- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
வெற்றியை விரும்பி போர் முனையில் போராடும் அரசர்களுடன் யம ராஜனும் போட்டிக்கு வருகிறான் போலும். அரசன் தன் தூதர்களை, உளவாளிகளை ராஜ்யத்தில் பல பாகங்களுக்கும் அனுப்பி எதிரி அரசர்களின் நடவடிக்கைகளை உற்று நோக்குவது போலவே, இந்த யமராஜனும் (போர் களத்தில் வீழ்ந்த வீரர்களை சேகரிப்பதாக பொருள். போர் முனையில் உயிர் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதாக கவி தெரிவிக்கிறார்.) இந்த பகுதியின் கதையை கோடி காட்டுவது போல முதல் ஸ்லோகம். மௌட என்ற தேசத்தின் அரசன் சசாங்கன், ராஜவர்தனன் என்ற ஹர்ஷனுக்கு முன் பிறந்தோனை அவன் படை வீர்களுடன் சிறை பிடித்து விட்டான். எப்படி? தேடி தேடி கண்டு கொண்டான். அவனிடம் சிறந்த உளவாளிகள் இருந்தனர். அதன் பின் அந்த அரசன் சசாங்கன், ராஜ்யவர்தனனுக்கு தன் மகளைத் தருவதாகவும் அதை ஒட்டிய விருந்து என்ற காரணம் சொல்லி அழைத்து வரச் செய்து விட்டான். ராஜவர்தனன் இதில் மயங்கி தன் உடன் வந்த வீரர்களுடன் வந்து மாட்டிக் கொண்டு விட்டான்.
अथ- அதன் பின், நம்பியவனை கெட்ட எண்ணம் கொண்ட சசாங்கன், சிறையிட்டான். ஆனால் யானைகள் மரத்தை ஒடித்தால் வரும் சப்தம் போல ஹரி நித்ரா தஸ்கர: – பதத்தின் பொருள் ஹரியின் உறக்கத்தை திருடியவன்- ஹரி – சிங்கத்தின் உறக்கத்தை கெடுத்த யானை- போல ஹர்ஷனின் கவனத்தை ஈர்த்து விட்டது.
ஹர்ஷன் தன் தந்தையின் அந்திம நீர் கடன் களை செய்து கொண்டிருந்தவன், பறவைகளுக்கு பிண்டம் என்று உணவை அளிப்பது போன்ற திவச கால செயல்கள், முன்னோர்களை எண்ணி காகத்தை அழைத்து உணவை கொடுப்பது வழக்கம்- மூத்தோர் மரணத்திற்குப் பின் சில நாட்கள் பொதுவாக நற்செயல்களை செய்வதில்லை – 13 நாள் அந்த மூத்தோர் கடன் தவிர எதையும் செய்யாமலும், மங்கள காரியங்களை 45 நாட்கள் வரை செய்வதில்லை என்றும் வழக்கம். பெற்றோர் இருவரும் போன நிலையில் மனத் தளவில் மிகவும் பாதிக்கப் பட்ட ஹர்ஷன், தந்தையரை நினைத்து நீத்தாருக்கு செய்யும் செயல்களின் அங்கமாக, அந்தணர்களுக்கு படுக்கைகள், சாமரம், குடைகள்,ஐந்து ஐந்தாக எண்ணிக்கையில் சில பாத்திரங்கள், வாகனங்கள், சில ஆயுதங்கள் என்பவைகளையும், அரசனின் அந்தரங்க பணியாளர்களுக்கு, தேவையானவைகளையும் கொடுத்தான். அரசன் விரும்பியபடி தேசத்தின் புண்ய தீர்த்தங்களில் அவருடைய அஸ்தியை கரைக்க தகுதியானவர்களிடம் கொடுத்து அனுப்பினான். இன்னமும் தன்னை அந்த இருவரின் நினைவுகளில் இருந்தும், அவர்களின் மறைவிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் தவித்தான். அரசனின் பிரத்யேக யானையை வனத்தில் கொண்டு விடும்படி ஏற்பாடுகள் செய்து