- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
கிரேக்க ரோமானிய மருத்துவம் ll
உடல் மற்றும் மன நோய்களுக்கு ஹியுமர் தத்துவம் மூலம் விளக்கம் அளித்தாயிற்று. ஆனால் அன்று மனிதர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த கொள்ளை நோய்களை எப்படி விளக்குவது?
ஏட்ரியஸ் சபிக்கப்பட்ட வம்சம்
ஒரு சாபம் ஒலிம்பியன் கடவுளான ஜீயஸின் மகனான டாண்டலஸிலிருந்து தொடங்குகிறது. டாண்டலஸ் அனைத்து கடவுள்களையும் விருந்துக்கு அழைக்கும்போது போதிய உணவு இல்லாததை கவனித்து, தன் மகன் பெலோப்ஸை கொன்று சமைத்து பரிமாறுகிறார். கடவுளின் சக்திகளை, அறிவை இதன்மூலம் சோதித்து அறிய முடியும் என்று நினைத்தார். இவரின் திட்டத்தை அறிந்த கடவுள்கள் சாப்பிடாமல் இருக்க, தன் மகள் கடத்தப்பட்ட சோகத்திலிருந்த டிமிடர், பெலோப்ஸின் தோளை உண்டுவிட்டார். கோபமுற்ற ஜீயஸ் டாண்டலஸை சபிக்கிறார். முதல் சாபம் அந்த வம்சத்தில் விழுந்தது. ஜீயஸ் தந்தத்தினாலான தோளைப் பொருத்தி பெலோப்ஸை உயிர்ப்பிக்கிறார். பெலோப்ஸின் திருமணம், அதன்பின்னான கொலைகள் என்று சாபங்கள் அதிகரிக்கிறது.
பெலோப்ஸின் மகன் ஏட்ரியஸ், தன் தம்பியான தயாஸ்டீஸை இரவு உணவுக்கு அழைக்கிறான். தயாஸ்டீஸின் பிள்ளைகளைக் கொன்று அந்த உணவையே விருந்தாக ஆக்குகிறான். கோபமுற்ற தயாஸ்டீஸ் வெளியேறி பழிவாங்கத் தொடங்குகிறான். தொடர்ந்து பிறழ் குடும்ப பாலியல் உறவுகள், கொலைகள் என்று நீள்கிறது.
ஐந்தாவது தலைமுறையில் அகமென்னான் மகனான ஒராஸ்டிஸ், தன் தந்தையைக் கொன்ற தாயைக் கொல்லத் தயங்குகிறான். தாயைக் கொல்வது மிகப்பெரிய பாவம் என நினைக்கிறான். வருகுறி உரைக்கும் டெல்ஃபிக் நிமித்த கோவிலில் தந்தையின் மரணத்துக்கு பழி தீர்ப்பது மகனின் கடமை என்ற செய்தி கடவுள் அப்போலோ மூலம் அளிக்கப்படுகிறது. அவன் தன் தாயைக் கொல்கிறான். ஆனால் அதன் பின் சாபங்களையும், நோய்களையும் கொண்டுவரும் துர்தேவதையால் (The Furies) பீடிக்கப்பட்டு குற்றவுணர்வும், மனநிலை பாதிக்கப்பட்டும் அலைகிறான். அப்போலோ அவனை ஏதென்ஸ் சென்று நீதி விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளும்படி கூறுகிறார். அறிவின் தெய்வமான அதினா முன் நடைபெற்ற விசாரணையில் அவன் குற்றமற்றவன் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
குற்றவுணர்விலிருந்தும், ஐந்து தலைமுறையாக தொடர்ந்த சாபத்தில் இருந்தும் அறிவின் தெய்வம் விடுவிக்கிறது. ஒரு வன்முறையான செயல் இன்னொரு வன்முறையான செயலைத் தூண்டி அந்த அழுக்கு (Miasma) வம்சம் மீது விழுகிறது. மயாசம் என்ற சொல்லுக்கு மாசு அடைந்தது என்று பொருள். இதிலிருந்து விடுபட தூய்மையாக்கும் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு மயாசம் பீடித்தவர்களை ஒதுக்கி வைக்கும் வழக்கமும் ஏற்பட்டது. கிரேக்க மதத்தில் இந்த கொள்கை முக்கியமானதாக கருதப்பட்டது.
