12. என்றென்றும் நிலைத்திருப்பது  

“வெறும் தொன்மங்களோடு நின்றுவிடாமல் அவற்றின் மர்மமான கொள்கைகளையும், பயன்பாடுகளையும் விமர்சிப்பது வழியே அறிவியல் தொடங்குகிறது. மாறாக அவதானிப்புகளை சேகரிப்பது அல்லது சோதனைகள் வழியே கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவது மட்டும் அறிவியல் அல்ல.

நவீன அறிவியல் அதற்குமுன் இருந்த அறிவியல் முறையிலிருந்து இரண்டு விதங்களில் வேறுபடுகிறது. தன் முந்தைய அறிவியல் முறைகளைப்போல கோட்பாடுகளை முன்வைத்தாலும், கூடவே விமர்சன அணுகுமுறையையும், கோட்பாடுகளை அறுதியான முடிவுகளாக கருதாமல் அவற்றை விவாதித்து மேம்படுத்தும் ஒரு அறைகூவலையும் முன்வைக்கிறது.”

இது “ஊகங்களும் மறுப்புகளும்: அறிவியல் அறிவின் வளர்ச்சி”  (Conjectures and Refutations: The Growth of Scientific Knowledge) என்ற நூலில் கார்ல் பாப்பர் கூறிய நவீன அறிவியலின் வரையறை ஆகும்.

கார்ல் பாப்பர் (Karl Popper, 1902 – 1994) ஆஸ்திரியாவில் பிறந்தவர். பிரிட்டிஷ் தத்துவஞானி. அறிவியல்முறையின் அடிப்படையாக இருந்த தொகுத்தறியும் (Inductive logic) தர்க்கத்தை நிராகரித்து, அதற்குப் பதிலாக அனுபவவாத பொய்ப்பித்தல் (Empirical falsification) முறையை முன்வைத்தவர்.

நவீன அறிவியலின் வரையறை

 ஒரு கோட்பாட்டை அனுபவ அறிவியலில் (Empirical science) ஒருபோதும் எப்போதைக்குமான உண்மையாக  நிரூபிக்க முடியாது, ஆனால் ஒரு கோட்பாட்டைத்  சோதனைகள் மூலம் மிக நுட்பமாக ஆராய்ந்து அது தவறானது என நிரூபிக்க முடியும்.

தொகுத்து அறியும் தர்க்க முறையில் அனுபவம் சார்ந்து ஒரு முடிவுக்கு சென்று சேர்வதைப் பார்த்தோம்.

இன்றுவரை சூரியன் ஒவ்வொரு நாளும் உதயமாவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தத் தொடர்ச்சியான கவனிப்பு, நாளை மீண்டும் அது உதயமாகும் என்பதை தர்க்கரீதியாக நிரூபிக்காது. எதிர்காலம் எப்போதும் கடந்த காலத்தைப் போலவே இருக்காது.

இதை தொகுத்தறியும் தர்க்கத்தின் பிரச்சனையாக (Inductive gap) டேவிட் ஹ்யூம் முன்வைத்தார்.

கார்ல் பாப்பர் தொகுத்தறியும் தர்க்கத்தின் பிரச்சனையைத் தீர்க்க, அறிவியல் கூற்றுகள் கொள்கையளவில், கவனிப்பின் மூலம் தவறானது என நிரூபிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். “நாளை சூரியன் உதயமாகும்” என்பது வானியல் கோட்பாடு மற்றும் கடந்த கால ஆதாரங்களால் ஆதரிக்கப்படும் ஒரு கருதுகோள். ஆனால், நாளை காலை சூரியன் தோன்றவில்லை என்றால், அந்தக் கருதுகோள் தவறானது என நிரூபிக்கப்பட்டுவிடும் என்றார்.

பாப்பரின் கோட்பாட்டின்படி நாளை சூரியன் உதயமாகுவது, பல நூற்றாண்டுகளாக வானியலாளர்களாலும், கடந்த கால அனுபவத்தாலும் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எதிர்பாராத விண்வெளி நிகழ்வுகளால் அது தவறானது என நிரூபிக்கப்படும் சாத்தியம் தர்க்கரீதியாக எப்போதும் உள்ளது.

படம்: கார்ல் பாப்பர், விக்கிபீடியா

உறுதிப்படுத்துதல் நிரூபணம் அல்ல!

ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும்போது, அந்தக் கருதுகோள் மற்றொரு சோதனையில் வெற்றி பெறுகிறது. இது அதன் உறுதிப்படுத்தலை (corroboration) அதிகரிக்கிறது, ஆனால் அதை ஒருபோதும் உறுதியானது என ஆக்காது. தர்க்கம் மற்றும் கணிதத்திற்கு மட்டுமே முழுமையான உறுதித்தன்மை சொந்தமானது. அனுபவ அறிவியல் (empirical science) அதற்கு உட்பட்டதல்ல. எனவே ஒரு கோட்பாட்டை நம்மால் ஒருபோதும் உண்மையானது என நிரூபிக்க முடியாது; அது இன்னும் தவறானது என நிரூபிக்கப்படவில்லை என்பதை மட்டுமே நம்மால் காட்ட முடியும் என்று கார்ல் பாப்பர் வாதிட்டார்.

கார்ல் பாப்பர் எந்தவொரு அறிவியல்கொள்கைகளையும் அறுதியாக நிறுவலாம் என்று கருதுவது அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது, ஏற்கனவே நிறுவப்பட்ட உண்மைகளை அறுதி உண்மையாக கொண்டால் விஞ்ஞானம் வளர முடியாது என்று கருதினார்.

