11. அறிவின் ஒளி  

ஒரு தேரையை மூன்று நாட்கள் ஒரு புகைபோக்கியில் (chimney) கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட வேண்டும்.

தேரை வாந்தி எடுத்து இறந்தவுடன், அதன் வாந்தியையும் அதில் உள்ள பூச்சிகளையும் மஞ்சள் மெழுகில் சேகரிக்க வேண்டும்.

பின்னர், இறந்த தேரையைப் பொடி செய்து, அந்தப் பொடியை வாந்தியுடன் கலந்து, மாத்திரைகளாகத் தயார் செய்ய வேண்டும்.

இந்த மாத்திரைகளை பிளேக் பாதிக்கப்பட்ட கொப்புள பகுதியில் தாயத்து போல அணிந்துகொண்டால், அது நோய்த்தொற்றை அகற்றி, விஷத்தை வெளியேற்றும்.

இது நியூட்டன் பிளேக் நோய்க்கு கூறிய ஒரு மருத்துவசிகிச்சை முறையாகும். அவர் தன் இளமையில் ரசவாதம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட காலத்தில் எழுதப்பட்ட குறிப்பு.

நியூட்டனிடமிருந்தே நவீன அறிவியல் தொடங்கியது என்று கருதப்படுகிறது.

           படம்: நியூட்டன், விக்கிபீடியா

ப்ரோமிதியஸ் விடுதலை அடைதல்

புனிதத்திலிருந்து அறிவை நோக்கி நகரும் கிரேக்க மருத்துவ அத்தியாயத்தில் நெருப்பைத் திருடி மனிதர்களுக்கு அளித்த ப்ரோமிதியஸ், தண்டனை பெற்று மலை உச்சியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவன் கல்லீரல் பகலில் மீண்டும் மீண்டும் கழுகால் கொத்தப்பட்டு, இரவானால் அது மீண்டும் வளரும் சித்திரமும், அதன் தொடர்ச்சியாக பண்டோரா தாழியிலிருந்து நோய்கள் வெளியேறியதும் நினைவில் இருக்கலாம்.

இது பண்டைய கிரேக்க நாடக ஆசிரியர் ஈஸ்கிலஸ் எழுதிய ஒரு நாடகத் தொடரின் (Prometheia trilogy) முதல் பகுதியான Prometheus Bound-ல் வரும் கதை. இரண்டாம் பகுதியான Prometheus Unbound-ன் சில பகுதிகளும், மூன்றாம் பகுதியான Prometheus the Fire-Bringer ஆகியவையும் முழுமையாக கிடைக்கவில்லை.

கிடைத்த குறிப்புகளின்படி இரண்டாம் பகுதியில் கிரேக்க மாவீரன் ஹெர்குலிஸ் (ரோம மரபில் ஹெராக்கிள்ஸ்) அந்தக் கழுகைக் கொன்று, சங்கிலியிலிருந்து ப்ரோமிதியஸை விடுவிக்கிறார். ப்ரோமிதியஸ், ஜீயஸ் கடவுளுடன் சமரசம் செய்துகொள்வதாக வருகிறது (மூன்றாம் பாகம் கிடைக்கவில்லை).

கவிஞர்களிடையே ஒரு நியூட்டன்

கவிஞர்களிடையே ஒரு நியூட்டன் என்று அழைக்கப்பட்ட பெர்சி பைஷே ஷெல்லி 1800 களில் வாழ்ந்த கவிஞன். ஈஸ்கிலஸ் காப்பியத்தில் வரும் ஜீயஸ் – ப்ரோமிதியஸ் இடையே சமரசம் நிகழ முடியாதென அவர் கருதினார். எனவே, அவர் அந்தப் புராணத்தை மறுஆக்கம் செய்தார். ஷெல்லி எழுதிய Prometheus Unbound நாடகத்தில் ப்ரோமிதியஸ் சமரசத்தை மறுத்து துன்பத்தை ஏற்றுக்கொள்கிறார். மேலும் ஜீயஸின் எல்லையற்ற சக்தி அவனுக்கே வேதனையாக மாறும் என்றும் சாபமிடுகிறார்.

பின்னர் மனமாற்றம் அடைந்து, “நான் எந்த ஜீவனும் துன்பப்பட விரும்பவில்லை” என்று சாபத்தை மறந்துவிடுகிறார். ஆனால் ஒருகட்டத்தில் கல்லீரல் மீண்டும் மீண்டும் கொத்தப்படும் வலியில் வேதனை தாங்க முடியாமல் தன் சாபத்தை நினைவுகூறும்படி பூமியைக் கேட்கிறார். ஆனால் பூமி, ஜீயஸின் கோபத்திற்கு பயந்து சாபத்தைக் கூற மறுத்து, அதற்கு பதிலாக ஜொராஸ்டிரியன் மதத்தின் இருவகை யதார்த்தம் பற்றி கூறுகிறது.

தற்போதைய யதார்த்தம் (Current Reality) என்பதுநாம் இப்போது வாழும், கண்ணால் காணும், தொட்டு உணரும், மற்றும் தினசரி அனுபவிக்கும் பருப்பொருள் உலகம். நம் புலன்களால் அறியக்கூடிய, புறநிலைச் சட்டங்களுக்கு உட்பட்டது. புலன் உணர்வுகளின் வழியே அடையப்படும் யதார்த்தம்.

நிழல் யதார்த்தம் (Shadow Reality) என்பதுஇது மறைக்கப்பட்ட, பொதுவாக நம்மால் பார்க்க முடியாத அல்லது உடனடியாக அனுபவிக்க முடியாத ஒரு யதார்த்தம்.

