- பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 1
- ஹர்ஷ சரித்திரம்- 2
- ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்
- ஹர்ஷ சரித்திரம் – 4
- தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்
- தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
- ஹர்ஷ சரித்திரம்
- தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்
- இராஜகுமாரனின் மன விசாரங்கள்
- சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்
- ஹர்ஷனின் சபதம்
- அணிவகுத்த படைகள்
- துவங்கிய பயணமும் வந்த பரிசும்
- பூமியில் அரசர்களின் அனுராகம்
- சகோதரியை தேடி
- தொடரும் தேடல்
- கண்டான் சகோதரியை!
- ஹர்ஷனின் உறுதிமொழி
- 1. अवतरन्ति- கிணற்றின் உள்ளே இறங்கும் படிகள், மற்றொரு பொருள்- அவதாரம் செய்தவர்- அரச குலத்தில் பிறந்தவர், தன்னை உணர்ந்த அல்லது மன ஓட்டத்தை கட்டுக்குள் வைக்கத் தெரிந்த ஆளுமையுடையவர், இவர்களே நல்ல அரசர்கள். உதாரம்-தாராள மனப்பான்மை
- ஆழ் கிணறு போன்று கம்பீரமாக இருப்பவர், அவரது தோற்றத்தினாலேயே, குரோதம், பயம், மகிழ்ச்சி போன்றவைகள் விலகி ஓடி விடுமோ, இந்த உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பவர் என்ற பொருள்
- ஆகர்ஷணம் -காண்பவரை கவர்ந்திழுக்கும் சக்தி- அரசனுக்கு,
- கிணறு- இழுக்கும் -ஆகர்ஷண, ரஜ்ஜு- கயிறு
பார்திவா: அரசர்கள் – கடகா: கும்பங்கள்- கிணற்றில் நீர் நிறைக்கப் பயன் படுபவை, அரசன் -தேவையானதை தேவை அறிந்து கொடுப்பவர்கள்.
அத்தகைய அரசனிடம் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே உயரிய சித்திகளை தருகிறான் என்று கடவுள் வாழ்த்து.
- ராகினி- சிவந்த நிறம், மனைவியிடம் அன்பும், விஷயங்களில் ஈடுபாடும் உடையவன்,
- லக்ஷ்மீம்- அழகு, சம்பத்து செல்வம்,
பெயர் குறிப்பிடாமல் அரசனுக்கு என்று பொதுவாகச் சொல்கிறார். – திவாகரன்-பகலவன்-ஸூரியன் போல இவைகளை குறைவின்றி அருளுகிறான். பரோபகாரிகள் தங்கள் அருளை வழங்கும் பொழுது குண தோஷங்களைக் கண்டு கொள்வதில்லை. ஸ்ரீ க்ருஷ்ணன் இந்த பாணன் என்ற கவிக்கு, அரசனுக்குரிய செல்வங்களை அருளுகிறான்.
முன்னுரை
(தாயாக இருந்து தந்தையே அனைத்தும் என்று இருந்தவன், அவரும் மறைந்த பின், தனித்து விடப் பட்டவன், சுதந்திரமாக வெளியேறி, தானாக உலகியலைத் தெரிந்து கொண்டு விட்டவன் , அதில் மனம் லயிக்காமல் திரும்ப வந்தவன், தன் பாட்டனாரின் வழி காட்டலில் அமைதியான வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டான் இந்த கவி பாணன் என்ற விவரங்களைச் சொல்கிறார். அந்த நாட்களின் தினசரியை – அந்தணர் குடும்பங்களின் வாழ் முறை – இவற்றை விவரிக்கிறார். சொற்களால் நடனம் ஆடுவது போன்ற வர்ணனைகள். வாசிப்பு அனுபவம் என்பதும் ஒரு கலா ரசனையே. பதங்களைப் பிரித்து என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்து கொள்வதே, ஏதோ புதிரை விடுவித்தது போன்ற மன நிறைவைத் தரும். இம்மொழியின் பெருமையே இதன் சொற்களுக்கு பல பொருள்கள் அதாவது,ஒற்றைச் சொல்லால் பலவற்றை சொல்வது. தவிர, பாரத, பாகவத கதைகள் மக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்தவை. எனவே அந்த கதா பாத்திரங்கள் அதிகமாக உவமிக்கப் படுகின்றன. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் வசன நடையில் எழுதிய காவியம் – வர்ணனைகள் பிரமிப்பூட்டுகின்றன ).
வீடு திரும்பிய பாணனிடம் பந்துக்கள் மிகவும் பிரியமாக இருந்தனர். கூட்டுக் குடும்பம் என்பதால், நாள் முழுவதும் வீட்டில் பல சிறுவர்கள் வேத அத்யயனம் செய்வது இனிய நாதமாக எங்கும் பரவி இருக்கும்.
பஸ்மமோ, புண்டரீகமோ (விபூதியோ,திலகமோ) அணியாத நெற்றியை காண்பது அரிது. அதனால் நெற்றியில் புரளும் சிகை அந்த வெண்மையின் பின் புலத்தில் தனித்து தெரியும்.
