- ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை
- கலையே உன் வாழ்க்கையின் திசை மாறினால்
- நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள்
- கல்லிலே கலைவண்ணம் கண்டார்
- உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்
- புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும்
- அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள்
- நவீன உலகை உருவாக்கும் கணிதம்
- விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்
- தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம்
- ரங் பர்ஸே
- தூக்கணாங்குருவி கூடு
- பறவைகள் ஈர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் கட்டிடங்கள்
- ஒவ்வொரு பூவும் சொல்கிறதே
- பசுமையின் மனம் பாடும் ரகசியம்
- நீர் துளியில் நிகழும் புதுமைகள்
- எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா!
- வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்
- பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
- பாறைகள் பகிரும் பழங்கால கதைகள்
- ஒரு செல்லுக்கு தன்னைப் பற்றி என்ன தெரியும்?
- இயற்கை ஏன் வடிவங்களை உருவாக்குகிறது
- மரங்களின் மர்மங்கள்: பில்லியன் உயிர்களின் கதை
- நீலப் பிரகாசம்
- மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு இருக்கிறதா?
- இயற்கை ஒரு ஆடம்பரம் அல்ல, மூளைக்கான மருந்து
பல நூற்றாண்டுகளாக, நீல நிறம் கலைஞர்களையும், விஞ்ஞானிகளையும் மயக்கி வந்துள்ளது. ஆனால், நிலையான மற்றும் பிரகாசமான நீல நிறமிகளை உருவாக்குவது என்பது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்துள்ளது. இயற்கையில் நீல தாதுக்கள் மிகவும் அரிதானவை, மேலும் நிலையான, நச்சில்லாத நீல நிறமிகளை உருவாக்கும் செயல்முறை சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த தன்மை தொடர்பான சிக்கல்களால் நிரம்பியுள்ளது. எனினும், 21ஆம் நூற்றாண்டில், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நீலத்தின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது, இது நிறத்தின் புதிய வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்த முயல்கிறது.
நீல நிறத்தைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒரு பிரகாசமான கோடை வானம், முடிவற்ற கடல் அல்லது கணினித் திரையின் பிரகாசம் போன்றவற்றை கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால், நவீன வாழ்க்கையின் எங்கும் நிறைந்த பகுதியாக நீலம் இருந்தாலும், அது இயற்கையில் மிகவும் அரிதான வண்ணங்களில் ஒன்றாக மட்டுமில்லாமல் உருவாக்கவும் மிகவும் கடினமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீலத்தின் வரலாறு கலை, அழகியல், வேதியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எழுச்சியை உள்ளடக்கிய ஒரு வண்ணமயமான களம்.
நீல நிறத்தின் விசித்திரமான உலகத்திற்குள் ஆழமாக மூழ்கி, அதைப் போற்றிய பண்டைய நாகரீகங்கள் முதல், ஆய்வகங்களில் அதை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பதை சிரத்தையுடன் கற்றுக்கொண்ட விஞ்ஞானிகள் வரை, இறுதியாக இன்று நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அது எவ்வாறு பாதிக்கிறது என்பது வரை சற்று ஆராயலாமா?

இயற்கையில் நீலம் இல்லாதது பற்றிய விசித்திரமான பார்வை

இயற்கையைச் சுற்றிப் பாருங்கள்: காடுகளில் பச்சை நிறம் ஆதிக்கம் செலுத்துகிறது, பூக்களில் சிவப்பு நிறம் தோன்றுகிறது, பூமியில் பழுப்பு மற்றும் மஞ்சள் நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் உள்ளன. ஆனால் நீலமா? வானம் மற்றும் தண்ணீரைத் தவிர (தொழில்நுட்ப ரீதியாக அவை நீல நிறத்தில் இல்லை, ஆனால் ஒளி சிதறல் காரணமாக மட்டுமே அந்த வழியில் தோன்றும்), நீலம் நம்பமுடியாத அளவிற்கு அரிதானது.
