- குமார சம்பவம் மஹா காவ்யம்
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 3
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 4
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 5
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 10
- குமார சம்பவம்: பாகம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 13
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 14
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 15
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 16
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 17

மகேஸ்வரன் மகன் கார்த்திகேயன் தலைமையில் முப்பத்து மூவர் எனப்படும் தேவர்கள், மகாசுரனை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வெளிப்பட, விரைவாக யுத்த ஏற்பாடுகளைச் செய்தனர்.
கார்த்திகேயனும் தன் தனுஷ், மற்றும் சக்தி என்ற ஆயுதம் இவைகளுடன், சேனையின் முன் நின்றான். மனோ வேகத்தில் செல்லக் கூடிய மிகப் பெரிய ரதம் தயாராக வந்து நின்றது. தன் ஆயுதங்களுடன் அதில் ஏறினான்.
தேவ லோக சம்பத்தை பறித்து அவர்களை தவிக்க விட்ட தேவ விரோதி தாரகன். அவர்கள் இழந்த லக்ஷ்மீகரமான சம்பத்தை, முழுவதுமாக மீட்டு தேவர்களுக்கு தர வேண்டும் என்பதே நோக்கமாக குமாரன் அசுரர்களிடம் வைரத்தை வரவழைத்துக் கொண்டது போல் இருந்தது. தர்ம விரோதமாக செய்பவர் யாரானாலும் தண்டனை தேவையே.
சரத் கால சந்திரனின் வெண்மையான கிரணங்கள் போன்ற சாமரங்கள். சாமரம் வீசிக் கொண்டு வரும் கின்னரர்களும், சித்தர்களும், சாரணர்களும் மங்கள வாழ்த்துக்களையும், போற்றி பாடும் வாசகங்களையும், உரக்க சொல்லியபடி முன்னால் சென்றனர். (கின்னர, சித்த, சாரணர்கள் தேவர்களுக்கு அடுத்தபடியாக எண்ணப் படுபவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பும், பூவுலகில் செய்யும் யாகங்களில் பங்கும் உண்டு)
இந்திரனும் தான் யுத்த சமயம் அணியும் ஆடைகள், கவசங்களுடனும், ஆயுதங்களுடனும் தயாராக வந்தான். கைலாச மலையின் சகோதரனோ எனும்படி வெண்மையான ஐராவதம் வந்தது. அதில் ஏறி சேனாபதியான குமாரனை பின் தொடர்ந்தான். அக்னி தேவனும் தன் மகா மேட்ரம்- பெரும் மேஷம் என்ற வாகனத்தில். வந்து சேர்ந்தான். மகா தேஜஸ் வாய்ந்த ஆயுதமும் ஏந்தியவனாக வந்தான்.
அடுத்து, வைவஸ்வதன்-யமன் , தன்னுடைய இந்திர நீலம் எனும் கருமையான சண்ட விக்ரமனான, பெரிய கொம்புகளுடன் பயங்கரமாக தோற்றம் அளித்த மகிஷ வாகனத்தில் வந்தான். அவன் தன் கையில் தண்டம் என்ற ஆயுதத்தை தாங்கியிருந்தான். நைருதன் என்ற திக் பாலகன், அசுரனை வதைக்க வேண்டுமே என்பதை மனதில் உருவேற்றிக் கொண்டு அதே நினைவில் ரோஷத்துடன் வந்தவன் போல இருந்தான். அவன் வாகனம் பிரேதம். வருணன், அதிசயமான நீண்ட உடலுடன் மகரம்- முதலை வாகனத்தில் வந்தான், நீருக்கு அதிபதி, கரு மேகம் போன்ற உடலும், பாசம் அவன் ஆயுதம், இவற்றுடன் தேவ விரோதியான தாரகனை மனதில் நினைத்தபடியே வந்து சேர்ந்து கொண்டான். த்ரிபுராந்தகனுடைய மகனுடன் போரிடச் செல்வதே ஒரு பெருமை.
வாயு மூலையின் அதிபதி, மருத் பவனன், மிருக வாகனத்தில் பரபரப்புடன் வந்து சேர்ந்து கொண்டான். நர வாகனன், குபேரனும் வந்தான். க3தா யுத்தம் செய்வதில் திறமை மிக்க தன் சேனை வீரர்களான யக்ஷர்களுடன் கடல் போன்ற பெரும் படையுடன் வந்து சேர்ந்து கொண்டான். பரம சிவனுடைய மகனைக் காண ஆவலுடன் இருந்தான்.