சிகா- கேசம், மற்றொரு பொருள்- தீ ஜுவாலை. அந்த வீடுகளில் அனவரதமும் யாகங்கள் நடப்பதும், தீ ஜுவாலையாக அக்னி குண்டத்தில் வளர்ந்த படி இருந்ததாம். அதைச் சுற்றி மாணவர்கள் குதூகலமாக ஓடியும் நடமாடியும் நிரம்பி இருக்குமாம். சிகை – நீண்ட கேசம் உடைய மாணவர்கள் நிரம்பியிருப்பர். முற்றங்கள் சிறியதாக இருந்தாலும், யாகத்திற்கு தேவையான பொருட்களை சேகரித்து வைத்து நிரம்பியிருக்கும். பசுமையாக சில, உலர்ந்த தானியங்கள், மான் தோல், அதன் மேல் வைக்கப் பட்ட யாகத்தில் பயன்படும் மரத்தால் ஆன பாத்திரங்கள், கரண்டிகள், சர்வ சாதாரணமாக சிறு பெண்கள் தானியங்களை உமியை நீக்கி சுத்தம் செய்து வைப்பர், எந்த நேரத்திலும் சுத்தமான ஆடைகளுடன், பல சிஷ்யர்கள்-மாணவர்கள் இருந்தாலும் ஒழுங்கு தவறாமல், பலாச மரத்தின் குச்சிகள், அக்னி வளர்க்கத் தேவையான மற்ற பொருட்கள், யாகத்தில் பயன்படும் நெய், அதைப் பெற கவனமாக வீட்டிலேயே வளர்த்து வரும் மாடுகளின் பராமரிப்பு, அவைகளின் கால் குளம்புகளே கோலமிட்ட மண் தரைகள், அதை அவ்வப்பொழுது சுத்தம் செய்தும், வைஸ்வதேவ என்ற முன்னோர்களுக்கான பிண்டம் வைக்கும் இடம், புகை சூழ்ந்து முற்றங்களில் வைத்த பொருட்கள், தூசு படிந்து மலினமாகாமல் இருக்க பசும் இலைகளைக் கொண்டு மூடியிருப்பர். அந்த சிறுவர்களின் கூச்சல்களும் நிரம்பி இருந்தாலும், எதையும் விடாமல் காலை நேர நியமங்களைச் செய்தனர். இதற்கிடையில் வளர்ப்பு மிருகங்கள், கரும் மான்கள் அதன் குட்டிகள், பசுக்கள், சுக -கிளிகள், சாரிகா என்ற பறவைகள், இவைகள் பாடம் முடிந்து மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கும் ஓய்வு எடுக்கும் இடங்களில் ஓடியும், கரைந்தும், துள்ளி குதித்தும். தங்கள் இயல்பின் படி இருந்தன. தபோவனம் என்று தனியாக தேவையே இல்லை, இந்த அமர்க்களமான சூழ்நிலையிலும் தங்கள் சாதனைகளை பெரியவர்கள் செய்வதும், வீட்டுப் பெண்களும், குழந்தைகளும் உல்லாசமாக வளைய வருவதும், பாணனுக்கு மன நிறைவைத் தந்தது.
வசந்த காலம் வந்தது. ஒரு பக்கம் மல்லிகை போன்ற மணம் வீசும் மலர்கள் குவித்து வைக்கப் பட்ட கடை வீதிகள். மறுபக்கம் அதைப் போல அட்டகாசமாக சிரிக்கும் சத்தம். மல்லிகை மலரின் வெண்மையும் அட்டகாசமான சிரிப்பும் வெண்மையாக வர்ணிக்கப் படுகிறது. கடைகள்-அட்டா எனப்படும். சிரிப்பும், மலரின் இதழ் விரிதலும் ஹாஸம் என்ற சொல்லால் வர்ணிக்கிறார். தவிர மகாகாலன் என்ற தேவன் சிவ பெருமான் உள்ள இடம். கல்பம் முடிந்து பிரளயம் வரும் காலத்தில் மகா கால அட்ட ஹாஸமாக சிரித்து உலகை சம்ஹரதே – சம்ஹாரம் செய்கிறார், கல்ப முடிவை அறிவிக்கும் பிரளயம் – மகா காலம்- கோடையின் கடுமையான தினங்கள், பைரவம்- சிவ பெருமான் ஊழிக் காலத்தில் பயங்கரமாக தெரிவார் என்பது கருத்து.
பாலும் நீரும், பாலையே ஆகாரமாக கொள்ளும் இளம் சிசுக்கள் முதல், பெரியவர்களுக்கான நீர், இவை வசந்த காலம் வந்ததும் அதிகமாக புழங்கலாயிற்று. தாராளமாக கிடைத்தன. புதிய உத்யான வனங்களில் பலவிதமான செடி கொடிகள்,பெருகின. வீடுகளில் குழந்தைகளிடம் அன்பு, வனங்களில் ஈரம் வெளிப்பட்டது என்று வர்ணனை. (சினேகம் என்ற சொல்லின் இரு விதமாக பிராணிகளில் அன்பு பாலாக பெருகுவதும், தாவரங்களில் ஈரம் இளம் தளிர்களாக துளிர்ப்பதும்) அதனால் அவை மென்மையாக இருந்தன.