விலங்கு உலகில், மிகச் சில உயிரினங்கள் இயற்கையாகவே நீல நிறத்தைக் காட்டுகின்றன. நீல ஜெய் அல்லது மயில் போன்ற பறவைகள் நினைவுக்கு வரலாம், ஆனால் அவற்றின் இறகுகள் உண்மையில் நீல நிறத்தில் இல்லை; அவை நுண்ணிய கட்டமைப்புகள் காரணமாக நீல அலைநீள ஒளியை பிரதிபலிக்கின்றன. பிரபலமான மோர்போ இனத்தைப் போன்ற பட்டாம்பூச்சிகள் இதேபோன்ற தந்திரத்தைப் பயன்படுத்துகின்றன – நிறமியை விட கட்டமைப்பு வண்ணம்.
“Blue: In Search of Nature’s Rarest Color” என்பது Kai Kupferschmidt எழுதிய ஒரு அறிவியல் பயணக் கட்டுரை ஆகும் (https://books.google.com/books/about/Blue.html?id=GcT_DwAAQBAJ ). இந்த புத்தகம், இயற்கையில் அரிதாகக் காணப்படும் நீல நிறத்தைப் பற்றிய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. குப்ஃபர்ஷ்மிட், உலகம் முழுவதும் பயணம் செய்து, இந்த வண்ணத்தின் விஞ்ஞானத்தையும், வரலாற்றையும் ஆராய்கிறார். புத்தகம், கண்ணுக்கு எட்டாத நீல நிறத்தின் மர்மங்களை, அதன் வேதியியல் மற்றும் உயிரியல் அம்சங்களை விளக்குகிறது. இது வாசகர்களுக்கு உலகை புதிய பார்வையுடன் பார்க்க உதவுகிறது, மேலும் இதன் அழகையும் அபூர்வத்தையும் உணரச் செய்கிறது.
பிலிப் பால் தனது “Bright Earth” (https://www.amazon.com/Bright-Earth-Art-Invention-Color/dp/0226036286) என்ற புத்தகத்தில், இயற்கையில் நீல நிறம் எவ்வளவு அரிதாக உள்ளது என்பதைப் பற்றி விவரிக்கிறார். அவர் கூறுவதாவது, நீல நிறம் பல உயிரினங்களிலும் தாவரங்களிலும் அரிதாகக் காணப்படுகிறது, ஏனெனில் அது பெரும்பாலும் நிறமூட்டிகளால் (pigments) உருவாகாமல், கட்டமைப்பு நிறமூட்டலால் (structural coloration) உருவாகிறது. உதாரணமாக, மயில் இறகுகளில் காணப்படும் நீல நிறம், உண்மையான நீல நிறமூட்டிகள் காரணமாக அல்ல, மாறாக, ஒளி இடையறை ஏற்படும் நுண்ணிய கட்டமைப்புகள் காரணமாகும். இந்த கட்டமைப்பு நிறமூட்டல் நீலத்தை அரிதானதும் ஆச்சரியமானதுமானதாக ஆக்குகிறது, ஏனெனில் இது எளிய நிறமூட்டலுக்கு பதிலாக சிக்கலான இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்முறைகளை உள்ளடக்கியது.
நிலையான எகிப்திய நீலத்தின் (Egyptian blue) காலத்தை வென்ற பயணம்

பண்டைய எகிப்தின் ஒரு பாலைவன பிரதேசம். கொதிக்கும் மணலின் நடுவே, ஒரு கலைஞர்களின் குழு, ஒரு உயர்ந்த குறிக்கோளை அடைவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் மலைகளில் மட்டுமே கிடைக்கும் அரிய ரத்தினமான லாபிஸ் லாசுலியின் (lapis lazuli) விண்ணை ஒத்த நீல நிறத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம். இது ஒரு சாதாரண முயற்சியாகாது. ஆழ்ந்த நீல நிறத்திற்காக மதிக்கப்பட்ட லாபிஸ் லாசுலி, தெய்வீகத்தையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. பரோவுகள் அதை அணிந்துகொண்டு தங்களின் செல்வாக்கை காட்டினர், மேலும் கலைஞர்கள் அதை கடவுள்களையும் விண்மீன்களையும் வரைய மிகவும் யதார்த்தமாக பயன்படுத்தினர். ஆனால் அதன் அரிய தன்மை, அவ்வளவு எளிதில் பலருக்கும் கிடைக்காததால், ஒரு புது நீலநிறத்தை உருவாக்க வேண்டும் என்ற தேடல் தொடங்கியது.