சுருக்கமாக, எது அறிவியல் என்பதற்கு “எந்தக் கோட்பாடெல்லாம் தன்னைத் தவறென நிறுவப்படும் வாய்ப்போடு இருக்கிறதோ அதுவே அறிவியல்” எனலாம்.

அந்த வாய்ப்பு இல்லாத கோட்பாடுகள் போலி அறிவியல் அல்லது காலாவதியான அறிவியல் கருத்து என்று கருதப்படுகிறது.

கார்ல் பாப்பர் எது அறிவியல் என்று வரையறை செய்தவுடன் மற்ற மருத்துவ முறைகள் பொய்ப்பித்தலின் வழியே அறிவியலை விட்டு வெளியே சென்றுவிட்டன. பொதுவாக மாற்று மருத்துவம் என்ற சொல்லாடலில் எனக்கு உவப்பு இல்லை. வேண்டுமென்றால் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஹிப்னிடிசம், ஐசோபதி, ஆண்டிபதி போன்றவற்றை அப்படி கூறலாம். மற்றபடி ஆயுர்வேதம், சித்தா, சீன மருத்துவம் போன்றவை மாற்று அல்ல. நவீன அறிவியல் கொள்கைக்கு பின் அவை வரையறைக்கு உட்படாமல் போனவை.

நான்கு ஹூயுமர் கொள்கையை பொய்ப்பித்தல்

உதாரணமாக, நான்கு ஹியுமர் கொள்கை எப்படி அறிவியல் அல்ல என்று பார்ப்போம்.

பாப்பரின் கூற்றுப்படி, ஒரு கொள்கையைப் பொய்ப்பிப்பதற்கான வழி, அந்தக் கொள்கையின் கணிப்புகளுக்கு முரணான அவதானிப்புகள் அல்லது சோதனைகளைக் கண்டறிவதாகும்.

ஹியுமர் கொள்கை உடல் முழுவதும் திரவங்களின் சமநிலையின்மையால் நோய் ஏற்படுகிறது என்று கூறியது. ஆனால், காலப்போக்கில், மருத்துவர்கள் நோய்கள் குறிப்பிட்ட உறுப்புகள் அல்லது உடலின் பகுதிகளில் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியத் தொடங்கினர் (உதாரணமாக, நிமோனியா நுரையீரலை மட்டும் பாதிக்கிறது, அல்சர் வயிற்றை மட்டும் பாதிக்கிறது). இது ஹியுமர்களின் பொதுவான சமநிலைக் கருத்துடன் ஒத்துப்போகவில்லை.

பிரேதப் பரிசோதனைகள் அதிகரித்தபோது, நோய்களால் இறந்தவர்களின் உடல்களில் நான்கு ஹியுமர்களில் குறிப்பிடத்தகுந்த அல்லது நோயுடன் தொடர்புடைய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மாறாக, சேதமடைந்த திசுக்கள், கட்டிகள் அல்லது குறிப்பிட்ட உறுப்பின் செயலிழப்புகள் காணப்பட்டன.

கிருமிக்கொள்கை, குறிப்பிட்ட நோய்கள் குறிப்பிட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்தன.

ரத்தம் வெளியேற்றுதல், வாந்தி தூண்டுதல், மலமிளக்கிகள் போன்ற ஹியுமர்களைச் சமநிலைப்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்ட பல சிகிச்சைகள் பயனற்றவை அல்லது தீங்கு விளைவிப்பவை என்பது தெரியவந்தது.

அதே நேரத்தில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, அறுவை சிகிச்சை நுட்பங்கள், பின்னர் ஆன்டிபயாடிக்குகள் (antibiotics) போன்ற முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறைகள் நோய்களைக் குணப்படுத்துவதில் மிகுந்த பயனளித்தன.

நான்கு ஹியுமர்  அல்லது திரிதோஷம் (வாதம், பித்தம், கபம்) அல்லது யின் யாங் என்பதை பொய் என்று நிரூபிக்க முடியாது. எந்த நோய் வந்தாலும், அவற்றை எதாவது ஒன்றின் கீழ் என்று பொதுவாகக் கூறிவிட முடியும் → பொய்ப்பிக்க முடியாது.

எனவே இவைகள் அறிவியல் கோட்பாடல்ல, ஏனெனில் எந்த சோதனையும் அதை தவறானதென்று நிரூபிக்க முடியாது.

 பொய்ப்பிக்கும் வாய்ப்பு அமையுமென்றால், அதன் பின்னர் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட அனைத்தையும், விட வேண்டி இருக்கும்.

மருத்துவத்தில் நிலைத்தவை

இதுவரை கடந்த 11 அத்தியாயங்களில் பார்த்தவற்றை மிக சுருக்கமாக தொகுக்கலாம். அது வருங்காலத்தில் என்ன சாத்தியங்களை கொண்டுவரும் என்றும் ஊகிக்கலாம். இவற்றில் சில, இன்னும் 10 ஆண்டுகளில் நம் அன்றாட மருத்துவத்தில் இடம் பெறக்கூடும். சில தொடர்ந்து ஆராய்ச்சியில் இருக்கலாம்.

நோயின் காரணம்

நாம் இதுவரை நோயின் காரணம் என்ன என்பதை இரண்டு வகையாக பிரித்து பார்த்து வந்துள்ளோம்.

வெளிப்புறக் காரணிகள்: பொதுவாக மனித உடலுக்கு வெளியில் இருந்தது வருவது என்று வகுத்துக்கொள்ளலாம். கெட்ட ஆவிகள், கடவுளரின் சாபம், கோள்களின் நிலை, வேறு மனிதர்கள் அல்லது விலங்குகள், கெட்ட காற்று, சூடு – குளிர்ச்சி போன்ற புற சூழல்கள், கிருமிகள்.