வேனில் கால முடிவில் உதிர்ந்த மலர்கள் உலக வாழ்க்கையில் பந்தம் விலகி மோக்ஷம் அடைவது போல இருந்ததாம். தானே ருது- பருவ காலம் அதன் அரசன் வசந்தன், அபிஷேகம் செய்து கொள்வது போல இருந்த தாம்.
ஈரமான கேசங்களை விரித்து உலர்த்தியபடி வரும் பெண்கள் போல என்று உதாகரணம். பனி விழுந்து தன் இதழ்கள் வாடுவதால் கோபம் கொண்ட தாமரை மலர்கள் விரட்டியதால் பயந்து விலகியது போல, அம்சுமாலி- குளிர் நிலவு வேகமாக இமய மலையை நோக்கித் திரும்பி சென்று விட்டதாம். அந்த பருவம் முடிந்து விட்டது அடுத்து வேனிற்காலம் வந்தது.

நெற்றிப் பொட்டில் விழுந்து ஆதவனின் கிரணங்கள் தகிக்கின்றன என்று சந்தனம் பூசிக் கொண்டனர், மற்றொரு பொருள் நெற்றியில் சந்தனம் பூசி பிரகாசமாக திலகம் இட்டுக் கொண்டவர்கள், அனைவரும் தங்கள் ஆடையாலோ, விசிறியாலோ விசிறிக் கொண்டனர். தனியாக ஆராதனை செய்வானேன், கண்களைச் சுற்றி படர்ந்த வியர்வையாலேயே, தினகரன்- பகலவன், அவனுக்கு ஆராதனை செய்வது போல இருந்ததாம். ஸுரிய உதயத்துக்கு முன்பே எழுந்து வெளி வேலைகளை முடித்து உள்அறைகளுக்கு வந்து விடுவர். அனேகமாக வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்கள் பல நாட்கள் தொடர்ந்து பகலவனைக் காணாமலே கூட இருந்திருக்கிறார்கள். அவர்களை குமுதிணி என்று சொல்கிறார். குமுத மலர்கள் இரவில் பூக்கும். இந்த பெண்கள் பகல் முழுவதும் தூங்கி கழித்தனராம். தூக்க கலக்கத்தில், கண்களுக்கு எதிரில் ரத்ன மாலையை கொண்டு வந்து கண் முன் ஆட்டினாலும் கண்கள் திறப்பதில்லையாம். எப்படி நேருக்கு நேர் பகலவனைப் பார்ப்பார்கள். அவனோ ஆ தபன்- மிக அதிகமாக தகிப்பவன்.
சிசிர ருது அல்லாத சமயங்களில் – பனிக் காலம் அல்லாத சமயங்களில் சக்ரவாக ஜோடிகளாக சஞ்சரிக்கும் நதிகள் போலவே, வானமும் இரவில் குறைவான தாரகைகளையே கொண்டிருந்தது. நீரின் தேவை அதிகரித்தது. தாவரங்கள் மட்டுமல்ல பிராணிகள், மனிதர்கள் அனைவரும் தாகத்தால் தவித்தபடி நீரை நாடினர்.
நாட்கள் நகர நகர, வெய்யிலின் தாக்கம் குறைந்து சூழ்நிலையில் மாற்றங்கள் வந்தன. கடோரமாக இருந்த வானத்து கிரணங்களின் பாதிப்பை கொண்டு சென்ற வாயுவும் அதற்கு இணையாக வெப்பக் காற்றை வீசியடிப்பது குறைந்தது. நதிகள் தானே நீர் வரத்து குறைந்தால் சுருங்கும், வாயுவும் அதைப் பார்த்து தன்னைச் சுருக்கிக் கொண்டானோ. சீரீ (चिरी) என்ற பறவைகள் மழை வந்தால் கீச் கீசென்று கத்துமாம். புறாக்கள் என்றுமே வெப்பத்தின் விரோதிகள். வெப்பத்தை தாங்க மாட்டாதவை.
சிங்க குட்டிகள், உதிர வர்ணத்தைக் கண்டு ஆவலுடன் கேதகி என்ற சிவந்த கொத்து பூக்களை, அதன் சிவந்த நிறம் மட்டுமே அறிந்தவை என்பதால், நக்கின. பெரிய மரங்களில் அடி பாகத்தில் யானைகள் தங்கள் துணைகளான பெண் யானைகளுடன் சரஸமாக இருந்தன. மலைச் சரிவுகள் நீர் வரத்தினால் சரஸம்- ஈரமாக ஆயின. அவைகளில் மரங்களிலிருந்து மந்தாரன், சிந்தூர புஷ்பங்கள், நீரில் விளையாடி விட்டு வந்த மகிஷங்கள், மரங்களின் அடியில் வந்து நிற்கவும் அவை மேல் பூக்களை பொழிந்தன. அவைகளோ கொம்புகளால் முட்டி மரத்தில் ஏதோ எழுதுவது போல மரத்தை அசைத்தன, இது போல வர்ணனைகள் தொடருகின்றன.
