6. ஞானங்களின் விளைநிலம்

இந்திய மருத்துவ முறைகள் – I

பிரம்மனும் விஷ்ணுவும் கூடவே நாரதரும் அடிமுடியிலா சிவனை அளக்க செல்கின்றனர். வழியில் விண்கடலின் கரையில் அமர்ந்து மணலை தன் கமண்டலத்தில் அள்ளி அப்பால் இட்டுக்கொண்டிருக்கும் அகத்தியரை பார்க்கிறார்கள். என்ன செய்து கொண்டு உள்ளீர்கள் என்ற நாரதரின் கேள்விக்கு மணலை அளந்து கொண்டு இருக்கிறேன் என்கிறார் அகத்தியர். சிரித்துக்கொண்டே அரியும், அயனும் அடுத்து கடலை அளப்பீரா? என்று கேட்க, அகத்தியர் இல்லை நான் அளந்து கொண்டு இருப்பது என்னை, எனக்கு எப்போது சலிக்கிறதென்று பார்க்கிறேன் என்கிறார். சலிக்காத ஒன்றை அளக்க செல்கிறோம், கூட வாருங்கள் என்று நாரதர் அவரையும் அழைத்துச் செல்கிறார்.

அனல் பெரும்தூணை அடைந்து அதன் அடி தேடி அரியும், முடி தேடி அயனும் செல்கிறார்கள். அகத்தியர் விளையாடும் பொருளை ஏன் அளக்கவேண்டும்? அளந்தால் ஆட்டம் முடிந்துவிடுமே என்கிறார்.

தேடிச்சென்ற விஷ்ணு தம எனும் ஊழ்க சொல்லுடனும், பிரம்மா  பெருந்தழலின் கொழுந்து என உருவகமாக  தாழம்பூவுடனும் மீள்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, நாரதர் மூவரும் நாங்கள் அறியும் ஒரு இருப்பாக எழுந்து அருள்புரிக என வேண்ட, சிவத்திடமிருந்து இடியான சிரிப்பொலி மட்டும் கிடைக்கிறது.

நாரதர் அகத்தியரிடம் நீங்கள் சென்று முயலுங்கள் என்கிறார். அகத்தியர் சென்று அந்த அனலை தன் கமண்டலத்தில் அள்ளிக்கொண்டு வந்து காட்ட, அந்த அனல் கமண்டலத்தில் குளிர்ந்த சிற்றலைகளுடன் ஒளி கொண்டிருந்தது.

இந்த புனைவுத்தருணம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு கிராதம் நாவலில் வருகின்றது1.

மனித நாகரீகத்தின் ஆரம்பகால தொன்ம கதைகளின் ஞானம் அறியமுடியாதது, கையாள முடியாதது என்பதிலிருந்து அறியமுடியா ஞானத்தை தனக்கு அறியக்கூடிய வடிவில் மாற்றி எடுத்து அறிந்து கொள்ளும் முறை இந்திய ஞானத்துக்கு மிக மிக அணுக்கமானது.

அகத்தியரிலிருந்தே தமிழ் மொழியாகிறது. காவேரி தமிழ் நிலத்தில் பாய்கிறது. அவரிலிருந்தே தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் தொடங்குகிறது. அவரிலிருந்தே ஆயுர்வேத மருத்துவத்தின் தொடக்கத்தைக் காணும் ஒரு தரப்பும் உள்ளது.

ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகம், வர்மம் போன்ற இந்திய மருத்துவமுறைகள் இன்றும் பயிலப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது என்பது அவற்றை அறிந்துகொள்ள நமக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு.

வேத கால மருத்துவம்

வேதங்களின் காலகட்டம் பொ யு மு 1500 – 500 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒப்புநோக்க நமக்கு எகிப்தில் கிடைக்கும் பாப்பிரஸ் சுவடிகளின் காலம் பொ யு மு 2500 சார்ந்தவை என்பது குறிப்படத்தக்கது.

சிந்து சமவெளி நாகரீகம் உருவாகும் முன்னே அதன் முன்னோடி என கருதப்படும் shahr-e sukhteh நகரத்தில் கிடைத்த செயற்கையாக உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்ட கண்ணின் காலம் பொ யு மு 2800 என்பதும், Mehrgarh பகுதியில் கிடைத்த இன்றிலிருந்து சுமார் 9000 ஆண்டுகள் முன் இருக்கும் என கருதப்படும் துளையிட்டு சிகிச்சை செய்யப்பட்ட பல்லும் இந்த நிலத்தில் ஒரு நீண்ட மருத்துவ வரலாறு இருப்பதை ஊகிக்க இடமளிக்கிறது2,3.

