- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
எகிப்திய மருத்துவம்

நைல் நதி உருவாக்கிய தொன்மையான எகிப்திய நாகரிகம் மனிதகுல சிந்தனைக்கு எண்ணற்ற கொடைகளை வழங்கியுள்ளது. இன்றைய நம் மருத்துவ சிந்தனையின் வேர் எகிப்திலிருந்து தொடங்கியதென்று சொன்னால் அது மிகையாகாது.
மரணமின்மை மற்றும் இளமைக்கு திரும்பல் அடப்பா மற்றும் கில்காமேஷ் வழியே மனிதகுலத்துக்கு ஆசை காட்டி மோசம் செய்யப்பட்டது. ஆனால் மனிதன் மரணமின்மை என்றால் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தான். உயிரின் தொடர்ச்சி என்ற கருத்துருவகம் மரணமின்மையை அளிக்கும் என்று கண்டுகொண்டான். இந்த உடல் அழியும், ஆனால் மீண்டும் புதிதாக பிறப்பெடுக்கும் என்ற கருதுகோளை உருவாக்கி, இறந்த உடல்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். இன்னொருபுறம் கடவுள்களை மட்டும் நம்பாமல் தன் அறிவின் துணைகொண்டு மாற்று வழிகளை தேட ஆரம்பித்தான். இதை இன்னும் அணுக்கமாக ஒசிரிஸ் (Osiris) தொன்மம் வழியே அணுகலாம்.
அறிவின் தெய்வத்தை துணைக்கொள்ளுதல்
எகிப்திய தொன்மவியலில் வரும் முதன்மையான ஞானத்தின் கடவுள் தொத் (Thoth). நட் (Nut) எனும் வானத்தின் கடவுள் தன் சகோதரனும், கணவனுமான ஜெப் (Geb) எனும் பூமி கடவுளுடன் கூடுவது தன் அதிகாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று நினைத்த சூரிய கடவுளான ரா (Ra), ஆண்டின் 360 நாட்களும் மலடாக இருக்கும்படி நட் டை சபிக்கிறார்.
தொத், சந்திர கடவுளுடன் தாயம் ஆட முடிவு செய்கிறார். தான் ஜெயித்தால் நிலவின் ஒளியில் 1/72 பங்கை தரவேண்டும் என்றும், தோற்றால் தன்னை கொன்றுவிடும் படியும் பந்தயம் வைத்தாடுகிறார். போட்டியில் ஜெயித்த தொத், நிலவின் ஒளியை கொண்டு ஆண்டில் 5 நாட்களை (360/72 = 5) சேர்த்து 365 நாட்களாக ஆக்குகிறார். இந்த 5 நாட்களில் நட் கர்ப்பம் அடைந்து ஹோரஸ்( Horus The Elder), ஒசிரிஸ், ஐசிஸ், செட், நெப்திஸ் ஆகியோரை பெற்றெடுக்கிறார்.
ஒசிரிஸ் ஐசிஸையும், செட் நெப்திஸையும் மணக்கின்றனர். ஒசிரிஸ் வளமான பகுதியை ஆட்சி செய்ய, கோபடைந்த செட் அவரை கொன்று அவரின் உடல் பகுதிகளை வெவ்வெறு பகுதிகளில் வீசி விடுகிறார்.
ஐசிஸ், தன் கணவனின் உடல் பாகங்களை தேடி எடுத்து மீண்டும் ஒன்று சேர்க்கிறார். அவரின் ஆண்குறி மட்டும் கிடைக்காததால், ஒரு தங்க ஆண்குறியை செய்து பொருத்துகிறார். தொத் உதவியுடன் ஒசிரிஸ்க்கு உயிரளித்து, பின் ஹோரஸ் என்ற மகனை பெற்றெடுக்கிறார். ஆனால், ஒசிரிஸ் மீண்டும் மரணமடைந்து பாதாள உலகை அடைகிறார். பாதாளத்தின் தெய்வமாகிறார். ஹோரஸ், ஒசிரிசின் மறுபிறவியாக கருதப்பட்டார்.