விட்டான். நாட்கள் செல்லச் செல்ல வந்தவர்களில் பெரும்பாலோர் திரும்பி சென்று விட்டனர். கூட்டமும் இரைச்சலும் பெருமளவில் குறைந்தன. அழுகுரல்கள் நின்றன. நெருங்கிய பந்துக்களின் கண்களின் நீரும் வற்றி, அரண்மனையில் தூங்கி பொழுதைக் கழித்தவர்களும் தங்கள் செயல்களை கவனிக்கச் சென்று விட்டனர். அதனால் ஹா கஷ்டம் போன்ற சொற்களும் நின்றன. அவரவர் தங்கள் பணிகளை ஏற்று பழையபடி செய்யலாயினர். அதன் அங்கமாக, உபதேச ப்ரவசனங்கள், அனுதாபம் என்ற பெயரில் பலர் வந்து உரையாடியதும் மறைந்தன. எண்ணி சில அரசர்களே உடன் இருந்தனர். கவிகள் தங்கள் கவிதைகள் மூலமாக எழுதி வந்த பாடல்களும் அதற்கான சன்மானம் பெற்று அவர்கள் விலகியதும் மறக்கப்பட்டன. தேவன் ஹர்ஷன்- தற்சமயம் அரசன் என்பதால் தேவன்- மற்ற தினசரி அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தவனை அணுக்க சேவகன் மூகன் என்பவன் யாரோ ஒருவன் அரசனை சந்திக்க விரும்புவதாகச் சொன்னான். அகாலத்தில் யார் என்ற கேள்வியுடனேயே வந்தவனை சந்திக்க வந்த ஹர்ஷன், மனதில் சங்கடம் தோன்றியது. மனதினுள் இதுவும் ஏதோ துக்க செய்தியாக இருக்கக் கூடாதே என்ற வேண்டுதலோடு வந்தவனை கண்டதும் அவனை அடையாளம் கண்டு கொண்டவனாக, ‘அங்க! சொல்லுங்கள்.. பெரியவர் நீங்களே வந்த காரணம்?’ என்று வினவினான். தமையனிடம் இருந்து வந்தவன் என்பதால் நம்பிக்கை ஒரு பக்கம், இது வரை காணாமல் இருந்த சகோதரன், இடைப்பட்ட காலத்தில் நடந்தவை அனைத்தும் ஒரே சமயத்தில் மனதை ஆட்கொள்ள, கண்ணீர் பெருகினாலும் சமாளித்துக் கொண்டு அவரை விசாரித்தான். அவர் சொன்ன செய்தி கேட்டு வியப்பில் ஆழ்ந்தான்.
அதன் பின் கோட்டை வாசலில் அறிவிப்பாளன் சொல்லிக் கொண்டிருந்தான். அதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அரண்மணையில் இருந்த அனைவரும் வந்து சூழ்ந்து நின்று ஆவலுடன் கேட்டனர். ‘வெகு தூரம் சென்றிருந்தவர், பல நாட்ளாக எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் நாம் தவித்தவர், வந்து விட்டார். ‘
சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான். பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும், நீளமான உடையும், எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம், அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான். உடல் முழுவதும் போர் களத்தில் பட்ட காயங்களும் அது குணமாகி அடையாளமாக வெளுத்த சரீர பாகங்களும், சல்லடையாக துளைத்த உடலுடன், பூமியின் நாயகன் மறைந்த செய்தி கேட்டு துக்கமும் சேர, குண்டலமோ, தலை சூடாமணியோ அரசனுக்குரிய நகைகள் எதுவும் இல்லாமல், வியர்வை பெருக வேகமாக வந்தவனை வருத்தம் மேலிட