மயாசம் ( Miasma)
கொள்ளை நோய்கள் கடவுளின் கோபம் என்பதை நிராகரித்து, ஹிப்போகிரேடெஸ் அவை தூய்மையற்ற காற்றால் ஏற்படுகின்றன என்று அதற்கு மயாசம் என்று பெயரிட்டார். இறந்த உயிரினங்களின் அழுகும் உடல்களிலிருந்தும், சதுப்பு நிலங்களலிருந்தும் காற்று மாசுபடுகிறது என்று கருதினார். இவற்றில் இருந்து விடுபட மயாசத்தினால் பாதிக்கப்பட்டவர் 40 நாட்கள் தனிமைப்படுத்த (Quarantine) வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார். Quarantine என்ற வார்த்தையே நாற்பது என்ற பொருளுடைய லத்தீன் மொழிச்சொல் ஆகும்.

இந்த கெட்ட காற்றினால் பிளேக், காலரா, அம்மை, போலியோ போன்ற கொள்ளை நோய்கள் ஏற்படுகின்றன என்று மருத்துவ உலகம் கருதத் தொடங்கியது. இந்த கெட்ட காற்றை சுத்தம் செய்ய பல்வேறு மூலிகைகள் மற்றும் விலங்குப் பொருட்களை எரிக்கும் முறை பின்பற்றப்பட்டது. குறிப்பிட்ட நாட்களில் மிகப்பெரிய அளவில் போகிப்பண்டிகை போன்று கொண்டாடும் வழக்கமும் (Bonfire) இருந்தது. சென்ற நூற்றாண்டில் கிருமிக்கொள்கை உருவாகும் வரை இது புழக்கத்தில் இருந்தது.
அலையும் கருப்பை ( Wandering Uterus)
ஹியுமர் தத்துவம் மற்றும் மயாசம் கொண்டு நோய்கள் விளக்கப்பட்ட பின்னும் அவற்றின் உள்ளே வராமல் மருத்துவ சிந்தனையை தடுமாற செய்தவை பெண்களின் குறிப்பாக மாதவிலக்கு சுழற்சி மற்றும் அதன் தொடர்பாக உருவாகி வந்த அறிகுறிகள் இருந்தன.
பிளேட்டோ தொடங்கி கிரேக்க ரோமானிய சிந்தனையில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய மற்றொரு சிந்தனையாக “அலையும் கருப்பை” அமைந்தது. கருப்பை என்பது ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் உள்ளே உள்ளதாக பார்க்கப்பட்டது (Animal inside Animal). ஆணின் உடல் துணை இல்லாமல் தனித்திருக்கும் பெண்ணின் கருப்பை, அதன் இயல்பான நிலையிலிருந்து வெளியேறி உடலின் வேறு இடங்களில் அமைவதால், பெண்களுக்கு மட்டுமேயான நோய்கள் தோன்றுவதாக கருதப்பட்டது. இதன் சிகிச்சை ஒரு இளமையான ஆணுடன் உறவு கொள்வது என முன் வைக்கப்பட்டது. பெண்குறியில் புகை இடுவது, பல்வேறு மூலிகைச்சாறுகளை உட்செலுத்துதுவது போன்றவையும் கடைபிடிக்கப்பட்டது.
கிரேக்கத்தில் கரு உருவாகுவது என்பது பெண்ணின் பொறுப்பு என்றே கருதப்பட்டது. கருத்தடைக்கு பல்வேறு மூலிகைகள் பயன்படுத்தப்பட்டாலும் கற்கள், பூண்டு போன்றவற்றை பெண் உறுப்பில் வைத்து தடை ஏற்படுத்தும் முறையும் இருந்தது. ஹிப்போகிரேடெஸ், தாமிர உப்புநீர் ( Copper Salt water) அருந்துவது ஒரு வருடம் வரை கருத்தடை ஆக நீடிக்கக்கூடியது என்கிறார்.