உட்புறக் காரணிகள்: மனிதன் தன் வாழ்நாளில் செய்த பாவங்கள், நான்கு ஹியுமர் சமநிலை, வாத பித்த கப சமநிலை, யின் யாங் சமநிலை, மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள்.

சர்வரோக நிவாரணி

வரலாறு கிடைக்கும் காலத்திலிருந்தே அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒற்றை மருந்து என்ற சிந்தனை மனிதகுலத்தை தீராத்தேடலில் ஆழ்த்தியது என்று பார்த்தோம். தனித்தனி நோய்களுக்கு தனித்தனி கடவுள்கள் என்று ஆரம்பித்து ஒரே மருத்துவக் கடவுள் வரும் பரிணாமும், பல்வேறு மூலிகைகளிலிருந்து ஒற்றை மூலிகை அல்லது பல்வேறு மூலிகைச்சாறு கலந்த ஒற்றை மருந்து, பாதரசம் போன்ற ஒற்றை மூலகத்தை கொண்ட மருந்துகள் என்று அனைத்து நோயையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரண மருந்துகளைைத் தேடிக்கொண்டு இருக்கிறோம்.

இளமைக்குத் திரும்பல் மற்றும் மரணமின்மை

இதுவும் நமக்கு வரலாறு கிடைக்கும் காலத்திலிருந்தே ஆழ்ந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு சிந்தனை. ஒரு மூலிகை அல்லது கிடைப்பதற்கரிய ஒன்றின் மூலம் இளமைக்குத் திரும்பல் அல்லது இளமையைத் தக்கவைத்துக்கொள்வது, சுமேரிய கில்காமேஷ், காயகற்பம் முதல் இன்று பயன்பாட்டில் இருக்கும் ஆன்டி ஏஜிங், போட்டாக்ஸ் வரை ஒரு நீண்ட கோட்டை இழுக்க முடியும்.

மரணமின்மைக்கு ஒரு அரிய மூலிகை அல்லது உலோகக் கலப்பு அல்லது உடல்-மனம் சார்ந்த பயிற்சிகள் வழியே முயல்வது அல்லது எதிர்காலத்தில் மீண்டும் உயிர்ப்பிக்க வாய்ப்பு வரும் என்று இறந்த உடலை பதப்படுத்திக்கொள்வது. இதுவும் எகிப்திய ஒசிரிஸ் தொன்மத்திலிருந்து மருத்துவம் மற்றும் ரசவாதம் வழியே தொடர்ந்து வரும் ஒரு சிந்தனை ஆகும்.

மனித உடல் பாகங்கள் – கழிவுகளை மருந்தாக பயன்படுத்துவது

குறிப்பிட்ட நோய்களுக்கு குறிப்பிட்ட மனித உடல்பாகங்களை மருந்தாக உட்கொள்வது, மம்மி பவுடர், வியர்வை, சிறுநீர், மலம் போன்றவற்றை மருந்தாக பயன்படுத்துவது போன்றவற்றை முன்னரே பார்த்தோம். பிளினி சிறுநீர் மருத்துவத்திலிருந்து, விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் உடலிலிருந்து வியர்வையை மருந்தாக பயன்படுத்துவது முதல் கன்னியாஸ்திரிகளின் சிறுநீரிலிருந்து Pergonal மருந்து உருவாக்கப்பட்டது வரை நாம் ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்ளமுடியும்.

நோய் அறிதல்

ஆட்டின் கல்லீரல் கொண்டு வருகுறி உரைப்பது, எழுதப்பட்ட சுவடிகள் கொண்டு வருகுறி உரைப்பது (Divination), சோதிடம், கோள்களின் நிலை போன்றவற்றிலிருந்து இன்று நவீன இமேஜிங் தொழில்நுட்பம்  வரை நோயறிதல் முறை வளர்ந்து வந்துள்ளது.

மனித இனத்தை வகை பிரிப்பது (Pheonotype)

ஏதேனும் ஒரு வகையில் மனிதர்களை வகை பிரித்து அதன் அடிப்படையில் நோய்களை கணித்து சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்து பயன்படுத்தபடுகிறது. சுமேரிய நாகரிகத்தில் பார்த்த அகத்தின் அழகு முகத்தில் தெரியும் (physiognomy) முதல் கிரேக்கத்தின் Sanguine, Melancholic, Choleric, Phlegmatic மற்றும் வாதம், பித்தம், கபம் அல்லது யின் யாங் போன்றவற்றிலிருந்து இன்று மரபணு அடிப்படையில் (Genotype) வகை பிரிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து உள்ளோம்.

ஆவணப்படுத்துதல்

 அறிவை தொடர்ந்து தொகுப்பதன் மூலம் புதியவற்றை அடைவது,

அதிலிருந்து முழுமுதல் உண்மையாக வைக்கப்படும் கொள்கைகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு, முற்றிலும் ஒரு புதிய முறை எழுந்து வருவது என்று களிமண் பலகைகள்,  பாப்பிரஸ் சுவடிகள், நினிவே, அலெக்சாந்திரியா, ஞான மாளிகை நூலகங்கள் என்று இன்றைய செயற்கை நுண்ணறிவு காலம் வரை மனித அறிவு தொகுக்கப்படுதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் மூலமே நாம் புதிய சாத்தியங்களை நோக்கிச் செல்கிறோம்.