கண்டான். தந்தையின் காலடியில் தன் வெற்றியை சமர்ப்பிக்க துடித்தவன் அவரைக் காணாமல் கண்ணீர் பிரவாகமாக பெருகி இடைவிடாமல் கன்னங்களில் வழிந்து நிலத்தை நனைக்க, தலை குனிந்து இருந்தவனை ஹர்ஷன் சமாதானப் படுத்தினான். ராஜ சிங்கத்தின் வாரிசு நீ, இப்படி வருந்தலாமா? என்று சொல்லியபடியே கூர்ந்து கவனித்தான். இள வயதில் இருவருமாக பல இடங்களுக்கும் சென்ற சமயம் இருந்தவனா என்ற சந்தேகப்படும்படி, முகத்தின் லாவண்யம் எங்கே, பல பயிற்சிகளின் மூலம் திடமாக இருந்த உடல் எங்கே, முக பொலிவும், நிறமும் மங்கி கருமை படர்ந்தவனாக எதிரில் நிற்பவனைக் கண்டு ஹர்ஷன் மிகவும் வருந்தினான். நந்தன வனம் கற்பக மரங்கள் எதுவுமின்றி இருப்பது போலவும், தாங்கும் யானைகள் இன்றி திசைகள் போலவும், மலைகளை இந்திரன் வஜ்ர ஆயுதம் கொண்டு துளைத்த சமயம் இருந்தது போலவும், இயல்பான கருணை இன்றி, மன வருத்தமே முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது போன்ற பரிதாபமான தோற்றமும், வரிசையாக துக்க சம்பவங்களே கண்டு மனோ வியாதி வந்தவன் போல, எதோ மிகப் பெரிய கஷ்டம் அனுபவித்து விட்டு வந்திருக்கிறான் என்பதைக் காட்டின. தன் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் அடக்கி வைத்திருந்தான் போலும். வைராக்யம் தான் உயிருடன் வைத்திருக்கிறது போலும். அறிவோ, அரச குல வளர்ப்போ எதுவுமே அவனுக்கு சமயத்தில் பயன் படாமல் போனது விந்தை. அருகில் பெரியவர்களோ, இதமாக பேசுபவர்களோ, நெருங்கிய தோழர்களோ இருந்திருந்தால் இந்த அளவு பாதிக்கப் பட்டிருக்க மாட்டான்.
ராஜ்யவர்தனன் சொன்னான். உன்னை வெகு தூரத்திலிருந்து பார்த்த பின் தான் என் உயிர் வந்தது போல உணர்ந்தேன் என்று சொல்லியடி இறுகத் தழுவிக் கொண்டு கண்ணீர் உகுத்தான். கன்னத்தோடு கன்னம் வைத்து இதயமே வெடித்து விடும் போல தேம்பினான். ஹர்ஷனும் தன் நீண்ட கைகளால் அணைத்து தாயோ, தந்தையோ இருந்திருந்தால் எந்த அளவு பாசமும் பரிவும் காட்டியிருப்பர்களோ. அதை விட அதிகமான பரிவுடன், முதலில் அவனுக்கு நீராடவும், புத்தாடைகள் அணிந்து, உணவை உண்ணச் செய்யவும் அருகில் இருந்தவர்களுக்கு ஆணையிட்டான். தானே இதற்குள் ஓரளவு தன் நிலை அடைந்து விட்ட மூத்தவனும், பணியாளர்கள் கொண்டு வந்த நீரால் கை கால்களை சுத்தம் செய்து கொண்டான். கண்களிலும் முகத்திலும் படிந்திருந்த தூசிகளை கழுவிக் கொண்டு புத்துணர்வு பெற்றவனாக அருகில் பணிப் பெண் கொண்டு வந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டவன், அவளுக்கு நன்றி சொல்லி விட்டு நீராடச் சென்றான். நீராடி, நல்லாடைகளை அணிந்து வெளியில் வந்தவனைப் பார்க்கவே பழைய ராஜ்ய வர்தனன் வந்து விட்டதைப் போல பார்த்தவர் மகிழ்ந்தனர்.
