- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
கறுப்பு மரணம்
ஐரோப்பிய கண்டத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு (நகர்ப்பகுதியில் இரண்டில் ஒரு பங்கு) மக்களை கொன்று குவித்த 1346 முதல் 1353 வரை ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய் பியூபோனிக் பிளேக். இதற்கு முன்னும் பிளேக் மனித இனத்தை கொன்று குவித்தது. இதன் பின்னும் 500 ஆண்டுகள் தொடர்ந்தது.

ஜியோவன்னி போக்காசியோ Giovanni Boccaccio எழுதிய டெகாமெரான் (The Decameron) சிறுகதை தொகுப்பில் 7 பெண்களும், 3 ஆண்களும் பிளேக் பரவலின் போது பிளாரன்ஸ் நகரை விட்டு வெளியேறி ஒரு கிராமத்தில் தங்குகின்றனர். இது அங்கு பொழுதை போக்க தினமும் 10 கதைகள் என்று 10 நாளில் சொன்ன நூறு கதைகளின் தொகுப்பு. அதன் முன்னுரையில் ஜியோவன்னி பிளேக் நிலையை வர்ணிக்கிறார்.
“1348 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற பிளாரன்ஸ் நகரத்தில், விண்மீன்களின் மாற்றத்திலானோ அல்லது கடவுளின் கடும்கோபமோ மரணமென்ற பேரழிவு மனித சமூகத்தை பீடித்தது. உலகத்தின் பல பகுதிகளில் உயிர்களை அழித்துவிட்டு, அந்த நோய் இத்தாலிக்குள் நுழைந்து, அதன் ஒவ்வொரு நகரத்தையும் கொடூரமாக தாக்கியது.
மருத்துவர்கள் தங்களுடைய அறிவையும், மருந்துகளையும் பயன்படுத்தி பல வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் நோய் எதையும் கண்டு கொள்ளவில்லை. தங்கள் சுயபாதுகாப்புக்காக, அவர்கள் சில நேரங்களில் நோயாளிகளை பார்ப்பதையே தவிர்த்தனர்.
இத்தனை பேர்கள் இறந்து கொண்டிருந்தபோதும், மக்கள் தங்களது அன்பினை, இரக்கத்தையும் இழந்து விட்டார்கள். தாய் தன் பிள்ளையையும், கணவன் தன் மனைவியையும் விட்டுவிட்டு ஓடினர்.
இருப்பினும், ஒரு சிலர் தங்களது வாழ்க்கையை விருந்துகளும், வேடிக்கைகளும் கொண்டு நடத்தினர். “நாம் இறக்க முடியாது” என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தனர்.
இன்னொரு பக்கம், ஒரு சிலர் தங்களை முற்றிலும் தனிமைப்படுத்திக் கொண்டு, தவறான உணவுகளையும் பழக்கங்களையும் தவிர்த்து, கடவுள் மீது பக்தியுடன் வாழ முயற்சி செய்தனர்.
நகரம் வெறிச்சோடி போனது. சாலைகளில் வெறியர்கள் மட்டுமே இருந்தனர். பிறந்த குழந்தைகள் யாராலும் கவனிக்கப்படவில்லை. கடவுளின் சபைகள் மூடப்பட்டன. இறந்தவர்களை நினைத்துக்கூட யாரும் அழவில்லை”.
இருண்ட காலத்தில் எழுதப்பட்ட ஜியோவன்னி போக்காசியோயின் டெகாமெரான் கதைகள் மானுடத்தின் உச்ச உணர்வுகளை முன்வைத்தன. அதேசமயம் அன்றிருந்த அதிகாரங்களை பகடி செய்தன. கடவுளுக்கு எதிரானது என்றும் பாவத்தை பரப்புவது என்றும் சவர்னரோலா (Girolamo Savonarola) என்ற மதகுருவால் 1497 ஆம் ஆண்டு பொதுஇடத்தில் எரிக்கப்பட்டது.
உத்தரிக்கும் ஸ்தலம் (Purgatory) – மீட்பு (Indulgence)
கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கும் முன் ஒழுங்கின்மை இருந்தது. கடவுள் உலகை உருவாக்கி ஒழுங்கை கொண்டுவந்தார் என்பது ஆபிரகாமிய மதங்களின் பொது நம்பிக்கையாக இருந்தது. முதல் மனிதர்கள் நோயும் மரணமுமின்றி இருந்தனர். முதல் பாவத்தின் (ஞான மரத்தின் கனியை உட்கொண்டது) மூலம் உழைப்பும், நோயும், இறப்பும் மனிதர்களுக்கு வந்து சேர்ந்தது.
மனிதன் அடிப்படையில் பாவ இயல்பு உடையவன். புவியில் செய்யும் நற்செயல்கள் மூலம் அவன் தன் பாவத்தை களைந்து சொர்க்கத்தை அடைகிறான் என்று கருதப்பட்டது.
மாறாக, இந்த புவியில் வாழும் காலத்தில் பரிகாரங்களைத் தேடாதவன், இறந்தபின்பு உத்தரிக்கும் ஸ்தலம் (Purgatory) என்ற இடைப்பட்ட இடத்தில் தீயினால் பாவங்கள் சுத்திகரிக்கப்படுகிறான்.
