- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
அன்றே கிளம்பி விட்டான் சகோதரியின் கணவனை பிடித்து வைத்து போருக்கு அழைக்கும் மாளவ ராஜனை எதிர்க்க.
அதன் பின், தந்தை போன துக்கம் அகல தமையனின் வருகை ஆதரவாக இருந்தது. அதுவும் போன பின், வீட்டு மருமகனும் எதிரியின் பிடியில் இருப்பது ஒரு பக்கம், தாயாரும் திடுமென தன்னை விட்டுப் போய் விட்டது ஒரு பக்கம், பிரியமான சகோதரியின் நிலையும், அனாதரவாக தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்த பெண் யானை போல மருகினான். தனிமை சுட்டது, கால சக்கரம் மட்டும் எதற்கும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது. சில காலம் இவ்வாறு தவித்தவன் ஓரளவு தன்னையும் தன் செயல்களையும் சீராக்கிக் கொண்டான். எனினும் இரவு உறக்கம் வராமல் வெகு நேரம் விழித்திருப்பான். ஒரு நாள் யாமந்தோறும் (யாமம் – எட்டு யாமம் – ஒரு நாள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்) நேரத்தை அறிவிக்கும் சமயம் சில பாடல்களை பாடுவதும் வழக்கம். ‘ உலகம் புகழும் பெயர் பெற்ற வீரன். அவன் பல உன்னதமான பொருட்களை சம்பாதித்து இருக்கிறான். ஆனாலும் எதிர் பாராமல் ஒரு சிறு புயல் காற்று கடலில் சிறு படகைத் தள்ளிக் கொண்டு போவது போல விதி அவனையும் அலைக்கழிக்கிறது. இது தான் உலக இயல்பு.’
தெரிந்த விஷயம் தானே, உலக வாழ்க்கையின் நிரந்தரமற்ற தன்மையை அறிவேன், என்று தனக்குள் சொல்லிக் கொண்டு புரண்டு படுத்தான். உடனே உறக்கமும் ஆட்கொள்ள ஆழ்ந்து உறங்கினான். கனவு. ஒரு பெரிய இரும்புத் தூண் உடைந்து விழுந்தது. தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தவன் அந்த கனவையே கோபித்தான். ஏன் இப்படி என்னை வதைக்கிறாய். இரவும் பகலும் என் இடது கண் துடித்து என்னை நிம்மதியுடன் சிந்திக்க விடாமல் படுத்துகிறது. நீ வேறு. நான் தான் அகப்பட்டேனா – ஏதோ ஒரு பிரசித்தமான அரசனின் மரணம் சம்பவிக்கப் போகிறது என்பது இவைகளின் பொருளாம்- கேட்டுத் தெரிந்து கொண்டு விட்டேன், என்னை விடு.
ஸுரியனில் கருமையாக ஏதோ தெரிகிறது. ராகு உடலுடன் தாக்க வந்து விட்டானா? சப்த ரிஷிகள் (தாரகைகள்) புகை மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டது போல மங்கலாகத் தெரிகின்றன. சில நக்ஷத்திரங்கள் விழுவது போல தோற்றம். அதனால் சந்திரனின் ஒளி மங்கி விட்டது போல ஒரு தோற்றம். போகட்டும் பூமியை வாயு தூக்கிக் கொண்டு போய் கடலில் வீசட்டும். திசைகளை தீ கங்குகள் பொசுக்கட்டும். என் ஒருவனால் என்ன ஆகப் போகிறது? பிரளய காலம் வந்து விட்டது போலும். அதை தடுக்கவா முடியும். ஒரு சிறு மூங்கில் தடியை வைத்து யானையை ஆட்டி வைப்பது போல யார் இந்த வம்சத்திற்கு தடியாக வந்து நிற்பது. யமராஜனுக்கு யார் சத்ருவாக ஆக முடியும். திடுமென தமையன் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. படுக்கையை உதறி விட்டு எழுந்தான்.