இவ்வாறாக உக்ரமான கோடை காலத்தில், ஒரு சமயம் அனவரும் மதிய உணவிற்கு பிறகு, அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்தனர். சகோதரனான பாரசவன் (வம்சம்) சந்தன சேனன் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தவன் ஏதோ சொன்னான். சக்ரவர்த்தியின் செய்தியாம், கிருஷ்ணன் என்பவன் உங்களிடம் ஒரு செய்தி சொல்ல வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறான்.
சக்ரவர்த்தியின் வர்ணனை: நால்வகை சமுத்திரங்கள் சூழ்ந்த நாட்டின் அதிபதி, சகல அரச குலத்திற்கே சூடாமணியாக விளங்குபவர், அவரை வந்து வணங்குபவர் வணங்கி பாதங்களின் நிறமே சிவந்து காணப்படும், சக்ரவர்த்திகளிலும் முதன்மையானவர், மகா ராஜாதி ராஜன், பரமேஸ்வர ஸ்ரீ ஹர்ஷன் என்ற பெயருடையவர், அவர் அனுப்பியதாக வந்துள்ள அவர் ராஜ சபை அதிகாரியின் உறவினன் வாசலில் நிற்கிறார்.
சீக்கிரம் அவரை அழைத்து வா என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
அந்த சகோதரனும் அவரை அழைத்து வந்தான். வெகு தூரம் நடந்த தால் கால்கள் வீங்கி இருந்தன. ஆடை கசங்கி, தோளின் பின் பக்கமாக தொங்கிய ஒரு துண்டில் ஏதோ வைத்து கட்டி முடிச்சிட்டிருந்தது, முட்டி வரையில் தூக்கி கட்டிய ஆடை, அதுவும் கந்தல், அவர் கையில் சில கடிதங்கள், அரசன் மட்டுமல்ல மேலும் பலர் செய்தி அனுப்பி இருப்பதாக தோன்றியது, அவரைக் கண்டதும் வீட்டில் அனைவரும் திகைத்தனர். வரும் பொழுதே, அவசரமாக.,’பத்ர! நலமா? அகில புவனங்களுக்கும் காரணமின்றி அருளும் கிருஷ்ணன் நலமா?’ என்றனர். அவரும் ‘நலம்’ என்று சொல்லி விட்டு, வணங்கி விட்டு அருகில் வந்து அமர்ந்தார். சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேலும் சொல்லலானார். ‘இதோ அந்த கடிதம். மதிப்புக்குரிய எங்கள் அரசனுடைய கடிதம்’ என்று சொல்லி கையில் கொடுத்தார். பாணனும் மரியாதையுடன் அதை வாங்கி, தனக்குள் வாசித்தான்.
‘நமக்குள் ஏதோ ஒரு வித பந்தம், இணைத்து வைத்துள்ளது. இடையில் கண்டவர்கள் அபகரித்து போகக் கூடும் என்பதால், மீதியை, இதைக் கொண்டு வரும் என் சகோதரன் கிருஷ்ணன் சொல்வான்’ அவ்வளவே இருந்த செய்தி. கூடியிருந்தவர்கள் வந்தவரை என்ன செய்தி என்று கேட்டனர். அவரும் சொல்ல ஆரம்பித்தார்.
‘இவ்வாறு சொல்லச் சொன்னார் எங்கள் தலைவரான அரசன். நீங்களே அறிவீர்கள், ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களோ, ஒரே ஜாதியினரானாலும், ஒன்றாக வளர்ந்தவர்கள் ஆனாலும், ஒரே தேசத்தவர் என்பதாலும், அடிக்கடி சந்தித்த நபர்கள் ஆனாலும், ஒருவரையொருவர் கேள்விப்பட்ட நல்ல விஷயங்களாலும், குணத்தால் ஒற்றுமை இருந்தாலும், நட்பு ஏற்படுவது சகஜம். உங்களை கண்ணால் கண்டது கூட இல்லை. இருந்தாலும் ஏதோ காரணத்தால் மிக நெருங்கிய நண்பர் போல உங்களை அறிகிறேன். தொலைவில் உள்ள நிலவைக் கண்டு குமுத மலர்கள் விரும்புவது போல எனலாம். உங்கள் மனதில் சந்தேகம் வரலாம். இந்த அரசனுக்கு ஏதோ நெருக்கடி, துர்ஜனங்களால் வருந்தும் படி நடந்து விட்டதோ என்று எண்ணம் வரலாம். அப்படியும் இல்லை. மிக நல்லவர்களுக்கு கூட, அருகில் கூட இருக்கும் நன்பர்களாலேயே உதாசீனப்படுவதும், சத்ருக்கள் போலவே ஆவதும் உண்டு. குழந்தைத் தனமான சபலம், அறியாமையால் ஒருவர் உங்களிடம் பொறாமை கொண்டவர், உங்களைப் பற்றி தகாத சொற்களைச் சொன்னால், கேட்கும் மற்றவர்கள் அதையே சத்யமாக நினைப்பர். மற்றவருக்கும் சொல்வர். நீரின் வேகம் போன்றது. அவிவேகிகளின் மனமும் அந்த நதி நீர் போல ஓரிடத்தில் தங்காமல் ஓடியபடியே இருக்கும். அரசன் தான் என்ன செய்வான். பலர் பலவிதமாக சொன்னாலும், அதைக் கேட்கும் அரசன் உடனடியாக எந்த முடிவை எடுப்பான்? தள்ளி இருந்தாலும் நாங்கள் அறிந்தவரை, விவரம் அறிந்தவர்கள் மூலம் கேட்டதாலும் நேரில் பார்ப்பது போல உங்களை அறிவேன். உங்களைப் பற்றி சக்ரவர்த்தி ஆதரித்து பேசினார். இள வயதில் சபலமும், சில தவறுகள் செய்வதும் இயல்பே. அதனால் அரசர் உங்களை விரைவில் அரசரை சந்திக்க ராஜ சபைக்கு வரச் சொன்னார்.