அரசாங்கங்களும், மருத்துவமும் பிளேக் நோயை தடுக்கவோ, விளக்கவோ முடியாமல் திணறின. நோயின் காரணம் கிரகங்களின் மற்றும் விண்மீன்களின் நிலை, பல்வேறு இன குழுக்கள் முக்கியமாக யூதர்கள், பயணிகள், தொழுநோய் கொண்டவர்கள் என்று திரும்பியது. அவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இன்னொருபுறம் கடவுளின் மீது விசுவாசமற்றவர்களுக்கான தெய்வீக தண்டனையாகக் கருதப்பட்டது. கடவுளால் அனுப்பப்பட்டதாக நம்பப்படும் ஒரு நோயைத் தடுக்கவோ அல்லது சிகிச்சையளிக்கவோ முயற்சி செய்யகூடாது என்று மத அறிஞர்கள் எச்சரித்தனர். பாவமன்னிப்பு மீட்பு அளிக்கும் என்றும் நம்பப்பட்டது. பிளேக் நோயைத் தாங்கிக் கொள்வது சொர்க்கத்திற்கான ஒரு வழியாகக் கருதப்பட்டது.
பிளேக் நோய் பரவலின் போது, பாவத்தின் விளைவாக நோயும் மரணமும் நிகழும்போது, பூமியில் பாவ நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு இழக்கப்படுகிறது. எனவே உத்தரிக்கும் ஸ்தலத்தில் அதிக காலம் இருக்க நேரும் என்ற பயமும் ஏற்பட்டது. இதை சரிசெய்ய, அந்த தண்டனைக் காலத்தை குறைக்க போப் அளிக்கும் பட்டயங்கள் (Indulgences) விலைக்கு விற்கப்பட்டன. பின்னர் இந்த பட்டயங்களை கேள்விக்கு உட்படுத்தியே மார்டின் லூதர் சீர்திருத்தத்தை முன்வைத்தார்.

தாந்தே அலிகியேரி (Dante Alighieri) எழுதிய டிவைன் காமெடி காப்பியத்தில் நரகம் (inferno), உத்தரிக்கும் ஸ்தலம், சொர்க்கம் (Paradiso) என்று மூன்று பாகங்கள் வருகின்றன. அதில் தாந்தே, விர்ஜில் என்ற தேவதையுடன் ஏழு அடுக்குகளிலான உத்தரிக்கும் ஸ்தலம் வழியே சென்று ஆன்ம சுத்தி அடைவது விவரிக்கப்படுகிறது.
ஆதி மனிதனின் வெளிப்புற விஷங்களை நீக்க மேற்கொண்ட Purging என்ற முறையிலிருந்து, பாவ மீட்பு உருவகமாக வளர்ந்து இன்று இணைய வருகைக்குப் பின் எங்கும் கண்ணில் காணக்கிடைக்கும் டீடாக்ஸ் (detox) முறைகள் வரை ஒரு நீண்ட சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.
பிளேக் நோய் சிகிச்சை முறைகள்
விக்கரி முறை (Vicary Method) என்பது மருத்துவர் தாமஸ் விக்கரி (Thomas Vicary) என்பவரால் முன்வைக்கப்பட்ட ஒரு பிரபலமான சிகிச்சை. ஒரு கோழியை எடுத்து அதன் முதுகு மற்றும் பின் பகுதி தோலை உரித்து பிளேக் கொப்புளங்கள் மீது வைத்து கட்டிவிட வேண்டும். கோழி நோய் அறிகுறியை காட்டும்போது அது உடலில் இருந்து நோயை எடுத்துவிட்டதாக கருதப்பட்டது. அப்போது கோழியை எடுத்து கழுவிவிட்டு மீண்டும் வைத்து கட்டவேண்டும். இந்த சிகிச்சை கோழி அல்லது நோயாளி இறக்கும் வரை தொடரப்பட்டது.
நான்கு திருடர்களின் வினிகர் என்ற மருந்து சைடர், வினிகர் மற்றும் பல்வேறு மூலிகைகள் கலந்த ஒரு கஷாயம். கருப்பு மரணத்தின் போது இறந்த நோயாளிகளின் வீடுகளில் கொள்ளையடித்த நான்கு திருடர்கள் பிடிபட்டபோது, அவர்கள் தங்களை நோயிலிருந்து காத்துக்கொள்ள பருகிய இந்த ரகசிய மருந்தை பிடித்தவர்களிடம் சொல்லி தப்பித்துக் கொண்டனர் என்று ஒரு கதை பரப்பப்பட்டது.
சிறுநீரும், மலமும் மேல் பூச்சாக உபயோகப்படுத்தபட்டன. அதன் வழியே மேலும் கிருமித்தொற்று ஏற்பட்டு மக்கள் இறந்தனர்1. நெருப்பின் அருகே அமர்ந்து உடலின் வியர்வையை வெளியேற்றுவது உடலிலிருந்து நோயை வெளியேற்றும் என்று நம்பப்பட்டது.
