கல்லிலே கலைவண்ணம் கண்டார்

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-4

பள்ளி, கல்லூரி நாட்களில் கல்கி, சாண்டில்யன், கௌசிகன் போன்ற பலர் எழுதியுள்ள சரித்திர நாவல்களை விரும்பிப் படித்ததில், அவ்விடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆவல் வெகு காலமாக இருந்தது. பெரும்பாலும் குடும்பத்துடன் விடுமுறைகள் மற்றும் சுற்றுலாக்கள் செல்ல வேண்டுமெனில், நன்கு திட்டமிட்டுத்தான் செயல் படவேண்டும். ஆனால் சில சமயங்களில், நாம் ஒரு திட்டமும் இல்லாமல் பயணங்கள் மேற்கொள்ளும் போது, எதிர்பாராத அனுபவங்கள்  கிடைக்கும். இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழமையான அதிசயங்கள் வரலாற்றாசிரியர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்திய நிலப்பரப்புகளுக்குள் பல வரலாற்று குகைகள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன. பெரும்பாலோர் கட்டிடக்கலை அற்புதங்களையும் மற்றும் மத சிற்பங்களையும் பெரிதாக ரசிப்பார்கள். ஆனால் இவற்றில் சில அறிவியல் சார்ந்தது. அவ்வாறான சில அனுபவங்களை இந்த இதழில் பகிர்ந்துள்ளேன்.

1.  வானியல் முக்கியத்துவம் வாய்ந்த கவி கங்காதரேஸ்வர் ஆலயம்

பெங்களூரு பசவங்குடி அருகே உள்ள கெம்பேகவுடா நகரில் கவிபுரா என்ற பகுதியில் ஐநூறு  வருடங்களுக்கு முந்தைய ஒரு கோயில், கவி கங்காதரேஸ்வர் ஆலயம். கோவிலுக்கு வெளியிலிருந்து பார்க்கும் போது, குறிப்பிடத்தக்கதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் உட்புறம் நுழையும் போது பல தனித்துவமான அம்சங்கள் கண்ணில் படுகின்றன. சிவலிங்கம் சிறிய குகைக்குள் உள்ளது, சிறு படிகள் வழியாக இறங்கி குனிந்துதான் செல்ல வேண்டும். ஒரு தென்னிந்திய கோவிலின் வழக்கத்திற்கு மாறாக, இந்த வளாகம் நேர்  திசையிலில்லாமல், தென்மேற்கு நோக்கி உள்ளது.

முன்புறத்தில் சூர்யபனா மற்றும் சந்திரபானா என்று பெயரிடப்பட்ட இரண்டு ஒற்றைக்கல் கட்டமைப்புகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் லாலிபாப்கள் போன்று தோன்றும் ஒரு பெரிய தூணில் ஒரு வட்டமான தட்டை தாங்கிக் கொண்டிருக்கிறது. தட்டுகளில் சித்தரிக்கும் காளைகள் ஒன்றையொன்று எதிர்கொள்வது மாறியான வேலைப்பாடுகள். தட்டுக்கள் இரண்டும் ஒரே அளவு மற்றும் 6 அடி விட்டம் கொண்டவை. தட்டுக்களில் வெட்டப்பட்ட பள்ளங்கள் இரண்டு முகங்களிலும் ஒன்றுக்கொன்று நேர் கோணத்தில் உள்ளன. இதைத் தவிர, சிவனுடன் தொடர்புடைய திரிசூலம் மற்றும் உடுக்கையையும் காணலாம். இரண்டு தட்டுக்களுக்கிடையில் ஒரு பித்தளை கொடிமரமும் மற்றும் நந்தியின் சிலையும் உள்ளன.