சிந்துவெளி நாகரிகத்தில் பொது சுகாதாரம் குறித்த தரவுகள் நமக்கு கிடைத்தாலும், மருத்துவம் பற்றி அறிய இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.

உடலில் தேங்கி உள்ள விஷங்கள், கண்ணுக்கு தெரியும் கிருமிகள் (த்ருஷ்டம்), கண்ணுக்கு தெரியாத கிருமிகள் (அத்ருஷ்டம்), திரி தாதுக்களில் ஏற்படும் சமநிலைக்குலைவு போன்றவை நோய்க்கான காரணமாக வேதத்தில் கூறப்படுகின்றன. திரி தாதுக்கள் பற்றி ரிக் வேதத்தில் காணக்கிடைக்கும் குறிப்புகள் வாதம், பித்தம், கபம் ஆக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வேதங்களில் காய்ச்சல், இருமல், கட்டிகள், மூத்திர அடைப்பு, மூலம், வீக்கம், தொண்டைக் கட்டிகள், யானைக்கால் நோய், காசநோய், வாய்ப்புண், அடி மற்றும் வெட்டுக் காயத்தினால் ஏற்படும் நோய்கள், வாந்தி, பேதி, இருதய நோய்கள், அர்மா (கண்ணில் வளரும் ஒரு சதை), சர்ம ரோகம், குஷ்டம் (பலவித தோல் நோய்களின்

தொகுப்பு), வெண் குஷ்டம், உன்மாதம் (மன நோய்கள்) போன்ற நோய்களின் குறிப்புகள் காணப்படுகின்றன.

மஞ்சள், பிருஷ்ணிபர்னி, சதாவரி, சகதேவி, நாயுருவி, அரசமரம், அருகம்புல், சீந்தில், ரோஹிணி, ஆலமரம், மருதம், கொட்டம், ஆடு தீண்டாப்பாளை, துளசி, நெல்லிக்காய் போன்றவற்றின் மருத்துவ குணங்களும், பயன்பாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன

பாதரசம், ஸ்வர்ணம் (தங்கம்), ரஜதம் (வெள்ளி), தாமிரம் (செம்பு), அயஸ் (இரும்பு), காம்ஸ்யம் (பித்தளை), நாகம் (துத்தநாகம்), வங்கம் (காரீயம்) போன்றவற்றில் உருவான உலோக மருந்துகளும், ஹரிதாளம் (ஆர்செனிக்) போன்ற இரசாயன மருந்துகளும், குங்கிலியம் போன்ற பிசின்களும், நாயின் எச்சில் போன்றவை மேல் பூச்சாக பயன்படுத்தப்பட்ட குறிப்புகளும் காணப்படுகின்றன.

மேலும் பல்வேறு ஹோமங்கள், மந்திரங்கள், தாயத்து போன்றவையும், நீர், காற்று, அக்னி, சூரியனின் சக்தி போன்றவற்றையும் குணமாக்க பயன்படுத்தியதைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

அதர்வண வேதத்தில் உடலின் பல்வேறு பாகங்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. சதபத பிராமணம் மனிதனுக்கு 360 எலும்புகள் உள்ளன என்கின்றது.

வேதங்களில் காணப்படும் குறிப்புகளான போரில் காலை இழந்த விஷ்பலாவிற்கு இரும்புக் காலைப் பொருத்துதல், ஸ்யாவஸ்யாவின் அறுபட்ட உறுப்புகளை இணைத்து அவனுக்கு உயிரளித்தது, குருடனான ராஜஸ்வாவுக்கு கண்களை பொருத்துதல் போன்ற குறிப்புகள் அறுவை மருத்துவத்தின் முன்னோடியாக ஊகிக்க வாய்ப்புள்ளது.

அஸ்வினி தேவர்கள் சியவன முனிவரின் முதுமையை நீக்கி, இளமையை மீட்டளித்தது (இவர்கள் தயாரித்த மருந்தை சியவனர் உண்டதால் அம்மருந்து சியவனப்ராசம் என அழைக்கப்படுகிறது) பற்றிய குறிப்பும் காணக் கிடைக்கின்றது4.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பதற்கு நீண்ட வாழ்விற்குறிய ஞானம் என்று பொருள் கொள்ளலாம். ஆயுர்வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாக கருதப்படுகிறது. வேதகாலத்தில் இருந்து தொடர்ந்த ஒரு மருத்துவமுறை தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கலாம்.

