முஷ்ட்டி மாலிஷ்

மூலம் : இஸ்மத் சுக்தாய்

தமிழாக்கம் : அனுராதா க்ருஷ்ணசாமி

Lot no. 16: Neha by Schandra Singh

வாக்குப்பதிவுச் சாவடியில் நீண்ட வரிசை.  ஏதோ படத்தின் முதல் காட்சியை இலவசமாக காண்பிப்பது போல. ஐந்து வருடங்கள் முன்பும் கூட நாங்கள் இதே போல நீண்ட  நெடிய வரிசையில் தான் காத்திருந்தோம். வாக்களிக்க அல்ல, மலிவு விலையில் அரிசி வாங்கிப்போக வந்தவர்கள் போல. வரிசையில் நின்றிருந்தவர்களின் முகங்களில் நம்பிக்கையின் நிழல் படிந்திருந்தது. வரிசை எவ்வளவு நீளமாக இருந்தால் என்ன, எங்கள் முறையும் கட்டாயம் வரும். அப்புறம் என்ன, புதையல் கிடைத்த மாதிரி தான். வேட்பாளர் நம்பிக்கையான ஆள் தான். நமக்குத் தெரிந்த நபருக்கு ஆட்சி செய்ய உரிமை கிடைத்தால் நம்முடைய கஷ்ட நஷ்டங்களும் ஏழ்மையும் விலகி விடாதா என்ன?

“ஓ அம்மா! நல்லாருக்கியா? ” நைந்து போன மேலாடை உடுத்திய பெண்மணி ஒருத்தி தன்னுடைய அழுக்கான மஞ்சள் பற்கள் தெரிய என் கையை அழுத்தி பிடித்தாள்.

“ஓ! நீங்களா கங்கா பாய்?”

“இல்லை. நான் ரத்தி பாய். கங்காபாய் வேறொருத்தி. பாவம் அவள் இறந்துவிட்டாள்”

“ஐயோ பாவமே!” என் மனம் ஐந்து வருடங்கள் பின் நோக்கிப் போனது. “முஷ்டியா இல்லை மாலிஷா?” நான் கேட்டேன். 

“மாலிஷ் தான்” ரத்தி பாய் கண் சிமிட்டியபடி பதிலளித்தாள். “நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் வேண்டாம் என்று. ஆனால் அவள் கேட்டால் தானே. பைத்தியக்காரி.அது சரி,  நீ யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?

“நீ யாருக்கு வாக்களிக்க போகிறாய்?”

 நாங்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம். 

“எங்கள் ஜாதிக் காரனுக்கு தான்.  நாங்கள் வசிக்கும் பகுதியில் தான் அவனும் வசிக்கிறான்.”

“ஐந்து வருடங்கள் முன்பு கூட நீ உன் ஜாதி காரனுக்கு தான் வாக்களித்தாய் இல்லையா?”

“ஆமாம். ஆனால் அவன் ஒரு உதவாக்கரை. எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை” ரத்தி பாய் முகத்தை சுளித்துக் கொண்டாள். 

“இந்த ஆள், இவனும் உங்க ஜாதிக்காரன் தானே?”

“ஆமாம். ஆனால் இவன்  தரமான ஆள். எங்களுக்கெல்லாம் நிலம் தருவதாக சொல்லி இருக்கிறான்”

“பிறகு என்ன, நீ கிராமத்துக்கு போய் விவசாயம் பார்த்து நெல் அறுவடை செய்ய ஆரம்பித்து விடுவாய். அப்படித்தானே?”

“ஆமாம்” அவளுடைய கண்கள் நம்பிக்கையில் ஒளிர்ந்தன.

ஐந்து வருடங்கள் முன்பு நான் ஆஸ்பத்திரியில் முன்னியை பிரசவித்திருந்தபோது இதே ரத்தி பாய் தன்னுடைய ஜாதிக்காரனுக்கு வாக்ளிக்கப் வாக்குச்சாவடிக்கு போய்க்கொண்டிருப்பதாய் என்னிடம் சொன்னாள். ” சௌபாட்டியில் சேர்ந்திருந்த ஆயிரம் பேருக்கு மேலான கூட்டத்தில் அவன் பதவிக்கு வந்ததுமே எங்கள் வாழ்க்கையை  எல்லாம் மாற்றி விடுவதாக சத்தியம் செய்தான். தேனும் பாலும் ஆறாக ஓடும் என்றெல்லாம் சொன்னான். இன்று ஐந்து வருடங்கள் கழிந்து ரத்திபாயின் ஆடை மேலும் நைந்து அழுக்கேறி இருந்தது. தலைமுடி முன்பை விட அதிகம் நரைத்திருந்தது. கண்களின் ஒளி பாதியாய் குறைந்திருந்தது. அன்று  சௌப்பாட்டியில் செய்த சத்தியத்தை தோளில் சுமந்தபடி  அவள் மறுபடியும் வாக்களிக்க வந்திருந்தாள்.

“நீ ஏன் அந்த கூறு கெட்டவளிடம் இவ்வளவு பேசுகிறாய்?” ரத்தி பாய் பெட் பானை அடியில் நகர்த்தியபடி தன்னுடைய அறிவுரை பெட்டகத்தைத்த் திறந்து எனக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்க ஆரம்பித்தாள்.

“ஏன் அதில் என்ன தவறு?” நான் ஒன்றும் தெரியாதவள் போல கேட்டேன். 