எகிப்திய நீலத்தின் ஆரம்ப காலம்

கிமு 3300ஆம் ஆண்டில், மெம்பிஸ் நகரின் விறுவிறுப்பான சந்தைகளில், எகிப்திய வேதியியல் அறிஞர்கள் ஒரு ரகசியத்தை கண்டுபிடித்தனர். பாலைவன மணல் (சிலிகா), நாட்ரான் (சோடியம் கார்பனேட்), சுண்ணாம்புக்கல் மற்றும் பச்சை தாமிர தாதுக்களான மேலகைட் (malachite) ஆகியவை சேர்க்கப்பட்டு 850°C மேல் வெப்பத்தில் சூடுபடுத்தப்பட்டன. இதன் விளைவாக ஃபிரிட் (Frit) எனப்படும் கண்ணாடி போன்ற பொருள் உருவாகியது. அதை பொடியாக அரைத்ததில் ஒரு பிரகாசமான நீல நிறம் கிடைத்தது. இந்த செயற்கை உருவாக்கம் “ஹஸ்ப்ட்-இரிட்” (hsbd-iryt means artificial lapis lazuli) எகிப்திய நீலம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயர், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஒலிக்கப்போகிறது என்று யாரும் அன்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!
சிறிது காலத்திலேயே, இவ்வண்ணம் எகிப்தியக் கலையின் அடிப்படையாக மாறி, கல்லறைச் சுவர்கள், சிலைகள் மற்றும் பானைகளில் Egyptian shawabti 660 BC வாழ்க்கையையும், நிறத்தின் நிலைத்தன்மையையும் பிரதிபலிக்க வைக்கத் தொடங்கியது.
ரோமாவின் மோகனம்
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ரோமர் கலைஞர்களின் பன்முக திறமைகளால் பல ஓவியங்களிலும், மொசைக்களிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இதன் அழகில் மயங்கிய பேரரசர் நீரோ, தனது அரண்மனை, டோமஸ் ஆரியா (தங்க வீடு)வை இந்த நிறத்தால் பிரமாண்டமாக அலங்கரித்தார்.
சமீபத்தில் (ஜனவரி 2025) தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், நீரோவின் அரண்மனையில் இருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இடிந்த இடிபாடுகளுக்குள் மறைந்திருந்த ஒரு 2.4 கிலோகிராம் எடை கொண்ட எகிப்திய நீலத்தில் உருவான ஒரு நினைவுச்சின்னத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, தற்போது அந்த நிறத்தின் வரலாற்றிலும் மற்றும் அதன் பயணத்திலும் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலக்கல்லின் அறிவியல் ரகசியம்
எகிப்திய நீலத்தின் நிலைத்தன்மைக்கு காரணம் அதன் வேதியியல் அமைப்பில் உள்ளது. இது முக்கியமாக கால்சியம் காப்பர் சிலிகேட் (CaCuSi4O10) ஆகும். இத்திடப்பொருளின் படிக அமைப்பு மற்றும் தாமிர அயனியின் சதுர வடிவியல், நிறத்தின் நிலையாமைக்கு மேலும் வழி வகுக்கிறது.
இடைக்கால நாகரீகக் காலங்களில், எகிப்திய நீலத்தை தயாரிக்கும் அறிவு மறக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தான் Sir Humprey Davy போன்ற வேதியாளர்கள் பழைய மாதிரிகளை ஆய்வு செய்து அதன் அமைப்பை புரிந்துகொண்டனர். இன்று, ஆராய்ச்சியாளர்கள் இதன் பயன்பாடுகளை கலை மீட்பு செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு ஆராய்கின்றனர். அதன் இன்ஃப்ராரெட் ஒளிச்சிதறல் (near-IR) திறன் ஓவியங்களில் மறைந்த அடுக்குகளை கண்டறிவதற்கும் அல்லது விரல் தடங்களை கண்டறியும் தூளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
நிலைத்த மரபு
பண்டைய நாகரீகங்களிருந்து நவீன ஆய்வுகூடங்களுக்குச் சென்ற எகிப்து நீலத்தின் பயணம், ஒரு நிறம், எவ்வாறு எல்லைகளையும் காலங்களையும் கடந்து செல்ல முடியும் என்பதை அழகாக விளக்குகிறது. இன்று, இன்னும் புதிய பயன்பாடுகளை அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கும் போது, இதன் நிலைத்த மரபைக் கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது. எகிப்திய நீலம் என்பது ஒரு நிறம் என்பதை விட; கலையையும் அறிவியல் உலகையும் இணைக்கும் பாலமாகாமல் மட்டுமன்றி, கடந்த காலத்தையும் நவீன உலகையும் பிணைப்பது, மேலும் அறிவைப் பெறுவதில் மனித குலம் காட்டும் தீராத தேடலுக்கான சாட்சி.