கழிவுநீர் சாக்கடைகளின் மீது அமர்ந்து கொண்டால், அதிலிருந்து வரும் பெரிய கெட்ட காற்று, உடலிலுள்ள சின்ன கெட்ட காற்றை கவர்ந்து இழுத்து விடும் என்றும் கருதப்பட்டது (மயாசம் கொள்கை).
வசதியானவர்கள், தேரியக் (Theriac) என்ற அபினும் பல்வேறு மூலிகைகளும் கலந்த சர்வரோக நிவாரணியை எடுத்துக்கொண்டனர். அதன் விலை கட்டுக்கடங்காமல் இருந்தது. அதை வாங்க முடியாதவர்கள் நிறைய பேர் மரகதம், ஆர்செனிக், பாதரசம் போன்றவறறை அரைத்துக் குடித்து இறந்தும் போனார்கள்.
பியூபோனிக் பிளேக், மங்கோலியா பேரரசின் வீழ்ச்சி மற்றும் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.
ஜெர்மனியில், 1440 ஆம் ஆண்டுவாக்கில், பொற்கொல்லர் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் நகரும் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார், இது அச்சுப் புரட்சியைத் தொடங்கியது. கையால் அச்சிடுவதன் மூலம் நாற்பது பக்கங்களையும், கையால் நகலெடுப்பதன் மூலம் சில பக்கங்களையும் மட்டுமே அச்சிட முடிந்த நிலையில் ஒரு நாளில் 3,600 பக்கங்கள் வரை இதன் மூலம் அச்சிட முடிந்தது. இது புத்தகங்கள் பதிப்பதை, அனைவருக்கும் எளிதாக கொண்டுசென்று சேர்க்க ஆரம்பித்தது.
கலைகளின் வழியே
லாரன்சோ கிபெர்ட்டி என்ற இத்தாலிய சிற்பி புளோரன்ஸ் பாப்டிஸ்டரிக்கு உருவாக்கிய இரண்டு வெண்கல கதவுகள் மூலம் மறுமலர்ச்சியின் வாயில் திறந்தது. பின்னாளில் மைக்கேலேஞ்சலோ அவற்றை சொர்க்கத்திற்கான கதவுகள் என்றார்.
கலைகளில் ஏற்படத் தொடங்கிய இந்த மாற்றம் மருத்துவ வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இதற்கு முன் மருத்துவம் கற்க எந்த மாதிரி படங்கள் வரையப்பட்டு இருந்தன என்று தெரிந்துகொள்வது மேலதிக புரிதலை அளிக்கும். உதாரணமாக கீழ்காணும் படம் மனித உடற்கூறு பற்றி விவரிக்கும் ஒரு படம்:

இது தெளிவற்ற, சமச்சீரற்ற படம் என்பதும், இதைக்கொண்டு உடலமைப்பை புரிந்துகொள்வது தவறான புரிதலை அளிக்கக்கூடும் என்றும் உணரலாம்.
மாறாக , மனித உடல் மற்றும் உறுப்புகள் இடையே இருக்க வேண்டிய விகிதம் மற்றும் உண்மைக்கு நெருக்கமான கலை வடிவம் போன்ற கருத்துகள் இவற்றை மாற்றி அமைக்க ஆரம்பித்தன.
லியோனார்டோ டாவின்சி 1490 ஆம் ஆண்டு வரைந்த vitruvian man என்ற ஓவியம் அதன் தொடக்கம் எனக் கூறலாம். இது மனித உடல் உறுப்புகள் ஒரு சட்டகத்தில் வரையப்படும்போது அவற்றிற்கிடையேயான சரியான சமச்சீர் விகிதங்களை தொடங்கி வைத்தது.

தொடர்ந்து அவர் உருவாக்கிய மனித உடலமைப்பு தொடர்பான படங்கள் மிக மேம்பட்ட புரிதலை அளிக்க ஆரம்பித்தன.

இதைத் தொடர்ந்து, ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் (Andreas Vesalius) 1543 ஆம் ஆண்டு “மனித உடலின் அமைப்பு பற்றிய ஏழு நூல்கள்” (De Humani Corporis Fabrica Libri Septem) வெளியிட்டார்.
இந்த நூலில் கேலன் சொன்ன பெரும்பாலான மனித உடல் பற்றிய விவரங்கள் தவறு என கண்டறியப்பட்டன. இரத்த நாளங்கள் கல்லீரலிலிருந்து தோன்றுகின்றன, மனித கீழ்த்தாடை இரண்டு பகுதிகளாக உள்ளது (உண்மையில், அது ஒரு பகுதியாகதான் உள்ளது) மற்றும் ஆண்களுக்கு பெண்களை விட குறைவான விலா எலும்புகள் உள்ளன போன்ற மற்ற பிழைகளும் சரி செய்யப்பட்டன.
மேலும் இது பைபிளின் கருத்திலிருந்து முரண்பட்டது. ஆண்களுக்கு பெண்களை விட ஒரு விலா எலும்பு குறைவாக உள்ளது, ஆதாமின் எலும்பில் இருந்து ஏவாள் உருவாக்கபட்டார் என்ற நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது.