” அவள்  பெரும் சாகசக்காரி,  வம்பி என்று உனக்கு ஏற்கனவே சொல்லி இருந்தேனே? மகா கில்லாடி அவள்”

ரத்திபாய் டூட்டியில் வருவதற்கு முன்பு கங்கா பாயும் ரத்தி பாயைக் குறித்து ஏறத்தாழ இதே கருத்தைத்தான்  என்னுடன் பகிர்ந்திருந்தாள் –  “ரத்தி பாய் கேடுகெட்டவள்”. இருவரும் ஆஸ்பத்திரியில் ஆயாக்கள். எந்நேரமும் குடுமிப்பிடி சண்டைதான். அவர்களுடைய சண்டைகள் சில சமயம் கை கலப்பில் கூட முடிந்ததுண்டு.  அவர்களிடம் பேசுவதில எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். 

“அந்த ராஸ்கல் சங்கர் இருக்கிறானே, அவன் ஒன்றும் அவளுடைய சகோதரன் இல்லை. நண்பன்.” கங்கா பாய் என்னிடம் சொன்னாள். “அவன் அவளுடைய காதலன். அவன் கூடத்தான் அவள் படுக்கிறாள்”

ரத்தி பாயின் கணவன் சோலாப்பூர் அருகே கிராமத்தில் வசிக்கிறான். கொஞ்சம் போல நிலம் இருக்கிறது அதைக் கட்டி மாரடித்துக் கொண்டிருக்கிறான். கிடைக்கிற வருமானம் முழுவதும் கடனடைக்கவும் வட்டி கட்டவுமே செலவாகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கடன் பாக்கியிருக்கிறது. சீக்கிரமே அதுவும் அடைந்துவிடும்‌. பிறகு அவள் கிராமத்துக்கு போய் கணவனுடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வசிப்பாள். அறுவடை செய்த நெல்லை குத்தி அரிசியையும் உமியையும் பிரித்து வைப்பாள். கிராமத்துக்கு திரும்பி நெல் குத்துகிற கனவை இரு பெண்களுமே மிகவும் சந்தோஷமாக கண்டார்கள். ஏதோ பாரீஸ்க்கு போகிற கனவைப் போல. 

” ரத்திபாய் நீ ஏன் மும்பைக்கு பணம் சம்பாதிக்க வந்தாய்?

உனக்கு பதிலாக உன் கணவன் வந்திருந்தால் அதில் ஒரு அர்த்தமேனும் இருந்திருக்கும்”

“அவனால் எப்படி வர முடியும்? அவன் வயலில் வேலை செய்கிறான். என்னால் வயல் வேலையெல்லாம் தனியாகப் பார்க்க முடியாது.”

“குழந்தைகளை யார் கவனித்துக் கொள்கிறார்கள்?”

“இருக்கிறாள் ஒரு பாதகத்தி” தெரிந்த எல்லா வசைகளையும் கூறி ரத்தி பாய் அவளை ஏசினாள். 

“உன் கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு விட்டானா?”

“இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்கெல்லாம் அந்த முட்டாளுக்கு தைரியம் எது? இவள் வெறும் வைப்பாட்டி தான்”

“நீ அங்கு இல்லாத சமயத்தில் இவள் வீட்டுக்கு எஜமானி ஆகிவிட்டால் என்ன செய்வாய்?”

“அது எப்படி? நான் அவளை அடித்து உதைத்து அவள் வாயில் வைக்கோலை திணித்து விட மாட்டேனா? கடனை அடைத்து முடித்தவுடன் நான் திரும்பி போய் விடுவேன்”

ரத்தி பாய் தனக்குத் தெரிந்த ஆதரவற்ற பெண் ஒருத்தியைத் தான் கணவனையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்துவிட்டு வந்திருப்பதாக தெரியவந்தது. நிலத்தின் பெயரில் வாங்கிய கடன் தீர்ந்ததுமே அவள் குடும்பப்பெண்ணாக கிராமத்துக்கு திரும்பிச் சென்று விடுவாள்.

” வைப்பாட்டியின் கதை என்ன ஆகும்?”

 ஓ! அவளுக்கென்ன! மும்பைக்கு பணம் சம்பாதிக்க சென்றிருக்கும் வேறொரு பெண்ணின் கணவனையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள அவள் நகர்ந்து விடுவாள். 

“அவளுக்கு கணவன் இல்லையா?” நான் கேட்டேன். 

“இருக்கிறானே”

“அப்படியானால் அவள் அவன் கூட ஏன் வாழ்வதில்லை?”

அவன் தன்னிடமிருந்த ஒரு துண்டு நிலத்தையும் விற்று சாப்பிட்டு விட்டான். வயற்காட்டில் தான் வேலை  செய்கிறான். வருஷத்தில் எட்டு மாதம்  ஏதாவது சில்லரை திருட்டு வேலைகளில் ஈடுபட்டிருப்பான். இல்லாவிட்டால் பெருநகரங்களுக்கு சென்று விடுவான். அங்கு பிச்சை எடுத்தாவது தன் வயிற்றைக் கழுவி கொண்டு விடுவான்”

“அவளுக்கு குழந்தைகள் இருக்கிறதா?”

“இல்லாமல் என்ன நான்கு குழந்தைகள். அல்லது நான்கு குழந்தைகள் இருந்தன. ஒரு பையன் இங்கு மும்பையில் காணாமல் போய்விட்டான். அவனுக்கு என்ன ஆயிற்று என்று யாரும் கண்டுபிடிக்க முயற்சி கூட செய்யவில்லை. இரண்டு பெண்கள் ஓடிப்போய்விட்டார்கள். கடைசி குழந்தை மட்டும் தான் அவள் கூட இருக்கிறான்.”