பழுக்காத மரம் போல, வெளியில் தெரியாமல் உங்கள் சக்தி மறைந்து இருப்பதை என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. எந்த வித சந்தேகமோ, பயமோ, அரச சகவாசம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும், நம்மால் சமாளிக்க முடியுமா என்று நினைக்கவும் வேண்டாம். இருந்தாலும், ஒன்று சொல்கிறேன்.
தன் மனதில் தோன்றிய விஷயமே வெளியில் சொல்ல தயங்கி, நல்ல சந்தர்பங்களை பயன் படுத்திக் கொள்ளா விட்டால் துக்கமே. ஈஸ்வரனுடைய சங்கல்பமும் நம்மால் கணிக்க முடிவதில்லை. காமன் மனிதனை ஆட்டுவிப்பது போலவே சில சமயம் ஈஸ்வர சங்கல்பமும் நம்மால் மீற முடியாதவையே.
அதனால், மற்ற அரசர்கள் போல அல்ல நான்.
ந்ருகன் என்ற இக்ஷ்வாகு அரசன் போலவும், நளன், நிஷத, நகுஷ, அம்பரீஷ, தசரத, திலீப, நாபாக, பரத, பகீரத, யயாதி இவர்களுக்கு சமமானவன். அதனால் தயக்கமின்றி வரவும்.
(ந்ருகன் என்ற அரசன் ஒரு முறை பசுக்கள் தானம் செய்து வந்தான். ஒரு அந்தணனின் வளர்ப்பு பசு தானாக மற்ற தானம் செய்த பசுக்களுடன் கலந்து சென்று விட்டது. பசுவின் சொந்தக்கார அந்தணன், அதை சிறப்பாக தன் யாக காரியங்களில் நெய் முதலியவை பெறவே வளர்த்து வந்திருக்கிறான். அவன் தேடிக் கொண்டு வந்தான். பசுவை தானமாக பெற்றவன் தர மறுத்தான். அரசனிடம் இருவரும் வந்தனர். அரசனோ அந்த சமயம் களைத்து உறங்கி விட்டான். காத்திருந்த அந்தணன், என்ன தோன்றியதோ, பல்லியாக போ என்று சபித்து விட்டான். விஷயமறிந்த அரசன், கொடுத்ததை திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது என்பதால், தானம் வாங்கியவரைக் கேட்காமல், இவரையே பலவிதமாக சமாதானம் செய்தான், வேறு பல பசுக்கள் தருவதாகச் சொன்னாலும் அந்தணன் மறுத்து விட்டான். ஏதோ அந்த சமயத்தில் சொன்னாலும் கூட அவன் தன் வளர்ப்பு பசு என்பதால் மட்டுமே அதை விரும்பி கேட்டிருந்தான். அரசனை தண்டிப்பதாக நினைக்க கூடவில்லை. அவனும் தன் சொல்லுக்காக வருந்தினான்.
அரசனின் காலம் முடிந்து யமலோகம் சென்றார். யமனோ, ராஜன்! பல நற் காரியங்களின் பலனை பின்னால் அனுபவிப்பாய், முதலில் இந்த பாப காரியத்தின் பலனை அனுபவி என்று பூமியில் பல்லியாக பிறக்கச் செய்தான். பல காலம் அப்படியே இருந்து ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில், அவர் மூலம் நற்கதி பெற்றார்.இக்ஷ்வாகு அரசன் ஸ்ரீ ராமனின் அவருக்கும் முன் இருந்த பலருக்கும் முன் இருந்த அரசர்.