ஹர்ஷன் வாயடைத்து நின்றான். என்ன நடந்திருந்தால் இந்த அளவு பாதிக்கப் பட்டிருப்பான் என்று ஊகிக்கவே முடியவில்லை. பார்க்க பார்க்க துக்கம் அதிகமாகியது. உடன் பிறந்தவன், அவன் வருந்துவதைப் பார்த்தால் வேதனை அதிகரிக்கிறது. தானும் தரையில் விரிப்பில் அமர்ந்தபடி பேசாமல் இருந்தான். தந்தை இறந்த அன்று மற்றவர்களும் அவனும் மனம் வருந்தியது ஒன்றுமே இல்லை என்பது போல தமையனின் இன்றைய நிலை அதிக மன வேதனையை கொடுத்தது. ஊர் மக்களும் அதே நிலையில் இருந்தனர். யாருமே வழக்கம் போல உத்சாகமாக இல்லை. உணவைக் கூட உண்டார்களோ இல்லையோ, கூடிக் கூடி வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். எதுவும் செய்யத் தோன்றாமல் விவரங்கள் அறிய சிலர் அரண்மனை வாசலில் கூடியிருந்தனர்.
(ஒரு புராண கதை. ஸூரியனின் தேஜஸால் அருகில் வந்தால் தபிக்கிறதே என்று அவன் மனைவி வருந்தினாளாம். அதனால் த்வஷ்டா என்ற தேவ சில்பியை அழைத்து என் உடல் வெப்பத்தை சற்று குறைத்து கொடு என்று வேண்ட, த்வஷ்டா தன் உளியால் சுழலும் சக்கரத்தை, கிரணங்களில் தட்டி, அதன் அளவை குறைத்தனாம். அந்த சப்தம் ட்ங்க் ட்ங்க் என்று கேட்டதாம். அந்த அடியை தாங்க மாட்டாமல் உதிரம் பெருக வேகமாக ஓடி பெரும் கடல் நீரில் மூழ்கி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டானாம். – அஸ்தமித்து விட்டானாம் – அதைக் கண்ட கமலங்கள் செய்வதறியாது திகைத்தனவாம்- தாங்கள் இதழ்களை மூடிக் கொண்டால் தானே அஸ்தமிக்கும், இது என்ன புது வழக்கம் என்றனவாம். என்ன செய்வோம் – கற்பனை – கவி பருவம் மாறி வருகையில் வழக்கத்தை விட வேகமாக அஸ்தமனம் ஆவதை உருவகப் படுத்திய கதை)
சாமந்தர்களும், முக்கியமான மந்திரிகளும் அரச அலுவல்களை எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்களும் ஆதரவாக பேசி ராஜ்யவர்தனை சமாதானப் படுத்தினர். அவன் மன நிலையை அறிந்து வற்புறுத்தி உண்ணச் செய்தனர். மறு நாள் அரச சபையில் ராஜ வர்தனன் பட்டத்துக்கு வருவான் என்று ராஜ சபை காத்திருந்தது.
ராஜ்யவர்தனன் ஹர்ஷன் அருகில் வந்து அமர்ந்தான், ‘தாத! உன் பொறுப்புகள் காத்திருக்கின்றன. இளம் வயதிலேயே நியமங்கள் தவறாமல் செய்பவன் நீ என்பதை அறிவேன். தந்தையின் மனதில் நினைப்பதை அவர் சொல்லும் முன் உணர்ந்து கொள்பவன். உன் இயல்பான நிலைக்கு வா. இந்த நிலையில் உன்னைக் காணவே என் மனமும் வருந்துகிறது. சகோதர பாசம் உன்னை வாட்டுகிறது. தவிர்க்க முடியாது தான். அது தான் உடன் பிறந்தவனின் இயல்பு. மனமொடிந்து போகாதே. வா. நாம் தந்தையுடன் இருந்த காலத்தில் அவருடன் நெருங்கி இருந்தவர்கள். கடினமான சமயங்களிலும் அவர் தன் நம்பிக்கையை இழக்கவும் மாட்டார், மனதில் தோன்றுவதை வெளிக் காட்டவும் மாட்டார். மூவுலகமும் ஆண்ட மாந்தாதா மறைந்த பின் புருகுத்சன் என்ற அவன் மகன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான், இக்ஷ்வாகு அரசன் திலீபன் பல தீவுகளை இணைத்து அரசை விரிவு படுத்தினார். அவர் காலமானதும் ரகு அரசனான். பத்து திக்குகளிலும் தன் ரதத்தைச் செலுத்தி வெற்றி வாகை சூடிய தசரத ராஜாவுக்குப் பின் ராமன் அரசை ஏற்றான். துஷ்யந்தன் நால் வகை கடல்கள் சூழ்ந்த பூ பாகத்தை தன் தனயன் பரதனிடம் அளித்து விட்டான். அவ்வளவு ஏன்? நம் தந்தை என்ன செய்தார் ? நம் பாட்டனார் நூற்றுக்கும் மேல் யாகங்கள் செய்தவர். அவர் மறைத்த பின் நம் தந்தை ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? இது தான் நடை முறை. சோகம் கொண்டாடுவது பெண்கள் தான் என்பர். அரசன் அதற்கு இடம் கொடுத்தால் கோழை என்பர். ஆனால், அடுத்தடுத்து வந்த துன்பங்கள் என்னை வருத்துகின்றன. என்ன செய்வேன்?