இந்திய தொன்மத்தில்  சூரியக்கடவுளின் மகன்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவக்கடவுளாக குறிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் விஷ்ணுவிடமிருந்து பிரம்மனுக்கு, பிரம்மனிடமிருந்து தட்ச பிரஜாபதிக்கும், அவரிடமிருந்து அஸ்வினி தேவர்களுக்கும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.  அஸ்வினி தேவர்களிடமிருந்து இந்திரனுக்கு கற்பிக்கப்படுகிறது. அதேநேரம் பூமியில் நோய்கள் பெருகி வேள்விகள் தடைபட, ரிஷிகள் கூடி இந்திரனை வேண்டுகிறார்கள். அவ்வாறு இந்திரனிடமிருந்து பரத்வாஜ முனிவருக்கு ஆயுர்வேத ஞானம் வந்து சேர்கிறது.

பரத்வாஜரிடமிருந்து அவரது சீடரான புனர்வசு ஆத்ரேயர்க்கும், அவரிலிருந்து அவரின் சீடர்களான அக்னிவேசர், பேல், ஜதுகரன், பராசரர், ஹாரித், ஷார்பானி ஆகிய ஆறு சீடர்களுக்கும் வந்து சேர்கிறது. இவற்றில் அக்னிவேசர் எழுதிய அக்னிவேஷ தந்திரம் நூல் மட்டும் நமக்கு கிடைக்கிறது. இம்மரபு ஆத்ரேய பரம்பரை எனப்படுகிறது. சரகர் இந்த மரபில் வந்தவர்.

தேவர்களும், அசுரர்களும்  மரணமில்லா பெருவாழ்வு தரும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடையும்போது தன்வந்திரி வெளிப்பட்டார். தன் நான்கு கரங்களில் அமுத கலசம், சக்கரம், மூலிகை மற்றும் ஆயுர்வேத நூலுடன் தோன்றினார். தன்வந்திரி, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இம்மரபு தன்வந்திரி பரம்பரை எனப்படுகிறது. சுஷ்ருதர் தன்வந்திரியின் சீடனாக கருதப்படுகிறார்.

சரகர்

சரகர் காலம் பற்றி நமக்கு கால குழப்பம் உள்ளது. சுஸ்ருதர் காலத்துக்கு முந்தையவர் என்றும், பொ யு மு 200 வாழ்ந்தவர் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகிறது.  சரகரின் சரக சம்ஹிதை ஆயுர்வேதத்தின் மூல நூலாகும்.

சுஸ்ருதர்

சுஸ்ருதர், பொ யு மு 800 களில் வாரணாசியில் வாழ்ந்தவராக நம்பப்படுகிறது. காலம் பற்றி நமக்கு கால குழப்பம் உள்ளது. சதபத பிரமாணதின் அடிப்படையிலும், தீக்ஷித் எழுதிய பாரதிய ஜோதிட சாஸ்திர வானியல் அடிப்படையிலும் சுஸ்ருதர் காலம் பொ யு மு 3000 ஆண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுஸ்ருதர், மருத்துவம் பயில ஆறு ஆண்டுகள் மருத்துவ கல்வியை முன்வைக்கிறார். நோயாளிக்கு எந்த தீங்கும் இழைக்க மாட்டேன் என்று மருத்துவர் உறுதிமொழி எடுக்க முன்மொழிந்தார்.

சுஸ்ருதர் மேற்கொண்ட நெற்றியில் இருந்து தோலை எடுத்து அறுபட்ட மூக்கில் வைத்து தைத்து சீராக்கும் மூக்கு அறுவைசிகிச்சை (Rhinoplasty) 300 ஆண்டுகள் முன்வரை இந்தியாவில் புழக்கத்தில் இருந்து பின் பிரிட்டிஷ் வழியாக சென்று பிளாஸ்டிக் சர்ஜரி ஆக பரிணாமம் அடைந்ததாகக் கருதப்படுகிறது.

கண்புரை (Catract) அறுவை சிகிச்சையும் சுஸ்ருதரால் மேற்கொள்ளப்பட்டது பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

சுஸ்ருத சம்ஹிதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகை குறிப்புகள், 800க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அறுவைசிகிச்சை கருவிகள் பற்றி துல்லியமான வர்ணனைகள், படங்கள் சுஸ்ருத சம்ஹிதையில் கிடைக்கின்றன.