அம்பரீஷ என்பவன், துவாதசி விரதம் இருந்தான். வருடம் முழுவதும் ஒவ்வொரு ஏகாதசியும் முழு விரதம் இருந்து துவாதசியில் பூஜை முடித்து அரச சபையில் அனைவருக்கும் உணவளித்து பாரண- விரத முடிவு என்பதைச் செய்வான். வருடக் கடைசி துவாதசி. பாரணை ஆரம்பிக்கும் சமயம் துர்வாச முனிவர் யதேச்சையாக வந்தார். அவருக்கு தானும் அதில் கலந்து கொள்ள ஆசை வந்தது. எனவே, இதோ ஸ்னானம் செய்து விட்டு வருகிறேன் என்று போனவர் மிகவும் தாமதம் செய்தார். அதற்கான முஹூர்த வேளை தவறுகிறது, மற்றும் அரச சபையினர் காத்திருக்கின்றனர் என்பதால் அரசன் தண்ணீர் மட்டும் அருந்தி பாரணை செய்து வந்தவர்களை உணவருந்த அனுமதித்தான். வெகு நேரம் கழித்து வந்த துர்வாச முனிவர் கோபித்தார். என்னை விருந்துண்ண அழைத்து விட்டு நீ தனியாக சாப்பிட்டு விட்டாய் என்று ஆத்திரப் பட்டவரின் விரித்த சடையில் இருந்து, அவர் கோபமே உருவெடுத்து வந்தது போல க்ருத்திகா என்ற துர் தேவதை வந்தாள். இதையறிந்த பகவானின் கையில் இருந்த சக்கரம் அவளை அழித்த பின், துர்வாச முனிவரைத் துரத்தியது. ஓடி ஓடி எவரும் அபயம் அளிக்காததால் பகவான் மகா விஷ்ணுவிடமே வந்தார். அவர் சொன்னார், நீ யாரிடம் தவறு செய்தாயோ, அவரிடமே போ என்று சொல்லி அனுப்பி விட்டார். அதனால் திரும்பி அம்பரீஷ அரசனிடமே வந்து சரணடைந்தார். ஒரு வருஷம் அது வரை அரசனும் அவனுடைய அணுக்க சேவகர்கள், மந்திரிகளும் அதே போல காத்திருந்தனர். அதன் பின் அவருக்கு முதல் மரியாதையாக உணவளித்து விட்டு அனைவரும் தங்கள் விரத்தை முடித்தனர். அரசனை பலவாக புகழ்ந்து வரங்கள் அளித்து விட்டு துர்வாசர் திரும்பினார் என்று கதை.
நளன் – தமயந்தி சரித்திரம் தெரிந்திருக்கும்.
நிஷத – குபேரனின் கதை. முதன் முதலில் படைப்பதை ஆரம்பித்த சமயம், ப்ரும்மாவின் அறியாமையால் அதிக உயரம் இல்லாமல் அழகின்றி ஒரு பிறப்பு உண்டாகி விட்டது. அவர்களை யக்ஷர் என்பர். அவர்கள் தலைவன்.
நஹுஷன்- பல யாகங்கள் செய்தவன். இந்திரன் ஒரு முறை அசுரர்களிடம் தோற்று ஒளிந்து கொண்டிருந்த சமயம் இந்த நஹுஷனை இந்திரனாக்கினர். தன் நற் செயல்களால் (நூறு அஸ்வ மேத யாகங்கள் செய்தவன்) இந்த பதவியைப் பெற்றவன் என்பது சிறப்பு. பின்னால், தன்னை மறந்து பேராசையுடன், இந்திர பதவியுடன் இந்திராணியும் வேண்டும் என்றான். அவள் சபித்து சர்ப்பமாக தலை கீழாக விழுந்தான்.
தசரதனின் தந்தையின் தந்தை திலீபன்.
நாபாக என்ற அரசன் அவர் மகன் ஜட பரதர். இவர் மூலம் ஜைன மதம் வந்தது.
பரதன் தெரிந்திருக்கும்.பகீரதனும் பிரிசித்தம்.
யயாதி சர்மிஷ்டா என்ற அசுர அரசனின் பெண்ணை மணந்திருந்தான். அசுர குரு சுக்ராசாரியார் என்பவர். சுக்ராசாரியாரின் மகள் தேவயானிக்கு அவளிடம் ஏற்பட்ட விரோதம், தந்தையின் செல்வாக்கால் யயாதியை பிடிவாதமாக மணந்தாள். அவன் சர்மிஷ்டாவிடமும் அன்பாக இருப்பது பொறுக்காமல் தேவயானி தந்தையிடம் சொன்னாள். அவர் முதுமை அடைவாய் என்று சபித்து விட்டார். பின்னர், சமாதானமாகி உன் மகன் களிடம் இளமையை வாங்கிக் கொள் என்றார். சர்மிஷ்டாவின் மகன் புரு தான் தன் இளமையை கொடுத்து அவர் முதுமையை பெற்றுக் கொண்டான். தேவயானியின் மக்கள் இருவரும் மறுத்து விட்டனர். பல காலம் வாழ்ந்த பின், தன் அறிவு பெற்று, பச்சாதாபம் வாட்ட மகனிடம் இளமையை கொடுத்து அரசையும் அளித்து விட்டு வனம் சென்றான்.)
இவர்களைத் தான் கடிதத்தில் குறிப்பிட்டு நானும் அவர்களுக்கு குறைந்தவனில்லை என்றான் அந்த அரசன்.