மருத்துவனின் இடம்

மருத்துவன் பற்றிய உருவகமும் நமக்கு வரலாற்றுக்கு முற்பட்ட குகை ஓவியங்களிலிருந்தே கிடைக்க ஆரம்பிக்கிறது. மனித குலம், மற்ற உயிர்குலங்களின் மீது கொண்ட பரிவின் விளைவாக உருவாகி வந்த லட்சிய உருவமாக மருத்துவனைக் கருதலாம். அதே சமயம் அவன் அதிகாரம் எல்லைக்கு உட்பட்டது என்பது எகிப்தின் பாப்பிரஸ் சுவடிகள், ஹமுராபி சட்டங்கள் என்று இன்றிருக்கும் மருத்துவ சட்டங்கள் வரைக்கும் ஒரு நீண்ட சித்திரத்தை உருவாக்கி கொள்ளலாம்.

மருத்துவத்துடன் இணைந்த இரு பாம்புகள் இணைந்த உருவம்

உலகின் அனைத்து பண்பாடுகளிலும் இரண்டு பாம்புகள் ஒன்றையொன்று கவ்வும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மருத்துவம் தொடர்பான கடவுளர் பாம்புடன் தொடர்புடையவர்களாக வருபவர்கள். அமுத கலசம் ஏந்தி வரும் தன்வந்திரி, ஆதிசேஷன் அவதாரமாக கருதப்படுகிறார். இம்கொதொப், அஸ்கிளெப்பியஸ் என்று தொடர்ந்து வரும் அது, இன்று நாம் காணும் மருத்துவச்சின்னமான கடுசியஸ் (Caduceus) ஆக பரிணாமம் கொண்டுள்ளது.

படம்: சுமேரிய கடவுள் நிங்கிஷிசிடா (Ningishzida) சின்னம் 2100 BCE

மருத்துவத்தில் அழிந்தவை

தற்போது மருத்துவத்திலிருந்து கிட்டத்தட்ட அழிந்தவை என்று கடவுள் மற்றும் மதத்தின் செல்வாக்கைக் கூறலாம். ஆனால்  எப்போது வேண்டுமானாலும் அவை திரும்பி வரும் வாய்ப்பும் உள்ளது.

எதிர்கால மருத்துவ சாத்தியங்கள்

மரபணு வழியே

படம்: மனித ஜீனோம் புராஜக்ட்

குறைத்தல்வாதம் வழியே மரபணு சார்ந்த நோய் கணிப்பு முறைகளும், சிகிச்சை முறைகளும் வர ஆரம்பிக்கலாம்.

CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) என்பது மரபணு-திருத்தம் (gene-editing) தொழில்நுட்பமாகும். CRISPR, பாக்டீரியாக்களில் காணப்படும் ஒரு இயற்கையான பாதுகாப்பு அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. பாக்டீரியாக்கள் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வைரஸ்களை எதிர்த்துப் போராடுகின்றன.

மரபணு பிறழ்வுகளால் ஏற்படும் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் (cystic fibrosis) மற்றும் அரிவாள் செல் சோகை (sickle cell anemia) போன்ற மரபணுக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஆராய்ச்சிக்கான புதிய நோய்களின் மாதிரிகளை உருவாக்கவும், புற்றுநோய் சிகிச்சைகளை உருவாக்கவும், மற்றும் HIV போன்ற வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் பயன்படுத்தப்படலாம்.

தனிப்பட்ட மருத்துவம் (Personalized Medicine)

மரபணு அடிப்படையில் அமைந்த எதிர்கால நோய்களை முன்கூட்டியே உய்த்துணரக்கூடிய, தடுக்கக்கூடிய, தனிப்பட்ட (Predictive, Preventive and Personalized Medicine, PPPM) ஒவ்வொருவருக்குமான ஒரு சிகிச்சை முறை உருவாகி வரலாம்.

டிஜிட்டல் ட்வின்ஸ் (Digital Twins)

டிஜிட்டல் ட்வின்ஸ் என்பது மனித உடல் போன்றவற்றின் மெய்நிகர் பிரதியுரு (virtual replica) ஆகும். சென்சார்கள், மருத்துவ சாதனங்கள், ஆய்வுத்தரவுகள், மற்றும் AI/ML மாடல்கள் மூலம் உண்மையான தரவை நேரடியாகப்  பெற்றும், நோயாளியின் ஜீனோமிக்ஸ் (genomics), மருத்துவ வரலாறு, மற்றும் உயிரியல் தரவுகளை வைத்து ஒரு டிஜிட்டல் நகல் உருவாக்கலாம்.

படம்: மெய்நிகர் பிரதியுரு

மருந்து எப்படி வேலை செய்யும், பக்கவிளைவுகள் என்ன என்பதை அந்தப் பிரதியுருவிடம் போலி செய்து (simulation) தெரிந்து கொண்டு சிகிச்சையை வடிவமைக்கலாம்.

மக்கள்தொகை அடிப்படையிலான நோய் பரவல் மாதிரிகள் (Epidemic Modeling) டிஜிட்டல் ட்வின்ஸ் மூலம் நோய் பரவல் எவ்வாறு நடைபெறும் என்பதைப் போலி செய்து (simulation) தடுப்புத் திட்டங்கள் அமைக்கலாம்.

க்ரையோனிக்ஸ் (Cryonics) மற்றும் ஆயுள் நீட்டிப்பு

க்ரையோனிக்ஸ்என்பது இறப்புக்குப் பிறகு உடலை (அல்லது மூளை மட்டும்) மிகவும் குறைந்த வெப்பநிலையிலே (−196°C, liquid nitrogen) உறைய வைத்து பாதுகாக்கும் தொழில்நுட்பம். இது இப்போது உயிர்ப்பிக்க முடியாதவர்களை, எதிர்காலத்தில் மருத்துவம் முன்னேறிய பிறகு உயிர்ப்பிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. தற்சமயம் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளில் சில நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன.

