chinese-medicine-has-not-been-vindicated-science
- https://en.wikipedia.org/wiki/Meridian_(Chinese_medicine)
- https://www.researchgate.net/publication/283274416_Mucosal_immunity_barriers_bugs_and_balance
- A Flourishing Yin: Gender in China’s Medical History, 960–1665. Berkeley: University of California Press.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

குறி உரைக்கும் எலும்புகள், மாவாங்க்டை கல்லறை கண்டுபிடிப்புகள் போன்ற ஆதாரபூர்வ வரலாறுகளையும்,
டா யூவின் வெள்ளக் கட்டுப்பாடு கதை, ஷென்னாங்கின் மூலிகை கண்டுபிடிப்பு கதை ஆகிய சீன மரபு கதைகளையும் கட்டுரை சுவராஸ்யமாக தொகுத்துக் காட்டுகின்றது.
சீனம் தனக்கென உலகம், உயிர், உடல் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கி உள்ளது? அதன் வழியே அண்டம் எதனால் ஆனது, உடல் எவ்வாறு உருவாகின்றது, நோயை கண்டறியும் முறைகள் என்னென்ன தெளிவாக வளர்த்துள்ளது என கட்டுரை சொல்கின்றது.
அது இன்றைய காலக்கட்டத்தில் யூ யூவின் நோபல் பரிசாக வளர்ந்து வந்த வரையில் கட்டுரை சொல்லி பண்டைய அறிவின் நவீன பொருத்தபாட்டை நிறுவுகிறது.
இக்கட்டுரை வாசகருக்கு சீன மருத்துவம் வெறும் சிகிச்சை முறை மட்டுமல்ல, மாறாக ஒரு முழுமையான வாழ்க்கை தத்துவம் என்பதை உணர்த்துகிறது. யின்-யாங் சமநிலை, சி (உயிர்சக்தி) ஓட்டம், ஐந்து கூறுகள் கோட்பாடு, மெரிடியன்கள், நாக்கு+நாடி பரிசோதனை போன்ற கருத்துக்கள் மூலம் நோயை வெறும் உடல் பாதிப்பாக மட்டும் பார்க்காமல், மனம்-உடல்-சூழல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பாதிப்பாக பார்க்கும் பார்வையை வழங்குகிறது.
ஒவ்வொரு நோயாளியும் தனிப்பட்டவர், ஒவ்வொரு நோயும் தனித்துவமானது என்ற அணுகுமுறையும், நோயை தடுப்பதிலும் ஆரோக்கியம் பேணுவதிலும் கவனம் செலுத்தும் முறையும் நவீன ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கு முக்கியமான பாடங்களை வழங்குகிறது.
சில இடங்களில் தகவல் அடர்த்தி அதிகமாக உள்ளது
அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் சில வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்
ஒட்டுமொத்தமாக, இது ஒரு முழுமையான, நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட, சுவாரசியமான அபுனைவு கட்டுரை.