சூரியன் மகர ராசிக்குள் நுழையும் மகர சங்கராந்தியன்று சிவனுக்கு சில நிமிடங்கள் சூரிய மஜ்ஜானா அல்லது சூரிய குளியல் நடைபெறுவது ஆண்டு தோறும் நடக்கும் ஒரு வைபவம். ஆனால், இதற்குப் பின்னால்  அறிவியல் அறிவு, கட்டிடக்கலை திறன் மற்றும் வரலாறு உள்ளது என்பதை பெங்களூரு ஜவஹர்லால் நேரு கோளரங்கம் குழு ஆய்வு செய்து, முற்றத்திலுள்ள இரண்டு பெரிய வட்டுகளும்  இரண்டு சங்கிராந்தியுடணும் இணைந்திருப்பதை எளிய வானியல் கணக்கீடுகளால் சுட்டிக் காட்டியுள்ளனர். இது வெண்கலத் தூணின் நிழல் வட்டில் உள்ள செங்குத்து அடையாளத்துடனும்  ஒத்துப்போகிறது. 1792 தேதியிட்ட கோவிலின் பழைய ஓவியம் ஒன்று இந்த ஆய்வுக்கான தேடலுக்கு ஒரு முக்கியமான ஆதாரம் என்று குழுவின் தலைவர் ஷைலஜா கூறுகிறார். திட்டமிடாத பல கட்டுமானங்கள் மற்றும் புனரமைப்புகள், கோடைகால சங்கிராந்தி நிகழ்வு மறைவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

2.கல்லிலே கலைவண்ணம் கண்டார்

2.1 சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’தான் நான் முதன் முதலில் படித்த வரலாறு சம்பந்தப்பட்ட நாவல். இது பல்லவர்கள் காலகட்டத்தில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புனை கதை.‌ இதில் கல்கி சாளுக்கியர்களை வில்லன்களாக சித்தரித்திருப்பார்! சாளுக்கியர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் முந்தைய ஆந்திராவின் பெரும்பகுதியை கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தனர். சாளுக்கிய வம்சம் முதலாம் புலிகேசியால் வாதாபி அல்லது தற்போதைய பாதாமியைத் தலைநகராகக் கொண்டு நிறுவப்பட்டது. சிவகாமியின் சபதம் கதை இறுதியில் நரசிம்ம பல்லவன், தனது நம்பிக்கைக் குறிய படைத் தலைவன் பரஞ்சோதியுடன் புலிகேசியைக் கொன்று வாதாபியை மீட்கிறான். துறவறம் பூண்ட பரஞ்சோதி 63 நாயன்மார்களில் ஒருவரான ‘சிறுத்தொண்டர்’ என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். பல்லவர்கள் பாதாமி பாறைகளில் தங்கள் வெற்றியை தமிழில் பதித்துள்ளதை இன்றும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் காணலாம்.

பாதாமியின் வடக்கு மலை உச்சி கோவிலிருந்து கடத்தப்பட்ட கணபதி இன்று திருச்செங்கட்டான்குடியில் இருக்கிறது. இன்றும் கர்நாடக கச்சேரிகளில் பிரபலமாகப் பாடப்படும் முத்துஸ்வாமி தீட்சிதரின் “வாதாபி கணபதிம் பஜே” என்ற கீர்த்தனை இந்த கணபதிக்காக இயற்றப்பட்டதாம்.

சாளுக்கியர்கள் ஐஹோலே மற்றும் பட்டடக்கல்லில் பல அழகிய கோவில்களை உருவாக்கினர். பட்டடக்கல்லில் உள்ள கோயில்கள் திராவிட கட்டிடக்கலை (மல்லிகார்ஜுனா கோயில்), வடக்கு நகர பாணி (காசி விஸ்வநாதர் கோயில்) மற்றும் இரண்டு பாணிகளின் இணைவதற்கான ஆரம்ப முயற்சிகளை பாபநாதர் கோயிலில் காணலாம். படாமி, ஐஹோல், பட்டடகல் மற்றும் உதவள்ளி குகைகள் பெரும்பாலும் மண் கல் (sand stone) என்பதையே முதன்மை பொருளாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.

ஐஹோல் மற்றும் பாதாமி கோவில்கள் நன்றாகக் கறுத்த, சிவப்பு-மஞ்சள் மண் கல்லால் வெட்டப்பட்டுள்ளன. இது நுணுக்கமான விலங்கியல் மற்றும் நுண்ணுயிர் வடிவங்களை உருவாக்குவதற்கான வசதியை வழங்குகிறது. இதில் சாளுக்கிய வம்சத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு கட்டிடக்கலை பாணிகள் பிரதிபலிக்கின்றன. பட்டடகல் கோவில்கள் உள்ளூர் மண் கல்லால் கட்டப்பட்டுள்ளன. இதில் திராவிடர் மற்றும் நாகரா பாணிகளை பிரதிபலிக்கும் தனித்துவமான விலங்கியல் மற்றும் கட்டிட உருப்படிகள் உள்ளன.

