
முன்பின்
தெரியாத இடத்தில்
நீண்ட சர்ப்பமாய்
நிசப்தமாய்
இரயில் வண்டி
நிற்கும்
அந்த வேளையில்
என் மீது
வெண்பனி போல் கவிந்த
அமைதி
எங்கிருந்துமில்லாத
எதிர்பாராத அற்புதமோ?
எப்படி நிகழ்ந்தது
அது?
ஆனால்
எங்கிருந்தோ
எதிர்பாராது
ஒரு கறுப்பாடு
அங்கு
நுழைந்து
முடித்து வைக்கிறதே
அதை-
காத்திருக்கிறாய்
நீயென்று எனக்கு
நினைவுபடுத்தி…
எத்தனையோ மரங்களைப்
பயண வழியில் பார்த்தாலும்-
அது
என்னைப் பார்த்து
நானும் அதனைப் பார்த்த-
அந்த
ஒற்றைப் பனையை
என்னோடு
பயணத்தில்
கூட்டிக் கொண்டு போனேன்.
அதுவும்
என்னோடு கூட வரச்
சம்மதித்தது.
நான் இறங்கிய இரயிலடியில்
இறங்கியது அதுவும்.
தங்குவதற்கு நான்
நுழைந்த அறைக்குள்
அதுவும் நுழைய
எனக்கு அது
தேவையோ
அல்லது
அதற்கு நான்
தேவையோ என்று
முடிவு செய்ய
முடியாதது போல் தோன்றிற்று.
தனிமை
தனிமை தீரத்
தேர்ந்தெடுக்கும் விதம்
அப்படித் தானோ என்றும்
திகைப்பாயிற்று.
அறையும்
மறுதலிக்கவில்லை
ஒற்றைப் பனையை.
இதுவரை
இப்படி தங்கியிருந்ததாய்
யாருமில்லை
என்று ஆச்சரியமுற்றது
அறை.
அன்றிரவு
ஒரு தூளியில்
கிடந்துறங்கியது போலன்றி
அறையின்
மெத்தையில்
படுத்துறங்கியது போல்
உணர்வாகவில்லை எனக்கு.
கூட இருந்த
ஒற்றைப் பனையின்
ஒரு சிநேகிதம் போல்
வேறு சிநேகிதமெதுவும்
எளிமையாய் இருக்க முடியாதென்று
தோன்றியது.
திரும்பிச் செல்ல வேண்டும்
நான்-
முன்பிருந்த இடத்திலேயே
என்னை விட்டு விடு
என்றது ஒற்றைப் பனை.
விட்டு விட்டுப்
போகும் போது
உன்னிடத்தில்
கூடு கட்டி வசிக்கும்
தூக்கணாங்குருவியாய் நான்
பிறப்பெடுத்திருக்க வேண்டுமென்று
அகம் நெகிழ்ந்தேன்.
அப்போது அறையில்
தூளி கட்டி உறங்கியது போல்
உணர்வாகியது
பொறி தட்டியது
எனக்கு.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