மகப்பேறு கையேடு எழுதிய மருத்துவரான சொரானுஸ், உறவின் போது பெண் மூச்சை பிடித்து கொள்வதன் மூலமும், உறவுக்குப் பின் தும்முவதன் மூலமும், பின்புறமாக வளைந்து ஏழு முறை குதிப்பதன் மூலமும் கரு உருவாகுவதைத் தடுக்க முடியும் என்கிறார்.
கிரேக்க ரோம மருத்துவத்தில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் ஒரு அபூர்வ சஞ்சீவினி மூலிகை சில்ஃபியம் (Silphium).மூலிகை

படம்: ரோம நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த சில்ஃபியம், விக்கிபீடியா
இது தற்போதைய லிபியா பகுதியில் மட்டும் வளரக் கூடியதாக இருந்தது.
ஹிப்போகிரேடெஸ், பிளினி தி எல்டர், சொரானஸ் போன்றவர்களின் குறிப்பிலிருந்து பல்வேறு நோய்களுக்குப் பயன்படும் ஒரு அற்புத மூலிகையாக இருந்துள்ளது தெரிய வருகிறது. இது முக்கியமாக கருத்தடை முறைக்காக பொன்னுக்கு நிகராக விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில் கருத்தடையின் தேவையை சமாளிக்க முடியாமல் மொத்த இனமும் அழிந்து போனது. சில்ஃபியம் செடியின் கடைசிப் பட்டை, ரோம மன்னன் நீரோவால் உட்கொள்ளப்பட்டது.
காதலின் சின்னமான இதய வடிவ குறியீடு, சில்ஃபியம் விதைகளின் வடிவில் இருந்தே உருவாக்கபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த விதைகள் பாலுணர்வை தூண்டக்கூடியதாக கருதப்பட்டது1.
1603 ஆம் ஆண்டு மருத்துவர் எட்வர்ட் ஜோர்டான் எழுதிய தாயின் மூச்சுத்திணறல் (Suffocation of the Mother) புத்தகம் அலையும் கருப்பை சிந்தனையை மீண்டும் பிரபலமாக்கியது. பெண்களின் ஹிஸ்டிரியா என்ற நோய் இதன் மூலம் கற்பனை செய்யப்பட்டு அதன்பின் 350 ஆண்டுகள் உலகை ஆட்டிப்படைத்தது.
இன்று ஹிஸ்டிரியா மருத்துவரீதியாக கைவிடப்பட்டாலும் பொது சமூகத்தின் மனநிலையில் நீடிக்கிறது. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பட நாயகிகள் குறிப்பாக படையப்பா-நீலாம்பரி போன்ற பாத்திரங்களை இந்தப் பொது சமூக மனநிலையின் ஒரு சாட்சியாக கருதலாம்.
ரசவாத்தின் தொடக்கம்
இன்று மாற்று மருத்துவம் என குறிப்பிடும் வார்த்தை நவீன மருத்துவம் தவிர்த்த அத்தனை மருத்துவ முறைகளையும் சுட்டப் பயன்படுகிறது. நவீன மருத்துவம் நவீன அறிவியலின் துணை கொண்டது என்றும் மற்ற அனைத்தும் அறிவியல் அடிப்படை அற்றவை என்றும் கருதப்படுகிறது.
ஆனால் இந்த வகைப்பாடு மிக சமீபமான ஒன்று. பொதுவாக பின்பற்றப்படும் மையமான மருத்துவமுறையை கொள்கை அளவில் மறுத்து விளிம்பிலிருந்து எழுந்து வரும் ஒருமுறையை மாற்று என கருதலாம்.
புனிதமான நோய்கள் என்பதை மறுத்து மாற்றாக ஹிப்பாக்ரட்ஸ் மூலம் எழுந்து வந்த கிரேக்க ரோமானிய மருத்துவம் பொதுப்போக்கு மருத்துவமாக ஆகும்போதே உடலை அதனுடன் இணைந்த பிரபஞ்சத்தை சேர்த்து முழுமையாக பார்க்கச் சொல்லும் விளிம்பிலிருந்து ரசவாதம் தொடங்கிவிட்டது.