“நீ கிராமத்துக்கு எவ்வளவு பணம் அனுப்புகிறாய்?”

“நாற்பது ரூபாயையும் முழுவதாக அனுப்பி விடுகிறேன்”

“உன் வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்கிறாய்?”

“என் சகோதரன் என்னை பார்த்துக் கொள்கிறான். அவன் அவளுடைய காதலன் என்று கங்கா பாய் சொன்ன அதே சகோதரன்.

“உன்னுடைய சகோதரனுக்கு குடும்பம் எதுவும் கிடையாதா?”

“இல்லாமல் என்ன? இருக்கிறதே”

“அவர்கள் கிராமத்தில் வசிக்கிறார்களா?”

“ஆமாம் புனாவுக்கு அருகே ஒரு கிராமம். அவனுடைய மூத்த சகோதரன் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறான்.”

“அதாவது உன்னுடைய மூத்த சகோதரன்” நான் கேலியாகச் சொன்னேன்.

“போதும் போதும் நிறுத்து. அவன் எப்படி எனக்கு சகோதரனாவான்? நீ என்னை அப்படிப்பட்ட பெண் என்று நினைத்து விட்டாயா? நான் கங்கா பாயைப் போன்றவள் இல்லை. தெரியுமா அவள் சேர்ந்தாற் போல நான்கு நாட்கள் கூட அடி வாங்காமல் இருந்ததில்லை. உன்னிடம் ஏதாவது பழந்துளி இருந்தால் அதை அந்த பொல்லாதவளுக்கு கொடுக்காதே. எனக்கு கொடுத்து விடு சரியா?”

“ரத்தி பாய்”

“சொல்”

” உன்னுடைய சகோதரன் உன்னை அடிப்பானா?”

“ஏன் கேட்கிறாய்அந்த கடங்காரி கங்கா பாய் தான் உனக்கு சொல்லி இருக்க வேண்டும். இல்லை அதிகம் அடிக்க மாட்டான். எப்போதாவது ஒரு சமயம் அதிகம் குடித்திருந்தால் மட்டும் தான். அதேநேரம் ஆசையாகவும் இருப்பான்”

“அவன் ஆசையாகவும் இருப்பானா?”

“ஏன் இருக்க கூடாது?”

“ரத்தி பாய், ஆனால் நீ ஏன் அந்த ராஸ்கலை சகோதரன் என்று அழைக்கிறாய்?”

அவள் சிரிக்க ஆரம்பித்தாள். 

“எங்களுக்கு அப்படி பேசித்தான் பழக்கம்”

“ரத்தி பாய் நீ தான் நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறாயே பிறகு எதற்காக “தொழில்” செய்கிறாய்?”

“வேறு எப்படி சமாளிப்பது? நான் இருக்கும் எலி வளைக்கு வாடகை ஐந்து ரூபாய்.  லாலாவுக்கு மூன்று ரூபாய் கொடுக்க வேண்டும்”

“லாலாவுக்கு எதற்கு மூன்று ரூபாய்?”

“அங்கு வாடகைக்கு தங்கும் எல்லா பெண்களும் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவன் எங்களை எலிவளையை விட்டு துரத்தி விடுவான்.”

” நீ ‘தொழில்’ செய்கிறாய் என்பதனாலா?”

“ஆமாம்” அவள் கூச்சப்படுவது போல தெரிந்தது. 

” உன் ‘சகோதரன்’? அவன் என்ன செய்கிறான்?”

“அதை நான் என் வாயால் சொல்லக்கூடாது. மது விற்பது குற்றம் தான். சிக்கலான தொழிலும் கூட. போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் துரத்தி விடுவார்கள்.”

“அதாவது பம்பாயை விட்டு வெளியே துரத்தி விடுவார்களா?”

“ஆமாம்.”

இதற்கிடையில் நர்ஸ் வந்து ரத்திபாயை அதட்டினார். ” பத்தாம் நம்பர் படுக்கையில் பெட் பான் வைக்க வேண்டும். நீ என்ன இங்கு அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறாய்?” ரத்தி பாய் தன் காவி படிந்த பற்கள் தெரிய சிரித்தபடி ஓடினாள்.

” நீங்கள் ஏன் இந்த தரங்கெட்ட பெண்களுடன் நாள் முழுக்க பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓய்வு தேவை. இல்லாவிட்டால் ரத்தப்போக்கு மறுபடியும் ஆரம்பித்து விடும்” நர்ஸ் குழந்தையை தொட்டிலிருந்து எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

மாலையில் கங்கா பாய் ட்யூட்டிக்கு வந்தாள். மணியை அடிக்காமல் நேராக அறைக்குள் நுழைந்தாள்.

” நான் பெட் பான் வைக்க வந்தேன்”

“அது கிடக்கட்டும். கொஞ்ச நேரம் உட்கார”

“சிஸ்டருக்கு தெரிந்தால் சத்தம் போடுவாள். அது சரி, அவள் என்ன சொல்லிக் கொண்டிருந்தாள்?”

“யாரு சிஸ்டரா? நன்றாக ஓய்வெடுக்க சொன்னாள்”

“இல்லை இல்லை அந்த கேடுகெட்டவள் என்ன சொன்னாள்?”