சுஸ்ருதர், வாத பித்த கப தோஷங்களோடு இரத்தம் (ரக்த) சேர்த்து சாதுரத தோஷம் சமநிலைக்குலைவே நோய்க்கான காரணம் என்று முன்வைக்கிறார். கிரேக்க மருத்துவத்தில் நாம் பார்த்த நான்கு ஹியுமர் தத்துவம் இங்கிருந்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வாக்பட்டர்

வாக்பட்டரின் காலம் குறித்து நமக்கு தெளிவாக தெரியவில்லை. பொ யு மு 200 இருந்து பொ யு 1300 வரை பல்வேறு காலங்களில் அவர் வாழ்ந்து இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் தன் குருவாக புத்த மதத்தை சார்ந்த அவலோகிதரைக் கூறினாலும், வைதீக மதத்தை சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. சரகரின் நேரடி மாணவர் என்ற குறிப்பும் காணப்படுகிறது.

சரக சம்ஹிதை, சுஸ்ருதர் சம்ஹிதை, சரக – சுஸ்ருதர் கோட்பாடுகளை தொகுத்து வாக்பட்டர் எழுதிய அஷ்டாங்கஹிருதயம் ஆகிய மூன்றும் ஆயுர்வேதத்தின் அடிப்படை நூல்களாக பயிலப்படுகிறது.

தத்துவ பின்புலம்

ஆயுர்வேதத்தில் இந்திய ஞான மரபின் ஆறு தரிசனங்களில் வைசேசிகம் – நியாயம், சாங்கியம் – யோகம் தத்துவ மரபின் ஆழமான பாதிப்பை செலுத்தியுள்ளதைக் காணலாம்.

ஒரு புரிதலுக்காக சுருக்கமாக பார்க்கலாம்.

சாங்கியம்

ஆயுர்வேதம் இருமை நோக்குடைய சாங்கிய தத்துவத்திலிருந்து முளைத்து எழுந்ததென்பது பரவலாக ஏற்றுக்கொள்ளபட்ட ஒன்று.

தோன்றாத (அவியக்கத) நிலையில் மூலப்பிரகிருதி மற்றும் புருஷன் இருந்தது. புருஷன் வடிவற்ற, நிறமற்ற, பண்புகள் ஏதுமில்லாத தூய தன்னுணர்வு. பிரகிருதி வடிவம், நிறம், பண்புகள் கொண்ட படைப்பு சக்தி. பிரகிருதியே முதன்மை வடிவம். இந்த பிரபஞ்சம் தோன்ற காரணமான அனைத்து விசைகளும் சத்வ, ரஜோ, தாமசம் ஆகிய மூன்று பண்புகளும் கொண்டது. புருஷனின் தொடர்பே இந்த பிரகிரதியின் படைப்பு நிலையை உருவாக்கியது. அதுவே நாம் காணும் இந்த பிரபஞ்சம் (வியக்தம்).

இந்தப் படைப்பு, இரண்டாவது வெளிப்பாடாக மகத் (புத்தி) உண்டு பணணுகிறது. மகத் பிரகிருதியின் சத்வ, ரஜோ, தமோ குணங்களை செயலற்ற நிலையில் கொண்டுள்ளது.

ரஜோ குணம் செயலூக்கம் கொண்ட படைப்பு சக்தியாகும்.

தமோகுணம், ரஜோ குணத்துக்கு எதிரிடையான செயலற்ற சக்தி நிலை. சத்வகுணம் தூயநிலையாகும். ரஜோ மற்றும் தமோ குணத்தில் சேராதவை சத்வ குணமாகும்.

புத்தி மூன்றாவது வெளிப்பாடாக  அகங்காரத்தை உண்டாக்குகிறது. அகங்காரம் உண்டான கணத்திலிருந்து புத்தி அகங்காரத்தில் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. அகங்காரத்தின் வெளிப்பாட்டு நிலை உயிர் சக்தியான பிராணனை தோற்றுவிக்கிறது. பிராணன், மகத் கொண்டுள்ள செயலற்ற சத்வ, ரஜோ, தமோ குணங்களை செயலூக்கம் கொண்டதாக மாற்றி அகங்காரத்துடன் இணைக்கிறது.

சத்வ மற்றும் தமோ குணங்கள் ரஜோகுணத்தின் செயல்தன்மையால் உயிருள்ள மற்றும் ஜட பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறது.