இங்கு ப்ரோமிதியஸ் அனுபவிக்கும் வேதனை என்பது தற்போதைய யதார்த்தம்.

டெமோகோர்கன் (Demogorgon) என்பது மறைக்கப்பட்ட யதார்த்தம். அவசியம் (Necessity), விதி (Fate), மற்றும் நேரம் (Time) ஆகியவற்றின்  குறியீட்டு உருவகம். இது நன்மை, தீமை என்ற இருமைக்கு அப்பாற்பட்ட, மாற்றத்தை  தூண்டும், ஒழுங்கு மற்றும் படைப்பு உருவாகும் முன் பாதாளத்தில் வாழும் ஒன்றாக உருவகிகப்படுகிறது.

டெமோகோர்கன் திட்டங்கள் தீட்டி ஜீயசை இருண்ட குழியில் தள்ளி,  ப்ரோமிதியஸை விடுவிக்கிறது.

நிறுவப்பட்ட உண்மைகளின் நிலைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியே அறிவின் சமரசமற்ற  விடுதலை நிகழமுடியும் என்று முன்வைக்கிறது. அந்த விடுதலை என்பது ஒரு வீரனால் (ஹெர்குலஸ்) வரும் என்பதற்கு பதிலாக மறைக்கப்பட்ட ஆதி ஒழுங்கின்மையிலிருந்து வரலாம் என்கிறது.

இந்தக் கதை ஷெல்லியின் புனைவுதான். ஆனால் இதில் வரும் டெமோகோர்கன் உருவகம் என்பதே நான்காம் நூற்றாண்டில் ஒரு எழுத்துப்பிழை மூலம் உருவாகிய ஒன்று என்ற ஊகமும் உள்ளது.  டெமியர்ஜ் (Demiurge) என்பதைத் தவறாக எழுதியதால் உருவானது டெமோகோர்கன் என்று கருதப்படுகிறது.

டெமியர்ஜ் (Demiurge) என்பதற்கு ஒரு படைப்பாளி, வடிவமைப்பவர் என்று பொருள். பொருள்வய உலகை உருவாக்கிய தீமையின் உருவாக கருதப்பட்டது!

டெமியர்ஜ் (Demiurge) உருவகம் மதத்திலும், தத்துவத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஒன்று. அறிவு யுகத்தின் மனநிலையின் ஒரு சான்றாக இதை பார்க்கலாம்.

படம்: டெமியர்ஜ், விக்கிபீடியா

தொகுத்தறியும் தர்க்கத்தின் முரண்

டேவிட் ஹ்யூம் (David Hume 1711 – 1776) என்ற தத்துவவாதி, சென்ற அத்தியாயத்தில் பார்த்த பேக்கன் முன்வைத்த தொகுத்தறியும் தர்க்கத்தின் தர்க்கக்கட்டுமானம் குறித்து கேள்விகள் எழுப்பினார்.

P1: சர்வ வல்லமை பொருந்திய, அனைத்தும் அறிந்த கடவுள்  இருந்தால், தீமை இருக்காது.

P2: உலகில் தீமை இருக்கிறது.

C1 (முடிவு 1): எனவே, சர்வவல்லமை பொருந்திய, அனைத்தும் அறிந்த கடவுள்  இல்லை.

இந்த வாதம் மோடஸ் டோலென்ஸ் (modus tollens) எனப்படும் ஒரு தர்க்க அமைப்பைப் பயன்படுத்துகிறது. முதல் அறிமுகம் (P1) உண்மையாக இருந்தால், முடிவு (C1) தர்க்கரீதியாகப் பின்பற்றப்பட வேண்டும்.

ஆனால், இங்கு இது முரணாக இருக்கிறது.

ஹ்யூம் காரண காரியம் இரண்டுக்கும் இடையே ஒரு கட்டாயத் தொடர்பு ஒன்று உண்டு என இதுவரை ஏற்கப்பட்டு வந்த கருத்தை நிராகரித்து, காரண காரியத் தொடர்பு பற்றி அறிவதற்கு, அதன் இடையில் தொடர்புறுத்தும் எதுவுமில்லை என்ற கருத்தை முன்வைத்தார்.

இவரது கருத்து அதுவரை விஞ்ஞான விளக்கத்தின் அடிப்படையாக இருந்து வந்த காரண-காரியம் பற்றிய விளக்கத்தை தகர்த்தது.

தொகுத்து அறியும் தர்க்கமானது அனுபவத்தின் அடிப்படையில் பிரபஞ்ச பொதுமையை அடைகிறது. இங்கு காரணத்திலிருந்து காரியம் என்பது அடிப்படையில் மனித உள்ளத்தின் எதிர்பார்ப்பாக அமைகின்றன என்பதால் இந்த முடிவுகள் நிச்சயமான முடிவுகள் அல்ல. அவை வெறும் எதிர்பார்ப்புகள்.

இத்தகைய எதிர்பார்ப்புகள் ஒரு பொதுப்படையான முடிவிற்கு இட்டுச் செல்கின்றன. தவிர, தரவுகளுக்கும் முடிவுகளுக்கும் இடையே எவ்வித கட்டாயத் தொடர்பும் இல்லை. மேலும் இறந்த காலத்தினைப் போன்றே எதிர்காலமும் இருக்கும் என்பதில் எவ்வித தர்க்கக் கட்டாயமுமில்லை.