ஏதோ விஷம் தோய்த்த அம்பு பட்டு புள்ளி மான் திகைப்பது போல ஹர்ஷன் திகைத்தான். என்ன சொல்கிறான்? புரு என்ற அரச குமாரன் ஜரை என்ற முதுமையை ஏற்றுக் கொண்டு தந்தைக்கு தன் இளமையை கொடுத்தானே அது போல நீ என் ராஜ்யம் பற்றிய கவலையை, பொறுப்பை ஏற்றுக் கொள். ஸ்ரீ க்ருஷ்ணன் தன் பால்ய கால விளையாட்டுகளை விட்டு தேவி ருக்மிணியை ஏற்றுக் கொண்டது போல, ராஜ்யம் என்ற இந்த லக்ஷ்மியை ஏற்றுக் கொள். நான் ஆயுதத்தை விட்டேன் என்றவனை ஊன்றி கவனித்தான்.
அம்மா, அப்பா இருவரும் போன பின் என் மதி மரத்து விட்டதா? இது வரை ஏதோ சடங்குகள், மூதாதயரை கரையேற்றுகிறோம் என்று விரதங்களும், மற்றவைகளும் கவனத்தை ஈர்த்தன. ராகு ரவியை பிடிப்பது போல சோகம் ஆக்ரமித்தாலும் விட்டு விடுமே. என்னை ஏன் விழுங்கப் பார்க்கிறது. ராஜ வர்தனன் தொடர்ந்தான்.
மகா புருஷன் நம் தந்தை. அதனால் எந்த செயலிலும் அவரைக் காண்கிறேன். பின்னின்று கவனிப்பார் என்ற எண்ணமே தவறில்லாமல் செய்ய வைத்தது. அதனால் தான் இந்த முடிவு. ராஜ்யத்தை ஏற்றுக் கொள் என்று சொன்னார்களே, அது பாலைவனத்தில் பெய்த மழைக்கு ஒப்பானதே. ஏற்கனவே வெப்பத்தால் உலர்ந்து கிடக்கும் பூமியில் விட்ட நீர் போல வற்றும். இது வரை நான் பெற்ற அனுபவங்களால் நைந்து போன என் மேல் விழும் நெருப்புத் துண்டங்கள் போல அதை உணர்கிறேன். விருப்பு வெறுப்பின்றி முனிவனாக, சபலத்தை விட்ட வானரமாக, பொறாமை இல்லாத கவியாக, ஏமாற்றாத வாணியனாக, அன்பு குறையாத பிரிய பத்னியாக, வறுமை இல்லாத சாதுவாக, நிறைந்த செல்வம் இருந்தும் கள்ளத்தனம் இல்லாதவனாக, இம்சை செய்யாத மிருகேந்திரனாக, ஏழையாக இருந்தும் மற்றவனைக் கண்டு துவேஷம் கொள்ளாத எளியவனாக,மனத்தளவில் சுகமான சேவகனாக, நன்றி மறவாதவனாக, உள்ளிருந்து கெடுதல் செய்யும் அரச அதிகாரியாக இல்லாமல், வினயம் இல்லாத ராஜபுத்ரனாக இல்லாமல் நிம்மதியாக என் மீதி வாழ்க்கையை கழிப்பேன். இன்னமும் நம்பிக்கை வராமல் பேசியது தன் மூத்த சகோதரன் தானா என்ற சந்தேகத்துடனே ஹர்ஷன் எதுவும் பதில் சொல்லாமல் இருந்தான். மனதுக்குள், ‘என்னை என்ன நினைத்தான். உடனே இதற்கு உடன்படுவேன் என்றா. நானும் புஷ்ய பூதி அரசனின் மகனே. நேர்மையே உருவான அவர் வழியில் செல்பவன் தான். எனக்கு அவர் உபதேசித்த ராஜ்ய தர்மங்களும், கொள்கைகளும் தான் பிரமாணம். சௌமித்ரியை