“போப்பட் லால் கங்கா பாயை கருரத்தம்  கட்டும் அளவுக்குஅடித்து நொறுக்குவதாக சொன்னாள்” நான் கிண்டலாக சிரித்தேன்.

“அந்த தாசி மகனால் அப்படியெல்லாம் எதுவும் செய்து விட முடியாது. அதைவிடு” கங்கா பாய் என் கால்களை பிடித்து விட்டவறே, “உன்னுடைய பழைய செருப்பை எனக்குத் தருவதாகச் சொல்லி இருக்கிறாய், ஞாபகம் இருக்கட்டும்” என்றாள்.

“சரி எடுத்துக்கொள். உன் கணவனிடமிருந்து உனக்கு கடிதம் வந்ததா?”

” ஓ! வந்ததே!” கங்கா பாய் பாய்ந்து என் பழைய செருப்புகளை எடுத்துக் கொண்டாள்.

“அந்த சிஸ்டர் தேவிடியா இதைப் பார்த்தால் கட்டாயம் ரகளை செய்வாள். அவள் ரொம்பவும் தான் அதிகாரம் செய்கிறாள்” என்றாள்.

“கங்காபாய்”

“என்ன?”

“நீ தன் கிராமத்துக்கு எப்போது திரும்ப போவாய்?”

கங்கா பாயின் ஒளி வீசும் கரு நிற கண்கள்  சில கணங்கள் தூரத்து கிராமத்தின் பச்சை வயல்களைத் தடவி விட்டு திரும்பின. கங்கபாய் பெருமூச்சு விட்டுக்கொண்டு மெல்லிய குரலில், “இந்த வருடம் ராமர் கிருபையால் விளைச்சல் நன்றாக இருக்கட்டும். அதற்குப் பிறகு நான் கிராமத்திற்கு திரும்பி போய் விடுவேன். போன வருடம் வந்த வெள்ளத்தில் எங்கள் வயல்கள் எல்லாம் பாழாகி விட்டன” என்றாள்.

“கங்காபாய் உன் கணவனுக்கு உன்னுடைய நண்பர்களை பற்றி தெரியுமா?” நான் மெதுவாக நோண்டினேன்.

“நீ என்ன சொல்கிறாய்?” அவள் திடீரென அமைதியானாள். அவமானமாக உணர்ந்தது போல இருந்தது. உடனடியாக பேச்சை மாற்றுவதற்காக, “உனக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து விட்டனவே. சேட் உன் மீது மிகவும் கோபமாக இருக்கக்கூடும் இல்லையா?”

“சேட்டா? அது யார்?”

“உன் கணவர் தான். அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நீ என்ன செய்வாய்?”

“அவர் அப்படி செய்தால் நானும் எனக்கு வேறு ஒரு கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்வேன்”

“நீங்கள் கூட அப்படி எல்லாம் செய்வீர்களா? நீங்கள் உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்று  நினைத்தேனே. அவள் உயர் ஜாதிக்காரர்களை கேலி செய்கிறார் என்று நினைப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன் ஆனால் அவள் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததற்காக கட்டாயம் என்னை அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்று நிச்சயமாக நம்பினாள். என்னுடைய சேட் என்னை அடித்து துரத்தாவிட்டால் கண்டிப்பாக அவர் மூனாந்தர ஆளாகத் தான் இருக்க வேண்டும் என்றும் நம்பினாள்.

ஆஸ்பத்திரியில் படுத்து கிடப்பது என்பது தனிமைச் சிறைக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. நண்பர்களும் உறவினர்களும் மாலை இரண்டு மணி நேரம் என்னைப் பார்க்க வருவார்கள். மீதி நேரத்தை நான் கங்கா பாயுடனும் ரத்திபாயுடனும் வம்பு பேசுவதிலும் அரட்டை அடிப்பதிலும் செலவிட்டேன். அவர்கள் மட்டும் இல்லாதிருந்தால் நான் சலிப்பின் காரணமாக மனமொடிந்து போயிருப்பேன். கொஞ்சம் லஞ்சம் கொடுத்தால் போதும் அவர்கள் இருவரும் அடுத்தவரைப் பற்றிய வம்பு தும்புகளை, அவை உண்மையோ பொய்யோ, மனதார பகிர்ந்து கொள்வார்கள். ” நீ மில்லில் வேலை பார்த்து வந்தாயே,  அதை ஏன் விட்டுவிட்டாய்?” என்று ஒருநாள் நான் ரத்திபாயிடம் கேட்டேன். 

” ஓ அதைச் சொல்கிறாயா? மில் வேலை சரியான சிக்கல் பிடித்த வேலை”

“என்ன சிக்கல்?”

“மில் வேலை ரொம்பவும் கஷ்டமான வேலை. அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அயோக்கியர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே எங்களை வெளியே துரத்தி விடுவார்கள்”

“அது எப்படி? ஏன்?”

“வேறு பெண்களை வேலைக்கு எடுப்பார்கள்”

“அப்படி எதற்காக செய்வார்கள்?”

“ஏனென்றால் ஒரு நபர் ஆறு மாதங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ஃபேக்டரி சட்டம் அமலுக்கு வந்துவிடும்”

“ஓ! இப்போது புரிகிறது!”