இப்படி சொல்லியதால், அகங்காரம்-தற் பெருமை, என்ற கால கூட விஷத்தால் பாதிக்கப் பட்டவன், இவன் கண்கள் காண்பதே வீண் ஆடம்பரமே என்றோ, இவன் சொல்லும், அதே போல கர்வத்தில் தோய்ந்த, இல்லாத உயர் குணங்களை கல்பித்துச் சொல்லும் அலங்காரச் சொற்களே என்றோ, பொருளல்ல. கர்வம் என்பதும் இல்லை, இயல்பான சொல் பிறக்கும் இடத்திலிருந்து வந்த உண்மையான சொற்களே (பரா, ப்ரத்யக்,பஸ்யந்தி, வைகரீ – முதலில் வெளியில் கேட்காத நாதமாக மூலாதாரம் என்ற வயிற்றுப் பகுதியில் உண்டாகும் நாதம், பரா, அடுத்து ஒலியாகி பஸ்யந்தி என்றும், கழுத்தில் அதே நாதம் மத்யமா என்பதாகவும், வெளியில் தானே கேட்கும் அளவுக்கு ஒலியாக வருவது வைகரி, முதல் மூன்றும் அனைத்து பிராணிகளுக்கும் பொது, வைகரி என்ற சொல்லாக உருப் பெறுவது மனிதனுக்கு மட்டுமே. அவைகளை, நான் என்ன செய்வேன், என் உடல் பாகங்களில் இருந்து வரும் ஒலி, என்று அரசன் சொல்வதாக. வெளியில் வந்த பின் அந்த சொல்லுக்கு பொருளும், உச்சரிப்பும் இறைவன் அருளே. உஷ்ம, அபஸ்மார,விஸ்ம்ருத, ஶைர்யம் என்று இந்த சொற்கள் ஒலியின் தோற்றத்தைச் சொல்ல இலக்கணங்களில் உள்ளவை) என் நடையின் கதி (நடவடிக்கைகள் – ஒழுங்கின்றியோ, தாறு மாறாகவோ காண முடியாது. மதம் பிடித்தவன் போல என் வாயிலிருந்து. நிஷ்டூரமான சொற்கள் வெளி வராது, தவிர, நல்ல அறிவாளிகளை ரத்தினமாக பார்ப்பவன். சாதாரண நவரத்னங்கள் என் மதிப்பில் வெறும் கற்களே. குணங்களே வெண் முத்துக்கள், கடலில் தேடி எடுப்பது அல்ல. என்னைப் பொறுத்தவரை ஆபரணங்கள் உடலுக்கு பாரமே. தானம், செயல்கள் அனைத்துமே செயலில் முனைப்போடு இருப்பதைக் காட்டுபவையே, இவை அனைத்தையும் விட முதல் ஆசை புகழுடன் வாழ வேண்டும் என்பதே. வாழ்ந்து, முதுமை அடைந்து மறைவதில் என்ன பயன்? (தோன்றிற் புகழொடு தோன்றுக)
கை- கர, வரி வசூலிப்பது எனும் இரு பொருளுடையது. இவை இரண்டுமே பயனுள்ளவைகளே. கையாக என் தேவைகளை நிறைவேற்றும். ஆசா- விருப்பங்கள். வரி வசூலிப்பது நாட்டின் தேவைகளுக்காக. ஆசா- திசைகள். நாட்டின் பல திசைகளிலும் பொது நன்மைகளைச் செய்வது. என் மனைவி, என் உடல், மகன், மகள் என்ற என் குடும்பத்தை போஷிக்க மட்டுமல்ல.
தனுஷ்- வில், அதில் கட்டப் படும் நாண் என்ற கயிறு – குணம் எனப்படும். என் வரை குணம் என்பது வில்லில் கட்டப்படும் நாண் கயிறு அல்ல, சகாயம் செய்யும் புத்தியே. .
என்னிடம் பணி புரிபவர்களுக்கு கௌரவமாக வாழ வழி அளிப்பது என் வழக்கம். ஏதோ அவர்களுக்கு தானம் கொடுப்பது போல நினைப்பவன் அல்ல.
எனக்கு நண்பர்கள் என் ஆத்மா போன்றவர்கள். பணியாளர்களிடம் என் ப்ரபுத்வம்- தலைமையை அல்லது ஆளுமையைக் காட்டுவேன். பண்டிதர்களின் அறிவை மட்டுமே மதிப்பேன். செல்வம் என்பது என் உற்றாரே. சத்ர சாமரங்கள் அதைக் காட்டுவதாக நினைக்க மாட்டேன். வெளி ஆடம்பரங்களில் இல்லை செல்வத்தின் அறிகுறி.
என் செல்வம் தேவை உள்ளவர்களுக்கு பயன் படும். என் செல்வம் என்பது அந்தணர்களுக்கும், நாடி வருபவர்க்கும் உதவவே. என் மதிப்பில் நன் நடத்தையே உயர்ந்தது. ஆயுள், வாழ்நாள் தர்மத்தைச் செய்யவே. சாகசமான செயல்களை செய்யவே ஆரோக்யமான சரீரம்.