ருத்ர கணங்கள், ஈசான திசையின் அதிபதி, பெரும் நாகங்கள் இவைகளைக் கொண்டு சடைகளை முடிந்து கொண்டவர்களாக தாரகனை நிச்சயம் ஜயித்து விடுவோம், என்று சொல்லிய படி த்ரிஸூலங்களுடன் , பனி மலையின் சகாக்கள் போன்ற ருஷபங்களுடன் வந்தனர்.
மேலும் பலர், சிறப்பான ஆயுதங்கள், ஏற்பாடுகளுடன், இது வரை கண்டிராத அளவில் பெரும் யுத்தம் என ஆவலுடன் எதிர்பார்த்தவர்கள் போல தேவ லோக கணங்கள், தங்களுடைய உயர் தரமான, பயனுள்ள ஆயுதங்களும், வாகனங்களுமாக மகிழ்ச்சியுடனும், திகிலுடனும் கலந்து கொள்ள வந்தனர்.
பினாகபாணியின் மகன் முன்னின்று செய்யப் போகும் மாபெரும் யுத்தம் என்பதால், ஓங்கி உயர்ந்த பொன் மயமான த்வஜஸ்தம்பம், சஞ்சலமான குதிரை படைகளும், யானைகள் மேல் பிரகாசமான குடைகளும், ரதங்கள் பலவிதமாக, யானைகள் பயங்கரமாக பிளிறும் ஓசையும், அவைகளின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் ஓசையும் திசைகள் எங்கும் பரவி எதிரொலிக்க, விசித்ரமான ஆயுதங்கள் உரசிக் கொள்வதால் எழுந்த நாதம், அவைகளின் ஒளியும் போட்டியிடுவது போல திசைகளை பிரகாசமாக்க.தேவர்களின் அந்த மிகப் பெரும் படை, ஆரவாரமாக கிளம்பியது.
வான மண்டலமே மூச்சு விடத் திணறியது போல அந்த தேவர்களின் எண்ணிலடங்கா சைன்ய த்வஜங்கள் வானத்தை முற்றுகையிடுவது போல இருக்கவும், வான மண்டலமே கண்ணுக்கு தெரியாமல் போனது. வானமா? பூமியா? திசைகளா, எதுவும் தெரியவில்லை. அத்தகைய கோலாஹலம். அத்வைத வாதிகளின், பிரும்ம தத்வம் நிதர்சனமாக தெரிவது போல.(அனைத்தும் ஒன்றே என்பது அத்வைத தத்வம் -உவமை)
தேவ லோக வாசிகளின் செல்வத்தை அபகரித்துச் சென்ற தாரகனை உலுக்கி எடுப்பது போல பயங்கரமான பேரி வாத்தியங்களின் முழக்கம் எழுந்தது. அந்த ஓசை திசைகளில் எதிரொலித்ததால் மேலும் பயங்கரமாகியது. அந்த நாதம் மேலேழுந்து வான மண்டலத்தையும் தாண்டி நபோ மண்டலம் என்ற ப்ரும்மாண்டத்திலும் நுழைந்து பரவியது போல இருந்தது. நாதம் எதுவானாலும் நபோ மண்டலத்தை அடையும் என்பது இயல்பு. அதன் காரணமாக நீருண்ட மேகங்களும் ப்ரதி த்வனி – பதில் கொடுப்பது போல இடியாக வெளிப்பட்டன. மேக நாதம் எழவும், படகம்- நகாடம் என்ற வாத்தியங்கள் யுத்த ஆரம்பத்தில் வாசிக்கப் படுவை இவையனைத்தும் ஒன்றாக பயங்கரமாக ஓசை எழுப்பவும், அதைக் கேட்ட கர்பிணி பெண்கள் பயந்தனர்.
வரிசை வரிசையாக ரதங்கள் வேகமாக ஓடவும் அவைகளின் தடங்கள் குழி பறித்தது போல வீதிகளில் தெரிய, யானைகள் அதன் மேல் நடந்து சென்று புழுதியைக் கிளப்பி, பொன் வண்ண மண் துகள்கள் கொடிகளில் படிந்து பொன் வண்ணமாக காட்ட, காற்று அந்த புழுதியை தள்ளிக் கொண்டு வான மண்டலத்தை நிரப்ப -என்று ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று என்ற நியதி – (கவியின் வர்ணனை) அங்கு நிறைவேறியது போல இருந்தது.