வயது முதிர்வை மெல்லக் குறைக்கும் மருந்துகள், செல்லைப் புதுப்பிக்கும் சிகிச்சைகள் போன்றவை முதுமையை தள்ளிப்போடும் , இளமையை தக்க வைக்கும் முறைகளாக நடைமுறைக்கு வரலாம்.

குடல் நுண்ணுயிரிகள் வழியே

பராசெல்சஸ் பிளேக் நோயாளியின் ஒரு ஊசி முனையில் அகற்றப்பட்ட மலத்தில் இருந்து மிகச் சிறிய அளவைக் கொண்ட ரொட்டியால் செய்யப்பட்ட ஒரு மாத்திரையை வாய்வழியாகக் கொடுத்து பிளேக்  நோயை குணப்படுத்தியது நினைவில் இருக்கலாம்.

Fecal Microbiota Transplantation (FMT) என்பதுஆரோக்கியமான ஒருவரின் குடல் நுண்ணுயிரிகள் (பாக்டீரியா) நிறைந்த மலத்தின் மாதிரியை, நோயாளியின் குடலுக்கு மாற்றும் ஒரு சிகிச்சைமுறை ஆகும்.

இதுநோயாளிக்கு கோலோனோஸ்கோப், எனிமா, அல்லது கேப்ஸூல் (capsule) வழியாக கொடுக்கப்படுகிறது. C. diff தொற்றுக்கு 90% வரை குணமளிக்கும் என்று கருதப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ள குடல் நுண்ணுயிரி (Gut Microbiome) அடிப்படையில் தனிப்பட்ட உணவுமுறை (personalized nutrition)  வடிவமைக்கப்படலாம்.

நோயெதிர்ப்புத்திறன் மற்றும் குடல் நுண்ணுயிரி இடையேயான தொடர்பு, மேலதிக திறப்புகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோபோட்களின் துணையுடன்

முழுவதும் ரோபோட்களின் மூலம் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். நானோ ரோபாட்கள் வழியே தமனிகளில் ஏற்படும் அடைப்பை நீக்கவும், புற்றுநோய் செல்களை இனம் கண்டு அழிக்கவும், மருந்துகளை குறிப்பிட்ட உடல் உறுப்புகளில் கொண்டு சேர்க்கவும் முடியும்.

அறிவியல் பொருண்மைவாதம் (scientific materialism)

17 ஆம் நூற்றாண்டு முதல் அறிவியல், இயந்திரத்தனமான இருமைவாதத்தை (Mechanistic dualism) அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இயற்கையின் விதிகள் நிலையானவை. இயற்கைக்கு எந்தவித நோக்கமும் இல்லை. அனைத்து உயிரியல் பண்புகளும் பருப்பொருள் ரீதியானவை. அவை மரபணுப் பொருள், DNA, மற்றும் பிற பருப்பொருள் அமைப்புகளில் உள்ளன.

படம்: மரபணு

மனம் என்பது  மூளையின் செயல்பாடுகளைத் தவிர வேறொன்றும் இல்லை. நினைவுகள் மூளையில் பருப்பொருள் தடயங்களாகச் சேமிக்கப்படுகின்றன.

எல்லாமே அடிப்படையில் இயந்திரத்தனமானவை. மனித உடல்களும் இயந்திரங்களே, ஆனால் மனித மனங்களும் கடவுளும் பருப்பொருள் அற்றவை, ஒரு தனி ஆன்மீக யதார்த்தத்தின் பகுதி. பருப்பொருள்வாதம் இந்த இயந்திரவாதத்தை மேலும் விரிவுபடுத்தி, பருப்பொருள் அற்ற அனைத்தையும் மறுத்தது: எல்லாமே பருப்பொருள் அல்லது பௌதிக ரீதியானவை என்பதை அறுதி உண்மையாக முன்வைத்தது.

அறிவியல் பெரிதும் வெற்றிபெற்றதால்தான்  ‘அறிவியல் உலகப் பார்வை’ தீவிர செல்வாக்கை செலுத்தி இயந்திரத்தனமான மருத்துவம் (Mechanistic medicine) மட்டுமே உண்மையில் செயல்படுகிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. அறிவியலின் இந்த மதிப்பு, நவீனத்துவத்தை (Modernism) வடிவமைத்தது.

கார்ல் பாப்பர் இந்த நிலையை விமர்சித்து இதை  ‘உறுதியளிக்கும் பருப்பொருள்வாதம்’ (promissory materialism) என்று அழைத்தார். ஏனெனில், இது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என்ற உறுதியை அடிப்படையாகக் கொண்டது.

பருப்பொருள்வாதத்தின் அடிப்படை “பருப்பொருள் மட்டுமே ஒரே யதார்த்தம்” என்பதுதான். எனவே, உணர்வு என்பது மூளையின் செயல்பாட்டைத் தவிர வேறொன்றும் இல்லை. அது ஒரு நிழல் போன்றது, எந்தப் பணியையும் செய்யாத ஒரு ‘மேற்பரப்பியல் நிகழ்வு’ (epiphenomenon).