மறந்து விட்டான், யாரோ மூத்தவன் வனம் சென்ற பின் தான் ராஜ்யத்தை ஆண்டான் என்று கதை சொல்கிறான். ப்ரதாபம்- தன் நம்பிக்கையும், ஆற்றலும் தான் சத்வம் என்ற பெருந்தன்மைக்கான அடையாளம். செல்வம் நிரந்தரமல்ல. தற்சமயம் தமையனாக ராஜ்ய பாரத்தை ஏற்பதை விட்டு என்னிடம் பொறுப்பை கொடுத்து விட்டு வனம் ஏகினான் என்பது நம் பிரஜைகளுக்கு ஏற்குமா? நானே தபோ வனம் போகிறேன் – இவ்வாறாக பலவும் சிந்தித்து எதுவும் பதில் சொல்லாமல் நின்றான். அதே சமயம்,
ராஜ சபையிலிருந்த வந்த ஒரு செய்தியும் அதனுடன் பெரும் கோஷமும் அவர்கள் உரையாடலைத் தடுப்பது போல கேட்டது. அடுத்து என்ன துக்க செய்தி? மனம் பதைக்க காது கொடுத்து கேட்டான். திடுமென பெண்கள் அழுவதும், அந்தணர்கள் கூட தங்கள் வழக்கமான செயல்களை விட்டு ஹா ஹா என்றதும், கூட்டம் கூட்டமாக ஊர் ஜனங்கள் அரச மாளிகைக்குள் வருவதுமாக, தங்களுக்குள் வருத்தம் நிறைந்த குரலில் ஏதோ பேசிக் கொள்வதும் நல்ல செய்தி நிச்சயமாக இல்லை என அறிந்து ஹர்ஷன் எழுந்து நின்றான். திடுமென சாமந்தர்களும், மந்திரிகளும் வேக வேகமாக அரச சபையை நிறைத்தனர். ஒரே இரைச்சல். வேகமாக பர பரப்புடன் வந்த சம்வாதகன் என்ற முக்கிய செய்தி அறிவிப்பாளன், வந்து சபையின் நடுவில் விழுந்தான்.
சகோதரர்கள் இருவரும் ஓடி அவன் அருகில் வந்தனர். ராஜ்ய வர்தனன் தானே முன் சென்று சம்வாதகனை கேட்டான்.’பத்ர! சொல்லு சொல்லு. நம் மகா ராஜா, அவனி பதி என்று புகழ் பெற்றவர் மறைந்த செய்தியால் வருந்துபவர்களா? அல்லது புதிதாக ஏதோ விரும்பத் தகாத செய்தியை சொல்லப் போகிறாயா? ஆ என்ன கஷ்டம், விதி நம்மை ஆட்டுவிக்கிறதா” ‘தேவ! சில அல்ப ஜீவன்கள் மனிதர்களாக, உண்மையில் பிசாசுகள் போல உலவுகின்றன. எந்த இடத்தில் விரிசல் என்று கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்து உள் நுழையும். இவர்களே பூமியில் அதிகம். நம் மகாராஜா போன செய்தி வெளி வந்த உடனேயே மாளவ ராஜா நமது மருமகனைப் பதவியை விட்டு விலக்கி விட்டார். பர்த்ருதாரிகா – (இது அரண்மனை பெண்டிரை மரியாதையாக குறிப்பிட பயன் படும் சொல்.) ராஜ்யஸ்ரீ. கான்ய குப்ஜத்தில் சிறை வைக்கப் பட்டுள்ளாள். இந்த அரசு நாயகன் இன்றி இருப்பதால் கைப் பற்றிக் கொள்வோம் என்று நினைத்து முற்றுகையிடப் போகிறார்களாம்’ இது வதந்தி.