அந்த ரசவாத தத்துவத்தின் நீட்சியாக ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் அன்றைய மரபான மருத்துவ முறையை நிராகரித்து எழுந்து வந்த ஹோமியோபதி, நேச்சரோபதி, மலர் மருத்துவம், திசு மருத்துவம், மெஸ்மெரிசம் போன்றவை மாற்றாக முன்வைக்கப்பட்டன.
ஆயுர்வேதம், சீன மருத்துவம், யுனானி போன்றவை அவற்றின் தேச எல்லைக்குள் மையப்போக்கு மருத்துவமாகவே இருந்தன.
எகிப்தின் தெய்வம் தொத் பின்னர் கிரேக்க-ரோம பண்பாட்டிற்கு சென்று ஹெர்மிஸ் டிரஸ்மெஜிஸ்டஸ் (Hermes Trismegistus – Hermes the Thrice-Greatest) ஆக மாற்றமடைகிறார். ரசவாதத்தின் மூலமாக கருதப்படும் ஹெர்மடிக் தத்துவ பின்புலம் கொண்ட மரகத பலகை (Emerald Tablet) தொத் கொடுத்ததாக ஒரு தொன்மமும் நிலவுகிறது. ஹெர்மேட்டிசிஸம் (Hermeticism) ஒரு குறு மதமாகவும், தத்துவ பள்ளியாகவும் வெகுகாலம் செல்வாக்கு செலுத்தியது. ரசவாதம் ஹெர்மேட்டிசிஸம் தத்துவத்தின் பின்புலத்திலிருந்து வந்தது.
வாய்மொழி மறை ஞானமாக பயிலப்பட்டு வந்த ஹெர்மடிகா (Hermetica) நூலை ஓட்டி பொ யு 1800 களின் இறுதியில் அமெரிக்கா மறை ஞானவியலாளர் வில்லியம் வாக்கர் அட்கின்சன் எழுதிய The Kybalion நூலே நமக்கு அச்சில் கிடைக்கிறது. அட்கின்சன் Three Initiates என்ற புனைப்பெயரில் இந்த நூலை எழுதினார். அட்கின்சன் பயன்படுத்திய பல்வேறு புனைப்பெயர்களில் சுவாமி பஞ்சடசி, யோகி ராமசரகா, சுவாமி பக்தவிஷிதா போன்ற பெயர்கள் நமக்கு ஆர்வம் ஊட்டக்கூடியவை.
ஹெர்மேட்டிசிஸம் ஏழு கொள்கைகளை பிரதானமாக முன்வைக்கிறது.
- அனைத்தும் மனதில் உள்ளது. இப்பிரபஞ்சம் மனமாக உள்ளது.
- மேலே உள்ளதே கீழே உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ளதே உடலின் உள்ளேயும் உள்ளது.
- அனைத்தும் அதிர்ந்துக்கொண்டே உள்ளன. இயக்கத்தில் உள்ளன. ஓய்வில் எதுவும் இல்லை.
- எதுவும் இரட்டைநிலையில் உள்ளன. நேர் மற்றும் எதிர் என்பது ஒரே நிலையின் இரு வேறுபாடுகள் மட்டுமே. அவற்றின் இடையே சமரசத்தன்மை ஏற்படுத்த முடியும்.
- அனைத்தும் அலைகளே. அவை சீரான ஒழுங்கில் உள்ளன. ஏற்றமும் இறக்கமும் அவற்றின் இயல்பான நிலைகளே.
- எல்லா காரணமும் காரியத்தை உண்டாக்கும். எல்லா காரியத்துக்கும் காரணம் உண்டு. எதுவும் ஒரு ஒழுங்கின் விதியை பின்பற்றி நிகழ்கின்றன. நமக்கு தெரியாததால் அந்த விதி இல்லை என்று ஆவதில்லை.
- அனைத்தும் இணைந்த ஆண் மற்றும் பெண் தன்மையால் ஆனவை. அனைத்து தளங்களிலும் அவை வெளிப்படுகின்றன.
இந்த ஏழு கொள்கைகளும் உலகின் வெவ்வேறு பண்பாடுகளில், மருத்துவத்தில் தீவிர சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தின. இன்று மாற்று மருத்துவம் என கூறப்படும் மருத்துவ முறைகளுக்கும் வேர் இங்கிருந்தே தொடங்கி இருக்கலாம் .