ஆனால் இந்த தர்க்கக் கட்டாயத்தன்மையை தொகுத்தறியும் தர்க்கம் நியாயப்படுத்துகிறது. இது தொடர்ச்சியான எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது. இங்கு எதுவும் காரண காரியத்தின்படி மட்டுமே இயங்குகிறது என்ற முன்முடிவே, இந்த முடிவான உண்மைக்கு நம்மைத் தூண்டுகிறது என்றார்.

உதாரணமாக,

தொகுத்து அறியும் தர்க்கத்தின்படி,

P1: நிறைய கோபமான மனிதர்களுக்கு முகம் சிவந்தும், உடல் வெப்பமாகவும் உள்ளது. இவர்கள் இரத்த வெளியேற்றும் சிகிச்சைக்குப் பின்னர் குணமாகினர்.

P2: கோபமானவர்கள் அடிக்கடி காய்ச்சலில் விழுகிறார்கள்.

C1: எனவே, காய்ச்சல் இரத்தம் ஹியுமர் அதிகமானால் வரும்.

இந்த தொகுத்து அறியும் தர்க்கமுறை காரண காரியத் தொடர்பையும், நிரூபணத்தையும் அளித்தது.

ஆனால், இங்கு ஹ்யூம் P1 மற்றும் C1 இடையே உள்ளது எதிர்பார்ப்பு தானே அன்றி உண்மை அல்ல என்று முன்வைத்தார் (ஹ்யூம், தத்துவ தளத்தில் முன்வைத்தது இங்கு புரிதலுக்காக  ஹியுமர் பயன்படுத்தி விளக்கப்படுகிறது).

ஹ்யூம், சர்வவல்லமை பொருந்திய, அனைத்தும் அறிந்த கடவுள் இருக்கும் அதே நேரத்தில், துன்பமும் (நோயும்) இருப்பது (அனுபவ யதார்த்தம்). கடவுளின் விருப்பம் உயிர்குலத்தின் மகிழ்ச்சி அல்ல அல்லது இந்த பிரபஞ்சம், அந்த நோக்கத்தில் படைக்கப்படவில்லை (நிழல் யதார்த்தம்) என்றார்.

இந்த கருத்துகளை மறுத்தும், மேம்படுத்தியும் தத்துவ தளத்தில் இம்மானுவேல் காண்ட் முதல் இன்றைய நவீன அறிவியல் முறையை முன்வைத்த கார்ல் பாப்பர் வரை விவாதங்கள் நிகழ்ந்தன.

இந்த தத்துவக்கொள்கைகள் மற்றும் அவற்றின் மீதான மறுவிளக்கங்கள் மருத்துவப்புரிதலில் பல்வேறு சாத்தியங்களை வழங்கியது. புதியதாக மருத்துவமுறைகள் வளர அதன் பின்புலமாக  பல்வேறு தத்துவக்கட்டுமானங்கள் கிடைத்தது.

ஹோமியோபதி, ஐசோபதி, ஆன்ட்டிபதி, மெஸ்மரிசம், நாச்ரோபதி, மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, கிரியோபிரேக்டிக், ஆஸ்டியோபதி, மின் சிகிச்சை, வைட்டலிசம், அலோபதி (இந்தப் பெயர் ஹோமியோபதியை உருவாக்கிய மருத்துவர் சாமுவேல் ஹானிமான் அவர்களால் அன்றிருந்த பொது மருத்துவ முறைக்கு இடப்பட்டது. இன்று, நாம் இதை நவீன மருத்துவம் என்று அழைப்பதே பொருத்தமானது) போன்றவை உருவாகக் காரணமாகியது.

மயாசம் கொள்கையை கேள்விக்குட்படுத்தல்

கொள்ளை நோய்கள் கடவுளின் கோபம் என்பதை நிராகரித்து, ஹிப்போகிரேடெஸ் அவை தூய்மையற்ற காற்றால் ஏற்படுகின்றன என்று அதற்கு மயாசம் என்று பெயரிட்டார். இறந்த உயிரினங்களின் அழுகும் உடல்களிலிருந்தும், சதுப்பு நிலங்களலிருந்தும் காற்று மாசுபடுகிறது என்று கருதினார்.

இந்த கெட்ட காற்றினால் பிளேக், காலரா, அம்மை, போலியோ போன்ற கொள்ளை நோய்கள் ஏற்படுகின்றன என்று மருத்துவ உலகம் 2000 ஆண்டுகளாக கருதியது.

ஆண்டனி பிலிப்ஸ் வான் லீவன்ஹூக் (Antonie Philips van Leeuwenhoek) நுண்ணோக்கியை 1670 களில் கண்டுபிடித்தார். முதன்முதலில் இரத்த சிவப்பணுக்களை நுண்ணோக்கி மூலம் கண்டறிந்தவர். நுண்ணுயிரிகள் பற்றி கண்டறிந்து Animalcule என்ற வார்த்தை மூலம் அவற்றை குறித்தார்.

நுண்ணோக்கி மற்றும் நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நோய்களுடன் உள்ள தொடர்பு பற்றி பெரிதாக கண்டறியப்படவில்லை. நுண்ணோக்கி  ஒரு பொழுதுபோக்கு கேளிக்கை சாதனமாக கருதப்பட்டது.

“தானாகத் தோன்றும் உயிரி” (Spontaneous Generation) என்ற கோட்பாடு, உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர் தானாகவே தோன்றும் என்ற ஒரு பழைய அறிவியல் கொள்கை. நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சூப் அல்லது பிராத் (broth) போன்ற திரவங்களில் நுண்ணுயிரிகள் தானாகவே தோன்றுவதாக மக்கள் நம்பினர்.