“அதாவது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வேலை செய்பவர்கள் எல்லோரையும் மாறிவிடுவார்கள். யாரேனும் தப்பித் தவறி ஆறு மாதங்களுக்கு மேல் பணியில் தொடர்ந்து விட்டால் அவர்களுக்கு நோய்க்கால விடுமுறை, பேறுகால விடுமுறை, ஃபேக்டரி சட்டத்துக்கு ஏற்ப வேலை போன்றவை கட்டாயம் அமலுக்கு  வந்து விடும். அதனால் தான் அவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வேலைக்காரர்களை வேலையிலிருந்து எடுத்து விடுகிறார்கள். அதனால் ஒரு தொழிலாளிக்கு அதிகபட்சமாக ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமே வேலை கிடைக்கும். நடுவில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் கிராமத்துக்கு திரும்பி விடுவார்கள். யாருக்கு கிராமத்துக்கு திரும்ப வசதி இல்லையோ அவர்கள் வேறு தொழிற்சாலைகளில் வேலை தேடி அலைவார்கள். சிலர் பிளாட்பாரத்தில் அழுகிப்போன காய்கறிகளை கூறு போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள்.  தமக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வலுக்கும். அவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்வதால் தெரு மூலையில் நிற்கும் போலீஸ்காரனுக்கும் மாமூல் கொடுக்க வேண்டி வரும். அதிலும் சில சமயம் முன்பின் தெரியாத போலீஸ்காரர் வந்துவிட்டால் அவ்வளவுதான். பரப்பி வைத்திருக்கிற முழு கடையையும் கக்கத்தில் சொருகிக் கொண்டு அருகில் இருக்கும் சந்து பொந்துகளில் ஓடி ஒளிந்து கொள்வார்கள். சிலர் பிடிபட்டு விடுவார்கள். அவர்கள் அழுது ஒப்பாரி வைப்பார்கள். போலீஸ் அவர்களை ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லும். நிலைமை சற்று சீரானதுமே அவர்கள் மறுபடியும் நடைபாதைகளை ஈக்களைப் போல் மொயத்துத்துக் கொள்வார்கள். கிழிந்து போன கோணியை விரித்து காய்கறிகளை பரத்தி மறுபடியும் விற்க ஆரம்பிப்பார்கள். ஒரு சிலர் மிகவும் புத்திசாலிகள். தோள் பையில் ஒன்றிரண்டு எலுமிச்சம் பழங்களையோ அல்லது மக்காச்சோள கதிர்களையோ திருட்டுத்தனமாக எடுத்து போட்டுக் கொள்வார்கள். காய்கறி வாங்க வந்தவர்கள் போல கடைத்தெருவில் அங்கும் இங்கும் நடப்பார்கள். யாராவது அவர்களைத் தாண்டிப் போகும் போது சன்னமான குரலில், ‘அண்ணே மக்காச்சோளம் வாங்கிக் கொள்ளுங்கள ஓர்ணாவுக்கு ஒன்று’ என்று தான் திருடியவற்றை விற்க முற்படுவார்கள். அவர்களிடம் காய்கறிகளை வாங்குவது என்பது காலராவை விருந்து வைத்து அழைப்பதற்கு  ஒப்பானது.

அதிகபட்சம் சபிக்கப்பட்டவர்கள் பிச்சை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். வாய்ப்பு கிடைத்தால் இவர்கள் ‘தொழில்’ செய்ய தயங்குவதும் இல்லை. மலிவான  ஆடையை ‘நேர்த்தியாக’ அணிந்து கொண்டு (அவர்கள் எண்ணத்தில்) வாயில் வெற்றிலை பாக்கைத் திணித்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகேயிருக்கும் மங்கலான வெளிச்சம் உள்ள இடங்களில் அவர்கள் மேலும் கீழும் நடை பழகுவார்கள். வாடிக்கையாளர் வந்ததும் கண்களாலேயே பேசி பேரம் படிந்து விடும். இவர்களது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பால்காரர்கள் அல்லது வீடு வாசல் அற்ற ஏழைத் தொழிலாளர்கள். இவர்களுடைய மனைவிகள் கிராமத்தில் இருப்பார்கள். அல்லது எப்போதுமே திருமணமாகாத, குப்பை மண்டிய தெருக்களையும் நடைபாதைகளையுமே வீடாகக் கொண்ட ஏழைகள்.

ஒரு நாள் காலை ரத்தி பாய்க்கும் கங்கா பாய்க்கும் இடையில் வராண்டாவில் ஃப்ரீ ஸ்டைல் குஸ்தி சண்டை மூண்டது. ரத்தி பாய் கங்கா பாயின் கொண்டையை அவிழ்த்து முடியை பிடித்து உலுக்கினாள். பதிலுக்கு கங்கா பாய் ரத்திபாயின் தாலியை பிடித்து இழுத்து அறுத்து விட்டாள். தாலியில் கருப்பு மணிகள் கோர்க்கப்பட்டிருந்தன. ரத்தி பாய் சுமங்கலி என்பதற்கான அடையாளம் அது. ரத்தி பாய்  தன் கணவனே இறந்துவிட்டது போல பெருங்குரலெடுத்து ஓலமிட்டு அழுதாள். சண்டைக்கு முக்கிய காரணம் நோயாளிகளின் காயங்களை துடைக்க அல்லது  கர்ப்பிணி பெண்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பஞ்சு. நகரின் சட்ட திட்டங்களின் படி இந்த பஞ்சு மிகவும் கவனமாக எரிக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டு பாய்களும் கரை படிந்த பஞ்சை வெளியே எடுத்து அதை துவைத்து சுத்தம் செய்து சுருட்டி  திருட்டுத்தனமாக வீட்டுக்கு கொண்டு சென்றனர் என்பது தெரிய வந்தது. கொஞ்ச நாட்களாகவே அவர்களுக்கிடையான உறவு சீர்குலைந்து போயிருந்ததால் கங்கா பாய் இந்த விஷயத்தை சூப்பர்வைசரின் காதில் போட்டுவிட்டாள். ரத்தி பாய் கங்கா பாயை வாய்க்கு வந்தபடி ஏசத் தொடங்கினாள். அது கைகலப்பில் முடிந்தது. நியாயப்படி அவர்கள் இருவரையுமே வேலையை விட்டு எடுத்திருக்க வேண்டும்.  ஆனால் அவர்கள் கை கால்களை பிடித்து அழுததில் சூப்பர்வைசர் இந்த விஷயம் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார். 