ஒளியியல் மாயை

இவை அனைத்தும் நம் பண்டைய கால கலைஞர்களின் ஒப்பற்ற திறமைகளை பறைசாற்றுகிறது.

ஒளி மாயை என்பது நம் கண்களுடனும் மனதுடனும் உறவாடும் சிற்பங்கள் மற்றும் சித்திரங்களின் அடுக்குகளை உருவாக்கும் கலை மற்றும் காட்சி தந்திரம் பற்றியவை. நவீன காலங்களில், உளவியலாளர்கள் ஆளுமைப் பண்புகள் அல்லது மனப்பான்மை மற்றும்  நுண்ணறிவு நிலைகளை (வலது மூளை அல்லது இடது மூளை) கண்டறிய இதைப் பயன்படுத்துகின்றனர். 

2.2 உண்டவல்லியில் ஒருகல் சிற்பங்கள்

கிருஷ்ணா நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் உண்டவல்லி கிராமத்தில் மலையைக் குடைந்து நான்கு நிலைகள் கொண்ட குகைக் கோவில்களை அமைத்துள்ளனர். நான்காம் நூற்றாண்டில் குப்தர்களால் கட்டப்பட்ட இந்த குகைக் கோவில்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

திடமான மணற்கற்களால் செதுக்கப்பட்டுள்ள இக்குகைகள் நான்கு தளங்களைக் கொண்டுள்ளது.  இதன் அடித்தளம், ஏழு தலைவாசல்களைக் கொண்டுள்ளது. கூரைகளை ஏராளமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த அடித்தளத்தில் பணிகள் முழுமைபெறாத நிலை காணப்படுகிறது.

முதல் தளத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு சிலைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இரண்டாம் தளத்தில் அனந்த சயனப் பெருமாளின், பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏழு தலை நாகம் குடைப்பிடிக்க கிரானைட் கற்களால் செதுக்கப்பட்ட சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அற்புதமாக காட்சியளிக்கிறார். குப்த பேரரசர்களில் பெரும்பாலோர் விஷ்ணுகுண்டின மன்னர்களுடன் தொடர்புடையவர்களாதலால், நரசிம்மர், விஷ்ணு மற்றும் ராமாயணக் கதைகளை சித்தரிக்கும் சிற்பங்கள் நிறைய உள்ளன. மூன்றாம் தளமும் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது.

3. கோல் கும்பாஸின் கிசுகிசு மாடங்கள்

முஹம்மது அடில் ஷாவின் (கி.பி. 1626-56) கல்லறையான கோல் கும்பாஸ், கர்நாடக மாநிலம், பீஜாப்பூரில் அமைந்துள்ள இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையின் ஒரு முக்கியமான நினைவுச்சின்னமாகும். இந்தியாவின் மிகப்பெரிய குவிமாடங்களில் ஒன்றான கோல் கும்பாஸின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் அம்சங்கள் இன்றும் வியக்கத்தக்கதாக உள்ளது. சாம்பல் நிற பசால்ட்டிலிருந்து கட்டப்பட்ட  இக்குவிமாடம் தோராயமாக 37 மீட்டர் விட்டமும், அடிவாரத்திலிருந்து உச்சம் வரை சுமார் 51 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. தொடர்ச்சியான வளைவுகளும்  மற்றும் பெட்டகங்களுமானா வடிவமைப்பு எடையை சமமாக விநியோகிக்கிறது.  உள் குவிமாடம் மற்றும் வெளிப்புறக் குவிமாடங்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒட்டுமொத்த எடையைக் குறைத்து  நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. பிஜாப்பூரின் வெப்பமான காலநிலைக்கு  உகந்தவாறு உயரமான கூரைகள் மற்றும் திறப்புகள் குளிர்ச்சியான உட்புற காலநிலையை பராமரிக்க உதவுகின்றன. மேலும் கட்டமைப்பின் தடிமனான சுவர்கள்,பகலில் உட்புறத்தை குளிர்ச்சியாகவும் இரவில் வெப்பமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

கோல் கும்பாஸ் குவிமாடம் ஒரு கட்டிடக்கலை அதிசயம் மட்டுமல்ல; இது அதன் காலத்தின் மேம்பட்ட பொறியியல் மற்றும் கலை திறன்களுக்கு ஒரு சான்றாகும். அதன் புதுமையான வடிவமைப்பு, அதன் ஒலி மற்றும் வெப்ப பண்புகளுடன் இணைந்து, வரலாற்று கட்டிடக்கலைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக இருக்குகிறது.