ஆஸ்தான மண்டபம் சென்று தன் ஆசனத்தில் அமர்ந்தான். திடுமென ஒருவன் உள்ளே நுழைந்தான். அவனைத் தடுக்க பலர் ஓடி வந்தனர். யாரிடமும் தெரிவிக்காமல் வந்து விட்டான் என்றனர். பெரும் துக்கத்தை எதிர் கொண்டவன் போல் பெரு மூச்சு விட்டான். அழுக்கு வஸ்திரம் அவன் வெகு தூரத்திலிருந்து வருவதைக் காட்டியது. வாடிய முகம், உயிருடன் இருப்பதற்கே வெட்கப்படுபவன் போல. கீழ் நோக்கிய பார்வை யாரையும் பார்க்க தைரியம் இல்லாதவன் போல. குந்தளன் என்ற குதிரை படை வீரன் என்பது தெரிந்தது. ராஜ்யவர்தனுடன் சென்ற படை வீரன். தமையன் மாளவ படையை சின்னா பின்னமாக்கி விட்டான். கௌட தேச அரசன் மித்ரன். உபசாரமாக தன் வீட்டிற்கு அழைத்து, ஆயுதம் இன்றி இருந்தவனை வஞ்சகமாகக் கொன்று விட்டான்.

மகா தேஜஸ்வீ- சிறந்த ஆற்றலுடையவன், ஏற்கனவே மன உளச்சலில் இருந்தவன், அடக்க மாட்டாத கோபமும் சோகமும் சேர, தவித்தான். இப்படி ஒரு நிலையை எதிர் பார்க்காமலும் இல்லை, எனினும் நேரடியாக நிகழ் காலத்தில் சந்திக்க இந்த அளவு சீக்கிரத்தில் வரும் என்பது முகத்தில் அறைவது போல தாக்கியது. மித்ர துரோகம் – மிகப் பெரிய தோஷமாக சொல்லப் படுவது. நம்பினவனை ஏமாற்றுவது கூடாது என்பதே பால பாடம். உடல் முழுவதும் நடுக்கம் கண்டது. தலை வெடித்து விடும் போல ஆத்திரம் -யாரிடம் காட்டுவது? ஹரனைப் போல பைரவாகாரம்- பயங்கர ரூபம் கொண்டான். ஸ்ரீ ஹரியின் நரசிங்க ரூபமோ எனும் படியும், சூர்ய காந்த சைலம்- சூரியனின் கிரணங்களைப் பிரதிபலிக்கும் கல் -_ அதுவே மலையாக நின்றால் என்பது போல, பன்னிரண்டு ஸுரிய மூர்த்தி போல தகித்து விடுவது போலவும், பிரளயகால மாருதன்- காற்று- போலவும், விந்த்ய மலை வளருவது போல தன் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவனாக. மகா நாகம் விஷத்தைக் கக்குவது போலவும், அந்த நாகத்துக்கு உதவி செய்வது போல அவன் பரிவாரங்களும் வந்து கூடி விட்டன போலவும், வ்ருகோதரன் போல எதிரியை கிழித்து எறியும் வேகம் கொண்டவனாக, மதம் கொண்ட யானையோ, யுக முடிவைக் குறிக்கும் சிறு காரணமாக வந்தவன் போல பொறுக்கமாட்டாத கோபத்துடன் கௌட தேச அரசனை கொல்லாமல் விடுவதில்லை என்று சொல்லி புறப்பட்டான். நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. முன் சசாங்கனும் இதைத் தான் செய்தான். அதை ஏன் மறந்தான்? நண்பன். நெருங்கிய தோழன் என்று எவ்வளவு நம்பிக்கையோடு உவகையோடு சென்றிருப்பான். பெரும் படையை அனாயாசமாக அழித்து வெற்றி கொண்ட கர்வம் கண்களை மறைத்ததா? அந்த மதர்ப்பு தான் தன் ஆயுதங்கள் இல்லாமல் அழைப்பை ஏற்றுக் கொண்டு உடன் சென்றானா? மித்ர துரோகம். வீர லோகத்திற்கே அவமானம். இப்படி ஒருவன் தானும் ராஜ குலம் என்றால் ராஜ குலத்துக்கே இழுக்கு. பாப மார்கத்தை அனுசரித்தவன் இவன் மனிதனா? மகா வீரனுக்கான மதிப்பை குறைக்கும் மரணமா என் தமையனுக்கு வாய்க்க வேண்டும். துரோணர் போல வஞ்சகமாக கொல்லப் பட்டான். இந்த அநாகரீகமான செயலை செய்தவனை விட்டு வைப்பதா? தானே நரகத்தில் விழத்தான் போகிறான். புழுவாக பிறந்து நெளிவான். இவன் பெயரை சொன்னாலும் பாபம். மனம் கொண்ட மட்டும் கௌட அரசனை திட்டித் தீர்த்தான்.