ஃபிரான்செஸ்கோ ரெடி (Francesco Redi 1626 – 1697), இறைச்சியை மூன்று குடுவைகளில் வைத்தார். ஒரு குடுவை திறந்திருந்தது, மற்றொன்று மெல்லிய துணியால் மூடப்பட்டிருந்தது. மூன்றாவது  இறுக்கமாக மூடப்பட்டிருந்தது.

திறந்த குடுவையில் மட்டுமே புழுக்கள் தோன்றின. மெல்லிய துணியால் மூடப்பட்ட குடுவையில், ஈக்கள் துணியின் மீது முட்டையிட்டன, ஆனால் இறைச்சிக்குள் புழுக்கள் இல்லை. இறுக்கமாக மூடப்பட்ட குடுவையில் புழுக்கள் தோன்றவில்லை. புழுக்கள் அழுகிய இறைச்சியிலிருந்து தானாகத் தோன்றவில்லை என புரிய ஆரம்பித்தது.

நோய்த்தடுப்பூசி

இஙகிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் ஜென்னர் 1796 ஆம் ஆண்டு பெரியம்மைக்கு அம்மைப்பால் குத்தும் ஊசிமுறையை முன்வைத்தார். இதுவே முதல் நோய்த்தடுப்பூசி (Vaccination) ஆக கருதப்படுகிறது.

படம்: எட்வர்ட் ஜென்னர் நோய்த்தடுப்பூசி அளித்தல், விக்கிப்பீடியா

பசுவுடன் தொடர்புடைய பால்காரர்களுக்கு பெரியம்மை தொற்று ஏற்படுவதில்லை என்று கவனித்த ஜென்னர் தன் வேலைக்காரர் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற 10 வயது சிறுவனுக்கு மாட்டின் அம்மை (cowpox) கொப்புளத்திலிருந்து எடுத்த சீழை உட்செலுத்தினார். பின்னர் அவனுக்கு பெரியம்மை (smallpox) பொருக்குகளை உட்செலுத்தியும் பெரியம்மை நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை. பின்னர் தன் மகன் உட்பட பலரிடம் சோதனை செய்து நோய்த்தடுப்பூசி முறையை முன்வைத்தார்.  பெரியம்மைக்கான நோய்த்தடுப்பு முறை புழக்கத்துக்கு வந்தது.

முதல் நோய்த்தடுப்பூசி மீது எழுதப்பட்ட சதிக்கோட்பாடு

1820 ஆம் ஆண்டு மெட்ராஸ் கூரியர்  என்ற சென்னையை தலைமையிடமாக கொண்ட செய்தித்தாளில் நோய்த்தடுப்பு குத்தூசி முறை (vaccination – உட்செலுத்தும் முறை, inoculation அல்ல) இந்து மத முறை, தமிழ் நிலத்துக்கு சொந்தமானது என்றும் ஜென்னர் செய்தது பாரம்பரிய அறிவை திருடியது என்றும் கல்வி விரும்போன் என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியாகியது. யோகா சிந்தாமணி, யூகிமுனி சிந்தாமணி, கரைச்சல் முன்னூறு (அகத்தியர்) ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது. மெட்ராஸின் தலைமை மருத்துவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்பவர் பெரியம்மைக்கு ‘அமராத்யம்’ (மாட்டுப்பால், மரணமின்மை) என்ற சொல்லை உருவாக்கினார். பிரான்சிஸ் வைட் எல்லிஸ் ‘அமரவார விலாசம்’ (கோமாரி நோய் பற்றிய புராணம்) என்ற நூலை எழுதினார்.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ், கல்வி விரும்போன் ஆக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். எல்லிஸ், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஏழாம் வேதம்/ஜீசஸ் வேதம் என்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இந்தியாவில் தொன்மையை கிருஸ்த்துவத்துடன் இணைத்த நூலை, போலி என்று கண்டுபிடித்து அறிவித்தார். திராவிடமொழிக் குடும்பம் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தார். தமிழ் நிலம் மீது மிகப்பெரிய மதிப்பு கொண்ட இவரை அயோத்திதாச பண்டிதர், தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடி என்று குறிப்பிடுகிறார்.

 பலகோடி பேரைக் கொன்றழித்த பெரியம்மை நோய் 1970 ஆம் ஆண்டு உலகிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, ஜென்னர் காலத்தில் கிருமிக்கொள்கை புழக்கத்தில் இல்லை. மேலும், அம்மைப்பால் குத்தும் (Inoculation) முறை பல நூறு ஆண்டுகளாக சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் வழக்கத்தில் இருந்தது.

வரைபடங்கள் வழியே பொது சுகாதாரம்

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale 1820 – 1910), மருத்துவமனைகளில் நிலவிய மோசமான சுகாதார நிலைமைகள் மற்றும் அதிக இறப்பு விகிதங்கள் இடையே காணப்பட்ட தொடர்பை கண்டறிந்தார்.

கிரிமியன் போரில் வீரர்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களை போலார் ஏரியா வரைபடம் (Polar-Area Diagram) அல்லது காக்ஸ்கோம்ப் விளக்கப்படம் (Coxcomb Chart) என்று புள்ளியியல் அடிப்படையில் ஒரு வரைபடம் கொண்டு சுகாதாரம் – இறப்பு விகிதம் தொடர்பை விளக்கினார். நவீன செவிலியியல், நைட்டிங்கேலிடமிருந்தே தொடங்குகிறது.