இக்குவிமாடம் நம்பமுடியாத ஒலியியலுக்கு பிரபலமானது. குவிமாடத்தின் வளைவு காரணமாக, குவிமாடத்திற்குள் எழுப்பப்படும் ஒலிகள், ஒலி அலைகளை பிரதிபலிக்கும் வகையில், பரந்த உட்புற இடைவெளியில் தெளிவாகக் கேட்க முடியும். இதன் வடிவியல் வடிவமைப்பின் விளைவால் ஒலியை திறமையாக பயணிக்க அனுமதிக்கிறது. குவிமாடத்தின் அடிப்பகுதியைச் சுற்றியுள்ள வட்ட நடைபாதை விஸ்பரிங் கேலரி என்று அழைக்கப்படுகிறது.

இந்திய கிசுகிசு கேலரிகள் கட்டிடக்கலை மற்றும் ஒலியியல் ரீதியாக மிகவும் குறிப்பிடத்தக்கவை. ரேலேயின் ஆராய்ச்சியினால் உந்தப்பட்ட சி.வி. ராமன் பீஜாப்பூரில் உள்ள கோல் கும்பாஸ் தவிர கல்கத்தா விக்டோரியா நினைவகம் மற்றும் ஜி.பி.ஓ., பாங்கிப்பூர தானியக் களஞ்சியம் (பாட்னா) மற்றும்  ஆக்ராவிற்கு அருகிலுள்ள ஃபதேபூர் சிக்ரி ஆகிய இடங்களில் ஒலியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு 1922லேயே ஒரு கட்டுரை எழுதினார்.

4. பீரங்கிகளின் முழக்கம் 

மாலிக்-இ-மைதான் ஷெர்சா புர்ஜ் அல்லது லயன் டவருக்குள் அமைந்துள்ளது. இது பீஜாப்பூரின் அசல் கோட்டையின் ஒரு பகுதியாக இருந்தது. இடைக்கால இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அற்புதமான ஃபோர்ஜ் வெல்டட் இரும்பு பீரங்கிகளுக்கும், வார்ப்பிரும்பு வெண்கல பீரங்கிகளுக்கும் எடுத்துக்காட்டாக, இதோ இரண்டு சாட்சிகள்.  வெண்கல பீரங்கி கிட்டத்தட்ட 4 மீ நீளம், 1.5 மீ விட்டம் மற்றும் 55 டன் எடை கொண்டது.  அதன் முனை திறந்த தாடைகளுடன் சிங்கத்தின் தலை மற்றும் அதன் பற்களுக்கு இடையில் ஒரு யானை நசுக்கப்பட்டு இறந்தது போன்ற வடிவத்தில், இதை வடித்த கலைஞனின் கற்பனையையும், பொறியியல் நிபுணர்களின் திறமையையும் கண்டு வியக்கத்தான் வேண்டும்.  

இதைப் பார்க்கும் போது மறைந்த ஐஐடி கான்பூர் பேராசிரியர் ஆர் பாலசுப்பிரமணியனின்  ‘The saga of Indian cannons’ என்ற புத்தகம் ஞாபகத்திற்கு வருகிறது. துப்பாக்கி குண்டுகளின் அறிவியல் மற்றும் பீரங்கிகளின் தொழில்நுட்பம், பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் இந்திய துணைக்கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நவீன காலத்திற்கு முந்தைய காலம் வரை, முகலாய சிறு ஓவியங்கள் மற்றும் தற்போதுள்ள பீரங்கி துண்டுகளின் பகுப்பாய்வு ஆகியவற்றை அருமையாக விளக்கியிருப்பார்.  மேலும் முகலாய, மராட்டிய, சீக்கிய மற்றும் தக்காண சக்திகளை நிலைநிறுத்திய வலிமைமிக்க பீரங்கிகளை பற்றியும் விவரித்துள்ளார். சாட்டர்னல் (ஒட்டகத்தின் முதுகில் இருந்து சுடும் பீரங்கி), கலப்பு பீரங்கி (உள் இரும்பு துளை மற்றும் வெளிப்புற வெண்கல வார்ப்பு) மற்றும் தடைகள் (போர்க்கள ராக்கெட்டுகள்) போன்ற பீரங்கி தொழில்நுட்பத்தில் இந்திய கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் பங்களிப்புக்கு இவை போதுமான சான்றுகள்.