என்னை மட்டுமல்ல இந்த கொடூரமான செயல்கள் ராஜ குலத்தையே பாதிக்கும். சத்ருக்கள் அதிகரிப்பர். நியாயமான ஆட்சி என்பதே அரிதாகும்.
வீட்டிற்குள் மறைத்து வைத்த தீபம் வீட்டையே எரிப்பது போல இவன் அழிவான். படைத்தவன் மூவுலக சூடாமணியாக இருந்த என் தமையனை (ராஜ்யவர்தனன்) அல்பாயுள் கொடுத்து அனுப்பி விட்டு, நல் வழி என்பதற்கே சத்ரு, அந்த காரம் போன்ற கௌடாதிபனுக்கு தீர்காயுள் கொடுத்து விடுவானா? அவனையும் அழிக்க கிரகங்களே வனமாக, அதன் இடையில் நடமாடும் சிங்கம் போல சந்திரனை அனுப்ப (ஹர்ஷவர்தன்) ஏற்பாடு செய்து விட்டிருக்கிறான். யானையை அங்குசம் கொண்டு வெகு நேரம் அடக்கிக் கொண்டிருந்தவனின் அங்குசம் உடைந்து விட்டது. யானையோ மதம் கொண்டு துள்ளியது. அவன் என்ன செய்வான். யானையின் மஸ்தகத்திலேயே அடித்து வீழ்த்தும் சிங்கத்தை கொண்டு வந்தான். அதுவும் வளர்ந்த பலசாலியான சிங்கம். தன் நகங்களாலேயே அடித்து வீழ்த்தியது. துர்புத்தி இவன் எங்கு போவான்? செல்லும் இடங்களில் நான் தொடர்வேன்.
விஷயம் அறிந்து தந்தை புஷ்ய பூதியின் மதி மந்திரியும், சேனாபதியுமான சிம்ஹ நாதன் என்பவர் வந்தார். அவரைக் கண்டதுமே மனதில் நிம்மதி வந்தது. வளர்ந்த சால மரம் போல வைரம் பாய்ந்த உடல். பழுத்த அனுபவத்தால் நிதானமாக சிந்திக்கக் கூடியவர். நல்ல உயரமும், திடமான உடலும் அவரது வயதை கணிக்க விடவில்லை. சர படுக்கையிலிருந்து எழுந்து வந்து விட்ட பீஷ்மரே தானோ, பீஷ்மரைப் பார்த்தே நகைக்கத் தக்கவராக தோற்றம் அளித்தார். முதுமை நெருங்க கூட யோசித்து அருகில் வந்து மெள்ள தொட்டது போல நரை கேசத்தையும், நிலவின் ஒளி போல ஆக்கி விட்டிருந்தது. இயல்பிலேயே பராக்ரமம் உடைய சிங்கத்தின் வழி வந்தவர் போல இருந்தார். புருவங்கள் அடர்ந்து இமைகளை மறைத்தன. பீமன் போன்ற உடல் வாகு. அகாலத்தில் வந்த சரத் காலம் போல எந்த சமயத்திலும் யுத்தம் என்றால் வீறு கொண்டு எழுவார் போல இருந்தார். அவரை பொறுத்தவரை அவருடைய தலைவரான அரசர் இன்னமும் மகன் களிடம் ஜீவித்து இருந்தார். பல யுத்தங்களைக் கண்டவர், அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டி வந்தவர். பாதசாரியாக முன் நிற்பவர். மகா பாரதத்துக்கு இணையான பல போர்க் களங்கள் அவர் உடலில் பல விழுப் புண்களை கொடுத்திருந்தது. எதிரிகளை தன் வசமாக்கிக் கொண்ட பரசுராமர் போலவும், தன் விருப்பம் போல ஆகாயத்தில் பறப்பதை விளையாட்டாக கொண்டிருந்த மந்திர மலையை இந்திரன் நிலையாக நிற்கச் செய்தது போல