படம்: போலார் ஏரியா வரைபடம், விக்கிப்பீடியா

பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் ஸ்னோ (John Snow), 1854 ஆம் ஆண்டில் லண்டனின் சோஹோ (Soho) பகுதியில் ஏற்பட்ட காலரா பரவலை ஆய்வு செய்தார். காலரா நோயாளிகளின் இருப்பிடங்களை ஒரு வரைபடத்தில் (map) குறித்தார். இந்த வரைபடம், பெரும்பாலான நோயாளிகள் பிராட் ஸ்ட்ரீட் குடிநீர் குழாயிலிருந்து நீர் அருந்தியவர்கள் என்பதைக் காட்டியது. அந்தக்குழாயை அகற்றியவுடன், காலரா பரவல் உடனடியாக குறைந்தது.

இந்த ஆய்வு, மயாசம் கொள்கைக்கு மாற்றாக காலரா அசுத்தமான நீரால் பரவுகிறது என்பதற்கான வலுவான ஆதாரத்தை வழங்கியது. இது நவீன தொற்றுநோயியலுக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது.

நுண்ணோக்கி வழியே விரிந்த பிரபஞ்சம்

நாம் ஏற்கனவே பார்த்த கிரேக்க, சீன, ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவ முறைகள் முழு பிரபஞ்சத்தையும் தங்கள் அறிதல் முறைகளை கொண்டு மொத்தமாக பிரித்து அதன் அடிப்படையில் மனித உடலையும், மருத்துவத்தையும் வகுத்துக்கொண்டன.

ரெனே டேக்கார்ட் முன்வைத்த உடல் – மனம் இருமை கொள்கைக்கு பின் குறைத்தல்வாதம் சிந்தனை முறையில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. முழுமையை நோக்கி விரித்து செல்வதற்கு மாற்றாக அடிப்படை அலகு எது என்று அறிய குறைத்து நோக்கும் பார்வை முன்னெழுந்து வந்தது. அதன் ஒருபகுதியாக நோய்க்கான காரணம் கிருமிகளை நோக்கி நகர்ந்தது.

லூயி பாஸ்டர் (1822 – 1895), நவீன நுண்ணுயிரி துறைக்கு அடித்தளம் அமைத்தவர். பாஸ்டர் நுண்ணுயிரிகள் வளரக்கூடிய திரவத்தை நீண்ட, ‘S’ வடிவ கழுத்து கொண்ட (swan neck flask) குடுவைகளில் ஊற்றி கொதிக்க வைத்தார். பின்னர் குடுவையின் வாய் ஒரு மெல்லிய துணி கொண்டு கட்டப்பட்டது. நீண்ட காலம் கழித்தும் குடுவையிலுள்ள திரவத்தில் நுண்ணுயிரிகள் தோன்றவில்லை. ஆனால், குடுவையை ஒரு புறமாக சாய்த்து வைத்தால், தூசி மற்றும் நுண்ணுயிரிகள் திரவத்துடன் கலந்து அதைக் கெட்டுப்போக வைத்தது.

படம்: பாஸ்டர் நுண்ணுயிரிகள் சோதனை, விக்கிப்பீடியா

காற்று மட்டுமே கெட்டுப்போதலுக்கு காரணமல்ல. மாறாக காற்றில் உள்ள நுண்ணுயிரி காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை, அப்போதைய ஆதிக்கம் செலுத்தி வந்த “தானாகத் தோன்றும் உயிரி” (Spontaneous Generation) கோட்பாட்டை மறுத்து நுண்ணுயிரிகள் காற்றிலிருந்து வருகின்றன (உயிர் உள்ளவற்றிலிருந்து உயிர் வரும் – biogenesis) என்பதை நிரூபித்தது.

இந்தக் கொள்கை நேரடியாக நோய்களுக்கும் விரிவாக்கப்பட்டது. நுண்ணுயிரிகளால் ஒயின் மற்றும் பால் கெட்டுப்போக முடிந்தால், குறிப்பிட்ட நுண்ணுயிரிகளால் மனித உடலையும் கெட்டுப்போக செய்து, நோய்களை ஏற்படுத்த முடியும் என முன்வைக்கப்பட்டது.

பாஸ்டர் சிக்கன் காலரா, அந்த்ராக்ஸ் போன்றவற்றிற்கு நோய்த்தடுப்பூசிகளை கண்டறிந்தார். பிரசவத்திற்குப் பிந்தைய நோய்த்தொற்றுகளை (postpartum infections) உண்டாக்கும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் வகையில், பெண் பிறப்புறுப்புப் பாதையை போரிக் அமிலத்தால் (boric acid) கழுவி சிகிச்சையளிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இது நோய்த்தொற்றைத் தவிர்த்தது.

கிருமியும் நோயும்

ராபர்ட் கோச் (Robert Koch 1843 – 1910), ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர். 1880 களில் எகிப்திலும், இந்தியாவிலும் ஏற்பட்ட காலரா தொற்றை பாஸ்டர் குழுவும், கோச் குழுவும் தனித்தனியே ஆராய்ச்சி செய்தனர். அதன் முடிவில் கோச் காலரா பாக்டீரியாவை கண்டறிந்தார்.  காரண-காரியத் தொடர்பை நிறுவுவதற்கான நான்கு அளவுகோல்களை 1884 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அவை தற்போது  கோச்சின் கோட்பாடுகள் (Koch’s Postulates) என்று அறியப்படுகின்றன:

  1. நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் இந்த நுண்ணுயிரி பெருமளவில் காணப்பட வேண்டும், ஆனால் ஆரோக்கியமான உயிரினங்களில் இது காணப்படக்கூடாது.
  2. நோயுற்ற உயிரினத்திலிருந்து நுண்ணுயிரி தனிமைப்படுத்தப்பட்டு, தூய வளர்ப்பில் (pure culture) வளர்க்கப்பட வேண்டும்.
  3. வளர்க்கப்பட்ட நுண்ணுயிரி ஆரோக்கியமான உயிரினத்திற்குள் செலுத்தப்படும்போது நோய் ஏற்படுத்த வேண்டும்.
  4. நோயுற்ற சோதனை விலங்கிலிருந்து நுண்ணுயிரி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு, அசல் நோய்க்காரணியுடன் ஒத்ததாக அடையாளம் காணப்பட வேண்டும்.