தத்துவவாதி டேவிட் சால்மர்ஸ் (David Chalmers), அகநிலை அனுபவத்தின் (subjective experience) இருப்பை ‘கடினமான சிக்கல்’ (hard problem) என்றழைத்தார். இது  சிக்கலானது, ஏனெனில் இது இயந்திரத்தனமான விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது. கண்கள் மற்றும் மூளைகள் சிவப்பு ஒளியை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை நாம் புரிந்துகொண்டாலும், ‘சிவப்புத்தன்மை’ என்ற அனுபவத்திற்கு அது விளக்கம் அளிக்கவில்லை.

மாற்று மருத்துவமும் போலி மருத்துவமும் ஒன்றா?

சென்ற அத்தியாயத்தில் லூயி பாஸ்டர் செய்த சோதனை “தானாகத் தோன்றும் உயிரி” (Spontaneous Generation) கோட்பாட்டை மறுத்து நுண்ணுயிரிகள் காற்றிலிருந்து வருகின்றன (உயிர் உள்ளவற்றிலிருந்து உயிர் வரும் – biogenesis) என்பதை நிரூபித்தது நினைவில் இருக்கலாம்.

ரஷ்ய உயிர்வேதியியலாளர் அலெக்சாண்டர் ஓபரினின் (1924) மற்றும் பிரிட்டிஷ் உயிரியலாளர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (1929) ஆகியோரால் தனித்தனியாக உருவாக்கப்பட்ட ஓபரினின்-ஹால்டேன் கோட்பாடு (Oparin-Haldane hypothesis), பூமியில் உயிரின் தோற்றம் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்தது.

ஆதி சூப்” (Primordial soup), “ப்ரீபயாடிக் சூப்” (prebiotic soup) அல்லது “ஹால்டேன் சூப்” (Haldane soup) என்றும் அழைக்கப்படும் இது, சுமார் 3.7 முதல் 4.0 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்திருக்கக்கூடிய ஒரு சூழலை குறிக்கிறது.

வளிமண்டலம் மற்றும் பெருங்கடல்களில் இருந்த எளிய கனிம மூலக்கூறுகள் மின்னல் மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் தூண்டப்பட்டு அமினோ அமிலங்கள் மற்றும் DNA, RNA ஆகியவற்றின் கட்டுமானத் தொகுதிகளான நியூக்ளியோடைடுகள் போன்ற மிகவும் சிக்கலான கரிம சேர்மங்களை உருவாக்கின.

இந்த மூலக்கூறுகள் ஆதி சூப்பில் குவிந்து, மேலும் சிக்கலாகி, இறுதியில் சுயமாக நகல் செய்யும் அமைப்புகளை உருவாக்கின. இவை முதல் உயிரணுக்களின் முன்னோடிகளாக இருந்திருக்கலாம் என்று முன்வைக்கப்பட்டது.

1953-ஆம் ஆண்டில், மில்லர்-யுரே சோதனை (Miller-Urey experiment) ஆரம்பகால பூமியின் சூழலை ஆய்வகத்தில் உண்டாக்கினார். மீத்தேன், அம்மோனியா, ஹைட்ரஜன் போன்றவற்றின் கலவையில் மின்சாரம் செலுத்தப்பட்ட போது சிலநாள் கழித்து அங்கு அமினோ அமிலங்கள் உருவாகின.

கார்ல் பாப்பர், உயிர் ஒரு ‘ஆதி சூப்லிருந்து’ தான் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்து ஒரு புராணம் தான். அது சிந்தனையைத் தூண்டும் புராணம். ஆனால் அது அறிவியல் கோட்பாடு அல்ல என்றார். ரசாயனச் சேர்மங்கள் உயிராக மாறும் அந்த மிகப்பெரிய தாண்டலை (chemistry → biology) அது நிரூபிக்க முடியவில்லை. இது ஒரு வழிகாட்டும் கண்ணோட்டம் (heuristic idea) மட்டுமே என்றார்.

ஒரு நூற்றாண்டுக்கு உள்ளாகவே அறிவியல் கொள்கைகள் முன்னும் பின்னும் பயணிக்கும் சித்திரத்தை அறியலாம்.

நாம் கிரேக்க அத்தியாயத்தில் பல்வேறு மருத்துவப் பள்ளிகள் Dogmatic, Methodist, Rationalist, Empiricist, Pneumatists போன்றவை உருவாகி வந்ததை பார்த்தோம். இவை அடிப்படையில் நோய்க்கான காரணத்தை அறியவும், சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கவும் எந்தவிதமான அறிதல் முறையிலிருந்து எடுத்துக்கொள்வது என்ற தத்துவ வேறுபாடுகளிலிருந்து தோன்றுகின்றன.

மாறாக, போலி மருத்துவ முறைகள் அல்லது தற்போது சமூக ஊடகம் வழியே நம்மை வந்து சேர்பவை, தத்துவ இடைவெளிகளின் வழியே உருவாகி வருகின்றன. தொகுத்தறியும் தர்க்கப் போதாமை வழியாகவோ, அல்லது மேலே குறிப்பிடப்படும் அகநிலை அனுபவ இருப்பை விளக்க இடம் அளிக்காத அறிவியல் பொருண்மைவாதம் வழியாகவோ உருவாகி வருபவை ஆகும். அவற்றின் அடிப்படை என்பது அந்த தத்துவ இடைவெளி அளிக்கும் ஒரு சித்திரம் மட்டுமே. பிற்காலத்தில் இந்த தத்துவ இடைவெளி நிரப்பபடும்போது அந்த மருத்துவமுறை வழக்கொழிந்து போகும்.