செய்யக் கூடியவர் தான் இவரும். நதிகளின் நாயகன் எனப்படும் அலை வீசும் கடலின் காம்பீர்யமும் எல்லை மீறாத அதன் அடக்கமும் உடையவர். கொளுத்தும் கோடை வெய்யிலைப் போலவோ, ஈஸ்வரனையே தாங்குகிறேன் என்று பெருமை கொள்ளும் ஸ்ரீ ஹரனின் விருஷபமோ, அடங்கிய கோபத்தில் அரணி கட்டையே என்றும், சௌர்யம்- மதிக்கத்தகுந்த வீரமே செல்வமாக உடையவர், தர்பம் என்ற தற்பெருமை அண்ட முடியாதவர், ஹட யோகியின் இதயம், வாழ விரும்புபவர்களுக்கு உதாகரணம், உத்சாகம் என்ற குணமே மேலோங்கி இருப்பவர். விதியை மீறுபவர்களுக்கு அங்குசம், (யானையை கட்டுப் படுத்தும் கம்பு) துஷ்ட நாகங்களுக்கு அதை அடக்கும் பாம்பாட்டி , பல வீரர்களுக்கு குருவானவர், சீலம், சௌர்யம் இவற்றுடன், சாஸ்திர சம்பந்தமான வாதங்களிலும் ஈடுபடுபவர். (தர்ம சாஸ்திரங்களையும் அறிந்தவர்) சொன்ன சொல் மாறாத பெருமையுடையவர். அவர் குரலே கம்பீரமாக துந்துபி நாதம் போல இருந்ததாம். சிம்ஹ நாதன் என்ற பெயருக்கு பொருத்தமான கர்ஜிக்கும் குரல்.
ஹர்ஷனைப் பார்த்து சொன்னார். தேவ! சிலர் கோகிலங்கள் காகத்திடம் தன் முட்டைகளை இடுவது போல மற்றவர்கள் உதவியால் ஜீவிப்பவர்கள். இவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது. மகா மட்டமான மனிதர்கள். செல்வம் நிலைத்திருக்கும் என்று எண்ணும் அறிவிலிகள். செல்வம் அழிந்தால் தன் நிலை என்ன என்ற எண்ணம் இன்றி தன்னை மறந்த கர்வத்தில் மிதப்பவர்கள். சத்ரமும் சாமரமும் தரும் நிழலுடன் பொறுப்பும் தலைக்கு மேல் இருப்பதை உணராமல் இருப்பவர்கள் ஜடமான – மந்தித்து போனது போல புத்தி உடையவர்கள். ஸூரியனின் வெப்பத்தையே உணராமல் எதை சாதிக்கப் போகிறார்கள். இந்த கிணற்றுத் தவளை கௌடாதிபதி அல்பன். பயத்தால் நடுங்குபவன். மிக அதிகமான பயம், வீரனாக எதிர் வருபவனை நிமிர்ந்து கூட பார்க்க தைரியம் இல்லாத கோழை. தன்னை கருவியாக பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்பதைக் கூட உணர முடியாத அறிவிலி. இவனிடம் செல்வத்தை அளிக்கும் திருமகள் இரு இரவுகள் கூட தங்கமாட்டாள். இவன் அறிவானா, நல்ல குலத்தில் பிறந்தவன், பெருந்தன்மையுடையவன், தன் மானம் உள்ள மானி, தங்கள் குலத்துக்கு ஆபத்து வந்தாலும் கலங்காமல் உடனே தூக்கி நிறுத்தி விடுவார்கள் என்பதை. இவர்கள் சுத்தமான வீர்கள். நீரிலும் ஜொலிப்பார்கள் வடவாக்னி போல. திருமகளை அடைய எவரும் கனவிலும் சிந்திக்க முடியாத அரும் செயல், அதற்காக பாற்கடலையே கடைந்தார்கள். கையில் வாளும், வஜ்ரம் போன்ற புஜங்களும் இருக்க எதற்கு