https://allthatsinteresting.com/egyptian-blue
மறைந்த ‘மாயா ப்ளூ’ வின் மறுமலர்ச்சி

தெற்கு மெக்சிகோவின் யுகடான் (Yucatan) தீபகற்பத்தின் மையத்தில், அடர்ந்த காடுகள் பழங்கால நாகரிகங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கின்றன. அங்கே ஒரு நவீன தேடல் உருவாகிக் கொண்டிருந்தது. Louis May Ku என்ற கலைஞர், மாயா ப்ளூ எனப்படும் புதிரான ஒரு வண்ணத்தின் மர்மத்தால் ஈர்க்கப்படுகிறார். காலத்தையும், வானிலையையும், இன்றைய வேதியியலையும் வென்று இன்றும் நிலைத்திருக்கும் இவ்வண்ணம், மாயா நாகரீகத்தின் சுவரோவியங்கள், பானைகள் மற்றும் புனித பொருட்களில் பளபளப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதை உருவாக்கிய அறிவு வரலாற்றில் தொலைந்து போயிருந்தது.
லூயிஸ் தனது முன்னோர்களின் மகத்துவம் மற்றும் சடங்குகள் பற்றிய விவரங்கள் கேட்டு வளர்ந்ததால், புனித வண்ணமாகக் கருதப்பட்ட மாயா ப்ளூவின் பங்கை உணர்ந்திருந்தார். மேலும் சிறுவயதிலிருந்தே இவரை வியக்க வைத்த சுவரோவியங்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வளவு பிரகாசமாக எவ்வாறு நிலைத்ததுள்ளது என்ற கேள்வியையும் எழுப்பியது.

இழந்த கலைமுறைகளை மீண்டும் கண்டுபிடிக்கவும், மற்றும் அதன் அடிப்படைகளை அறியவும் லூயிஸ் 2018ம் ஆண்டு ஒரு பயணத்தை மேற்கொண்டார். தீர்மானத்துடன் இருந்தாலும், அவரிடம் குறைந்த தரவுகளே இருந்தன. பழைய ஸ்பானிய கைப்பதிவுகளை ஆராய்ந்தும் மற்றும் கிராம மூதாதையர்களிடம் பேசியும், மாயா பாரம்பரியத்தின் சில விவரங்களை சேகரித்தார். மாயா ப்ளூ என்பது வெறும் வண்ணமல்ல; இது ஒரு ஆன்மிக இணைப்பின் சின்னமாகவும், புவியையும் தெய்வீகத்தையும் இணைக்கும் பாலமாகவும் கருதப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் மாயா ப்ளூவை ஆராய்ந்து வந்தனர். அதன் முக்கிய கூறுகள் Indigofera suffruticosa எனப்படும் இன்டிகோ செடியின் நிறமிப்பும், பாலிகோர்ஸ்கைட் (palygorskite) எனப்படும் ஒரு வகை களிமண் என்றும் கண்டறியப்பட்டது. இந்த தனித்துவமான கலவை காலத்தையும் வெப்பத்தையும் எதிர்த்து நிறம் நிலைத்திருக்க வைத்துள்ளது. ஆனால் இதை உருவாக்கிய முறையை மீண்டும் கண்டறிவதில் விஞ்ஞானிகள் தோல்வி அடைந்தனர்.