ஹர்ஷன் இதை ஓரளவு எதிர் பார்த்தவன் போல, தனக்கு இழைத்த அவமானமாக கருதினான். இது வரை கேட்டதில்லை இது போன்ற ஒரு துணிகரமான எதிர்ப்பை. இள ரத்தம் கொதித்தது. அனைத்துக்கும் மேலாக பிரியமான சகோதரி துன்பத்தில் இருக்கிறாள் என்பது வாட்ட, துள்ளி எழுந்தான்.
ராஜ்ய வர்தனனும், கோபத்துடன், காளிய நாகம் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் அடி வாங்கியது போல புருவங்கள் வளைந்து நிற்க, கண்களில் கோபாவேசம் வெளிப்பட, இடையிலிருந்து வாளை உருவிக் கொண்டு மாளவனை உன்மூலம்- வேரோடு அழிக்கிறேன் என்று சூளுரைத்தபடி, மற்றொரு ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டான். கூடியிருந்த மந்திரிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், சிற்றரசர்களுக்கும் ஆணையிட்டான். ரோஷத்தினால் முகமே பயங்கரமாக ஆயிற்று. சோகம் மூடியிருந்த தன் பராக்ரமத்தை திரும்பிப் பெறுவது போல அந்த சோகத்தை உதறுவது போல புஜங்களால் தட்டியபடி தன் இளவலை நோக்கி சொன்னான்.
‘ஆயுஷ்மன்! இது ராஜ குலம். இவர்கள் சகோதரர்கள், இவர்கள் உறவினர்கள், பரிஜனங்கள், இந்த பூமி, மகாராஜா பிரியமாக பாலித்த பிரஜைகள், இவர்களை நீ பார்த்துக் கொள். நான் இன்று மாளவனை வம்சத்தோடு அழிக்க இதோ கிளம்பி விட்டேன். இது தான் நான் செய்ய நினைத்த தவம், இந்த போர் முனை தான் தவம் செய்யும் இடம் என் மனம் திருந்த வந்த நல்வழி இதுவே. இந்த பயங்கரமான ஆயுதம் இன்று தன் வேலையை செய்யட்டும். மான் குட்டி சிங்கத்தை எதிர்த்தா நிற்கிறது? தவளை கரு நாகத்துக்கு முன் வாலாட்டப் பார்க்கிறதா? . ஆட்டுக் குட்டி புலியை கட்ட நினைக்கிறதா? நெளியும் பாம்பு கருடனை ஜயிக்க கனவு காண்கிறது. விறகு தன் நிலை மறந்து அக்னியோடு போராடப் போகிறதாமா? பார்த்து விடுவோம்.
மாளவா! இது மகான் புஷ்ய பூதியின் வம்சம். என்ன நினைத்தாய்? அவரை அவமதிப்பது போல இந்த உன் செயல் உன்னையே அழிக்கப் போகிறது. ஹர்ஷனைப் பார்த்து, தாத! என் மன உளைச்சல் தீர்ந்தது. சமஸ்த ராஜ கணங்களும், பட்டத்து யானைகளும் இங்கேயே இருக்கட்டும். இந்த பண்டி மட்டும் இருபதாயிரம் குதிரை வீர்களுடன் என்னை பின் தொடரட்டும். என்று சொல்லியபடியே வேகமாக கிளம்பி விட்டான். அரச குலத் தோன்றலான வீரன்.