ரஜோகுணம் சத்வகுணத்துடன் இணைந்து உணர்ச்சிநிலையான பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறது. இது கண், காது, தோல், மூக்கு, நாக்கு என 5 ஜனேந்திரியங்கள், வாய், கைகள், கால்கள், ஆசனவாய் பிறப்புறுப்பு என 5 கர்மேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகியவற்றை உண்டாக்கியது.

ரஜோகுணம் தமோகுணத்துடன் இணைந்து சுவை, மனம், ஒளி, தொடுஉணர்ச்சி, ஓசை ஆகிய ஐந்து தன்மாத்திரைகளை தோற்றுவிக்கிறது. மேலும் ரஜோகுணம் தமோகுணத்துடன் இணைந்து மண், வானம், தீ, நீர், காற்று என பஞ்சபூதங்களை தோற்றுவிக்கிறது.

ஆயுர்வேதம் இந்த தத்துவங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. சரகர் பிரகதி மற்றும் புருஷனை ஒரேநிலையாக கூறுகிறார். சுஸ்ருதர் அவை இரண்டையும் இரண்டு வேறுபட்ட நிலைகளாக காண்கிறார். மேலும் சரகர் சாங்கிய தத்துவத்திலிருந்து வேறுபட்டு பத்து இந்திரியங்கள் பஞ்சபூதத்திலிருந்து உருவாகியது என்று கருதுகிறார்.

இதிலிருந்தே ஆயுர்வேதம் மனித உடலுறுப்புகள் பஞ்சபூத வடிவங்கள் என கருதத்தொடங்குகிறது. ஆயுர்வேதம், உறுப்புகள் இந்த பஞ்சபூதத்தில் இருந்து உருவாகியது என்பது அவற்றை குணப்படுத்த கூடிய தத்துவமாக முன்வைக்கிறது. எனவே அவை உருவற்ற அகங்காரத்திலிருந்து உருவாகியது என்பதை மறுக்கிறது.

சத்காரிய வாதம்

ஆயுர்வேதம் ஆரோக்கியம், நோய் ஆகிய இரண்டும் ஒரு காரணத்தின் விளைவுகள் என்று கூறுகிறது. காரணங்களை உணர்ந்து, தவிர்த்து, சரியானவற்றை ஏற்று வாழ்வது ஆரோக்கியத்திற்குத் துணைநிற்கும் என்று கருதுகிறது. சுஸ்ருதர் சுபாவம் (இயற்கை), ஈஸ்வரன் (தேவன்), காலம், யதேச்சை (தற்செயல்), நியதி (நிச்சயதன்மை), பரிணாமம் (மாற்றம்) என்ற ஆறுவகை காரணங்களை குறிப்பிடுகிறார்.

மூன்று தோஷங்கள்

சாங்கிய தரிசனத்தின் மூன்று குணங்களான சத்வ, ரஜோ, தமோ ஆகியவை ஆயுர்வேதத்தின் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்களாக பரிணாமம் அடைகின்றன. இவற்றின் சமநிலையில் ஏற்படும் சீர்குலைவே நோய் என்று வரையறை செய்யப்படுகிறது.

மேலும் நீர்,காற்று, நெருப்பு, மண், வான் என ஐந்து வித குணங்களும் , குளிர்ச்சி, வெப்பம், வறட்சி, ஈரம் ஆகிய தன்மைகளும் தோஷ மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.

வாதம் என்பது காற்று மற்றும் ஆகாயத்தாலும், பித்தம் என்பது நெருப்பு மற்றும் நீராலும், கபம் என்பது நீர் மற்றும் மண்ணாலும் ஆனவை.

இந்த மூன்று குணங்களும் தொடர்ந்து மாற்றம் அடையக்கூடியவை.

மலம், அக்னி மற்றும் சப்த தாதுக்கள்

ஆயுர்வேதம் வியர்வை, சிறுநீர், மலம் என்ற மூன்று விதமான மலங்களை பற்றி குறிப்பிடுகிறது. உடலின் இயற்கையான மாற்றங்களால் இவைகளில் ஏற்படும் தடை நோய்களை உண்டாக்க கூடியது.