பராசெல்சஸ்
பராசெல்சஸ் (Paracelsus) பொ யு 1493 – 1541 வாழ்ந்த புகழ்பெற்ற ஸ்விஸ் ஜெர்மானிய மருத்துவர், தாவரவியலாளர், ரசவாதி, ஜோதிடர் மற்றும் மறைபொருள்வாதி. அவரின் முழுப்பெயர் பிலிப்பஸ் அரியோலஸ் தியோஃப்ராஸ்டஸ் பொம்பாஸ்டஸ் வான் ஹோஹென்ஹெய்ம் (Philippus Aureolus Theophrastus Bombastus von Hohenheim). செல்சஸ் (முதல் நூற்றாண்டு மருத்துவர்) ஐ விட மேம்பட்டவர் என தனக்குத்தானே பராசெல்சஸ் என்று பெயரிட்டுக்கொண்டார்.
பெராரா பல்கலைக்கழகத்தில் 1516 ஆம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்ற பிறகு இத்தாலி தொடங்கி பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்காண்டிநேவியா, போலந்து, ரஷ்யா, ஹங்கேரி, குரோஷியா, கான்ஸ்டான்டினோபிள், எகிப்து வரை பயணங்களில் அலைந்து திரிந்தார். பயணங்களின் வழியே வாழ்க்கை மற்றும் மரணத்தின் பொருள், ஆரோக்கியம், நோய்க்கான காரணங்கள் (உள் சமநிலையின்மை அல்லது வெளிப்புற சக்திகள்), உலகில் மற்றும் பிரபஞ்சத்தில் மனிதர்களின் இடம், மற்றும் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு போன்ற பல்வேறு தத்துவ புரிதல்களை அடைய முற்பட்டார்.
பின்னர் பாசல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்து மருத்துவம் கற்பிக்க ஆரம்பித்தார். பாசல் பல்கலைக்கழகத்தில் (Basel university) அவர் அளித்த விரிவுரைகள் வழக்கத்திற்கு மாறாக லத்தீன் மொழிக்குப் பதிலாக ஜெர்மன் மொழியில் வழங்கப்பட்டன. தனது விரிவுரைகள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்று அவர் கூறினார்.
சவரத் தொழிலைச் செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (barber-surgeons), இரசவாதிகள் (alchemists), மருந்துக் கடைக்காரர்கள் (apothecaries) மற்றும் கல்விப் பின்னணி இல்லாத மற்றவர்களை அழைத்து வந்து மருத்துவம் கற்பித்தார். ஒரு கலையை செய்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும், மாறாக பாடப்புத்தகங்களை மட்டும் படிப்பதன் மூலம் அல்ல என்றும், “நோயாளிகளே உங்கள் பாடப்புத்தகம், படுக்கையே உங்கள் ஆய்வுக்கூடம்” என்றும் கூறினார்.
1527 ஆம் ஆண்டு கேலன் மற்றும் அவிசென்னா புத்தகங்களை உண்மைக்குப் புறம்பானவை என்று பொதுவெளியில் தீயிட்டு கொளுத்தினார்.
நவீன ரசவாதத்தின் தொடக்கம்
பராசெல்சஸைப் பொறுத்தவரை, உடல் உறுப்புகள் ரசவாத முறையில் செயல்படுகின்றன. அவை உட்கொள்ளும் உணவிலிருந்து தூய்மையானவற்றை பிரித்தெடுக்கின்றன. இந்த செயல்முறையே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை என்று அவர் நம்பினார். இதன் மூலம், நோய் என்பது உடலின் ரசவாத வேதியியல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒரு குறைபாடு அல்லது வெளிப்புற காரணிகளால் ஏற்படும் இடையூறு என்றும், இதைச் சரிசெய்ய குறிப்பிட்ட ரசாயன மருந்துகள் தேவை என்றும் கருதினார்.
பராசெல்சஸ், பாரம்பரிய நான்கு ஹியுமோரல் கோட்பாட்டை நிராகரித்து, மூன்று ப்ரிமா (Tria Prima) கோட்பாட்டை முன்வைத்தார். இந்த பிரபஞ்சம் முழுவதும் இவற்றால் ஆனது என்றார்.
மூன்று ப்ரிமா என்பது,
- உப்பு (Salt): ஸ்திரத்தன்மை, திடம் மற்றும் உடலின் அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.
- கந்தகம் (Sulphur): எரியக்கூடிய தன்மை, ஆவியாகும் தன்மை மற்றும் ஆன்மா அல்லது ஆவியைக் குறிக்கிறது.
- பாதரசம் (Mercury): திரவத்தன்மை, எளிதில் ஆவியாகும் தன்மை மற்றும் மனம் அல்லது உயிரின் அசைவுகளைக் குறிக்கிறது.
உப்பு என்பது உடம்பு, கந்தகம் என்பது ஆன்மா, பாதரசம் என்பது உணர்வு.
நோயை அவர், இந்த மூன்று தன்மைகளில் ஒன்று மற்ற இரண்டிலிருந்து பிரிவதாலோ அல்லது சமநிலையற்ற நிலையிலோ ஏற்படுகிறது என்று வரையறுத்தார்.