ரத்தி பாய் வயதானவள். கனத்த சரீரம் கொண்டவள். கங்காபாய் அவளை நன்றாக  நையப்புடைத்து விட்டாள். வீங்கிப்போன மூக்குடன் அவள் மதியம் பெட் பேன் வைக்க வந்த போது நான் அவளிடம் ” அந்த அழுக்கு பஞ்சுத் துணியை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய்?” என்று கேட்டேன். 

“தோய்த்து காய வைத்தால் நன்றாக சுத்தமாகிவிடும்”

“அப்புறம்?”

“அப்புறம் அதை பஞ்சு வியாபாரிக்கு விற்று விடுவோம்.”

“அவனிடமிருந்து யார் இந்த கிருமிகள் நிறைந்த பஞ்சை வாங்குவார்கள்?”

“மெத்தை தைப்பவன் தான். பணக்காரர்களின் வீடுகளின் நாற்காலிகளுக்கு மெத்தை தைக்கிறவன் அதை வாங்கிக் கொள்வான்.”

“உவ்வே! என் உடல் முழுவதும் ஊசி குத்தியது போல இருந்தது. ஒருமுறை என் வீட்டுக் கட்டிலின் மெத்தையிலிருந்து பஞ்சை வெளியே எடுத்த போது அது கருத்துக்கிடந்தது எனக்கு ஞாபகம் வந்தது.  புண்களைத் துடைக்க உபயோகப்படுத்தப்பட்ட பஞ்சா அதில் நிரப்பப்பட்டிருந்தது? என் மகளின் மெத்தை கூட இம்மாதிரியான பஞ்சாலானது தானா? பூப்போன்ற என் பிஞ்சு மகள்! பாவம்! இந்தக் கிருமி நிரம்பிய பஞ்சின் மீதா படுத்தாள்?  ரத்தி பாய் கங்காபாய் உங்கள் இருவரையும் கடவுள் வாரிக் கொண்டு போகட்டும்!

இன்று முஷ்டி உயர்த்தி செருப்பால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வரை சண்டை வந்துவிட்டதால் ரத்தி பாய் உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தாள். கங்காபாய் அவளை விட வயதில் சிறியவளாதளால் அவள் தான் அதிக பாவம் செய்தவள் என்கிற முடிவுக்கு வந்திருந்தாள். எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல சில நாட்களுக்கு முன்பு தான் அவள் ரத்தி பாயின் நெடுநாள் வாடிக்கையாளர் ஒருவரை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தாள். கங்கா பாய் இதுவரை செய்து கொண்ட கருச்சிதைவுகளும், தொப்புள் கொடியை வாயில் திணித்து உயிரோடு மூச்சுவிட்டுக் கொண்டிருந்த குழந்தையை சாக்கடையில் வீசி எறிந்ததும் அவளுக்கு நினைவுக்கு வந்தன. 

எல்லோரும் சாக்கடையை சூழ்ந்து கொண்டார்கள். ரத்தி பாய் நினைத்திருந்தால் அவள் கங்கா பாயை  கையும் களவுமாக பிடித்துக் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த ரகசியத்தை அவள் தன் நெஞ்சுக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தாள். இத்தனைக்குப் பிறகும் கங்கா பாய்  ஒன்றுமே நிகழாதது போல பிளாட்பாரத்தில் உட்கார்ந்து  புளிப்பும் இனிப்பும் கலந்திருந்த இலந்தை பழங்களையும் கொய்யாப்பழங்களையும் இஞ்சி யையும்விற்றுக்கொண்டிருந்தாள். என்ன தைரியம்!

“நட்பு ஒரு பக்கம் இருக்கட்டும் ரத்தி பாய்! ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தால் என்ன செய்வது? நீங்கள் ஆஸ்பத்திரிக்கு போய் இருக்கலாமே”

“எதற்காக ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும். எங்களுக்குள் மிக அருமையான பாய்கள் இருக்கிறார்கள். டாக்டருக்கு சமமானவர்கள். ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாய்கள்!

“கருவை கலைப்பதற்கு அவர்கள் மருந்து கொடுப்பார்களா?”

“பின்னே? ஃபர்ஸ்ட் கிளாஸ் மருந்து கொடுப்பார்கள். முஷ்ட்டியும்

 உண்டு. மாலிஷும் மிக நன்றாக நடக்கும்.

“அது என்ன  முஷ்டியும் மாலிஷும் ? இது என்ன வினோதம்?”