தாமதிக்க வேண்டும். புஷ்யபூதியின் வழி வந்தவன், ப்ரபாகர வர்மனின் மகன் , வடவா என்ற அக்னி போன்றவன். மகா புருஷன், ஆற்றலுடையவன் என்பதைக் காட்டு. பூமியை ஆயிரம் தலைகளால் தாங்கும் ஆதி சேஷ நாகம், இது போன்ற கசடர்களை ஏன் வீணாக தாங்க வேண்டும். உதறட்டும். வெறும் மண் மூட்டை போன்றவர்கள். திக்கஜங்கள் போல அடக்க முடியாத வீரன் கோபத்தை அதே போல வீரர்கள் தான் அறிவார்கள். ஸூரனாக இருப்பவன் ஆதவனின் ஆற்றலை அடைகிறான். கோழை தான் முயல் போல நடுங்குவான். காண பிரகாசமாக இருப்பது போல இருந்தாலும் சந்திரனுக்கு சுய ஆற்றல் கிடையாது, மகிஷம் யம ராஜனுடைய வாகனம். அதை மகிஷத்தின் கொம்புகளின் இடையில் யமன் வசிப்பதாகச் சொல்லுவர். மகிஷத்துக்கு கொம்பு கிடையாது, ஆனால் மனிதனுக்கு யுத்தம் செய்ய அவன் புஜங்கள் உண்டு. உன் மனம் படும் பாட்டை நானும் அனுபவிக்கிறேன். எந்த வித நியாயமும் இல்லாமல், வீரமோ, தேவையோ இன்றி உன் உடன் பிறந்தவர்கள் தாக்கப் பட்டுள்ளார்கள். பெண்களானால் மார்பில் அடித்துக் கொண்டு அழுது தீர்த்து தங்கள் துக்கத்தை வெளியிடலாம். உன் உள் மூச்சில் இதயத்தில் நுழையும் இந்த ஆத்திரம், சத்ருவின் வீட்டாரின் கண்களிலிருந்து இதே போல பெருகும் கண்ணீர் வர பதிலடி கொடுத்து வெளி வரட்டும்.. மன வருத்தத்தை வெளிக் காட்டாதே. மாவீரன் நீ, உனக்கு அது தான் பொருந்தும். எழுந்திரு.
சரீரம் நிரந்தரமல்ல என்று உணர்ந்த பெரியவர்கள், சித்தர்கள், உறவு முறைகள், பந்த பாசங்களுக்கு ஆட்படுவதில்லை. தீரன் என்பவன் உடல் மனம் இரண்டிலும் திடமாக இருக்க வேண்டும். என்றும் நிலைத்து நிற்கும் புகழுடல் தான் இலக்கு. இயற்கையான உயர் மணிகளின் மேல் சேற்றை வாரியடித்து அதன் ஒளியை குறைக்க முடியாது. அது போல நீயோ நேர்மையே உயிராக உடையவன். அதிலும் நேர்மையாளர்கள், சத்யவாதிகள் என்ற வரிசையில் முதன்மையானவன். முன் நிற்பவன். அறிஞர்களிலும் உனக்கு சமமாக மற்றொருவர் இல்லை எனும்படி கற்றும், கற்றதை உணர்ந்தும், வாழ்வில் அனுசரித்தும் தேர்ந்தவன். அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாகரணமாக இருந்த உன் தந்தை அதே போல சிறந்த அரசனாக இரு.
இந்த நிகழ்வுகள், இதன் நினைவுகள் சோகம் என்ற புகையாக உன்னை ஸூழ்ந்து உள்ளன. அதை அறிவு-ஞானம் என்ற நீர் பெருக்கால் அனைத்து விடு. உன் புஜங்களில் உறைந்திருக்கும் தீரம் என்ற குணம் அதை குளிர்விக்கட்டும். உன் வசம் உள்ள நற்குணங்களே கவசங்களாக, கோட்டைகளாக இருந்து உன்னை காக்கட்டும். எழுந்திரு.