வான வெளியை அவை நிரப்பியது போதாமல், திசைகளிலும் பரவின. அங்கிருந்து அதே வாயுவின் செயலால் தள்ளப் பட்டு காஞ்சன மலையின் அடிவார சமவெளியில் விழுந்தன. ஸூரிய ஒளியில் அந்த பொன் வண்ணம் அதிக அழகாக விளங்கியது. அதைக் கண்டவர்கள் இது என்ன? அகாலத்தில் சந்த்யா காலம் போல வானம் வண்ணமயமாக தெரிகிறது என்று வியந்தனர். இதனால் யானைகள் தடுமாறி சுற்றிலும் நோக்க, தங்கள் நிழலே சுவர்ண மயமாக இருக்கவும் பாதாளத்திலிருந்து யானைகளும் வந்துள்ளன என்ற சந்தேகத்தை அடைந்தன போலும்.
இவ்வாறு கோலாகலமாக அந்த அமர சைன்யம் காஞ்சன மலையில் இருந்து இறங்கி வந்தன. இந்த அதிசயமான நடமாட்டமும் அதன் காரணமாக இரைச்சலும் குகைகளில் தூங்கிக் கொண்டிருந்த சிங்கங்களை எழுப்பி விட்டன. தேவ சைன்யம் கூட்டமாக செல்வதைக் கண்டு மிருக ராஜா என்ற தங்கள் பதவியை நினவில் கொண்டது போல, பெருமிதத்தோடு வளைய வந்தன. பயந்து ஓடி வரும் சிறு விலங்குகளுக்கு தாங்கள் தான் பாதுகாப்பு தர வேண்டும் என்று எண்ணியது போல காட்டின் எல்லைகளை காத்தன.
அமராவதியின் பொது ஜனங்கள் தூரத்திலிருந்த படியே சைன்யம் செல்வதைப் பார்த்து குதூகலம் அடைந்தனர். பல வண்ணங்களுடன் வானமும் கடல் போல வண்ண மயமான ரத்தினங்களுடன் தெரிவதாக சொல்லி மகிழ்ந்தனர். அந்த கலப்படமான இரைச்சல், காதுகளை துளைத்து விடும் போல ஆனது. திடுமென வந்த புயலும் வெள்ளமும் கடலில் அலைகள் ஓங்கி அடிக்க பயங்கரமாக ஆனது போல உலகமே அந்த ஒலியால் நிறைந்தன. இந்த அமர்க்களத்தில் முன் கேட்ட படகம் என்ற யுத்த வாத்ய ஒலி கூட மறைந்து விட்டது போல ஆயிற்று.
அசுர சைன்யம் விழித்துக் கொண்டு தேவர்களின் படைகள் வேகமாக முன்னேறுவதைக் கண்டு திகைத்தனர். அவை கிளப்பிய புழுதியிலேயே அதன் அளவை ஊகித்து விட்டனர். அவர்கள் உடல் முழுவதும் கண்கள், கேசம், கொடிகள், யானைகள், குதிரைகள் என்று அனைத்தையும் அந்த புழுதி முழுக்காட்டி விட்டது. நீருண்ட மேகங்கள் போல அந்த புழுதி படிந்த கொடிகள் பறக்கும் சமயம் இடை இடையே வண்ண மயமான புழுதியால் மின்னல் போல காணப் பட்டது.
வானத்துக்கும் பூமிக்கும் இடையில் அடர்ந்து பரவிய புழுதியால், எது மேல், எது கீழ் என்பது தெரியாமல், எங்கிருந்து வருகிறது எனத் தேடும் நிலை வந்து விட்டது. கண்களின் சக்தி எட்டிய வரையில், மேல், கீழ், முன்னால், பின்னால், மேல், கீழ், அருகில், தூரத்தில் என்று அனைவரும் தேடினர். பிராணிகள் அனைத்துமே மிரண்டு போய் தங்கள் இனத்தாரையே அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் தவித்தன.