இரத்த வெளியேற்று முறை (bloodletting) உடலின் இணக்கமான அமைப்பைக் குலைப்பதாகவும், இரத்தத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஹியுமர் சம்நிலையை கொண்டுவர முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
மூலிகைகளின் குறியீடு (Doctrine of Signature)
ஹிப்போகிராடஸ் முதல் தொடர்ந்து வந்தாலும் பராசெல்சஸ் விரிவான கட்டுமானத்தை அளித்த ஒரு கோட்பாடு மூலிகைகளின் குறியீடு ஆகும். தாவரங்களின் குணமாக்கும் திறன் என்பது பல சமயங்களில் அதன் வெளிப்புற அமைப்பில் தெரியும் என கருதப்பட்டது. உதாரணமாக வால்நட் வடிவம் மூளை மற்றும் குடல் போல காணப்படுவதால், அவை மூளை அல்லது குடல் சார்ந்த நோய்களுக்கு மருந்து என கருதப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மடாலயங்களில் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
ஸ்பாஜிரிக் (Spagyric) – மருந்து உருவாக்கும் முறை
ஸ்பாஜிரிக் (Spagyric) அல்லது ஸ்பாஜிரியா (Spagyria) என்பது பாரசெல்சஸ் மற்றும் அவரது சீடர்களால் உருவாக்கப்பட்டது. இது ஏற்கனவே உள்ள மருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, அவற்றின் ஆதிக்கூறுகள் (tria prima: கந்தகம், பாதரசம் மற்றும் உப்பு) எனப் பிரித்து, பின்னர் மீண்டும் அவற்றை இணைக்கும் முறையைக் கொண்டிருந்தது. இந்த முறை மூலம், ஒரு பொருளின் மருத்துவ ரீதியாக நன்மை அளிக்கும் தன்மையை (சுத்திகரிக்கப்பட்ட ட்ரியா ப்ரிமா) தீங்கு விளைவிக்கும் மற்றும் நச்சுத்தன்மை கொண்டவற்றிலிருந்து பிரித்து, சில விஷங்களையும் மருந்துகளாக மாற்ற முடியும் என்று நம்பினர்.
இந்த செயல்முறையில் புளிக்க வைத்தல் (fermentation), காய்ச்சி வடித்தல் (distillation) மற்றும் தாவரத்தின் சாம்பலிலிருந்து கனிம கூறுகளைப் பிரித்தெடுத்தல் ஆகியவை அடங்கும்.
நோய் தடுப்பாற்றல் முன்னோடி
பாரசெல்சஸ் காலகட்டத்தின் மிகப் பெரிய மருத்துவப் பிரச்சனை சிஃபிலிஸ் (syphilis) ஆகும். இது மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது. மேலும் சிகிச்சை அளிக்கப்படாமல் ஒரு பெருந்தொற்றாக (pandemic) வேகமாகப் பரவி வந்தது.
பாரசெல்சஸ் இந்தத் தலைப்பில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். அவற்றில், குவாய் மரத்தை (guaiac wood) பயன்படுத்தி அளிக்கப்பட்ட சிகிச்சை பயனற்றது என்றும், இது அக்ஸ்பர்க் (Augsburg) மற்றும் புகர் (Fugger) குடும்பத்தினர், குவாய் மரத்தின் முக்கிய இறக்குமதியாளர்களாக இருந்து செய்த ஒரு மோசடி என்றும் அவர் கடுமையாகத் தாக்கினார்.
1530 ஆம் ஆண்டில், பராசெல்சஸ் கவனமாக அளவிடப்பட்ட பாதரசச் சேர்மங்களை (mercury compounds) வாய்வழியாக உட்கொள்வதன் மூலம் சிபிலிஸ் நோய்க்கு வெற்றிகரமாகச் சிகிச்சையளிக்க முடியும் என்று ஒரு மருத்துவ விளக்கத்தை எழுதினார்.
1534 கோடையில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டெர்ட்சிங் (Stertzing) நகரில், ஒரு ஊசி முனையில் அகற்றப்பட்ட நோயாளியின் மலத்தில் இருந்து மிகச் சிறிய அளவைக் கொண்ட ரொட்டியால் செய்யப்பட்ட ஒரு மாத்திரையை வாய்வழியாகக் கொடுத்து பலரை பராசெல்சஸ் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அளவு மட்டுமே விஷத்தை உருவாக்குகிறது (Only the dose makes the poison) ஒரு மனிதனை நோய்வாய்ப்படுத்துவது எதுவோ, அதுவே சிறிய அளவுகளில் கொடுக்கப்பட்டால் அவனைக் குணப்படுத்தவும் செய்யும் என்று முன்வைத்தார். இதுவே பின்னர் வந்த நவீன ஹோமியோபதி மருத்துவ நடைமுறைக்கும், நோய்த்தடுப்பூசி முறைக்கும் முன்னோடியாக அமைந்தது.
நவீன வேதியியலுக்கான அடித்தளம்
குடிநீரில் உள்ள தாதுக்கள், குறிப்பாக ஈயத்திற்கும் காய்டருக்கும் (goitre) இடையில் தொடர்பைக் கண்டறிந்தார். இரத்த சோகைக்கு இரும்பைப் பயன்படுத்த பரிந்துரைத்தார்.