மீண்டும் அஹ்ரிமான்

சொராஸ்ட்ரியனிச மதத்திலிருந்து சோர்வனிசம் என்பது ஒரு தனி முறையாகப் பிறந்தது. பெர்சிய தெய்வங்களின் நிரையிலிருந்து சோர்வான் (Zorvan) என்ற காலத்தின் கடவுளை கண்டடைந்தது. ஆதி அந்தமில்லாத சோர்வான், தான் பல்கிப் பெருக விரும்பி தன்னையே கேட்டது. அஹுரா மஸ்தா கருவானர். ஒருகணம் அந்த எண்ணம் சரியா என்று ஐயம் கொண்டது. ஐயம் கொண்ட கணத்தில் அஹ்ரிமான் கருவானர். அந்த ஆதியான கருப்பையை (Primordial Womb) கிழித்து முதலில் வெளிவருவது பிரபஞ்ச முதன்மை அளிக்குமென்று, அஹிர்மான் பேறுகாலத்துக்கு முன் வெளியேறினார். ஆனால் சோர்வான் 9000 ஆண்டுகள் மட்டுமே அந்த முதன்மை நீடிக்குமென்றும், அஹுரா மஸ்தா  முடிவில் அவனை அழிப்பார் என்றும் நிர்ணயித்தார்.

இதுவும் மேலும் குழப்பத்தை கொடுத்தது.  சொராஸ்ட்ரியனிச மதத்தின் மையமான நன்மை, தீமையை தேர்தெடுக்கும் மனிதனின் சுய விருப்பத்தை (free will) மறுக்கிறது. காலம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கும் என்றால் சுயவிருப்பத்தின் தேர்வுகள் எந்த மதிப்பும் இல்லாமல் ஆகின்றன. அஹுரா மஸ்தா முழுமுதல் கடவுள் என்பதும் இல்லாமல் ஆகிறது. எனவே சோர்வனிசம் தனி குறுங்குழுவாக நீடித்தது. பின்னர் வந்த ஓரிறை மதங்கள், சொராஸ்ட்ரியனிச மதத்தின் இந்த இருமைத்தன்மையை தொடர்ந்து தாக்கி வந்தன.

தொடந்து மறுவிளக்கங்கள் கண்டறியப்பட்டன. அஹுரா மஸ்தா உயிர்த்தன்மை என்றும், அஹிர்மான் உயிரற்ற தன்மை என்றும் படைப்பு சக்தி அழிவுடன் இணைந்து இருக்க முடியாது என்பதால் அஹிர்மானை சிக்கவைத்து அழிக்க அஹுரா மஸ்தா படைப்பை உருவாக்கினார் என்றும் பொருள்கொள்ளபட்டது. மூலப்புத்தகமான அவெஸ்டாவில் எந்த இடத்திலும் இறைவன் என்ற சொல் அஹிர்மானுக்கு குறிப்பிடப்படாமல் அஹுரா மஸ்தாவிற்கு மட்டும் கூறப்படுவது கண்டறியப்பட்டது.

ஜெர்மன் கீழைத்தேயவியலாளர் மார்ட்டின் ஹாக் (Martin Haug – 1827 – 1876), அஹ்ரிமான் உண்மையில் ஒரு தெய்வமாக இல்லை, மாறாக அஹுரா மஸ்தாவின் படைப்புச் செயலின்போது வெளியேறிய ஒரு எதிர்மறை ஆற்றல் மட்டுமே என்று முன்மொழிந்தார்.

அஹ்ரிமான், தன்னால் எதையும் உருவாக்க முடியாத காரணத்தால் அழிவுசக்தியாக ஆகவில்லை (அஹ்ரிமான்தான் மயிலைப் படைத்தவர்). தன் விருப்பத்தேர்வாக, அதனால் தனக்கு எந்த ஆதாயம் இல்லாதபோதும் கூட அழிவுசக்தியை தேர்ந்தெடுத்தவராகக் கருதப்பட்டார்.

இந்த நீண்ட தொன்மத்தை நாம் மருத்துவத்திற்குப் பொருத்தி பார்க்கலாம்.

ஆரோக்கியம் என்பது முழுமுதல் நிலை என்றால் எவ்வாறு நோய் தோன்றுகிறது? அதனை சமநிலைக்குலைவு என்று விளக்கிகொண்டு, அதை சரிசெய்யும் முறையை உருவாக்கினால், ஒரு கேள்வி எழுகிறது. மீண்டும் சமநிலை குலையும்போது நோய் உருவாகுமென்றால் ஆரோக்கியத்தின் ஒருபகுதியாக நோயும் உள்ளதா?

கிழக்கத்திய மருத்துவமுறைகளான ஆயுர்வேதம், சித்தா, சீன மருத்துவம் போன்றவை நோய் மற்றும் ஆரோக்கியத்தை எதிரிடையாகப் பார்ப்பதில்லை. குறிப்பாக ஆயுர்வேதம் வேர் கொண்டுள்ள சாங்கியத்தில் நோய் – ஆரோக்கியம் என்ற இருமை பிரகிருதி உருவாக்குவதே.

படம்: யோக மரபில் பாம்பின் படிமம்

மாறாக, மேற்கில் சிந்தனை உருவான காலம் முதல் ஆரோக்கியம் vs நோய் என்ற இருமை உருவாகி வருவதைப் பார்க்க முடியும்.

அஹுரா மஸ்தா – அஹ்ரிமான் தொன்மம் இந்த இருவேறு நிலைகளை விளங்கிக்கொள்ள முயலும் ஒரு புரிதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

முடிவின்மையில்

இன்று ஊடகப் பெருக்கத்தின் விளைவாக நம்மிடம் வந்து சேரும், குறிப்பாக மருத்துவம் சார்ந்த எந்தக் குறிப்பையும் இந்த வரலாற்று – தத்துவச்சட்டகம் வழியே பார்த்து முடிவெடுக்கலாம்.