இன்று இந்தியா முழுவதும் உள்ள பல கோட்டைகளிலும், மியூசியங்களிலும் பீரங்கிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இயந்திரமயமாக்கல் மற்றும் உலோகங்களின் பெரிய அளவிலான தொழில்துறை உற்பத்தியின் வருகைக்கு முன்னர், இந்திய உலோக காஸ்டர் மற்றும் கொல்லர்களால் அடைந்த புகழ்பெற்ற உயரங்களுக்கு, இன்று இவைகள் வெறும் ஊமை சாட்சிகளே!

பீரங்கிகளின் கண்டுபிடிப்பு மற்றும் போரில் அவற்றின் பயன்பாடு போர்களுக்கு வேறுபட்ட பரிமாணத்தை சேர்த்தது. நாடுகளின் தலைவிதி பீரங்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தீர்மானிக்கப்பட்டது. ‘பாமினிப் பாவை’யில் கற்பனைகளுடன் சேர்த்து ஆசிரியர் கௌசிகன் 1775 தலைக்கோட்டையில் ஒன்றுபட்ட தக்காண சுல்தான்கள் படை எவ்வாறு ஒரு மாபெறும் விஜயநகர பேரரசை வீழ்த்தியது என்பதை அழகாக விவரித்திருப்பார்.

5.  நானூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாபாப் (Baobab) மரம்

மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை வனவிலங்குகள் முதல் தாவரங்கள் வரை அனைத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை நமக்குச் சொல்லும் ஆதாரங்களுக்கு பஞ்சமில்லை. எண்ணற்ற உயிரினங்கள் எவ்வாறு அழுத்தத்தில் உள்ளன, இறந்து வருகின்றன அல்லது மாற்றியமைக்க போராடுகின்றன என்பதற்கான கதைகளால் தலைப்புச் செய்திகள் நிரப்பப்பட்டுள்ளன.

சென்னையிலுள்ள நானூற்று ஐம்பது வயதான அடையாறு ஆலமரத்தை பலரும் அறிந்திருப்போம். ஆனால் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பாபாப் பற்றி அறிய வாய்ப்பில்லை.  சென்ற வாரம் பீஜாப்பூருக்கு அருகிலுள்ள யோகாபூரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் இம்மரத்தைக் காண நேர்ந்தது.

மரபணு ஆய்வுகளின்படி, 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இருக்கும் மடகாஸ்கர் தீவில் தோன்றிய, மிகப்பழமையான மரங்களில் ஒன்றான பாபாப் மரங்களைப் பற்றிய ஆய்வு சமீபத்தில் Nature இதழில் வெளியாகியுள்ளது. இவற்றின் விதைகள் கடல் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கும், ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டு, தனித்தனியாக எட்டு இனங்களாக பரிணமிக்கின்றன.

பாபாப் மரங்களின் மரபியல் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள ஜெனெட்டிக் பகுப்பாய்வுகள் முக்கியமான தகவல்களை வழங்குகின்றன. சமீபத்திய ஆய்வுகள் முழு ஜெனோம் வரிசைப்படுத்தலை பயன்படுத்தி, பாபாப் மரங்களின் மரபியல் உறவுகளை தெளிவாக உருவாக்கி, மாலகாஸி மற்றும் ஆப்பிரிக்க பாபாப் மரங்களுக்கிடையேயான இணைப்பு மற்றும் வளர்ச்சியை கண்டறிந்துள்ளன. முழு ஜெனோம் நகல் மற்றும் பல்நிலை நிகழ்வுகளை அடையாளம் காணுதல், அவற்றின் நீடித்த தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய ஆதாரங்களையும் வழங்குகிறது. மேலும், மக்கள் தொகை ஜெனெட்டிக்ஸ் பகுப்பாய்வுகள், புவியியல் தடைகளைச் சார்ந்த தனித்துவமான துணை மக்கள் தொகைகளை வெளிப்படுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்புகள், பயனுள்ள பாதுகாப்பு உத்திகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக இருக்கின்றன.