உதாரணமாக ரசவாத தத்துவத்துக்கு நிகரான அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது, அண்டமும் பிண்டமும் ஒன்றே என்ற சித்த மருத்துவத்தின் தொடக்கமும், தமிழ் நிலத்தில் மிகப்பழமையான ரோம வணிகத்தொடர்பு பற்றி பொ யு மு 3 ஆம் நூற்றாண்டு முதல் நமக்கு கிடைக்கும் சான்றுகளையும் கருத்தில் கொள்ளலாம்.
நான்கு ஹியுமரும், வினோத சிகிச்சைகளும்
நான்கு ஹியுமர் கொள்கையானது பல்வேறு சிகிச்சைமுறைகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக அதிகப்படியான ஹியுமரை உடலிலிருந்து வெளியேற்றி சமநிலைக்கு கொண்டு வருவது ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் என்று நம்பப்பட்டது.
உடலைக்கீறி இரத்தத்தை வெளியேற்றுவது, அட்டைப்பூச்சிகளை கொண்டு கடிக்க விடுவது, எனிமா பயன்படுத்தி வயிற்றுபோக்கு உருவாக்குவது, வாந்தி, வியர்வை போன்றவற்றின் மூலம் ஹியுமரை வெளியேற்ற மருந்துகள் அளிப்பது, மசாஜ், குளியல் முறைகள் போன்றவற்றை மேற்கொள்வது, தாவர-விலங்கு-தாது- உலோக பொருட்களை பயன்படுத்தி மருந்துகள் செய்வது என்று நோயை பல்வேறு விதங்களில் எதிர்கொண்டது.
இவற்றில் இன்று நமக்கு விசித்திரமாக தோன்றும் சில சிகிச்சை முறைகளை அறிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கும்.
இரத்தம் மற்றும் வியர்வை மருந்து
விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் உடலில் இருந்து வரும் வியர்வையை வழித்து எடுக்க அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் Strigil என்ற கருவியை பயன்படுத்தி வழித்தெடுத்த வியர்வை Gloios என்ற மருந்தாக விற்பனை செய்யப்பட்டது. மூல நோய், மருக்கள், பாலியல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த விலைமிக்க மருந்தாக விற்கப்பட்டது2.

படம்: வியர்வையை வழித்தெடுத்தல், விக்கிபீடியா
கேலன் கிளாடியேட்டர் வீரர்களின் இரத்தமும், கல்லீரலும் நோய்களை முக்கியமாக வலிப்பு நோயை குணப்படுத்தும் என்று நம்பினார். சண்டையில் காயமடையும் வீரர்களின் இரத்தமும், இறந்த வீரர்களின் கல்லீரலும் மருந்தாக உண்ணப்பட்டன.
பொயு 1491 ஆம் ஆண்டு போப் இன்னோசெண்ட் VIII பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டார். அவரின் மருத்துவர் Giacomo di San Genesio, பத்து வயதுடைய சிறுவர்கள் மூன்று பேரின் உடலிலிருந்து இரத்தத்தை எடுத்து அவருக்கு குடிக்க கொடுப்பதன் மூலம் இளமையான, ஆரோக்கியநிலைக்கு திருப்ப முடியும் என்று சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அந்த மூன்று சிறுவர்களும் இறந்துவிட, பின்னர் போப் அவர்களும் இறந்துவிடுகிறார். மருத்துவரும் தலைமறைவு ஆகிவிட்டார். இது ஒரு பொய் பரப்பல் என்ற கூற்றும் முன் வைக்கப்படுகிறது3.
இறந்த மனிதர்களின் உடல் பகுதிகள் மருந்தாக உட்கொள்ளப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டு வரை Mummy Powder என்ற பெயரில் மருந்தகங்களில் விற்கப்பட்டன. அதிலும் சிறப்பு சிகிச்சையாக தலைவலி என்றால் மண்டையோட்டு பொடி, உடம்புவலிக்கு கொழுப்பு என்று விதவிதமாக விற்கப்பட்டன.
இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் II மண்டையோடு மற்றும் மது கலந்த மருந்தை Kings Drops என்ற பெயரில் உட்கொண்டுள்ளார் என்று தெரிகிறது4. மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, பொயு 1640 களில் நடந்த இங்கிலீஷ் சிவில் யுத்தத்தின் போது, மன்னர் சார்லஸ் பொது இடத்தில் தலை துண்டிக்கப்பட்டார். அவரின் கீழே சிந்திய ரத்தம் நோய்களை குணப்படுத்தும் என்று சேகரிக்கப்பட்டு விற்கப்பட்டது5.
பிளினி சிறுநீர் மருத்துவம்
பிளினி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமன் இயற்கைவியலாளர், தத்துவ அறிஞர். இவர் எழுதிய கலைக்களஞ்சியமான Naturalis Historia முப்பத்தேழு பகுதிகள் உடையது. இதில் பிளினி சிறுநீரை சர்வரோக நிவாரணியாக முன்வைக்கிறார்.
பற்களை வெண்மையாக்க, குழந்தையின் அரிப்புகளுக்கு, நாய்க்கடிக்கு, கொப்பளங்கள், ஆசனவாய் நோய்கள், பொடுகு போன்றவற்றிக்கு வெளிப்பூச்சாக பரிந்துரை செய்கிறார்.
குழந்தையின்மை நிலைக்கு, பெண்கள் விதைகள் நீக்கப்பட ஆணின் (Eunuch) சிறுநீரை அருந்தி வருவது பலனளிக்கும் என்று கூறுகிறார்6.
பொ யு 1940 களில் முதன் முறையாக LH, FSH ஹார்மோன்கள் Pierro Donini ஆல் கண்டறியப்பட்டது. இந்த ஹார்மோன்கள் பெண்களின் கருமுட்டை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிப்பவை ஆகும். சில ஆண்டுகளில் கரு உருவாக்கும் சிகிச்சைமுறைக்கு இவற்றை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் உருவாகியது.
அப்போது ஹார்மோன்களை செயற்கையாக உற்பத்தி செய்ய வழியில்லை. ஆனால் மாதவிலக்கு நின்ற மெனோபாஸ் அடைந்த பெண்களின் சிறுநீரில் LH, FSH ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. அவற்றை பிரித்து எடுத்து Pergonal மருந்து உருவாக்கப்பட்டது. ஆனால் மருந்தை பெரிய அளவில் பரிசோதிக்க அவ்வளவு சிறுநீருக்கு என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. Pope Pius XII – ன் மருமகன் Pergonal நிறுவன இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, போப் அவர்களால் ஓய்வு பெற்ற கன்னியாஸ்திரிகளின் சிறுநீரை சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டது. எந்த மாதவிடாய் நின்ற பெண்ணின் சிறுநீரும் வேலை செய்யுமென்றாலும், ஒருவேளை அவர்கள் கருவுற்றிருந்தால் முழு தூய்மையான LH மற்றும் FSH கிடைப்பது கடினம்.
1962 ஆம் ஆண்டு Pergonal மருந்தைப் பயன்படுத்தி வெற்றிகரமான சிகிச்சைக்குப்பின் முதல் குழந்தை டெல் அவிவ் நகரில் பிறந்தது. மருந்தின் தேவை அதிகரிக்க ஒருகட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 30000 லிட்டர் சேகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இவற்றை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கும் முயற்சிகள் வெற்றி அடைய Gonal-f என்ற மருந்து வெளியாகிய பின் இந்த சிறுநீர் முறை கைவிடப்பட்டது7.
ஈஸ்ட்ரோஜன் குறைபாடுகளுக்கு மருந்தாக முதலில் கருவுற்ற பெண்களின் சிறுநீரில் இருந்து உருவாக்கப்பட்ட Progynon and Emmenin (Conjugated Estriol) போன்ற மருந்துகளும், பின்னர் கருவுற்ற குதிரையின் சிறுநீரில் இருந்து உண்டாக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் மருந்தான Premarin (Pregnant Mare’s Urine) புழக்கத்தில் இருந்தன. உலகமெங்கும் The Pregnant Mare Urine Farms (PMU Farms) நடத்தப்பட்டன. அமெரிக்காவில் தற்சமயம் இல்லை என்றாலும் கனடா, சீனா போன்ற நாடுகளில் PMU பண்ணைகள் இன்றும் உள்ளன.