2023ல் லூயிஸுக்கு தனது சொந்த ஆய்வகத்தில் பல ஆண்டுகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பலன் கிட்டியது. இன்டிகோ இலைகள் மற்றும் பாலிகோர்ஸ்கைட் (palygorskite) களிமண்களை சரியான வெப்பநிலைகளில் சூடுபடுத்தும்போது ஏற்படும் வேதிச் செயற்பாடு வண்ணத்தை நிலைப்படுத்துவதை அறிந்தார். மேலும் கால்சியம் கார்பனேட் சேர்த்தால் அதன் பிரகாசம் அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்தது. இத்தாலி மற்றும் மெக்ஸிகோ விஞ்ஞானிகள் அவரது முறையை உறுதிப்படுத்தினர். இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு முதன்முறையாக பாரம்பரிய மாயா ப்ளூவை மீண்டும் உருவாக்கியதால், இந்த கண்டுபிடிப்பு உலகளாவிய ஆர்வத்தை தூண்டியது. விஞ்ஞானிகள் அதன் வேதியியல் பண்புகளை ஆழமாக ஆராய்த் தொடங்கினர்; வரலாற்றாளர்கள் அதன் பண்பாட்டுச் சிறப்புகளை ஆய்வு செய்தனர்; கலைஞர்கள் அந்த வண்ணத்தை நவீன படைப்புகளில் பயன்படுத்தி பழங்கால தொழில்நுட்பங்களையும் நவீன கலைச்சொற்களையும் இணைத்தனர்.
இந்த பயணம் லூயிஸிக்கு, வெறும் அறிவியல் முயற்சி இல்லை, ஒரு அடையாளத்தை மீட்டெடுக்கும் அரிய சாதனை. “மாயா ப்ளூ என்பது வெறும் நிறமல்ல. இது எங்கள் மக்கள் யார் என்பதைச் சொல்வது மட்டுமில்லாமல், இயற்கையுடன் நாங்கள் கொண்டுள்ள தொடர்பு, ஆன்மீகம் மற்றும் நிலைத்தன்மை பற்றிய புரிதல் போன்றவற்றைக் குறிப்பிடுவதாகும்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தனது பணியின் மூலம், அவர் மற்றவர்களை தங்கள் பாரம்பரியத்தை மதிக்கவும் முன்னோர்களின் ஞானத்தை ஏற்கவும் ஊக்குவிக்க விரும்பினார்.
அவருடைய சாதனை உலகம் முழுவதும் பரவியதும் லூயிஸ் பாரம்பரிய அறிவைப் பாதுகாக்க முனைந்தவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக மாறினார். இவரது அனுபவம், தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் காலத்திலும் பழங்கால வழக்கங்களில் இருந்து இன்னும் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை இன்றைய நவீன உலகிற்கு நினைவூட்டுகிறது.
அரிதான நீல நிறமிகளின் தற்செயலான கண்டுபிடிப்பு
வேதியியல் ஆய்வகங்களில் நிகழும் தற்செயலான கண்டுபிடிப்புகள் (Serendipity) பல முறை விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக, தற்செயலாக உருவான நீல நிற வேதிப்பொருட்களின் கதை சற்று வித்தியாசமானது. அவை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றதோடு, புதிய அறிவியலை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்திற்கும் பாதை அமைத்துள்ளன. இங்கு, ப்ரஷியன் ப்ளூ (Prussian Blue), காப்பர் தேலோசயனின் (Cu Phthalocyanine), மற்றும் YInMn ப்ளூ பற்றிய ஆய்வுகளை அறிந்துகொள்வோமா?
ப்ரஷியன் ப்ளூ

1706-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள ஜோஹான் ஜேக்கப் டீஸ்பாக் (Johann Jakob Diesbach) என்ற வேதியியலாளர் ஒரு சிவப்பு நிறமியை உருவாக்க முயன்று கொண்டிருந்தார். இதற்கு அவர் பயன்படுத்திய “பொட்டாஷ்” (potash) எலும்புகளை எரித்து தயாரிக்கப்பட்ட ஒரு “ஆயில்” கலந்தது. இந்த கலவையுடன் இரும்பு சல்பேட்டை சேர்த்தபோது, எதிர்பார்த்த சிவப்பு நிறம் கிடைக்கவில்லை, ஆனால் ஒரு ஆழமான நீல வண்ணம் உருவானது.
ப்ரஷியன் ப்ளூ கலை மற்றும் தொழில்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹோகுசாய் (Hokusai) என்பவரின் புகழ்பெற்ற ஓவியம் The Great Wave off Kanagawa முதல் பழைய ப்ளூ பிரிண்ட் வரை இதை பயன்படுத்தினர். இந்த தற்செயலான கண்டுபிடிப்பு செயற்கை நிறங்களின் ஆரம்பமாகவும், நவீன வேதியியலுக்கு அடிப்படையாகவும் அமைந்தது.