இந்த மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழக்கூடியவை. பெரிய அளவில் வளர்ந்து, வறண்ட காலங்களில் உயிர்வாழ்வதற்காக அதிக அளவு தண்ணீரை அவற்றின் தண்டுகளில் சேமித்து வைக்கின்றன. இவற்றின் பழங்கள்  சுவையாக  இருக்கும். அவற்றின் தண்டுகளில் இருந்து கயிறுகள் அல்லது ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படும் இழைகளை உருவாக்க முடியும். இந்த மரங்களின் வெள்ளைப் பூக்கள் அந்தி வேளையில் பூப்பவை. இந்தப் பூக்கள் மகரந்தச் சேர்க்கையாக வெளவால்களை ஈர்க்கின்றன. இந்த வௌவால்கள் இந்தப் பூக்களின் தேனை உண்பதற்காக அதிக தூரம் பறந்து வருகின்றன. மேலும் இந்த மரங்கள் பறவைகள் கூடு கட்டும் முக்கியமான இடங்களாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்த மரங்களைப் பாதுகாக்க இன்னும் அதிகமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், இம்மரங்கள் அழிவின் விளிம்பில் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

https://www.nature.com/articles/d41586-024-01549-9

6. உளி பட்டு உயிர் பெற்ற காகத்திய கல்வெட்டின் தற்போதைய நிலை!

ஜான்சி ராணியை அனைவருக்கும் தெரியும். ஆனால் தக்காணத்தில் ஆட்சி செய்த (கி.பி. 1259-1295) காகத்திய ராணி ருத்ர மாதேவியை எத்தனை பேருக்குத் தெரியும்? அவரது அழகையும் மற்றும் ஆற்றலையும் பற்றி 13ம் நூற்றாண்டில்  இந்தியாவில் பயணித்த இத்தாலியைச் சேர்ந்த மார்கோ போலா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 2015ல் வெளிவந்த ‘ருத்ரமாதேவி’ என்ற திரைப்படம் இவரைப் பற்றிய மேலும் சில தகவல்களை திரை மொழியில் தெரிவிக்கிறது.

சமீபத்தில் ஆந்திரப் பிரதேச புதிய நகரம் அமராவதிக்குச் செல்லும் வாய்ப்ப கிட்டியது. கூகுளை நோண்டுகையில் அருகிலுள்ள மன்டடம் கிராமத்தில் 13ம் நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்று கேட்பாரட்டு காணப்படுகிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றோம். புஷ்பா-2 க்காண பெரிய பெரிய போஸ்டர்கள் பார்க்கும் இடத்திலெல்லாம் தென்பட்டாலும், இக்கல்வெட்டைப் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை. கூகுள் அவ்விடத்தின் அருகே அழைத்துச் சென்றாலும், பல வீடுகளுக்கு இடையில் சிக்கியுள்ள இந்த இடைக்கால வரலாற்றுச் சின்னத்தைக் கண்டுபிடிப்பதற்கு சில நேரம் தேவைப்பட்டது. ராணி ருத்ரமா தேவியின் பிறந்த நாளுக்காக  பேரரசர் கணபதி தேவாவால் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் கேட்பாரட்டு குப்பைக்கூளத்திற்கிடையில் நிர்மூலமாக நின்று கொண்டிருக்கிறது.

“செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்சிந்தை ஒன்றுடையாள் ” என்பான் பாரதி. பல மொழிகள் பேசினாலும் இந்தியனின் சிந்தனை ஒன்றே என்பதற்கான இலக்கிய சான்றுகள் இவை போன்ற கல்வெட்டுகள். சமஸ்கிரிதத்திலும், தெலுங்கிலும்  உள்ள நூறுக்கும் மேற்பட்ட வரிகள்,  நிலம் வழங்கல் மற்றும் சமூக சேவைகளை விவரிக்கிறது என்றும், மேலும் அதில் ஒரு மகப்பேறு மையம் மற்றும் மருத்துவமனையும் அடங்கும் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன், புதிய ஆந்திரா உருவானவுடன் இக்கல்வெட்டைப் பற்றிய தகவல்கள் பல பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. ஆனால் தற்போது இதனுடைய நிலையைக் காணும்போது, யாரும் இதற்காண முயற்சியை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. நடைபெறும் புதிய ஆட்சியில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ‌புதிப்பிக்கப்படுமா அல்லது புறக்கணிக்கப்படுமா என்பதை வருகிற காலம்தான் தீர்மானிக்கும். 