பாதரசம், சல்பர், இரும்பு மற்றும் காப்பர் சல்பேட் உள்ளிட்ட புதிய இரசாயன மருந்துகளை அவர் தயாரித்துப் பயன்படுத்தினார். இதன் மூலம் மருத்துவத்தையும் வேதியியலையும் ஒன்றிணைத்தார்
உடலும் பிரபஞ்சமும்
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் (as above, so below) என்ற ஹெர்மெட்டிக் (Hermetic) கொள்கையின் நீட்சியாக நோய்கள் வெறும் உடலியல் கோளாறுகள் மட்டுமல்ல, அவை பேரண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் அல்லது இயற்கை சக்திகளின் செல்வாக்காலும் ஏற்படலாம் என்று அவர் நம்பினார். ஒரு குறிப்பிட்ட கோளின் கதிர்வீச்சு அல்லது ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் சமநிலையின்மை பேரண்டத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்துமோ, அதேபோல மனித உடலிலும் நோய்களை உருவாக்கலாம். இந்தப் பெரிய பிரபஞ்ச வலைப்பின்னலின் ஒரு பகுதியாக குணமாக்குதலை கருதினார்.
மருத்துவத்தின் லூதர்
பராசெல்சஸ் தன் காலகட்டத்தில் பெரும் கலகக்காரனாக இருந்தார். மார்டின் லூதர் அவர்களுடன் ஒப்பிடப்பட்டார். அதைப்பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது லூதர் சொல்வதை அவர் காத்துக்கொள்ளட்டும், நான் சொல்வதற்கு நானே பொறுப்பு. நீங்கள் லூதருக்கு எதை விரும்புகிறீர்களோ, அதையே எனக்கும் விரும்புகிறீர்கள். எங்கள் இருவரையும் நெருப்பில் விழ வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றார்.
1541 ஆம் ஆண்டு பவேரியா இளவரசரை பார்க்கச் சென்ற போது மர்மமான முறையில் இறந்தார். அவரைப் பின்பற்றிய சீடர் நிரை உருவாகி வெகுகாலம் மருத்துவத்தில் செல்வாக்கு செலுத்தியது.
இரத்த ஒட்டத்தை கண்டறிதல்
வில்லியம் ஹார்வி (William Harvey 1578 –1657) ஒரு ஆங்கில மருத்துவர். நுரையீரல் மற்றும் முழுமையான இரத்த ஓட்டம், அத்துடன் இதயம் மூளைக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் இரத்தத்தை செலுத்தும் செயல்முறை ஆகியவற்றை முழுமையாகவும் விரிவாகவும் விவரித்தார்
வில்லியம் ஹார்வி எழுதி 1628 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உயிரினங்களில் இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் பற்றிய உடற்கூறியியல் ஆய்வு பொதுவாக டி மோட்டு கார்டிஸ் (De Motu Cordis) என்று அழைக்கப்படும் நூல் உடல் முழுவதும் இரத்தம் சுழற்சி செய்கிறது என்பதை நிலைநிறுத்தியது.
மனித உடல் இயந்திரம்
கிரேக்க சப்த ரிஷிகளில் ஒருவரான தாலேஸ் இங்கு காணும் எல்லாம் ஒன்றிலிருந்து வந்து இருக்கலாம், அது தண்ணீராக இருக்கலாம் என்று முன்வைத்த குறைத்தால்வாத அணுகுமுறையில் இருந்து ஹியுமர் தத்துவம் பிறந்து வந்ததைப் பார்த்தோம்.
ரெனே டேக்கார்ட் René Descarte 1596 – 1650 பிரெஞ்சு தத்துவஞானி, விஞ்ஞானி மற்றும் கணிதவியலாளர். நவீன தத்துவம் மற்றும் அறிவியலின் வளர்ச்சியின் முக்கிய முன்னோடி.
“நான் சிந்திக்கிறேன், நான் இருக்கிறேன்” என்ற புகழ்பெற்ற கூற்றுக்கு சொந்தக்காரர். இது நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த இபின் சினா உருவாக்கிய பறக்கும் மனிதன் தர்க்கத்தின் நீட்சியாக இருக்கலாம் என்று ஊகிக்கலாம்.
நவீன குறைத்தல்வாதம் (Reductionism) இவரிலிருந்தே தொடங்குகிறது.
மனித உடலும், மூளையும் தனித்தனியானவை என்ற இருமைநிலையை (dualism) முன்வைத்தார். அவர் எழுதிய டிஸ்கார்செஸ் நூலில் இந்த உலகம் ஒரு கடிகாரம் போன்றது. அதை துண்டு துண்டாகப் பிரித்து தனிப்பட்ட கூறுகளை அறிவதன் மூலம் அறியமுடியும் என்றார். இது புனிதமான ஆத்மாவை உடலிலிருந்து பிரித்து உடல் சார்ந்த புரிதலில் மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது.
(ரெனே டேக்கார்ட் அவருடைய ஐந்து வயது மகள் பிரான்சின், காய்ச்சலில் இறந்த பின், அவளுடைய இயந்திர வடிவ மாதிரியை உருவாக்கி தன்னுடன் வைத்திருந்தார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று நிலவுகிறது.