மற்றொரு சமயம், கடவுள் ரா, தன் அதிகாரத்துக்கு போட்டி மனிதர்களிடமிருந்து வரலாமென்று நினைத்து தன் மகளான செக்மத் (Sekmath) தை மனிதர்கள் மீது ஏவுகிறார். கோபமான செக்மத்தின் மூச்சுக்காற்றில் பாலைவனங்கள் பிறக்கின்றன. மனிதர்கள் மீது பிளேக் போன்ற நோய்கள் பரவி, கொல்கின்றன. செக்மத்தின் அடங்கா கோபத்தால் மொத்த மனித இனமும் அழியும் நிலையில், தொத் சிவப்பு நிற செந்தூரத்தை (red ochre) மதுவுடன் கலந்து பரப்ப, அதை இரத்தமென நினைத்து குடித்து மயங்கி விடுகிறார் செக்மத். செக்மத் பின்னாளில் மருத்துவத்தின் கடவுளாக வழிபடப்பட்டார்.

தொத் அரிவாள் மூக்கன்/அன்றில் (Ibis) பறவை தலையும், புத்தகம் மற்றும் எழுதுகோலுடனோ அல்லது செங்கோல் மற்றும் வாழ்வை குறிக்கும் அங்க் எனும் குறியீடுடன் காணப்படுகிறார். இவர் தாயின் வயிற்றிலிருந்து பிறக்காமல், நேரடியாக நீரிலிருந்து தோன்றியவராக கருதப்படுகிறது. இவரின் வாயில் முதன்முதலில் தோன்றிய சப்தத்தில் இருந்தே மொழிகளும், உலகமும் தோன்றியததாக நம்பப்படுகிறது. தொத், மனிதர்களின் மரணத்துக்கு பின் அவர்களின் செயல்களின் விளைவுகளை அளக்க தராசுடன் பாதாளத்தில் வாழ்கிறார். பிரபஞ்ச ஒழுங்கின் தெய்வமாக கருதப்பட்டார்.
தொத் பின்னர் கிரேக்க-ரோம பண்பாட்டிற்குச்சென்று ஹெர்மிஸ் டிரஸ்மெஜிஸ்டஸ் (Hermes Trismegistus – Hermes the Thrice-Greatest) ஆக மாற்றமடைந்து, பின்னர் கிருஸ்துவத்தில் ஈனாக் ( Enoch) ஆக ஆகி இருக்கக்கூடுமென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ரசவாதத்தின் மூலமாக கருதப்படும் ஹெர்மடிக் தத்துவ பின்புலம் கொண்ட மரகத பலகை (Emerald Tablet) தொத் கொடுத்ததாக ஒரு தொன்மமும் நிலவுகிறது. ஹெர்மேட்டிசிஸம் (Hermeticism) ஒரு குறு மதமாகவும், தத்துவ பள்ளியாகவும் நீடித்தது. அதன் கொள்கைகள் இன்றைய மருத்துவத்தில் செலுத்தும் செல்வாக்கை பிந்தைய அத்தியாயத்தில் பார்க்கலாம்.
மரணமடைந்த ஒசிரிஸை மீண்டும் உயிர் பெறச்செய்வதும், செக்மத்தின் கோபத்தில் உண்டாகும் நோய்களிலிருந்து மனிதர்களை காப்பாற்றிய தெய்வம், அறிவின், எழுத்தின், மொழியின், பிரபஞ்ச ஒழுங்கின் தெய்வமாக இருப்பது தற்செயல் அல்ல.
ஹெக்கா (Heka), எகிப்திய மாந்திரீகம் மற்றும் மருத்துவத்தின் தெய்வமாகவும் வழிபடப்பட்டார். இங்கு மாந்திரீகம் என்பதை அறிவியல் அல்லது அறிவு என்றும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. எகிப்திய மருத்துவர்கள் ஹெக்காவின் பூசாரிகளாக கருதப்பட்டனர். இவர் கையில் இரு பாம்புகள் இணைந்த தடியை வைத்துள்ளார். இது இங்கிருந்து கிரேக்கம் சென்று, அஸ்கிளெப்பியஸ் (Asclepius) கைக்கு மாறி இன்று நாம் காணும் மருத்துவச்சின்னமான கடுசியஸ் (Caduceus) ஆக பரிணாமம் கொண்டுள்ளது.


இம்கொதொப் (Imhotep)
பொ யு மு 2500 வாழ்ந்த Hesy-Ra1, வரலாற்றில் நமக்கு கிடைக்கும் முதல் பல் மருத்துவராவார். கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்த Peseshet2, முதல் பெண் மருத்துவராவார்.
தோத், செக்மெத் மற்றும் ஹெக்கா போன்ற தொன்மமாக இல்லாமல் இம்கொதொப் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதராக வருகிறார்.