கௌட அரசன் மட்டுமா? அதோடு விடுவானேன். உன் செயல்களால் இனி எந்த அரசனோ, சாமான்யனோ, இது போன்ற ஒரு கபடமான செயலை செய்யத் துணியாமல் இருக்கும் படி பலமான தாக்குதலாக அது அமையட்டும். உலகத்தில் எந்த மூலையில், பூமியை விரும்பும் (ஆட்சி செய்ய விரும்பும்) ஒருவன் தவறான வழிகளில் அரசை அபகரிக்க நினைப்பவர்களுக்கு சவாலாக இருக்கட்டும். அவர்களின் வம்சமே தலையெடுக்க விடாமல் வேரோடு அறுப்பாய். எதிரி வீரர்களின் ரத்தம் தோய்ந்த உடல்களை கூட்டம் கூட்டமாக வந்து கழுகுகள் உண்ணட்டும்.
உன் கண்ணீரின் வெப்பத்தை தணிக்க குலத்தை அழிக்க வந்த கோடாலி காம்புகளாக வளைய வரும் குணமற்ற துஷ்டர்களின் பேராசையை பொசுக்கி விடு. காரணமின்றி பொருளுக்காக தங்கள் வீரத்தை காட்டும் கூட்டத்தை வளர விடாமல் வேரோடு பிடுங்கி எறி. ராஜ சிங்காசனம் என்பதில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டது போல இறுமாந்திருக்கும் அரசர்களை உலுக்கி எழுப்பி அந்த செயலற்றத் தன்மையை விரட்டு.
எங்கும் ஜய சப்தம் ஒலிக்கும் படி வெற்றி வீரனாக வா. வெறும் உடல் அலங்காரங்களோ, சந்தனாதி வாசனை திரவியங்களோ தேவையில்லை. . உன் தந்தை, அவர் தந்தை பயனித்த வழி இது. உலகில் அனைவரும் வியந்து பாராட்டிய வழி – இதிலேயே நீயும் முன்னேறி வர வேண்டும். இந்த சோகத்தை விடு. குலக்ரமத்தில் வந்த ராஜ்ய லக்ஷ்மீ உனது. பெண் குரங்கை விரட்டும் ராஜ சிங்கமாக எதிரிகளை ஓட ஓட விரட்டு. அது தான் உனக்கு பொருந்தும் செயல்.
தேவ! அரசன் தெய்வ கதியை அடைந்த பின், துஷ்டனான கௌடன் என்ற பாம்பு கடித்து மடிந்த உன் சகோதரன், ராஜ வர்தனனுக்குப் பின் இந்த அரசுக்கு நீ ஒருவனே கதி. நம் பிரஜைகளை சமாதானப் படுத்து. அரசர்களின் தலவனாக, உன்னை ஆதரிக்கும் அரசர்களுக்கு சரத் கால சூரியன் போல இதமான நிழலாகவும், , எதிர்ப்பவர்களுக்கு கோடை கால கடும் வெப்பமான, அனல் காற்றாகவும் இரு. .
பரசு ராமரை உன் முன்னோடியாகக் கொள். தபஸ்வியாக, வன மிருகங்களோடு தவம் செய்து வந்த அவர் தந்தை. இயல்பான அந்தணராக வேத சாஸ்திரங்களைக் கற்று வளர்ந்து மிருதுவான குணமும், தயையும், எவருக்கும் கெடுதலை மனதால் கூட நினைக்காதவராக இருந்தவர் தானே. தன் தந்தையை அநியாயமாக ஒரு அறிவிலி அரச குடும்பத்தன் கொன்றான் என்பதற்காக , சபதம் செய்தார். தன் வில்லின் டங்கார நாதத்தால், உரக்க அறிவித்தார். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்யும் அரச குலத்தை அழிப்பேன் என்று புறப்பட்டார். திக்கஜங்கள் அஞ்சின. இருபத்தேழு முறை உலகை சுற்றி வந்து ராஜ குலத்தை அழித்தார். பிறவியுடன் வந்த ‘ தான் ‘ என்ற கர்வம், செல்வந்தன் என்ற தகுதி ஒன்றே உடைய கோழைகள், மற்றவர்களை துச்சமாக நினைக்கும் அறிவிலிகள் என்றும், பரம்பரை அரசன் என்று மதர்ப்புடன் இருந்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். தலை சிறந்த தேவன் அவர் தான்.