ராஜ பவனமும், இதன் பெருமைகளும் மனதின் உல்லாசத்துக்கே. எதிர் பட்சம் வலிமையாக இருப்பதை ரசிப்பேன். இவ்வாறு அனைத்து நன்மைகளும் ஓரிடத்தில் அமைவது அரிதிலும் அரிது.’ இது தான் செய்தி என்று தூது வந்த சந்திர சேனன் சொல்லி முடித்த பின், அவனுக்கு உணவளித்து, ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்யுங்கள் என்று மற்றவர்களுக்கு கட்டளையிட்டான் பாணன்.
அவர் சென்ற பின், பகல் பொழுது முடியும் தறுவாய், வானம் செக்கச் சிவந்த தாமரை மலர் போல வண்ண ஜாலத்துடன் இருந்த சமயம், (அஸ்தமிக்கும் நேரம்) காகம் கரையும் சமயம் அதன் உடலின் கருமையும் உள் வாயின் வெண்மையும் கலந்து தெரிவது போன்ற மேகங்கள், நண் பகலின் வெப்பம் அடங்கித் தெரியும் சமயம், பகலவனுடைய குதிரைகள் வேகம் குறைந்து மெள்ளப் பயணம் செல்வது போல இருக்க தாபம் குறைந்தது.. வானத்தில் ஜாபா அல்லது ஜபா- செம்பருத்திப் பூ – ரவி என்ற ஸூரியனுக்கு பிடித்தமான பூ, பாடல என்ற மலர்கள், கொத்து கொத்தாக பூப்பவை, , மலைச் சிகரத்தில் விரவித் தெரிவது போல, அஸ்தாசலத்தில், மறையும் மலையுச்சியில், வழிகள் நேராக இல்லாததால், கால் தடுக்கியது போல, மேற்கு திசையில் ஸ்யாமா- ராத்திரி, பெண் என்பதும் மற்றொரு பொருள்.
அது வரை யோசித்து போகத்தான் வேண்டும் என்று தீர்மானித்தான். (தடுமாறுதல் – மனதில் பல விதமான ஆக்ஷேபண சமாதானங்கள், ஒரு வித பயம்,சோகம் போன்றவை) படுக்கையில் அமர்ந்த படி, மாலை வெய்யிலில் தன் முன்னால் விழுந்த நீண்ட நிழலைப் பார்த்த படியே, பகலவனை விட்டுப் பிரிந்த சோகம் போன்ற அந்த ஸ்யாமா- என்ற முகத்தில் –(ஸ்யாமா-இருட்டு,பெண் இரு பொருள்) ஸந்த்யாகால ஜபங்களை முடித்து உறங்கச் சென்றான். தனிமையில் யோசித்தான். ‘என்ன செய்யலாம்? அரசரைப் பொறுத்தவரை மரியாதையுடனும் மதிப்புடனும் அழைத்திருக்கிறார். ஒரு பந்து அவரிடம் என்னைப் பற்றி சொல்லியதாக வந்தவர் சொன்னார். ராஜ சேவை கஷ்டம். அடி பணிந்து வேலை செய்வது மிகக் கடினம். ராஜ குலத்தின் மனப் பாங்கே வித்தியாசமானது. என் முன்னோர்கள் எவரும் ராஜ சேவகம் செய்தோ, அதனிடம் சம்பந்தமோ வைத்துக் கொண்டதில்லை. நம் குல வழக்கமும் இல்லை. அதனால், ஆலோசனை சொல்வோரும் இல்லை. என் சிறு வயது நண்பர்கள் எவரையும் தற்சமயம் நினைவும் இல்லை. ராஜ சேவகம் எனில், என் குலம் கோத்ரம் எதுவும் கௌரவமாக நினைக்கப் பட மாட்டாது. பழகியவர்கள் நிரம்பிய இடம் என்பதும் இல்லை. பேச்சுத் துணையோ, அறிவார்த்தமாக உரையாடவோ எவரும் இல்லை. கற்ற கல்வியை மேம்படுத்திக் கொள்வோம் என்ற குதூகலமும் இல்லை. ஆரோக்யமான உடலோ, அழகோ. அடி பணிந்து செய்பவருக்கு என்ன பலன்? அப்படி எனக்கு என்ன தான் திறமை இருக்கிறது அரசரின் மதிப்புக்கு ஆளாக? பலர் நடுவில் பேசும் திறமை உள்ளதா? இல்லையே. வரவு செலவு கணக்கும் பார்த்ததில்லை. வீட்டில் மற்றவர் என் வரை வரவே விடவில்லை. அரசனின் அருகில் யார் இருப்பார்கள், எவரையும் கண்டதுமில்லை. ஆனால் போய்த் தான் ஆக வேண்டும். எப்பொழுதும் நான் வணங்கும் புராரி-சிவ பெருமான், புவன குரு அவர் எனக்கு வழி காட்டுவார், என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு மறு நாள் புறப்படுவதாக தீர்மானம் செய்து கொண்டான்.
(மீதி பாகம் அடுத்த இதழில்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