ஜியோவான்னி போரெல்லி (Giovanni Borelli 1608 – 1679) நடக்கும்போது, ஓடும்போது, நீந்தும்போது, குதிக்கும்போது மற்றும் பறக்கும்போது என்று பல்வேறு நிலைகளில் மனிதனின் தசைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை இயந்திரங்களை ஒப்பிட்டு விளக்கினார். இதயம் மற்ற தசைகளை போல சுருங்கி விரிவது இரத்தத்தை உடலெங்கும் அனுப்பத்தான் என்று முன்வைத்தார்.

ஹெர்மன் பூயர்ஹாவ் (Herman Boerhaave) 1668 – 1730, மனித உடலை ஒரு சிக்கலான இயந்திரத்தைப் போலக் கண்டார். உடல் உறுப்புகள் நெம்புகோல்கள், கப்பிகள் மற்றும் குழாய் போன்ற கட்டமைப்புகளால் (உதாரணமாக, நரம்புகளை குழாய்களின் செயல்பாட்டுடன் ஒப்பிட்டது) ஒன்றுசேர்க்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். இது நோயின் காரணங்களை பரு வடிவ பிரச்சினைகளாகப் பார்க்க வழிவகுத்தது. இவர் மனித உடல் மாதிரியை ஹைட்ராலிக் இயந்திரதுடன் ஒப்பிட்டார்.
முழுமைவாதம் அல்லது ஒருமைப்பார்வை
ரெனே டேக்கார்ட் இருமை பார்வையை மறுத்து, பாரூக் டி ஸ்பினோசா (Baruch de Spinoza 1632-1677) கடவுளும் இயற்கையும் ஒன்றே (“Deus sive Natura” – கடவுள் அல்லது இயற்கை) என்ற ஒற்றைவாத பார்வையை முன்வைத்தார். இது கடவுளைப் பிரபஞ்சத்தின் ஒரு தெய்வீக, மனிதவடிவப் படைப்பாளராகக் கருதும் பழமையான கருத்துக்களிலிருந்து மாறுபட்டது. பிரபஞ்சத்தில் ஒரே ஒரு அடிப்படைப் பொருள் மட்டுமே உள்ளது, அது கடவுள் அல்லது இயற்கை. அனைத்தும் இந்தப் பொருளின் மாற்றியமைக்கப்பட்ட வடிவங்கள் (modes) ஆகும். கடவுள் என்பது இயற்கையின் விதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் உள்ளார்ந்தவரே அன்றி, அதற்கு அப்பாற்பட்டவர் அல்ல. கடவுளைப் புரிந்துகொள்வது என்பது இயற்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதாகும்.
ரெனே டேக்கார்ட் மற்றும் ஸ்பினோசா முன்வைத்த பார்வைகள் மருத்துவத்தில் இருவித போக்குகள் தோன்ற காரணமாயின. உடலை வெறும் இயந்திரமாக பார்க்கும் ஒரு முறையும், அதன் எதிர்ப்புறத்தில் முழுமையாக பார்க்கும் ஒருமுறையும் திட்டவட்டமாக உருவாகி வந்து இன்றுவரை மருத்துவ சிந்தனைமுறையை ஆள்கின்றன.
தத்துவங்களின் மறுபரிசீலனை
இருமை மற்றும் முழுமைப்பார்வை உருவாகியபின் அவற்றை விளங்கிக் கொள்ளவும், பிறருக்கு விளக்கவும் அவற்றை நிரூபிக்கவும் தத்துவத்தை துணைக்கு அழைக்க வேண்டி வந்தது.
பிரான்சிஸ் பேக்கன் (1561 – 1626) நவீன நிரூபணவாதவியலின் (empiricism) தந்தை. அரிஸ்டாட்டில் தர்க்க முறையான குறைத்து அறியும் தர்க்கத்தின் (Deductive logic) மாற்றாக தனது நோவம் ஆர்கனம் நூலில் தொகுத்தறியும் தர்க்கம் (Inductive Logic) முறையை முன்வைத்தார். அறிவும், அனுபவமும் இணைவதே அறிவியல் வளர்ச்சி என்றார். அனுபவத்தின் மூலம் அவதானிக்கபட்டு (hypothesis), அனுபவத்திற்கு உட்படாத விஷயங்களை ஊகித்து, பிரபஞ்ச பொது உண்மையை நோக்கி சென்று அறிவியலின் எல்லைகளை விரித்தது.
குறைத்து அறியும் தர்க்கம் என்பது,
- ஆரோக்கியம் என்பது நான்கு ஹியுமர் சமநிலையால் ஆனது.
- இரத்தம் அதிகமாக இருந்தால் கோபம் மற்றும் உடல்சூடு ஏற்படும்.
- நோயாளி காய்ச்சலுடன் கோபமாக இருக்கிறார். எனவே இரத்தம் அதிகமாக உடையவர். எனவே அவருக்கு இரத்தம் வெளியேறும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இதில், முதல் இரண்டு கூற்றுகளின் (Premises) உண்மைத்தன்மையின் மூலம் மூன்றாவது கூற்று உய்த்துணரப்படுகிறது. ஒன்று சரியா தவறா என்று கணிக்க இந்த தர்க்கம் பயன்படுகிறது.