சற்று பொறுத்து வாத்தியங்கள் ஓசை கேட்டன. எதிரொலி போலவும், இடி இடிப்பது போலவும் இனம் தெரியாத குழப்பமான ஓசைகள். ஒரு வழியாக வானத்திலிருந்து வருவதை புரிந்து கொண்டனர். இதற்குள் தேவ சேனை பூமியில் இறங்கியது. முழுவதும் இறங்க முடியாமல் பூமியே நிரம்பி இடம் இல்லாமல் கிளம்பிய இடத்திலிருந்த (ஸுவர்கத்திலிருந்த) சேனைகளின் ஒரு பகுதி இன்னமும் கிளம்பாமல் அங்கேயே தங்கி விட்டன.
மூச்சு விடக் கூட இடம் இல்லை என்பது போல, மதம் கொண்ட யானைகள் படை, உயர்ந்த குதிரைகளின் படை, ஓசை எழுப்பியபடி வந்த ரதங்கள், பூ பிரதேசத்தை நிரப்பி விட்டன. அது போதாது என்பது போல, மகா கஜங்கள் பிளிறுவதும், இடை விடாமல் ஒலித்த யுத்தத்துக்கு அழைக்கும் பேரி வாத்தியங்களும், காலாட் படையினரின் உரத்த குரலில் வீர முழக்கங்களும், திசைகளே ஒலியால் நிரம்பின. நதிகளில் திடுமென வெள்ளம் வந்து கரைகளை உடைத்துக் கொண்டு வர, அதன் மேல் யானை, குதிரைகள், மனித நடமாட்டமும் சேர்ந்து சேறாக்கின. அதில் சிக்கி ரதங்கள் அசையாமல் நின்றன.
ஒரு புறம் பள்ளங்கள் நிரம்பி தரையாக ஆயின, மறு புறம் மேடான ப்ரதேசங்கள் சரிந்து விழுந்து தரை மட்டமாயின, இப்படி சமதளமாக ஆயின. படைகள் வேகமாக முன்னேற அதுவே வசதி ஆயிற்று.
திடுமென, பேரி வாத்யங்களால் ஆட்டம் கண்ட மலைகளில் காட்டுத் தீ பரவியது. அதன் வெப்பத்தால் கடல் நீர் வெப்பம் மிகுந்து கொதிக்கலாயிற்று. இது என்ன, முன் கண்டிராத புது தாக்குதல் என உலகமே கவலை கொண்டது.
படையினரின் போர்க் கொடிகள் விழுந்து பூமியில் நிரம்பி, புழுதியோ, கடலோ, நீர் நிலையோ எது என்ன என்று புரியாமல் திசைகள் ஆக்ரமிக்கப் பட்டன. வழிப் போக்கர்கள் சாதாரணமாக திசையை அறிந்து கொள்ளும் ஒரு உபாயமும் பயன் படாதது போல திகைத்தனர். யானைகளின் கழுத்து மணிகள் தாறு மாறாக ஆடி, கர்ஜனையாக ஒலிக்க, பெரு வெள்ளம் வந்த நதியின் இரைச்சல் போல கேட்டன. இதற்கிடையில் ஸூரியனும் அஸ்தமித்தான். (இரு பொருளுடைய பதங்கள், மொழியின் தனித் தன்மையான அலங்காரங்கள் படித்து ரசிக்கத் தக்கவை)
திசைகள் என்ற பெண்கள், அவர்களை புழுதி என்ற முரடர்கள் சூழ்ந்து நிற்கிறார்கள் என்று நினைத்த ஆகாயம் தன் மேகங்களால் இடி இடித்து அவர்களை விரட்டலாயின. பெரும் காற்றில் ஆடும் மரங்கள் போல யானைகள் ககனம்- வானத்தில் அலை பாய்ந்தன. வேகமான மழை தாரை போல ரதங்கள் பூமியில் இறங்கின.
ப்ரளய ஜலம் சூழ்ந்த பூ மண்டலம் போல அசுர ராஜ தானியை இந்த படை வீரர்களும், வாகனங்களும், போர் முரசு கொட்டும் வீரர்களும், பேரி முதலிய வாத்தியங்களை இசைப்பவர்களுமாக முற்றுகை இட்டனர்.
(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவியத்தில் देव सेना प्रयाणम् – தேவர்களின் முற்றுகை – என்ற பதினான்காவது அத்யாயம்.)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “குமார சம்பவம் மஹா காவ்யம்- 14”