இம்கொதொப் (Imhotep), கி மு 2600-இல் வாழ்ந்த பிரமிட் கட்டிடக்கலை வல்லுநரும், அரச மருத்துவரும், ரா சூரிய கடவுளின் பூசாரியும் ஆவார். அவரது இறப்பிற்குப்பின், மெல்ல மெல்ல மருத்துவத்தின் கடவுளாக ஆக்கப்பட்டார். “The Mummy” ஹாலிவுட் திரைப்படத்தில் இவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருப்பார்.

நோய்க்கான காரணம் – நோய் அறியும் கலை
எல்லா பண்டைய சமூகங்களை போலவே எகிப்தியர்களும், நோய்கள் என்பவை பிரபஞ்சம், விலங்குகள், தாவரங்கள், நல்ல மற்றும் கெட்ட ஆவிகளுடன் உண்டான சமநிலை குலைவால் ஏற்படுகின்றன என்று நம்பினர். ஆனால் அறிவின் துணைகொண்டு நோய்களை, அவற்றை குணமாக்கும் காரணிகளை தேட தொடங்கினர். தேடலில் கிடைத்தவற்றை ஆவணப்படுத்தி தொகுக்க ஆரம்பித்தனர்.
பண்டைய எகிப்தியர்களுக்கு ஏற்பட்ட நோய்கள் மற்றும் மருத்துவம் பற்றி அறிய நமக்கு இரண்டு மிக முக்கிய வாய்ப்புகள் அமைந்தன:
- எகிப்தின் பல்வேறு பிரமிடுகள், கோவில்கள் போன்ற இடங்களில் இருந்து கிடைத்த பாப்பிரஸ் சுவடிகள்.
- பிரமிடுகளில் இருந்து கிடைத்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் (Mummies)
எகிப்தில் கிடைத்த மருத்துவ சம்பந்தமான பாப்பிரஸ் சுவடிகளின் காலம் பொ யு மு 3500 தொடங்கி பொ யு 300 வரை நீள்கிறது. இவை நோய் அறிதல் முறைகள், மருத்துவ தாவரங்கள் தொடங்கி நாம் இன்று காணும் பல்வேறு மருத்துவ உட்பிரிவுகளான மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், கால்நடை மருத்துவம் வரை பேசுகின்றன.
நமக்கு இதுவரை கிடைத்த பாப்பிரஸ் சுவடிகள்3:
- காஹூன் பாப்பிரஸ் (Kahun Papyrus)
- ரமேசியம் பாப்பிரஸ் (Ramesseum Papyrus)
- எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் (Edwin Smith Papyrus)
- ஈபேர்ஸ் பாப்பிரஸ் (Ebers Papyrus)
- ஹெர்ஸ்ட் பாப்பிரஸ் (Hearst Papyrus)
- லண்டன் பாப்பிரஸ் (London Papyrus)
- பெர்லின் பாப்பிரஸ் (Berlin Papyrus )
- கார்ல்ஸ்பெர்க் பாப்பிரஸ் (Carlsberg Papyrus)
- செஸ்டர் பீட்டி பாப்பிரஸ் (Chester Beatty Medical Papyrus)
- புரூக்லின் பாப்பிரஸ் (Brooklyn Papyrus)
இவற்றிலிருந்து பண்டைய எகிப்தில் தலைவலி, மன அழுத்தம், எலும்புருக்கி நோய், போலியோ, சிறுநீரகக்கற்கள், தொழுநோய், விஷக்கடி, பிளேக் போன்றவை பரவலாக இருந்ததாக அறியப்படுகிறது.
நுரையீரல் மற்றும் இதய நோய்களும் பரவலாக காணப்பட்டது ஆச்சர்யமளிப்பது, ஏறக்குறைய 44 மம்மிகளின் இதய நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
எகிப்தின் பொது சுகாதாரம் வலுவாக இருந்த போதும் ஓட்டுண்ணி (Parasite) பாதிப்பு என்பது மிகப்பரவலாக காணப்பட்டது. தண்ணீரை காய்ச்சி குடிக்கவும், கழிவுகளை முறையாக அகற்றும் அமைப்பும் அவர்களிடம் இருந்தது.