நஞ்சு மருத்துவம்
பொயுமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சந்திரகுப்த மௌரியர் தன்னைச்சுற்றி பெண் பாதுகாவலர்களை வைத்திருந்தார். இவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே சிறுக சிறுக விஷம் கொடுக்கப்பட்டு உடலே விஷமாக மாறியவர்கள். அவர்கள் தொடுகையே எதிரிகளுக்கு மரணத்தை கொண்டு வருவதாக இருந்தது. சந்திரகுப்த மௌரியரின் கடைசி மனைவி ஹெலன் கிரேக்க இளவரசி ஆவாள்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின் கிரேக்கத்தை ஆண்ட மித்ரடெட், விஷமளித்துக் கொல்லப்படுவதிலிருந்து காத்துக்கொள்ள தொடர்ச்சியாக சிறுக சிறுக விஷமருந்தி தன்னை விஷத்தின் முறிமருந்தாக (Antidote) மாற்றிக்கொண்டவர். அவர் பெயரால் இம்முறை Mithridatism என்றழைக்கப்பட்டது.
இன்றும் மருத்துவத்தில் தாவர மற்றும் விலங்கு நஞ்சிலிருந்து உருவாக்கப்படும் மருந்துகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன8.
இன்று பயன்படுத்தப்படும் நோய் தடுப்பூசிகளையும் (Vaccines), போட்டாக்ஸ் (Botox) போன்ற இளமையை தக்க வைக்கும் சிகிச்சைகளையும் நாம் இங்கு கொண்டு சென்று இணைத்துப் பார்க்க முடியும்.
கிரேக்க ரோம மருத்துவத்தின் கொடை
அரசன் தாலமியால் (Ptolemy II Philadelphus) பொயுமு 3 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அலெக்சாந்திரியா நூலகம் சுமார் 600 ஆண்டுகாலம் மருத்துவ சிந்தனையின் மையமாக திகழ்ந்தது.
பொயுமு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தாவரவியலாளரும், கிரேக்க மருத்துவருமான டியோஸ்கோரைட் (Dioscorides) எழுதிய De Materia Medica என்ற மூலிகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்களை பற்றிய நூலே மருந்துவியலின் (Pharmacopia) முன்னோடி நூலாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டு வரை மருத்துவத்தில் செல்வாக்கு செலுத்தியது.
ஆர்திமிடோரஸ் (Artemidorus) பொயு 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆயிரக்கணக்கான நபர்களின் கனவுகளை அவற்றின் பலன்களை நான்கு பாகமாக Oneirocritica என்ற புத்தகமாக எழுதினார். நோயாளிகளின் கனவுகளைப் பொருத்து அவர்களின் நோயின் நிலை கணிக்கப்பட்டது. உதாரணமாக ஒரு நோயாளி கனவில் பனி வருவது சளி ஹியுமர் அதிகமாக இருப்பதையும், வீரன் மூச்சு வாங்குவது போன்ற கனவு இரத்தம் அதிகமாக இருப்பதையும் குறிக்கிறது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பின்னான காலத்தில் இது ஒருவித சோதிடமாக பார்க்கப்பட்டது. ஆனால் சிக்மண்ட் பிராய்ட்க்கு பின் உளவியலில் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது9.
சர்வரோக நிவாரணி (Theriac / Panacea)

படம் : விக்கிபீடியா
கேலன், தேரியக் (Theriac) என்ற அனைத்து விஷங்களுக்கும் முறிமருந்தான ஒரு சர்வரோக நிவாரணியை உருவாக்கினார். பொதுவாக இவை ஓபியம், குங்குமப்பூ, ஆமணக்கு, இஞ்சி, பட்டை, தேன், சாமந்திபூ போன்ற பல்வேறு பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்டது. இங்கிலிஷ் சிவில் போரை நடத்திய ஒலிவர் குரோம்வெல் (Oliver Cromwell) தேரியக்யை பிளேக் நோயிலிருந்து காத்துக்கொள்ள எடுத்துக்கொண்டதாக வரலாற்றாசிரியர் கிறிஸ்டோபர் ஹில் பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாண்டு இறுதி வரை இவை தயாரிப்பில் இருந்தன.