தொகுத்து அறியும் தர்க்கம் என்பது,
- நிறைய கோபமான மனிதர்களுக்கு முகம் சிவந்தும், உடல் வெப்பமாகவும் உள்ளது. இவர்கள் இரத்த வெளியேற்றும் சிகிச்சைக்கு பின்னர் குணமாகினர்.
- கோபமானவர்கள் அடிக்கடி காய்ச்சலில் விழுகிறார்கள்
- எனவே, காய்ச்சல் இரத்தம் ஹியுமர் அதிகமானால் வரும்.
இந்த தொகுத்து அறியும் தர்க்கமுறை காரண காரிய தொடர்பையும், நிரூபணத்தையும் அளித்தது. குறைத்து அறியும் தர்க்கம் விளக்கமுடியாத நிகழ்வுகளை புரிந்துகொள்ள உதவியது.
ஐந்து சூரியன்களின் கதை
அமெரிக்காவின் அஸ்டெக் மத (Aztec Religion) புராணத்தின் படி இந்த உலகத்தின் நாம் இப்போது இருக்கும் காலம் ஐந்தாவது சூரியனின் காலம்.
கெட்சால்கோட்ல் (Quetzalcōātl) என்பவர் ஞானம், உயிர், கலைகள், கல்வி போன்றவற்றின் தெய்வம். இவர் பெயரை சிறகுடைய பாம்பு என்று பொருள் கொள்ளலாம். கருப்பு தெஸ்காட்லிபோகா என்றும் அழைக்கப்படுபவர்.
தெஸ்காட்லிபோகா (Tezcatlipoca) இரவுக்காற்று, ஒற்றுமையின்மை, போர், சூறாவளி, எரிமலை குழம்பிலிருந்து உருவாகும் கண்ணாடி (Obsidian), ஒழுங்கின்மை ஆகியவற்றின் தெய்வம். தொழுநோய், கட்டிகள் போன்ற நோய்களை கொண்டுவருபவர்.
இவர்கள் இருவரும் ஒமெடெகுட்லி (Ometecuhtli) – ஒமெசிஹுவாட்ல் (Omecihuatl) இணைந்த வடிவமான Ōmeteōtl என்ற இருமை தெய்வத்திற்குப் பிறந்தவர்கள், சகோதரர்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து உலகை உருவாக்கும் முன் சிப்பாக்ட்லி (Cipactli) என்ற முதலை மட்டும் இருந்தது. தெஸ்காட்லிபோகா தன் காலை தூண்டிலாக காட்டி முதலையைக் கவர்ந்து இழுத்தார். முதலை அவர் காலை சாப்பிடும் நேரத்தில் கெட்சால்கோட்ல் மற்ற தெய்யவங்களுடன் சேர்ந்து அந்த முதலையைக் கொன்றார். தெஸ்காட்லிபோகா இழந்த காலிற்கு பதில் அங்கு ஒரு பாம்பு காலாக அமைந்தது.
உருவாக்கிய முதல் உலகத்தில் தெஸ்காட்லிபோகா சூரியனாக அமைந்தார். கோபமுற்ற கெட்சால்கோட்ல் அவரை வீழ்த்தினார். தெஸ்காட்லிபோகா ஜாகுவார் சிறுத்தையாக மாறி உலகை அழித்தார்.
பின்னர் உருவாகும் மூன்று உலகங்களையும் வெள்ளம், நெருப்பு, மழை போன்றவற்றைக் கொண்டு அழித்தார்.
நான்காவது முறை உலகம் அழிந்த பின், மீண்டும் உலகை உருவாக்க கெட்சால்கோட்ல் மரண உலகம் சென்று பல்வேறு சோதனைகளுக்கு பின் இறந்த மனிதர்களின் எலும்புகளை கொண்டு வந்தார். வரும் வழியில் அவை கீழே விழுந்து உடைந்துவிடு்கின்றன. உடைந்த எலும்புகளை வைத்து, அறிவின் தெய்வம் கெட்சால்கோட்ல் தன் இரத்தத்தை அவற்றின் மேல் ஊற்றி நாம் தற்போது இருக்கும் ஐந்தாவது சூரியனின் உலகை உருவாக்கினார்.
பழைய எலும்புகளிலிருந்து தெய்வத்தின் ரத்தத்தாலும், தன்னையே தியாகம் செய்த குணத்தாலும் புதுஉலகம் உருவாகி வந்தது.
கொள்ளை நோய்கள், போர், கறுப்பு மரணம் ஆகியவற்றிலிருந்து கலைகளின் வழியே மறுகண்டுபிடிப்பு செய்து அறிவு யுகம் நோக்கி மானுட ஞானம் நகர்ந்த சித்திரத்தை நாம் இங்கு பொருத்திப் பார்க்கலாம். அதன் ஒரு பகுதியாக மருத்துவக்கொள்கைகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டி வந்தது. மறுமலர்ச்சி காலத்தில்தான் இந்த தொன்மக்கதை நிகழ்ந்த அமெரிக்க நிலமும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தற்செயலே!
சான்றாதாரங்கள்
- https://www.worldhistory.org/article/1540/medieval-cures-for-the-black-death/
- https://www.britannica.com/biography/Paracelsus
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