அது போல, நீயும் இன்றே சபதம் செய். உன் கடமையாக இந்த செயலை ஏற்றுக் கொள். அதமன் கௌட பாதனில் ஆரம்பி. உன் வில்லுடன் வீர யாத்திரை மேற்கொள். . உயிருடன் உள்ள அனைத்து துஷ்ட, தந்திர சாலிகளான அரச குலம், யாரானாலும் அவர்களை ஒழிக்க தண்ட யாத்திரை, அதன் கொடி உன் வில்லாக இருக்கட்டும். இந்த கூட்டம் ஏமாற்றி அபகரிக்கலாம் என்று நினைக்கும், நிந்திக்கும் செயலை செய்து விட்டு வென்றதாக கொக்கரிக்கும் குள்ள நரிகளுக்கு, அந்த: புரத்தில் சந்தனம் பூசிக் கொண்டு அமர்ந்திருப்பதே அரசன் பொறுப்பு என்று உள்ள மந்த புத்திகள், சோம்பித் திரிபவர்கள் இவர்களுக்கு கடுமையான தாஹ ஜ்வரமாக இருப்பாய். அவமானத்துக்கு ஒரே பரிகாரம் சத்ருவின் வினாசம் தான். இடும்பனை ஜயித்த பீமன், ஜாமதக்னி- ஜமதக்னி மகன் பரசு ராமன் மீதி வைத்த இடும்பன் போன்ற பலசாலிகள் அக்கிரமாக செய்ததை தடுத்தான். இவைகளை ஏன் சொல்கிறேன் – உனக்கே உன் தகுதி, போர் முனையில் உள்ள ஆற்றல் இவைகளை நினைவு படுத்தவே.
ஹர்ஷ தேவன் இதைக் கேட்டு பதிலளித்தார். மகான் தாங்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு அழகாக உணர்த்தி விட்டீர்கள். இந்த துக்க சம்பவங்கள் நேர்ந்திருக்கா விடில், என மனோ ரதங்கள், வானளவு பரந்திருந்தன. ஆதி சேஷனுக்கு இணையாக ப்ரும்மாண்டத்தையே சுற்றி வர நினைத்திருந்தேன். வானத்து தாரகைகளை நெருங்கி க்ரக கணங்களை ஆராய எண்ணியிருந்தேன். (என் புருவ வளைவுகளால் அளக்க – கவியின் சொற்கள். -பார்வை- எதிரில் காண்பது) வணங்கா முடிகளான பெரும் மலைச் சிகரங்களை என் இரு கைகளால் அணைக்க விரும்பி இருந்தேன். தன் தேஜஸால் தகிக்கும் ஸூரியனின் கிரணங்கள் என்ற கைகளுடன் என் கைகளை கோர்க்க விரும்பினேன். மிருக ராஜன் என்ற பெயருடன் உலவும் ராஜ சிங்கத்தின் மீது அமர்ந்து என் பாதங்களால் அதன் பிடறி மயிரை அளைய விரும்பி இருந்தேன். சுதந்திரமாக செயல் படும் லோக பாலர்களை அணுகி திசைகளின் பொறுப்பாக இருப்பவர்கள், தன் விருப்பம் போல ஆட்சி செய்வதா, அவர்களிடமும் என் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை வசூலிக்க விரும்பினேன். இந்த கற்பனைகளுக்கு, என் மனதின் அடங்கா அறிவு தாகம் அடங்க இனி வழியில்லை.
இந்த துக்கமும், அதனுடன் எழுந்த என் ஆத்திரமும் என்னை செயலற்றவனாக்கி விட்டன. இந்த அதமன், சண்டாளன்,, துஷ்டன், பாபி, உலகில் நிந்திக்கப் படும் செயலைச் செய்தவன், உயிருடன் இருக்கும் வரையில், என் சோகம் தணிய வழியில்லை. இவர்களை அடியோடு அழிக்கும் வரையில், என் உடன் பிறந்தானை ஏமாற்றி கொல்ல துணிந்தவனை அதே போல அழிக்கும் வரையில் என் கையால் விடும் ஜலாஞ்சலி- நீர்க் கடனை அவர் ஏற்பாரா? கௌடாதமனை சிதையில் எரியச் செய்வேன், அதிலிருந்து வரும் புகை மட்டுமே என் கண்ணீரை வற்றச் செய்யும்.