வெள்ளைப்பூசணியை அரைத்துக் குடித்தால் உடலிலுள்ள விஷங்களை எல்லாம் நீக்கும் என்ற குறிப்பு, நாம் வெளிப்புற விஷங்களை உடலில் சேர்க்கிறோம் என்பது குறிப்பாக பாவம் என்ற மதக்கருத்தில் இருந்தும், ஒருவர் தன் மொத்த வாழ்விலும் வாரம் ஒருமுறை சாப்பிட்ட ஒரு குப்பை உணவுதான் அந்த விஷத்தை ஏற்படுத்தி இருக்கும் என்ற குறுக்கல்வாத பார்வையில் இருந்தும், மொத்த நோயையும் மாயமான, தனக்கு  அல்லது தன் குழுவுக்கு மட்டுமே தெரிந்த ஒரு சர்வரோக நிவாரணி சரிப்படுத்திவிடும் என்ற கருத்தும், அப்படி அரைத்து குடித்தும் சரி ஆகவில்லை என்றால் கோடி பேருக்கு அது வேலை செய்தது எனவே அது பொய்பிக்கமுடியா முழு முதல் உண்மையாக இருக்கும் என்ற அறிவியல் வரையறைக்கு வெளியே அளிக்கப்படும் விளக்கமும் ஒரு புன்னகையை அளிக்கும் என்றால் இந்தக் கட்டுரைத்தொடர் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது என்று எடுத்துக்கொள்ளலாம். அந்தப் புன்னகையோடு நாம் நமக்கான சிகிச்சைமுறையை தெளிவுடன் தெரிவு செய்துகொள்ள முடியும்.

மரணமில்லா பெருவாழ்வின் தேடல்

மனித இனத்தின் நோய்க்கான சிகிச்சைத் தேடலானது அவற்றின் அறிவின்பால் நிகழ்ந்த பெரும்பாய்ச்சலும், சக உயிரினம் மேல் கொண்ட பரிவின் விளைவும் என்றே நான் கருதுகிறேன்.

மரணமின்மை மற்றும் அழியாத இளமையை தேடிச்சென்று வெறும்கையுடன் திரும்பி உருக்  நகரின் கோட்டைச்சுவரைத் தொட்டு கில்காமேஷ் பாடும் பாடல்,

“மேலே சென்று, உரூக்கின் சுவர்களை அளந்து பார்,

அதன் அஸ்திவாரத்தளத்தையும் அதன் செங்கல் வேலைப்பாடுகளையும் ஆராய்ந்து பார்.

அதன் கட்டுமானங்கள் சூளையில் சுட்ட செங்கற்களால் ஆனவை அல்லவா?

மற்றும் ஏழு அதிபதிகள் அதன் அடித்தளத்தை அமைக்கவில்லையா?

ஒரு சதுர மைல் நகரம், ஒரு சதுர மைல் தோட்டங்கள்,

ஒரு சதுர மைல் களிமண் குழிகள்,

அரை சதுர மைல் இஷ்தார் குடியிருப்பு,

மூன்றரை சதுர மைல்கள் உரூக்கின் அளவாகும்!”

கில்காமேஷ் காவியத்தை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் முதல் அத்தியாயத்தில் வரும் H.G Wells-ன் மேற்கோள் அதற்கு தொடர்ச்சியாக அமையலாம்.

கோடிக்கணக்கான மனித உயிர்களை பலிக்கொடுத்து, மனித இனம் நோய் எதிர்ப்பாற்றலைப் பெற்று, முடிவிலா உயிர்குலங்களுக்கு இடையே வாழும் உரிமையைப் பெற்றுள்ளது. அந்த உரிமை நமது அனைத்து சவால்களையும் சந்திக்கவல்லது. இங்கு மனிதர்கள் வீணாக வாழ்வதும் இல்லை, இறப்பதும் இல்லை.

படம்: Caduceus, wikipedia

முடிவுரை

சென்ற ஆண்டு நார்த் கரோலினா பூன் மலையில் எழுத்தாளர் ஜெயமோகன் நடத்திய இந்திய தத்துவம் தொடர்பான வகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஆசிரியரை ஒரு மனிதராக இல்லாமல் ஒரு நிகழ்வாக நான் கண்டுகொண்டேன். அங்கு அவர் முதல்நிலை வகுப்பு என்பதால் மொத்தக் கடலையும் ஒரு உப்புப்பரலில் அளிப்பது போல, இந்தியஞான மரபின் ஒரு வரைவை அளித்தார். அந்த வரைவு என்னை ஒரே சமயத்தில் உணர்ச்சிகரமாகவும், தொந்தரவுக்கும் உள்ளாக்கியது.

அந்த சித்திரத்தை மருத்துவத்திற்குப் பொருத்தி பார்க்க முடியுமா என்பதே இந்த கட்டுரைத்தொடர் முயற்சி.

போதாமைகளும், விடுபடல்களும் இருக்கும் என்று அறிவேன். இதுவரை படித்த வாசகர்கள் ஒரு பரந்துபட்ட சித்திரத்தை உருவாக்கி கொள்ளும் ஒரு தூண்டுகோலாக இது அமைந்திருந்தால் மகிழ்ச்சி.

கட்டுரை படித்து கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றியும் அன்பும். எழுத ஊக்கம் அளித்த பாஸ்டன் பாலா மற்றும் சொல்வனம் குழுவுக்கு நன்றி. இந்த தொடர் எழுத்தாளர் ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு சமர்ப்பணம்!

மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்

11. அறிவின் ஒளி  

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.