இருப்பினும், மயாசம் கொள்கையே மேக்ஸ் வான் பெட்டன்கோஃபர் (Max von Pettenkofer) என்ற விஞ்ஞானியால் முன்னிறுத்தப்பட்டது. கிருமிகளைத் தவிர பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளும் நோய்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்று அவர் வாதிட்டார்.

அக்டோபர் 7, 1892 அன்று ஒரு பிரபலமான சுய பரிசோதனையை மேற்கொண்டார். ராபர்ட் கோச்சிடமிருந்து நேரடியாகப் பெற்ற அதிக அளவிலான விப்ரியோ காலரே பாக்டீரியா கலந்த திரவத்தை (bouillon) அருந்தினார். வயிற்று அமிலம் பாக்டீரியாவைக் கொல்லக்கூடும் என்ற கோச்சின் கருத்தை எதிர்கொள்ள, பெட்டன்கோஃபர் தனது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்க பைகார்பனேட் சோடாவையும் உட்கொண்டார்.

படம்: காலரா பரவல், விக்கிப்பீடியா

ஆச்சரியப்படும் விதமாக, பெட்டன்கோஃபருக்கு காலரா நோய் ஏற்படவில்லை, அவர் உடல்நலக்குறைவும் அடையவில்லை. இந்த சர்ச்சைக்குரிய நிகழ்வு, விப்ரியோ காலரே பாக்டீரியாதான் காலரா நோயை ஏற்படுத்தும் ஒரே காரணம் என்ற கோச்சின் உறுதியான கூற்றுகள் மீது ஒரு  சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நோயின் காரணம் கிருமியா அல்லது சூழலா ?

நுண்ணுயிரியியல் வரலாற்றில், பல வடிவக் கோட்பாடு (Pleomorphism) மற்றும் ஒற்றை வடிவக் கோட்பாடு (Monomorphism) ஆகியவற்றுக்கு இடையேயான விவாதம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்தக் கோட்பாடுகள் நுண்ணுயிரிகளின் வடிவம் மற்றும் நடத்தை பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பின.

ஒற்றை வடிவக் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட கிருமி, ஒரே வடிவில் இருக்கும் என்று முன்வைத்தது. நுண்ணுயிரிகளை அடையாளம் காணவும், வகைப்படுத்தவும், நோய்களைக் கண்டறியவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையை வழங்கியது. இது நவீன மருத்துவ நுண்ணுயிரியியலின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமைந்தது. இன்றும் இதுவே பெரும்பாலான நுண்ணுயிரிகளுக்குப் பொருந்தும் ஒரு பொதுவான விதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பல வடிவக் கோட்பாடு (Pleomorphism) சில நுண்ணுயிரிகள் அவற்றின் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப தங்கள் வடிவம், அளவு மற்றும் சில சமயங்களில் இனப்பெருக்க முறையைக் கூட மாற்றிக்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கின்றன என்று முன்வைத்தது. ஊட்டச்சத்து குறைபாடு, pH அளவு மாற்றம், வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு சுற்றுச்சூழல் அல்லது நுண்ணுயிர்க்கொல்லிகளின் இருப்பு போன்ற காரணங்களால் ஒரே வகையான நுண்ணுயிரிகள் பல்வேறு வடிவங்களில் தோன்றலாம் (உதாரணமாக Corynebacterium diphtheriae, Helicobacter pylori, …போன்றவை).

அன்டோயின் பீச்சம்ப் (Antoine Béchamp) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி, லூயி பாஸ்டருடன் முரண்பட்டு “நிலப்பரப்புக் கோட்பாடு” (Terrain Theory) அல்லது “செல்லுலார் கோட்பாடு” (Cellular Theory) என்பதை முன்வைத்தார். மைக்ரோசைமாக்கள் என்ற மிக நுண்ணிய துகள்களைக் உயிரின் அடிப்படை அலகுகள் என்றும், உடலின் உள் சூழல் ஆரோக்கியமாக இருக்கும்போது இவை உடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்றும், ஆனால் சூழல் ஆரோக்கியமற்றதாக மாறும்போது அவை நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களாக மாறலாம் என்றும் கருதினார்.

ஆனால் தற்சமயம் வரை கோச் முன்வைத்த நுண்ணுயிரியியல் மற்றும் ஒற்றை வடிவக் கோட்பாடு முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.

நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics)

ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர் பால் எர்லிச் (Paul Ehrlich) சில சாயங்கள் (Dyes) மனித, விலங்கு மற்றும் பாக்டீரியா செல்களுக்கு வண்ணம் பூசும், மற்றவை பூசாது என்பதை கண்டறிந்தார். இதன் மூலம் இந்த செல்களை பிரித்தறிய முடியும். மனித உடல் செல்களுக்கு தீங்கு விளைவிக்காமல், பாக்டீரியாவைக் கொல்லும் ஒரு மருந்தை உருவாக்க முடியும் என்று முன்வைத்தார்.