காப்பர் தேலோசயனின் (copper phthalocyanine)
1927-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஹென்றி டீஸ்பாக் மற்றும் எட்மண்ட் வான் டெர் வீட் ஆகியோர் தேலோநைட்ரைல் சேர்மங்களை உருவாக்க முயன்றனர். அவர்கள் பயன்படுத்திய எனாமல் (enamel) பாத்திரத்திலிருந்து தற்செயலாக சில துகள்கள் இக்கலவையுடன் சேர்ந்து, காப்பர் ப்தேலோசயனின் என்ற சேர்மம் உருவானது. இதன் பிரகாசமான நீலநிறமும், நிலைத்தன்மையும், பிற்காலத்தில் வண்ணங்கள் மற்றும் அச்சு மை போன்ற பல தொழில்களில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. சில சமயம் ஆய்வக உபகரணங்களுக்குள்ளும் ஓர் கலை உணர்வு இருந்திருக்கலாம்!
நீலத்தின் மறுமலர்ச்சி: புதிய நிறமிகளின் புதுமைகள்
“கலைஞர்கள் ஒரு சிறந்த, நீடித்த நீல நிறமியை இரண்டு நூற்றாண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,” என்கிறார் ஐஐடி, மதராஸில் முனைவர் பட்டம் பெற்று, தற்போது ஓரிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்வியாளர், MA சுப்ரமணியன் (அ) மாஸ் அவர்கள்.
2009-ஆம் ஆண்டில், மாஸ் மற்றும் அவரது ஆய்வுக்குழு மின்னணு சாதனங்களுக்கான பொருட்களை உருவாக்குவதில் முனைந்திருந்தனர். அதில் ஒரு ஆராய்ச்சி மாணவர், மாங்கனீஸ் ஆக்சைடு (Manganese Oxide), யிட்ரியம் ஆக்சைடு (Yttrium Oxide), மற்றும் இன்டியம் ஆக்சைடு (Indium Oxide) ஆகியவற்றைக் கலந்து 2000°F வெப்பநிலையில் சூடாக்கி புதிய ஒரு திடப் பொருளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு தீவிரமான நீல நிற பொருள் உருவாகியது.
மாஸிற்கு இந்த நீல நிறம் ஆச்சரியத்தை உண்டாக்கியதுடன், தயாரிப்பில் ஏதாவது தவறுதல் நிகழ்ந்ததா என்ற கேள்வியையும் எழுப்பியது. அவர் Du Pontல் பணி புரிந்த போது, ‘இயற்கையில் நீலநிற கனிமங்கள் மிகவும் அரிது’ என்று கேள்விபட்டது ஞாபகத்திற்கு வந்தது. பல்வேறு ஆய்விற்குப் பிறகு, Y(In,Mn)O3 (அ) யின்மின் என்ற இவ்வேதிப்பொருள், சூடேற்றத்திற்கு நிலைத்த ஒரு நச்சற்ற நிறம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதையும் கண்டு பிடித்தனர். மேலும் இது வெப்பத்தை பிரதிபலிக்கக் கூடிய தன்மை கொண்டதால் ஆற்றல் திறமையான பூச்சுகளுக்கும் உபயோகப் படுத்த முடியும் என்பதும் தெளிவானது.

https://www.instagram.com/anartistic.journey/
இந்த பிரகாசமான மற்றும் நிலையான நிறமி கலைஞர்களின் மற்றும் திடப்பொருள் விஞ்ஞானிகளின் மனதை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், புதிய நிற வடிவமைப்பு கொள்கைகளுக்கான புதிய பாதையையும் திறந்துள்ளது.
எம்எஸ் ப்ளூ என்பது புகழ்பெற்ற பாடகி எம்எஸ் சுப்புலட்சுமியின் பெயரிடப்பட்ட நீல நிறத்தின் தனித்துவமான நிழல். இப்போது, YInMn நீலம் (யின்-மின் என உச்சரிக்கப்படுகிறது) அல்லது “மாஸ் ப்ளூ”, கலை உலகையே பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட உயிர் இயற்பியலாளர் அனு நாகராஜன் வரைந்த மாஸ்/யின்மன் ப்ளூவில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உருவப்படம்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