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை

நாளைய வேதியியல் ஆய்வக உதவியாளர்கள் உலகளாவிய இசையின் உணர்ச்சித் தாக்கம், கலாச்சார எல்லைகளுக்கு அப்பால்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “கல்லிலே கலைவண்ணம் கண்டார்”

  1. அருமையான அவதானிப்புகள்! மும்பையின் பல இடங்களிலும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும் காணப்படும் பவோபாப் மரங்களைப் பற்றி மேலும் சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

    இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பவோபாப் மரம் (Adansonia) பன்முறை தோன்றுவது, ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொன்மையான கண்டங்களின் தொடர்புகளை, கண்டங்களின் மிதக்கும் இயக்கத்தையும் பிளவுகளையும் விளக்குகின்றது.

    முக்கிய விடயங்கள்:

    1. கொண்ட்வானா தொடர்பு:
    இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா இரண்டும் கொண்ட்வானா எனப்படும் தொன்மையான மெகா கண்டத்தின் ஒரு பகுதி. இது சுமார் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. பவோபாப் மரம் ஆப்பிரிக்காவுக்கு சொந்தமானது மற்றும் கொண்ட்வானா வம்சாவளியைக் குறிக்கின்றது. இந்தியாவில் அதன் ύற்பத்தி, இந்த பகுதிகள் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்ததைக் காட்டுகின்றது.

    2. இந்தியாவின் மிதப்பு:
    சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா கொண்ட்வானாவிலிருந்து பிரிந்து வடக்கு நோக்கி மிதந்து, இறுதியில் யூரேஷியப் பலகையுடன் மோதியது. இதனால் இந்தகுஷ் மற்றும் இமயமலை ஆகியவை உருவாகின. இந்த மிதத்தின்போது, பவோபாப் போன்ற சிறப்பு மூலமைகளைக் கொண்டுவந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    3. விரிவாக்கக் கொள்கைகள்:
    இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பவோபாப் மரங்கள் தோன்றியதற்கான சில விளக்கங்கள்:

    பிளவுக்கு முந்தைய பரவல்: பவோபாப் மரங்கள் இந்தியா கொண்ட்வானாவிலிருந்து பிரியுமுன் அங்கு இருந்திருக்கலாம், மேலும் கண்டங்கள் பிரிந்த பின்னும் இந்தியாவில் தங்களது வம்சாவளியைத் தொடர்ந்திருக்கலாம்.

    கடல் வழிப் பரவல்: பவோபாப் விதைகள் நீண்ட தூரம் கடலில் மிதக்கவல்லவை. ஆகவே, ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இந்தியப் பெருங்கடலை கடந்து வந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேற்குக் கடற்கரையின் சூடான மற்றும் ஈரமான காலநிலை இதன் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

    மனித அறிமுகம்: சிலர் கூறுவதாவது, வரலாற்று வணிகம் அல்லது கப்பல் பயணங்களின் போது ஆப்பிரிக்க வணிகர்கள் அல்லது மாலுமிகள் பவோபாப் மரங்களை இந்தியக் கடற்கரைக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

    4. இயற்கைதத்துவ சான்றுகள்:
    பவோபாப் மரங்கள் இந்தியாவில் தங்களை வாழ வைப்பது, கண்டங்கள் மிதத்திற்குப் பிறகும் உயிரினங்கள் தனித்தீவு பகுதிகளில் உயிர் வாழ்ந்திருக்கக்கூடியதைக் காட்டுகிறது. இது தொன்மையான புவியியல் தொடர்புகளுக்கான சான்றாகும்.

    பவோபாப் மரம் ஒரு “இயற்கை நெறியியல்” எனப்படும் மிகுந்த தொன்மை கொண்டதொன்று. இது இந்தியாவும் ஆப்பிரிக்காவும் புவியியல் மற்றும் உயிரியல் வரலாற்றில் இணைந்திருந்ததற்கான நிதானமாகக் காணப்படுகிறது.

Leave a Reply to M S PrabhakarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.