1907 ஆம் ஆண்டு சிபிலிஸ் நோய்க்கான ஆர்செனிக்கை அடிப்படையாகக் கொண்ட சல்வார்சன் (Salvarsan/Arsphenamine) என்ற எதிர் நுண்ணுயிரி மருந்து உருவாக்கப்பட்டது.

அதன்பின் 1928 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ஃபிளெமிங், பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட பெனிசிலின் என்ற எதிர் நுண்ணுயிரி மருந்தை கண்டறிந்தார்.

படம்: பென்சிலின், விக்கிப்பீடியா

கிருமிக்கொள்கைக்கு முன்னரே, அது பற்றிய கருத்து உருவகங்கள் மற்றும் மருந்துகள் பற்றி பல்வேறு மருத்துவமுறைகளில் காணக்கிடைக்கிறது.

1980 களில், மானுடவியலாளர் ஜார்ஜ் ஆர்மெலாகோஸ், பொ யு. 350 மற்றும் 550 க்கு இடைப்பட்ட நூபிய (இன்றைய சூடான் பகுதி)  மனித எலும்புகளில் டெட்ராசைக்ளின் என்ற ஆன்டிபயாடிக் படிந்து  இருப்பதை கண்டறிந்தார். முதலில் இது அறியாமல் உட்கொண்டதாக  இருக்கலாம் என்று கருதப்பட்டது. அவர்கள் பீர் தயாரிக்கப் பயன்படுத்திய தானியத்தில், டெட்ராசைக்ளின் உற்பத்தி செய்யும் பாக்டீரியாவான ஸ்ட்ரெப்டோமைசஸ் பாக்டீரியா இருந்திருக்கலாம், அது மண்ணில் ஒட்டிக்கொண்டு இருந்திருக்கலாம் என்று எண்ணப்பட்டது. ஆனால் குழந்தைகள் எலும்புகளிலும் அதிகளவு டெட்ராசைக்ளின் இருந்தது, அவர்கள் அதை பயன் கருதி உட்கொண்டிருக்கலாம் என்ற கருதுகோளுக்கு கொண்டு சென்றது1.

இருமை நோக்கின் வழியே அறிவியலின் துயரம்

 விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன் என்ற விஞ்ஞானி, அறிவியல் கொள்கைகள் மீது பற்று கொண்டு ஆய்வகத்தில் ஒரு புதிய மனிதனை உருவாக்கக் கனவு கண்டார். பழைய எலும்புகளையும், மனித உடல் உறுப்புகளையும் சேகரித்து ஆய்வகத்தில் மின்சாரம் கொண்டு ஒரு மனித உயிரை உருவாக்கினார். அவன் 8 அடி உயரத்தில் மிக கோரமாக இருந்தான். தன் படைப்பு குறித்த அச்சத்தால், அருவெறுப்பால் அங்கிருந்து தப்பித்து விடுகிறார் ஃபிராங்கென்ஸ்டைன்.

படைத்தவன் கைவிட்ட நிலையில், ராட்சசன் பல்வேறு கொலைகளை செய்கிறான். அதில் ஃபிராங்கென்ஸ்டைன் குடும்ப உறுப்பினர்களும் உண்டு. எனவே ராட்சசனை அழிக்க ஃபிராங்கென்ஸ்டைன் புறப்படுகிறார். இருவரும் சந்திக்கும்போது ராட்சசன், அவரை சமாதானப்படுத்தி அவனின் இந்த நிலைக்கு அவரே காரணம் என கூறுகிறான். மேலும் தனக்கு ஒரு பெண் துணையை உருவாக்கி அளித்தால் தான் தொந்தரவு தராமல் கண்காணாத தூரத்தில் சென்று வாழ்வதாக வாக்களிக்கிறான். ஒரு பெண்ணை ஆய்வகத்தில் உருவாக்க முயலும் ஃபிராங்கென்ஸ்டைன், தன் முந்தைய படைப்பான ராட்சசனின் செயல்களை நினைத்து அந்த முயற்சியை கைவிடுகிறார். இதனால் கோபம் கொள்ளும் ராட்சசன் அவரை பழிவாங்க முடிவு செய்கிறான்.

இறுதியில் ஃபிராங்கென்ஸ்டைன் இறக்கையில், அசுரன் அவர் அறையில் தோன்றி தன் செயல்களின் பின்னுள்ள நியாயத்தை மீண்டும் விவரிக்கிறான். அவர் இறந்த பின், அசுரனும் வடதுருவம் சென்று தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.

உண்மையில், இந்த கதையில் அசுரனுக்கு பெயர் அளிக்கப்படவில்லை. ஆனால் விஞ்ஞானி விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன் பெயரே அந்த அசுரன் பெயராக பொதுமனதில் பதிந்துவிட்டது என்பது ஒரு நகைமுரண்.

படம்: ஃபிராங்கென்ஸ்டைன் ஆய்வகம், விக்கிப்பீடியா

இது மேரி ஷெல்லி எழுதிய ஃபிராங்கென்ஸ்டைன்: நவீன ப்ரோமிதியஸ் நாவலின் சுருக்கப்பட்ட கதை வடிவம். இவர் பெர்சி பைஷே ஷெல்லியின் மனைவி. ஷெல்லியும், மேரி ஷெல்லியும் “உயிர்வாதம்” (Vitalism) என்ற சிந்தனைக் குழுவில் இருந்தனர். இது, அனைத்து உயிரினங்களையும் ஒரு மர்மமான “உயிர் சக்தி” இயக்குகிறது, ஒரு உயிருள்ள, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிரபஞ்சம் என்ற கருத்தை முன்வைத்த ஒரு குறுங்குழு ஆகும்.