“விட்டுவிடு. இதெல்லாம் உனக்கு புரியாது” ரத்திபாய் வெட்கத்துடன் சிரித்தாள். கொஞ்ச நாட்களாகவே அவள் என்னுடைய பவுடர் டப்பாவின் மீது ஒரு கண் வைத்திருந்தாள். எனக்கு பவுடர் போடும்போதெல்லாம் அவளும் ஒரு சிட்டிகை தன் உள்ளங்கையில் தடவி கன்னத்தில் பூசிக் கொண்டாள். இந்த பவுடர டப்பா ஒன்றை வைத்துக் கொண்டே அவளிடமிருந்து விஷயத்தை கறக்க முடியும் என்று நான் நினைத்தேன். நான் அதை அவளுக்கு கொடுக்க முயன்ற போது அவள் பயந்து போனாள். 

“வேண்டாம். சிஸ்டர் என்னை சாகடித்து விடுவாள்”

“மாட்டாள். எனக்கு இந்த பவுடரின் வாசனை பிடிக்கவில்லை என்று நான் அவளிடம் சொல்லி விடுகிறேன்‌”

“ஏன் இந்ந வாசனைக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறது? உனக்கு பைத்தியம் தான் பிடித்திருக்கிறது!”

வெகு நேர முயற்சி க்குப் பிறகு ரத்தி பாய் எனக்கு முஷ்டி மற்றும் மாலிஷ் என்றால் என்ன என்பதன் ரகசியங்களை தெளிவு படுத்தினாள். 

கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் மாளிஷ் மிகவும் பிரமாதமாக ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆக வேலை செய்யும். தேர்ந்தெடுத்த திறமைசாலி டாக்டரைப் போல. கர்ப்பமான பெண்ணை தரையில் பாய் மல்லாக்க படுக்க வைத்து, கூரையிலிருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டோ அல்லது ஒரு கொம்பின் ஆதாரத்துடன் அப் பெண்ணின் வயிற்றின் மீது ஏறி நின்று அழுத்தி, “வேலை” முடியும்வரை தொடர்ந்து மிதிப்பது வழக்கம்.  அல்லது அப்பெண்ணை சுவரோடு ஒட்டி நிற்க வைத்து,  பாய் தன் தலையில் நிறைய கடுகு எண்ணெய் தடவி கொண்டையிட்டு இறுக முடிந்து கொண்டு, கர்ப்பமான பெண்ணின் வயிற்றிலும் கால்களுக்கிடையிலும் காளை மாட்டை போல தன் தலையால் தொடர்ந்து முட்டுவாள். இளம் வயதுக்கார உழைப்பாளி பெண்களுக்கு இந்த ‘ வைத்தியம்’ பெரிதாக பலன் அளிக்காது அப்போதுதான் “முஷ்டி” பயன்படுத்தப்படும். அழுக்கு படிந்த நகங்கள் கொண்ட கைகளை எண்ணெயில் முக்கி நனைத்து, கருப்பையில் துடித்துக் கொண்டிருக்கும் சிசுவை  முஷ்ட்டியால் குத்தி துண்டு துண்டாக சிதைத்து வெளியேற்றுவார்கள். 

பெரும்பாலான நேரங்களில் இந்த “ஆபரேஷன்” முதல் முறையிலேயே வெற்றி அடைந்து விடும்.  பாய் வேலைக்கு புதிது என்றால் சில சமயம் ஒரு கை மட்டும் உடைந்து வெளியேறும். சில சமயம் கழுத்து உடைந்து வெளியே விழும். சில சமயம் பெண்ணின் உடலுக்குள்ளேயே இருக்க வேண்டிய பாகம் பிய்ந்து வெளியே வந்துவிடும். 

“மாலிஷ்” செய்து கொள்வதால் பெருமளவில் மரணங்கள் சம்பவிப்பதில்லை. ஆனால் அதற்குப் பின் அந்தப் பெண்ணுக்கு ஆரோக்கிய கேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உடலின் வெவ்வேறு பகுதிகள் உப்பி வீங்கிக்கொள்ளும். ஆறாத நிரந்தரமான ரணங்கள் உண்டாகும். தொடர்ந்துகாய்ச்சல் அடிக்கும். அந்தப் பெண்ணுக்கு கடவுளின் தீர்வு சாவுதான் என்றால் அவள் இறந்துவிடுவாள்.

மற்ற எல்லா விதமான “வைத்தியங்களும்” பலிக்காத போது தான் ‘முஷ்டி’ பயன்படுத்தப்படும். உயிரைப் பணயம் வைத்து பாய்கள் தைரியமாக இந்த முயற்சியில் இறங்குகிறார்கள் எல்லாவற்றையும் கடந்து தப்பி பிழைத்தவர்களால் நடமாட முடியாமல் போகும். சில வருஷங்கள் இழுத்துக் கொண்டு இருந்துவிட்டு இறந்து விடுவார்கள்.

“கெட்ட காரியங்களில் ஈடுபடும் இம்மாதிரியான மூளை கெட்ட பெண்களுக்கு இது தான் சரியான தண்டனை. இல்லாவிட்டால் கடவுள் அவர்களை பிழைக்க வைத்துவிட மாட்டாரா என்ன?” என்றாள் ரத்தி பாய். நான் அடக்கிக்கொள்ள முடியாமல் வேகமாக வாந்தி எடுத்தேன். இதுவரையிலும் உற்சாகத்துடன் ருசித்து கதை சொல்லிக் கொண்டிருந்த ரத்தி பாய் பயந்து போய் அங்கிருந்து ஓடினாள். 