ஆர்ய! உங்கள் பாதங்களில் வணங்கி உங்கள் ஆசியுடன் சபதம் செய்கிறேன். எண்ணி சில நாட்களில், என் வில்லின் உதவியுடன், சபல புத்தியுடைய நரபதி என்று பெயர் வைத்துக் கொண்டு, யாருக்கோ சேவகம் செய்யும் கௌடன் குலத்தை நிர்கௌட கௌடன் என்ற பெயரே இல்லாமல் செய்து பூமிக்கு பெருமை அளிக்கிறேன். அவள் பாரம் குறையும். வீரமோ, கொள்கையோ இன்றி அவன் யாருக்காக இதைச் செய்தானோ, அந்த ஓனாய்களாகத் திரியும் மற்றவர்களையும் சேர்த்து அழிப்பேன். அப்படி செய்யா விட்டால் இந்த உடலை தரித்து இருக்க மாட்டேன். நானே நெருப்பில் வீழ்வேன் ‘
அருகில் இருந்த அவந்திகன் என்பவனிடம் எழுது என்று சொல்லி, ‘ரவியின் ரத சக்கிரத்தின் ஒலியைக் கேட்டு கிழக்கு திசையில் சாரண தம்பதிகள் எழுந்து உதயாசலத்தை விட்டு கிளம்புவார்கள். தென் திசையில், த்ரிகூட பர்வதம் வரை அந்த சக்கரம் செல்லும் மத்ய பாகம் – அந்த மலைப் பகுதிகளில் ஸ்ரீ ராமர் நடந்து சென்று இலங்கையை வென்று அதை வானரங்கள் குதறியதை சரித்திரமாக கற்களில் செதுக்கி வைத்திருக்கும், அதைக் கடந்து மேற்கு திக்கில் வருணனின் தேசம். அங்கு அழகிய பெண்கள் கால்களின் கொலுசுகள் உரசி வரும் சப்தமே குகைகளில் எதிரொலியாக கேட்கும். அது தான் அஸ்தாசலம் அது வரை, வடக்கில் யக்ஷிணிகள் வசிக்கும் இடம். அவர்களின் உடல் மணமே சுகந்தமாக இருக்கும். பாறைகள் நிறைந்த இடம் அது. குகைகள் நிறைந்த அந்த கந்தமாதனம் எனும் மலையில் உள்ள அரசர்கள் வரை அனைவரும் கர தானம் – வரி கொடுக்க, அல்லது சஸ்திரங்கள் எடுத்துக் கொண்டு போரிட தயாராக ஆகுங்கள். அமர திசைகளுக்கு செல்வதோ, தலை வணங்கி வில் முதலிய ஆயுதங்களை எடுப்பதோ, உங்கள் விருப்பம். கவனமாக கேளுங்கள் – இது ஆணை. வில்லின் நாணை பூட்டுவீர்களோ, தலையில் அணிந்துள்ள மகுடங்களை என் பாதங்களில் சமர்ப்பணம் செய்வீர்களோ, அந்த மகுடங்களில் உள்ள உள்ள உயர் மணிகளின் ஒளியே என் பாதங்களுக்கு வர்ண குழம்பாக விளங்கும். ‘ இந்த செய்தியை அனுப்பு என்று சொல்லிவிட்டு, ராஜ பவனத்தை விட்டு, கூடியிருந்த சிற்றரசர்கள், அரசு அதிகாரிகளை அனுப்பி விட்டு தன் நித்ய கர்மாக்களை செய்ய அரண்மனைக்குள் நுழைந்தான். நீராடி மனம் ஒன்றி தினம் செய்யும் அக்னி வந்தனங்களை முடித்தான். அன்றைய தினம் அவனுடைய பிரதிக்ஞை – சபதத்தைக் கேட்டு வியந்தபடியே மாலை வந்தது. மூவுலகிலும் வெப்பமும் அடங்கியது, அவன் மனதின் பாரமும் இறங்கியது.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