ஒருகட்டத்தில் நாவலின் உச்ச உணர்ச்சியாக திரண்டு வருவது அசுரன் ஃபிராங்கென்ஸ்டைனை பார்த்து “ நான் என்னை உருவாக்க சொல்லி உன்னை கேட்டேனா? என்ற உணர்வு. நாவலின் மேற்கோளாக ஜான் மில்டன் எழுதிய இழந்த சொர்க்கத்தின் (paradise lost) கவிதை வரிகள்

“நான் உன்னை உருவாக்கச் சொல்லி கேட்டேனா? இருளில் இருந்து என்னை வெளிக்கொண்டுவர நான் உன்னை அழைத்தேனா?”

பயன்படுத்தப்பட்டுள்ளது.

உடலை உருவாக்கும் நோக்கில் மனதை, அதன் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்ட படைப்புச்செயல் அழிவை கொண்டு வந்தது என்பதும், ஃபிராங்கென்ஸ்டைனின் துயரம் என்பது தன்னை மீறிய சக்தியால் உருவாகவில்லை மாறாக தன் அறிவின் மீது கொண்ட கட்டற்ற தன்மையால் ஆய்வகத்தில் இருந்து உருவாகி வந்தது என்பதும் இன்று வரை நமக்கு ஒரு மாபெரும் குறியீடாகும்.

பெர்சி பைஷே ஷெல்லியின் பார்வையில், கவிஞரும் விஞ்ஞானியும் எதிரெதிரானவர்கள் அல்ல, மாறாகப் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கண்டறியும் ஒரு பொதுவான நோக்கத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள்.

கலை வாழ்வின் மரம். அறிவியல் மரணத்தின் மரம்

வில்லியம் பிளேக் ஷெல்லியின் சமகால ஓவியர், கவிஞர். ரெனே டேக்கார்ட் தொடங்கி, ஐசக் நியூட்டன் மற்றும் ஜான் லாக் போன்றவர்களுடன் உச்சம் அடைந்த தத்துவ மரபை, மனித ஆற்றலைக் கட்டுப்படுத்தும் ஒரு அழிவு சக்தியாக அவர் பார்த்தார்.

பிளேக்கின் ஒட்டுமொத்த உலகப் பார்வையும், இருமைக் கோட்பாட்டை நிராகரித்து மனிதனை ஒரு பிரிக்க முடியாத முழுமையாகப் பார்த்தது. உலகத்தைப் பார்க்கும் குறுகிய, நேரடியான மற்றும் முற்றிலும் உடல்ரீதியான வழிக்கு மாறாக, உடல், உணர்ச்சி, கற்பனை மற்றும் ஆன்மீக பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த, தெய்வீக வழியை முன்வைத்தார்.

கற்பனை என்பது மனதின் ஒரு இரண்டாம் நிலை ஆற்றல் அல்ல, மாறாக தெய்வீக மற்றும் படைப்பு சக்தியின் மூலமாகும். வெளிப்புற உலகம் என்பது உள் மன, கற்பனை உலகின் ஒரு “நிழல்” என்று அவர் நம்பினார். பகுத்தறிவிற்கு முக்கியத்துவம் அளித்த டேக்கார்ட்டின் செயல், இந்த படைப்பு சக்திக்கு எதிரான ஒரு துரோகம் என்று பிளேக் கருதினார்.

மனித ஆன்மாவைப் பிளவுபடுத்தி, உலகத்தை ஆன்மீகமற்றதாக ஆக்கிய பகுத்தறிவு மற்றும் இருமைக் கோட்பாடுகளுக்கு எதிராக, கற்பனை மற்றும் ஆன்மீக ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார்.

அறிவியல் ஆய்வுகளை சந்தேகத்துடன் பார்த்த பிளேக், ஐசக் நியூட்டனை நிர்வாணமாகவும், முழு கவனத்துடனும், குறுகிய பார்வையுடனும் இருக்கும் ஒருவராக ஒரு ஓவியம் வரைந்தார்.

கலைகளின் வழியே அறிவியல் என்ற சித்திரம் உருவாகும் சென்ற அத்தியாயத்தில் இருந்து, அறிவியலில் இருந்து கலை பிரியும் ஒரு காலகட்டத்தின் முடிவாக இந்த நியூட்டனின் ஓவியத்தை எடுத்து கொள்ளலாம். தூய அறிவியல் என்பது மருத்துவத்திற்கு அடித்தளமாக அமையப்போகிறது.

படம்: பிளேக் வரைந்த நியூட்டன், விக்கிபீடியா

ப்ரோமிதியஸ் கதையின் தொடர்ச்சியாக பண்டோரா தாழியில் இருந்து நோய்கள் வெளியேறியது. நம்பிக்கை மட்டும் வெளியேறாமல் இருந்தது என்றும் பார்த்தோம். ஏன் நம்பிக்கை, நோய்களோடு ஒன்றாக இருந்தது? ஒருவேளை நம்பிக்கையும் வெளியேறி இருந்தால் மனிதகுலம் நம்பிக்கை மற்றும் நோய் என்ற இருமையிலிருந்து முற்றிலும் விடுபட்டு இருக்குமா?

 

சான்றாதாரங்கள்

  1. https://pubmed.ncbi.nlm.nih.gov/7001623/

மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்

10. மீண்டெழல் 12. என்றென்றும் நிலைத்திருப்பது  

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.