ஆளரவமற்ற அமைதியான ஆஸ்பத்திரியில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. “கடவுளே! ஒரு உயிரைப் பெற்று இந்த பூமிக்கு கொண்டு வருவதற்கு எத்தனை பெரிய தண்டனையா?” நான் மயக்கத்தில் ஆழ்ந்தபடியே யோசித்தேன். பயத்தில் என் தொண்டைக்குள் ஆயிரம் முட்கள் குத்த ஆரம்பித்தன. ரத்தி பாய் என்னிடம் கூறியவற்றையே நினைத்துக் கொண்டு அவற்றுக்கு வண்ணம் பூசி உயிர்ப்பிக்க முயற்சி செய்தேன். ஜன்னல் திரைச்சீலையின் நிழல் சுவற்றில் படிந்து நடுங்கிக்கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே நிழல் கங்கா பாயின் ரத்தம் தோய்ந்த உடலைப் போல காட்சியளிக்க ஆரம்பித்தது. கொடூரமான இரும்பாலான “முஷ்டி” என்னுடைய மூளைக்குள் இறங்கியது போல தோன்றியது. முதல் குத்திலேயே வெளிவந்த  ரத்தத்தில் மிதக்கும் சின்னஞ்சிறு விரல்கள், வெளியே தொங்கும் கழுத்து, மண்டை, என் இதயம் துடிக்க மறந்து

 மூளை மழுங்கிப் போனது போல இருந்தது. நான் உரக்க கத்த விரும்பினேன். யாரையேனும் அழைக்க விரும்பினேன். ஆனால் தொண்டை அடைத்திருந்தது. குரல் எழும்பவில்லை. நான் அழைப்பு மணியை அழுத்த விரும்பினேன். ஆனால் என்னால் கையை நகர்த்த முடியவில்லை. என் நெஞ்சுக்குள் மௌன கூச்சல்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்து கொண்டிருந்தன.

ஆஸ்பத்திரியின் கலைத்து விட முடியாத மௌனத்தில், கொலை செய்யப்பட்டவரின் மரண ஓலத்தைப் போல எனக்குள் ஓலங்கள் எழுந்தன. அவை என் அறையிலிருந்து தான் எழுந்து கொண்டிருந்தன. ஆனால் அவற்றை என்னால் கேட்க முடியவில்லை. என் வாயிலிருந்து தானாகவே வெளிவந்து கொப்பளித்துக் கொண்டிருந்த சொற்களைக் கூட என்னால் கேட்க முடியவில்லை. 

எனக்கு மார்பின் ஊசி போட்டவாறே  “ஏதோ பயங்கரமான கனா கண்டிருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது” என்றாள் சிஸ்டர்.  சுவற்றுச் சிலுவையில் ரத்தம் சொட்டும் கங்கா பாயின் உடல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவளுடைய கூக்குரல்கள் என் இதயத்தை அம்பு போல துளைத்துக் கொண்டிருக்கின்றன தயவு செய்து அந்தப் பக்கம் பார்த்து விடாதீர்கள் என்று நான் சிஸ்டரிடம் கூற விரும்பினேன். “எங்கோ தூரத்து சாக்கடையில் அழுகிக் கொண்டிருக்கும் குழந்தையின் முனகலும்அழுகைக் குரலும் என்னை நிலைகுலையச் செய்கிறது என்னுடைய மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பதுபோல வேதனை ஏற்படுகிறது. தயவுசெய்து வலியை மறக்க வைக்கும்  மார்பின் ஊசியைப் போடாதீர்கள்.

ரத்தி பாய்க்கு வாக்குச்சாவடிக்கு போக வேண்டும். புதிய மந்திரி அவளுடைய ஜாதிக்காரன். இப்போது அவளுடைய கடன் வட்டியோடு அடைக்கப்பட்டுவிடும். கங்கா பாயும் சந்தோஷமாக அவருடைய கிராமத்தில் நெல் அறுவடை செய்து புடைத்துக் கொண்டிருப்பாள். தயவு செய்து மயக்கத்தாலான இந்த போர்வையை என் மேலிருந்து அகற்றி விடுங்கள்.  என்னை விழித்திருக்க விடுங்கள். கங்கா பாயின் ரத்தத் துளிகள் என்னுடைய போர்வையின் மீது படிந்து பரவிக் கொண்டிருக்கின்றன. தயவுசெய்து என்னை விழிப்புடன் வைத்திருங்கள். 

மேஜைக்கு பின்னால் அமர்ந்திருந்த கிளார்க் என்னுடைய இடக்கையின் விரலில் நீல நிற மசியால் புள்ளி வைத்த போது நான் விழித்துக் கொண்டேன். 

“எங்கள் ஜாதிக்காரனுக்குத்தான் ஓட்டு போடணும் சரியா” என்று ரத்தி பாய் என்னிடம் அதட்ட்டலாகச் சொன்னாள்.

ரத்தி பாயின் ஜாதிக் காரனின் ஓட்டுப்பட்டி பெரிய  இரும்பு முஷ்டியை போல எழுந்து என் இதயத்தின் மீதும் தலை மீதும் இடியென இறங்கியது. நான் என்னுடைய ஓட்டு சீட்டை அந்தப் பெட்டிக்குள் போடவில்லை.

“Of Fists and Rubs” – A Short Story by Ismat Chughtai (Urdu: عصمتچغتائی) (August 1915 – 24 October 1991) – Translation of  “Mutthi Maalish,” from Urdu (Lahore: Naya Idara, 1967)

நவீன இந்திய ஹிந்தி இலக்கியம்

வான வேடிக்கை மார்ச், மா மற்றும் சகுரா: கீதாஞ்சலி ஸ்ரீ

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.