தமையன் அரச பரம்பரையின் வீரனாக செயல் பட முனைந்து விட்டது ஆறுதலை அளித்தாலும், உள்ளூர, சகோதரி, அவள் கணவன் க்ரஹ வர்மா இருவரையும் சுற்றியே ஹர்ஷனின் கவலை சுழன்றது.
பின் தொடர்ந்த்து சென்ற ஹர்ஷன், ‘ஆர்ய! நான் உங்களுடன் வருவதில் என்ன தவறு? நான் இளையவன், சிறுவன் என்றாலும் என்னை தனியே விட்டுப் போவது நல்லதல்ல. காப்பாற்ற வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், உங்களுடன் இருப்பதே மேல். இவனுக்கு என்ன தெரியும் என்று நினைக்க மாட்டீர்கள் ஏனெனில் ஏற்கனவே என் பராக்ரமத்தை கண்டவர் தான் தாங்கள். இன்னமும் வளராச் சிறுவன் போர் முனைக்கு செல்லத் தக்க வயது வரவில்லை என்று நினைத்தாலும் உங்களை விட்டு பிரிந்தால் என் மன வாட்டம் உடல் வளர்ச்சியைக் குறைக்கும். பெண்களை கவனமாக பார்த்துக் கொள் என்றாலும், பொருத்தமாக இல்லை. வெளி உதவி உங்களுக்கு தேவையில்லை. நம் தந்தை சொன்னதே அது. அதை நினைத்து நான் பின்னால் சிறிய படையுடன் வருகிறேன் என்றாலும் அதனால் என்ன லாபம்? என்ற கேள்வி வருகிறது? உங்கள் புஜ பலம் தெரிந்தவன் தான். இது வரை நான் கேட்டு மறுத்ததில்லை. நானும் உடன் வருகிறேன், என்றபடி தலை வணங்கி நின்றான். அல்லது பாற்கடல் அலையின் நுரை போன்ற வெண்மையான வெற்றியின் பெருமையை பகிர்ந்து கொள்ள மனமில்லையா.’
தமையன் பதில் சொன்னான்.
’தாத! இது என்ன? சின்ன விஷயம், இதற்கு இந்த அளவு முக்யத்வம் கொடுத்து பெரிய வாதங்களை முன் வைக்கிறாய். இந்த அல்பனை அடக்க எதற்கு பெரும் படை? சிறு மானை அடிக்க சிங்கம் கூட்டத்தோடு போக வேண்டுமா என்ன? புல்லை எரிக்க நெருப்பு பாதிக்காத கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டுமா? இதைக் கேள். உன் வீரத்தை, பராக்ரமத்தைக் காட்ட நிறைய இடங்கள் உள்ளன. இந்த பூமியை பதினெட்டு தீவுகள் கொண்டது என்பர். இதை எட்டு மங்களமான மாலைகள் அணிந்தவள் என்று பூ மாதாவை பாடுகின்றனர். இதில் உன் வீரத்தையும், திறமையையும் காட்ட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குல பர்வதங்கள். (திடமாக உள்ள பழமையான மலைகள்) இவைகளை அசைக்கும் வாயுவை நூலால் ஆன மெல்லிய கயிறு கொண்டு கட்ட முயற்சிப்பது இல்லை. சுமேரு மலையில் விளையாட்டாக முட்டி மகிழும் திக்கஜங்கள் பெரிதாக இருந்தாலும் புற்றுகளை பொருட்டாக எண்ணி முட்டுவது இல்லை. நீ சாதாரணமானவன் அல்ல. உன்னால் நிறைய சாதிக்க முடியும். மாந்தாதா போல உலகம் முழுவதும் சுற்றி திக்விஜயம் செய். அங்காங்கு உன் வெற்றிக் கொடியை நாட்டி குல பெருமையை நிலை நாட்டுவாய். எனக்கு தற்சமயம் என் மன சஞ்சலம் தீர இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்கிறேன். உள்ளத்துள் பொங்கும் கோபக் கனல் இதன் மூலம் அடங்கட்டும். நீ இரு.’
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