உடல் இயக்கத்துக்கு காரணமான பதிமூன்று வகை அக்னிகளாக, முதன்மையாக வயிற்று பகுதியிலிருக்கும் ஜடாரக்னி, பின் பஞ்ச பூத அக்னிகள் பிருத்வி, ஆகாசம், அப்பு, வாயு, தேஜஸ் மற்றும் சப்ததாது அக்னிகள் ரசாக்னி, ரத்தாக்னி, மாமிசாக்னி, மேதாக்னி, அஸ்தி அக்னி, மஜ்ஜாக்னி, சுக்ராக்னி ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

மேலும் இந்த உடலானது ரச தாது (நிணம்-Lymph) , ரக்த (இரத்தம் – Blood) தாது, மாமிச தாது (தசை – Muscle), மேட தாது (கொழுப்பு – Fat), அஸ்தி தாது (எலும்பு – Bone), மஜ்ஜ தாது (எலும்பு மஜ்ஜை – Bone marrow), சுக்கிலம்/சுரோணிதம் தாது (விந்து/கருமுட்டை) ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது என்ற கருத்தையும் முன் வைக்கிறது.

நாம் உண்ணும் உணவானது சப்த தாதுகளின் வழியே உயிராற்றலாக மாறுகிறது. இவற்றின் ஏதாவது  நிலையில் ஏற்படும் மாற்றம் திரிதோஷ சமநிலையை பாதித்து நோயை உண்டாக்குகிறது.

ஓஜஸ்

ஓஜஸ் என்பது ஒளி, உயிராற்றல், சக்தி என பல பொருள் கொண்டது. உடலில் இரண்டு வித ஓஜஸ் இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

பரா ஓஜஸ் தாய் தந்தை இணைவில் உருவாகி எட்டு சொட்டுகளாக இதயத்தில் நீடிப்பது, இது இழக்கப்படும் போதே மரணம் நிகழ்கிறது.

அபரா ஓஜஸ் என்பது நாம் உண்ணும் உணவானது சப்த தாதுக்களின் வழியே மாற்றமடைந்து நம் உடலெங்கும் பரவி ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது.

ஓஜஸ் நாம் செய்யும் அனைத்து செயலுக்கும் அடிப்படையானது. குறைவுபட்ட ஓஜஸ் நோயை கொண்டு வருகிறது.

நோய்கள் காரணம்

அஷ்டாங்க ஸங்க்ரஹம் என்ற ஆயுர்வேத நூல் நோய்களை ஏழு வகைகளாக பிரிக்கிறது.

  1. உடலின் இயற்கையான தேவைகளை கவனிக்க தவறுவதால் ஏற்படும் நோய்கள்
  2. பிறவியிலேயே ஏற்படும் நோய்கள்
  3. குழந்தை உருவாகும்போது ஏற்படும் நோய்கள்
  4. குழந்தை பிறந்த பின் ஏற்படும் நோய்கள்
  5. விபத்து
  6. பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள்
  7. தெய்வ குற்றம், முன்னோரின் தீச்சொலால் ஏற்படும் நோய்கள்

அஷ்டாங்க ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் சிகிச்சை முறைகளை 8 வகைகளில் பிரித்துக்கொள்கிறது.

  1. சல்யம் – அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை
  2. சாலக்யம் – கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்
  3. காய சிகிச்சை – உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
  4. பூதவித்யை – மன நல சிகிச்சை
  5. குமார ப்ரியா – குழந்தை வளர்ப்பு
  6. அக்தம் – விஷத்திற்கு முறிமருந்துகள் அளித்தல்
  7. ரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புக்கான மருந்துகளைப் பயன்படுத்துதல்
  8. வாஜீகரணம் – இளமையை மீட்டெடுத்தல்

பஞ்ச கர்மா சிகிச்சை

வாமனா: இது உடலிலிருந்து அதிகப்படியான கபதோஷத்தை  வாந்தி மூலம் அகற்றுவதற்கான சிகிச்சை.

 விரேச்சனா: இரைப்பைக் குழாயிலிருந்து அதிகப்படியான பித்த தோஷத்தை மலமிளக்கிகள்  மூலம் அகற்றுவதற்கான சிகிச்சை.

பஸ்தி: இது  வாத தோஷத்தை சமப்படுத்த மலக்குடலில் மூலிகை சாறு, தண்ணீர் மற்றும் எண்ணெய்களை உட்செலுத்தும் முறையாகும்.

நாஸ்யா (நாசி சிகிச்சை): இது மூக்கின் மூலம் மருந்து எண்ணெய்கள் அல்லது மூலிகைகள் அளிக்கும் முறையாகும்.

ரக்தமோக்ஷனா (இரத்தக் கசிவு சிகிச்சை): இது ஒரு சிறிய அளவு இரத்தத்தை அகற்றுவதன் மூலம் இரத்தத்தின் நச்சுத்தன்மையை நீக்கக்கூடிய சிகிச்சை முறையாகும்.