சிஸ்டோசோமியா அழற்சி அல்லது நத்தைக்காய்ச்சல் (schistosomiasis) மிக பரவலாக காணப்பட்டது. இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி ஆற்றில் குளிக்கும் ஆண்கள், ஆண்குறி உறை (Penile Sheaths) அணிய வேண்டும் என்ற பரிந்துரை பாப்பிரஸ் சுவடிகளில் காணக்கிடைக்கிறது. சென்ற நூற்றாண்டு வரை கூட நத்தைக்காய்ச்சல் பரவலாக காணப்பட்டன. நுரையீரல் இரத்த அழுத்தம் ஏற்பட இந்த அழற்சி முக்கிய காரணமாகும். ஆனால், பொ யு 1800 களின் இறுதியில் தான் நுரையீரல் இரத்த அழுத்தம் ஒரு நோயாக வகைப்படுத்தப்பட்டது4.

நாடிகள் என்ற கருத்து
ஈபேர்ஸ் பாப்பிரஸ்களின் படி, இந்த உடல் 22 நாடிகளால் (mtw) ஆனது. இவை இரத்தம், காற்று, விந்து, சளி (mucus) மற்றும் கண்ணீரை உடலெங்கும் கொண்டு செல்கின்றன. இந்த நாடிகள் இதயத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, சில இடங்களில் இணைந்தும், மலவாயில் போன்ற பல வெளியிடங்களில் திறப்புகளையும் கொண்டுள்ளன. மருத்துவர், நாடித்துடிப்பை பரிசோதிப்பதின் மூலம் இவற்றின் நிலையை அறிய முடியும். எவ்வாறு நைல் நதியின் தடையற்ற போக்கு எகிப்தின் செழுமைக்கு உதவுகிறதோ, அதே போல் இந்த நாடிகளின் சமநிலை மனித உயிருக்கு இன்றியமையாததாகும். பல்வேறு புற, தீங்கு விளைவிக்கும் காரணிகளால் (wekhedu) இந்த நாடிகளில் தடை ஏற்பட்டு நோய்கள் தோன்றுகின்றன. இந்த காரணிகள் வெட்டப்பட்ட காயங்கள் அல்லது உடலின் இயற்கையான துளைகள் வழியாக உள் நுழைகின்றன5.
பாப்பிரஸ் சுவடிகளில் உள்ளதை கீழ்கண்டவாறு தொகுத்து கொள்ளலாம்:
மருத்துவ கட்டுமானம்
- நோயாளி சிகிச்சையின் போது மரணம் அடைவதென்பது குற்றமாக பார்க்க்கபட்டது.
- ஒரு நோயாளி நான்கு நாளில் குணமாகவில்லை என்றால் மருத்துவர் சிகிச்சை முறையை மாற்ற வேண்டும்.
- மருத்துவர் நோய்க்குறிகளை கவனமாக கவனித்து பதிவு செய்யவும், நோய் அறிதலை நோயாளியிடம் கூறி, அதன் சிகிச்சை சாத்தியங்களை பற்றி கலந்து ஆலோசிப்பதையும் வலியுறுத்துகிறது.
- மருத்துவர்களின் படிநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பொது மருத்துவர், அனுபவம் வாய்ந்த மருத்துவர், சிறப்பு மருத்துவர், மருத்துவ கண்காணிப்பாளர், பெண் மருத்துவர் போன்ற பல்வேறு படிநிலைகள் இருந்து உள்ளன.
- பொது சுகாதாரம் பேணப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றவும், தொற்று காலங்களில் தனிமையாக்கம் (quarantine during plague) கடைபிடிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
- கரு உருவாவதை தவிர்க்க குடும்ப கட்டுப்பாட்டு முறையாக, தேன் அல்லது புளித்த பாலில், முதலையின் கழிவு கரைக்கப்பட்டு சிறிது சோடியம் பை கார்பனேட் டீஹைட்ரட் சேர்த்து பெண்குறியின் உள் செலுத்தும் வழக்கம் இருந்துள்ளது.
- கர்ப்பம் அடைந்ததை சோதிக்க, பெண் தினமும் பார்லி/எல்மர் கோதுமை தானியத்தை தன் சிறுநீரால் நனைத்து வரவேண்டும். அவற்றில் பார்லி முளைத்தால் ஆண் குழந்தையும், கோதுமை முளைத்தால் பெண் குழந்தையும், எதுவும் முளைக்கவில்லை என்றால் கர்ப்பம் நிகழவில்லை என்றும் கூறுகிறது.
- நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றின் குறிப்புகளும் காணப்படுகின்றன.
சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள்
- தாவரங்கள், விலங்குகள், தாது உப்புகள், விஷங்கள் போன்றவை மருந்துகளாக பயன்படுத்தப்பட்டன.
- மந்திர சப்தங்கள் குணப்படுத்த பயன்பட்டன.
- மசாஜ், பல்வேறு எண்ணெய் குளியல்கள், புகையிடுதல் முறை (Fumigation) பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
- வேறு வேறு உடல் உறுப்புகளுக்கு என்று தனித்தனி மருந்து குறிப்புகள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஏழு மருந்துகள் பல் நோய்களுக்கு, முப்பது மருந்துகள் நாடி சார்ந்த நோய்களுக்கு, பதிமூன்று மருந்துகள் முடி சார்ந்த நோய்களுக்கு என்று வகை பிரிக்கப்பட்டுள்ளன.
- மருந்துகளை கலப்பதற்கு தேன், விலங்கு கொழுப்புகள், பல்வேறு எண்ணெய்கள், பால், நீர், ஒயின், பீர் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
- பல்வேறு அறுவைசிகிச்சை கருவிகளின் படங்கள் காணப்படுகிறது. அறுவை சிகிச்சை முறைகளின் விளக்கங்களும், தையலிடும் முறையும், சிகிச்சைக்குப் பின்னான பராமரிப்பும் பேசப்படுகிறது.
- அழகுக்குறிப்புகளும், உடலை பராமரிக்கும் குறிப்புகளும் கூட இடம் பெற்றுள்ளன.
வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா?
வழுக்கைத் தலையில் முடிவளர வைக்கமுடியும் என்று சொன்னால் நம்ப முடியுமா? தன் மேனி அழகை மெருகேற்ற கழுதைப்பாலில் குளித்ததாக நம்பப்படும், ஜூலியஸ் சீசர் – மார்க் ஆண்டனி ஆகியோருடன் காதலும், அரசியலும் கொண்டு பகடையாடிய எகிப்தின் பேரழகியும், பேரரசியுமான கிளியோபாட்ரா சொன்னால்?
கிளியோபாட்ரா வழுக்கை தலையில் முடி வளர கண்டுபிடித்த மருத்துவ சிகிச்சை:
சம அளவிலான எரிக்கப்பட்ட எலி, எரிக்கப்பட்ட குதிரையின் பல் ஆகியவற்றின் சாம்பலை எடுத்து கரடியின் கொழுப்பு, மானின் கொழுப்பு மற்றும் நாணல் பட்டையுடன் சேர்த்து, பின் தேன் கலந்து முடி முளைக்கும் வரை தடவி வரவும்.
(Equal parts of burnt mice, rags, and horse’s teeth. She combined those components with bear’s grease, deer marrow, and reed bark. Shen then mixed in the last ingredient, honey, to create a salve to rub on the afflicted area until hair began to grow.
From The Book of Cleopatra: A Life by Stacy Schiff)

பேரழகிகள் பொய் சொல்வதில்லை என்று நம்புபவர்கள் முயன்று பார்த்திருப்பார்கள். கிளியோபாட்ராவின் இந்த குறிப்பு ஜூலியஸ் சீசருக்கு சொல்லப்பட்டதாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
கிளியோபாட்ராவின் காலம் பொ யு மு 70 – 30. நமக்கு எழுதப்பட்ட உலகின் முதல் மருத்துவ குறிப்புகள் என்று இதுவரை நம்பப்படும் எட்வின் ஸ்மித் 1862 ஆம் ஆண்டு கண்டுபிடித்த பாப்பிரஸ் சுவடிகளின் காலம் பொ யு மு 1600 என்றும் அதன் மூலச்சுவடி பொ யு மு 3000 ஐ சார்ந்ததாக கருதப்படுகிறது.
அங்கிருந்து வளர்ந்து வந்த எகிப்தின் மருத்துவ தத்துவத்தின் நீட்சியாகவே கிளியோபாட்ராவின் இந்த குறிப்பை நாம் கண்டுகொள்ள முடியும்.
நோயும், ஓரிறை வழிபாடும்
சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா நோய் பரவல், உலக பொருளாதாரத்தை, அரசியலை , மக்கள் மனநிலையை எப்படி மாற்றிக்கொண்டு இருக்கிறது என்று பார்க்கிறோம். இன்றிலிருந்து 3300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நோய் பெருந்தொற்று எப்படி எகிப்திய கடவுளரை கூட மாற்றியமைத்தது என்று பார்க்கலாம்.