மருத்துவமும் எண்களும்

பித்தகோரஸ் காலத்திலிருந்து எண்களும் மருத்துவமும் பின்னிப்பிணைந்து விட்டன. மிகையாக சொல்வதென்றால், மருத்துவத்தில் கடவுள் இருந்த இடத்தை எண்கள் எடுத்துக் கொண்டு இன்றுவரை நம்மை ஆள்கின்றன.
குறிப்பிட்ட எண்ணுக்கு முன்வரை ஆரோக்கியமானவர் அந்த எண்ணுக்கு பின் ஆரோக்கியமற்றவர் என்பதாகட்டும், சுமேரியாவில் ஆட்டின் கல்லீரலை கொண்டு நோயின் வருகுறி உரைப்பதாகட்டும், அல்லது கிரேக்கத்தில் நான்கு ஹியுமர் அதிகரிப்பது குறைவது கொண்டு நோயை கணிப்பதாகட்டும் இவற்றை ஒரு நீண்ட சிந்தனை தொடர்ச்சியின் வரிசையில் வைத்து நாம் புரிந்துக்கொள்ள முடியும்.
சுமேரிய நாகரீகத்தில் பார்த்த அகத்தின் அழகு முகத்தில் தெரியும் சிகிச்சை முறை வளர்ந்து கேலனின் நான்கு குணாதிசயங்கள் மாறுவதையும், இளமையை மீட்டளிக்கும் ஒற்றை மூலிகை என்பது அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து தேரியக் என்ற கருதுகோளாக மாறிய சித்திரத்தையும் பார்க்க முடியும்.
கிரேக்க மருத்துவம் ஹிப்போகிரேடெஸ் தொடங்கி கேலன் காலத்தில் உச்சத்தை அடைந்தது. கேலன் தன் வாழ்நாளில் எழுதிய, தொகுத்த நூல்களின் எண்ணிக்கை 500 க்கும் மேல் இருக்கும் என்றும் மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமான வார்த்தைகள் எழுதி இருப்பார் என்றும் கருதப்படுகிறது. ரோமானிய மன்னரும் தத்துவமேதையுமான மார்கஸ் ஆர்லியஸ் “கேலன் மருத்துவர்களில் முதன்மையானவர், தத்துவவாதிகளில் தனித்தன்மை வாய்ந்தவர்” என்று குறிப்பிடுகிறார்.
பொதுயுகம் நான்காம் நூற்றாண்டில் நடந்த ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின்போது கிரேக்க மருத்துவம் அரேபிய நிலத்திற்கு புலம்பெயர்ந்து. அடுத்த ஆயிரம் ஆண்டுகால மருத்துவ வளர்ச்சி அங்கிருந்து தொடர்ந்தது.
மருத்துவத்திலிருந்து கடவுளர்களை பிரித்து அனுப்பியாகிவிட்டது. இனி இது மனிதர்களின் பொறுப்புதான். முடியவில்லை என்றால் வேண்டிக்கொள்ளலாம் அல்லது நாமே தெய்வமாகி அருளிக்கொள்ளலாம். அது நீயே (தத்துவமஸி) என்று துணிந்து முன்வைத்த இந்திய நிலத்தில் என்ன நடக்கிறதென்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
சான்றாதாரங்கள்
- https://columbiasurgery.org/news/heart-love-story#:~:text=Legend%20has%20it%20that%20demand,try%20the%20measure%20for%20themselves
- https://nextbigideaclub.com/magazine/sweat-history-exercise-bookbite/32226/
- https://jamanetwork.com/journals/jama/article-abstract/453949
- https://www.history.com/news/7-unusual-ancient-medical-techniques
- https://onlinelibrary.wiley.com/doi/10.1111/1467-9809.13158?af=R
- https://www.mediamatic.net/en/page/231135/pliny-s-panacea
- https://news.flindersfertility.com.au/the-strange-story-of-the-fertility-drug-blessed-by-the-pope
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7396678/table/T1/
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