வைசேஷிக தரிசனத்தின் சாமானியம் – விசேஷம்

வைசேஷிக தரிசனத்தில் சாமான்யம் என்பது பல பொருள்களில் காணப்படும் பொதுப் பண்புகளைக் குறிக்கும்.

விசேஷம் என்பது ஒவ்வொரு பொருளையும் வேறுபடுத்தும் தனிப்பட்ட பண்பாகும்.

 வைசேஷிக தரிசனத்திலிருந்து சாமானியம் (Samanya) மற்றும் விசேஷம் (Vishesha) தத்துவக் கோட்பாடு ஆயுர்வேதத்தில் நோய் மற்றும் சிகிச்சை முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் நடைமுறை நோக்கில்,

சாமானியம்

சாமானியம் என்பது ஒத்த பண்புகளையும், ஒற்றுமையையும் குறிக்கும். இது ஒத்த தன்மையுள்ள பொருட்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதற்கான அடிப்படையாக அமைக்கிறது. இதில் பொதுவான பண்புகள் ஒன்றையொன்று அதிகரிக்கச் செய்கின்றன. இவ்வாறு ஒத்த தன்மை கொண்ட பொருட்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

உதாரணமாக சுக்ல தாது வளர அதே போன்ற இயல்புள்ள பால் போன்ற உணவுகள் உபயோகமாகின்றன.

விசேஷம் (தனித்துவம்/வேறுபாடு)

விசேஷம் என்பது மாறுபாடு மற்றும் தனித்தன்மையை குறிக்கும். இது எதிர்வினையாக செயல்படுகிறது; வேறுபட்ட பண்புகள் கொண்ட பொருட்கள் ஒன்றையொன்று குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

உதாரணமாக வாதம் (இலகு, உலர்ந்தது) அதிகரித்திருக்கும்போது, எண்ணெய் (கனமானது, ஈரமானது) போன்ற எதிர்மறை பண்புள்ள பொருட்கள் அதனை குறைக்க பயன்படுகின்றன.

நோயை அவதானிப்பிலும், சிகிச்சைமுறை மற்றும் மருந்து தேர்ந்தெடுப்பதிலும் இந்த தத்துவ அடிப்படை  முக்கியப் பங்காற்றுகிறது.

ஆயுர்வேதத்தின் கொடை

அறியமுடியா ஞானத்தை பகுத்துப் பகுத்துச் சென்றறியும் கட்டுமானத்தையும், பின் அனைத்தையும் தொகுத்து அறியும் கட்டுமானத்தையும் இந்திய அறிதல் முறைகள் வழியே மருத்துவத்தில் போட்டு பார்த்ததன் விளைவாக ஆயுர்வேதம் உருவாகிவந்தது என்று சொன்னால் மிகையாகாது.

ஆயுர்வேதம் என்றதும் மூன்றுவிதமான பார்வைகள் வைக்கப்படக்கூடும்

முதலாவது, ஆயுர்வேதத்தில் அனைத்தும் உள்ளது. ரிஷிகளால் பண்டைய காலத்தில் அனைத்தும் வகுத்து உரைக்கபட்டுவிட்டன.  குறிப்பாக தெய்வீக ஆற்றல் நிரம்பியது எனக் கருதுவது.

இரண்டாவது, ஆயுர்வேதம் அறிவு முதிரா காலத்திலிருந்த முறை என்றும், நவீன அறிவியல் அடிப்படை அற்றது எனவே போலி அறிவியல், மோசடி என்று கருதுவது.

மூன்றாவது, ஆயுர்வேதத்தின் மீது நவீன பார்வைகளைப் போட்டுப் பார்த்து ஒருங்கிணைப்பைப் பற்றி பேசுவது. உதாரணமாக, ஒரு மூலிகையின் குணமாக்கும் திறனை அதன் நுண் மூலக்கூறில் கண்டறிந்து அதை நவீன மருத்துவத்தில் இணைக்க வேண்டும் என கருதுவது.

ஆனால், இவற்றை தவிர்த்து வேறு சிலவற்றை யோசித்து பார்க்கும் காலகட்டத்திலே இருக்கிறோம். உதாரணமாக, ஆயுர்வேதம் ஒரு நோய்க்கு ஒரு மூலிகை என்றிருந்த ஆதி மருத்துவத்திலிருந்து பிரபஞ்சம் நோக்கி சாங்கியம் வழியே தன்னை விரித்துக்கொண்டது. காரண காரிய தொடர்பை உருவகித்துக் கொண்டது. சாமானியம் – விசேஷம் என்ற பிரிவினை வழியே மேலதிக புரிதலை உருவாக்கிக்கொண்டது.