பொ யு மு 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மூன்றாம் அமென்கோதேப் காலத்தில் ஏற்பட்ட தொடர் கொள்ளை நோய்களின் தாக்குதல் (அம்மை,போலியோ, பிளேக்) அவரின் மகனான அக்கெனதென் ஆட்சி காலத்தில், சூரிய கதிர்களின் தேவதையான அதின் என்ற ஒற்றை கடவுள் வழிபாட்டை அரச மதமாக அறிவித்ததற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எகிப்தின் பல தெய்வ வழிபாட்டு முறை கைவிடப்பட்டு, குடிகள் மீது இந்த ஓரிறைக் கொள்கை திணிக்கப்பட்டது6. உலகின் முதல் ஓரிறை மதமாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மெசபடோமியா நாகரிகத்தில் வெவ்வேறு நோய்களுக்கான கடவுள்கள் உருவாகி வருவதை பார்த்தோம். அதன் உச்சமாக மற்றொரு நாகரீகமான எகிப்தில் ஒரு கொள்ளைநோய் காலக்கட்டத்துக்கு பின் எப்படி மற்ற தெய்வங்கள் கைவிடப்பட்டு ஒரு ஒற்றை தெய்வம் எழுந்து வருகிறது என்ற இந்த சித்திரம் நமக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பக்கூடியது.
அக்கெனதென் குடும்பத்துடன் அதின் கடவுளை வழிபடும் காட்சி

எகிப்திய மருத்துவத்தின் கொடை
எகிப்தின் வளமான பூமி, அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை உற்பத்தி செய்கிறது. அவற்றில் பல ஆபத்தான விஷங்களும் கூட. அவைகள் மதுவுடன் இணைந்து நன்றாக வேலை செய்கின்றன. புவியில் உள்ள எந்த மனிதனை விடவும் எகிப்தியர்கள் திறமையானவர்கள். ஒவ்வொருவரும் அங்கு மருத்துவக் கடவுளாகவே பிறக்கின்றனர் என்று இலியட், ஒடிசி எழுதிய ஹோமர் குறிப்பிடுகிறார்.
நோய்களுக்கு காரணம் கடவுளர், இயற்கை போன்றவற்றிலிருந்து உடலளவில் நாடிகளில் ஏற்படும் சமநிலைக்குலைவு நோய்களை உருவாக்கக்கூடும் என்ற தத்துவம் எகிப்திய மருத்துவத்தில் தோன்றிவிட்டது. மேலும் நோய் வருவதற்கு முன் தற்காத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், மருத்துவ அறிவை தொகுத்துக்கொள்ள பாப்பிரஸ் சுவடிகள் போன்ற வழிமுறைகளும் உருவாகிவிட்டன.
ஒரு கலாச்சாரத்தில் உச்சமான ஞானி மற்றும் தெய்வம், 4000 ஆண்டுகளுக்குப் பின்னான முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரத்தில் எவ்வாறு வில்லனாக உள்வாங்கப்படுகிறார் என்பது இம்கொதொப் சித்திரம் வழியே பல்வேறு கேள்விகளையும், வரலாற்றையும் மறுபரிசீலனை செய்யச்சொல்கிறது.
இதுவரை தெய்வங்களே மனிதர்களுக்கு உதவி செய்தன. மருத்துவ அறிவு மனிதனுக்கே வந்துவிட்டால், தெய்வங்களுக்கு என்ன வேலை? அவற்றை யார் புரப்பது? அவ்வாறு நோய்களை குணப்படுத்தும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ரகசியம் அறிந்துவிட்ட ஒருவனை தெய்வங்கள் என்ன செய்யும்? இதுவரை மனிதன் கற்றவற்றை கொண்டு தெய்வங்களுக்கு பதிலீடாக எவற்றை வைப்பான்? அடுத்த அத்தியாயத்தில் கண்டுபிடிப்போம்.
சான்றாதாரங்கள்
- https://en.wikipedia.org/wiki/Hesy-Ra
- https://en.wikipedia.org/wiki/Peseshet
- https://en.wikipedia.org/wiki/Egyptian_medical_papyri
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7590967/
- https://www.sciencedirect.com/science/article/pii/S1319562X21005027
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