மொத்தப் பிரபஞ்சமும் மூன்று அடிப்படை அலகின் வழியே (வாதம், பித்தம், கபம்) விரித்துப் பார்க்கப்படுகிறது. பின், அங்கிருந்து உடலின் நுண்ணிய அலகுகள் வரை அது சுருக்கிப் பார்க்கப்படுகிறது. அதன் வழியே காரணங்களும், காரியங்களும் உருவகிக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு வாத பிரகிருதி, அவன் வாழ்நாளில் அடையக்கூடிய சாத்தியமான நோய்களை பட்டியலிடுகிறது. அவன் உண்ணும் உணவு, வாழும் சூழல், காலநிலை போன்ற பிரபஞ்ச தொடர்பையும், அதன் அடிப்படையில் மருந்து தேர்வு மற்றும் சிகிச்சைமுறையும் வடிவமைத்துக் கொள்கிறது. ஒரே சமயம் தனிமனிதனாகவும், பிரபஞ்சமாகவும் பார்க்கிறது.

காரணங்களை தவிர்ப்பதன் மூலம் காரியம் உருவாகுவதை தடுக்க முடியும் என்றும், காரணங்களை கட்டுக்குள் வைக்கும் ஒரு வாழ்க்கை முறையை பரிசீலிக்கச் சொல்கிறது. சமீப காலங்களில் மருத்துவ சிந்தனையின் ஒரு பகுதியாக முன்வைக்கப்படும் உய்த்துணரக்கூடிய, தடுக்கக்கூடிய, தனிப்பட்ட சிகிச்சை (Predictive, Preventive and Personalized Medicine, PPPM) போன்றவற்றிக்கு சுமார் 3000 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவமுறையாக ஆயுர்வேதம் எண்ணற்ற தரவுகளை வழங்க முடியும். தயக்கமின்றி ஆயுர்வேதத்தின் சிந்தனைத்தரப்பும், மருத்துவ கட்டுமானமும் மனிதகுலத்துக்கு கடந்த 2500 ஆண்டுகளாக  இந்திய சிந்தனை முறை அளித்த மாபெரும் கொடை என்றும், வருங்காலத்தில் மனிதகுல ஞானத்துக்கு இன்னும் பெரும் பாய்ச்சலை வழங்கக்கூடிய ஒரு சிந்தனைத்தரப்பு என்றும் முன்வைக்கமுடியும்.

ஆயுர்வேதம் சாஸ்வதம், நித்யம், அனாதி (அழிவற்றது, நிலையானது, ஆரம்பம் இல்லாதது) என்று சரக சம்ஹிதை குறிப்பிடுகிறது. சந்திரகுப்த மௌரியர் காலம் முதல் நமக்கு கல்வெட்டு ஆதாரங்களும் கிடைக்க ஆரம்பிக்கின்றன. அலெக்ஸாண்டரின் வருகைக்கு முன்னரே தட்சசீலம் பல்கலைகழகம் மருத்துவ கல்விக்கு புகழ்பெற்றிருந்தது. கிழக்கு ஆசியாவிலும், எகிப்து, கிரேக்கம் போன்றவற்றிலும் ஆயுர்வேத மருத்துவமுறையின் செல்வாக்கு இருந்தது என்று தெரியவருகிறது.

அதே காலத்தில் இந்திய நிலத்தில் தமிழ் மொழியில் மேலுமொரு மருத்துவமுறை உருவாக என்ன தேவை இருந்திருக்கக்கூடும்? சிவனை முதல் சித்தனாக கொண்டு அகத்தியர் வழியே வந்த சித்தர்கள் உடம்பார் அழியில் உயிரால் அழிவர் என்று அழியா உடம்பை அடைய காயகற்பம் உருவாக்குவதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

குறிப்புதவி நூல்கள்

  1. https://www.jeyamohan.in/93787/
  2. http://news.bbc.co.uk/2/hi/science/nature/4882968.stm
  3. https://www.cais-soas.com/News/2006/December2006/11-12.htm
  4. ஆயுர்வேத மருத்துவ வரலாறு – Dr. L. மகாதேவன்

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8514395/#bib11

மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்

அறிவு அளித்த விடுதலை 7. மூன்றே பொருளாய் முடிந்தது

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.